வியாழன், மே 14, 2020

ஐஸ் ஐஸ் ஐஸ்லாந்து - ஒரு இன்பச் சுற்றுலா - பாகம் 1

வெளிநாட்டில் எடுக்கப்பட்ட பாடல் காட்சி என்றாலே பொதுவாகவே படத்தின் பிரோடியூசருக்கு வயிற்றில் புளியை கரைத்திருக்கும். ஆனால் வெளிநாட்டில் ஷூட் செய்யப்பட்ட பாடல் என்றாலே அடுத்த  சுற்றுலாவிற்கான இடமாக இருக்குமோ என்று என் மனம் மகிழ்ச்சியில் துள்ளும். அப்படி இந்த முறை மனதில் ஒட்டிக் கொண்ட இடம்  ஒரு ஹிந்தி பட பாடல் காட்சியில் இடம் பெற்றது. ஷாருக்கான் மற்றும் கஜோல் ஜோடி மீண்டும் இணையும் "தில்வாலே" திரைப்படத்தில் இடம் பெற்ற "கேருவா" என்ற பாடல். ரொம்பவும் பிரசித்தி  பெற்ற ஜோடி என்பதோடு இத்தனை வருடங்கள் கழித்தும் "தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே" என்ற திரைப்படத்தில்  தோன்றிய ஜோடிகள் போலவே அவ்வளவு அழகாக இருந்தார்கள். இந்த பாடலில் அவர்கள் இடம் பெற்ற பாடல் காட்சியில் வந்த ஐஸ்லாந்தே நாங்கள் சென்ற வருடம், 2019 ஜூன்-ஜூலை மாதத்தில் சென்று வந்த இன்பச் சுற்றுலா. 

  

உன்னில் தொடங்கி உன்னிலேயே முடியும் 
இந்த காதல் ஒரு பக்தனுக்கும் கடவுளுக்குமான  பந்தத்தை போன்றது 
நானே யாத்திரீகன் நீயே இலக்கு 
எல்லா பாதைகளும் உன்னிடமே முடிவடையும் 

என்று கவித்துவமான வரிகள் கொண்ட பாடல். புரியவில்லை என்றாலும் மெட்டுக்காக கேட்கலாம். அந்த பாடல் படமாக்கப் பட்ட அழகான இடங்களுக்காக மீண்டும் மீண்டும் அந்த பாடல் காட்சியை பார்க்கலாம். சரி, நாம் மறுபடியும் ஐஸ்லாந்து பயணத்திற்கு வருவோம். ஐஸ்லாந்து வடக்கு அட்லாண்டிக்கில் க்ரீன்லாந்தில் இருந்து வெறும் 1200 கீ.மீ. தொலைவிலேயே அமைந்துள்ளது. ஆர்டிக்கிற்கு வெகு அருகிலேயே இருப்பதால் தெற்கு ஐஸ்லாந்து கொஞ்சம் சூடான சீதோஷ்ண நிலையிலும், வடக்கு ஐஸ்லாந்து மிகவும் குளிரான சீதோஷணையும் கொண்டுள்ளது. வெறும் 103,000 சதுர கீ.மீ. பரப்பளவு கொண்ட இந்த நாடு வெறும் 3 லட்சம் மக்கள் தொகையை கொண்டு ஐரோப்பாவிலேயே மிகவும் குறைந்த மக்கள் தொகையை கொண்ட நாடு என்று அறியப்படுகிறது.



இந்த பயணம் பல மாத திட்டமிடல்களுக்கு பின்பே நிகழ்ந்தது. முதலில் ஐஸ்லாந்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் வாயிலும் மனதிலும் நுழையவில்லை. ஐஸ்லாந்திக் என்று அந்த மக்கள் பேசும் மொழி பேசுவதற்கும் மிகவும் கடினமான மொழி. ஊரின் பெயர்கள் ஐஸ்லாந்திக்கில் இருந்ததால் பெயர்களை நினைவில் வைத்து கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. எனவே திட்டமிடும் போது எத்தனை முறை பார்த்தாலும் முன்பே பார்த்த ஊர் தானா இல்லை வேறு புதிய இடமா என்பதில் மிகுந்த சந்தேகம் இருந்தது. எனினும் ஒரு வசதி என்னவென்றால் ஐஸ்லாந்தில் ரிங் ரோடு என்ற ஒரே சாலை கிட்ட தட்ட ஒரு வட்டம் போல ஐஸ்லாந்தில் உள்ள எல்லா பகுதிகளையும் இணைக்கிறது. கிட்ட தட்ட 16 மணி நேரத்தில் ரிங் ரோடு மூலம்  மொத்த ஐஸ்லாந்தையும் சுற்றி விடலாம். ரிங் ரோடு தவிர ஏனைய சாலைகள் பெரும்பாலும் சரளை கற்கள் இடப்பட்ட சாலைகள், மழை பெய்திருந்தால் கொஞ்சம் சேறாக மாறிவிடும். எனவே மிகவும் மெதுவாகவே தான் வாகனத்தை ஓட்ட முடியும். இது தவிர  F என்ற எழுத்தில் தொடங்கும் சாலைகள் அதற்கான அனுமதிக்கப்பட்ட சிறப்பு வாகனங்களில் மட்டுமே பயணிக்க முடியும். இந்த பாதைகள் செங்குத்தான மலை மேலோ அல்லது ஆறுகள் குறுக்கிடும் வழியாகவோ இருக்கும். எனவே வாகனம் ஓட்டும் போது மிகுந்த கவனம் தேவை. நாங்கள் சென்றது கோடைகாலம் என்பதால் சூரிய ஒளி எப்போதும் இருந்தது. இதனால் எந்த நேரத்திலும் வாகனம் ஓட்ட முடியும் என்ற வசதி இருந்தது. சூரிய அஸ்தமனம் என்பதே கோடைகாலத்தில் நிகழ்வதில்லை. வடக்கு அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் சமுத்திரங்களுக்குக் இடையிலும், யுரேசியா மற்றும் வட அமெரிக்க டெக்டானிக் தகடுகளும் ஐஸ்லாந்தில் சந்திப்பதால் நிறைய எரிமலைகளும், இயற்கையாகவே வெந்நீர் ஊற்றுகளும், பனிப்பாறைகளும் அமைந்திருக்கின்றன. இதனால் Land of Ice and Fire என்று அழைக்கப்படுகிறது. இயற்கை அன்னை தனி சிரத்தையுடன் ஒவ்வொரு அங்குலமாக இழைத்திருக்கிறாள் ஐஸ்லாந்தை. அத்தனை அருவிகள், தகிக்கும் எரிமலை குழம்புகள், வெண் பட்டை விரித்தார் போன்ற பனிப் பாறைகள், குளிர் வீசும் இடங்களிலும் இதமான வெந்நீர் ஊற்றுகள் என்று இயற்கை அன்னை காட்டும் அற்புதங்கள்  அடடே ரகம். தமிழில் குறிப்பதை விட ஊர் பெயர்களை ஆங்கிலத்திலேயே குறித்தால் கூகுளை பயன்படுத்தும் போது தேடுதல் எளிதாக இருக்கும் என்பதால் கூடிய வரை ஊர் பெயர்களை ஆங்கிலத்திலேயே குறித்திருக்கிறேன். 

கிட்ட தட்ட மொத்தம் 16 நாட்கள் நீடித்தது  இந்த பயணம். ஐஸ்லாந்துக்கு எந்த மாதம் சென்றாலும் பெயருக்கு ஏற்றார் குளிரோ குளிர். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் கோடை காலம் என்றாலுமே நிச்சயம் குளிரும். அது மட்டும் அல்லாமல் திடீரென்று மழையும் உண்டு. ஆர்டிக் பிரதேசத்தில் இருப்பதால்  காற்றும் பிச்சு உதறும். எனவே மழையையும் குளிரையும் தாங்கும் ரெயின்கோட் போன்ற ஜாக்கெட் மற்றும் காதுகளையும், கரங்களையும் பாதுகாக்கும் குளிர் தாங்கும் குல்லாய், கையுறை, வழுக்கும் பாதைகளிலும், செங்குத்தான சரளை பாதையில் நடக்க நல்ல பிடிப்பு உள்ள ஷூக்கள் கண்டிப்பாக தேவை.

எங்கள் பயணம் ஒரு சனிக்கிழமை அன்று வாஷிங்டனில் இருந்து ஐஸ்லாந்து ஏர் என்ற விமான சேவை மூலம் தொடங்கியது. கிட்ட தட்ட 6 மணி நேர பயணம் மட்டுமே. முதல் நாள் இரவு  பிளைட் பிடித்தால் அடுத்த நாள் காலையில் Reykjavik சென்றடையலாம் . ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாங்கள் வந்த பிளைட்டிலேயே எங்கள் பெட்டிகள் வந்து சேரவில்லை. நாங்கள் தங்குவதற்கு என்று அறைகளை என்று சொல்வதை விட வீடுகளை AirBnb  என்ற தளத்தில்  பதிவு செய்திருந்தோம். கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு முன்னரே தங்குமிடத்தை முன்பதிவு செய்தல் மிகவும் அவசியம். ஏனென்றால் விமான டிக்கெட்டை விட தங்குவதற்கு என்று அதிகமாக செலவாகும். பயணிகள் தங்குவதற்கு என்று இருக்கும் இடங்கள் மிகவும் குறைவாக உள்ளதாலும், நிறைய சுற்றுலா பயணிகள் கோடைகாலங்களில் வருவதாலும் பெரும்பாலும் தங்குவதற்கு என்று உள்ள இடங்கள் வெகுவிரைவாக புக் செய்யப்பட்டு விடும்.  

                                                        (ரிங் ரோடு, ஐஸ்லாந்து)

கிட்ட தட்ட எல்லா தங்குமிடத்தில் மதியம் 3 மணி அளவிற்கே செக்-இன் செய்ய முடியும். காலை 6:30 மணிக்கே நாங்கள் Reykjavik-கை அடைந்ததால்,  சரி விமான நிலையம் அருகிலேயே  உள்ள வாடகை கார் எடுக்குமிடத்திற்கு சென்று காரை எடுத்துக் கொண்டு மீண்டும் விமான நிலையத்திற்கு வந்துவிடுவோம் என்ற எண்ணத்தில் அங்கு சென்றோம். கிட்ட தட்ட மூன்று மணி நேர காத்திருத்தலுக்கு பிறகே வாடகை காரை எடுக்க முடிந்தது. வெகு நேரம் காத்திருந்ததால் குழந்தைகளும், நாங்களும் பசியால் வாடி போய்விட்டோம். ஏனெனில் அத்தனை கூட்டம். கார் எடுக்கும் இடத்தில் இன்சூரன்ஸ் அது இது என்று பர்ஸை பதம் பார்த்துவிடுவார்கள். எனவே கவனமாக இருத்தல் நல்லது. அவர்கள் சொல்லும் பாதி இன்சூரன்ஸை எடுக்காமல் இருந்தால் தப்பித்து கொள்ளலாம். நாங்கள் இன்சூரன்ஸ் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளாததால் நாங்கள் எதிர்பார்த்ததை விட மூன்று மடங்கு அளவில் இங்கு பணம் செலவழித்து விட நேர்ந்தது. எனவே இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனம் தேவை. ஐஸ்லாந்தில் ரிங் ரோடு தவிர வேறு பகுதிகளில் அதிக அளவு பெட்ரோல் பங்குகள் இல்லாததால் எப்பொழுது பெட்ரோல் பங்கை பார்த்தாலும் டாங்கை நிரப்பிக் கொள்வது நல்லது. 

திரும்பவும் விமான நிலையம் வந்து அடுத்த பிளைட்டில் வந்த பெட்டிகளை எடுத்துக் கொண்டு, வாய்ஸ் மற்றும் இன்டர்நெட் வசதியுடன் கூடிய சிம் கார்டு  வாங்கிக் கொண்டும், இரவு உணவிற்கு தேவையான பால், பிரட், சிறிதளவு காய்கள் (எந்த காயும் ஐஸ்லாந்தில் விளைவதில்லை. எனவே இவை விலை மிகவும் அதிகம்) வாங்கிக் கொண்டு நாங்கள் அன்று இரவு தங்குவதற்காக Keflavik என்ற இடத்தில புக் செய்திருந்த வீட்டிற்கு வந்தோம். பெட்டிகளை அங்கே வைத்து விட்டு மாற்றுவதற்கு தேவையான உடைகளை எடுத்துக் கொண்டு நாங்கள் சென்ற இடம் "ப்ளூ லகூன்" என்ற செயற்கையாக உருவாக்கப் பட்ட நீச்சல் குளம். பூமியில் இருந்து கிளம்பும் வெந்நீர் ஊற்று பூமியின் மேற்புறத்திற்கு வரும் போது  குளிப்பதற்கு ஏற்ற நீராக சரியான சூட்டில் தேக்கி வைக்கப் படும் ஒரு செயற்கை நீச்சல் குளமே  இந்த ப்ளூ லகூன். இதற்கும் முன் பதிவு செய்வது அவசியம்.



ப்ளூ லகூன் வெளிப்புறம் (எரிமலை கற்களை பாதையின் இரண்டு புறமும் காணலாம்)
 



ப்ளூ லகூன் (சுற்றிலும் மலைகள் சூழ்ந்து சற்றே குளிராகவும் நீருக்குள்ளே இதமான சூட்டிலும் இருந்தது). 

மலைகள் பல சூழ்ந்து, நீல நீரில் இருந்து நீராவி வெளியேறும் போது ஏதோ தேவலோகத்து காட்சியை நினைவு படுத்தியது போல் இருந்தது இந்த ப்ளூ லகூன்.



ப்ளூ லகூனை பார்க்க விரும்புபவர்கள் ஆதவன் படத்தில் வரும் "ஏனோ ஏனோ பனி துளி" பாடலை பாருங்கள். 2:30 மணி துளியில் இருந்து 2:40 மணி துளி வரை வருவது ப்ளூ லகூன். முழுவதும் ஐஸ்லாந்தில் படமாகப்பட்டது இந்த பாடல்.

 ப்ளூ லகூன் முடிந்து மறுபடியும் தங்கும் இடத்திற்கு வந்து இரவு உணவை முடித்து விட்டு அடுத்த நாள் Keflavik கை பார்த்து விட்டு அங்கிருந்து Stykkisholmur என்ற இடத்திற்கு செல்வதாக திட்டம்.

வளரும்..............


ஐஸ்லாந்து பயண அனுபவம் - பாகம் 2 இங்கே 

8 கருத்துகள்:

  1. நீங்கள் சொல்லி செல்லும் விதத்தை படிக்கும் போது நானும் உடன் பயணித்து போல இருந்தது.. இந்த பகுதிக்கு போக நினைப்பவர்களுக்கு உங்களின் பதிவு மிக உதவியாக இருக்குமென்று தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களை போன்ற பதிவர்களின் கருத்தூட்டம் மிகுந்த ஊக்கமளிக்கிறது. இன்னும் இரண்டொரு நாட்களில் ஐஸ்லாந்து பயணத்தின் அடுத்த பாகம் வெளியிடப்படும். படித்து பயனடையவும்.

      நீக்கு
  2. முடிந்தால் உங்கள் தளத்தில் பாலோவர்ஸ் இணைப்பை இணைக்கவும் அப்பதான் நீங்கள் எழுதி பதிவிடும் போது வந்து படிக்க ஏதுவாக இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேறு தீம் மாற்றிய போது தொடருவதற்கு என்று இருந்த இணைப்பு விடுபட்டுவிட்டது. இப்பொழுது சரி செய்யப்பட்டுவிட்டது. சுட்டி காட்டியமைக்கு நன்றி.

      நீக்கு
  3. மிக மிக ரசித்தேன் ஊரையும் படங்களையும் உங்கள் எழுத்தையும். எல்லா விவரங்களும் எழுதிருப்பதால் பயனுள்ளதாக இருக்கும். என் மகனிடம் இப்போவே சொல்லி வைத்து புக் செய்து கொண்டேன்...ஹாஹாஹா...தொடர்கிறோம்...
    கதைக்கு முதல் பரிசு கிட்டியமைக்கு வாழ்த்துகள்
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துக்கு நன்றி. ஐஸ்லாந்து கண்டிப்பாக உங்கள் கண்ணுக்கு விருந்தாக அமையும். நிச்சயம் பார்க்க வேண்டிய இடம்.

      நீக்கு
  4. வாவ்... சூப்பர்.

    நேற்று குடும்பமாக பேசி கொண்டு இருக்கையில் இந்த லாக் டோவ்ன் முடிந்தவுடன் நால்வரும் அடுத்த விமானத்தில் ஏறி எங்கேயாவது ஒரு வாரத்திற்கு போகவேண்டும் என்று முடிவு செய்தோம்.

    ஆளுக்கொரு ஊரை சொல்ல, அடியேனோ.. நான் ஸ்டாப் விமானம், போனோமா வந்தோமான்னு இருக்கணும்.அங்கே இறங்கியவுடன் இந்த ஊர் அடுத்த ஊருன்னு வேறு வேறு விமானம் எல்லாம் வேண்டாம், ஏற்கனவே நம்ம பார்த்த இடமாவும் இருக்க கூடாதுன்னு சொல்லிட்டு .. வாட் அபௌட் ஐஸ்லாந்து ன்னு சொன்னேன்.. எல்லாரும் OK சொல்லிட்டாங்க.

    உங்க பதிவை இன்னும் ரெண்டு முறை வாசிக்கிறேன். என்ன ஒரே பிரச்சனை.. உங்களுக்கு ஆறு மணிநேரம் தான் எங்களுக்கு கிட்ட தட்ட 12 மணி நேரம்ன்னு நினைக்கிறேன். செக் பண்ணனும்.

    தொடர்ந்து எழுதுங்கள். தொடருகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விசு அவர்களே, கலிபோர்னியா போன்ற இடங்களில் இருப்பவர்களுக்கு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா பார்க்க சிறந்த இடம். என்னுடைய நியூசிலாந்து பயண அனுபவத்தை படித்து பாருங்கள்.

      http://pachaimannu.blogspot.com/2011/01/1.html

      நாங்கள் நியூஸிலாந்தில் சவுத் ஐலாண்ட் மட்டுமே சென்றோம். நியூஸிலாந்து நாங்கள் முதல் முதலில் சென்ற வெளிநாட்டு சுற்றுலா என்பதால் எங்களுக்கு நியூசிலாந்து மேல் ஒரு தனி கரிசனம் உண்டு. நியூஸிலாந்து நார்த் ஐலாண்ட் பார்க்க ஒரு முறை செல்ல வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறோம். இல்லையென்றால் நார்வே பாருங்கள். அடுத்து நார்வே பயணம் பற்றிய என்னுடைய அனுபவங்களையும் எழுதலாம் என்று இருக்கிறேன். ஐஸ்லாந்துக்கு இணையான அழகிய நாடு நார்வே. ஆனால் ஒன்று, மேற்கூறிய எந்த இடத்திற்கு சென்றாலும் கண்ணுக்கும் மனதிற்கும் மகிழ்ச்சி தரும் இயற்கை காட்சிகள் சர்வ நிச்சயம். உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

      நீக்கு