வியாழன், செப்டம்பர் 30, 2021

கவிதை கேளுங்கள்

வல்லினச் சிறகுகள் ஆகஸ்ட் இதழில் என்னுடைய கவிதை. வடிவமைப்பு செய்த திரு. லோகராஜ் அவர்கள் அருமையான ஒரு படம் தேர்வு செய்து அளித்துள்ளார்.

இந்தக் கவிதையை வாசிக்க வல்லினச் சிறகுகள் இதழ் இணைப்பு:




                                                                கவிதை இதோ

தலைப்பு: இல்லத்தரசி

கைரேகை மறைய 
தேய்த்த பாத்திரங்கள் கணக்கிலடங்கா 
செங்குத்தாக அடுக்கி வைத்திருந்தால்
உலகின் உயரமான கோபுரங்களை நகைத்திருக்கும்

வெளுத்த துணிகளும் மடித்த உடுப்புக்களும்
எண்ணிக்கையில் வசப்படாது
கயிற்று கொடிகளில் அருகருகே தொங்கவிட்டால்
பூமிக்கே புடவையாய் கட்டியிருக்கலாம்

விடுமுறை அறியா அடுக்களையில்
பிறர்கென செய்த உணவினில்
ஒர் உணவுப் பாலம் அமைத்திருந்தால்
செவ்வாய்க்கே செலவில்லாமல் சென்று திரும்பலாம்

சுத்தம் செய்த தரைகளை
கொஞ்சம் கணக்கெடுத்தால்
வானத்தின் பரப்பளவே
அளவில் சிறியதாக ஆகக் கூடும்

நீல வானம்
பால் வெள்ளை நிலா
பொன் மஞ்சள் கதிரவன்
அலங்கார மொழி தாண்டி உண்மையில்லை
இல்லத்து அரசி என்பதும்
அவ்வாறானது தான்

சார்லட் புத்தகக் கண்காட்சி, ஆகஸ்ட் 2021


புத்தகக் கண்காட்சி என்றதுமே அனைவருக்கும் நினைவிற்கு வருவது சென்னை புத்தகக் கண்காட்சி தான். வெளிநாடுகளில் அதுவும் குறிப்பாக அமெரிக்காவில் புத்தகக் கண்காட்சி என்பதெல்லாம் கனவு தான். தொலைக்காட்சியில் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டியது தான். அதுவும் புதிய புத்தகங்கள் வெளியீடு என்பதெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு விஷயம். இதெல்லாம் அமெரிக்காவில் அதுவும் எங்கள் ஊரிலேயே நடந்தது என்பது இன்றும் நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது. புத்தகங்களை வாங்க பெருமளவில் கூட்டம் வந்ததும், நிறைய புத்தக ஆர்வலர்கள் புத்தக கண்காட்சியில் பங்கேற்றனர் என்பதெல்லாம் எங்கள் ஊரில் நடந்தேறிய புத்தகக் கண்காட்சியின் சிறப்புகள் என்று சொல்லலாம்.


கண்காட்சியை தொடங்கி வைத்த சார்லட் வாழ் சிறப்பு விருந்தினர்களை மேலே உள்ள படத்தில் காணலாம்.


வட அமெரிக்க எழுத்தாளர் சங்கத்தின் பெயர்ப் பலகை திறப்பும் நடந்தது.


                கண்காட்சிக்கு செய்யப்பட்ட புகைப்பட உதவி கையட்டைகள்

புத்தகக்  கண்காட்சிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே புத்தகங்களை கேரி, வட கரோலைனா சென்று புத்தகங்களை எடுத்து வந்தோம். வெயிலில் போய்விட்டு வந்ததால் களைப்பாக இருந்தாலும் பெட்டி நிறைய புத்தகங்களைப் பார்த்ததும் வடிந்திருந்த உற்சாகம் மீண்டும் தொற்றிக் கொண்டது. அது தவிர அடுத்த வாரத்திலேயே புதிய புத்தகங்களும் வந்து சேர்ந்தது. புத்தகங்களின் எண்ணிக்கையை சரி பார்ப்பது,  புத்தகங்களை வகைமைப் படுத்துவது என்று பயங்கர வேலை. அது மட்டும் அல்லாமல் நிறைய புது புத்தகங்களும் வந்து குவிந்தன. அவற்றையும் சரி பார்ப்பது, கணினியில் உள்ளிடுவது, புத்தகங்களுக்கு விலை பட்டி ஓட்டுவது என்று வேலை அதிகம். நான்கு பேர் இணைந்து செய்துமே கடைசி இரண்டு நாட்கள் இரவு பகல் பாராமல் வேலை செய்வதாக இருந்தது. தன்னார்வலர்களுக்கு என்ன வேலை என்று பிரித்து கொடுப்பது, அவர்களுக்கு உரிய தகவல் அளிப்பது என்று கடைசி தினம் பரபரப்புடன் சென்றது. தன்னார்வலர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வது, புத்தக கண்காட்சிக்கு வந்த விருந்தினரை கவனிப்பது என்று பணிகள் மிக அதிகம். ஆனால் கண்காட்சி மிகச் சிறப்பாக நடந்தது மனதிற்கு மகிழ்ச்சி தருவதாக அமைந்தது.  நிறைய குழந்தைகளும் ஆர்வத்துடன் வந்து புத்தகங்களை வாங்கி சென்றர்கள். ஒரு புதிய தொடக்கமாக இந்த கண்காட்சி அமைந்தது என்று சொன்னால் அது மிகை இல்லை.




புத்தக கண்காட்சி நேரலையில் இங்கே:




வல்லினச் சிறகுகள் இதழில் புத்தகக்  கண்காட்சியைப்  பற்றிய முழு விவரம். பக்கம் 86 இல்







 தினமலரில் புத்தகக் கண்காட்சியைப் பற்றி வந்த செய்தி.




புத்தகக் கண்காட்சியை பற்றிய வீடியோ பதிவு