வெள்ளி, மார்ச் 26, 2021

மருத்துவர் அம்பிகாதேவி நினைவு உலகளாவிய கவிதைப் போட்டி முடிவுகள்

 முன்னதாக வல்லின சிறகுகள் இதழ் மருத்துவர் அம்பிகா தேவி அவர்கள் நினைவாக உலகவளாவிய கவிதை நூல் போட்டி ஒன்றை நடத்தினார்கள்.  இதைப்  பற்றி என்னுடைய வலைத்தளத்தில் முன்பே எழுதி இருந்தேன். இணைப்பு கீழே.



தற்சமயம் அந்த போட்டிக்கான முடிவுகளை அறிவித்துள்ளார்கள். என்னுடைய கவிதை தொகுப்பும் நூலாக்கம் பெறும் தொகுப்பாக தேர்வு செய்யப் பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சி தரும் ஒரு செய்தி. வெற்றி பெற்றவர்கள் பற்றிய விவரங்கள் கீழே.



அமரர் மரு. ஜெ.அம்பிகாதேவி நினைவு உலகளாவிய கவிதை நூல் போட்டி முடிவுகள்:
நடுவர் குழு
=============
முனைவர் ப. பத்மாவதி
முனைவர். இரா. மோகனா
மயிலம் இளமுருகு
முனைவர் அகன்( அமைப்பாளர்)
முடிவுகள்:
==========
முதல் பரிசு
கவிஞர் சியாமளா ராஜசேகர்
ரூ3000/_மற்றும் 75 நூல்கள்
இரண்டாம் பரிசு
தலா ரூ750/_மற்றும் 50 நூல்கள்
கவிஞர் கிரேஸ்
கவிஞர் கனிமொழி
மூன்றாம் பரிசுகள்
தலா ரூ500/_மற்றும் 25 நூல்கள்
கவிஞர் அனிதா ராஜேஷ்
கவிஞர் வித்யா மனோகர்
கவிஞர் அன்புச்செல்வி சுப்புராஜு
கவிஞர் ரம்யா ரவீந்திரன்

என்னுடைய கவிதைத் தொகுப்பு நூலாக வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.


புதுமை பெண்கள் - 100

மகளிர் தினத்தை முன்னிட்டு முத்திரை பதித்த பெண்களை புதுமைப் பெண்கள் 100 என்ற தலைப்பில் தமிழ் அமெரிக்க தொலைக்காட்சியில்  பேசுமாறு அழைத்திருந்தனர். சரி, எதற்கும் நாமும் பேசி வைப்போம் என்ற ஒரு ஆர்வக் கோளாறில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினேன். பேசிய பல தோழிகள் சமூக சேவை, தமிழ் சேவை, ஆசிரியராக சிறந்த முறையில் பணியாற்றி அடுத்த  தலைமுறையை சிறப்பாக உருவாக்குவது என்று பல்வேறு நிலைகளில் இருந்து சாதனை பெண்களாக மிளிர்ந்து வருகின்றனர்.



 நிறைய விருது பெற்றவர்களையும், பல்வேறு அமைப்புகளில் தலைமை பொறுப்பில் இருந்து ஒளிரும்  பல்வேறு பெண்களை, அவர்கள் கடந்து வந்த பாதையை பற்றியும் அறிய முடிந்தது சிறப்பு.  ஆறு பாகங்களாக வெளியான காணொளி இது. நான் ஐந்தாவது பாகத்தில் பேசியுள்ளேன். நிச்சயம் கேட்கும் போது நாமும் சிறப்பான ஒரு மனிதராக மிளிர வேண்டும் என்ற உத்வேகம் எழும். நேரம் கிடைக்கும் போது கேளுங்கள்.










திங்கள், மார்ச் 01, 2021

தடை அதை உடை

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவை முத்தான சாதனை பெண்கள் பங்கேற்ற தடை அதை உடை என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். நிகழ்ச்சிக்கான சுற்றோலை வடிவமைப்பில் தொடங்கி, நிகழ்ச்சிக்கான ஏற்பாடு,பேச்சாளர்கள் ஒருங்கிணைப்பு என்று பல்வேறு பணிகளில் என்னுடைய பங்களிப்பும் இருந்தது. 
சுற்றோலை மூன்று வண்ணங்களில் அமைத்திருந்தேன். அமெரிக்க கொடியில் உள்ள சிகப்பு, வெள்ளை மற்றும் நீல நிறத்திலும், நெருப்பு, நீர்/ஆகாயம், காற்று என்ற என்ற பஞ்சபூதங்களை குறிக்கும் வண்ணமும் அமைத்திருந்தேன்.


நிகழ்ச்சி பற்றி சமூக வலைத்தளங்களில் இடம் பெற்ற செய்தியை கீழே இணைத்திருக்கிறேன்.

 “பெண்ணின் பெருந்தக்க யாவுள” என்றார் திருவள்ளுவர். “எங்கெங்கு காணினும் சக்தியடா” என்று பெண்ணின் பெருமையை உணர்த்தினார்  பாரதிதாசன். “நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளையும் , திமிர்ந்த ஞானச் செருக்கையும்” கொண்ட பெண்ணைக் கவிதையில் கண்முன் கொண்டு வந்தார் பாரதியார். பெண்கள் சிலர் இன்று கல்வி அறிவு பெற்றவர்களாக, பொருளாதார சுதந்திரம் அடைந்தவர்களாக பரிமளிக்கும் அதே வேளையில், பல துறைகளிலும் பெண்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும், தலைமை பொறுப்புகளுக்கு வருவதற்கும், சம ஊதியம் பெறுவதற்கும்,  தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தவும் பல்வேறு தடைகளை கடக்க வேண்டி இருக்கிறது என்பதே நடைமுறை யதார்த்தம். குடும்பம், தொழில், சமுதாயம் என்று எல்லா இடங்களிலும் வெற்றிக் கனிகளை ஈட்டுவது என்பது பல பெண்களுக்கு இன்னும் கனவாகவே உள்ளது. பெண் முன்னேற்றத்தில் உள்ள சமூகத் தடை, மனத் தடைகளை உடைத்து வெற்றி பாதைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக முத்தான மூன்று சாதனை பெண்கள் நம்முடன் இணையவிருக்கிறார்கள். மருத்துவம், அரசியல், கலைத்துறை என்று அவரவர் துறைகளில் அவர்கள் எதிரகொண்ட தடைகள், அதை அவர்கள் கையாண்ட விதம், அவர்கள் கற்ற பாடங்கள் என்று பல்வேறு விஷயங்களை பற்றி உங்களிடம்  பேசவிருக்கிறார்கள்.  அது மட்டுமல்ல, சுவையான கேள்விகளுக்கு சிந்திக்கத் தூண்டும் பதில்களை தனிக்கவனச் சுற்றில் பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்கள். மாற்றம் ஒன்றே மாறாதது என்பது நனவில் காணும் உண்மை. மாற்றம் என்பது ஒரு சிறிய புள்ளியில் இருந்தே விரியும் என்பதால் ஒரு சிறிய தீப்பொறியாக இந்த நிகழ்ச்சி உங்கள் சிந்தனையில் சுடர்விட்டு பெரும் சிந்தனை தீயாக உருவெடுக்கும்  என்பது திண்ணம் . பெண்கள் தாங்கள் செல்லும் பாதையில் எதிர்கொள்ளும் முட்களை கிரீடங்களாகவும், தடைகளை வெற்றிப் படிக்கட்டுகளாகவும் மாற்றும் வகையில் மகளிர் தினத்தை ஒட்டி "தடை அதை உடை" என்ற கருப்பொருளில் சாதனை பெண்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சியை வழங்குவதில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் இலக்கியக் குழு மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறது.

 தடைகளை உடைப்போம்

வெற்றிவாகை சூடுவோம்

புத்தம் புதிய உலகு படைக்க

சிந்தனை சிறகு விரிப்போம்

பெண்ணடிமை களைவோம் 

கொடுந்தளைகள் அறுத்தெறிவோம்

கவிதை நூல்கள் விடுத்து 

வரலாற்றில் நம்பெயர் பொறிப்போம்

அடுக்களை ஆளும் கரத்தால் 

அரசியல் சாசனம் வரைவோம்

கருமம் கண்ணென கொள்வோம்

கசடறகற்று உலகினை வெல்வோம்

திண்ணிய நெஞ்சுரம் கொள்வோம்

தீயவை தேய போராடி வெல்வோம் 

உலகம்  ஒரு நாள் ஏற்கும்

அரியாசனம் தந்தே ஏத்தும்

வெற்றித் திருமகள் வாசம் 

உந்தன் முகவரி ஆகும்

அழுத்தம் தாங்கும் கரியும்    

வைரமாய் உதயம் ஆகும்

சூரியன் கரிந்தணைந்தாலும்

கவித்தமிழா பொய்யாய் போகும்

அனைவரும் பங்கேற்க வாரீர்!!.

இந்த நிகழ்ச்சிக்கான முன்னோட்ட காணொளியையும், நிகழ்ச்சிக்கான வலையொளி இணைப்பையும் கீழே காணலாம்.