புதன், ஜனவரி 18, 2023

யாருமற்ற சிலுவை - கவிதை



வீட்டின் அறைகளில் ஒலிக்கும்
 அதிகாரக் குரல்களில் ஒடுங்கி
 குளிரூட்டப்பட்ட காற்றோடு வெளியேறும்
 கருத்துச் சுதந்திரக் குரல்கள் 
பின்னெப்போதும் எழுவதேயில்லை

  துரோகத்தின் பெருஞ்சுமை அழுத்தி
 தோற்றுவிக்கும் கண்ணீரை மறைத்து
 நெஞ்சுரம் என உரைத்தாலும்
 மரத்த உள்ளத்தில் ஈரம் மீண்டும் துளிர்ப்பதேயில்லை

  அறுசுவை உண்டி அழகு குன்றாத வீடு
 அத்தனையும் பார்த்துச் செய்தாலும்
 சம்பாதிக்காதவள் எனும்
 உதாசீனக் குரலில் தொலையும் முகங்கள்
 நிலைக் கண்ணாடிகளில் கூட
 மீண்டும் தலைக் காட்டுவதில்லை

  முன்பின் தெரியாத ஒருவரின் மனைவியாய்
 குலப் பெருமையை பெண்ணிடம் சுமத்தும்
 சமூகக் கட்டுப்பாடுகளில் சிக்கி
 மீளாத தருணங்களில்
 விடைபெறும் சுயத்தை
 மீண்டும் கண்டெடுக்கவே முடிவதில்லை

  உன்னுடைய நாள் எப்படி இருந்தது
 உனக்கு என்ன வண்ணம் பிடிக்கும்
 நீ விரும்பிய உணவினைச் சொல்
 நீ யாராக வேண்டும் என்று நினைத்தாய்
 நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா
  கேள்விகளை அடுக்கும் மகளிடம் எப்படிச் சொல்வேன்
 கூண்டுக் கிளிகள் உயரம் அளந்ததில்லை
 மீன்களின் கண்ணீரை உலகம் அறிந்ததில்லை
 எல்லாரின் விருப்பதிற்கும் பாத்திரமாய்
 யாருடையோ வாழ்க்கையையோ வாழும் நான்
 மனித உருவில் பொம்மையென்று

  உயிர்வாழ்தலோ தேவனாவதோ 
இங்கு நிபந்தனைக்கு உட்பட்டது
 பெண்ணுலகில் சிலுவைகள் 
கடவுளன்றி இருக்கட்டும்
 மறைந்தபின் உயிர்த்தெழா 
சுதந்திரமாவது கிடைத்துவிட்டு போகட்டுமே

3 கருத்துகள்:

  1. அருமை அருமை, ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க ரம்யா...

    //அறுசுவை உண்டி அழகு குன்றாத வீடு
    அத்தனையும் பார்த்துச் செய்தாலும்
    சம்பாதிக்காதவள் எனும்
    உதாசீனக் குரலில் தொலையும் முகங்கள்
    நிலைக் கண்ணாடிகளில் கூட
    மீண்டும் தலைக் காட்டுவதில்லை//

    சூப்பர்!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ந. சந்திரக்குமார்7/14/2023 4:56 PM

    உணமையான உணர்ச்சிக் குமறலுடன்ன்,மிகச் சிறப்பாக வடிவம் பெற்றிருக்கிறது இந்தக் கவிதை.
    'கூண்டுக் கிளிகள் உயரம் அளந்ததில்லை
    மீன்களின் கண்ணீரை உலகம் அறிந்ததில்லை'....
    'பெண்ணுலகில் சிலுவைகள்
    கடவுளன்றி இருக்கட்டும்'...
    என்ற வரிகள் அபாரம்! வாழ்த்துகள், மேலும் சிறக்கட்டும் உங்கள் கவியுலகப் பயணம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றிங்க சந்திரகுமார். கவிதை வரிகளை குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளீர்கள். உங்கள் பாராட்டுக்கு மனங்கனிந்த நன்றி

      நீக்கு