புதன், ஏப்ரல் 29, 2020

அன்றாட வாழ்வில் நகைச்சுவை


வாழ்க்கை என்பதை "என்ன படிக்கற? என்ன வேலை? கல்யாணம் ஆயிடுச்சா? எத்தனை குழந்தைங்க? ரிட்டையர் ஆயாச்சா? போய்ட்டாரா?  என்ற ஒரு சில கேள்விகளில் அடக்கிவிடலாம். சாமானிய வாழ்க்கை வாழவே இங்க நொந்து நூடுல்ஸ் ஆக வேண்டி இருக்கு. சரித்திரம் படைக்கறதெல்லாம் வெறும் கனவு தான். சாமானிய வாழ்க்கைனா பெரும்பாலும் ஒரு இரண்டாம் தரக் காலேஜில் இன்ஜினியரிங் படிச்சி, ஏதோ விசா கிடைச்சா போதும்னு அமெரிக்காவோ ஆஸ்திரேலியாவோ வந்து புரியாத ஒரு மேற்படிப்பை படிச்சி ஒப்பேத்தி, ஒரு வேலை நமக்கு பிடிக்கிதோ இல்லையோ கிரீன் கார்டு ஸ்பொன்சர் பண்ணுவாங்கன்னு அதை வாங்கி, வீட்ல பார்க்கிற வரனுக்கு தலை ஆட்டி, குழந்தைகளை பெற்று வளர்த்து, புரியாத ஜாவா எல்லாம் படிச்சி, டொக்கு டொக்குனு ஒரு சில ப்ரோக்ராமை கம்ப்யூட்டர்ல தட்டி, ட்விட்டர்ல நாலு கருத்து சொல்லி, டிக் டாக்ல ரெண்டு சிரிப்பு சீனை பார்த்து, எப்பவுமே போனும் கையுமாவா இருக்கீங்கன்னு நம்ம குழந்தைகளை போன் போட்டு திட்டி வாழறது தான் சாமானிய வாழ்க்கை.   

ஒரு பாடி பில்டர் எப்படி சாம்பார் வாளியை பிடித்து தூக்கி கொண்டு வருவது போல கையை வைத்து கொண்டு வருவாரே, அதே போலவே கண்ணுக்கு தெரிஞ்ச பல அலங்காரங்களும், கண்ணுக்கு தெரியாத பல அழுகைகளும் நிறைஞ்சதே சாமானிய வாழ்க்கை. முதல்ல நம்ம துணையவே எடுத்துக்குவோம். எல்லாருக்கும் கடவுள் வெறும் துணையை மட்டுமே செலக்ட் பண்ற ஒரே ஒரு பொறுப்பை தான் கொடுத்திருக்கார் என்பதே அவரின் பெருங்கருணை. ஒரு வேளை அம்மா, அப்பா, தம்பி, தங்கை, சொந்த பந்தங்களை செலக்ட் பண்ற பொறுப்பை கொடுத்திருந்த இந்த குடும்ப நல கோர்ட் எல்லாம் எவ்ளோ பிசியா இருக்கும்னு யோசிச்சு பார்த்தா கூட தலை சுத்துது. நாம துணையிடம் என்ன தகுதி, பொருத்தம் எல்லாம் இருக்கணும்னு எதிர் பார்க்கிறோமோ அதை எல்லாம் ஒரு தாள்ல எழுதி கிழிச்சி போட்டுடனும், அதோட நிறுத்திடாம அந்த கிழிந்த தாள்களை நெருப்புல பொசுக்கணும். அந்த சாம்பலை தண்ணீர்ல கலக்கணும். அந்த தண்ணீரை பாலைவனத்துல போய் ஊத்திடனும் ஏன்னா "எது கிடைக்கணுமோ அது கிடைக்காம போகாதுன்னு, எது கிடைக்க கூடாதோ அது கிடைக்காது" அப்படின்னு ஒரு மகான் சொன்ன மாதிரி பிரச்சனை இல்லாத பிக்கல் பிடுங்கல் இல்லாத இடம் வேணும்னு நினைச்சா கண்டிப்பா பயங்கர பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை துணையை தான் கடவுள் கொடுப்பார். அன்பான, அனுசரனையான துணை வேணும்னா நீங்க நினைச்சா கண்டிப்பா நீங்க யூகிச்சிருப்பிங்க அதற்கு நேர்மறையான ஆளை தான் கண்டிப்பா உங்களுக்குன்னு ஸ்பெஷலா அனுப்பி  வைப்பர். கடவுள் ஒரு துரித உணவகத்தில் பணிபுரியும் சர்வர் மாதிரி. நாம பரோட்டா-ன்னு சொன்ன  அவருக்கு போண்டா-ன்னு காதுல விழும். நாம  "இட்லின்னா, என்னது சட்னியா கேக்கறன்னு" சட்டி நிறைய கொடுத்து அனுப்புவான். ஏன்னா சாமானியன் வாழ்க்கை டிசைன் அப்படி.

சரி துணை அமைஞ்சது அமைஞ்சிடுச்சு எப்படியாவது சரிக்கட்டி வாழ்க்கை என்னும் வண்டியை  ஓட்டுவோம்னு பார்த்தா அதுவும் பொருத்தம் இல்லாத இரட்டை வண்டி சவாரி மாதிரி தான் போகும் - நாம ஒரு திசையிலே போகணும்னு நினைக்கும் போது அது வேற ஒரு திசையிலே நம்மள கூட்டிகிட்டு போயிடும். உதாரணமா நாம சண்டை போடறோம்னு வெச்சுக்கோங்க அவங்களும் திருப்பி சண்டை போட்டு, பத்து வருஷம் முன்னாடி ஒரு மே மாசம் போட்ட சண்டையில நாம அவங்களை என்ன சொன்னோம்னு ஞாபகம் வெச்சி அதை சொல்லி காமிச்சு மறுபடியும் அதே விஷயத்துக்காக கோல்டன் ஜூப்லி கண்ட படம் மாதிரி நூறாவது முறையா கோவிச்சிக்கிட்டு பேசாம இருக்கறது ஒரு ரகம்னா, அமைதியா இருந்துட்டு அடுத்த ஒரு வாரம் இரவு உணவுக்கு உப்புமா மட்டும் சமைச்சி போட்டு, ஏதாவது ஒரு பெரிய செலவை நம்ம கிரெடிட் கார்ட்ல இழுத்து விட்டு  அமைதியா அகிம்சை முறையில போராடி நம்மள அவங்க வழிக்கே கொண்டு வரது வேறு ரகம். என்ன, அஹிம்சை முறையில் நமக்கு எப்பவுமே அடி ரொம்ப ஜாஸ்தியா இருக்கும். சண்டையில கிழியாத சட்டை ஏதுன்னு வடிவேலு எக்ஸ்பிரசனை கொடுத்து கடைசிலே மதபோதகர்கள் உணர்த்தாத சரணாகதி தத்துவத்தை உணர்ந்து சரண்டர் ஆகறதை தவிர வேறு வழி எதுவும் இல்ல.

சரி "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" அப்படின்னு கண்ணதாசன் வரிகளை நினைச்சு மனசை தேத்திகிட்டு நாம அடுத்து அதிக நேரம் பார்க்கற பழகற ஆபிஸ் மனைவி அதாங்க நம்ம மேனேஜர் எப்படி பட்ட ஆளுன்னு பார்த்தா, மனைவியவே நமக்குன்னு செஞ்சி அனுப்புன கடவுள் இது தான் நல்ல வாய்ப்புன்னு ஏடாகூடமான வில்லத்தனமான மேனேஜரை கொடுத்து நம்மள வெச்சு  செய்வாரு. நாம வருஷ இறுதியில் நம்ம மானேஜர் எதிர் பார்க்கும் டார்கெட்டை அடைந்தாலும்  "இந்த வருஷம் நம்ம பிசினஸ் கொஞ்சம் வீக்கா இருந்ததால இந்த வருஷம் எல்லா டிபார்ட்மெண்ட்லேயும் போனஸ், இன்க்ரீமெண்ட் எல்லாம் கம்மி பண்ணிட்டாங்க அதனால உங்களுக்கு இந்த வருஷம் இன்க்ரீமெண்ட் இல்லை போனசும் போன வருஷத்தோட ரொம்ப கம்மி" அப்படின்னு நோ பால் போடுவார். ஒருவேளை பிசினஸ் நல்லா போனாலும்  இந்த வருஷம் நீங்க கொடுத்த வேலைகளை பண்ணீங்க. ஆனா நீங்களே சுயமா எந்த முயற்சியும் எடுத்து தனிச்சு உங்களுக்குன்னு ஒரு அடையாளத்தை நிறுவலை. ஆனா ஏதோ உங்களுக்காக பேசி போனசும் இன்க்ரீமெண்ட்டும் கொடுத்திருக்கேன்னு பந்தா விடுவார். சரி ஏதோ பெரிசா பண்ணிருப்பாருன்னு ரெண்டையும் கூட்டி கழிச்சு பார்த்தாலும் போன வருஷம் கொடுத்த அதே அளவு பணமே தான் வந்திருக்கும். எப்படி, ஒரு கயித்தில, கேரட்டை கட்டி அதை காட்டி காட்டி  ஒரு முயலை ஓட வைப்போமோ, அதை போலவே உங்களுக்கு கண்டிப்பா அடுத்த வருஷம் ப்ரமோஷன் இருக்குன்னு சொல்லி சொல்லியே வேலை வாங்கறது,  இந்த வார இறுதியில்  உங்களுக்கு வேலை இருக்கு, எங்கேயும் போய்டாதீங்க அப்படின்னு நாம குடும்பத்தோட ஊருக்கு போக பிளான் செய்திருக்கிற வார இறுதியில்  திடீர்னு வேலையை சொல்றது, நாம வீட்லேர்ந்து வேலை செஞ்சா என்ன காலை 10:15 லேர்ந்து 10:20 வரைக்கும் உன்னை ஆன்லைன்ல காணோம், இனிமேல் வீட்லேருந்து வேலை எல்லாம் செய்ய பர்மிசன் இல்ல அப்படின்னு  சொல்லி படுத்தறதுன்னு பல விதமான டார்ச்சர் டெக்னிக்கை  கையிலேயே வெச்சிட்டு சுத்தற ஆளு தான் நமக்குன்னு வாய்க்கற மானேஜர்.

அப்படிப்பட்ட தயாள உள்ளம் கொண்ட நம்ம மானேஜருக்கு, அவரு என்ன சொன்னாலும், செய்தாலும் "சார் எங்கேயோ போயிட்டீங்க சார், உங்க ஓவ்வொரு செய்கையிலும் ஒரு உள்ளர்த்தம் இருக்கு சார்" அப்படின்னு அபூர்வ சகோதரர்கள் படத்துல ஜனகராஜ் கூடவே வர ஆர்.எஸ். சிவாஜி மாதிரி, நம்ம மானேஜர் கூடவே வந்து அவரோட வலது கையா செயல்படற நம்ம டீம் மெட்டை சமாளிப்பதும், ஒரு நல்ல பாம்போட குடும்பம் நடத்தறதும்   ஒண்ணுதான். சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத மாதிரி, நாம ஒரு ஐடியா சொன்னாலும் அதுல சொத்தை சொள்ளை  சொல்லி குற்றம் கண்டுபிடித்த பேர் வாங்கும் நக்கீரப் பரம்பரையை சேர்ந்த நம்ம டீம்மெட், எனக்கு ஒரு கண்ணு போனாலும் உனக்கு ரெண்டு கண்ணும் போகணும்னு நெனைக்கற தாராள மனசுக்கு சொந்தக்காரர். இந்த பிக்கல் பிடுங்கலை எல்லாம் சமாளிச்சு சமாளிச்சு நமக்கு வர பக்குவம் இருக்கே இது போதி மரத்துக்கு அடியிலே கூட நமக்கு கிடைக்க பெறாத ஞானம்.

சரி, வீடு, ஆபிஸ் விட்டுட்டு நம்ம நண்பர்கள் எப்படின்னு பார்த்தா, அந்த உறவும் ஒரு இடியாப்ப சிக்கல் தான். சரி, நாம யாரோடவாவது கொஞ்சம் க்ளோசா பழகினா, மற்ற நண்பர்கள் கோபித்து கொள்வார்கள். அந்த அளவுக்கு மன முதிர்ச்சி இல்லாத நண்பர்களை ஏன் வெச்சிக்கறிங்கன்னு கேக்கறவங்களுக்கு ஒண்ணே ஒண்ணு தான் சொல்ல முடியும் "நட்பை கூட கற்பை போல எண்ணுவேன்" அப்படின்னு படத்துல வேணா பாட்டு பாடலாம். ஆனா நிஜத்துல நண்பர்களுடன் பழகுதல் என்பது "கம்பி மேலே நடப்பது மாதிரி. கரணம் தப்பினா கலகம் தான்". சரி, யாரோடயும் நெருங்கி  பழகலைன்னாலும் நீங்க ரொம்ப சீரியஸ் டைப் அப்படின்னு முகத்துக்கு நேரே அடிச்சி விடற ஆட்கள் உண்டு. குத்துமதிப்பா  என்ன சொல்றாங்கன்னா நீங்க பெரிய "முசுடு" அப்படிங்கறதை தான். சரி, நாம எல்லாரோடையும் சகஜமா இருப்போம்ன்னா தேவை இல்லாத அட்வைஸ் எல்லாம் நமக்கு சொல்லி நம்ம காது புண் ஆகறது எல்லாம் கண்டிப்பா நடக்கும். ஒத்த அலைவரிசை உள்ள நண்பர்கள் கிடைப்பதெல்லாம் வரம்.  "முகநக நட்பதே நட்பு" என்ற அளவில் வெறும் வாய் ஜாலம், புகழ்ச்சி, வார்த்தை அலங்காரம் என்பதோடு ஐசியூ-வில் உள்ள கோமா பேஷண்ட் மாதிரி இருந்தும் இல்லாமல் இருப்பதே நட்பு என்று ஆகியுள்ளது. இதில் நகைச்சுவை என்பது இன்றளவில் கேளிக்கை, பண்டிகை கொண்டாட்டம், பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற அளவில் நின்று விட்டது.

சிறு வயதில் உறவுகளின் இடையே நிகழ்ந்த நகைச்சுவை நிகழ்வுகளுக்கு பஞ்சமே இல்லை. பெரும்பாலும் அந்த வயதில் ஏற்பட்ட நகைச்சுவை அனுபவங்கள் பசுமரத்து ஆணி போல மனதில் பதிவதால் அவை நினைத்து நினைத்து மீண்டும் ரசிக்கும் அனுபவத்தை தருகின்றது.

கேள்வி
குளிர்ந்த நீர் தானே ஏன்
வேர்கிறது பாட்டிலுக்கு

இந்த ஹைகூவை எழுதியது என் தங்கை. அவள் இதை ஒரு சிறிய தாளில் எழுதிய பின், அந்த கவிதையை படிப்பதற்காக என் தந்தையாரிடம் நீட்டினாள். கவிதை என்றால் யார் எழுதியது என்று முதலில் பார்ப்பது இயல்பு தானே. அவரும் கடைசி வரியை படித்துவிட்டு "ஓ, யாரோ டிலுக்கு என்பவர் எழுதியதா இந்த கவிதை" என்றிருக்கிறார். ஏனென்றால் இடப் பற்றாக்குறை காரணமாக பாட்டிலுக்கு என்ற வார்த்தையில் "பாட்" என்பதை மேல்வரியிலும் "டிலுக்கு" என்பதை கீழ்வரியிழும் எழுதி இருந்தாள். டிலுக்கு என்பது கவிஞரின் பெயர் என்று தந்தை நினைத்ததால் வந்த குழப்பம். அவளை அது முதல் கவிஞர் டிலுக்கு என்று அன்புடன் அழைத்து மகிழ்ந்தோம் என்பது தனிக் கதை. ஒரு முறை சேட்டை செய்த  எனது 4 வயது தம்பியை பார்த்து என் தாயார், நீ இன்னும் ஏதாவது சேட்டை செய்தால் மறுபடியும் பள்ளியில் கொண்டு சென்று விட்டுவிடுவேன் என்று மிரட்டினார். எல்.கே.ஜி. வகுப்புகள் அப்பொழுதெல்லாம் அரை நாள் மட்டுமே நடக்கும். அரை நாள் பள்ளி முடித்து வீட்டுக்கு வந்திருந்த அவன் வழக்கம் போல் ஏதோ சேட்டை செய்து கொண்டிருந்தான். இதை கேட்டுக் கொண்டிருந்த என் தங்கை சிறிது நேரம் கழித்து அவன் மேலும் ஏதோ ஒரு சேட்டை செய்யவே என் தாயார் சொன்னதை மனதில் வைத்து யூனிபார்ம் கூட அணிவிக்காமல் அப்படியே வீட்டில் அணிந்திருந்த உடையுடன் அவனை நடந்தே செல்ல கூடிய அளவு வீட்டிற்கு அருகிலேயே  உள்ள பள்ளிக்கூடத்தில் கொண்டு சென்று  விட்டு விட்டு வந்து விட்டாள். சிறிது நேரம் கழித்து வீட்டு வேலைகளை முடித்து விட்டு வந்த என் தாயார்,  "எங்கே உனது தம்பி?" என்று என் தங்கையிடம் கேட்கும் போது அவள் "அவனை நீ கூறியது போல பள்ளியில் விட்டுவிட்டு வந்து விட்டேன்" என்று கூறினாள். அனைவரும் அடித்து பிடித்து பள்ளியை அடைந்து  அவன் வகுப்பிற்கு சென்று அவனையும் அவனை விட மிகவும் குழப்பத்தில் இருந்த அவனுடைய ஆசிரியையும்  கண்டு, விஷயத்தை கூறிய பிறகே ஆசிரியர் நிம்மதி அடைந்தார். இன்று தம்பி பெரிய வேலையில் இருந்தாலும் வெறும் பனியன் மற்றும் கால்சட்டை  மட்டுமே  அணிந்து அவன் பள்ளி சென்ற கோலத்தை இப்போதும் அவனுடைய ஆசிரியை நினைவு கூர்ந்து  சிரிப்பலையில் ஆழ்வது வழக்கம்.

இன்று இருக்கும் வாழ்க்கை சூழலில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம். பிள்ளைகள் என்றால் பெரும்பாலான வீடுகளில்  ஒன்றுடனோ அல்லது இரண்டு குழந்தைகளுடனோ நிறுத்தி விடுவது வாடிக்கை. அந்த குழந்தைகளும் மொபைல், டிவி, எலெக்ட்ரானிக்ஸ் என்று பல்வேறு தொழில்நுட்ப சாதனைகளுக்கு தத்துக் கொடுக்கப்பட்டு நாட்கள் பலவாகிறது. வெளிநாடுகளில் வாழும் பதின்பருவ குழந்தைகள் தாய் தந்தையருக்கு பெரும்பாலும் ஹாய் ஹலோ  சொல்வதையே இன்று பெரியதாக எண்ண வேண்டியதாய் இருக்கிறது. அப்படி ஒரு வேளை அவர்கள் நம்மிடம் முகம் கொடுத்து பேசினார்கள் என்றால் விலையுர்ந்த பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் என்று ஏதேனும் கோரிக்கை இல்லாமல் போகாது. சிறு குழந்தைகள் என்றால்  அவர்களை பியானோ கிளாஸ், பாட்டு கிளாஸ், நடனம், ஓவியம், தமிழ் வகுப்பு என்ற பல வகுப்புகளுக்கு அழைத்து சென்று பெரும்பாலும் நாளைய வாழ்க்கையை பற்றிய பயத்துடனே  நமது குழந்தைகளை வளர்த்து வருகிறோம்.ஆனா இந்த காலத்து குழந்தைகள் பயங்கர ஸ்மார்ட். நான் என் பொண்ணு கிட்ட "நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போனாதான் நிறைய பணம் சம்பாரிச்சு நல்லா சந்தோஷமா இருக்க முடியும்னு" தெரியாம ஒரு அறிவுரை சொன்னேன். உடனே என் பொண்ணு "இப்பவே நான் சந்தோஷமா தான் இருக்கேன். கஷ்டப்படாம இப்பவே கிடைக்கிறதை ஏன் கஷ்டப்பட்டு  வாங்கணும்னுகிறேன்னு" என்னையே மடக்கிட்டா.  

ஆபிஸ்லயும் டம்மி பீஸ் என்று பெயர் வாங்கி, வீட்லயும் ஒண்ணும் தெரியாதவங்கன்னு பெயர் எல்லாம் வாங்க வேண்டாம், நாம என்ன தான் உலக வங்கியோட சேர்மனா இருந்தாலும் நமக்கு அது நான் வீட்டுக்குள்ள பேரு. வெளியூர்ல இருக்கறதால உறவு என்பதை விட நட்பு என்பது தான் அதிகம் சாத்தியம் ஆகிறது. ஆனா நட்பு என்பதும் பெரும்பாலும் மேம்போக்காகவே அமைகிறது. ஒத்த அலைவரிசை உள்ள ஆட்களின் சந்திப்பு என்பது அத்தி பூத்தார் போல எப்பொழுதேனும் நிகழ்கிறது. ஆனாலும் தூரம், நட்பு வட்டம் என்பதை பொறுத்து அந்த உறவும் தொடரமுடிவதில்லை பெரும்பாலும். 

அப்போ ஒரு தனி மனுஷன் சந்தோஷமா இருப்பது வெறும் தூங்கு போது மட்டும் தானா என்றால் கண்ணதாசனின் இந்த பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.  

கண்ணை விழித்திந்தக்
காசினியைப் பார்க்குங்கால்
என்ன துயர்வருமோ
எங்கெங்கே அடிவிழுமோ
காதல் வருமோ
காதலுக்குத் தடைவருமோ
மோதல் வருமோ
முறைகெடுவார் துணைவருமோ?
நன்றியிலா நண்பர்கள்தாம்
நாற்புறமும் சூழ்வாரோ
நலமிழந்த பெண்ணொருத்தி
நாயகியாய் வருவாளோ
செய்யத் தொழில்வருமோ
திண்டாட்டந்தான் வருமோ
வெய்யில் அழைத்துவரும்
வியர்வையிலே நீராடி
"ஐயா பசி" என்
றலைகின்ற நிலைவருமோ?
என்ன வருமென்று
இப்போது யாரறிவார்
அவனை எழுப்பாதீர்
அப்படியே தூங்கட்டும் !

ஒரு மொட்டு மலர்வது எவ்வளவு இயற்கையானதோ, அதை போலவே  தினமும் நகைச்சுவை என்ற தென்றல் நம்மை தொட்டுச் செல்லும். அதை இனம் கண்டு அனுபவிக்கும் பழக்கத்தை மட்டுமே நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். முதலில் நம்மை நாமே குடும்ப தலைவன் அல்லது தலைவி  அல்லது அலுவலகத்தில் இந்த பதவியில் இருப்பவர் என்று சீரியஸான ஒரு வட்டத்தில் நிறுத்தி பார்க்கும் வழக்கத்தை விட வேண்டும். வாழ்க்கை பயணம் இலகுவாக, நாணல் போன்ற குழைவு வேண்டும் ஒருவர் மனதில். அந்த குழைவை ஒரு சிறிய நகைச்சுவை துணுக்கோ அல்லது ஒரு அனுபவமோ தர முடியும்.  அஞ்சு ரூபா பெறாத ஐடியா எல்லாம் நம்ம மேனேஜருக்கு தோணும் போது, "செம ஐடியா சார், இதை நம்ம டீம் மெட், (அதாங்க நம்மை சிக்கலில் மாட்டி வைக்கும் அன்பான டீம்மேட்)  அழகா செஞ்சு தருவாருன்னு. எனக்கெல்லாம் கூட அந்த அளவுக்கு செய்ய வராது" என்று அவருக்கும் வேலையை இழுத்து விட்டால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்தார் போல அசுர வெற்றி. "சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு" என்று பின்னணி இசை அன்று முழுவதும் நமது காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்பது  சர்வ நிச்சயம்.  மனைவி சமைத்த உப்புமாவை ரசித்து சாப்பிட்டு விட்டு "எங்க அம்மாவை அல்லது சமையல் தெரிந்த ஆளை கொஞ்ச நாள்  வர சொல்லேன். இந்த அழகான உப்புமா செய்தே சிவந்த கைகள் கொஞ்ச நாள் ஒய்வு எடுக்கட்டும். எத்தனை வேலைகளை நீயே இழுத்து போட்டுச் செய்வாய்" என்று நேர்த்தியாய் பேசுபவர்- வாழ்க்கையையும், உப்புமா சாப்பிட்டதால் செத்து போன நாக்கையும் ஒரே நேரத்தில் தூக்கி நிறுத்தும் வித்தையை அறிந்தவர். அவர் ஒரு நாளும் சோர்ந்த முகத்தோடு உறங்கச்  செல்வதில்லை என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம். பத்தாவது திருமண நாள் கொண்டாட்டத்திற்கு அழைக்கும்  நண்பரிடம்  உனக்குன்னு ஒரு கஷ்டம் வந்தா அதில் பங்கேற்க நான் வரமாட்டேன்னா என்ன? என்று இருவர் மனைவியும் அருகில் இல்லாமல் இருக்கும் வேளையில் தனியாக அவரிடம் சொல்லி நட்புக்கு  நீரூற்றும் சாமர்த்தியம் உள்ளவன் எப்போதும் நட்பு வட்டத்தில் பெரிதும் விரும்பப்படுகிறவனாகவே இருப்பான். விலையுயர்ந்த பொருளை வேண்டும் என்று கேட்டு அழுது அடம் பிடிக்கும் குழந்தைகளை "பால் நிலவின் முகமும், திராட்சை கண்களும், ஆரஞ்சு உதடும், செர்ரி கன்னங்களும் கொண்ட பழமுதிர்ச்சோலைக்கு ஏன் ஆப்பிள் வாட்ச்" என்று அடுக்கு மொழி வசனம் பேசி அசத்தலாம். இந்த வார்த்தைகள் கை கொடுக்கவில்லையென்றால் எப்படியேனும் பேரம் பேசி குறைந்த விலையில் வேறு ஒரு வாட்சை வாங்கிக் கொடுத்து அவர்களின் மனதில் பல்லாலதேவனை வென்ற பாகுபலி போல  சிம்மாசனமிட்டு அமரலாம். பர்ஸிலும் கனம் குறையாது. (பின் குறிப்பு:  இங்கே கொடுத்துள்ள யோசனைகளை எசகு பிசகாக செயற்படுத்தி மேலும் சிக்கலில் மாட்டுபவர் யாருக்கும் கம்பெனி பொறுப்பேற்காது)

இறுதியாக சொல்லவது என்னன்னா, அன்றாட வாழ்வில், வரவும் செலவும் போல,  துன்பம் இன்பம் என்பது கலந்தே வரும். பாலை மட்டும் உண்டு நீரை விடும் அன்னம் போல, பல்வேறு சூழலிலும் தன்னை தானே மகிழ்ச்சியுடனும், எந்த துன்பம் வந்தாலும், தன்னம்பிக்கையுடன் அணுகுபவன், வாழ்க்கை பாதையை ரோஜாக்கள் செறிந்த மலர் பாதையாய் மாற்றும் திறன் பெற்றவன். இந்த வாய்ஜாலம்/பேச்சு திறன் எல்லாம் எனக்கு இல்லாமல் தானே இந்த மாதிரி தவிக்கிறேன் என்று அங்கலாய்ப்பவர் அனைவருக்கும் சொல்வது இது தான் இவரு சரியான "டம்மி பீசு" என்று அறியப்படுவதை விட இவரு சரியான "காமெடி பீசு" என்று அறியப்படுவது மேல். இவரு சரியான "காமெடி பீசு" என்று அறியப்படுதலை விட  இவரு "காமெடில பாஸ்" என்று அறியப்படுதல் மேலும் சிறப்பு. 

(இது தமிழ்ச்சரம் நடத்தும் கட்டுரை போட்டிக்காக புதியதாக எழுதப்பட்ட கட்டுரை. வலைத்தளம், அச்சு ஊடகம் உள்ளிட்ட எதிலும் இதற்கு முன்பு பிரசுரம் ஆகாத கட்டுரை)

#tccontest2020

செவ்வாய், ஏப்ரல் 21, 2020

காலம்

தேவைப்படும் போது குறைந்தும் தேவையற்ற போது நீண்டும் ஞாபக கற்றைகளில் உறைந்தும் துன்பம் நேருகையில் தொலைந்தும் சோதனைகளில் போது நொந்தும் சாதனைகளின் போது வென்றும் தினமும் நொடிகளாய் கரைந்தும் யாருக்கோ சுழன்று கொண்டிருக்கிறது காலம்

பொட்டல் மரம்

ஆடை தொலைத்த முனியோ வளி களைத்த பேரோவியமோ உணவொதிக்கி இளைத்த மாதோ பூமித்தாயின் மாற்றாள் பிள்ளையோ கவசம் தொலைத்த கர்ணனோ கீழிருக்கும் வேரின் பிரதியோ காதல் தோல்வியுற்று உயிர்நீந்த கவரிமானோ புறம் பேசுகின்றன ஏனைய மரங்கள் சீதைகளும் தீக்குளித்தலும் என்றுமே பழசாவது இல்லை.

Image

சனி, ஏப்ரல் 18, 2020

நிலவுக் கவிதைகள்


நிலவை பற்றி கவிதை எழுதாமல் போனால் என் தமிழ் என்னை கோபித்துக் கொள்ளும்.

இதோ அழகிய நிலவுப் புகைப்படங்களுடன் இனிய நிலவுக் கவிதைகள்








தூத்துக்குடி கவிதைகள்

தூத்துக்குடி நச்சு ஆலை ஸ்டெரிலைட்டுக்கு எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய கவிதைகள்:

கவிதை #1 


கவிதை #2


கண்ணீர் கவிதை


தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய கவிதை

ஆலையை மூடு, அமிலக் காற்றை சற்றே அணை

போபால் போல வேண்டாம், மீண்டும் ஒரு  வரலாற்று பிழை 

இருபது ஆண்டாய் வேண்டிக்கேட்டோம் நிலம், நீர், மாசற்ற வளி

ஆலகால நஞ்சை கக்கும் விட அரவிற்க்கோர் முற்றுப்புள்ளி      



வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு

தூத்துக்குடி மக்களுக்கு இஃதொரு இடுகாடு

பூக்களின் பேரணியை ஒடுக்க - கொணர்ந்தனர்

குலவேரறுக்கும் கோடரி ஒன்று 



முதலாளிவர்க்கம் மகிழ, தேர்தல் நிதி எனும் கடன்சுமை தீர்க்க

அஞ்சா பாதகம் செய்தனர் ஆட்சியை தக்க வைக்க 

துப்பாக்கியால் சுட்டு தாக்கு,  மரண பயம் உண்டாக்கு

லத்தியை சுழற்றி தாக்கு, பிஞ்ஜென்றாலும் பொடிப்பொடி யாக்கு  



ஆட்சியாளர் ஏவல் செய்ய காக்கிச்சட்டை போட்ட படை  

நம் நண்பனல்ல துரோகி என்றே இதயமின்றி செய்த கொலை  

காவலன் அல்ல காலன் என்றே ஊர்திதனின் மேலமர்ந்து

கொத்துக் கொத்தாய்  சுட்டுக்குவித்தனர் காக்கும் கடமைதனை மறந்து



பேச்சிலே சிறந்த மங்கை வெனிஸ்டா என்றொரு நங்கை

வக்கீலாகி நீதி வெல்ல காலனிடம் காலம் கேட்டாள்

சொகுசான வாழ்க்கை அல்ல வாழ்வாதாரம் தானே கேட்டாள்

கொடும் நஞ்சை அவள்வாயிலூட்ட விண்ணுலகம் பறந்தே போனாள்



புதுமண மாலை கூட காய்ந்து சருகாகவில்லை

மணிராஜ் என்றொரு மன்னன் வீடுபோய் சேரவில்லை

நல்லதொரு குலவிளக்கு வினோத் என்னும் மணி விளக்கு

ராணுவத்தில் ஒளிர்ந்திருப்பான் அவன்உயிர் குடித்தது ஏன் விளக்கு   



திருப்பூர் குமரன் அல்ல இவர் தூத்துக்குடி செல்வசேகர்

தடியடிக்கு உயிரை ஈந்தார் தமிழ் மகனே உன்போல் யாவர் 

வாவூசி பிறந்த மண்ணில் வீரத்திற்கு ஏது எல்லை

தமிழரசரின் மரணம் கேட்டு கலங்காத தமிழ்நெஞ்சம் இல்லை  



காசநோய் கான்சர் வேண்டாம் கரியமில காற்றும் வேண்டாம் 

கருணை மட்டும் வேண்டும் என்ற காளியப்பன் ஏன் இறந்தான்    

நடிக்காதே எழுந்திரு என்றே கேலி செய்த கயவர் கூட்டம்

சிறைபுகும் நாளும் பக்கம் வெல்லட்டும் நீதி என்றும்    



இரு சிறார்களின் ஆசைதந்தை கிளாட்ஸ்டன் இன்று இல்லை

தன் சந்ததிக்கு போராடியவன் சமூக விரோதி இல்லை  

தப்பான முகவரி என்றால் தபால் கூட வருவதில்லை

கண்மூடி தோட்டா எய்தவன் தமிழனில்லை மனிதனில்லை 



கார்த்தி, அந்தோணி ஜான்ஸி மற்றும் ஜெயராமன்

இவர்தம் உயிர் குடித்த பேர்களுக்கு காலமே தான் காலன்

கையூட்டு பணத்திற்கென்று கொலை செய்ய துணிந்திட்டீர் 

தன் இனத்தை கொன்ற பாவம் எங்கு தொலைப்பீர் சிந்திப்பீர்  



மக்களுக்காவே நான் என்றே நீலிக் கண்ணீர் வடித்தீரே 

உரிமைக்குரல் கொடுத்தோர் துடிதுடிக்க வேடிக்கை பார்த்தீரே     

இளம்பிஞ்சை சிதைக்கும் சிலர் பயமின்றி தான் வாழ  

உனக்காகவும் குரல் கொடுத்த மாமனிதர் வீணே சாக      



ஆட்சியும் அதிகாரமும் இம்மக்கள் இட்ட பிச்சை

சிறிதாவது உணவில் சேர்ப்பீர் தூத்துக்குடி தந்த உப்பை 

காசுகளை எறிந்து எந்தன் உயிரினை விலை பேசாதே

தமிழர் கர்ணப் பரம்பரை இதை எப்போதும்நீ மறவாதே 



இணையத்தை துண்டித்தாய், மின்சாரத்தை சிறைபிடித்தாய்

பத்திரிக்கை,முகநூல், ட்விட்டர் எல்லாம் பாங்கை சாற்றினாய் 

கொதிக்கின்ற எரிமலையை குளீர்நீர் என்றே எண்ணினாய்    

உலகெங்கும் ஒலிக்கும் தமிழ்குரல் எங்கனம் நீ மாற்றுவாய் 



அரசே,ஆலையை இடி

அயல்நாட்டு முதலாளியை சிறைபிடி

மக்களின் நண்பன் என்று பசப்பும் நரிகளை சுடு

முடியாவிட்டால் வெஞ்சிறைதனில் இடு 

பகைமை கொண்டு வஞ்சம் தீர்த்த

அதிகார வர்க்கம் நீக்கு       

கறைபடிந்த வரலாற்றை கொஞ்சம்

இப்போதேனும் திருத்தி மாற்று

இயற்கையை காத்து வாழ்ந்தால் 

மானுடம் பிழைத்துப் போகும்

இப்பூமிக்கு மாற்று இல்லை

உணர்ந்தால் உன்வம்சம் வாழும்    



இன்னொரு இரங்கற்பா இயற்ற என்னிடம் வார்த்தையில்லை

இதயத்தில் பட்ட  ரணம் மாறவில்லை ஆறவில்லை

இறந்தவர்கள் எவரோ இல்லை எமதன்பு  தங்கை தனயன் 

இவர் போல யாருமில்லை தலைவணங்கும் சார்லட் தமிழன் 
****************************************************

வாழ்க தமிழ் வெல்க தமிழர்


தலைமுறை இடைவெளி






சுப்ரபாதத்தின் அழைப்பிற்கு உறக்கம் களைத்தோம் நாம் அன்று
செல்போனின் அலார அழைப்பிற்கு கண் மலரும் குழந்தைகள் இன்று

கும்பகோணம் டிகிரி காப்பி நாவிலும் மனதிலும் இனித்தது
இன்றோ டாஸ்மாக் போல தெருவிற்கு ஒரு ஸ்டார்பக்ஸ்
குளம்பிக்கே குழம்பும் அளவு பல பெயர்கள்
காபி வாங்கி திரும்பும் போது ஜனனி  கூட ஜானியாகி இருக்கக் கூடும்
பெயர் மாற்றம் பால் மாற்றம் எல்லாம் செலவில்லாமல் நடக்கும் குறைவின்றி
மோக்கா எல்லா கிளைகளிலும்  ஒரே சுவைதானேனும் அதன்பால்
கிறக்கம் உண்டு இந்த தலைமுறைக்கு

எண்ணைய் குளியல் முடித்து புத்தாடை கட்டி
கங்கா ஸ்நனாம் ஆச்சா என்று தீபாவளி கொண்டாடினோம்
பண்டிகையை கூட நேரம் இல்லை நாளை கொண்டாடுவோம்
என்று தள்ளி போடும் பரிதாப தலைமுறை இன்று

பாட்டுனா எஸ்பிபி,
ஜானகி, சித்ரா
போனால் போகட்டும் என்று மனோவையும் அணைத்தோம்
கேட்டி பெரியும்,லேடி காகாவும்  புரியாமல் அலறும்
ஓசைக்கு இசை என்று பெயர் சூட்டி கொண்டாடும்
இன்றைய இளைய தலைமுறையினர்


பஸ் பயணம்  இளையராஜாவின் கைபிடித்து தொடங்கி
ரஹ்மானிடம் முடியும்
இன்றோ அது மகிழுந்து பயணமாகி, ஆப்பிளிடம் தொடங்கி
ஆண்டிராய்டில் முடிகிறது

பட்டு புடவை சரசரக்க, மருதாணி மல்லிகை கமகமக்க
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து
முப்பது முக்கோடி தேவர்கள் ஆசிர்வதித்து திருமணம் நடந்தது
அன்று
ஐ டு என்று சுருங்க சொல்லி
இணையும் அதிவேக லாஸ்வேகாஸ் திருமணங்கள் நிறைய உண்டு

நாங்கெல்லாம் அந்த காலத்திலே
என்று இறந்த காலத்தில் லயித்து மகிழ்வோம் நாம்
புதியன சிறந்தன என எதிர்காலத்திற்கே பொக்கே நீட்டுவர்
இன்றைய இளைய தலைமுறையினர்

 எத்தனை பெரிய கவலைக்கும் அம்மாவின் மடியும்   
அப்பாவின்  நம்பிக்கை வார்த்தை என்ற  ஓரேபுள்ளியில்
இத்தனை தலைமுறை இடைவெளியும் காணாமல் போகிறது 

கவிதை பக்கம்

2018 - இல் அமெரிக்க தமிழகம் அமைப்பு நடத்திய கவிதை போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற எனது கவிதைகள்.

======================================
#1 படத்திற்கான கவிதை
ஆயிரம் சூரியனின் கோபம் அவள் கண்களில்
ஆர்ப்பரிக்கும் அலையின் வேகம் அவள் சொற்களில்
என்ன இது? கோபத்தில் தோய்ந்த அவள் வார்த்தை
சுட்டது அவன் நெஞ்சம், மறந்தது தமிழும் கொஞ்சம்
மௌனம் படர்ந்தது, மொழி தொலைந்தது
கர்நாடக எல்லை தாண்டா காவிரி போல
சொல் துவண்டது, முகம் இருண்டது.
உன்னை பற்றி நான் எழுதிய கவிதை,
கன்னித் தமிழுக்கு, சங்கத் தமிழால் சூட்டிய மாலை
கவிதையை பற்றி கவி பாடும் முயற்சி என்றான்
கவிதை அல்ல இது வெறும் பகடி,
ஆண்கள் செய்யும் காதல் தெகிடி
இந்தா பிடி, இதை நீயே படி என்றாள்
கவிதையை படித்தான்...
அன்பே, ஆருயிரே
அழகு சூர்ப்பனகையே
சூரியனை பிரதிபலிக்கும் கண்ணாடியே
சிறகு முளைத்த கம்பளி பூச்சே
வெண்சங்கில் புகுந்த மணலே
அர்த்தம் சொல்கிறேன் கேள்
இராவணன் போன்ற பாசமான அண்ணனை கொண்டவளே
சூரியஒளியை பிரதிபலிக்கும் நிலவுக்கு ஒப்பானவளே
வண்ண சிறகு முளைத்த பட்டாம்பூச்சியை போன்றவளே
என்மனமாகிய வெண்சங்கில் ரகசியமாய் நுழைந்து முத்தானவளே
அவள் கண்களில் இருந்த கோபசிவப்பு
கன்னங்களுக்கு இடம் மாறியது
மெல்ல நகைத்தாள்
அவள் சிரிப்பொலி
வார்த்தையில்லா புதுக்கவிதை ஒன்றை
படைத்துக் கொண்டிருக்கிறது


#2 படத்திற்கான கவிதை
பார்த்த அக்கணமே
என்இதய சிம்மாசனத்தை கைப்பற்றியவள்
பளிங்கு முத்துப்பல் சிரிப்பால்
என்னை அடிமை ஆக்கியவள்
காந்த விழியால் என்னுள்ளத்தை
கண்ணாடி ஆக்கிய சின்ட்ரெல்லா வம்சத்தவள்
காற்றை கடிவாளமாக்கி, மேகத்தை புரவியாக்கி
சூரிய சந்திரனை சக்கரமாக்கி,
மிதிவண்டியில் வீதியுலா செல்லும் தெய்வ மகள்
சூரியனை பூமி சுற்றியது
என் உலகமோ அவளையே சுற்றியது
பூமிக்கு ஒற்றை நிலா
அவளுடன் சேர்த்து என் வானில் இருநிலாக்கள்
எல்லாமுமாய் இருந்தவள் ஒரு நாள் வேறாகிப் போனாள்
இன்று கணினியில் கடவுச் சொல்லாய் மட்டும் அவள்பெயர்


#3 படத்திற்கான கவிதை
ஆண் பிள்ளைகளோடு விளையாட்டென்ன
என்ற அம்மாவிற்காக நட்பை தொலைத்தவள்
மேல்படிப்பு படிச்சு ஆவதென்ன
என்ற அப்பாவிற்காக முதுகலை கனவை விற்றவள்
வெளிநாட்டு சம்பாத்தியம் வேண்டுமென்ற
கணவனின் விருப்பத்திற்காக சொந்த பந்தத்தை மறந்தவள்
ராக் கச்சேரி போகலாம் என்ற மகனின் சந்தோஷத்திற்காக
இரைச்சலை கூட இசையாய் ஏற்றவள்
குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்றே
சுயசம்பாத்தியம் என்ற பொருளாதார சுதந்திரத்தை சுவாசிக்க மறந்தவள்
சங்கிலியால் கட்டப்பட்டிருப்பது டாமியும் ஜிம்மியும் மட்டுமல்ல
கடமை,கௌரவம்,பொறுப்பு என்ற கண்ணுக்கு புலப்படாத
சமுதாய சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கும் அவளும்தான்
சூரியன் மேற்கில் தோன்றலாம், இரவில் இரு வெள்ளி கூட முளைக்கலாம்
ஆனால் அத்தனை கடினம் இவ்வுலகில் அவள் அவளாய் வாழ்வதில்




கனவுகளின் பலிபீடம்


மெலிதான மழை தூறிக் கொண்டு இருந்தது. விசாலினி மழையின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள். அந்த ஸ்டார்பக்ஸ் சிகாகோ நகரின் மையப் பகுதியில் இருந்தது. உள்ளே இருந்து பார்த்தால் பளிச்சென்ற சாலையும் அதை தாண்டி, ஓய்வின்றி உழைத்த கரங்களில் துருத்திக் கொண்டிருக்கும் ரத்த நாளங்களை போல குச்சி குச்சியாய் நின்ற மரங்களும் தெரிந்தது. விசாலினி அமெரிக்கா வந்து 5 வருடங்கள் ஆகியிருந்தது. யூனிவர்சிட்டி ஆப் சிகாகோவில் மாஸ்டர் ஆப் சயின்ஸ் படித்து, இந்தியர்களுக்கு என்றே நேர்ந்துவிடப்பட்ட ஒரு ஐ.டி வேலையில்  இருப்பவள். ஐந்தடி ஆறு அங்குல உயரம், வசீகரமான உருண்டை முகம், தீர்க்கமான நாசி, அகண்ட கண்கள், ஆரஞ்சு சுளை உதடுகளுக்கு சொந்தக்காரி. இரண்டு புருவங்களின் மேலும்  அழகான கருப்பு மச்சங்கள், கழுத்தில் மெல்லிய தங்க சங்கிலி, கையில் வி என்ற எழுத்து பொறித்த மெல்லிய தங்க காப்பு அணிந்திருந்தாள்.

சே! எவ்ளோ நேரம் வெயிட் பண்றது? பச் என்றவாறே தன்னுடை கஃபே லாட்டேவில் ஒரு சிப் குடித்து கீழே வைத்தாள். தன்  செல்பேசியை தட்டி மணி பார்த்தவள் நேரம் சரியாக மாலை 6:20 என்றதை பார்த்து இருக்கலாமா? போகலாமா என்று எண்ணி கதவை பார்த்துக் கொண்டிருந்தாள். இத்தனை அழகான பெண்ணை வெயிட் செய்ய வைப்பது ஒரு அழகான ஆண் என்பது இன்னும் பிறக்காத குழந்தைக்கு கூடத் தெரியும்.

சரக்கென்று என்று பிரேக் அடித்து அந்த வளாகத்தில் வந்து நின்றது ஒரு அழகான கருப்பு மெர்சிடிஸ். ஆறடிக்கு சற்றே குறைவான உயரம், மாநிறம், பக்கவாட்டில் பார்த்தால் ஏதோ ஒரு பட ஹீரோவை நினைவு படுத்தும் முகமுமாய், குளிருக்கு இதமான ஆரஞ்சு ஸ்வெட்டர் அணிந்து கீழே இறங்கினான் திவாகர். கண்ணாடி தடுப்பு வழியே இவளை கண்டவன் முகத்தில் ஒரு அழகான குறும்பு புன்னகை மலர்ந்தது.

ஹே, பேபி என்று அருகில் வந்தவனை கண்டதும் அதுவரை இருந்த இறுக்கம் மறைந்து விசாலினியின் முகம் மலர்ந்தது. “இரு, ஒரு காபி வாங்கிட்டு வரேன்னு”  என்று சொன்ன திவாகர் அங்கிருந்த சிறிய வரிசையில் சென்று நின்றான். மொத்தம் 6 பேர் மட்டுமே இருந்த அந்த வரிசை வேகமாகவே நகர்ந்தது. அவன் எப்போது வருவான் என்று விசாலினி திரும்பி பார்த்த அந்த வினாடி சரேலென அவன் கண்ணடிக்கவே விசாலினியின் கண்கள் ஒரு கணம் மலர்ந்து பின்னர் இதழ்களும் சிரித்தன.

என்னடா, வர சொல்லிட்டு ஆளை காணோம்னு தானே தேடிட்டு இருக்கே?. காபி வாங்கி கொண்டு அருகில் வந்தான் திவாகர்.

பின்ன என்ன?, நான் வந்து ஒரு மணி நேரம் ஆகுது. எவ்ளோ நேரம் போனை பார்ப்பது? உனக்கு போன் போட்டாலும் வாய்ஸ் மெயில் போகுது. எவ்வளவு நேரம் வெயிட் பண்றது? என்று படபடவென பட்டாசு போல பொரிந்தாள் விசாலினி.

வினி, நீ பேசும் போது ஒண்ணு கவனிக்கிறேன்.

என்னது, திவா?

எறும்பு மாதிரி ஒரு பூச்சி உன் கன்னத்துல இருக்கு.

தட்டி விடாம என்ன பார்த்துட்டு இருக்கே, திவா?

இரு ஊதி விடுறேன் என்று பக்கத்தில் வந்தவன் கன்னத்தில் இச்சென்று ஒரு சந்தர்ப்ப முத்தத்தை இறக்கினான்.

விசாலினிக்கு ஒரு கணம் வெட்கப் புன்முறுவல் தோன்றியது. என்னை எப்படி எல்லாம் கவுக்கணும்னு உனக்கு தெரியும். இருந்தாலும் நான் இவ்ளோ நேரம் வெயிட் பண்ணதால கோவமாய் தான் இருக்கேன் என்று சிரிப்பின் இடையே கூறினாள்.

உன்னோட அழகான சிரிப்பை க்ளோஸப்பில் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைச்சது. பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு தெரியுமா?

மூணு நாள் தான் ஆகுது”, திவா என்றாள் விசாலினி.

ஆனா உன்னோட பர்ஃப்பியும் வாசனை இவ்ளோ க்ளோஸ்ஸா ஸ்மெல் பண்ணி சரியாய் 72 மணி நேரம்  45 நிமிடம் 20 வினாடி ஆகுது. வா ஒரு டிரைவ் போயிட்டே பேசலாம் என்றவன் அவள் பதிலுக்கு கூட காத்திராமல் ஒரு கையால் அவளுடைய ஜாக்கெட்டை எடுத்து அவளுக்கு போத்தி விட்டு மறுகையால் அவளுடைய கை விரல்களை மென்மையாக ஆனால் உறுதியாக பிடித்தான். கார் வரை கூட்டி சென்று அவளுக்கு கார் கதவை திறந்து விட்டு அவள் ஏறிய பின் கதவை சாத்தி விட்டு தானும் ஏறினான்.

திவாகரும் விசாலினியை போலவே அவளது கல்லூரியிலேயே மாஸ்டர்ஸ் படித்தவன். படிக்கும் போதே இருவருக்கும் இடையே ஈர்ப்பு இருந்தாலும் ஒரு நல்ல வேலை கிடைத்த பின்பே திவாகர் தன காதலை விசாலினிக்கு சொன்னான். விசாலினி அவளுடைய வீட்டில் மூத்த பெண். கூடப் பிறந்தது ஒரு தம்பி மட்டுமே.  முதலில் தயங்கியவள் பின்னர் எப்படியும் வீட்டில் சம்மதம் பெற்று விடலாம் என்ற நினைப்பில் சம்மதம் என்று சொல்லி விட்டாள். திவாகருக்கு ஒரு 3 மணி நேரம் தள்ளி பியோரியாவில்  வேலை.

பெரும்பாலும் வியாழன் இரவே திவாகர் சிகாகோ வந்து விடுவான். இருவரும் ஒன்றாக ஊர் சுத்துவது, சமைப்பது, வெளியே செல்வது என்று வார இறுதியை ஒன்றாக கழிப்பார்கள். பின்னர் மீண்டும் திங்கள் அன்று அதிகாலை கிளம்பி அவன்  பியோரியா சென்று விடுவான்.

கார் கிளம்பி இலக்கில்லாமல் ஏதோ ஒரு ஹைவேயில் விரைந்தது. சீரான வேகத்தில் காரை செலுத்த மெல்ல திவாகர் மேல் சாய்த்தாள் விசாலினி. என்ன இன்னைக்கு அய்யா நல்ல மூட்ல இருக்க மாதிரி தெரியுது என்றாள்.

ஆமா, நல்ல விஷயம் தான். இந்த வாரம் உன்னை பத்தி எங்க வீட்டில் சொல்லியாச்சு. அவங்களுக்கு எல்லாம் கொஞ்சம் அதிர்ச்சி. நான் தான் வீட்ல கடைசி பையன் அப்படிங்கிறதால என்னுடைய அக்காக்களுக்கு  எனக்கு பொண்ணு பாக்கணும்னு ஆசை. அம்மா அப்பாவிற்கும் தான். எல்லாரும் மும்முரமா பொண்ணு தேடறப்ப நானே பொண்ணை கண்டுபிடிச்சாச்சுன்னு சொன்ன உடனே எல்லாருக்கும் பயங்கர ஷாக். ஆனா ஒரு ரெண்டு நாள்லேயே எல்லாரும் சகஜம் ஆயாச்சு. உன்னோட போட்டோவும் அனுப்பியிருந்தேன்.அம்மாவுக்கு எல்லாம் ஓகே. அடுத்து என்னன்னு அம்மணி தான் சொல்லணும். கல்யாணமா தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா இல்ல ஓடி போயி கல்யாணம் தான் கட்டிக்கலாமா? என்று சிரித்தவாறே பாடினான் திவாகர்.

என்ன திவா, இவ்ளோ பெரிய விஷயத்தை இவ்ளோ கேசுவலா சொல்ற. வாவ், ஐ ஆம் சோ ஹாப்பி. எங்க வீட்டை விட உங்க வீட்டை நெனச்சி தான் பயங்கரமா பயந்திட்டு இருந்தேன், என்ன சொல்வாங்களோன்னு. சூப்பர், திவா. பேசியே சம்மதிக்க வெச்சிட்ட. உனக்கு என்ன வேணாலும் சொல்லு வாங்கி தரேன் என்றாள் விசாலினி.     

அப்படியா என்று அவள் காதருகில் திவா ஏதோ கிசுகிசுக்க அவன் சொன்னதை கேட்டு அவள் முகத்தில் வெட்கச் சிவப்பு ஏறியது. வர வர நீ ரொம்ப சரியில்லை என்றாள் பொய் கோபத்துடன் அவனை பார்த்து சிரித்தவாறே.

ஹே, கோபத்துல கூட நீ ரொம்ப அழகா தெரியற என்று திவா ஆக்சிலரேட்டரை அழுத்தினான்.கார் வேகம் எடுத்து செல்லத் தொடங்கியது. நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் என்று ரஹ்மான் ஸ்பீக்கரில் இருந்து கசிய ஆரம்பித்தார்.

கேலி கிண்டல் காதலும் ஊடலுமாக இரண்டு மாதங்கள் எப்படி போனது என்றே தெரியவில்லை. திவாகரின் மேல் அவளுக்கு இருந்த காதல் பன்மடங்காக வளர்ந்திருந்தது. தனக்கானவன் என்ற உரிமை தந்த பற்றுதலால் தான் இவ்வளவு அன்யோன்யம் தோன்றியிருக்கிறது  என்று நினைத்தாள் விஷாலினி. அந்த நினைப்பு தந்த உணர்வு அவள் முகத்தில் புன்முறுவலாக  தோன்றியது. அந்த வியாழக்கிழமை மாலை விசாலினி கொஞ்சம் சீக்கிரமாகவே வேலை முடிந்து வந்திருந்தாள்.  உள்ளறைக்கு சென்று முகம் கழுவி  திவாகருக்கு பிடித்த வெள்ளை மேக்சி அணிந்து அழகான ஒப்பனை அணிந்திருந்தாள். இருவரும்  இரவு  ஒரு உணவு விடுதிக்கு செல்வதாக திட்டம். அவள் கிளம்பி வந்த போது திவாகர் குளியல் போட்டுக் கொண்டிருந்தான். குளியல் அறையின் உள்ளிருந்து  எஸ்பிபி போல அவன் பாட முயற்சிக்கும் ஓசை கேட்டு அவளுக்கு சிரிப்பு வந்தது. வெளியில வரட்டும் வெச்சிக்கிறேன் என்று நினைத்தவள்,  சமையலறைக்கு சென்று அவனுக்கு ஒன்று அவளுக்கு ஒன்று என்று இரண்டு கோப்பைகளில் தேனீர் தயாரித்து எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள். அவள் ஹாலுக்கு வரவும் திவாகருடைய கம்ப்யூட்டர் திரையில் ஒரு ஈமெயில் வரவும் சரியாக இருந்தது. கம்ப்யூட்டர் லாக் செய்யாமல் இருந்தது. சும்மா காசுவலாக எட்டி பார்த்தவள் அவனுடைய தந்தையின் பெயரை பார்த்ததும் என்னவாக இருக்கும் என்று ஆவல் மேலிட்டு அந்த ஈமெயிலை படிக்க ஆரம்பித்தாள்.

திவாகர் குளித்து முடித்து வெளியில் வந்த போது வீடு நிசப்தமாக இருந்தது. ஒரு குளியல் ரோப் அணிந்து வெளியே வந்தவனிடம் இருந்து  மெல்லிய சோப்பு வாசம் அடித்துக் கொண்டிருந்தது. விசாலினி வந்திருக்க மாட்டாள் என்று எண்ணியவாறே வந்த அவன் அவளை ஹாலில்  கண்ட வினாடி முகம் மலர்ந்தான்.

என்ன பேபி என்று அருகில் நெருங்கியவன் அவள் முகத்தை பார்த்ததும் ஒரு வினாடி நின்றான்.

ஹே, ஏன் டல்லா இருக்க, வேலை அதிகமா என்று அவளை ஏறிட்டவன், அவள் கண்கள் கலங்கி இருந்ததை பார்த்து, என்னடா? என்ன ஆச்சு? என்றான் மெதுவாக.

அவள் பதில் சொல்லாமல் அந்த கணினியை அவனை நோக்கி திருப்பினாள். எந்த பொண்ணு போட்டோவை பார்த்து நீ ஓகே சொல்ல போற திவா என்றாள்.

ஒரு கணம் அவளை கூர்ந்து நோக்கியவன், “அடுத்தவங்க ஈமெயிலை படிச்சவங்களும், அடுத்தவங்க செல்போனை பார்த்தவர்களும் நல்லா இருந்ததா சரித்திரம் இல்லை என்று கூறி புன்னகைக்க முயன்றான்.

விசாலினி முகம் குன்றியது. நான் எவ்வளவு சீரியசா பேசிட்டு இருக்கேன். நீ என்னவோ ஜோக் அடிக்கற?  ஏன் திவா என் கிட்ட பொய் சொன்ன. உங்க வீட்ல நம்ம விஷயம் தெரியுமா, இல்ல தெரியாதா?”

நம்ம விஷயம் தெரியும் பேபி. எனக்கு இங்க ஒரு பொண்ணு பிடிச்சிருக்கு அப்படின்னு சொன்ன உடனேவே அம்மா அழ ஆரம்பிச்சிட்டாங்க. அப்பா,அக்கா எல்லாரும் ஆப் ஆயிட்டாங்க. அப்பறம், இல்ல சும்மா சொன்னேன் அப்படின்னு சொல்லி அவங்களை சமாதானப்படுத்தவே எனக்கு ரொம்ப நேரம் ஆச்சு..

"என்ன திவா சொல்ற? அப்போ இவ்ளோ நாளா நாம இங்க கிட்ட தட்ட புருஷன் பொண்டாட்டியா வாழ்ந்திருக்கோம். இதெல்லாம் வெறும் பொய்யா. ரெண்டு பேர் வீட்லயும் சம்மதம் இல்லாட்டியும் நான் உன்னை கல்யாணம் செய்ய ரெடி. அதே முடிவை உன்னால எடுக்க முடியுமா?” என்றாள் விசாலினி. அவள் குரல் உடைந்திருந்தது

வினி மா, என்னால அப்படி செய்ய முடியாது. எனக்கு கொஞ்சம் டைம் கொடு. நான் பேசி பார்க்கிறேன்.

இந்த ஈமெயிலை பார்க்கும் போது நீ பேசி ஒண்ணும் ஆகறா மாதிரி தெரியலையே. உண்மையை சொல்லு. ஏதாவது பாஸிட்டிவா நடக்க வாய்ப்பு இருக்கா இல்லையா திவா?

எனக்கு அப்படி எல்லாம் சொல்ல தெரியாது. எல்லார் மனசையும் கஷ்டப்படுத்தறத விட்டுட்டு நாம ரெண்டு பேரும் காம்ப்ரமைஸ் பண்ணிக்கலாம் இல்லையா?  நான் உன் கூட இருந்த இந்த ரம்மியமான நாட்கள் இந்த நினைவுகள் எனக்கு போதும். இது இன்னும் பல காலம் தொடர்ந்தா சந்தோஷம். இல்லைனா எனக்கு கொடுத்து வெச்சது அவ்ளோ தான்னு நினைச்சுக்க வேண்டியது தான்.

இவ்ளோ யோசிச்சீங்களே. என்னை பத்தி யோசிச்சீங்களா? எனக்கு என்ன தேவை தேவையில்லைனு யோசிச்சீங்களா? உனக்கு வேணும்னா நான் லவ் பண்ணனும். நீ பிரியணும்னு நெனச்சா நான் பிரிஞ்சி போகணும். எனக்குன்னு ஒரு மனசு இருக்கு அதில் கனவு இருக்கு அப்படிங்கறது எல்லாம் உனக்கு தோணாதா திவா. எனக்கு நீ வேணும். என்னால காம்ப்ரமைஸ் எல்லாம் பண்ண முடியாது. உங்க வீட்ல சம்மதிச்சிட்டாங்கன்னு ஏன் பொய் சொன்னே. ஒய் திவா ஒய்?

சாரி டா. என்னை மன்னிச்சுடு, உன்னிடம் பொய் சொன்னதற்கு. நீயும் என்னை கொஞ்ச நாளா வீட்ல கல்யாணத்தை பத்தி பேசச் சொல்லி நச்சரிச்சிட்டே இருந்த. ஆனா அவங்க மனப்போக்கு தெரிஞ்ச பிறகு அவங்க முடிவை உடனே  சொல்லி உன்னோட மனசை காயப் படுத்த விரும்பல. அதான் பொய் சொன்னேன்.

காதலிச்ச பொண்ணை கல்யாணம் பண்ண முடியாத அளவு கோழை ஆகிட்ட தானே. நான் இதை உன்கிட்ட இருந்து கொஞ்சமும் இதை எதிர்பார்க்கலை திவா. என் கிட்ட இனி பேசாதே. என்னுடைய மூஞ்சில கூட முழிக்காதே.

விசாலினி அந்த அபார்ட்மெண்டில் இருந்து புயலென வெளியே வந்த போது வானம் தூற ஆரம்பித்தது. அதை விட அதிகப் படியான தண்ணீரை அவளுடைய கண்கள் பொழிய ஆரம்பித்திருந்தது. அவள் தன்னுடைய காரை நோக்கி விரைவாக ஓடினாள். விசாலினி கிளம்பிய உடன் கையில் கிடைத்த ஒரு உடையை அணிந்து அவளை சமாதனப்படுத்த வெளியில் வந்த திவா அவளை பார்க்கிங் லாட்டில் தேடும் போது விசாலினி அந்த பார்க்கிங் லாட்டிலிருந்தும் அவனுடைய வாழ்கையிலிருந்தும் வெகு தூரம் சென்றிருந்தாள்.

அந்த விமானம் ரன்வேயில் டாக்ஸி ஆகும் போது காலை மணி ஒன்பது  ஆகியிருந்தது. உள்ளே அமர்ந்து இருந்த திவாகருக்கு சிகாகோ வந்தாலே விசாலினியின் நினைவு வராமல் போகாது. இருபத்தைந்து வருடங்களுக்கு முந்தைய நினைவு என்றாலும் அன்றே நடந்தது போன்று அவ்வளவு தெளிவாக நினைவிருக்கிறது.

அவனுடைய மகள் ஹாசினி யூனிவர்சிட்டி ஆப் சிகாகோவில் இறுதி ஆண்டு படிக்கிறாள். விசாலினியுடனான பிரிவிற்கு பிறகு அவன் வீட்டில் பெற்றோர் பார்த்த ஆஷாவை கரம் பிடித்தான். ஒரு மகன் மகள் என்று அளவான குடும்பம். மகள் கல்லூரியில் படிக்க மகன் உயர் நிலைப்பள்ளியில் இறுதி வருடம் படிக்கிறான். அலுவலகம் சம்பந்தமான ஒரு கான்ஃபரென்ஸ்சிற்கு சிகாகோ வந்திருந்தான். இரவு மகளுடன் சேர்ந்து உணவு அருந்துவதாக திட்டம்.  

இரவு சரியாக 7 மணிக்கு இந்தியன் கிளே பாட் என்ற அந்த உணவகம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பார்க்கிங் கிடைக்காததால் சற்று தூரத்தில் பார்க் செய்து திவாகர் அந்த ரெஸ்டாரண்ட் உள்ளே நுழைகையில் ஹாசினி ஏற்கனவே இடம் பிடித்து அமர்ந்திருந்தாள். அவனை கண்டதும் வேகமாக கையை ஆட்டியவள் அன்று அழகான பிங்க்  உடை அணிந்து தேவதை போல அழகாக இருந்தாள்.

ஹாய் டாட்,  ஹௌ  ஆர் யூ? என்று அழகான நுனி நாக்கு ஆங்கிலம் பேசினாள்.

அவளை கூர்மையாக பார்த்தவாறே நல்லா, தமிழ்ல கேட்கலாமே இதை என்றான்.

நான் நல்லா இருக்கேன். நீ நல்லா இருக்கியா என்றான் சிரித்தவாறே.

யூ லுக் வெரி ஷார்ப்  ஹாஸு. என்ன ஸ்பெஷல்? என்றான் திவாகர்.

சும்மா கிண்டல் செய்யாதீங்க டாட். நான் இப்படித்தான் எப்பவுமே இருப்பேன் இல்லையா என்றாள் ஹாசினி தந்தையை பார்த்து கண்ணடித்தவாறே.

ஹ்ம்ம், ஏதோ ஸ்பெஷல் இருக்கு. சரி, நீ சொல்லு என்ன சாப்பிடற?

அவர்கள் இருவரும் மெனுவை பார்த்து ஆர்டர் செய்தார்கள். ஆர்டர் செய்த உணவும் அதிசயமாக சீக்கிரமே வரவும் படிப்பு, அலுவலக வேலை என்று பலதும் பேசி உணவை சாப்பிட்டு முடித்தார்கள்.

என்ன ஹாஸு, ஏதோ சொல்லணும் அப்படின்னு நினைத்து சொல்லாத மாதிரி தெரியுது என்றான் திவாகர் சாக்லேட் ஐஸ்கிரீமை சுவைத்தவாறே.

இல்லப்பா. எனக்கு பெர்லின்ல ஒரு இன்டர்நேஷனல் அசைன்மென்ட் கிடைச்சிருக்கு. இந்த வருட இறுதி தேர்வு முடிஞ்ச உடனே போகணும். அம்மா கிட்ட சொன்னேன். ஒரு அளவுக்கு ஓகே. நானே அப்பாகிட்ட சொல்வேன்னு அவங்களை உங்களிடம் சொல்ல விடலை. அசைன்மென்ட் நல்லபடியா   முடிஞ்சா அங்கேயே வைஸ் ப்ரெசிடெண்ட் மாதிரி கேடர்ல போஸ்டிங் கிடைக்கலாம். சோ, கொஞ்ச வருடங்கள் அங்கே இருக்கற மாதிரி இருக்கும்.

திவாகர் மனம் கொஞ்சம் பாரமானது. குழந்தைகள் படிப்பு என்று வெளியில் சென்றாலே பின்னர் வேலை குடும்பம் என்று வீடு திரும்புவதே இல்லை. இருந்தும் அதை வெளி காட்டாமலேயே புன்னகைத்து "அப்பா ரொம்ப ஹாப்பி ஹாசினி. செமத்தியான நியூஸ். ஜெர்மனி தானே. ஒன் பிளைட் அவே. நானும் அம்மாவும் நினைச்சா பாக்க வந்திடுவோம். காங்கிராட்ஸ்" என்று அவனுடைய உண்மையான மனநிலையை வெளிக்காட்டி கொள்ளாமல் சிரிப்புடன் அவள் கையை பற்றி குலுக்கினான்.

அப்பறம் அப்பா, என்று சொல்லி நிறுத்தினாள் ஹாசினி.

என்னம்மா?  

நான் ஜெர்மனி போக போறது என்னோட பியான்ஸ்  கூட என்று சொல்லி நிறுத்தினாள்ஹாசினி. அப்பொழுது தான் அவளுடைய கைகளை கவனித்தான்.ஒரு ஒற்றை வைர ரிங் அவனை பார்த்து சிரித்தது.

என்னம்மா சொல்ற? என்று திவாகர் மெல்ல அதிர்ந்தவாறே.

ஆமாம் பா. என்னுடைய பியான்ஸ் இந்த வாரம் தான் ப்ரொபோஸ் பண்ணா. நானும் ஓகே சொல்லிட்டேன். ரெண்டு பெரும் ஒண்ணா சேர்ந்து தான் ஜெர்மனி போறோம். அவளையும் வர சொல்லிருக்கேன், உங்களை பார்க்கறதுக்கு என்ற போதே வெள்ளை உடையில் ஹாசினியின் ஒத்த வயதுடைய ஒரு அழகான இளம் பெண் அவர்கள் டேபிளை நோக்கி வரவும் சரியாக இருந்தது.

அப்பா, மீட் விசாலினி கணேஷ். மை பியான்ஸ் என்று ஹாசினி சொன்னது திவாகருக்கு மங்கலாக கேட்டது. அவனுடைய கனவுகள் உடைபடும் சத்தம் மட்டும் அங்கிருந்த எல்லோருக்கும் கேட்டிருந்தால் ஒரு ஆழி பேரலையின் இரைச்சலை தங்கள் காதுகளுக்கு வெகு அருகிலேயே கேட்டிருப்பார்கள். திவாகர் மயங்குவதற்கு முன் கடைசியாக அந்த வெள்ளை உடை பெண்ணை பார்த்த போது அவனுக்கு அவளுடைய முகத்திற்கு பதில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் பார்த்த விசாலினியின் முகமே தெரிந்தது.

அப்பா, அப்பா என்று ஹாசினி மயங்கி சரிந்த அவனை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

காலம் ஒரு சரியான தீர்ப்பு வழங்கியதாய் தன்னுடைய பக்கங்களில் குறித்திருக்க கூடும்.