சமீபத்தில் சூடான செய்திகளில் இடம் பிடித்த பிரபலங்களுக்கு விருதுகள் கொடுத்தால் என்ன விருது கொடுக்கலாம் என்று ஒரு சுவையான கற்பனை.
"குடும்பம் ஒரு கோயில்" விருது
"தி அதர் சைடு" என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ள கருணாநிதி குடும்பத்து சொத்து பட்டியல் மலைக்க வைத்துள்ளது என்று சொன்னால் மிகை இல்லை. கலைஞர் குடும்பம் கடந்த 60 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்து எவ்வாறு மக்களுக்கு சேவை ஆற்றி உள்ளது என்பது எண்ணும் போது புல்லரிகிறது. பின்னே எந்த ஊரில் எந்த சொத்து உள்ளது, அது யார் பராமரிப்பில் உள்ளது, வேறு எங்கெல்லாம் சொத்து வாங்கலாம் என்றெல்லாம் திட்டமிடுவது எவ்வளவு கஷ்டம். அஞ்சாநெஞ்சன், தளபதி, அவரது வாரிசுகள், மகள்கள், மருமகன்கள் என்று எல்லாரும் தலைமுறை தலைமுறையாக உட்கார்ந்து சாப்பிட வசதியாக சொத்து சேர்த்து கொடுத்து "திராவிட முன்னேற்ற கழகம்" என்ற பாரம்பரியம் உள்ள கட்சியை "திருடர் முன்னேற்ற கழகம்" என்றும் "திரு.மு. கருணாநிதி கழகம்" அனைவரும் பரிகாசிக்கும் அளவுக்கு தரம் தாழ வைத்திருக்கும் கருணாநிதிக்கு இந்த சிறப்பு விருது. விக்கிலீக்ஸ் தரும் தகவல் படி 35000 கோடி ருபாய் அளவுக்கு சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருக்கும் நமது திருக்குவளை தவப்புதல்வனுக்கு அடிக்கடி நடக்கும் கட்சிக்காரர்களின் கைது நடவடிக்கைகளை மறக்கச் செய்யும் இந்த விருது என்று தாராளமாக நம்பலாம்.
"சிறந்த புதுமுக நடிகை" விருது
காதலனுடன் ரகசியமாக திருமணம் முடித்து தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அவரது மகள் ஸ்ரீஜாவை அவ்வளவு சீக்கிரமாக யாராலும் மறந்திருக்க முடியாது. இன்ஜினியரிங் பட்டதாரியான ஸ்ரீஜா தன் சக மாணவனை மணந்து தாய் தந்தையரிடம் இருந்து பாதுகாப்பு வேண்டி சட்டம் காவல்துறையை நாடியது ஒரு காலம். இன்றோ எனது கணவன் மற்றும் கணவன் வீட்டாரும் வரதட்சணை கேட்டு என்னை சித்திரவதை செய்து வருகிறார்கள் எனவே எனக்கு விவாகரத்து வாங்கித் தாருங்கள் என்று கோர்ட் கதவை தட்டி இருக்கிறார். இன்ஜினியரிங் படித்து, அரசியல் பலமும், பண பலமும் வாய்ந்த குடும்ப பின்னணியில் இருந்து வரும் ஸ்ரீஜாவை பெரிய பின்புலம் இல்லாத அவரது கணவரோ அல்லது அவரது கணவரின் வீட்டுக்காரர்களோ துன்புறுத்தி இருப்பார்கள் என்பது நம்பும் படியாக இல்லை. இரண்டாம் திருமணம் பற்றிய கிசுகிசுக்கள் வலம் வரும் இந்த வேளையில் வரதட்சணை கொடுமை என்று
கிளிசரின் இல்லாமலேயே டன் கணக்கில் அழுது அனுதாபம் தேடும் ஸ்ரீஜாவிற்கு இந்த டன்டனக்கா விருது.
"அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன " விருது
தி.மு.க, அதி.மு.க மீண்டும் தி.மு.க என்று டென்னிஸ் பந்து போல இந்த பக்கம் அந்த பக்கம் மீண்டும் இந்த பக்கம் என்று பறந்து பறந்து வாக்காளர் என்ணத்தை விட்டே பறந்த பா.ம.க நிறுவனர் ராமதாசுக்கு இந்த விருது. இலங்கை தமிழர் படுகொலையை கண்டிக்காதது, பல்வேறு ஊழல் புகார்களில் கூட்டணி கட்சியான தி.மு.க-வின் பங்கு பற்றி தெரிந்தும் அமைதி காத்தது, தன் மகன்அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைப்பது ஒன்றே குறிக்கோள் என்று கட்சி நடத்தியது பின்னர் தேர்தலில் தோல்வியை தழுவியதும் கூட்டணி உறவை திடீரென்று முறித்து கொண்டு நாங்கள் இனி வரும் எந்த திராவிட கட்சியிடமும் இனி கூட்டணி வைக்காமல் தேர்தலில் தனியாக போட்டு இடுவோம் என்று சலம்புவது என்று காமெடி செய்யும் ராமதாசுக்கு இந்த கலக்கல் விருது. இனி போட்டியே இட வேண்டாம் வீட்டிற்கு சென்று நிரந்தர ஒய்வு எடுங்கள் என்று தமிழக வாக்களர்கள் அடுத்த தேர்தலில் ராமதாசுக்கு தெளிவு படுத்துவார்கள் என்று நம்புவோமாக.
"நான் சொல்வேதல்லாம் உண்மை உண்மையை தவிர வேறில்லை" விருது
கற்பனை விருது என்றாலும் இதை வாங்க கூட சோனியாவிடம் பெர்மிஷன் வாங்க கால் கடுக்க காத்திருக்கும் மன்மோகன் சிங்கை விட இந்த விருதுக்கு பொருத்தமானவர் ஈரேழு பதினான்கு லோகத்திலும் இல்லை. 2-ஜி ஊழல் பற்றி எதாவது தெரியுமா என்று சுப்ரீம் கோர்ட் கேட்டாலும், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா பிரதமர் அலுவலகத்திற்கு தெரியாமல் எந்த அலைகற்றை ஒதுக்கீடும் செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டினாலும், காமன்வெல்த் ஊழல் பற்றி எதை கேட்டாலும் எனக்கு எதுவும் தெரியாது யுவர் ஆனர் என்று ஜகா வாங்கி, இந்த பொம்மை பிரதமரை உண்மையான பிரதமர் என்றா இன்னும் இந்த உலகம் நம்புது என்று வடிவேலு கணக்காய் மிரளுவதாகட்டும், எனக்கு அவ்வளவு பவர் எல்லாம் இல்லை சும்மா நம்புங்க என்று உண்மையாகவே கூறினாலும் எதிர் கட்சிகள் பிரதமரை துவைத்து காயப்போடுவதால் நொந்து நூடில்ஸாகி இருக்கும் சிங்குக்கு ஏதோ நம்மால் முடிஞ்ச உபகாரம் இந்த விருது.
"வில்லன் இல்லை ஹீரோ" விருது
மதுரையை ஐந்து வருடங்களாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து நில அபகரிப்பு, கொலை,மணல் கொள்ளை, கட்டை பஞ்சாயத்து, அடிதடி,வன்முறை என்று சிற்றரசர்கள் போல் கோலோச்சிய அஞ்சா நெஞ்சனின் அல்லு சில்லுகளான மதுரை தி.மு.கா-வினருக்கு இந்த விருது. எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற அச்சத்தால் 100 கோடி மதிப்புள்ள நிலங்களை மீண்டும் மிரட்டி வாங்கியவர்களிடமே கொடுத்து சமாதானமாக போய்விடுவதிலாகட்டும், தான் தப்பிப்பதற்காக தன் கட்சிகாரனையே காட்டி கொடுத்து திடீர் நல்லவன் ஆவதாகட்டும், நானா தி.மு.கா ஆளா நல்ல கதை நான் எப்பவுமே அம்மா கட்சிதான் என்று அந்தர் பல்டி அடிப்பது வரை இவன் நல்லவனா கெட்டவனா என்று போலீஸ் முதல் பொதுமக்கள் வரை எல்லாரையும் மண்டை காய வைப்பதால் பிடிங்கள் இந்த சூப்பர் விருது.
"நான் அவனில்லை" விருது
போலி பத்திர மோசடி செய்து வேறொருவர் நிலத்தை அபகரித்தார் என்றும், போலீஸ் கைதில் இருந்து தப்ப தலைமறைவு ஆகிவிட்டார் என்று இறக்கை கட்டி பறக்கும் வதந்திகளாலும் "மாப்பு வைச்சிட்டாண்டா ஆப்பு" என்று பம்மி திகிலடித்து கிடக்கும் வடிவேலுக்கு இந்த அம்சமான விருது. தனது வெள்ளந்தி பேச்சு, உடல் மொழி, எல்லோரையும் கவரும் நகைச்சுவை என்று திரை துறையில் மறக்க முடியாத நட்சத்திரமாக மின்னும் கைப்புள்ளைக்கே கட்டம் சரியில்லாமல் போனதால் வேணாம் வேணாம் அழுதுடுவேன் என்று அவர் கெஞ்சியும் வதந்திகளும் வம்பும் விடாது தொடர்வதால் இந்த சங்கத்தை கலைச்சிவிட வேண்டியது தான் என்று புலம்பித் தளும்பும் வடிவேலுக்கு இந்த ஆறுதல் விருது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக