திங்கள், மார்ச் 07, 2016

என்ன சமையலோ

எனக்கு தெரிஞ்சு, சமையல் செய்ய தெரியும் ஆண்களில் கைவிட்டு எண்ணக்கூடிய சிலரில் நானும் ஒருவன் என்றார் நண்பர் ஒருவர். உண்மை தான், சிறு வயதில் கேட்ட கதைகளில் வரும் பெண் பாத்திரங்கள் பெரும்பாலும் சமையல் அறையில் இருப்பதை போன்றோ அல்லது சமையல் செய்வதை போன்றோ தான் சித்தரிக்கப் பட்டிருப்பார்கள். ஒரு ஊர்ல பாட்டி ஒருவர் வடை சுட்டுகிட்டு இருந்தாங்க அப்படின்னு ஆரம்பிக்கற கதைகள் , அம்மா பற்றிய குழந்தைகள் பாடல்களில் வரும் உணவை பற்றிய வரிகள் என்று சமையல் என்பது பெரும்பாலும் பெண்களுக்கான துறை என்பதே இங்கு மரபாகி விட்டது. ஆயினும் இன்றைய நடைமுறைக்கு மாறாக புராணங்களில் பெண்கள் சமையல் கலையில் சிறந்து விளங்கியதற்கான ஆதாரங்கள் எதுவும் நினைவிற்கு வரவில்லை. பஞ்ச பாண்டவர்களின் மனைவி திரௌபதி கூட அக்ஷய பாத்திரத்தில் இருந்தே உணவு அளித்ததாக மகாபாரதத்தில் வருகிறது. (அந்த காலத்து "பாஸ்ட் புட்" இது தான் போலிருக்கிறது.)பண்டவர்களில் பீமனே சிறந்த சமையல் நிபுணனாக அறியப்படுகிறான். நளபாகம் என்றாலே நினைவுக்கு வரும் நள மகாராஜாவும் ஒரு ஆண் . சமையல் செய்ய தேவையான அக்னி, அந்த அக்னி எரிய தேவையான வாயு , உணவை விளைவிக்க தேவையான மழையை தரும் இந்திரன் என்று உணவு சம்பந்தப்பட்ட பெருவாரியான கடவுளர் கூட ஆண்களே. பெண்கள் கல்வி உரிமை மறுக்கப்பட்டு, பொருளாதார ரீதியில் ஆண்களை சார்ந்திருக்கும் நிலை வந்து வந்த சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு தான் பெண்கள் சமையலறையில் தஞ்சம் புகும் நிலை வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
இன்று பெண்கள் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே கோலோச்சிய பல துறைகளில் முத்திரை பதித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெருவாரியாக பெண்கள் மட்டுமே கோலோச்சும் அவரவர் வீட்டு சமையல் அறையில் வேலை செய்வதை இன்றும் ஆண்கள் தகுதிக் குறைவாக நினைப்பதாகவே தோன்றுகிறது. என்னை பொறுத்த வரையில் பெண்கள் ஆண்களுடன் இணைந்து குடும்ப பொருளாதார சுமையில் பங்கேற்கும் போது, ஆண்கள் சமையல் செய்யத் தெரிந்து கொள்வதை பெண்களுடைய அடுக்களை சுமையில் பங்கெடுக்கும் முகமாகவே பார்க்க வேண்டும். அவருக்கு சுடு தண்ணி கூட வைக்க தெரியாது, பாவம் பசங்க பசியோட இருப்பாங்க என்று வேலைக்கு சென்று வீடு திரும்பிய பின்னும் அடுக்களையில் உழலும் குடும்பத் தலைவிகளை பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது. உடம்பு சரியில்லை என்றால் கூட தானே சமையல் செய்தாக வேண்டும் என்று கட்டாயத்தில் இருக்கும் இல்லத்தரசிகளில் பலரை உங்களுக்கு தெரிந்து இருக்க கூடும். அப்படிப்பட்டவர் உங்கள் தாயாகவோ அல்லது நெருங்கிய உறவினர்களில் ஒருவராக கூட இருக்கலாம். உணவு என்பது அனைவருக்கும் தேவையான அடிப்படையான ஒன்று. அதை எப்படி செய்வது என்பது கட்டாயம் அறிய வேண்டிய வாழ்வியல் திறனாக ("லைப் ஸ்கில்") மட்டுமே பார்க்கிறேன். இதில் ஆண்கள் தகுதி பாராமல் என்னுடைய குடும்பத்திற்காக செய்கிறேன் என்று ஆவலுடன் பங்கேற்க வேண்டும்.
பி கு : இந்த கட்டுரையை படித்து விட்டு ஆண்கள், "என்ன பெரிய சமையல்" என்று அதில் குதித்து கை,கால், முகம் எல்லாம் சுட்டுக்கொண்டு, கறை படிந்த பாத்திரங்களும், அழுக்கான சமையல் அறையையும் அவரவர் வீட்டம்மாவிற்கு கொடுத்து வேலை சுமையை இன்னும் அதிகப்படுத்துவது போன்றவற்றிற்கெல்லாம் கம்பெனி பொறுப்பேற்காது.