ஞாயிறு, மே 24, 2020

ஐஸ் ஐஸ் ஐஸ்லாந்து - ஒரு இன்பச் சுற்றுலா - பாகம் 2



அடுத்த நாள் அசதி காரணமாக சற்று தாமதமாகவே எழுந்தோம். நாங்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் Keflavik-கில்  சுற்றுப்புறம் Reykjanes-சில் நிறைய இடங்கள் பார்க்க அழகாக இருக்கும் என்றும் மறக்காமல் அவற்றை பார்த்த பின் செல்லலாம் என்று கூறினார். இது எங்கள் பயண அட்டவணையில் இல்லாமல் இருந்தாலும்,  திரும்பி வரும் போது பார்க்க நேரம் இல்லாமல் போகலாம் என்று அவற்றை பார்த்த பின்பே போகலாம் என்று முடிவு செய்தோம். எனினும் அனைவரும் கிளம்ப கிட்டதட்ட மதியம் ஆகி விட்டது. 

பிரிட்ஜ் பிட்வீன் காட்டினன்ட்ஸ் 

முதலில் சென்றது "Bridge between Continents" என்ற ஒரு பாலத்தை காண. இந்த சிறிய பாலத்தின் ஒரு புறம் ஐரோப்பா. மறுபுறம் வட அமெரிக்கா. யூரேசியா மற்றும் வட அமெரிக்க தகடுகளை இணைக்கிறது இந்த சிறு பாலம். புவியியலாளருக்கு ஐஸ்லாந்து ஒரு கனவு தேசம். பார்க்கவும், படிக்கவும், தெரிந்து கொள்ளவும் அத்தனை இடங்கள்.  அதற்கு பின் Reykjanes கலங்கரைவிளக்கம் மற்றும் எரிமலை வெடிப்பில்  உண்டான Valahnukur மலை ஆகிவற்றை பார்த்தோம். Valahnukur மலையில் அழிந்து போன பறவை இனமான ஆக் என்ற பறவைக்கு ஒரு சிலையை வைத்து இருந்தார்கள்.


மிட் அட்லாண்டிக் ரிட்ஜ் எனப்படும் அட்லாண்டிக் வெடிப்பு 

Valahnukur மலை 


அதிக அளவில் வேட்டையாடப்பட்ட ஆக் பறவை 1852 வாக்கில் அழிந்து விட்டது.  மனிதன் என்ற ஒற்றை விலங்கு தான் வாழ இன்னும் எத்தனை இயற்கை விலங்குகளை அழிக்கிமோ என்ற கேள்வி எழாமல் இல்லை.



ஆக் பறவை 

ஹூபேர்ட் ரீவ்ஸ் என்ற கனடா நாட்டு அறிஞர் சொன்னதை ஆங்கிலத்திலேயே  தருகிறேன்.
 
"Man is the most insane species. He worships an invisible god and destroys a visible nature. Unaware that this nature he's destroying is this God that he's worshipping" (Hubert Reeves, Canadian-French Astrophysicist)

மனிதன் கண்டிப்பாக அவர் கூறுவதை போன்ற பைத்தியக்காரன் தான். தான் வாழ தன்னை சுற்றி உள்ள எதையும் அழிக்க ஒரு நொடி கூட யோசிக்காதவன். இன்று கொரோனா என்னும் உயிர் கொல்லி நோய் உலகம் முழுவதும் பரவும் இவ்வேளையில் நாம் ஏனைய உயிர்களை வருத்தி பெறும் எந்த ஒரு சௌகர்யமும் நமக்கு நிலைக்காது என்பதை உணர வேண்டும்.

கொரோனா பற்றிய என்னுடைய சிந்தனைகளை இங்கே பதிவு செய்திருக்கிறேன் http://pachaimannu.blogspot.com/2020/04/blog-post.html 

Valahnukur மலை அருகிலேயே இருந்த Gunnuhver என்ற வெந்நீர் ஊற்றில் இருந்து புகை குபுகுபு என வெண்ணிறமாக வந்த வண்ணம் இருந்தது. அத்துடன் சல்பர் எனப்படும் கந்தக வாயுவும் வெளியேறுவதால் கொஞ்சம் அழுகிய முட்டையின் வாடையும் வந்தது. நம்ம ஊரில்  கொள்ளிவாய் பிசாசு என்பது போல அந்த ஊரிலும் Gunna என்ற பிசாசு அந்த வெந்நீர் ஊற்றின் அடியில் சிக்கி இருப்பதாக நம்புகிறார்கள். கற்பனை என்றாலும் ஊருக்கு ஊர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நம்பிக்கைகள் தான் இருக்கின்றன.







அடுத்து நாங்கள் பார்த்தது Brimmkettil என்ற எரிமலை கற்களால் இயற்கையாய் உருவாக்கப்பட்டு வட்ட வடிவத்தில் ஒரு நீச்சல் குளம் போன்ற இந்த இயற்கை அமைப்பு. இது Reykjanes தீபகற்பத்தில் ,தென்மேற்கு ஐஸ்லாந்தில் கடற்கரையின் அருகிலேயே  உள்ளது. அலைகள் இதை நீரால் நிறைத்து பின் அந்த நீரே இந்த குளத்திலிருந்து வெளியேறி செல்வது பார்க்க அழகாய் இருந்தது. அழகு என்றால் ஆபத்து என்பது போல அழகாய் நிறையும் நீரே சுழித்து வெளியேறும் காட்சி பார்க்க சிறிது பயமாகவே இருந்தது.

அதற்குள் மதியம் 3 மணியை கடந்து விட்டிருந்தது. சரி, எப்படியும் Reykjavik-கை கடந்தே நாங்கள் stykkisholmur செல்ல வேண்டியது இருந்ததால் அங்கே இருக்கும் ஒரு புகழ்பெற்ற சர்ச் மற்றும் வைகிங் போர் கப்பல் சிற்பத்தையும் பார்த்து விட்டு பின்பு பயணப்படுவது என்று முடிவு செய்தோம்.

Hallgrimskirkja என்ற அந்த சர்ச் Reykjavik நகரின் மைய பகுதியில்(downtown) உள்ளது. ஏதோ ஒரு திருமண நிகழ்ச்சிக்காக பார்வையாளர்களுக்கு திறக்கப்படவில்லை. எனவே வெளியில் இருந்த சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு திரும்பினோம். Leif  Erikson என்ற ஐஸ்லாந்து நாட்டை சார்ந்தவரே கிறிஸ்டோபர் கொலம்பஸ்சிற்கு முன்பாக வட அமெரிக்காவில் கால் பதித்தவர் என்று அறியப்படுகிறார். இவரது நினைவாக அவருக்கு இந்த சர்ச்சின் முன்பாக ஒரு சிலை வைத்திருக்கிறார்கள். இந்த சிலையை அமெரிக்கா ஐஸ்லாந்திற்கு நினைவு பரிசாக அளித்துள்ளது. இப்படிப்பட்ட புதிய தகவல்களை அறிந்து மகிழ்ந்தோம். இந்த சர்ச்சை பற்றிய சுவையான தகவல்களை விக்கிப்பீடியாவில் பாருங்கள். ( https://en.wikipedia.org/wiki/Hallgrímskirkja)

         

 
  
தவன் படத்தில் "ஏனோ ஏனோ பனி துளி பாடலில்" வருமே ஒரு கப்பல், அந்த நினைவு சின்னம் sun voyager என்று அறியப்படுகிறது. வைக்கிங் என்றழைக்கப்டும் ஸ்கேந்திநேவியா போர் வீரர்கள் பயன்படுத்திய கப்பலை நினைவுபடுத்தினாலும் இது சூரியனை போற்றும் விதமாகவும், கனவு, நம்பிக்கை மற்றும் புதிய உலகிற்கான தேடலை நினைவு கொள்ளும் முகமாகவும் Jon Gunnar Aranson என்பவரால் வடிவமைக்கப்பட்டு ஒயிலாய் காட்சி அளிக்கிறது.






Reykjavik -விலேயே கிட்ட தட்ட சாயங்காலம் 5:30 மணி ஆகிவிட்டது. எனினும் அன்றிரவு தங்குவதற்காக Sykkisholmur என்று 2 மணி நேர பயணத்தில் உள்ள ஒரு இடத்தில் முன்பதிவு செய்து இருந்ததால் நாங்கள் கண்டிப்பாக பயணம் செய்ய வேண்டி இருந்தது. நாங்கள் இரவு தங்க வேண்டிய  வேண்டிய இடத்திற்கு அட்ரஸ் எல்லாம் இல்லை. வெறும் இவ்வாறு GPS எண்கள் மட்டுமே. (N64059.2705 W 22054.1383). நாங்கள் கார் வாடகைக்கு எடுக்குமிடத்தில் ஒரு GPS கருவியையும் வாடகைக்கு எடுத்து இருந்தோம். எனினும்  அது பாதி நேரம் வேலை செய்யவில்லை. எனவே போனில் இருந்த கூகுள் மாப்ஸ் என்ற செயலியையே அதிகம் பயன்படுத்தினோம். ஆனாலும் நாங்கள் செல்ல போகும் பகுதியான மேற்கு ஐஸ்லாந்தில் போன் சிக்னல் அதிகம் இல்லாத பகுதி. எனவே GPS கருவி வேலை செய்திருந்தால் உபயோகமாக இருந்திருக்கும். இல்லை என்ற பட்சத்தில் பாதகம் இல்லை. கிட்ட தட்ட ஒரே சாலை தான்.எனவே தொலைந்து போக வாய்ப்பு மிகவும் குறைவு. Snaefellsnes என்ற மேற்கு தீபகற்ப பகுதி ஐஸ்லாந்தில் உள்ள பல்வேறு இயற்கை அழகினை ஒருங்கிணைத்த ஒரு அழகு பெட்டகம். எரிமலை வேண்டுமா, அந்த எரிமலை குழம்புகள் பூமிக்குள் குடைந்த குகைகள் வேண்டுமா, பனி உறைந்த மலைமுகடுகள் வேண்டுமா, அந்த மலை முகடுகளில் பெருக்கெடுக்கும் அருவிகள் வேண்டுமா, அந்த அருவி நீர் குடைந்த மலைகளில் வாழும் பறவை இனம் வேண்டுமா, இன்னும் எத்தனை அழகுகள் ஐஸ்லாந்து முழுவதும் சிதறிக்  கிடக்கிறதோ அத்தனை அழகையும் ஒருங்கே இணைத்த பகுதி தான் Snaefellsnes  என்ற மேற்கு ஐஸ்லாந்து. அதனால் மேற்கு ஐஸ்லாந்தை ஆங்கிலத்தில் "Iceland  in  a Nutshell" என்பார்கள்.

சரி போகும் வழியில் பார்க்கலாம் என்று பெரிய லிஸ்ட்டே வைத்திருந்தேன். ஏனெனில் திரும்பி வரும் போது இதே வழியே  வர இயலாது என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். மேற்கு பகுதிகளை பார்த்த பிறகு ரிங் ரோடு வழியாக வடக்கு மற்றும் கிழக்கு ஐஸ்லாந்தை பார்த்து பின் Reykjavik வந்து விமானம் ஏறுவதாக திட்டம். எனினும் போகும் வழியில் பார்க்க முடிந்தது Gerduberg Basalt  Cliffs எனப்படும் ஒரே ஒரு இடத்தை மட்டும் தான். எரிமலை குழம்பு வெகு வேகமாக குளிர்விக்கப்படும் போதும் உண்டாகும் நீண்ட நெடும் பாறைகள் தான் இந்த basalt cliffs.. வரிசையாக யாரோ செதுக்கி வைத்தார் போல் நீண்ட நெடும்பாறைகள் பார்க்க மிகவும் அழகாக இருந்தது. 



கிட்ட தட்ட இரவு எட்டு 7 மணிக்கு மேலாகி விட்டாலும் நாங்கள் சென்ற வழியில்  பெரும்பாலும் வாகனம் எதையும் காணவில்லை. ஆளில்லா சாலைகளில் பயணம் செய்வது சற்று புதியது இல்லை என்றாலும்  பல மணி நேர பிரயாணத்தில் ஒரு கார் கூட நம்மை கடக்கவில்லை என்பது மிகவும் புதிதான அனுபவம். வெளிச்சம் இருந்ததால் நாங்கள் தங்க வேண்டிய இடத்தை அடைந்தோம். Helgafellsveit என்று stykkisholmur-இல் இருந்து ஒரு 15 நிமிட நேர பயணத்தில் ஒரு ஆட்டு பண்ணைக்கு மத்தியில் இருந்த கெஸ்ட் ஹவுஸ் நாங்கள் தங்குவதற்காக புக் செய்திருந்தோம். அந்த இடத்தின் இயற்கை அழகை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. மலைகள், எரிமலை பாறைகள், தண்ணீர் சூழ்ந்த இந்த இடம் அடடா அழகு. கீழே இந்த இடத்திற்கான இணைப்பை தந்துள்ளேன். 
https://www.airbnb.com/rooms/13123308?source_impression_id=p3_1590028468_vU4ey1Fis8AlQBKy&guests=1&adults=1

அந்த அழகான தங்கும் இடத்தில எடுத்த படங்கள் கீழே. நாங்கள் ஐஸ்லாந்தில் தங்கிய இடங்களில் மிகவும் பிடித்த இடமாக ஆனது இது. காலை எழுந்தவுடன் இந்த அழகான இயற்கை காட்சியை கண்டு விழிப்பது என்பது வரம்.






 
ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது தமிழ்நாட்டு உணவை உண்பது என்று ஏற்கனவே முடிவு செய்து இருந்தோம். முன்பே கூறியது போல நிறைய இடங்கள் பார்த்த பின்பு சாப்பிட உணவகம் எங்கே என்று தேடுதல் இயலாத ஒன்று. அது மட்டும் அல்லாமல் வெறும் GPS எண்கள் கொண்ட முகவரிகளுக்கு பக்கத்தில் எந்த விதமான உணவகமும்  இருக்காது என்பதும் காரணம். சமைக்க தேவையான அரிசி, புளி, பருப்பு, பொடி வகைகள் சில, ஊறுகாய், மசாலா ஆகியவற்றை கையோடு கொண்டு சென்றிருந்தோம். அது மட்டும் அல்லாமல் நூடில்ஸ், பாஸ்தா, சீரியல், ஜாம் போன்றவையையும் கையோடு எடுத்து செல்வது நல்லது. நாங்கள் தங்கிய இடங்கள் ஒரு சிலவற்றை தவிர கிச்சன் வசதி இருக்கிறதா என்று பார்த்தே புக் செய்திருந்தோம். அதனால் இரவில் சமைக்கும் வேலை ஒன்று இருந்தது. எனினும் அடுத்த நாள் மதியத்திற்கும் சேர்த்து சமைத்து எங்கு செல்கிறோமோ அங்க சுற்றி பார்த்து விட்டு நடுவிலேயே ஒரு பிக்னிக் போன்று மதிய உணவு அருந்துவது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. அது மட்டும் அல்லாமல் வெளியில் சாப்பிடுவது  என்பது கொஞ்சம் அதிக செலவு பிடிக்க கூடிய விஷயம் என்பதுவும் ஒரு காரணம். தங்குவதற்கு என்று இருக்கும் இடங்கள் பெரும்பாலும் விலை அதிகமாகவே இருந்தது. எனவே சிக்கனம் கருதி நாமே சமைத்து உண்பது என்பது நல்லது. ஒரு வேளை உணவு சமைத்து சாப்பிட இயலாது என்பவர்களுக்கு பெரிய ஊர்கள் மட்டும் அல்லாது சிறிய ஊர்களிலும் பீட்ஸா, பர்கர், சாலட் போன்ற உணவு வகைகள் கிடைக்கிறது. இது மட்டும் அல்லாமல் பெரிய ஊர்களில் தாய், சைனீஸ், இத்தாலிய உணவகங்கள் இருக்கிறது. பெரும்பாலான ஊர்களில் மளிகை கடைகளில் சாலட், பர்கர், காபி போன்றவையும் கிடைக்கிறது. 

அடுத்த நாள் வழக்கம் போல மெதுவாகவே எழுந்து கிட்ட தட்ட கிளம்பும் போது மதியம் 12 மணிக்கு மேல் ஆகிவிட்டது. அன்று Snafellsnes தீபகற்பத்தை சுற்றி வருவதாக திட்டம். முதலில் சென்றது Snaefellsnes உள்ள Kirkjufell என்ற பெயரை கொண்ட ஐஸ்லாந்தில் மிகவும் புகைப்படம் எடுக்கப்பட்ட மலையாகும். அந்த மலையில் இருந்து வழியும் அருவிக்கு பெயர் Kirkufjellfoss என்பதாகும். Grundafjordur என்ற ஊரின் அருகாமையில் உள்ளது இந்த மலை. 





இதன் பின்பு நாங்கள் Svodufoss என்ற நீர்வீழ்ச்சியை கண்டு களித்தோம். இந்த அருவி Rif  என்ற ஒரு ஊருக்கு அருகாமையில் இருந்தது. நிறைய பண்ணைகளுக்கு மத்தியில் இருந்ததால் இதை எப்படி அடைவது என்பதே  குழப்பமாக இருந்தது. சில மைல்கள் சிறிய ஓடைகளையும், புல் வெளிகளையும்  நடந்து கடந்தும்  இதன் அருகில் செல்ல முடியவில்லை. எனவே சற்று தொலைவில் இருந்தே புகைப்படம் எடுத்து திரும்பினோம்.  ஐஸ்லாந்தில் உள்ள அருவிகளில் பெரும்பாலும் பசால்ட் பாறைகள் எனப்படும் சதுரமான  கற்துண்டுகள் யாரோ ஒரு சிற்பி செதுக்கினார் போல் இயற்கையாகவே அமைந்துள்ளது. Svodufoss அருவியும் இதற்க்கு விதிவிலக்கல்ல. இயற்கை தான் எவ்வளவு வலிமை வாய்த்தது எத்தனை அழகியலுடன் தன்னைத் தானே செதுக்கி உள்ளது என்று வியந்தவாறே திரும்பினோம்.




அடுத்து சென்றது Djúpalónssandur மற்றும் Dritivk என்ற கருப்பு நிற மண்ணும் அந்த மண்ணின் மேல் சிறிய கருநிலவாய் கருப்பு கூழாங்கற்கள் கொண்ட ஒரு கடற்கரைக்கு. கடற்கரை என்றால் தண்ணீரில் இறங்கவும் முடியாது. இறங்கவும் கூடாது. கிரீன்லாந்து தொடங்கி ஐஸ்லாந்து முடியும் வரை ஆர்டிக் சமுத்திரத்தில் எழும் அலைகளை தடுப்பதற்கு எந்த விதமான நிலப்பரப்பும் இல்லை என்பதால் கடலில் எழும் அலைகள் மிகுந்த வேகத்துடன் இருக்கும். எனவே பெரும்பாலும் கடற்கரைகளில் எச்சரிக்கை பலகைகள் தென்படுகின்றன. இதனை மீறி யாரும் பெரும்பாலும் கடலில் இறங்குவதில்லை. நம்ம ஊரு இளவட்ட கல் போல பெரிய கற்களும் சிறிய கற்களுமாய் அந்த கடற்கரையில் கூழாங்கற்கள் அழகாய் காட்சியளித்தன. அந்த இளவட்ட கற்களை அந்த ஊர் மீனவர்கள் தங்கள் வலிமையை காட்டுவதற்காக தூக்குவார்களாம். அவர்களை போலவே நீங்களும் தூக்கி மகிழலாம். 










அடுத்து நாங்கள் சென்றது Vatnshellir என்ற குகைக்கு. இந்த குகையை  சுற்றி பார்ப்பதற்கு என்று நாங்கள் முன்பதிவு செய்திருந்தோம். Hellnar  என்ற ஊரிலிருந்து கிட்ட தட்ட 10 நிமிட கார் பயணத்தில் இருந்த  இந்த குகை எரிமலை குழம்பு வெளியேறி ஓடும் போது பூமிக்கு அடியில் குடைந்த பாதைகள் மற்றும் அந்த எரிமலை குழம்பு உண்டாக்கிய பாறைகள் ஆகியவற்றை காணும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. கிட்டத்தட்ட 35 மீட்டர் ஆழத்திற்கு பூமி மட்டத்தில் இருந்து கீழே வளைவுகள்  கொண்ட ஒரு படிக்கட்டின் வழி இறங்கி இந்த குகையை பார்த்தோம். 35 மீட்டர் என்பது கிட்ட தட்ட 3 மாடிகள் என்று கொள்ளலாம். 200 மீட்டர் அளவு அகலம் கொண்ட அறைகள், amphitheater என்று சொல்லும் வட்ட வடிவான அறைகள் என்று காலுக்கு கீழேயும் உண்டான அற்புதங்களை வடிக்க வார்த்தைகள் இல்லை. ஆள் ஆளுக்கு கையில் ஒரு டார்ச் லைட் கொடுத்திருந்தார்கள். அனைவரின் கை விளக்கையும் ஒரு இடத்தில் அணைக்க சொன்னார்கள். அணைத்த பின் காரிருள் (Pitch Black) என்பதை என்ன என உணர்ந்தோம். போதிய வெளிச்சம் இல்லாமையால் அதிகமாக புகைப்படம் எடுக்கவில்லை. எனினும் அனைவரும் சென்று பார்க்க வேண்டிய ஒரு அற்புதமான இடம். குகைக்குள் எடுத்த ஒரு காணொளியை இங்கே இணைத்துள்ளேன்.






நாங்கள் பயணித்த சாலையில் இரு மருங்கிலும் இருந்த அழகிய காட்சிகளை காட்டும் பொருட்டு மேலே ஒரு காணொளியை இணைத்துள்ளேன். இப்படிப்பட்ட இயற்கை காட்சிகளின் ஊடே தான் அதனினும் சிறந்த இயற்கை அதிசயங்கள் அமைந்துள்ளது.

அடுத்து பார்த்தது Londrangar Basalt Cliffs எனப்படும் கடல் பாறைகளை. இந்த பாறைகள் ஐரோப்பிய பறவைகள் வந்து தங்கும் இடமாகும். பறவைகள் கடலின் மேலே செங்குத்தாக ஓங்கி காட்சிதரும் அந்த பாறைகளில் தங்கி கூடுகள் அமைத்து தங்கள் குஞ்சுகளை வளர்க்கும் காட்சிகளை இங்கே காணலாம். பல்வேறு விதமான பறவைகளை காணும் ஆர்வம் கொண்டவர்களுக்கு (Bird Watchers) இது ஒரு சிறந்த இடம்.






கிட்ட தட்ட இரவு 8 மணியை கடந்து  விட்டிருந்தது இப்பொழுது. எனினும் சீல் எனப்படும் நீர் நாய்கள் நிறைய இருக்கும் Ytri Tunga Seal  Beach எனப்படும் கடற்கரையை பார்த்து விட்டு அன்றைய தினத்தை முடித்து கொள்ளலாம் என்று கடைசியாக அங்கே சென்றோம். அனைவருமே மிகவும் சோர்வாக இருந்ததால் நான் மட்டும் சென்று சில புகைப்படங்களை எடுத்து வந்தேன். Ytri  Tunga  Seal  Beach  என்பது ஐஸ்லாந்தை பொறுத்த வரை மிகவும் சிறப்பானது. ஐஸ்லாந்தில் மிக சில கடற்கரைகளில் மட்டுமே மண் பொன்னிறமாக இருக்கும். பெரும்பாலும் எரிமலைகள் நிறைந்த ஐஸ்லாந்தில் கருப்பு நிற மண் என்பதே  பெரும்பாலான கடற்கரைகளில் காணக் கிடைக்கும். இங்கே பொன்னிற மண் அமைந்த பாறைகள் நிறைந்த இந்த கடற்கரையில் நிறைய நீர்நாய்களை காண முடிந்தது.






அடுத்த நாள் நாங்கள் தங்கியிருந்த அழகிய பண்ணை வீட்டில் இருந்து கிளம்பி Stykkisholumur சென்று அங்கிருந்து ஒரு படகில் செல்வதற்காக திட்டம். படகு எந்த ஊருக்கு செல்கிறது என்பதை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

வளரும்...
 
ஐஸ்லாந்து பயண அனுபவம் - பாகம் 3 இங்கே 

6 கருத்துகள்:

  1. ஹையோ கொள்ளை அழகு. இடம். கண்டிப்பா பார்க்கணும். உங்கள் குறிப்புகள் ரொம்ப பயனுள்ளவை. ..ரசித்துப் பார்த்து வாசிக்கிறேன்...ரம்யா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா. தங்களை போன்றோர்களின் கருத்துக்களே மேலும் எழுத தூண்டுகிறது. தங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. மிகச் சிறப்பான இடங்களை எங்களுக்கும் சுற்றிக் காண்பித்து இருக்கிறீர்கள். மகிழ்ச்சி. தொடரட்டும் பயணம்....

    பதிலளிநீக்கு
  3. நானும் வாரம் ஒருமுறை ஐஸ்லாந்து சென்றுவருபவன் என்ற அடிப்படையில் உங்களின் கட்டுரையை ரசித்தேன்.
    நம்ம ஊரு சென்னையிலுள்ள பாரி முனைக்கு செல்பவர்கள் பாரிஸ் சென்றேன் எண்பதுபோல்தான் இங்கே இருக்கும் Iceland கடைக்கு போய்வருவதை சொல்கிறேன்.
    சிறகடித்து வானில் சீறிப்பாய்ந்த பறவைகளின் இனங்கள் அழிந்து இப்போது சிலைகளாகிப்போனது வேதனை.
    இங்கும் சில கொள்ளிவாய்கள் இருக்கின்றன, ஆனால் பிசாசுகள் என்று யாரும் சொல்வதில், குடிக்கவும் தருகிறார்கள்.
    தேவாலயத்தின் முகப்பு தோற்றம் அருமை.
    தொடருங்கள் உங்கள் பயண அனுபவங்களை.

    கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐஸ்லாந்து வார வாரம் சென்று வருகிறேன் என்ற தங்களின் நகைச்சுவை அருமை. ரசித்தேன். தொடர்ந்து வருகை தந்து ஆதரவு அளிப்பதற்கு நன்றி.

      நீக்கு