கார் மேகத்தை கலவாமல்
மரங்கள் பொழியும் இலை மழை
காலடியில் மிதிபடும் போதெல்லாம்
சரக்(சருகு)என்றே எச்சரிக்கிறாய்
மூப்பின் சாயல் தீண்டா சிறகாய்
வீட்டின் மேற்கூரையில் தாவி
மகிழ்வாய்
வளி வடித்த சிற்பமாய் மிளிர்வாய்
கணத்தில் வேறோர் உருவம் கொள்வாய்
இயற்கை தாயின் வண்ணத் துகிலே
ஒன்றே பலவாய் விரியும் அழகே
மண்ணில் கலந்தும் மீளும் புதிரே
மங்கா ஒளியே கதிரின் துளியே
மரம் விட்டு விழுந்த பின்பே
சருகளுக்குள் பேதம் இல்லை
கடல் சென்று சேர்ந்த பின்னே
கங்கை இல்லை யமுனை இல்லை
ஆயிரமாயிரம் இலைகள் இருந்தும்
கடமை செய்ய தவறவில்லை
சருகாய் தானே போவோம் என்றே
ஓய்வுகொண்டு துயிலவில்லை
வாழும் காலம் அறிந்த பின்னும்
நரகம் என்று மருகவில்லை
வாடை காற்றின் கைகள் பற்றி
மண்ணில் தவழும் பேரிளம் பிள்ளை
அரிய பெரிய செயல் முடித்தோம்
அறியார் போல பிதற்றவில்லை
சிறிய செயலும் சீரிய செய்வோம்
கடமையில் தான் சோர்வதில்லை
வாழ்க்கை என்பது வட்டம் என்றே
வீழ்ந்தும் உரைக்கும் வம்சம் நீயே
ஞானம் பெற போதி வேண்டாம்
ஒவ்வொரு சருகும் ஞானபீடம் தானே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக