சனி, நவம்பர் 21, 2020

தேவதை வம்சம்

பத்மாவிற்கு, இரண்டு அக்கா, ஒரு தம்பி என்று சற்றே பெரிய குடும்பம். பத்மா பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கையில் அவளுடைய தாயார் உடல்நலக் குறைவால் மறைந்துவிட்டாள். மூத்தவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. பத்மாவையும் அவளுடைய தம்பியையும் வளர்க்க வேண்டும் என்று பத்மாவின் தந்தைக்கு அவருடைய உறவினர்கள் வற்புறுத்தி ஒரு பெண்ணை மணம் முடித்தனர். கிட்டதட்ட தன்னுடைய அக்காவை விட சிறிதளவே வயதில் மூத்தவளான மரகதத்தை பத்மாவுக்கு பிடிக்கவில்லை என்பதை சொல்லவா வேண்டும். கல்லூரிக்கு சென்று விட்டால் சித்தியுடன் இருக்கும் நாட்கள் குறையும் என்று நினைத்த பத்மாவின் நினைப்பில் மண் விழுந்தது.

அவளுக்கு வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு கல்லூரியிலேயே இடம் கிடைத்து, வேறு வழியின்றிஅங்கேயே சேர்ந்தாள். முதலாமாண்டு முழுவதும் காலேஜ், வீடு, சித்தியுடன் உரசல்-மோதல்,மீண்டும் காலேஜ் என்று பொழுது கழிந்தது. “எனக்கேன் ஹாஸ்டல் வாய்க்கவில்லை” என்று அவள் மருகாத நாளே இல்லை. பத்மாவின் தந்தை பிசினஸ், வேலை என்று எப்பொழுதும் பிசியாகவே இருப்பார்.அம்மாவும் இல்லாத நிலையில் அன்பிற்கு ஏங்கிய பத்மாவுக்கு கடவுள் அளித்த வரம் போல வந்தவன் பிரசாத். நல்ல கனிவான சிரிப்பும், அழகான தோற்றமும் கொண்ட பிரசாதிற்க்கும் அவளை பிடித்திருந்தது

பிரசாதும் அவள் கல்லூரியில் கம்ப்யூட்டர் பிரிவில் படிப்பவன் .முதலில் நோட்ஸ் வாங்குவது, காபி ஷாப் செல்வது என்று என்று தொடங்கிய நட்பு காதலாய் வளர்ந்தது. ஆனாலும் ஒருவொருக்கொருவர் தங்கள் காதலை தெரிவித்ததில்லை. கல்லூரி இறுதி நாளும் வந்தது.

“எனக்கு என்னவோ நீ சோகமா இருக்கா மாதிரி இருக்கு பத்மா" என்றான் பிரசாத்.

"ஹ்ம்ம், நானும் கவனிச்சேன் நீயும் அப்படிதான் இருக்கே. என்னை மிஸ் செய்வே தானே" என்றாள் அவளும் புன்முறுவலோடு.

"ஹே, நீ இப்படி கேட்பேன்னு தெரியும். நான் ரொம்ப மிஸ் பண்றது யாரைத் தெரியுமா?"

"யாரை?"

"நம்ம ஹெச்.ஓ.டி. மலர்விழியை தான்" என்றான் கண் அடித்தபடி.

"அப்ப நான் வேணா அவங்க கிட்ட உனக்கு பாஸ் போட வேண்டாம்னு சொல்றேன். நீ இங்க

இருந்து இன்னும் ஒரு வருஷம் படிச்சிட்டு வா" என்றாள் புன்முறுவலோடு.

"அடி கிரதாகி, நீ பண்ணாலும் பண்ணுவே. அப்படி எல்லாம் பண்ணிடாதே தாயே", என்று

போலியாக கையை கூப்பினான். “சரி, நான் மேலே படிக்க போறேன். நீ என்ன செய்ய போற?”

"நான் வீட்ல அப்பா பாக்கற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்க போறேன். வேற என்ன செய்யணும்னு நீ நெனைக்கற" என்றாள் முகம் வாடி.

"நீ நோ சொல்ற ஓக்கேவா?" என்றான் உறுதியாக.

"ஏன்னா, என்ன காரணம் சொல்லட்டும்", என்றாள் அவன் கண்ணை பார்த்து.

பிசாசு என்று அவன் அவள் கூந்தலை விளையாட்டாய் இழுக்க, இது தான் சாக்கு என்று அவளும் அவன் மேல் விழ, ஒன்றும் நடவாதது போல் அணைத்து பிடித்திருந்தவன், அவள் சுயநினைவு

வந்து விலகிய போது "என்னை தவிர வேற யாரையும் கல்யாணம் செய்யக்கூடாது" என்று அவள் காதில் கிசுகிசுத்தான்.

பத்மாவுக்கு உலகமே தன்னை சுற்றுவது போல தோன்றியது. இந்த சந்தோஷத்தை எப்படியேனும் தக்க வைக்க உலகத்தில் உள்ள எல்லா கடவுளையும் துணைக்கு அழைத்தாள். அவள் பிரார்த்தனை வீண் போகவில்லை.

இளநிலை முடித்த மறு நாளே முதுநிலை படிப்பிற்கு பத்மா அப்ளை செய்தாள். தெய்வாதீனமாக ஒரே கல்லூரியில் இருவருக்கும் இடம் கிடைத்து விட்டது. கடைசி செமஸ்டரும் வந்தது. ஒரு மழை நாளில் இருவரும் ஒன்றாக படம் பார்த்து விட்டு, பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும்

பிரசாதின் அறைக்கு வந்து சேர்ந்தார்கள். அந்த மழை இரவும், படிப்பு முடிய போகிறது என்ற பிரிவின் வாட்டமும் உணர்வால் இணைந்திருந்த அவர்களை உடலாலும் இணைந்தது.

அந்த இரவின் நிகழ்விற்கு பின் இருவரும் கவனமாகவே இருந்தார்கள். அவளை பொறுத்தவரை அந்த நாள் இனிமையான ஒன்று. ஆனால் திருமணத்திற்கு முன் இது போன்ற தடுமாற்றம்தேவையற்ற பிரச்சனைகளை கொடுக்கும் என்று அவளுக்கு நன்றாக தெரியும். பிரசாத்தும் அவளுடைய மனதை படித்தார் போல, அதன் பின் எதுவும் நிகழாமல் பார்த்துக் கொண்டான்.

அவன் கண்களில் அவ்வப்போது தோன்றி மறையும் ஏக்கத்தை பார்த்தும் பார்க்காதது போல பார்வையை தாழ்த்திக்கொள்வாள். பிரசாதும் "பிசாசு" அவள் செவிகளுக்கு எட்டாமல் சொல்லி நகர்ந்து போவான்.

இந்நிலையில் பத்மா கருவுற்றாள். பிரசாத்திற்கு தன்னுடைய குழந்தை என்ற நினைப்பு ஒரு புறம், வேலை இல்லாமல் குடும்பமா என்ற தவிப்பு ஒரு புறம், அவசர பட்டுவிட்டோமோ என்ற குற்ற உணர்வு ஒரு புறம் என்று கலங்கிப்போனான். எனினும் வேறு வழியின்றி அவள் கருக்கலைப்பு செய்த போது உடைந்து போனான்.

தேர்வு முடிந்த பின் பத்மா ஊருக்கு கிளம்பினாள்.

“பிரசாத், நான் பெங்களூரு போலாம்ன்னு இருக்கேன். அக்கா வீடு இருக்கு, அங்க இருந்து

வேலை தேட போறேன்”.

"சரி, நான் யுஸ்-ல வேலைக்கு ட்ரை பண்ண போறேன். பெங்களூருக்கு போன உடனே போன்பண்ணு, முடிஞ்சா மீட் பண்ணலாம்" என்றான்.

பத்மாவுக்கு கண்ணீர் கண்களை மறைத்தது. "முடிஞ்சா மீட் செய்யலாம்னு சொல்றானே" என்று பொருமினாள்.

பிரசாத் என்ன நினைக்கிறான் என்பதை அவளால் கணிக்க இயலவில்லை. ஒரு வேளை தன்னை கழட்டி விடுகிறானோ என்று சிறு சந்தேகம் கூட தோன்றி மறைந்தது அவளுக்கு.

அவளை வழியனுப்பி விட்டு "பிசாசு" என்று அவளை செல்லமாய் அவன் திட்டியதை,அவள் அறிந்திருக்கவில்லை.

வீட்டிற்கு வந்த ஓரிரு மாதங்களிலேயே அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் தொடங்கியது.அங்கே இருக்க பயந்தவள், கெஞ்சி அனுமதி பெற்று பெங்களூரில் இருந்த அக்கா வீட்டிற்கு சென்று வேலை தேட தொடங்கினாள். ஆனாலும் அங்கேயும் அவளுடைய அக்கா "இந்த வரனை பார். அந்த வரனை பார்" என்று நச்சரிக்கவே பிரசாதிற்கு போன் செய்தாள்.

"பிஸியா இருக்கேன் ஜாப் அப்ளிகேஷன் போடறதுல. நீ ஏதாவது பேசி சமாளிக்க கூடாதா" என்றான்.

"இன்னும் எத்தனை நாள் சமாளிக்கிறது. முடியல என்னால"

"ஓகே, அப்ப ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா”

அவளுக்கு அந்த பாதுகாப்பு தேவையாய் இருந்தது. ஆனாலும் ரகசிய திருமணம் முடியாது என்று மறுத்து விட்டாள். அவளிடம் பேசி பார்ப்பது என்று பெங்களூரு வரை போக திட்டமிட்டான்.

மரகதம், வறுமையை அறிந்தவள், வாழ்க்கையை படித்தவள். தன்னை விட வயதில் பல மடங்குமூத்தவரை திருமணம் புரிந்ததும் மனது கசந்தது அவளுக்கு. அந்த ஏமாற்றம் புது குடும்பத்திலும் சிலநேரத்தில் வெளிப்பட்டு இருக்கும் என்று அறிந்தே இருந்தாள். தாய் முகம் அறியா பிள்ளை கூட சித்தியிடம் ஒட்டுவது அரிது. அதுவும் வளர்ந்த பிள்ளைகளிடம் என்ன எதிர்பார்ப்பது. எனவே பத்மா அவளிடம் ஒட்டாதது அவளுக்கு வியப்பை தரவில்லை.

பத்மாவை அவளும் கவனித்தே வருகிறாள். பத்மா வரன் என்ற பேச்சை எடுத்தாலே வேலை,படிப்பு என்று வேறு ஒன்றின் பின் ஒளிவது அவளுக்கு சந்தேகத்தை தந்தது. பத்மாவின் நெருங்கிய

தோழி ஆஷாவிற்கு போன் செய்தாள்.

"ஆன்ட்டி, என்ன திடீர்னு" என்று விசாரித்த ஆஷாவை, இல்ல காலேஜ்லேர்ந்து ஏதோ டாக்குமெண்ட் வந்திருக்கு. அதை பெங்களூர்ல இருக்கற பத்மாவிற்கு கொடுத்து விடணும்.

உனக்கு தெரிஞ்சவங்க யாராவது போறாங்களா அங்க?

"எஸ், ஆன்ட்டி, பிரசாத் போறேன்னு சொன்னான்" என்று வாய் தவறி உளறியவள், ஏதோ சொல்லி சமாளித்து போனை கட் செய்தாள்.

ஹ்ம்ம், பிரசாத்தா, என்று மனதில் நினைத்தவள். இன்னொரு தோழியான சுமாவிற்கும் போன் செய்தாள். அவளிடம் "பிரசாத் நம்பர் இருக்கா. பத்மா கொடுத்தா நான் மிஸ் பண்ணிட்டேன்" என்றாள் அப்பாவியாக.

டாக்குமெண்ட்டை காரணம் காட்டி பிரசாதை வீட்டிற்கு அழைத்தாள் மரகதம்.

பிரசாத் அழகாய் லட்சணமாய் இருந்தான். பத்மாவுக்கு பிடித்திருந்தால் தவறில்லை என்று தோன்றியது.அவனுடைய குடும்ப பின்னணியை விசாரித்தவளுக்கு ஒன்று புரிந்தது. இருவரும் சம அந்தஸ்து இருந்தாலும் வேறு சமூகம் என்பதால் அவள் கணவரை சம்மதிக்க வைக்க காலஅவகாசம் தேவை என்று தோன்றியது.

 "என்னப்பா, கேர்ள் பிரண்ட் இருக்கா உனக்கு" என்றாள்.

"இல்லை ஆன்ட்டி"  என்றான். “டாக்குமெண்ட் கொடுங்க. கொஞ்சம் வேலை இருக்கு சீக்கிரம் போகணும்.”


"டாக்குமெண்ட் இந்த கவர்ல இருக்கு. கொடுத்திடுப்பா" என்றாள்.

“ஓகே” என்று அவன் கையை நீட்டும் போது தான் கவனித்தாள், பத்மாவுக்கு அணிய வாங்கி கொடுத்த காப்பு அவன் கையில் மின்னியது. அது எப்படி இவன் கையில் என்று தோன்ற 

"காப்பு நல்ல இருக்கே எங்கே வாங்கியது" என்றாள் அதே போன்று தன் கையில் இருந்ததை பார்த்தவாறே. சிறிது நேரம் அவள் பார்வையை தவிர்த்தவன் "ஆமாம் ஆன்ட்டி பத்மாவுடையது. நானும் பத்மாவும் காதலிக்கிறோம். எங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க என்று அவள் சொல்றதால தயங்கறேன். ஆனா அவள் இல்லாத வாழ்க்கையை நினைச்சு பாக்க முடியல. யு.எஸ்-ல வேலைதேடறேன். பத்மாவை பியான்ஸ் விசா-ல கூட்டி போக முடியும். இதுல நான் அவளைகண்டுக்கலைன்னு நெனச்சி என் மேல வேற கோவம். ஆனா ஏற்கனவே ஒரு கண்ணை இழந்திட்டு இன்னொரு கண்ணையும் இழக்க கூடாதுன்னு நான் தீவிரமா இருக்கேன்னு அவளுக்கு புரியாது" என்று பாதி சொல்லியும் பாதி சொல்லாமலும் நிறுத்தினான். ஏதோ புரிந்தவள் போல மெலிதாக தலையை அசைத்தாள் மரகதம்.

பிரசாத், “கிட்ட தட்ட பத்மாவின் அக்காவை விட ஒரு 5 அல்லது 6 வருடம் மூத்தவளாக இருப்பேன். என் மனத்தால் அந்த குழந்தைகளுக்கு என்றும் கெடுதல் நினைத்ததே இல்லை. ஆனால் பத்மா என்னை மனதால் ஏற்றதில்லை என்பது எனக்கு தெரியும். சித்தியை ஒத்துக்கொண்டால் அம்மா என்பவள் இல்லை என்ற உண்மையை ஏற்க வேண்டும். ஆனால் அதை ஏற்கும் துணிவு அவளுக்கு இல்லை என்பதே என்னுடைய அனுமானம். ஆனால் என்றாவது

ஒரு நாள் என் மனம் அவளுக்கு புரியும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன். கனவுகளை சில நேரம் மாற்றி அமைக்கலாம், பத்மாவும் அவள் தம்பி இருவருக்காகவும் என் கனவுகளை துளிர்க்க விட்டதில்லை. அவள் கண்களில் இருந்து ஒரு கண்ணீர் துளி அவளின் வைராக்கியத்தை மீறி கன்னங்களில் வழிந்தது. நான் உனக்கு எந்த விதத்தில் உதவ முடியும் என்று சொல்லு” என்றாள் மரகதம்.

எப்பொழுதெல்லாம் பத்மாவின் கல்யாண பேச்சு தொடங்குமோ அப்பொழுதெல்லாம் மரகதத்திற்கு

ஏதேனும் ஒரு உடல் உபாதை முளைத்தது. உடல் நலனை காரணம் காட்டி கல்யாணவேலைகளை யார் செய்வது என்று கூறி கிட்டத்தட்ட இரண்டு வருடம் வரை பத்மாவின் திருமணத்தை தள்ளிப் போட்டாள். உறவினர்களின் பழி சொல்லுக்கு ஆட்பட்டாள். அதற்குள் பத்மாவும், பிரசாதும் வேலை வாங்கிக் கொண்டு யு.ஸ் சென்று விட்டார்கள். கல்யாணம் தள்ளி போகுது, எங்க சொந்தகார பையன் இவன், இதையாவது ஓகே பண்ணுங்க என்று பிரசாதின் போட்டோவை காட்டி தன்னுடைய கணவனையும் ஒருவாறு சம்மதிக்க வைத்தாள்.

திருமணத்திற்கு அமெரிக்காவில் இருந்து பறந்து வந்த பத்மா, மனதார அம்மா என்று அழைத்து மகிழ்ந்தாள். பெண்கள் தேவதை ஆவதும், சூனியக்காரி ஆவதும் அவளை சமூகம் இட்டு அழைக்கும் பெயரை பொறுத்தது இல்லை, அப்பெண்ணின் கனவுகளை மதித்து கௌரவிப்பதில் இருக்கிறது. ஒரு தாய்க்கு பெறாமலேயே தேவதையாய் மகளும், மகளுக்கு வாழவைத்த தெய்வமாய், ஒரு தாயும் கிடைத்திருந்தார்கள்.


3 கருத்துகள்:

  1. கதை நன்றாக இருக்கிறது ரம்யா. முடிவு வரிகள் சிறப்பு. இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் கதை இன்னும் மிளிரும்... அழகூட்டலாம். அடுத்த கதையை இன்னும் அழகாக எழுத வேண்டும் நீங்கள். உங்களால் கண்டிபாக முடியும். பல திறமைகள் உங்களிடம் இருக்கிறது. இன்னும் அழகான பல கதைகள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.

    வாழ்த்துகள்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. கதை நன்றாக இருக்கிறது ரம்யா. முடிவு வரிகள் சிறப்பு. இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் கதை இன்னும் மிளிரும்... அழகூட்டலாம். அடுத்த கதையை இன்னும் அழகாக எழுத வேண்டும் நீங்கள். உங்களால் கண்டிபாக முடியும். பல திறமைகள் உங்களிடம் இருக்கிறது. இன்னும் அழகான பல கதைகள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.

    வாழ்த்துகள்

    கீதா

    பதிலளிநீக்கு
  3. நன்றி கீதா. உங்கள் விரிவான விமர்சனம் மேலும் பல நல்ல கதைகள் எழுத வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது. நீங்கள் சொன்னது போல இந்த கதையை மேலும் மெருகேற்றி நன்கு எழுத முடியும். முயற்சி செய்கிறேன்.

    பதிலளிநீக்கு