செவ்வாய், ஜூன் 13, 2023

ஐம்பெரும் தமிழ்ப் பெண்கள் - கவிதை



எண்ணெய்க் காணாத தலை
துளையற்ற காது
ஒலிக்காத ரப்பர் வளையல்கள்
சுடுமணல் வெம்மைக்கு சவால்விடும் 
தடித்த கால் தோல் 

தலை சும்மாட்டின் மேல் 
மகுடம் போல் கூடை 
குழந்தைகளுக்கு மதிய உணவு
கீரை காய்கறி இத்யாதி 
அந்தந்த நேரத்திற்கு தோதாய் 

பாரதியின் புதுமைப் பெண்ணாய்
நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும்
பேருந்தையும் மோட்டார் வண்டியையும் 
லாவகமாய் பாய்ந்து கடப்பார் 
தலையெழுத்தை பாரம் ஏற்றி 
நசுக்க முனைந்தும் தோற்பவர் 
வெயிலில் நடந்து களைத்திருந்தாலும்
நிழல் தருவாய் சாலப் பரிந்தூட்டுவார் 
குழந்தைகளின் மதிய உணவை 
அவர் அன்பால் அமுதமாக்குவார் 
சந்திரா என்றவரை அழைக்கும் பொழுதெல்லாம் 
வாழ்வின் இருண்ட முகம்நம் நினைவிலாடும் 
கடவுளரின் சிரசில் இருக்க இடமின்றி 
இடம் பெயர்ந்து
தரையில் தேயும் வெண்ணிலா 

வெண் தட்டுக்களாய்
பஞ்சுப் பொதிகளாய்
ஆவி பறக்கும் இட்லிக்கள்
கல்லா நிரம்பாவிட்டாலும் 
ஆயிரம் வயிறுகளை நிறைவிக்கும் கனிவு 
கணவனும் கைக்கொடுக்கவில்லை
பெற்ற பிள்ளையும் நிலைக்கவில்லை 
ஊரார் பிள்ளைகளின் அன்னையாய் 
இட்லிக்கடை நடத்தும் கமலம் பாட்டி
சில நூறுக்கே விலை போகும் உலகில்
மலையின் உறுதி தான் கொண்ட கொள்கையில்
ஒரு ரூபாய்க்கு உணவளித்து 
பசிப்பிணி போக்கும் நவீன மேகலை 
மழையும் இவரின் கருணையில் தோய்ந்தே
அதிகக் குளிர்ச்சியாய் பொழிகிறது 

குடும்ப பாரத்தை தோளில் சுமக்காமல் 
வயிற்றில் சுமந்து வறுமையைத் தாண்டுபவள்
நடிகைக்கு வாடகைத் தாய்
சூரியனை காசுக்கு விற்றுவிட்டு 
நட்சத்திரங்களிடம் வெளிச்சம் தேடுபவள்
அம்மா என்ற அழைப்பொலி 
எப்போது கேட்டாலும் 
பாடல் மறந்த குயிலாய்
அவள் பெயர் எப்போதும் நினைவில் இடறும் 

பூமித் தாயின் தண்டுவடம் போல்
நாள் முழுதும் நின்று கொண்டே 
இஸ்திரி போடும் பொன்னி அக்கா
வீட்டில் உலை பொங்க
தினம் தினம் அக்னிச் சட்டி ஏந்துபவள்  

எங்கோ இருக்கும் ராஜகுமாரனோ 
அலங்கரிக்க சிம்மாசனங்களோ
காப்பியங்களில் இவர்தம் கதைகளோ 
ஒரு நாளும் இடம் பெறுவதில்லை
வெற்றிக் கதைகளை
பாராட்டும் ஏடுகளில் 
அன்றாட போராட்டத்தில்
தினமும் மீண்டெழும் அக்னிப் பறவைகள்
கொண்டாடப்படுவதில்லை
முகச் சாயம் பூசாத 
தழும்பேறிய அழுக்குக் கைகளைப் 
பாராமல் கடப்போரே அநேகம்
பாவலரின் தமிழ்ப்பா
தழுவாமல் சென்றதில் வியப்பென்ன

அலங்கார வார்த்தை அடுக்கி 
யாதொன்றையும் உயர்த்திச் சொல்ல
பாருக்குள்ளே மொழிகள் பல
பல கோடி மாந்தர் வாழ்ந்த
தமிழ் நிலத்தில்
மன்னர்களுக்கும் 
பெரும் வணிகனின் மகளுக்குமே முன்னுரிமை 
எளியோரின் கதை பேசா
உதாசீனமும் வன்முறையே 
ஐம்பெரும் காப்பியங்கள் அல்ல 
பல ஆயிரம் மீச்சிறு காப்பியங்கள் படைத்து 
பாமாலையாய் தமிழன்னைக்குச் சூட்டுங்கள்
பூக்களுள் நிறப் பேதமில்லை
சொல் வறுமை என்றென்றும் தமிழுக்கில்லை 
சாதனைகளுக்கு எல்லை வகுத்து 
மனித வரலாற்றை சிறைக்குள் இருத்தும் 
பழங்கால வழக்கமதை நேற்றில் வைப்போம்


பாமரர் பண்டிதர் 
யாவருக்குமான மொழியாம்
தங்கத் தமிழ் 
தரணியிலே என்றும் மூப்பின்றி வாழவே
மாறில்லா இளமைத் தங்க 
யாவருக்கும் பொதுவில் வைப்போம்
காப்பியப் பெண்களை விடுத்து 
கடைநிலைப் பெண்களை தோள் உயர்த்துவோம் 
சாய்வாகச் சுற்றும் பூமி
சற்றே நேராகி சுழல்தல் எல்லாம் 
மாசில்லா தமிழால் என்று 
மட்டற்ற பெருமைக் கொள்வோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக