புதன், ஜனவரி 18, 2023

யாருமற்ற சிலுவை - கவிதை



வீட்டின் அறைகளில் ஒலிக்கும்
 அதிகாரக் குரல்களில் ஒடுங்கி
 குளிரூட்டப்பட்ட காற்றோடு வெளியேறும்
 கருத்துச் சுதந்திரக் குரல்கள் 
பின்னெப்போதும் எழுவதேயில்லை

  துரோகத்தின் பெருஞ்சுமை அழுத்தி
 தோற்றுவிக்கும் கண்ணீரை மறைத்து
 நெஞ்சுரம் என உரைத்தாலும்
 மரத்த உள்ளத்தில் ஈரம் மீண்டும் துளிர்ப்பதேயில்லை

  அறுசுவை உண்டி அழகு குன்றாத வீடு
 அத்தனையும் பார்த்துச் செய்தாலும்
 சம்பாதிக்காதவள் எனும்
 உதாசீனக் குரலில் தொலையும் முகங்கள்
 நிலைக் கண்ணாடிகளில் கூட
 மீண்டும் தலைக் காட்டுவதில்லை

  முன்பின் தெரியாத ஒருவரின் மனைவியாய்
 குலப் பெருமையை பெண்ணிடம் சுமத்தும்
 சமூகக் கட்டுப்பாடுகளில் சிக்கி
 மீளாத தருணங்களில்
 விடைபெறும் சுயத்தை
 மீண்டும் கண்டெடுக்கவே முடிவதில்லை

  உன்னுடைய நாள் எப்படி இருந்தது
 உனக்கு என்ன வண்ணம் பிடிக்கும்
 நீ விரும்பிய உணவினைச் சொல்
 நீ யாராக வேண்டும் என்று நினைத்தாய்
 நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா
  கேள்விகளை அடுக்கும் மகளிடம் எப்படிச் சொல்வேன்
 கூண்டுக் கிளிகள் உயரம் அளந்ததில்லை
 மீன்களின் கண்ணீரை உலகம் அறிந்ததில்லை
 எல்லாரின் விருப்பதிற்கும் பாத்திரமாய்
 யாருடையோ வாழ்க்கையையோ வாழும் நான்
 மனித உருவில் பொம்மையென்று

  உயிர்வாழ்தலோ தேவனாவதோ 
இங்கு நிபந்தனைக்கு உட்பட்டது
 பெண்ணுலகில் சிலுவைகள் 
கடவுளன்றி இருக்கட்டும்
 மறைந்தபின் உயிர்த்தெழா 
சுதந்திரமாவது கிடைத்துவிட்டு போகட்டுமே

அருவி - பனி மலர் 2023



கிட்டத்தட்ட இரண்டாண்டு இடைவெளிக்குப் பின் பேரவையின்(FeTNA) அருவி மலர் வெளி வந்துள்ளது. ஜனவரி 2023 இதழை பேரவையின் இணையதளப் பக்கத்தில் பார்க்கலாம். அருவி இதழின் முதன்மை ஆசிரியராக பணியாற்றியது மிகவும் மன நிறைவாக இருந்தது. ஆசிரியர் குழுவில் இருந்த தன்னார்வலர்களின் கடினமான உழைப்பினால் இந்த மலர் இவ்வளவு சிறப்பாக வந்துள்ளது என்றால் அது மிகை இல்லை. பேரவையில் அங்கத்தினர்களாக இருக்கும் பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் செய்திகள்,  கவிஞர் திருமிகு உமாதேவி, பத்திரிக்கையாளர் திரு ஜெயபாஸ்கரன் ஆகியோரின் கவிதைகள் இந்த அருவி இதழில் இடம் பெற்றுள்ளது.

இதழை கீழே உள்ள இணையதளப் பக்கத்தில் படிக்கலாம்.

https://fetna.org/aruvi-panimalar-2023/





சென்னை புத்தகக் கண்காட்சி - CIBF 2023

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு செல்ல வேண்டும் என்ற பல ஆண்டுக் கனவு ஒரு விதமாக இந்த ஆண்டு நிறைவேறியது என்றே சொல்லலாம். 2022, நவம்பர் மாதம் வலைத்தமிழ் ஏற்பாடு செய்திருந்த வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்வினை ஒருங்கிணைத்த வலைத்தமிழ் திரு. பார்த்தசாரதி, எழுத்தாளர் திரு. ஆரூர் பாஸ்கர் ஆகிய இருவரின் முயற்சியின் பேரில் சென்னையில் தற்போது நடைபெற்று வரும் CIBF 2023 இல் வட அமெரிக்க எழுத்தாளர்களின் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் என்னுடைய புத்தகமும் அடங்கும். இப்படியாக என்னுடைய புத்தகங்கள் வழி புத்தக விழாவில் பங்கு பெற்றது ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது. 

வலைத்தமிழில் என்னுடைய பேச்சினைக் காண இந்த இணைப்பினை சொடுக்குங்கள் 

https://www.valaitamil.com/literature_tamil-writers

புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள புத்தகங்களின் படங்கள் கீழே.















பொங்கல் நல்வாழ்த்துக்கள் - கவிதை

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டு அனைவருக்கும் இனிய ஆண்டாக அமைய வேண்டுகிறேன்.





பாருக்கொரு மணி விளக்காம் தமிழ்நாடு 
கன்னித் தமிழுக்கு நிகரும்தான் ஏது? 
யாவருமே கேளிரென்ற கோட்பாடு 
காசினியில் முன் கேட்டதுண்டா கூறு!

இந்திர விழாவென்று
தொல் தமிழர் போற்றியதை 
பொங்கலென்று ஏத்தி 
தைப் பெண்ணை வரவேற்போம் 

மழை தருவிக்கும் தெய்வம் போகி
சகம் தழைக்க ஒளிர்ந்திடும் பரிதி 
மண் கொழிக்க பாடுபடும் ஏறு
மனம் திருத்த வெண்பாவளித்த பாவலரேறு 
அகம் நிறைக்க, கூடிமகிழ, உற்றார்
நன்றி நவில கிடைத்ததோர் பொன்னாளே!

தனித்தமிழில் பேசி செம்மொழி வளர்ப்போம் 
பேதம் கடந்து வானமளவு உயர்ந்து நிற்போம் 
உழவின் பெருமை யாவருக்கும் எடுத்துச் சொல்வோம் 
ஊறு நீக்கி இயற்கையினை கண்ணாய்க் காப்போம்

குறள்நெறியைக் கடைப்பிடித்து உலகை வெல்வோம் 
வரும் தலைமுறைக்கும் நற்பாதை விளக்காய் நாமிருப்போம் 
பழங்கலைகள் பல பயின்றே களித்து வாழுவோம் 
ஆதிகுடியின் நலிந்த புகழை இணைந்தே மீட்போம் 

மண்ணடுப்பு மெழுகி
மாக்கோலமிட்டு  பொட்டு வைத்து
சந்தன விறகும்
அகில் மணமும் கமழ 
செந்நெல் ஈன்ற புது அரிசியும் 
தித்திக்கும் கட்டி வெல்லமும் 
தீஞ்சுவைப் பாலும் 
நெய் தோய்ந்த முந்திரியும் 
கலந்தே பொங்கலிட்டு
மண்ணும், மனிதர்களும் 
இயற்கையும், இன்னுயிர்களும்
ஆல் போலத் தழைத்தோங்கி 
அறத்தின் வழியேகி 
மகிழ்ச்சியாய் நீடுவாழ்கவென 
உளமார வாழ்த்துகிறேன்!

மெல்லோட்டம் ஓடியவள் - கவிதை




திசம்பர் மாத நந்தவனம் இதழில் வெளியான எனது கவிதை.


அனுதினமும் சில மைல் இலக்கு
மழையோ பனியோ சுடும் வெயிலோ
வானிலை எப்படி இருந்தாலும்
மெது நடையாகவோ வேக ஓட்டமாகவோ 
நிச்சயம் கடந்திருக்க வேண்டும்

அலுவலக வேலை அடுக்களை வேலையென 
வேலைப் பட்டியலில் இணைந்து
பற்பல நாளாகி விட்டது
மெல்லிடை மனிதர்களைப் பார்த்தால்
கால்மணி நேரம் கூடுதலாய்ச் செய்யப்படுகிறது 

அப்படியே இருக்கிறாய்
அலுவலக நண்பர்களின் சிலாகிப்பிற்கு
எல்லா உடையும் சரியாகப் பொருந்துகிறது
சுய பெருமிதத்திற்கு
வயதே தெரியவில்லை உனக்கு
வெகு நாளைக்குப் பின் 
சந்திக்கும் தோழமைக்கு 
உள்ளும் புறமும் இளமையைத்
தக்க வைக்கிறது 
மருத்துவரின் அக்கறைக்கு
அவரவர்க்குப் பல காரணங்கள்

அத்தனை பிறவியும் 
பிறந்திளைத்தேன் என்பார் மாணிக்கவாசகர்
இப்பிறவியில் இளைப்பதே 
முயற்கொம்பாகி விட்டது

வாழும் இறுதி நொடி வரை
வாழ்தலைப் போலவே  
கற்கும் முகமாக இருப்பதால் 
உடற்பயிற்சி என்று அழைக்கிறார்கள் போலும்

ஏழை பணக்காரன்
கறுப்பு வெள்ளை
பேதங்கள் பல கடப்போரும் 
உடல் எடைக்கான பிரிவுகளில் 
கட்டாயம் சிக்கிக் கொள்வர் 

எப்படியேனும் ஏதோ ஒரு பிரிவில் 
என்னை அடைத்துவிடத் துடிக்கும் உலகினை விட்டு 
வெகு தொலைவு செல்லும் முயற்சியே 
என் மெல்லோட்டம் என்பது 
நான் மட்டும் அறிந்த ரகசியம்