செவ்வாய், மார்ச் 08, 2011

கிரிக்கெட் - ஒரு பார்வை

வேர்ல்ட் கப் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பிச்சாச்சு. சூரிய உதயத்தை பல நாளா 
பார்க்காதவங்க  கூட அலாரம் வைத்து சூரியனுக்கு முன்னாடி கண் விழித்து 
கிரிக்கெட் மேட்ச் பாக்கறாங்க. நான் சொல்லறது வடஅமெரிக்காவில
இருக்கற கிரிக்கெட் ரசிகர்களை பற்றி.  இந்தியாவில இருக்கற ரசிகர்களை பற்றி கேட்கவே வேண்டாம். அலுவலகத்துக்கு போறவங்க, காலேஜ் மற்றும் 
ஸ்கூலுக்கு போறவங்க, இல்லத்தரசிங்கன்னு  எல்லாரும் தங்கள் பணிகளை மறந்து தொலைகாட்சியோட  ஒன்றிப்  போய்டுவாங்க. 



இன்று இந்திய நாட்டு மக்களை ஒருங்கிணைக்கிற சக்தியாக கிரிக்கெட் மாறிவிட்டது.  சினிமா, கிரிக்கெட், தொலைக்காட்சி என்று மக்கள் ஒரு வித  மாயையிலேயே வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். இது போதாது
என்று தங்களுக்கு பிடித்த விளையாட்டு வீரன் எவ்வளவு ரன்ஸ்
எடுத்திருக்கிறான் இன்னும் எவ்வளவு ரன்ஸ் எடுத்தால் ஒரு புதிய உலக சாதனையை படைக்க முடியும், இந்த 
போட்டியில் யார்  வெற்றி பெற்றார், எத்தனை விக்கெட் வித்யாசத்தில்  என்பது போன்ற புள்ளி விவரங்கள் நிரம்பி வழிகின்ற இணையதள பக்கங்கள் ஏராளம் தாராளம். பொழுதுபோக்கு என்பது வாழ்க்கைக்கு தேவை தான். நான் பொழுதுபோக்குக்கு எதிரானவள் அல்ல. எனது பிரச்சனையே வேறு.

கண்ணாமூச்சி, கோகோ, ஓடிப்பிடித்தல் போன்ற விளையாட்டுகளை அக்கம் பக்கத்தில் உள்ள குழந்தைகளோடு விளையாட வேண்டிய குழந்தைகள் 
தொலைக்காட்சியோடு ஒன்றிக்கிடப்பது கூட பரவாயில்லை. நமது  தேசிய விளையாட்டை கிரிக்கெட் என்றே நினைத்துக்கொண்டு வளர்கின்ற இந்த கால குழந்தைகள் கவலை அளிக்கின்றனர்.

கிரிக்கெட் உலகம் கோடிகளில் புரள்வதை பற்றிய கவலை எனக்கில்லை. ஹாக்கி, கால்பந்து, மல்யுத்தம், கூடை பந்து போன்ற விளையாட்டுகள்   லட்சங்களை கூடப் பார்பதில்லை என்பது தான் கவலை அளிக்கிறது.

கிரிக்கெட் பார்ப்பதற்க்கு, புள்ளி விவரங்களை  பெறுவதற்கு என்று லட்சக்கணக்கான   இணையதளங்களை உங்களால் கூற முடியும். ஆனால் தேசிய விளையாட்டு என்று அடையாளம் காணப்படும்  ஹாக்கி டீமுக்கு யார் கேப்டன் என்பது கூட பலருக்கு தெரியாது. அப்படி தெரிந்து கொள்ள எந்த இணையதளத்திற்கு போகலாம் என்பது கூட பலராலும் கூற முடியாது. மற்ற விளையாட்டுகளை ஓரம் தள்ளி  இன்று ஆல விருக்ஷம் போல கிளை பரப்பி நிற்கிறது கிரிக்கெட். அப்படி இருப்பதால்  காமன்வெல்த்
போட்டிகள் , ஒலிம்பிக் போட்டிகள் போன்றவற்றில் 100 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்தியா ஒரு தங்கப்பதக்கம் கூட வாங்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருப்பது கவலை அளிக்கிறது. 

ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்டு பின்பு அவர்கள் ஆட்சி செய்த நாடுகளில் புகழ் பெற்ற விளையாட்டு  தான் கிரிக்கெட். அப்படி ஆங்கிலேயர் விட்டு சென்ற கிரிக்கெட்டை  விளையாடுவது  கூட தப்பில்லை. ஆனால் அந்த கிரிக்கெட் இன்று  புக்கிகளிடமும், சூதாட்ட பேர்வழிகளிடமும் சிக்கியதால்
தோல்வியும் வெற்றியும் முன்பே தீர்மானிக்கப்பட்டு சும்மா ஒப்புக்கு
நடக்கும் நாடகம் போல ரசிகர்களின் கண் முன்னே அரங்கேற்றபடுகிறது. சரி சாமானியனை பற்றி யாருக்கு என்ன கவலை. அது தான் விளையாடுபவர்களுக்கு மேஜைக்கு மேலயும் பணம், கீழேயும் பணம் என்று எல்லா வழிகளிலும் வருகிறதே.

அயல்நாடுகளில் கால்பந்து, கூடைபந்து, பேஸ்பால் ஆகிய
விளையாட்டுகளில்இருப்பது போன்ற பிராஞ்சைஸ் முறையை இன்று இந்திய கிரிக்கெட்டிலும்  அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.  இது கூடாது என்று சொல்லவில்லை. முன்பெல்லாம் உள்ளுரில் ஒரு சில போட்டிகள் மட்டுமே நடக்கும். இப்போதெல்லாம் இந்த பிராஞ்சைஸ்கள்
வருடம் முழுவதும் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த போட்டிகளை நேரடியாகவோ, தொலைக்காட்சி,ரேடியோ,இணையதளம் ஆகியவற்றின் மூலமாகவோ  பார்த்து
பொன்னான நேரத்தையும் காலத்தையும் வீணாக்கும்  இளைய தலைமுறையை கண்டே எனக்கு கலக்கம்.

இன்று கிரிக்கெட் ஒரு பணம் காய்ச்சி மரம். முன்பெல்லாம் ஒரு கிரிக்கெட் வீரன் சராசரியாக 35  வயதில் கிரிக்கெட்டில்  இருந்து ஒய்வு பெற்று வந்தான் என்றால்  இன்று  40,45 வயதில் யாரும் ஓய்வெடுப்பதை
விரும்புவதில்லை.  விளம்பர வருவாய், மாத சம்பளம், கௌரவ பதவிகள்,
அரசாங்க ஊக்கதொகை, ரசிகர்கள்/ரசிகைகள் ஆதரவு என்று வளம் கொழிக்கும் தங்க முட்டை வாத்தை விட யாருக்கு தான் மனசு
வரும். 


சரி கிரிக்கெட் மட்டுமா மக்களை கெடுக்கிறது. தினம் தினம் சீரியல் பார்த்து நேரத்தை வீணாக்கும் பெண்கள் எத்தனை பேர், சினிமா பார்த்து சீரழியும் இளைய தலைமுறை எத்தனை பேர் என்று நீங்கள் கேட்கலாம். 'கிரிக்கெட்'மேனியா   சினிமா மோகம், தொலைக்காட்சி மோகம் போன்று ஆபத்தானது என்பதை பலரும் உணராத காரணத்தாலே அதை மோசமானது என்ற பட்டியலில் முன்னிலையில் வைப்பது
சரியாகப் படுகிறது.  நான் இந்த பதிவை எழுதும் இன்றைய தினமலரின் தலைப்பு செய்தியாவது - நாக்பூரில் நடைபெற இருக்கும் இந்திய - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான  உலக கோப்பை போட்டிகளுக்கு  டிக்கெட் கிடைக்காததால் ரகளையில் ஈடுபட்ட
ரசிகர்களை தடி அடி நடத்தி போலீசார் கலைத்தனர் என்பதே. இளைஞர்கள் 
ஊழலுக்கு எதிராக அணி திரளவில்லை, அடிப்படை வசதிகளுக்காக போராடவில்லை, நீதிக்காக,சம உரிமைக்காக போராடவில்லை. ஆனால் வீட்டின் வரவேற்பறை வரை தொலைகாட்சி மூலம் வரும் போட்டிகளை நேரடியாக பார்ப்பதற்காக கலாட்டாவில் ஈடுபட்டு
போலீசாரிடம்  அடி வாங்க வேண்டிய அவசியம் என்ன என்பது தான் புரியவில்லை.

பெற்றோர்களுக்கு எனது வேண்டுகோள் ஒன்று தான். உங்களது குழந்தைகளை கிரிக்கெட்டை தவிர்த்து டென்னிஸ், கூடைபந்து, நீச்சல், செஸ் போன்ற ஏனைய துறைகளில் ஊக்கப்படுத்துங்கள். இதன் மூலம் வரும் சந்ததியினராவது மற்ற விளையாட்டுதுறைகளில் இந்தியாவிற்கு
சிறந்த பிரதிநிதித்துவம் அளிக்க முடியும். இன்று கிரிக்கெட் விஸ்வரூப
வளர்ச்சி பெற்றிருப்பது போல நாளை மற்ற  விளையாட்டு துறைகளும்
வளர்ச்சி காண்பது இதன் மூலம் மட்டுமே சாத்தியம்.

அரசாங்கமும்  ஒவ்வொரு ஊரிலும் நீச்சல் குளம், ஓட்டப்பந்தய மைதானம்,
பயிற்சி  அரங்கம், ஆகியவற்றை அமைத்து ஏனைய விளையாட்டுகளை
ஊக்கப்படுத்த வேண்டும். மற்ற விளையாட்டுகளும் புகழ் பெறும் போது அரசுக்கு வருவாய் பெருக வாய்ப்பு உள்ளது.   
இதை விட முக்கியமானது  பொது ஜனத்தின் பங்குதான்.
கிரிக்கெட்டை தவிர வேறு துறைகளில் பிரகாசிக்கும் மாணவனையோ,
அல்லது ஒரு அணியையோ ஆதரித்து கைதூக்கி விடும் கடமை நாம்
ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. கிரிக்கெட் தவிர ஏனைய போட்டிகளுக்கு சென்று விளையாடுபவர்களை உற்சாகப்படுத்துதல், அப்போட்டிகளை நேரில்
சென்று பார்ப்பதால் வருமான வாய்ப்பு ஏற்படுத்துதல் போன்றவற்றால்
நாம் நசிந்து இருக்கும் பல்வேறு விளையாட்டுகளை மேம்படுத்த முடியும்.

20  முட்டாள்கள் விளையாடுவதை 20000  முட்டாள்கள் பார்க்கிறார்கள் என்று ஜார்ஜ் பெர்னார்ட் ஷா கிரிக்கெட்டை பற்றி குறிப்பிட்டார். நாம் அறிவாளியா முட்டாளா என்பதை வரலாறு பதிவு செய்ய காத்திருக்கிறது. புதியதொரு வரலாறு படைப்போம்.