செவ்வாய், ஜூன் 13, 2023

நினைவுகளில் வாழ்கிறாய் நீ - கவிதை

 



மெல்லிய மழைச்சாரல் கட்டவிழ்க்கும் மண்வாசம்

மின்னல் கீற்றெனவே உன் நினைவூட்டும் கார்காலம் 

பின்னிரவின் மௌனம் கலைக்கும் மெல்லிய இசை கானம்

மென்மையாய் தான் வருடும் உன் நினைவினை கிளறும்


காதல் ஒரு மாயவலை நீரின் மேல் எழுத்தென்றேன்  

இதில் விழுந்தவர் பலருண்டு எழுந்ததில்லை எவருமென்றேன்

அழகான பணம் படைத்த  பெண்துணை தேடும் ஆணுக்கு

பகுதிநேர இன்பமென்பேன் கேளிக்கை மட்டுமென்பேன்

 

அழகிய சுருள்முடி, ஆறடி உயரம், மனதிற்கினிய புன்சிரிப்பு 

மேகம் கடந்து பின்தோன்றும் ஆதவன் போல் முகவனப்பு 

இருசக்கர வாகனத்தை ஆகாய விமானம் போல 

லாவகமாய் ஓட்டி செல்வாய் தேவலோக கந்தர்வன் போல

 

அழகான முகமல்ல அன்பைக் கொட்டும் மனம் கேட்டேன்

அன்பிலோர் சிகரமென்றாய்  உன் பயணத்தில் பங்குகொண்டேன்

உலகையே வீழ்த்தியதாய் இறுமாந்து மமதைக் கொண்டேன்

உன்உறுதியான தோள் பற்றி இமயத்தை விஞ்சி நின்றேன்  

 

அழகான ஆபத்து என்பதெல்லாம் அறிந்திருந்தும்

கண்ணுள்ள குருடனாய் ஆக்கியது இந்த காதலடா      

கருணை ஏதுமின்றி பிரிவு என்ற பெருஞ்சோகம் 

இயல்பாய் நீ கொடுத்தாய் விதியென்று நொந்தேனடா

 

உலகத்தை வெறுத்திருந்தேன் உறங்காமல் நிலைகுலைந்தேன்

வேறு பாதையில் வாழ்க்கைத் தள்ள தயங்கினேன் தவிதவித்தேன்

கடவுள் போடும் முடிச்சு எல்லாம் புரியாத விளையாட்டென்பேன்

பழைய முகமூடி தொலைத்து புதிய முகமூடி அணிந்தேன்

 

தூக்கம் தொலைத்த பின்னிரவில் அணைக்க உன் கை

களைத்த ஒரு மாலை நேரம் புதிதாக்க உன் புன்னகை 

உலகத்தையே காலில் சேர்க்கும் எனக்கான குறும்புப் பார்வை

தொலைந்தும் வாழப் பழகிக் கொண்டேன் விந்தை விந்தை    

 

உடைந்த சிறு இதயம் தைத்து புதியபல உறவை கோர்த்தேன்

முதுகில் தைத்த துரோகம் துடைத்து யதார்த்தம் என்ற பார்வை கொண்டேன்

நிழற்படத்தை தூக்கி வீசி இதுவும் கடக்கும் என்றிருந்தேன்     

என் நினைவடுக்கில் உந்தன் முகம் அழித்துவிடும் வித்தை சொல்லேன்

பொய்மையும் வாய்மை இடத்து - சிறுகதை



சுதா காரை ஓட்டியவாறே அருகில் இருந்த வரைபடத்தை பார்த்தாள். இன்னும் நூறு மைல் தொலைவு இருந்தது. கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் மணி நேரம் இன்னும் செல்ல வேண்டும். பிட்சுபர்க், பென்சில்வேனியாவில் உள்ள பெருமாள் கோவில் தான் அவள் இலக்கு. சுதாவுக்கு வயது இருபத்தி ஐந்து  ஆகிறது. பார்க்க அழகாக இருந்தாள்.  நல்ல நிறம். நடுத்தர உயரம். நவநாகரீக உடையோ, புடவையோ இரண்டுமே அவளுக்குப் பொருத்தமாக இருக்கும். அவள் அமெரிக்கா வந்து ஐந்து வருடங்கள் ஆகி விட்டது. பொறியியல் மேற்படிப்பிற்காக யுனிவர்சிட்டி ஆப் லூயிவில் வந்தவள், படிப்பை முடித்து விட்டு ஓரிரு வருடங்களாக வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்கான ஹெச்1பி விசாவும் வாங்கி விட்டாயிற்று. கார் முன்னோக்கி போய்க் கொண்டிருந்தது, சுதாவின் நினைவுகளோ பின்னோக்கிப் போனது. ஐந்து வருடங்களுக்கு முன், செப்டம்பர் முதல் வாரத்தில், அவள் முதன்முதலாக  அமெரிக்கா வந்த போது, அவளுடைய அறைத் தோழிகளாக இருந்த மது மற்றும் பிரியங்காவின் நினைவு வந்தது. 

மது பீகாரில் இருந்து வந்திருந்தாள். வேதியியலில் முனைவர் பட்டப்படிப்பிற்காக அவளும், சுதா படிக்கும் அதே கல்லூரியில் சேர்ந்திருந்தாள். வெளியூரில் இருந்து வரும் மாணவர்களுக்கு, அவர்களுக்கு நிரந்தரமாக ஒரு வீடு கிடைக்கும் வரை, சீனியர் மாணவர்களின்  வீட்டில் தங்க வைக்க ஏற்பாடு  செய்யப்பட்டு இருந்தது. அந்த ஏற்பாட்டினால், ஒரே சீனியர் மாணவி வீட்டில் தங்கியிருந்த மதுவும், சுதாவும்  இணைந்து வாடகைக்கு வீடு பிடிக்கலாம் என்று பல இடங்களில் அலைந்து திரிந்த போதும், கல்லூரிக்கு அருகில் வீடு கிடைப்பது கடினமாக இருந்தது. ஒரு நாள், அதே கல்லூரியில், கணினி பொறியியல் துறையில் படிக்கும்  பிரியங்காவின் அறிமுகம் கிடைத்தது. அவள் கல்லூரிக்கு அருகிலேயே நடந்து செல்லும் தூரத்தில் வீடு ஒன்றை வாடகைக்குப் பிடித்திருந்தாள். அறையை பகிர்ந்து கொள்ள ஆட்களை தேடிக் கொண்டிருந்த போது மதுவும், சுதாவும் வீடு தேடுவதை அறிந்து தன்னுடன்  தங்கச் சம்மதமாயிருந்தால் வரச் சொன்னாள். சுதாவிற்கும், மதுவுக்கும் வீட்டை விட, வீட்டின் வாடகை அதிகம்  பிடித்திருந்தது. ஒரு ஹால், ஒரு சமையலறை, ஒரு படுக்கையறை மற்றும் குளியலறை கொண்ட அந்த வீடு இருவர் மட்டும் தங்க சரியாக  இருந்திருக்கும். மூன்று பேருக்கு கொஞ்சம் இடப் பற்றாக்குறை தான். ஆனால், வேறு வழி இல்லை. பனிக் காலத்தில் அதிக தூரம் நடந்து செல்ல முடியாது.விரைவாக நடந்து  செல்லக் கூடிய வகையில் கல்லூரிக்கு அருகிலேயே இருந்ததால் மதுவும், சுதாவும் பிரியங்காவுடனேயே வீட்டைப் பகிர்ந்து கொள்ள இசைவு தெரிவித்தார்கள். 

பிரியங்கா, அந்த வீட்டில் இருந்த ஒரு படுக்கையறையை ஏற்கனவே தனதாக்கிக் கொண்டதால், மதுவும் சுதாவும் வீட்டின் உள்ளே நுழைந்ததுமே இருந்த ஹாலைப் பகிர்ந்து கொண்டார்கள். எனினும், தூங்கும் நேரம், உணவு உண்ணும் நேரம் போக மீதி நேரம் எல்லாம் கல்லூரி, ஆய்வுக்கூடம், திட்டப்பணி, வீட்டுப்பாட வேலை போன்ற பலப் பணிகள் இருந்ததால் வீடு என்பது அதிக நேரம் செலவழிக்க வேண்டிய ஒரு இடமாக இருக்கவில்லை.  ஒரு சில மாதங்களில், அனைவரும் நன்கு பழகிய பிறகு இப்படியாக தங்கி இருப்பது கூட வசதியாக இருந்தது. இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன்பு  மதுவும், சுதாவும் ஏதேனும் கதை பேசத் தொடங்கினால், பிரியங்கா அவளுடைய அறையில் இருந்தாலும், வெளியில் மது மற்றும்  சுதாவின் பேச்சு சத்தம் கேட்டு அவர்களுடன் இணைந்து கொள்வாள். பிரியங்கா ஹாலில் உள்ள சோபாவில் படுத்துக் கொண்டு அவர்கள் இருவருடனும் இரவு மூன்று நான்கு மணி வரை கதை பேசிக் கொண்டிருப்பாள்.

வியாழன், வெள்ளிக் கிழமை என்றால் அவர்கள் தங்கி இருந்த வீட்டிற்கு அருகில் நிறைய ஆண்கள் அல்லது நிறைய பெண்கள் மட்டுமே தங்கியிருக்கும் பிரடெர்னிட்டி மற்றும் சொரரிட்டி வீடுகளில் கேளிக்கை கொண்டாட்டங்கள் விடிய விடிய நடக்கும். பெரும்பாலும் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த, இளங்கலை படிக்கும் அமெரிக்க மாணவர்களே இந்தக் குழுக்களில் உறுப்பினர்களாக இருப்பார்கள். மேற்படிப்பில் இருக்கும் மாணவர்கள் இதை எல்லாம் கடந்து வந்தவர்கள் என்பது மட்டுமல்ல, அவர்களில் சிலர் வேலைப் பார்த்துக் கொண்டே படிப்பவர்கள் என்பதால், இதே போன்று விடிய விடிய நடக்கும் பார்ட்டிக்களில் கலந்து கொள்ள அவர்ளுக்கு நேரம் இருக்காது. சுதாவும், மதுவும், பிரியங்காவும் இந்தப் பார்ட்டிகளில் நடக்கும் விஷயங்களைப் பற்றி பேசுவார்கள். பேச்சு அப்படியே தங்கள் வகுப்பில் இருக்கும் ஆண்கள்,பெண்கள் பற்றித் திரும்பும். அவரவர்களுக்கு பிடித்த ஆண்கள் யார் யார் என்று திடீரென்று பேச்சு மாறும். கொஞ்ச நேரம், ஒருவரை ஒருவர் கேலி செய்வார்கள். பேச்சு குடும்பம், காதல், படிப்பு, வேலை என்று பல தளங்களுக்குத் தாவி இரவு வெகு நேரம் வரை நீளும்.

வார இறுதியில் வரும் இரவு நேரங்களில், அதே வளாகத்தில் கீழ் தளத்தில் உள்ள அறைகளில் தங்கி இருக்கும் இந்திய மாணவர்கள் சிலர் குடித்து விட்டு, வெளியில் இருந்த சுவற்றில் அமர்ந்து கொண்டு, தாங்கள் காதலித்த பெண்ணை அல்லது தன்னை விட்டுச் சென்ற பெண்ணைப் பற்றி  ஹிந்தியில் புலம்புவார்கள். போதையில் புலம்பும் நபர் உரக்கச் சொல்வது மதுவுக்கும், சுதாவிற்கும், பிரியங்காவிற்கும் கேட்கும். "ஆண்களால் மட்டும் இப்படி எல்லாம் சொல்ல முடிகிறது, குடித்துவிட்டு அழ முடிகிறது, புலம்ப முடிகிறது. இந்தியப் பெண்கள் காதலிப்பதைக் கூட வெளியில் சொல்ல முடியாது. காதல் தோல்வி பற்றி வெளிப்படையாக பேசுவது எல்லாம் மிகவும் கடினம்" என்பாள் பிரியங்கா. 

பிரியங்காவிற்கு நேர்ந்த காதல் தோல்வியைப் பற்றி மதுவுக்கும், சுதாவிற்கும் தெரியும் என்பதால் அவர்கள் மௌனமாக அவள் சொல்வதை ஆமோதிப்பார்கள். "வேறு ஏதாவது பேசுவோம்" என்று மது அந்த பேச்சிற்கு அணை போடுவாள். ஏனென்றால் பிரியங்காவின் காதல் கதையை பேசினால் அதன் பின் பல நாட்கள் மனச்சோர்வுடன் இருப்பாள். அவள் இயல்பு நிலை திரும்ப சில வாரங்கள் கூட ஆகும். மதுவுக்கும்,சுதாவிற்கும் அவளுடைய இந்த நிலையைப் பார்க்க பாவமாக இருக்கும்.  "காதல் எல்லாம் வயசுக் கோளாறு" என்பாள் மது. அப்போது அவளும், அவளுடன் படித்த ஒருவரைக் காதலித்துக் கொண்டிருந்தாள். சுதா அவள் சொல்வதைக் கேட்டுச் சிரிப்பாள். 

"என்னையும்  சேர்த்தே தான் சொல்கிறேன்" என்பாள் மது நகைத்தவாறே.

முதுகலை படிப்பு முடிய சுதாவிற்கும், பிரியங்காவிற்கும் இன்னும் ஓரிரு மாதங்களே இருந்தன. முனைவர் பட்டப்  படிப்பு என்பதால் மதுவுக்கு படிப்பு முடிவடைய கிட்டத்தட்ட இன்னும் ஐந்து வருடங்கள் அல்லது ஆறு வருடங்கள் இருந்தது. சுதாவிற்கும், பிரியங்காவிற்கும் வேலைக்கான அழைப்புகள் வரத் தொடங்கியது. அந்த வீட்டில் இருந்தது ஒரே ஒரு தொலைபேசி மட்டுமே. அதுவும்  கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன்பு  கட்டப்பட்ட வீடு என்பதால், தொலைபேசி இணைப்பு அடிக்கடி பழுதாகி விடும். பிரியங்கா பசைப்பட்டை எல்லாம் போட்டு தொலைபேசி ஒயரை ஒட்டி வைத்திருந்தாள். தொலைபேசி இலாக்காவில் யாரையேனும் அழைத்து அதை சரி செய்வதற்கு எவ்வளவு டாலர்கள் செலவு செய்ய நேருமோ என்ற எண்ணத்தில் அனைவரும் தொலைபேசியை அப்படியே பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். சுதா ஒரு நாள் இணைப்பு சரியில்லை என்று அந்த தொலைபேசி ஒயரை சரி செய்த போது, மொத்தமாக அந்த தொலைபேசி வேலை செய்வதையே நிறுத்தி விட்டது. வீட்டிற்கு வந்ததும் அதை அறிந்த பிரியங்கா அப்படியே வெடித்தாள்.

"சுதா, நீ ஏன் இதைத் தொட்டே? தொலைபேசியை வேலை செய்ய வைப்பதே  கஷ்டமா இருக்கு.  இதுலே ஏதோ வேலை செஞ்சிட்டு வந்த இந்த தொலைபேசியையும் நீ வீணாக்கிட்டே" 

"இல்லை பிரியங்கா, அதுலே நிறைய சத்தம் வந்து பேசறதே சுத்தமா கேட்கலை. அதனால கொஞ்சம் சரி பண்ணலாம்னு பார்த்தேன். இப்போ என்னடான்னா சுத்தமா டயல் டோன் கூட வரலை. நாம் யாரையாவது கூப்பிட்டு சரி பண்ணுவோம். ஒரு ரெண்டு மூணு நாளுல எப்படியும் சரியாகிடும்."

"ரெண்டு, மூணு நாளா? அது வரைக்கும் எனக்கு ஏதாவது கம்பெனியில் இருந்து  வேலைக்கான அழைப்பு ஏதாவது வந்தா என்ன ஆகும்?. நான் இந்த எண்ணைத் தான் தொடர்பு எண்ணாகக் கொடுத்திருக்கேன்."

"சரி, சரி கோபிக்காதே. நான் நாளைக்கே தொலைபேசி நிறுவனத்தில் கூப்பிட்டு சொல்றேன். எப்படியும் விரைவா வந்து சரி பண்ணிடுவாங்க."

"நீ எப்போ வேணா சரி பண்ணு, சரி பண்ணாதே. எனக்கு ஒரு அழைப்பு வந்து, வேலை கிடைக்கக் கூடாதுன்னு நினைச்ச உன்னோட எண்ணத்தை தெரிஞ்சிக்கிற வாய்ப்பா  இது அமைஞ்சது. அதற்கு கடவுளுக்கு நன்றி" என்று ஆங்கிலத்தில் பொரிந்தவள், தன்னுடைய அறைக்கு கோபத்துடன்  சென்றுவிட்டாள்   

சுதா அப்படிப்பட்ட ஒரு குற்றச்சாட்டை, அதுவும் பிரியங்கவிடம் இருந்து எதிர் பார்க்கவில்லை. அதன் பிறகு ஓரிரு மாதத்தில் பிரியங்காவிற்கு டெக்சாசில் வேலை கிடைத்து அவள் அங்கு சென்று விட்டாள். சுதாவுக்கும் வேலை கிடைத்து, அவளும் அந்தப் பணியில் இணைந்திருந்தாள். கிட்டத்தட்ட அந்த ஒரு நிகழ்விற்கு பின் சுதா மற்றும் பிரியங்காவின் நட்பு அறுந்து போனது என்றே சொல்லலாம். சுதாவால் முன்பு போல பிரியங்கவிடம் நட்பு பாராட்ட முடியவில்லை. எப்போதாவது பிரியங்கா அழைத்தால் கூட அந்த அழைப்புகள் பரஸ்பர நல  விசாரிப்புகளுடன் நின்று போகும்.

மதுவும் அடிக்கடி ஆராய்ச்சி அல்லது மாநாடு என்று மாதக்கணக்கில் கனடா சென்று விடுவாள். இதனால் சுதாவுக்குத் தான் கொஞ்சம் கடினமாக இருந்தது. பேச்சுத் துணைக்கு கூட ஆள் கிடைத்து விடும். ஆனால் ஒரு விஷயத்தை நன்றாக ஆலோசித்து,  நேர்மையான ஒரு கருத்தை முன்வைக்கும் தோழி இல்லாது  போனது அவளுக்கு கடினமாகவே இருந்தது. கீழ்த் தளத்தில் சில புதிய மாணவர்கள், மாணவிகள் குடியேற்றி இருந்தார்கள்.  எனவே அலுவலக வேலைக்கு சென்று வந்த பின் எப்போதாவது அவர்களுடன் பேசுவாள். 

சுதாவின் அப்பா ஒவ்வொரு முறையும் அவளை இந்தியாவில் இருந்து அழைக்கும் போது  கேட்பார் "என்னம்மா சுதா, வயசு ஆகிட்டே போகுது. நீயோ உனக்கு யாரையும் பிடிக்கலேன்னு சொல்றே. அம்மாவும் அப்பாவும் உனக்கு கால காலத்துல ஒரு கல்யாணம் செய்து பார்க்கணும்னு நெனைக்கறோம். உனக்கு ஆட்சேபனை இல்லன்னா நல்ல வரன் எல்லாம் வருது. நீ பாக்கறியா" என்பார்.

"அப்பா, எனக்கு யாரையும் இப்போ பார்க்க வேண்டாம்" என்று ஓரிரு வருடங்களாக தட்டிக் கழித்துக் கொண்டே வந்தாள். சுதாவுக்கு அவளுடன் படித்த கணேஷைப் பிடித்திருந்தது. கணேஷிற்கும் இவளை பிடித்திருப்பதாக தோன்றியது. ஆனாலும் அவன் இவளிடம் அது குறித்து ஒன்றும் சொன்னதில்லை. படிப்பு, பொருளாதார நிலை, வேலை ஆகிய அனைத்தும் சமமாக இருந்தாலும் அவனுடைய தயக்கத்திற்கான காரணம் என்ன என்பது அவளுக்குப்  புரிபடவில்லை. ஜாடைமாடையாக ஒரு முறை கேட்ட போது "எனக்கு எங்க வீட்ல பாக்குற பொண்ணு தான். என்ன தான் நான் அமெரிக்காவில் இருந்தாலும் இன்னும் ஊர்ல இருக்கற எந்தக்  கட்டுப்பாட்டையையும் என்னால கடந்து வெளியில் வர முடியாது." என்றான் தன்னுடைய  எண்ணத்தை விளக்கும் தொனியில். அவனுடைய குடும்ப சூழ்நிலை, பெற்றோர்களின் மனநிலை இவற்றை உணர்ந்து தவிர்க்கிறான் என்று புரிந்து சுதாவும் அதைப் பற்றி பேசவில்லை.  ஆனாலும் கிடைக்காது என்பது தெரிந்த பின் ஒருவரின் மீது அதிகரிக்கும் ஈர்ப்பு என்பது பிரபஞ்சம் என் மீது நடத்தும் யுத்தம் என்று எண்ணிக் கொள்வாள் சுதா.  அவனை பார்த்தால் ஏதேனும் வீணான நம்பிக்கை வளரலாம் என்று முடிந்த வரை அவனைத் தவிர்த்து வந்தாள். எப்போதாவது பார்த்தாலும் மெலிதான ஒரு புன்முறுவலுடன் கடந்து சென்று விடுவாள். அவள் சென்று மறையும் வரை ஒரு ஜோடிக்கு கண்கள் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போலவே அவளுக்குத் தோன்றும்.

சுதாவின் அப்பாவின் வற்புறுத்தலுக்கு பின், நான்கு மாதம் முன்பு தான் "சரி அப்பா, நீங்கள்  சொன்ன வரனைச் சென்று பார்க்கிறேன்" என்று ஒப்புக் கொண்டாள் சுதா.  பிட்சுபர்க்கில் உள்ள பெருமாள் கோவில் சுதா ஊரில் இருந்தும், குமார் என்ற பெயருடைய அந்தப் பையனின் ஊரில் இருந்தும்,  சம தூரத்தில் இருப்பதால், பிட்சுபர்க் பெருமாள் கோவிலிலேயே இருவரும் சந்தித்துப் பேசிக் கொள்ளலாம் என்று முடிவாயிற்று. 

குமார் பார்ப்பதற்கு நன்றாக இருந்தான். அவனும் அமெரிக்காவிலேயே மேற்படிப்பு படித்து முடித்து தற்போது வேலையில் இருக்கிறான்.  கொஞ்ச நேரம், இருவரும், தங்களைப் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்டார்கள். பெரிய உயர்ரக லெக்சசு காரில் வந்திருந்தான். 

"இந்தக் கார் எனக்கு சொந்தமானது இல்லை. லெக்சசு கார் கம்பெனியில் வேலை செய்வதால் காரைத் தேவைப்படும் போது தொலைதூர பயணத்திற்கு எடுத்திட்டு வரலாம். என் கிட்ட ஒரு பழைய ஹோண்டா அக்கார்ட் இருக்கு.  அதைத் தான் நான் வழக்கமா பயன்படுத்துவேன். " 

தேநீர் குடிக்க இருவரும் அருகில் இருந்த ஒரு கடைக்கு சென்ற போது "எனக்குத்  தேவையான தேநீரும், சிற்றுண்டியும் வாங்கிக் கொள்கிறேன். உனக்கு தேவையானதை வாங்கிக் கொண்டு வா. வெளியே இருக்கிறேன்" என்றான். சுதாவுக்கு தேநீர் வாங்கிய பிறகு விடை பெறும் வரை என்ன பேசினார்கள் என்பது எதுவும் மனதில் நிற்கவில்லை.  "என்ன ஒரு நாலைந்து டாலர் ஆகியிருக்குமா?"  அதைக் கூட செலவு செய்யத் தயங்கும் ஒரு ஆணுடன் எப்படி இருக்க முடியும் என்று தோன்றியது. அல்லது தன்னைப் பிடிக்கவில்லை என்பதால் செலவு செய்ய விருப்பப்படவில்லையோ என்றும் நினைத்தாள். 

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல திரும்பி வரும் போதே அவளுடைய வீட்டிற்கு போன் செய்து "எனக்கு இது சரிப்பட்டு வரும்னு தோணலை" என்றாள். அவள் நினைத்த மாதிரியே, குமாரின் வீட்டில் இருந்து, சுதாவுடைய தந்தையை அழைத்து தங்கள் மகனுக்கும் இந்தச் சம்பந்தத்தில் விருப்பம் இல்லை என்ற செய்தியைத்  தெரிவித்தார் குமாரின் தந்தை. 

வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக, இந்த வரன் தட்டிப் போனதோ என்று கூட சுதாவுக்கு தோன்றியது. கணேஷின் முகம் அவள் மனக்கண்ணில் ஒரு கணம் தோன்றி மறைந்தது.  சில நேரங்களில் சில வாசல்கள் அடைபட்ட வாசல்களா அல்லது தட்டினால் திறக்கக் கூடிய வாசல்களா என்று  தெரிந்தால் வாழ்க்கை எத்தனை சுலபமாக இருக்கும் என்று எண்ணி பெருமூச்சு விட்டாள். அலுவலக வேலை, வீடு, சமையல், மளிகைக் கடை எப்போதாவது துணிக் கடை என்று பழக்கப்பட்ட வாழ்க்கைக்குள் தன்னை ஆழ்த்திக் கொண்டாள். எதிர்பார்ப்பு இல்லாவிட்டாலும், மறுதலிப்பு கூட  சில நேரங்களில் சுமையாகி விடுகிறது. மனதை இலகுவாக்க, அவ்வப்போது அருகில் உள்ள நூலகம் சென்று புத்தகம் வாசித்தாள். அருகில் இருந்த ஒரு உடற்பயிற்சி நிலையத்திலும் இணைந்து கொண்டு உடற்பயிற்சி செய்வது, அருகில் இருந்த பூங்காவிற்கு நடைப்பயிற்சிக்கு செல்வது  என புதிய வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாள். 

இரண்டு மாதம் முன்பு, மீண்டும் அப்பாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. "நியூஜெர்சியில் ஒரு பையன்  இருக்கிறான் அந்தப் பையன் வந்து உன்னை பார்ப்பான். உனக்குச் சம்மதமா?" 

'ஏன் அப்பா, அந்தப் பையன் இங்கு அமெரிக்காவில் பிறந்து, வளர்ந்து படித்த பையன் என்று சொல்கிறீர்கள். நான் முழுதும் இந்தியாவில் வளர்ந்த பெண். அவனுக்கும் எனக்கும் ஒத்து வருமா? வேற ஏதாவது பார்க்கலாம்"  என்று முதலில் சுதா மறுத்தாள்.

"அந்தப் பையனே உன்னை வந்து பாக்கறேன்னு சொல்றாரு. நீ போய் பேசிப் பாரு. எது முடியும்னு யாருக்குத் தெரியும். எல்லாமே ஒரு வாய்ப்பு தானே." என்று அப்பா கூறவே, மனதில் எழுந்த மறுப்பினை அடக்கி ஒப்புதல் தெரிவித்தாள்.

வாசு, அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த பையன் என்பதை அவனுடைய தோற்றத்தில் இருந்து அறிய முடியவில்லை என்றாலும், அவன் பேசும் போது அதை அறிய முடிந்தது. ஆங்கிலம் அவனுடைய நாவில் விளையாடியது. வாயில் சூயிங்கத்தை வைத்துக் கொண்டு பேசினால் எப்படி ஒரு மிழற்றல் இருக்குமோ, அது போல அவனுடைய பேச்சிலும் ஒரு கொழகொழப்பு தன்மை இருப்பதாக சுதாவுக்கு தோன்றியது. அவளுடைய ஆங்கிலம் அந்த அளவு  நேர்த்தியானது இல்லை.  வாசுவுடைய எண்ணங்கள், எதிர்பார்ப்பு என்று எதையும் அவனுடன் பேசிப் பார்த்த பின்பும், சுதாவுக்கு ஒரு தெளிவு இல்லாதது போலவே தோன்றியது. அமெரிக்காவிலேயே பிறந்து வளரும் அமெரிக்க இந்திய இளைஞர்கள் அமெரிக்கராக இல்லாமலும் இந்தியர்களாகவும் இல்லாமல் குழப்பத்திலேயே வாழ்பவர்கள் என்ற பொதுவான ஒரு கருத்திற்கு, வாசு சரியான உதாரணம் என்று அவளுக்குத் தோன்றியது. அவனுக்கும் சுதாவுடன் ஒத்து வருமா என்ற சந்தேகம் இருந்தது போலும். பட்டும் படாமலும் பேசினான். ஒரு உணவகத்தில் இரவு உணவிற்கு சந்தித்தார்கள்.  பருகுவதற்காக ஸ்பார்க்ளிங் வாட்டரும், இரவு உணவிற்கு இறைச்சி உணவையும் தேர்ந்தெடுத்தான். போன மாதம் சந்தித்த குமார் போல உணவிற்கான கட்டணத்தை நீயே செலுத்து என்று கூறுபவனாகத் தெரியவில்லை என்றாலும், சுதாவுக்கு இந்த சந்திப்பு நேர்மறையாக முடியும் என்பதில் எந்தவித நம்பிக்கையும் இல்லை  என்பதால் மெனுவில் இருந்த மிகவும் விலைகுறைந்த சாலட்டை தேர்ந்தெடுத்தாள். ஏதேதோ பேசியபடி சாப்பிட்டு விட்டு விடை பெற்றுக் கொண்டார்கள். வாசு, இவள் பணம் தருவதாகக் கூறியும், அதை மறுத்து இருவரின் உணவிற்கான தொகையையும் செலுத்தினான். அவன் விடைபெற்று சென்ற பிறகு,  அவன் வீட்டில் இருந்து யாரும் அழைத்து, சுதாவின் அப்பாவிடம்  பேசவில்லை என்பது மட்டும் சுதாவின் தந்தைக்கு பெருங்குறையாக இருந்தது. "ஒரு மரியாதைக்காவது கூப்பிட்டு வேண்டாம்ணு சொல்லியிருக்கணும்.  பெண்கள், ஆண்கள் அளவு சமத்துவம் அடைந்ததாக கூறும் அனைவரையும் கல்யாணச் சந்தையில் நிறுத்தினால் தான் தெரியும், உண்மையான நிலவரம்" என்று அங்கலாய்த்தார் சுதாவின் அப்பா.   "என்  உணவிற்கான தொகையை நானே அளித்திருக்கலாம்" என்பது மட்டுமே சுதாவுக்கு குறையாக இருந்தது. 

அந்த வார இறுதியில் சுதா தொலைபேசியில் கனடாவிலிருந்த மதுவை அழைத்து புலம்பினாள்.

"மது, இது பெரிய இம்சையா இருக்கு. போற வரவங்களுக்கு எல்லாம் என்னைப் பத்தி சொல்ற மாதிரி ஒரு சித்ரவதைக்கு ஈடா எதுவுமே இல்லைன்னு சொல்லலாம். இதுல நான் எது சொன்னாலும், சொன்னது உண்மையா, பொய்யான்னு  கண்டுபிடிக்கறேன்னு பையனோட அப்பா அம்மாக்கிட்டே இருந்து தொலைபேசி அழைப்பு வேற. ஒவ்வொரு நாளும், ஊர்லேர்ந்து எங்க அப்பா என்னைக் கூப்பிட்டாலே இன்னைக்கு எந்த ஊர்ல  என் வழக்கு  விசாரணைக்கு வரப் போகுதோன்னு படபடன்னு இருக்கு. பெருமாள் கோவிலுக்கு திருமணம் அமையப் போவார்கள். நான் பிட்சுபர்க் போகறது, திருமணம் நடக்காம இருக்கறதுக்கே போகிற மாதிரியே இருக்கு. பெருமாளுக்கு இருக்கற கல்யாண யோகம் என்னால குறைஞ்சிடும் போல இருக்கு."

"இங்க பாரு சுதா, இதையெல்லாம் நீ சுலபமா எடுத்துக்கோ. இந்த மாப்பிள்ளை பார்க்கற படலம் எல்லாம் எவ்வளவு நாள் நடக்கப் போகுது? கொஞ்சம் நாள் தான். வாழ்க்கையிலே இதெல்லாம் ஒரு காலகட்டம் அப்படின்னு எடுத்துக்கோ." என்று அவளுக்கு பலவாறு சமாதானம் சொன்னாள் மது. 

எனினும் அன்றிரவு  தூக்கம் வர, அவளுக்கு நிறைய நேரம் பிடித்தது.

மூன்றாவது முறையாக, இப்பொழுது  மீண்டும் பிட்ஸ்பர்க் பயணம். இந்த பையனின் பெயர் கார்த்திக். கார்த்திக்கோ, வாசுவோ, குமாரோ ஒவ்வொரு முறையும் என்னைப்   பற்றிய பல விடயங்களை, திரும்பவும் சந்திக்கப்  போகிறேனோ இல்லையோ என்று தெரியாத ஒருவருடன் அவருடனான முதல் சந்திப்பிலேயே பகிர்ந்து கொள்வது கூட கசப்பாகவே இருக்கிறது என்று நினைத்தவாறே காரைச் செலுத்திக் கொண்டிருந்தாள் சுதா. ஏற்கனவே பல முறை வந்ததால்,வரைப்படத்தை பார்க்க வேண்டிய தேவை இல்லாமலேயே  கோவிலை எளிதாக அடைந்தாள். கார் நிறுத்துமிடத்தில் காரை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தாள். காலணிகள் விடும் அறையில் நிறைய பென்ச் போடப்பட்டிருந்தது. அதில் உட்கார்ந்து காலணிகளை கழற்றி அங்கிருந்த அலமாரியில் வைத்தாள். உள்ளே சென்று பெருமாளை தரிசித்து பிரகாரத்தைச் சுற்றி வந்தாள். சரியாக 1:00 மணி அளவில் முன்னதாகவே கூறியபடி கோவிலின் வெளிப்புறத்தில் உள்ள பூங்காவில் வந்து அமர்ந்தாள். சரியாக பத்து நிமிடங்களில் கார்த்திக் வந்து சேர்ந்தான்.  வந்தவுடன் தாமதாக வந்ததற்காக மன்னிப்பு கோரினான்.  

மாநிறம். ஐந்தேமுக்கால் அடி உயரம் என்று அவனுடைய பயோடேட்டா சொல்லியது துல்லியமாய் இருந்தது. கலகலவென்று பேசினான். தன்னைப் பற்றி எந்த விவரத்தையும் தயக்கம் இல்லாமல் பகிர்ந்து கொண்டான். அவளைப் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டான். 

"நான் காதலிச்சிருக்கேன், ஆனா இப்போ இல்லை. இப்போ வாழ்க்கையை காதலிக்கறேன். எனக்கு வரப் போற மனைவியை மட்டுமே காதலிக்க போறேன்.  உன்னால நான் இருக்கற ஊர்ல வேலை தேடிட்டு வர முடிஞ்சா வா. இல்லை என்னால வர முடியுமான்னு நான் முயற்சி பண்றேன். எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. உனக்கும் என்னை பிடிச்சிருக்கான்னு யோசிச்சு சொல்லு." என்று சிறிது நேரத்திலேயே தன்னையுடைய மனதில் பட்டவற்றை ஒளிவு மறைவின்றி தெரிவித்தான்.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் விடைப்பெற்றுக் கொண்டு  அவரவர் ஊருக்குத் கிளம்பினார்கள்.

சுதா அப்பாவை அழைத்தாள். "அப்பா, கார்த்திக் பேசிப் பார்த்த வரைக்கும் நல்ல பையன் மாதிரி தான் இருக்கான். ஆனா, முன்னாடியே பெண் தோழிகள்  இருந்ததுன்னு சொன்னான். ரொம்ப வேகமா இருக்கான். என்னை இப்போ தான் முதல் முதல்ல பாக்கறான். அதுக்குள்ள என்னை பிடிச்சிருக்குன்னு சொல்றான். கொஞ்சம் யோசிக்கணும்." 

"சரிம்மா, நானும் பேசிப் பார்க்கறேன். அம்மாவையும் பேசச் சொல்றேன்."

சுதாவுக்குத் கொலம்பஸ்  திரும்பும் போதே இரவாகி விட்டிருந்தது.  கையோடு வாங்கி வந்திருந்த பழங்களை உண்டு விட்டுப் படுத்தாள்.

அடுத்த நாள் ஞாயிறு. வழக்கம் போல  கொஞ்சம் தாமதமாக படுக்கையை விட்டு எழுந்து அவசரமாக சமையலை முடித்தாள். கொஞ்சம் மளிகை சாமான் வாங்க வேண்டிய வேலை இருந்தது. வால்மார்ட் சென்று வீட்டிற்குத் தேவையான பொருட்களையும் வாங்கி வந்தாள். கொஞ்ச நேரம் ஓய்விற்கு பின், புதிதாக வாங்கி இருந்த மயில் நிறத்தில் இறுகக் கவ்வும் எலாஸ்டிக் நீளக் கால் சட்டையும், அதற்கு பொருத்தமான பச்சை வண்ண சட்டையும் அணிந்து கொண்டு, அருகில் இருந்த பூங்காவில் நடைப்பயிற்சிக்குச்  சென்றாள். காரை விட்டு இறங்கும் போது அருகில் இருந்த காரைப் பார்த்தவுடன் இது கணேஷின் வண்டியாயிற்றே என்று யோசித்தவாறே நடந்தாள். முகப்பில் எங்கும் கணேஷ் தென்படவில்லை. சரி, சுற்றி வரும் போது பார்க்கலாம் என்று மெதுவாக நடக்கத் தொடங்கினாள்.  கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு மர பெஞ்சில் அருகருகே அமர்ந்து கணேஷும் இன்னொரு அமெரிக்கப் பெண்ணும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவர்கள் இருவரும் அன்யோன்யமாக, ஒருவர் தோளில் மற்றொருவரும் சாய்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் சென்ற பின் இருவரும் கையைப் கோர்த்துக் கொண்டு, காரில் ஏறிக் கிளம்பிச் சென்று விட்டனர்.  

சுதாவுக்கு விழியோரங்களில் கண்ணீர் அரும்பியது. வாய்மையின் இடத்தை பொய்மையின் வெற்றுச் சொற்களை இட்டு நிரப்ப முடியாது. உண்மையின் நாக்குகள் தரும் வெப்பம் தாள முடியாததாய் இருந்தாலும் அவை பொய்மையின் குளிர்ந்த கரங்களை விட சிறந்த ஆறுதல் தரக் கூடியவை. கணேஷிற்கு வேறு யாரையோ பிடித்திருக்கிறது என்பதை அவன் நேரடியாகவே சொல்லி இருக்கலாம். இதற்கு எதற்குப் பொய் சொன்னான் என்று யோசித்த போது அவளுக்கு தோன்றியது ஒன்று. ஒரு வேளை அவன் நினைத்த பெண் அமையவில்லை என்றால், கேட்க ஏதுவாக, கையருகில் தான் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது.  கணேஷ், அவள் அறைத் தோழி பிரியங்கா, குமார், வாசு எல்லாரும் முகமூடிகளுடன்  வலம் வருபவர்கள்.  முகமூடி அணிந்த மனிதர்களுடன் இருந்ததாலேயே இவளுக்கு உண்மைக்கும் பொய்மைக்கும் வித்தியாசம் தெரியவில்லை. 



சுதா ஒரு தெளிவான முடிவிற்கு வந்திருந்தாள். அப்பாவை அழைத்தாள். "அப்பா, எனக்கும் கார்த்திக்கை பிடிச்சிருக்கு. உங்களுக்கும் பிடிச்சிருந்தா மேற்கொண்டு ஏற்பாடுகளை செய்யலாம். என் அனுபவத்தில் நிறைய பேர் தங்களுடைய உண்மையான முகத்தை காட்டாமலேயே முகமூடிகளுடன் நடித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் உண்மை முகம்  எப்படியும் வெளிப்பட்டு விடுகிறது. கார்த்திக் மத்தவங்க மாதிரி இல்லாம மனசுல பட்டதை என்னுடைய முடிவு என்னவாக இருக்கும்னு தெரியறதுக்கு முன்னாடியே சொல்லிட்டார். அவரோட மனசை மறைச்சு இது நடக்குமா நடக்காதா, நடந்த பிறகு சொல்லலாமா அப்படின்னு எந்த கணக்கும் இல்லை. கார்த்திக்கை இவ்வளவு பேருக்கு அப்பறம் சந்திச்சதுல ஒரு நன்மை என்னன்னா அவர் உண்மை சொல்றாரா இல்லையான்னு என்னால இப்போ நல்லா உணர முடியுது. சரியான ஆளை  அடையாளம் காட்டவே  என்னை பெருமாள் இத்தனை தடவை பிட்சுபர்க் கூப்பிட்டிருக்காருன்னு புரியுது." என்று சொல்லி நிறைவுடன் அலைபேசியை அணைத்தாள்.

அநேகமாக சுதாவின் அடுத்த பிட்சுபர்க் பயணம் நன்றி தெரிவிப்பதற்காய் தான் இருக்கும்.

                                                                    முற்றும் 

  






ஐம்பெரும் தமிழ்ப் பெண்கள் - கவிதை



எண்ணெய்க் காணாத தலை
துளையற்ற காது
ஒலிக்காத ரப்பர் வளையல்கள்
சுடுமணல் வெம்மைக்கு சவால்விடும் 
தடித்த கால் தோல் 

தலை சும்மாட்டின் மேல் 
மகுடம் போல் கூடை 
குழந்தைகளுக்கு மதிய உணவு
கீரை காய்கறி இத்யாதி 
அந்தந்த நேரத்திற்கு தோதாய் 

பாரதியின் புதுமைப் பெண்ணாய்
நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும்
பேருந்தையும் மோட்டார் வண்டியையும் 
லாவகமாய் பாய்ந்து கடப்பார் 
தலையெழுத்தை பாரம் ஏற்றி 
நசுக்க முனைந்தும் தோற்பவர் 
வெயிலில் நடந்து களைத்திருந்தாலும்
நிழல் தருவாய் சாலப் பரிந்தூட்டுவார் 
குழந்தைகளின் மதிய உணவை 
அவர் அன்பால் அமுதமாக்குவார் 
சந்திரா என்றவரை அழைக்கும் பொழுதெல்லாம் 
வாழ்வின் இருண்ட முகம்நம் நினைவிலாடும் 
கடவுளரின் சிரசில் இருக்க இடமின்றி 
இடம் பெயர்ந்து
தரையில் தேயும் வெண்ணிலா 

வெண் தட்டுக்களாய்
பஞ்சுப் பொதிகளாய்
ஆவி பறக்கும் இட்லிக்கள்
கல்லா நிரம்பாவிட்டாலும் 
ஆயிரம் வயிறுகளை நிறைவிக்கும் கனிவு 
கணவனும் கைக்கொடுக்கவில்லை
பெற்ற பிள்ளையும் நிலைக்கவில்லை 
ஊரார் பிள்ளைகளின் அன்னையாய் 
இட்லிக்கடை நடத்தும் கமலம் பாட்டி
சில நூறுக்கே விலை போகும் உலகில்
மலையின் உறுதி தான் கொண்ட கொள்கையில்
ஒரு ரூபாய்க்கு உணவளித்து 
பசிப்பிணி போக்கும் நவீன மேகலை 
மழையும் இவரின் கருணையில் தோய்ந்தே
அதிகக் குளிர்ச்சியாய் பொழிகிறது 

குடும்ப பாரத்தை தோளில் சுமக்காமல் 
வயிற்றில் சுமந்து வறுமையைத் தாண்டுபவள்
நடிகைக்கு வாடகைத் தாய்
சூரியனை காசுக்கு விற்றுவிட்டு 
நட்சத்திரங்களிடம் வெளிச்சம் தேடுபவள்
அம்மா என்ற அழைப்பொலி 
எப்போது கேட்டாலும் 
பாடல் மறந்த குயிலாய்
அவள் பெயர் எப்போதும் நினைவில் இடறும் 

பூமித் தாயின் தண்டுவடம் போல்
நாள் முழுதும் நின்று கொண்டே 
இஸ்திரி போடும் பொன்னி அக்கா
வீட்டில் உலை பொங்க
தினம் தினம் அக்னிச் சட்டி ஏந்துபவள்  

எங்கோ இருக்கும் ராஜகுமாரனோ 
அலங்கரிக்க சிம்மாசனங்களோ
காப்பியங்களில் இவர்தம் கதைகளோ 
ஒரு நாளும் இடம் பெறுவதில்லை
வெற்றிக் கதைகளை
பாராட்டும் ஏடுகளில் 
அன்றாட போராட்டத்தில்
தினமும் மீண்டெழும் அக்னிப் பறவைகள்
கொண்டாடப்படுவதில்லை
முகச் சாயம் பூசாத 
தழும்பேறிய அழுக்குக் கைகளைப் 
பாராமல் கடப்போரே அநேகம்
பாவலரின் தமிழ்ப்பா
தழுவாமல் சென்றதில் வியப்பென்ன

அலங்கார வார்த்தை அடுக்கி 
யாதொன்றையும் உயர்த்திச் சொல்ல
பாருக்குள்ளே மொழிகள் பல
பல கோடி மாந்தர் வாழ்ந்த
தமிழ் நிலத்தில்
மன்னர்களுக்கும் 
பெரும் வணிகனின் மகளுக்குமே முன்னுரிமை 
எளியோரின் கதை பேசா
உதாசீனமும் வன்முறையே 
ஐம்பெரும் காப்பியங்கள் அல்ல 
பல ஆயிரம் மீச்சிறு காப்பியங்கள் படைத்து 
பாமாலையாய் தமிழன்னைக்குச் சூட்டுங்கள்
பூக்களுள் நிறப் பேதமில்லை
சொல் வறுமை என்றென்றும் தமிழுக்கில்லை 
சாதனைகளுக்கு எல்லை வகுத்து 
மனித வரலாற்றை சிறைக்குள் இருத்தும் 
பழங்கால வழக்கமதை நேற்றில் வைப்போம்


பாமரர் பண்டிதர் 
யாவருக்குமான மொழியாம்
தங்கத் தமிழ் 
தரணியிலே என்றும் மூப்பின்றி வாழவே
மாறில்லா இளமைத் தங்க 
யாவருக்கும் பொதுவில் வைப்போம்
காப்பியப் பெண்களை விடுத்து 
கடைநிலைப் பெண்களை தோள் உயர்த்துவோம் 
சாய்வாகச் சுற்றும் பூமி
சற்றே நேராகி சுழல்தல் எல்லாம் 
மாசில்லா தமிழால் என்று 
மட்டற்ற பெருமைக் கொள்வோம்

திங்கள், ஜூன் 12, 2023

கவிதை எல்லாம் செய்யும் - கவிதை





கனமற்ற காகிதமொன்று

கண்ணீரால் கரைய வைக்கும் 

மாயக் கரமாய் ஆற்றுப்படுத்தும் 

உணர்வுகள் ஊற்றி வரைந்த 

ஒற்றைக் கவிதையால் 


இலகுவான மனம் ஒன்று

இரும்பாய்க் கனக்கும்  

காலங்கள் மறக்கும் 

உயிரினை உருக்கும் 

ஒற்றைப் பார்வையால் 


இன்பப் பயணம் ஒன்று 

சுவையற்றுப் போகும்

சுமையாய் மாறும்

நேசமில்லா நட்புடன் 

கரம் கோர்த்துச் செல்கையில் 


மனதை ஆற்றுப்படுத்தவும் 

உறுதியாய் சமைக்கவும் 

பேசா வார்த்தையால் 

தொடுதல் வேண்டா

உணர்வால் முடியுமென்றால் 

புறக்கணிப்பையும் 

புதிய கசப்புகளையும் 

பரிசளிக்கும் மனிதர்களிடம்

அலங்கார வார்த்தைகள்

வீசிக் கடக்கின்றேன்

வானக் கூரையில் மின்னும் 

எண்ணிலடங்கா நட்சத்திரங்களாய்  

அவர்தம் வாசலை அலங்கரிக்கும் 

பயனில்லா வார்த்தைக் குப்பைகள் 


எஞ்சிய வார்த்தைகள் போதும்

காலம் தாண்டி வாழும்

கவிதைகள் நெய்ய 

உணர்வுகள் ஊற்றி

மௌனத்தில் ஆழ்ந்து

சொல்லோவியம் வரைகின்றேன்

இக்கவிதைகளிடம் எச்சரிக்கையாயிருங்கள்

தாள முடியாத மகிழ்ச்சியையோ

விவரிக்க முடியாத துயரத்தையோ 

நொடியில் கடத்தக் கூடும்

கொஞ்சும் தமிழும்

நற்றமிழ் கவிதையும் போதும்

அவ்வப்போது நானும் கடவுளாக 

அருவி கோடை மலர்- 2023





இளமஞ்சள் பொன் கதிரைக் காணும் திசையெங்கும் பாய்ச்சும் வெய்யோன் பொலிய, புள்ளினங்களும், வண்டினங்களும் மகிழ்ச்சியில் துள்ளும் இனிமையான கோடைக் காலத்தில் உங்கள் இல்லம் நாடி வந்திருக்கிறது மற்றுமொரு அருவி. இந்தக்  கோடை பருவத்து அருவி மலரில், 36-வது பேரவை விழா பற்றிய செய்திகளும்,கவிதை, கதை, தமிழ்ச் சங்க நிகழ்வுகள் எனப் பல்வேறு பொருண்மையில் செய்திகள் இடம் பெற்றுள்ளன. அருவியை கீழுள்ள இணைப்பின் வழி வாசிக்கலாம்.

https://fetna.org/aruvi-kodai-malar-2023/





பூக்கள் பூக்கும் தருணம் -சுற்றுலா - பாகம் 1

சென்ற ஆண்டு அலுவலக தோழி ஒருவர் நெதர்லாந்து சென்று திரும்பி இருந்தார். இளவேனில் பருவத்தில், துலிப் மலர்கள் மலரும் ஏப்ரல் மாதம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் நெதர்லாந்து துலிப் தோட்டங்கள் என்று அவர் சொன்னதில் இருந்து துலிப் மலர்கள் அதிகம் விளைவிக்கும் நெதர்லாந்து நாட்டினைக் காண வேண்டும் என்று மனதிற்குள் ஒரு குறிப்பு எடுத்துக் கொண்டேன். இந்த வருடம் இளவேனில் பருவத்தில் பத்து நாட்கள் பள்ளி விடுமுறை உண்டு என்பதால் சரி இந்த பத்து நாட்கள் கண்டிப்பாக துலிப் தோட்டங்களை காணச் செல்லலாம் என்று எண்ணம் தோன்றியது. அவசரமாக என்னென்ன இடங்களுக்கு செல்லலாம் என்று பார்க்கும் முன்பே கல்லூரி நண்பர் ஒருவர் நெதர்லாந்தில் இருப்பது ஞாபகம் வந்தது. அவனிடம் விசாரித்து பிறகு பத்து நாட்கள் பார்க்கக் கூடிய விதத்தில் பயண திட்டம் தயாரித்து விமான டிக்கெட், ஏர்பிஎன்பி இணையதளம் வழியே தங்கும் இடங்கள் என்று எல்லாம் முன்பதிவு செய்தோம். நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டம் சென்று அங்கிருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இரு நாட்கள்  இருந்துவிட்டு பின்பு நெதர்லாந்து திரும்பி அங்கே பல்வேறு இடங்களைப் பார்த்து விட்டு மீண்டும் ஊருக்கு அங்கிருந்து கிளம்புவதாகத் திட்டம். அந்நியன் படத்தில் வரும் குமாரி பாடலை கேட்டு வேறு அழகான துலிப் தோட்டங்களை மீண்டும் எண்ணத்தில் பத்திரப்படுத்திக் கொண்டோம். 

துலிப் மலர் தோட்டங்களிலும் நெதர்லாந்தில் அதிகமாக காணப்படும் காற்றாடி இயந்திரங்களின் பின்புலத்தில் எடுக்கப்பட்ட இந்தப் பாடல் உங்கள் நினைவூட்டலுக்காக கீழே. பாடலைப் பார்த்து விட்டு பயண அனுபவத்தை மேலே படியுங்கள்.


குளிரும் பனியுமான பனிக்காலம் மெதுவாக உருண்டோட இனிய இளவேனில் வந்தது. செடிகளில் புதிய இலைகளும், புதிய மலர்களும் மனதிற்கு இனிமையைத் தந்தது. பயண ஏற்பாடுகள், மளிகை சாமான்கள் கொள்முதல், காலை உணவிற்கான பண்டங்கள் வாங்குதல் மற்றும் அவற்றை பெட்டியில் அடுக்குதல் என்று பயணத்திற்கு தேவையான பணிகளும் முடிந்து பயண நாளும் வந்தது.

வீட்டில் இருந்து இரண்டு மணி நேர பயணத்தில் இருந்த ராலே விமான நிலையத்தில் இருந்து ஐஸ்லாந்து ஏர் வழியாக பயணத்தை முன்பதிவு செய்திருந்தோம். வீட்டில் இருந்து கிளம்ப கிட்டத்தட்ட ஏர்போர்ட் அடைவதற்கு முன்னர் மோசமான வானிலை காரணமாக ஐஸ்லாந்து ஏர் விமானம் அன்றைய தினம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வந்தது. சரி ஏர்போர்ட் சென்று அங்கிருந்து வேறு எதுவும் விமானம் பிடித்து செல்வோம் என்று ஒருவாறு சமாதானம் செய்து கொண்டு ஏர்போர்ட்டை அடைந்து ஐஸ்லாந்து ஏர் கவுண்டரை அடைந்தால் அங்கு ஒருவர் கூட இல்லை. சரி என்ன செய்வது என்று விசாரித்த போது அங்கிருந்து அடுத்த நாள் செல்லக் கூடிய ராலே விமானத்திற்கு ஆகும் கட்டணம் மிகவும் அதிகம் என்று தெரிந்தது. பக்கத்து கவுண்டரில் இருந்த விமான நிலைய ஊழியர் எங்களுக்காக பல்வேறு பயண திட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தார். எனினும் விலை அதிகம் என்பதால் கொஞ்சம் திகைப்பாகவே இருந்தது. எனினும் போக முடியவில்லை என்றால் எங்கள் பயணத்திட்டத்தின் படி பதிவு செய்திருந்த தங்கும் இடங்கள், வாடகைக் கார், ரயில் பயணத்திற்கான முன் பதிவு, சுற்றுலா தளங்களுக்கான முன் பதிவுக்கான செலவு என்று பலவற்றையும் இழக்க வேண்டி இருக்கும் என்பதால் போயே ஆக வேண்டிய கட்டாயம் வேறு. வெளியில் கொட்டும் மழை என்பதால் வேறு எங்கும் போகாமல் விமான நிலைய பயணிகள் அமரும் அறையிலேயே அமர்ந்து இணையதளத்தில் ஆம்ஸ்டர்டம் செல்லவேறு வழி இருக்கிறதா என்று தேடினோம். ஆம்ஸ்டர்டம் சென்றோமா என்பது அடுத்த பதிவில்.