ஒரு சிறுகதை போட்டிக்காக எழுத்தியது……..வெற்றி பெறவில்லை என்றாலும் போட்டியில் பங்கேற்றது நிறைவளித்தது….
அந்த அறையில்
மண்ணெண்ணெய் நெடி அடித்துக் கொண்டிருந்து. தாழ் போடாமல் திறந்திருந்த அந்த ஒற்றை
ஜன்னல் வழியே காற்று மட்டுமே உள்நுழைந்து அந்த மண்ணெண்ணெய் வாடையை நீக்கும்
கடினமான பணியை செய்து கொண்டிருந்தது. மண்ணெண்ணெய் டின்னும் தீப்பெட்டியும் அந்த
அறையில் இருந்த அந்த பழைய பெஞ்சில் இருந்தது. அந்த பெஞ்சின் இன்னொரு மூலையில்
அமர்ந்து இருந்தாள் கருணா.
அவள் மனம் கடலலையில் சிக்கிய ஓடம் போல
அலைபாய்ந்து கொண்டிருந்தது.
கணவன்
பார்த்திபன், மகள் அனுஷா என்று சிறிய குடும்பம். சென்னை போன்ற பெரு நகரத்தில்
ஒற்றை சம்பளத்தில் வாழ முடியாது என்று பார்த்திபன் மணமான புதிதிலே சொன்னதால்
மதுரையிலேயே இருந்துவிட்டார்கள். கருணாவிற்கு தாய் தந்தையர் அடுத்தடுத்து தவறி
விட்டதால் மதுரையை தாண்டி வேறெங்கும் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. ஒரே தம்பியும்
பெங்களூரில் இருக்கிறான். எப்போதாவது போன்
செய்து பேசுவான். அவனை நேரில் சென்று பார்க்க அவளுடைய பொருளாதாரம் இடம் கொடுக்காது
என்பதை விட பார்த்திபன் அதில் ஆர்வம் அதிகம் காட்ட மாட்டான் என்பதே முதன்மை காரணி. இந்த ஊரை தாண்டி பார்த்திபன் வேற எங்கேயாவது தன்னையும், தன் பெண்ணையும் அழைத்துச் செல்வான் என்பதெல்லாம் அவளை பொறுத்தவரை பகல்
கனவு மட்டுமே. மகள் அனுஷா நன்கு
படிப்பவள். 10-வது வந்த பிறகு இப்போது
தான் தன்னை சற்று கூடுதலாக அலங்கரித்து கொள்கிறாள். கண்ணாடி முன் கொஞ்சம் அதிக நேரம்
செலவிடுகிறாள் என்பதை தவிர மற்றபடி அவளால் கருணாவிற்கு எந்த குறையும் இல்லை. அனுஷாவிற்கு
மேடை பேச்சு நிரம்ப பிடிக்கும். பள்ளிக்கு கூடத்தில் பட்டிமன்றம், பேச்சு போட்டி போன்றவற்றில்
ஆர்வமாய் பங்கேற்பாள். அம்மா, இன்னும் இரண்டு நாள்ல தமிழ் பெண்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பில்
பேச போறேன். நீங்க கண்டிப்பா வந்து பாக்கணும்னு கட்டளை வேறு போட்டிருந்தாள்.
சிறிய குடும்பம்
பெரிய பிடுங்கல் இல்லை என்று இந்நேரம் நீங்கள் நினைத்திருந்தால் மாற்றிக்
கொள்ளலாம். பார்த்திபன் கொஞ்சம் குடிப்பான். அதைத் தவிர மனைவி மேல் நிறைய சந்தேகப்படுவான்.
அடுத்த வீட்டுக்கு சென்று காப்பித் தூள் வாங்கவேண்டும் என்றாலும் கூட அனுஷாவை
மட்டுமே அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால்
அங்கே "எவன் கிட்ட பல்லை இளிச்சிட்டிருந்த" என்று கூசாமல்
பேசுவான்.அவனை பொறுத்தவரை கருணா வீட்டிற்கு யாரவது வந்து அவர்களிடம் பேசினால் கூட
அவர்கள் போன பிறகு "பட்டு பட்டுனு பேசி அனுப்ப வேண்டியது தானே. அது இல்லாம
என்ன சிரிச்சு சிரிச்சு பேச்சு" என்பான். கருணா வீட்டை விட்டு வெளியே போக
வேண்டும் என்றால் பால் வாங்கணும்,
காய்கறி வாங்கணும், மாவு மெஷினுக்கு
போகணும் அப்படின்னு எப்போதும் ஒரு அரிசி, கோதுமை வைக்கப்பட்ட பாத்திரமோ, ஒரு கூடையோ
எடுத்துக் கொண்டே வீட்டை விட்டு செல்வாள். ஒரு நாள் கூட இவங்க வீட்டுக்கு
போகணும்னு அவள் சொல்லிவிட்டு போக முடியாது. அப்படி சொன்ன எதுக்கு? ஏன்? என்ன பேசணும் அப்படின்னு
அவன் பண்ற கெடு பிடியில் கருணாவிற்கு வெளியே போக வேண்டும் என்ற ஆசை கூட
போய்விடும். அவனுடைய குணம் தெரிந்து அவன் வீட்டில் உள்ள நேரம் பெண்களை தவிர அக்கம்
பக்கத்தில் உள்ள ஆண்கள் யாரும் வரவே மாட்டார்கள். இதில் பெரியவர், சிறியவர் என்ற
பேதம் இல்லை. பக்கத்து வீட்டு பையன் 6 வயது ரகு கூட வர மட்டான் பார்த்திபன் வீட்டில்
இருக்கிறான் என்பது தெரிந்தால்.
அன்றும் வழக்கம்
போல அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்தவன் ஹாலில் உள்ள சேரில் ஹாயாக
அமர்ந்திருந்தான். காலை முதல் வீட்டில் அடைந்து கிடந்த கருணாவிற்கு அன்று
எங்கேயாவது போக வேண்டும் போல் இருந்தது.
என்ன செய்வது இவனிடம் எங்கே என்று சொல்லிவிட்டு செல்வது என்று யோசனையில்
இருந்தாள்.
“நைட், சப்பாத்தி குருமா செய்” என்று
சொன்னவாறே பேப்பரில் ஆழ்ந்தான். பின்னர் வெளியே
வராந்தாவிற்கு சென்றவன் சிறிது நேரத்தில் விறு விறு என உள்ள வந்தான். அவன்
முகம் கோபத்தில் சிவந்திருந்தது. அவனுடைய முகத்தை ஏறிட்டு பார்த்தவளுக்கு வயிற்றை
பிசைய ஆரம்பித்தது.
அனுஷா சற்று
நேரத்தில் வீட்டில் நுழைந்தாள்.
அனுஷா, நில்லு. எங்க
போயிட்டு வர?
டியூஷனுக்கு பா.
கணக்கு டியூஷன்.
கணக்கு டியூஷன்
போ. ஆனா கண்ட கண்ட பசங்க கிட்ட என்ன பேச்சு. தெரு முனையிலே நோட்டு கொடுக்கறது, நோட்டு வாங்கறது
அப்படிங்கறது எல்லாம் என்ன புது பழக்கம். நீ பசங்க கிட்ட பேசி தான் படிக்கணும்னா
அப்படி பட்ட படிப்பே வேண்டாம் என்று சீறினான்.
அனுஷாவின்
கண்கள் கலங்க ஆரம்பித்தன.
“இல்லப்பா, டியூஷன் நோட்ஸ் நான் தான் வாங்கினேன்”. ரெண்டு நாள்
உடம்பு சரி இல்லாம நோட்ஸ் மிஸ் பண்ணிட்டேன். அதை எழுதறத்துக்காக தெரு முனைல
இருக்கற சரவணன் கிட்ட நோட்ஸ் வாங்கினேன். அதை தவிர ஒண்ணும் இல்லை என்றவள்
உதவிக்காக அம்மாவை பார்த்தாள்.
கருணா
தவித்தாள். இறைவா, இவ்ளோ நாள் என்னை மட்டும் தான் இந்த மனிதன் கஷ்டப் படுத்திக்
கொண்டிருந்தான். வேறு போக்கு இல்லாததால் நான் வாய் மூடி மௌனமாக வாழ்ந்து
கொண்டிருக்கிறேன். இப்போது என்னை மட்டுமல்ல என் பெண்ணையும் வார்த்தைகளால் கொல்கிறானே. எங்களை
காப்பாற்று” என்று எல்லா கடவுளையும் வேண்டினாள்.
“இல்லங்க, நான் பாத்துக்கறேன். நீங்க ஒண்ணும்
கவலைப்படாதீங்க” என்று மெல்லிய குரலில் அவள் ஆரம்பிக்கவும், “என்னடி, அம்மாவும், பொண்ணும்
சேர்ந்து நாடகம் ஆடறீங்க. நீயே ஒரு
ஏமாத்துக்காரி. கடைக்கு போறேன், மில்லுக்கு போறேன்னு அங்க இங்க போற”. என்ன முழிக்கற, உன்னை பத்தி என்
காதுக்கு விஷயம் வராதுன்னு நினைக்கறியா? எனக்கும்
இந்த ஊர்ல தெரிஞ்சவங்க இருக்காங்க. நல்லது கெட்டது என் காதுக்கும் வரும். “பேச வந்துட்டா
பெரிசா”
என்று சீறினான்.
இந்த நல்லது
கெட்டது சொல்றவங்க உன்னை குடியையும் விட சொல்லிருக்காங்களா என்று நா வரை வந்த
கேள்வியை கேட்க முடியாமல் அடக்கினாள் கருணா. அனுஷாவை அந்த இடத்தில் இருந்து
சீக்கிரம் எப்படி அனுப்புவது என்று கையை பிசைந்தவள், அந்த நேரத்தில் அழைப்பு மணி அடிக்கவும் சற்று
ஆசுவாசமானாள்.
பார்த்திபன்
கதவை திறந்து வந்தவரை பேசி அனுப்புவதற்குள் அனுஷாவை கண் ஜாடை மூலம் அவளுடைய
அறைக்கு அனுப்பினாள். கிச்சனில் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள். ரகசியமாக
அனுஷாவிற்கு சாப்பாடை அவளுடைய அறையிலேயே கொடுத்தவள் தானும் இரண்டு வாய் சாப்பிட்டு
விட்டு அவனுக்கான உணவை ஹாட்-பாக்கில் எடுத்து வைத்தாள். கிச்சனை சரி செய்து விட்டு
வந்தவள், அனுஷா
ரூமிற்கு சென்று அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்க சென்றாள்.
அனுஷா
அழுதிருப்பாள் போலும், கண்கள் கொஞ்சம் சிவந்திருந்தது. ஏதோ
புத்தகத்தை வெறித்து பார்த்தவாறு இருந்தவள் தாயைப் பார்த்ததும் விசும்ப
ஆரம்பித்தாள்.
அனுஷா, சாப்பிட்டியா என்று ஆதரவாக கேட்டவுடன், அம்மா
என்று அனுஷா மேலும் குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். பதறிப் போன கருணா, அனுஷா, தங்கமே
"அழாதே. உனக்கு அப்பாவை பத்தி தெரியும் தானே. இனிமேல் ஜாக்கிரதையா இரு .
அம்மா உன்னை நம்பறேன்" என்றாள்.
கருணாவுடைய
சமாதானத்தில் சற்று அழுகையை நிறுத்திய அனுஷா, சிறிது
நேரத்திலேயே உறங்கியும் போனாள். ஏதோ ஏதோ எண்ண ஓட்டத்தில் இருந்த கருணா எப்போது
தூங்கினாள் என்று தெரியாது. அவளுடைய கனவில் எல்லா திசைகளிலும் பளீரென வெளிச்சம்
தென்பட்டது. கருணா அந்த வெளிச்சத்தை நெருங்கும் போதே அது பெரும் தீ என்பதை
அறிந்தாள். அந்த தீயிலிருந்து வெளியேற வழி ஏதும் தென்பட வில்லை. கருணாவை அந்த தீ
நெருங்கியது. கருணா பதறி எழுந்த போது பொழுது புலர்ந்திருந்தது.
காலை வேலைகளை
முடித்து பார்த்திபனுக்கும், அனுஷாவிற்கும் தேவையான உணவினை தயாரித்து, அவர்கள்
கிளம்பிய பின் துணி துவைத்து, அடுக்களையை ஒழித்து அவள் வந்து சிறிது நேரம் இளைப்பாறிய போது மணி
பதினொன்று. திடீரன்று செல்பேசி ஒலிக்கவும் எடுத்து பேசினால் மறுமுனையில் அவள்
தம்பி. சம்பிரதாய விசாரிப்புக்கு பின் "என்ன திடீர்னு போன் செய்யற?" என்றாள்.
இல்லை பிரமீளாவிற்கு ஒரு சின்ன ஆபரேஷன். ஒரு பத்து நாள் பெட் ரெஸ்ட்ல இருக்கணும்.
பசங்களை வேற பாக்கணும். நீ வந்து ஒரு வாரம் இருந்தா எனக்கு கொஞ்சம் உதவிய
இருக்கும் என்று நிறுத்தினான். டேய், உனக்கு அவரை
பத்தி தெரியாதா. எனக்குன்னா எச்சி கையால காக்கா ஓட்ட மாட்டார். நீ போன் பண்ணேன்னு
தெரிஞ்சா "இதான் சாக்குன்னு அங்கே போகலாம்னு பிளான் பண்ணாதே, யாரு எனக்கு
இங்க சமைச்சு போடுவா. உன் புள்ளைய யாரு பாத்துக்கறதுன்னு ஏகத்துக்கு ஆர்ப்பாட்டம்
பண்ணுவார்.நீயே பாத்துக்கோடா" என்றாள் இயலாமையுடன். சரிக்கா, நான்
எப்படியாவது சமாளிச்சிக்கிறேன், யோசிச்சு பாத்து உன்னால முடிஞ்சா சொல்லு நானே டிக்கெட் எடுத்திடறேன்
என்று சொன்னான். ம்ம் சரி என்று பெருமூச்சுடன் செல்பேசியை அணைத்தாள். தன்னை
தாண்டி மற்றவர்களை பார்க்கும் மனநிலை ஆண்களுக்கு எளிதில் கைவருவதில்லை. அடுத்த வீட்டு
பாட்டி உடல் நிலை சரி இல்லாத போது கூட "சும்மா எல்லாருக்கும் போய் செஞ்சிட்டு
இருக்காதே. அப்பறம் அவங்க இதையே எதிர் பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க. அவங்கள டாக்டர்
வீட்டுக்கு கூட்டிட்டு போறேன், மருந்து வாங்கி தரேன்னு செலவை
இழுத்து விட்டுடாதே, பணம் மரத்துல காய்க்கல என்பான். இத்தனை பேச்சும் அவள் அந்த
பாட்டிக்கு ஒரு வேளை கஞ்சி காய்ச்சி கொடுத்ததற்கு மட்டுமே. அந்த பாட்டி ஆசையுடன்
செய்து தந்த வடை,டீ போன்றவற்றை உண்டவன் தான். ஒருவரின் தயவு தேவை இல்லை என்று அவனால்
எப்படி அவ்வளவு சீக்கிரம் ஒதுக்க முடிகிறதோ என்று அவளுக்கு கூட ஆச்சரியமாக
இருக்கும்.
அன்று காலை முழுவதும்
தம்பியிடமிருந்து வந்த தொலை பேசி அழைப்பையே எண்ணிக் கொண்டிருந்தது அவள் மனம்.
பார்த்திபன்
அலுவலகத்திலிருந்து வந்த பின் அவனுக்கு டிபன் எடுத்து கொடுத்து விட்டு, மகள் அனுஷா
டியூஷன் சென்ற பின் மெதுவாக அவனிடம்
“என்னங்க, இன்னைக்கு என் தம்பி போன் பண்ணான்”.
“ம்..”என்றான் பார்த்திபன் சுரத்தின்றி.
அவன் மேலும்
எதுவும் கேட்பான் என்று அவளுக்கு தோன்றாது போகவே, அவளே மேற்கொண்டு சொல்ல ஆரம்பித்தாள்.
எங்க
நாத்தனாருக்கு ஒரு சின்ன ஆபரேஷன். ஒரு வாரம் நான் வர முடியுமான்னு கேட்டான்?
“அம்மணி, என்ன முடிவு பண்ணியிருக்கீங்க” என்றான்
கொஞ்சம் ஏளனமாய்
அவளுக்கு சற்றே
தயக்கமாய் இருந்தது. ஆனது ஆகட்டும் என்று “இல்லை, உடம்பு முடியலன்னு தானே கூப்பிடறாங்க.
கஷ்டமா இருக்கு வர மாட்டேன்னு சொல்றதுக்கு.
நானும் அனுஷாவும் ஒரு வாரம் போய் இருந்திட்டு வரட்டுமா?”
அவங்களுக்கு
உடம்பு சரி இல்லைன்னு நீ போற. ஆனா இங்க நான் மட்டும் சாப்பாட்டிற்கு
கஷ்டப்படுவேன்னு ஏன் உனக்கு தோணலை. ஊர் சுத்த போறதுல உள்ள அக்கறை கொஞ்சம் புருஷன்
மேலயும் வைக்கலாம் இல்ல என்றான் சுருக்கென்று ..
இல்ல, பக்கத்துக்கு
வீட்டு பாட்டி கேட்டா சமைச்சி தருவாங்க.உங்களுக்கும் வீட்டு சாப்பாடு கிடைக்கும்.
உங்க ஆபீஸ்ல லீவு கிடைக்கும்னா நீங்களும் வாங்க. எங்களுக்கும் துணையா இருக்கும்.
ஆமா, நீங்க போறதுக்கே
நான் இன்னும் சரி சொல்லல. இதுல என்னை வேற கூப்பிடற. டிக்கெட் எல்லாம் புக்
பண்ணியாச்சா? இல்ல வெறும் தகவலா சொல்றியா?
என்னங்க நீங்க? உங்கள கேக்காம
எப்படி பண்ணுவேன்? என்றாள் கருணா.
அந்த மட்டும்
புருஷன் மேல மரியாதை வெச்சிருக்கியே. அதுவே பெரிய விஷயம். ஆமா, பெங்களூர்ல
தம்பி வீட்டுக்கு மட்டும் தான் போறியா? இல்ல, இதான் சாக்குன்னு உங்க அத்தை பசங்க
இருக்காங்களே அவங்களையும் பாக்க போறியா. பெங்களுர்ல தானே இருக்காங்க.
இல்லைங்க தம்பி
வீட்ல நான் இருந்தா அவங்களுக்கு உதவியா இருக்கும் தானே போகிறேன். அதனால தம்பி வீடு
தவிர வேற எங்கேயும் போக மாட்டேன். அத்தை, நாத்தனாரை பாக்க வந்தா அவங்கயும் பார்ப்பேன்.
இல்லனா இதுக்காக அங்க போக போறது இல்லை என்றாள், அவன் போக வேண்டாம் என்று சொல்லிவிடுவானோ என்று
பயந்தவாறே.
கருணாவின் அத்தை
மகன்கள் சந்திரன் மற்றும் புவனன் இருவரும் ஐ.டி. கம்பெனியில் வேலை
பார்க்கிறார்கள். கை நிறைய சம்பளம் வேறு. பார்க்கவும் லட்சணமாக இருப்பார்கள். அவர்களுக்கு திருமணம் முடிந்து ஆளுக்கு ஒரு
குழந்தை இருக்கிறது என்பது கூட தெரியாதா இல்லை வேண்டும் என்றே அவளை காயப்படுத்த
வேண்டும் என்று கேட்கிறானா என்று
தோன்றியது.
சரி, சரி போய் தொலை.
ஆனா போறதுக்கு முன்னாடி உன் தம்பிய தவிர வேற யார் வீட்டுக்கும் போக கூடாது. உன்
தம்பியவே டிக்கெட் எடுத்து தர சொல்லு. வழி செலவுக்கு 500 ரூபா தரேன். அதை செலவு
பண்ணாம எடுத்திட்டு வந்தா நல்லது. அப்பறம் இவங்க வீட்டுக்கு போனேன், அவங்க
வீட்டுக்கு போனேன் அப்படின்னு எனக்கு தெரிய வந்தா நீங்க ரெண்டு பேருமே திரும்பி வர
வேண்டாம் அங்கேயே இருந்திடுங்க என்றான் சுருக்கென்று.
அவளுக்கு
கன்னத்தில் அறைந்ததை போல் இருந்தது.ஒருவருக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் கூட
போய் பார்ப்பதற்கு எத்தனை பேச்சுகளை கேட்க வேண்டி இருக்கிறது. இத்தனை நாள் அக்கம்
பக்கத்தில் உள்ளவர்களை சந்தேகப்பட்டது
போய் இன்று உறவினர்கள் கூட பார்த்திபனின் சந்தேக வட்டத்தில் இருந்து
தப்பவில்லை.
சரிங்க என்றாள்.
அத்தனை பெரிய நகரத்தில் 500 ருபாய் எல்லாம் எந்த மூலை. ஒரு வேளை சாப்பாடு கூட
வாங்க முடியாது. ஒரு இடத்தில் இன்னொரு இடத்திற்கு ஆட்டோவில் செல்வது கூட கடினம்
ஆயிற்றே? இன்னும்
பணம் கேட்டால் நீங்க போக வேண்டாம் என்று சொல்வான். தம்பியிடம் கேட்பதற்கு கூச்சம்
மட்டும் அல்ல. தம்பி குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கி கொண்டு போய் கூட கொடுக்க
முடியாதே. பணமாக கொடுப்பது என்றாலும் 100 ரூபாயை விட கம்மியாக கொடுக்க முடியாது.
வழி செலவு, சாப்பாடு என்று அவர்களுக்கு வேறு செலவு ஆகும் .வேண்டாம் என்று
சொல்லாமல் போவதை எவ்வளவு கடினம் ஆக்கிவிட்டான். பணம் சம்பாதிக்காத பெண்கள் எல்லாம்
அடிமையை விட கீழானவர்கள் என்று மறுகினாள். போக முடியாது என்பதை விட
எல்லாவற்றையும் சந்தேக் கண் கொண்டு நோக்கும் அவன் செயல் அவளை அருவருக்க வைத்தது.
ஒரு கூண்டுக்குள் அவளை அடைத்ததை போல்
உணர்ந்தாள். கழிவிரக்கம் மிகுந்து ஒரு துளி கண்ணீர் வெளிவந்து அவள் கன்னத்தை
நனைத்தது.
அந்த கண்ணீர்
அவள் கண்களை தாண்டி கன்னத்தை தொட்டபோது கருணா நனவுலகத்திற்கு வந்தாள். கண்களில்
வழிந்த கண்ணீரை துடைத்தவள் ஆவேசமாய் அந்த மண்ணென்னை டின்னை திறந்தாள். அவள் திறந்த
வேகத்தில் மண்ணெண்ணெய் திறந்து கீழே சிதறியது . அந்த மண்ணெண்ணெய் சிதறிய இடத்தின்
மையத்தில் வந்து நின்றாள். இன்னொரு கையால் அங்கிருந்த தீப்பெட்டியை எடுத்து
பொருத்தினாள்.
பள்ளிகளுக்கு
இடையே நடந்த அந்த பேச்சு போட்டியில் அனுஷா ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தாள். ஓராண்டு
காலம் அசோக வனத்தில் சிறைப்பட்ட சீதையின் மனதில் ஒரு வினாடி கூட இராவணன்
தங்கவில்லை. தன் கற்பு திறத்தை ஒரு முறை அல்ல இரு முறை எளிதாய் தீயில் புகுந்து
நிரூபித்தாள். ஆனால் இராமானுக்கோ யுத்த களத்தில் அல்லாமல் வேறெங்கும் காணாத
இராவணன் அவன் உள்ளத்திலேயே தங்கி விட்டான். மனைவியை சந்தேகித்தான், அவளை பிரிந்து
வாழ்ந்தான், அசோகவனம் உண்மையில் சீதையின் சிறை அல்ல..அது ராமனுடைய
சிறை...கைதட்டல் ஓசை வெகுவேகமாக எழுந்தது.
அந்த கைதட்டல்
ஓசை ஏற்படுத்திய அதிர்வொலி காற்றில் பரவியிருக்கலாம். அதுவோ, அனுஷாவை பற்றிய
எண்ண அதிர்வோ, இராமனின் பெருமூச்சோ எதுவோ திறந்திருந்த சாளரத்தின் வழி சென்று
கருணாவின் கையில் இருந்த அந்த தீக்குச்சியை அணைத்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக