திங்கள், நவம்பர் 30, 2020

இருட்டில் ஏது நிழல் - கவிதை


சின்னஞ் சிறு  பெண் என்றாலும் 

காக்கும் வேலியே பயிரை மேயும் 

பதின்ம வயது பருவ மங்கை   

கோணல் பார்வை உயிரை நோவும் 

 

வசதி வாய்ப்பு இல்லை என்றாலே 

எடுப்பார் கை பிள்ளை தானே 

செல்வ நிலை சற்றே வாய்த்தால்   

கரை சேர்ப்பேன் என்பார் வீணே 

 

புகுந்த வீட்டில் உந்தன்  மானம் 

சீர்பணம் தானே காக்கும் நாளும் 

பணம் ஈட்டும் பெரிய பதவி 

படிந்தால் வெடிக்காது சிலிண்டர் கவனி 

 

பேரிளம்  பெண்ணென்றாலும் விடாது  விஷம சீண்டல் 

நச்சுப் பாம்பினும் கொடியது  கீழோர்தம் பார்வை தீண்டல் 

நட்பென  எண்ணி  நீயும் அன்பாய்  கொள்ளும் உறவில் 

சட்டென காதலி என்பான் தேவை  கவனம் உணர்வில் 

 

வறுமையை உறவாய் கொண்டால் 

பொருளால் உனை விலைபேசி கொள்வார் 

காசை சேர்க்கும் வித்தையறிந்தால் 

 பொதி சுமக்கும் கழுதை என்பார் 

  

ஆசை எல்லாம் தீர்ந்த பின்னே 

அன்புத் தங்கை என்பார் மானே 

அம்மா அப்பா பார்க்கும் பெண்னே 

ஆசை தாரமென்று கொள்வார் தேனே 

 

படியாத பெண் என்றால் திராவக வீச்சு 

படித்த பெண் என்றால் "மீ டூ"  பேச்சு 

துறைதோறும் துறைதோறும் இஃதே ஆச்சு 

பெண் விடுதலை என்பதெல்லாம் கனவாய் போச்சு 

 

பெண்னென்றால் பேயும் இரங்கும் 

பழங்கதைகள் கடிதாய் மறப்போம் 

தன்மானம் அசைத்து பார்க்கும் 

மெய்சீண்டல் உண்டு மறவோம் 

விட்டுவிடு அண்ணாவென்று 

கெஞ்சினும் மிஞ்சும் வீணர்   

உடல்மேல் பட்ட சேறு 

கடந்துபோய் சிகரம் ஏறு 

 

ஆணுக்கு பதவி உயர்வு செயல்திறமை என்றே மதிப்பர் 

பெண்ணுக்கு பதவி உயர்வு வேறு திறமையென்று நகைப்பர்    

வசவு சொற்கள் கூட தாயின் கற்பை உரசும் 

பெண் ஆணின் உடைமையென்ற தெள்ளிய உண்மை பேசும் 

    

காவல் தொழில் செய்யும் ஒருவன் 

கடவுளின் வாரிசெனும் அன்பன் ஒருவன் 

ஆசை முற்றும் துறந்த முனிவன் 

மீசை நரைத்த தொண்டு கிழவன் 

உலக அழகி என்னும் கவிஞன் 

உந்தன் ஆசைதூண்டி மடைமாற்றும் நடிகன் 

நம்பாதே இவரில் எவரும் 

கொள்வாயே எஃகு இதயம் 

 

செல்லும் வழியெங்கும் காத்திருக்கு சலனம் 

வாழ்க்கை கானலெனும் நெருப்பற்றில் நீடித்த பயணம் 

இயற்கை அழைப்பிற்கு ஒதுங்கும் பெண்ணை 

நாடும் இரக்கமற்ற கயவர்கள் பூமிக்கு சுமை 

 

கறிகாய் விலை பேச ஊர் ஊராய் மார்க்கெட் 

கற்பை விலை பேச  திறந்திருக்கு ரெட் லைட் 

சிறு குழந்தை மங்கையென்று அலையும் பேர்கள் 

எவர் மகளோ தங்கையோ என்றெண்ணி திருந்தா பேய்கள் 

உன் நிழலும் உனை பிரியும் இருளின் நிழலில் 

உன் கையே உனக்கு உதவி வாழ்வாய் துணிவில் 

வீரத் தமிழ் மரபில் உதித்த முத்தே 

உனை வெல்ல எவருமில்லை நீ சூரிய வித்தே