புதன், டிசம்பர் 28, 2011

அணை ஆயுதம் அல்ல



இதிகாசம் மற்றும் புராணங்களில் பல வகையான அஸ்திரங்களை பற்றிய குறிப்புகள்  உண்டு. பாசுபதாஸ்திரம், நாகபாணம் என்று பல பெயர்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். எந்த மாநிலத்தில் தேர்தல் நடந்தாலும் அந்தந்த மாநில அரசியல்வாதிகளுக்கு பாசுபதாஸ்திரம், நாகபாணம் போல தமிழ்நாட்டு மக்களின் குடி நீர் மற்றும் ஜீவாதாரம் சம்பந்தப்பட்ட அணைகளோ அல்லது நதி நீர் பங்கீடோ ஆகிவிடுகிறது. கர்நாடக மாநிலத்தில் சென்ற முறை தேர்தல் நடந்தபோது எடியூரப்பா ஒகேனக்கல் பிரச்னையை கிளப்பி எப்படி வெற்றி வாகை சூடினாரோ அதே பாணியில் இந்த இடைத் தேர்தலை மனதில் வைத்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி முல்லை பெரியாறு அணை பிரச்னையை கையில் எடுத்துள்ளார். தமிழ் நாட்டில் முல்லை பெரியாறு அணை பாசனத்தால் விளையும் உணவுப் பொருட்கள் கேரள மக்களுக்கும் போய் சேருகிறது. இடுக்கி அணையில் போதிய அளவு நீர்மின் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாததாலும், அந்த பகுதியில் உள்ள கேரளாவை சார்ந்த தொழில்கள் மின் உற்பத்தி இன்றி பாதிக்கப் படுவதாலும், முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம்  சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 155 அடியாக உயர்த்தப்பட்டால் முறையன்றி அணை பகுதியில் கட்டப்பட்ட கேரளாவை சார்ந்த சுற்றுலா விடுதிகள், ரிசார்ட்டுகள் போன்றவை காணாமல் போகும் என்ற அச்சத்தாலும் அணை பலவீனமாக இருப்பதாக கபட நாடகம் ஆடி வருகிறது கேரள அரசு.

Mullaperiyar Dam
முல்லை பெரியாறு அணை
 அணை நிலநடுக்கம் பாதிக்கும் பகுதியில் இருப்பதாக வைத்துக்கொண்டாலும் ஒரு வேளை அணை உடைந்தால் முல்லை பெரியாரில் இருந்து வெளியேறும் நீரை அதை விட ஏழு மடங்கு பெரிதான இடுக்கி அணையில் தேக்க முடியும். முல்லை பெரியாறு மற்றும் இடுக்கி அணைகளுக்கு இடையே உள்ள குமுளி, ஏலப்பாறா பகுதிகள் முல்லை பெரியாறு அணை மட்டத்தில் இருந்து பல நூறு அடிகள் மேலே இருக்கின்றன. எனவே நீரால் உயிர் சேதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. வெறும் 3 உறுப்பினர் பெரும்பான்மையில் பதவியில் இருக்கும் காங்கிரஸ் அரசு இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தால் பதவி இழக்க நேரிடும். பதவி ஆசை காரணமாகவே மடுவை மலையாக்கி இன உணர்வு என்னும் நெருப்புக்கு நெய்விட்டு குளிர் காய்கிறது கேரள அரசு. ரோம் நகரம் எரிந்த போதும் பிடில் வாசித்த நீரோ போல எந்த பிரச்சனை நடந்தாலும் கருத்து சொல்லாத பிரதமர் மன்மோகன் சிங் இந்த பிரச்னையில் தலையிட்டு எந்த சமரச முயற்சியும் எடுக்கப் போவதில்லை. முதலில் பொம்மை பிரதமர் நாட்டுக்கு தேவை இல்லை என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டால் பரவாயில்லை !!!

அணை உடைந்துவிடும் என்று முன்பு கேரள அரசு எழுப்பிய சந்தேகத்தை தீர்க்கும் பொருட்டு 1980 முதல் 1994 வரை நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில் தமிழகம் பல கோடி ரூபாய் செலவில் அணையை முன்பு இருந்ததை விட மூன்று மடங்கு பலப்படுத்தியது. இந்த உறுதித் தன்மை பல முறை நிபுணர்களின் ஆய்வின் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டது. 2 லட்சம் ஏக்கர் பாசனம் மற்றும் 60 லட்சம் தமிழ் மக்களின் குடி நீர் ஜீவதாரத்திற்கு ஆணிவேராக விளங்கும் முல்லை பெரியாறு அணையை வெறும் 5
வருடம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கொள்ளை அடிக்க நினைக்கும் இன்றைய அரசியல்வாதிகள் இந்த மண்ணில் தோன்றியவர்களா என்ன என்று சந்தேகிக்க மட்டுமே முடிகிறது. சோழ நாடு சோறுடைத்து என்ற பெருமையை பெற்றுத் தந்த கல்லணையை கட்டிய கரிகாலன் எங்கே, எந்த தொலை நோக்கும் இல்லாமல் கேவலம் ஆட்சிக்காக பல லட்சம் மக்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் அணையை இடிக்கப் போராடும் இன்றைய அரசியல்வாதிகள் எங்கே.

கேரளா மற்றும் கர்நாடக அரசியவாதிகளிடம் இருந்து தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கற்று கொள்ள வேண்டியது ஒன்று - தவறே ஆனாலும் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக இருப்பது. அரசியல்வாதிகள் மட்டும் அல்ல அணை பிரச்சனை ஆரம்பித்த பின்பு கேரள திரை உலகை சார்ந்த நடிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கேரள அரசியல் நிலைப்பாட்டிற்கு தாங்கள் ஆதரவு அளிப்பதாக அறிவித்து விட்டார்கள். ஆனால்
அரசியல்வாதியாக தன்னைக் காட்டி கொள்ளும் இளைய தளபதி நடிகர் மருந்துக்கு கூட தமிழ் நாட்டு மக்களுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அப்படிப் பட்டவரை தமிழ் நாட்டை காக்க வந்த இந்திரன் சந்திரன் என்று சிலாகிக்கும் கடைக் கோடி ரசிகனுக்கு இது புரிந்தால் சரி.தமிழ்நாட்டில் உள்ள  அரசியல் கட்சிகளும் தனி தனியாக கண்டன அறிக்கை/கூட்டம் என்று நடத்தியதுடன் சரி. ஒன்றிணைந்து ஒரு உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்த தமிழக அரசியல்வாதிகள் தவறி விட்டனர். 

Unity in Diversity

எடியூரப்பா பாசுபதாஸ்திரம் என்று எண்ணி எய்த ஒகேனக்கல் அம்பு பதவி அளித்தாலும் பதவியை அளித்த சில நாட்களிலே பதவியை பறித்து ஜெயிலுக்கே அனுப்பி வைத்தது. இன்று எடியூரப்பா அரசியலில் இருக்கும் இடமே தெரியவில்லை. கேரளா முதல்வர் உம்மன் சாண்டியும் பிரம்மாஸ்திரம் என்று எண்ணி முல்லை பெரியாறு அணை பிரச்னையை எடுத்துள்ளார். பிரம்மாஸ்திரத்தை எய்து அதை திரும்பப் பெறும் வழி அறியாமல் தண்டிக்கப் பட்ட அஸ்வத்தாமன் கதையை உம்மன் சாண்டி படித்திருக்கவில்லை போலிருக்கிறது.எனினும் கேரள மக்கள் இந்த உண்மையை உணர்ந்து காங்கிரஸ் அரசை வரும் தேர்தலில் தோல்வி அடையச்  செய்து பிரிவினை அரசியல் வளர்ச்சி ஆயுதம் அல்ல அது வீழ்ச்சி ஆயுதம் என்றும் கேரள மக்கள் இந்திய ஒருமைப்பாட்டுக்கு துணை நிற்பவர்கள் எதிரானவர்கள் அல்ல என்பதையும் நிரூபிக்க வேண்டுகிறேன்.

வெள்ளி, டிசம்பர் 09, 2011

நீ மொழிகள் என்றால் நான் தமிழா? ஓசைகளா?

Kolaveri Di Song
வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் இசையோடு இணைப்பது தமிழர் வழக்கம். சந்தோஷம், துக்கம், வெறுமை, காதல், உறவு, பிரிவு என்று எல்லா வித உணர்வுகளையும் நாட்டுப்புற பாட்டு, கவிதை, கானா என்று பல வழியாக வெளிப்படுத்தியது ஒரு காலம் என்றால் இன்றோ திரை இசை அந்த இடத்தை  பிடித்து உள்ளது.

சமீபத்தில் வெளியான "மூன்று" படத்தின் பாடலே இந்த கட்டுரை எழுத என்னைத் தூண்டியது. "ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி" என்று தொடங்கும் அந்த பாடல் மெட்டு நன்றாக இருந்தாலும் தமிழ் பாடலா இது என்று எண்ணும் அளவுக்கு ஆங்கில வார்த்தைகள் மட்டுமே பெரும்பான்மையாக கொண்டுள்ளது. ஆனால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதால் மொழி எல்லைகளை கடந்து பிபிசி லண்டன் வானொலி வரை ஒலித்த முதல் தமிழ்(ஆங்கில??) பாடல் என்பது பெருமை தரும் விஷயம். ஒரு புறம் இந்திய இசை அமைப்பாளர்களின்  இசைத்திறன்  உலகெங்கும் பரவி இந்தியா என்றாலே ஐ .டி. கம்பெனிகள் மட்டும் தான் என்ற மாயையை உடைத்து இந்தியர்களின் பன்முகத் தன்மையை உலகுக்கு எடுத்து சொல்லும் விதமாக இந்த பாடல் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளித்தாலும், மயில் இறகு போல் மனதை வருடும் அர்த்தம் பொதிந்த பாடலுக்கே மனசு ஏங்குகிறது.

ரம்மியமான ஒரு மாலை நேர மழை நாளில் குளிருக்கு இதமாக தேநீர் பருகியபடியே வீதியில் வெள்ளமாக சுழித்து ஓடும் மழை நீரை காணும் மகிழ்ச்சி வருகிறது கீழ்வரும் இந்த பாடல் வரிகளை கேட்கும் போதெல்லாம்.

தூரத்தில் வந்தாலே என் மனதில் மழையடிக்கும்
மிகப்பிடித்த பாடல் ஒன்றை உதடுகளும் முணுமுணுக்கும்
மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம்
மரணம் வரையில் என் நெஞ்சில் தாங்கும்
உனது கண்களில் எனது கனவினை காணப் போகிறேன்
(திரைப்படம்: காக்க காக்க பாடல்: ஒன்றா ரெண்டா ஆசைகள் பாடலாசிரியர்: தாமரை )

காதலன் தன்னுடைய காதலியை பற்றி "மின்னலை பிடித்து, மேகத்தை துடைத்து, பெண் என்று படைத்து வீதியில் விட்டு விட்டான்" என்று அழகுற வர்ணிக்கும் போது  உண்மையிலேயே கேட்பவருக்கும் அத்தகைய அழகான பெண்ணை பற்றிய கற்பனையை கடத்துகிறான்.

காற்றிலே அவளது வாசனை, அவளிடம் யோசனை கேட்டுதான் பூக்களும் பூக்குமா
நெற்றி மேலே ஒற்றை முடி ஆடும் போது நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்
பார்வை ஆளை தூக்கும்
.....
சாலையில் அழகிய மாலையில் அவளுடன் போகவே ஏங்குவேன் தோள்களில் சாயுவேன்.
பூமியில் விழுகிற வேளையில் நிழலையும் ஓடி போய் ஏந்துவேன் நெஞ்சிலே தாங்குவேன்
(திரைப்படம்: பையா பாடல்: துளி துளி துளி மழையாய் பாடலாசிரியர்: ந. முத்துகுமார்)

கோமாளியின் முகமூடி அணிந்து கமலஹாசன் "அபூர்வ சகோதரர்கள்" திரைப்  படத்தில் உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் என்று பாடிக்  கலங்கும் போது
 ஈரம் பூக்காத கண்களே இருக்க முடியாது. மெட்டை வார்த்தைகள் ஜெயித்த ஜாலம் அது.

வானம் அழுதாக்கா இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சில பேர் சொந்த வாழ்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்...
கொட்டும் மழை காலம் உப்பு விற்க போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விற்க போனேன்
தப்பு கணக்கை போட்டு தவித்தேன் தங்கமே ஞான தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞான தங்கமே
(திரைப்படம்: அபூர்வ சகோதரர்கள் பாடல்: உன்ன நெனச்சேன் பாடலாசிரியர்: ந. முத்துகுமார் )

சமீபத்தில் வெளியான  7 ஆம் அறிவு திரைப் படத்தில் வந்த பாடலின் சோக வரிகள் இங்கே. நாயகனின் மனக் காயம் ஆற்றும் ஆறுதல் வார்த்தைகளை கேட்போர் அனைவரும் தேடி தோற்பர்.

வந்து போனதாரு ஒரு நந்தவன தேரு 
நம்பி நொந்து போனனேன் பாரு அவ பூவு இல்லை நாறு
(திரைப்படம்: 7 ஆம் அறிவு  பாடல்: யம்மா யம்மா காதல் பாடலாசிரியர்: கபிலன்)

பாரதியாரின் கருத்தாழம் மிக்க பாடல் வரிகள் கண்ணனையும் கண்ணம்மாவையும் நம் மனதில் சிம்மாசனம் போட்டு அமரவைக்கும் நேர்த்திக்கு ஈடு இணையில்லை.

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா நிந்தன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
(திரைப்படம்: ஏழாவது மனிதன் பாடல்: காக்கை சிறகினிலே பாடலாசிரியர்: மகாகவி சுப்பிரமணிய பாரதியார் )

சுட்டும் விழி சுடர் தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ
வட்ட கரிய விழி கண்ணம்மா
வானக் கருமை கொள்ளோ
பட்டுக் கருநீல புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு  நிசியில்
தெரியும் நட்சத்திரங்களடி
(திரைப்படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பாடல்: சுட்டும் விழி பாடலாசிரியர்: மகாகவி சுப்பிரமணிய பாரதியார்)

சுதந்திர போராட்ட காலத்தில் தெருக்கூத்து, நாடகங்கள் வாயிலாக மக்களுக்கு ஊட்டப்பட்ட நாட்டுப்பற்று இன்று வைரமுத்துவின் வைர வரிகளாய் மக்களை சென்று அடைகிறது.

மொழி மாறலாம் பொருள் ஒன்றுதான்
கழி மாறலாம் கொடி ஒன்றுதான்
திசை மாறலாம் நிலம் ஒன்றுதான்
இசை மாறலாம் மொழி ஒன்றுதான்
நம் இந்திய மொத்தம் ஒன்றுதான் வா
(திரைப்படம்: ரோஜா பாடல்: தமிழா தமிழா பாடலாசிரியர்: வைரமுத்து)



தன் செய்கையால் மனக் காயமுற்ற வாய் பேச இயலாத காதலியை எவ்வளவு அழகாக தேற்றுகின்றன இவ்வரிகள். இவ்வளவு  அழகாக கவிதை புனையும் திறன் வாய்ந்த காதலனை ஒரு முறை என்ன ஆயிரம் முறை மன்னிக்கலாம் என்று தோன்றுகிறது.

பெண்ணே அறிந்து கொண்டேன் இயல்பே அழகு என்பேன்
பூவை வரைந்து அதிலே மீசை வரைய மாட்டேன்
மௌனம் பேசும் போது சத்தம் கேட்க மாட்டேன்
மூன்றாம் பிறையின் உள்ளே நிலவை தேட மாட்டேன்
வாழ்வோ துவற்குதடி வயசோ கசக்குதடி
சைகையிலே எனை மன்னித்து சாபம் தீரடி
(திரைப்படம்: மொழி பாடல்: கண்ணால் பேசும் பெண்ணே பாடலாசிரியர்: வைரமுத்து)

துவண்டு கிடப்பவனுக்கு 100 பாட்டில் க்ளுகோஸ் ஏற்றினால் எப்படி இருக்கும். அப்படி ஒரு உந்துதலை தோற்றுவிக்கிறது சமீபத்தில் வந்த இந்த பாடல்.

இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
 நம்ப முடியாதா நம்மால் முடியாதா நாளை வெல்லும் நாளாய் செய்வோமே
யாரும் இல்லை தடை போட உன்னை மெல்ல எடை போட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே
என்ன இல்லை உன்னோடு ஏக்கம் என்ன கண்ணோடு வெற்றி என்றும்  வலியோடு பிறந்திடுமே
( திரைப்படம்: 7 -ஆம் அறிவு பாடல்: இன்னும் என்ன தோழா  பாடலாசிரியர்: ப.விஜய்)

கண்ணதாசன், சந்திரபாபு ஆகியோர் எழுதிய பாடல்களை பற்றி சொல்லவே வேண்டாம். சாகாவரம் பெற்ற பாடல்கள் என்றால் அவர்கள் எழுதிய பாடல்கள் மட்டுமே. அர்த்தம் பொதிந்த வரிகள், கருத்தாழம் மிக்க சொற்கள், அன்றைக்கு மட்டுமன்றி என்றைக்கும் மாறாத உண்மைகளை எளிமையாக எடுத்து சொன்ன பாங்கு என்று அப்பாடல்களை பற்றி பெருமையாக அடுக்கிக்  கொண்டே செல்லலாம்.

பணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணமில்லாத மனிதருக்கு சொந்தம் எல்லாம் துன்பம்
( திரைப்படம்: அன்னை  பாடல்: புத்தியுள்ள மனிதர் எல்லாம் பாடலாசிரியர்: ஜே.பி. சந்திரபாபு)

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானம் உள்ள மனிதனுக்கு அவ்வை சொன்னது
அது அவ்வை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
(திரைப்படம்: சூரியகாந்தி  பாடல்: பரமசிவன் கழுத்தில் பாடலாசிரியர்: கவியரசு கண்ணதாசன்)

வரிகளில் மட்டுமே பாடல்களின் ஜீவன் உள்ளது. நல்ல இசை அந்த பாடல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை மட்டுமே செய்கிறது. நாக்க முக்க, எவண்டி உன்னை பெத்தான், மன்மதராசா  போன்ற வகை பாடல்கள் மெட்டுக்காக ஹிட் அடித்தாலும் நல்ல அர்த்தம் கொண்ட வரிகள் உள்ள பாடல்களுக்கு எப்பவுமே மவுசு அதிகம்.   

திரைக் கவிஞர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஒய் திஸ் கொலைவெறி டி பாடலின் வெற்றிக்கு பிறகு நீங்களும் "இப்போ இதான் ட்ரெண்டு", டைரக்டர் கேட்டாரு அதான், தமிழ்ல யோசிக்கவே வர மாட்டேங்குது" என்று சப்பை காரணங்களை சொல்லி ஆங்கில/தமிழ் கலவை அல்லது மிகுதியான ஆங்கில வார்த்தைகளை கொண்ட பாடல் எழுதக் கிளம்பாமல் காலம் முழுதும் நினைவில் நிற்கும் தேன் தமிழ் பாடல்கள் மட்டுமே எழுதி எங்களை மகிழ்வியுங்கள் என்பது தான். உலகில் உள்ள எந்த மொழிக்கும் இல்லாத  பெருமை தமிழுக்கு உண்டு - அது என்னவென்றால் தமிழ் என்ற மொழியின் பெயரையே ஒருவருக்கு பெயராக சூட்டி மகிழலாம். உலகில் உள்ள எந்த மொழிக்கு இந்த பெருமை உண்டு? ஆங்கிலம் என்ற இனிப்பை சிறிதளவு உண்டால் ஒன்றும் பாதிப்பு இல்லை. ஆனால் இனிப்பையே உணவாக உண்ண முடியாது. எனவே தெள்ளு தமிழில் மட்டுமே உங்கள் கவிதைகளை/பாடல்களை  படைத்து எங்களை மட்டுமன்றி தமிழ் தாயையும் மகிழ்வியுங்கள். பாரதியாரின் கீழ்கண்ட வாக்கை மெய்ப்பியுங்கள்.  

தேமதுர தமிழோசை உலகெல்லாம்
பரவும் வகை செய்தல் வேண்டும் 

திங்கள், நவம்பர் 07, 2011

வந்தான் வென்றான்


சமீபத்திய தீபாவளி ரிலீஸ் திரைப்படங்களில் வேலாயுதம் முந்தியதா இல்லை 7 -ஆம் அறிவு முந்தியதா என்று விஜய் ரசிகர்களும் சூர்யா ரசிகர்களும் கச்சை கட்டி மோதிக் கொள்ளும் இந்த நேரத்தில் எந்த திரைப்படம் வெற்றி வாகை சூடியது என்பது பற்றி ஒரு அலசல். முதலில் தெளிவு படுத்த வேண்டியது ஒன்று உண்டு - அது நான் விஜய் ரசிகையும் அல்ல சூரியா ரசிகையும் அல்ல. எனவே எனது விமர்சனம் எந்த சமரசத்திற்கும் உடன் பட்டது அல்ல என்பதே.
சூர்யா, விஜய் இருவரும் திறமையான நடிகர்கள்.  திரைத்துறையில் பல வருடமாக இருந்து பல வெற்றி திரைப்படங்களை நமக்கு அளித்து  இருக்கிறார்கள். சூர்யா படத்திற்கு படம் காட்டும் வித்யாசமான நடிப்பும், தன் உடலை வருத்தி - 20 வயது இளைஞன் கதாபாத்திரம் முதல் 60 வயது முதிய கதாபாத்திரம் வரை பொருந்துவதற்காக மெனக்கிடுவதாகட்டும், நடனம், சண்டை என்று எல்லாவற்றிலும் அற்புதமாக மிளிர்பவர். விஜய்யும் சூரியாவிற்கு இளைத்தவர் அல்ல. நடனம், சண்டை, காமெடி என்று பல தளங்களில் பரிமளிப்பவர். இப்படி இருக்க எந்த நடிகர் சினிமாவின் அடுத்த தளத்திற்கு தனது புதிய திரைப்படம் மூலம் சென்றார் என்ற கேள்வி எழுகிறது. 


விஜய் படம் என்றால் பொழுது போக்குக்கு கண்டிப்பான கியாரண்டி உண்டு. மசாலா ஆக்ஷன் தூக்கலான கதை, அரசியல் பலம் வாய்ந்த அல்லது மந்திரியாகவோ முதலமைச்சராகவோ பதவியில் உள்ள வில்லன், தொப்புள் காட்டும் செகண்ட் ஹீரோயின் , குடும்ப குத்துவிளக்கு பர்ஸ்ட் ஹீரோயின், அண்ணனே/மகனே உலகம் என்று வாழும் தங்கை அல்லது தாய் கதாபாத்திரம் என்று சினிமாவின் இலக்கணங்கள் மீறாத கதை அமைப்பு கொண்ட படம்  என்றால் கண்ணை மூடிக் கொண்டு விஜய் படம் என்று தைரியமாக சொல்லலாம்.

சூரியா படங்கள் அந்தளவுக்கு யூகிக்க கூடிய கதை அமைப்பு உள்ள படங்கள்  இல்லை என்றாலும் பல சமயம் நல்ல திரை கதையிலும் சூர்யாவின் நட்சத்திர அந்தஸ்திற்காக திணிக்கப்படும் மசாலா விஷயங்கள் விஜய் படத்திற்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல. ஆக்ரோஷமாக படம் முழுவதும் கத்திக் கொண்டிருக்கும் வில்லன், அறிமுக தத்துவ பாடல், முறுக்கு மீசை, அருவாள் என்று பல படங்களில் சூரியா படமும்  பார்முலா வட்டத்தில் சிக்கியுள்ளது கொஞ்சம் வருந்த தக்கதே.

 
ஒரு திரைக்கதை பல சமரசங்களுக்கு பிறகே திரைப்படமாக எடுக்கப்படுகிறது என்பதும், வியாபார நோக்கதிற்காக மட்டுமே எடுக்கப்படுகிறது   என்பதும், எப்படியாவது ரசிகர்களை இரண்டரை மணி நேரம்  தியேட்டரில் உட்கார வைக்க  வேண்டும் என்ற கட்டாயத்திற்காக பல கவர்ச்சி அம்சங்கள் சேர்க்கப்பட்டு அலங்கோலப்படுகிறது என்பதும் நான் அறியாதது அல்ல. எனினும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்களான சூரியா மற்றும் விஜய்யும் தனது புதிய திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு எடுத்து சென்றார்களா என்றால் இல்லை என்றே தான் சொல்ல வேண்டும்.




முதலில் வேலாயுதம் - விஜய் ஜெயம் ரவிக்கு இணையாக "ரீமேக்" விஜய்யாக அவதாரம் எடுத்து ரொம்ப நாள் ஆயிற்று. கடைசியாக எந்தப் விஜய் படம் ரீமேக் இல்லை என்பதே நினைவில் இல்லை. வேலாயுதமும் "ஆசாத்" என்ற தெலுங்கு படத்தின் தழுவலே. விஜய் தனது ரோலுக்காக எந்த படத்திலும் பெரிய அளவு மெனக்கிடுவதில்லை என்பது அடுத்த குறை. அதாவது எந்த படத்திலும் பெரிய அளவுக்கு கெட்டப்பை மாத்தி நடிக்க எத்தனிப்பதில்லை. (அப்படி நடிச்சாலும் யார் பார்ப்பா என்று நீங்க முணுமுணுக்கறது கேட்குது) பார்முலா மரத்தையே சுற்றி சுற்றி வரும் விஜய் நாலு பாட்டு, அஞ்சு சண்டை, இரண்டு அழுகை சீன் என்று சின்ன வட்டத்தில் சுழன்று பார்ப்பவருக்கும் அலுப்பு மூட்டுகிறார்.
வேலாயுதமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. சந்தானம் காமெடியில் ஏற்கனவே உச்சத்தில் உள்ளார். விவேக், வடிவேலு ஆகியோர் விட்ட இடத்தை அவர் நிரப்ப வேண்டிய அந்தஸ்தில் உள்ளதால் இந்த படம் அவருக்கு ஒரு பெரிய திருப்பு முனை என்று கூற முடியாது. விஜய் அந்தோணி பாடல்கள் மாஸ் மற்றும் கிளாஸ் ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் உள்ளது. இந்த படத்தின் மூலம் சிறிதளவாவது பயன் அடைந்தவர் என்றால் அது ஹன்சிகாவும், ஜெனீலியாவும் தான். ஏன் என்றால் அவர்களுக்கு மட்டும் தான் புதிய பட வாய்ப்பு கிடைக்கும் முகாந்திரம் உள்ளது. மற்றபடி வேலாயுதம் - புதிய மொந்தையில் பழைய கள்.

அடுத்து 7-ஆம் அறிவு. அற்புதமாக தொடங்கும் திரைக்கதை காதல், டூயட் பாடல்,  பிரிவு மீண்டும் சோகப் பாட்டு என்று பாதியிலேயே நொண்டி அடிக்கிறது. சுருதிஹாசன் அற்புதமாக நடித்துள்ளார். சில பல இடங்களில் சூரியாவையே மறக்கச் செய்கிறார். ஆனாலும் திரைக்கதையில் பல கதாபாத்திரங்கள்  என்ன ஆகியது என்பதே தெரியாமல் அமைக்கப் பட்டுள்ளது. உதாரணம் அந்த ப்ரொபசர் பாத்திரம். அவரை போலீஸ் கைது செய்ததா என்பது கடைசி வரை தெரியவில்லை. வழக்கம் போல கிளைமாக்ஸ் காட்சியில் வில்லன் அத்தனை அடி அடித்த பின் எழும் ஹீரோ வில்லனை துவைத்து தொங்கபோடுவதை இன்னும் எத்தனை சினிமாவில் பார்த்து  நொந்து போக வேண்டுமோ. கின்னஸ் பக்ரு மற்றும் சுருதி ஹாசன் போன்றோருக்கு இந்த படத்தின் மூலம் வேறு பட வாய்ப்புகள் கிடைக்க வழி உண்டு. ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கம் போல தாளம் போட வைக்கிறார். முருகதாசிற்கு அடுத்த படத்திலாவது நல்ல எடிட்டர் அமைய வாழ்த்துக்கள்.  7-ஆம் அறிவு - ஆற்றின் குறுக்கே எழுப்பட்ட மணல் பாலம். 



சரி ரெண்டு படமுமே சுமார் தானா ரெண்டுமே நல்லா இல்லையா என்று கேட்பவர்களுக்கு என்னோட அட்வைஸ். படத்தோட மெசேஜ் அப்படிங்கற ஒரே காரணத்துக்காக 7-ஆம் அறிவு வேலாயுதத்தை விட நிச்சயம் முன்னணியில் உள்ளது அப்படின்னு சொல்லுவேன். தமிழர்கள் எத்தகைய பாரம்பரியம் கொண்டவர்கள் என்பதும்  நமது மருத்துவம், வான சாஸ்திரம், அறிவியல் அறிவு ஆகியன இன்றிருக்கும் மேற்கத்திய நாகரிகத்தை விட எத்தனை உயர்வானது, விரிவானது, ஆழமானது என்பதை காட்டும் முகமாக இருந்ததால் 7-ஆம் அறிவு-க்கே  எனது வோட்டு . எல்லாருக்கும் தெரிஞ்ச மெசேஜ் தான். இருந்தாலும் தமிழன்  திரைப்படத்தின் மூலமாக மெசேஜ் சொன்னா தானே கேட்பான். வேலாயுதம் மெசேஜ் நல்லா இருந்தாலும் இன்றைய கால கட்டத்தில் அடாவடி பண்றவனை தட்டி கேட்டால் என்ன நடக்கும் என்று கொஞ்சம் மதுரை அல்லது சென்னை பக்கம் போய் பாத்துட்டு வந்து சொல்லுங்க பாஸ் என்றே சொல்ல தோன்றுகிறது. காவலன் வந்த போது ரிலீஸ் பண்ண தியேட்டர் கிடைக்காமல் தவித்த விஜய் அநியாயத்தை தட்டி கேளுங்கள் என்று சொல்லும் போது கேட்க கொஞ்சம் நெருடலாக தான் இருக்கிறது. தட்டி கேட்ட ஜெனீலியா மற்றும் அவரது நண்பர்களுக்கு என்ன ஆச்சின்னு படத்துல வர்ற முதல் காட்சியை நீங்க பார்த்திங்களா விஜய் அப்படின்னும் கேட்க தோணுது. 


இத்தகைய படங்களை பார்த்து ரசிக்கும் ரசிகர்களுக்கு இந்த இரண்டு நடிகர்களும் செய்ய  வேண்டியது உண்டு. அது திரை துறையில் காலுன்ற கஷ்டப்படும் இளம் நடிகர்களுக்கு தங்கள் படத்தின் மூலம் வாய்ப்பு அளிப்பது, நல்ல இயக்குனர்களை அறிமுகப்படுத்துவது, ஆண்டு தோறும் ஒரு படத்தில் மாறுபட்ட வேடம் ஏற்று நடிப்பது அல்லது அப்படிப் பட்ட கதை அம்சம் உள்ள திரைப்படத்தை தயாரிப்பது போன்ற எதாவது ஒன்றை கடைபிடித்தால் இவர்களுக்கு திரைத்துறையில் அழிவில்லாத ஒரு இடம் நிச்சயம் உண்டு.


உங்களுக்கு ரெண்டு படத்தையும் பார்க்க நேரம் கிடைத்தால் ரெண்டு படத்தையும் பாருங்க. அப்படி இல்லேன்னா 7-ஆம் அறிவு-க்கு நேரம் ஒதுக்குங்கள்.  யாம் பெற்ற இன்பம்(உங்களுக்கு துன்பமாக இருந்தால்..மன்னிக்கவும்) பெருக இவ்வையகம்.

வியாழன், நவம்பர் 03, 2011

கதம்ப மாலை - 3

மனிதன் எங்கே
பெய்ஜிங் சீனா-வில் சாலை விபத்தில் அடிபட்டு ரோட்டோரம் கிடந்த குழந்தையை எண்ணற்ற பாதசாரிகள் கண்டும் உதவாமல் சென்றது மனதை சுட்டது. ஒரு வேளை சரியான நேரத்தில் முதலுதவி கிடைத்திருந்தால் குழந்தை இன்று உயிருடன் இருந்திருக்குமோ என்னமோ. அந்த குழந்தையின் தாயின் கண்ணீர் முகம் நினைவில் இருந்து அகல மறுக்கிறது. ரோட்டோரம் கிடந்தது பண மூட்டையாயின் யாரும் பார்க்காமல் சென்றிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. ஆப்பிரிக்காவில் பட்டினி சாவு, சிறிலங்காவில் ஈழப்  போரில் எண்ணற்ற தமிழர்கள் உயிர் இழந்தது, துருக்கி நில நடுக்க உயிரிழப்பு ஆகியன யார் மனதிலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. இந்த அவசர யுகத்தில் தன் பிள்ளை தன் குடும்பம் தன் வீடு என்ற சிறிய வட்டத்தில் மனித மனம் சுருங்கி கடுகளவாகி விட்டது.  பெரியோர் ,முதியோர்  ஆகியோருக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை. மாசற்ற குழந்தைக்கு உதவக் கூடவா ஒருவரும் முன்வரவில்லை என்பதை நினைக்க நினைக்க மனம் பதறுகிறது.  குழந்தை அடிபட்டு ரோட்டில் கிடந்த போது 18  பேர் அதை கடந்து சென்றுள்ளனர். 19  நபராக ரோட்டில் சென்ற குப்பை அகற்றும் பணி செய்யும் பெண்மணி ஒருவர் அந்த அடிபட்ட குழந்தையை அதன் தாயிடம் எடுத்து சென்று சேர்ப்பித்துள்ளார். அவரை போன்ற ஒரு சிலர் இருப்பதால் தான் நாட்டில் மழை பொழிகிறது. சீனா என்றில்லை இந்தியாவிலும் சாலை விபத்தில் அடிபட்டவரின் நிலை இது தான். உயிர் காக்க உதவுவதற்கு பதில் அடிபட்டவரின் பணம், நகை ஆகியவற்றை களவாட கண்டிப்பாக ஒரு கும்பல் கூடிவிடும். நாகரிகத்தின் தொட்டில் என்று தங்களை அடையாள படுத்திக்கொள்ளும் இந்தியா போன்ற நாடுகளும்,  உலகின் பெரிய வலிமை வாய்ந்த நாடாக காட்டிக் கொள்ளும் சீனா போன்ற நாடுகளும் தங்கள் மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்பதை எண்ணி பார்க்க வேண்டும். எங்கு பிறர் துன்பம் கண்டு இரங்கும் மனநிலை உள்ள மக்கள் வசிக்கிறார்களோ, எங்கு சின்னஞ்சிறு குழந்தை முதல் முதியோர் வரை சமமான பாதுகாப்பு உள்ளதோ  அந்த நாடே வலிமை வாய்ந்த நாடு. அதுவே நாகரீகத்தின் தொட்டில். மற்றதெல்லாம் மனித தோல் போர்த்திய கொடிய மிருகங்கள் வசிக்கும் காடு மட்டுமே.



இயற்கை என்னும் இளைய கன்னி

வட அமெரிக்காவில் வந்து குடியேறிய பிறகே பருவ கால சுழற்சியை நேரில் கண்டு உணர முடிந்தது - பனிக்காலம், வசந்தகாலம், கோடைகாலம், முன்பனிக்காலம் என்ற நான்கு விதமான காலங்களும் ஒவ்வொன்றிற்கும் உரித்தான பண்டிகைகளும், அதை கடைப்பிடிப்பதன் நோக்கமும் இவ்வளவு வருடங்களுக்கு பிறகு அத்துபடியாகிவிட்டது என்றே சொல்லலாம். இருப்பினும் முன்பனிக்காலத்தில் மரங்கள் நிறம் மாறும் அழகை(Fall Colors) எத்தனை முறை கண்டாலும் அலுப்பதில்லை. மஞ்சள், சிவப்பு, இளம் சிவப்பு, மனம் மயக்கும் பச்சை என்று பல்வேறு வண்ணங்களில் இலைகள் கொண்ட மரங்களை கண்டு களிக்க இந்த முறை நாங்கள் சென்றது டென்னிசியில் உள்ள ஸ்மோக்கி மௌன்டைன் தேசிய பூங்காவிற்கு. அமெரிக்கா-வில் அதிகமான மக்களால் பார்வையிடப்படும் தேசிய பூங்காவான ஸ்மோக்கி மௌன்டைன் தேசிய பூங்கா வண்ணங்களின் குவியமாக காட்சி அளித்தது. அடிக்கும் குளிர் காற்றையும் பொருட்படுத்தாமல் எண்ணற்ற சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சியை கண்டு களிப்பதற்காக வந்திருந்தனர். சலசலக்கும் ஓடைகளும், வெண்மேகம் தங்கும் மலை முகடும், வண்ணங்கள் தெறித்தார் போன்ற மலை பிரதேசமும், சிலு சிலு வென்ற வாடை காற்றும் அள்ள அள்ள தெவிட்டாத அழகு. குடும்பத்தினர், நண்பர் என்று வெகு நாட்களாக பார்க்காத பலரை பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பதாக இருந்தது. செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் குடும்பத்தினருடன் அவசியம் பார்க்க வேண்டிய இடம். ஒரு வேளை அங்கு செல்ல முடியாவிட்டாலும் தெற்கு கரோலினாவில் உள்ள ஆஷ்வில் சென்றும் அப்பளசியன் மலை தொடரின் அழகை கண்டு ரசிக்கலாம். குடும்பத்தினருடன் சென்றால் பூங்காவினுள் அமைந்து உள்ள பல நூறு குடில்களில் (cabin ) ஒன்றை வாடகைக்கு எடுத்து பூங்காவின் இயற்கை அழகை அருகிலேயே கண்டு களிக்கலாம்.பார்வைக்கு விருந்தளிக்கும் சில புகைப்படங்கள் கீழே.
  


நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது
என்னடா தலைப்பு இப்படி இருக்கே ஒருவேளை நான் அதிமுக அனுதாபியோ என்று நினைக்க வேண்டாம். எவ்வளவு மோசமான அரசியல்வாதிகள் வந்தாலும் கடுகளவேனும் நன்மை நடக்கும் என்று எதிர்பார்ப்புடன் வாழ்க்கையை நடத்தும் கடைசி குடிமகன் போன்ற நம்பிக்கைவாதி நான் என்று கொள்ளலாம். உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது அதிமுக. முன்னமே சட்டசபை தேர்தலை பற்றி நான் எழுதியது போன்று இது அதிமுகவிற்கு விழுந்த வோட்டு அல்ல. மக்கள் திமுக மேல் கொண்ட தீராத அதிருப்தி காரணமாக அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி. பொறுப்பான எதிர்கட்சியாக செயல்படாமல் "கடவுளுடனும் மனசாட்சியுடனும் மட்டுமே கூட்டு" என்று தேர்தலுக்கு முன்பு முழங்கி பின்னர் கூட்டணிக்காக ஏங்கி தவித்து நின்ற தேமுதிக விற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு தடாலடியாக சரிந்துள்ளது நல்லதற்கே. மக்களை அவ்வளவு சீக்கிரம் முட்டாள் ஆக்கிவிட முடியாது என்று தேமுதிக-விற்கு இதன் மூலம் புரிந்தால் நலம்.
கூட்டணி இல்லாமல் அனைத்து பெரிய கட்சிகளும் தனியாக நின்று எதிர்கொண்ட இந்த தேர்தல் ஒரு அதிசயம். இதன் மூலம் தனித்து நிற்கும் கட்சிகளுக்கு தங்கள் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை சீர்துக்கி பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பாகவும், கூட்டணி பலத்தால் சட்ட மன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடிய கட்சிகள் தற்போது தனித்து நின்றதால் மக்கள் மனதில் தாங்கள் எந்த இடத்தில் உள்ளோம் என்பதை தெரிந்து கொள்ளும் முகமாக அமைந்ததாலும் இந்த தேர்தல் வரலாற்றில் ஒரு மைல் கல்.  ஆனாலும் "உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது அதிசயம் அல்ல" என்று வாய் ஜாலம் காட்டும் கருணாநிதி இந்த தோல்வி மூலம் ஒன்றும் தெரிந்து கொள்ளபோவதில்லை என்பது மட்டும் உண்மை.கருணாநிதிக்கு உள்ள குடும்ப பிரச்சனையில் அவரால் வெற்றி தோல்வியை சீர் தூக்கிப் பார்த்து கட்சியை ஒருங்கிணைப்பது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. ஜெயலலிதா இந்த வெற்றியை சாமர்த்தியமாக கையாண்டால் அதிமுகவுக்கு ஏறுமுகம் தான். வேண்டும் போது காலில் விழுவதையும் வேண்டாத போது கழுத்தை பிடிப்பதையும் கொள்கையாக வைத்திருக்கும் ஜெயலலிதா மக்களின் எண்ண ஓட்டத்தை படித்து அவர்களுக்கு பயன் தரும் பல நல்ல திட்டங்களை ஊழலற்ற முறையில் செயல்படுத்தினால் அவரை வீழ்த்த எவரும் இல்லை. ஜெயிப்பாரா அல்லது வெற்றி தந்த மமதையில் வீழ்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.  

அமலா பால்
தோன்றின் புகழோடு தோன்றுக
"இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்" என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வந்தது ஆப்பிள் சக நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்த செய்தி கேட்டு. கல்லூரி படிப்பை கூட முடிக்காத ஸ்டீவ், தனது ஆப்பிள் நிறுவனம் மூலம் உருவாக்கிய ஐ-பாடு, ஐ-பாட், ஐ-போன், மாக் வகை பி.சி- க்கள் போன்ற நவீன கருவிகளால் தொலைபேசி, இசை, கம்ப்யூட்டர் என்று எல்லா துறைகளையும்  நவீனப்படுத்தினார்  என்று சொன்னால் மிகை இல்லை. ஒரு தனி மனிதனால் எந்த வகையான மாற்றத்தை இந்த உலகத்தில் கொண்டு வர முடியும் என்பதற்கு சிறந்த இரு வார்த்தை பதில் - ஸ்டீவ் ஜாப்ஸ். குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் உபயோகப்படுத்தக் கூடிய எளிய வகை வன்பொருள்கள், அதை வடிவமைத்த விதம், தொழில்நுட்பம் மற்றும் அதை அற்புதமான சந்தை பொருள் ஆக்கிய வித்தை ஆகியன ஆப்பிள் நிறுவன பொருட்களுக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை ஏற்படுத்தி கொடுத்தன என்று சொன்னால் மிகை இல்லை. பிறந்தவுடன் தத்து கொடுக்கப்பட்டு, மேற்படிப்புக்கு வழி இல்லாததால் கல்லூரி படிப்பை கை விட்டு, பின்பு தனி நபர் கணினியை தனது வாகன கூடத்தில் இருந்து உற்பத்தி செய்து விற்று, தனது இருபத்தி ஒன்றாவது வயதில் கோடீஸ்வரன் ஆனது என்று ஸ்டீவ் நடந்து வந்த பாதை பற்றி படிக்க படிக்க நமக்கு வியப்பு வராமல் இருக்காது. பிறகு தான் தொடங்கிய ஆப்பிள் நிறுவனத்தில் இருந்தே  வெளியேற்றப்பட்டு நெக்ஸ்ட் என்னும் கம்ப்யூட்டர் நிறுவனம் மூலம் இரண்டாவது சகாப்தத்தை தொடங்கினார். அதன் பின் பிக்சார் என்ற நிறுவனம் மூலம் அவர் தயாரித்த அனிமேஷன் படங்களுக்கு உலகெங்கும் தட புடல் வரவேற்பு. எந்த ஆப்பிள் நிறுவனம் அவரை வெளியேற்றியதோ அந்த நிறுவனமே சில பல சரிவுகளுக்கு பிறகு அவரை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. பின்னர் அவர் ஆப்பிள் நிறுவனத்தை எவ்வாறு உலகப் புகழ் பெற செய்தார் என்பது அனைவரும் அறிந்தது. ஸ்டான்போர்ட் பல்கலை கழகத்தில் அவர் ஆற்றிய தொடக்க உரையை கேட்க கீழே கிளிக் செய்யவும்.
அவர் சொன்னதில் என்னை தொட்ட மூன்று சிந்தனைகள் - வாழ்க்கையானாலும், வேலையானாலும் நீங்கள் விரும்புவதை தேர்ந்தெடுத்து செய்யுங்கள். அதுவே மனமகிழ்ச்சிக்கு சிறந்த வழி. நீங்கள் உங்களுக்காக வாழுங்கள். யாரை திருப்தி படுத்தவும் நீங்கள் வாழ வேண்டாம். வாழ்க்கையில் நிகழும் அனைத்து நிகழ்வுகளும் அர்த்தம் நிறைந்தது. எனவே வாழ்கை அர்த்தமற்ற அலங்கோலம்அல்ல. அர்த்தம் பொதிந்த அற்புதம். அவர் அனுபவத்தில் இருந்து வந்த இந்த சிந்தனைகள் ஆழமானது;  வாழ்க்கையில் நம்மால் முடிந்த வரை கடைபிடிக்க வேண்டியது.

ஞாயிறு, செப்டம்பர் 04, 2011

சங்கே முழங்கு

முதல் முழக்கம்



1942 -ல் அடிமை  இந்தியாவில் நடந்தது ஆங்கிலேயர்களுக்கு எதிராக "வெள்ளையனே வெளியேறு" இயக்கம். கிட்ட தட்ட 69 ஆண்டுகள் கழித்து இந்நாள் தொடங்கியுள்ளது "கொள்ளையனே வெளியேறு" என்று அன்னா ஹசாரே தொடங்கியுள்ள ஊழலுக்கு எதிரான போராட்டம். இந்த போராட்டம் மாணவர்கள், இல்லத்தரசிகள், சமூக ஆர்வலர்கள் என்று பல்வேறு தரப்பு மக்களையும் இனம்,மொழி,பேதம் என்ற எல்லைகளை தாண்டி இணைத்துள்ளது.  "என்னதான் சொல்லுங்க, ஊழலை ஒழிக்க முடியாது" என்று சொல்லுவோர் கூட அன்னாவின் இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்று ரகசியமாக விரும்பாமல் இல்லை.அன்னா ஹசாரே இந்த போராட்டத்தை நடத்த கூடிய சரியான நபர் இல்லை அவர் ஒரு ஊழல்வாதி என்று சேற்றை வாரி இறைக்கும் சிலருக்கு சொல்வது என்ன வென்றால் - உங்களில் யார் ஒருவர் சுத்தமானவரோ அவர் முதலில் கல் எறியுங்கள் என்பது தான். ஒரு உயரிய இலட்சியத்தை நோக்கி ஒருவர் முதல் அடி எடுத்தால் அந்த லட்சியத்தின் தாக்கம் அவர் தீயவராக இருந்தாலும் அவரை நெறிப்படுத்தும்.நல்லவனாக்கும். சரி இந்த போராட்டத்தின் மூலம் நாட்டில் ஊழல் ஒழிந்து விடுமா இல்லை இதுவும் கடந்து போகுமா என்பதை காலம் மட்டுமே சொல்லும். ஆனால் சுதந்தர இந்தியாவில் இந்த போராட்டம் ஒரு மைல்கல். ஊழலில் திளைக்கும் அரசியல் கட்சிகளுக்கும், அந்த ஊழல்வாதி அரசியல்வாதிகளை கையில் போட்டுக் கொண்டு கொள்ளை லாபம் சம்பாரிக்கும் பண முதலைகளுக்கும் இந்த போராட்டம் மக்கள் அடிக்கும் எச்சரிக்கை மணி. இந்த மணி ஓங்கி ஒலிக்கட்டும். இது வெறும் எச்சரிக்கை மணியாக மட்டும் இல்லாமல் வெற்றி முரசாக மாறட்டும். முதல் முழக்கம் ஊழலுக்கு எதிராக.

இரண்டாம் முழக்கம்




லாக்-அப்  மரணங்கள் பற்றி நாளிதழ்களில் செய்தி
வெளியாகாத நாளே இல்லை என்னும் அளவுக்கு தொடர் நிகழ்வுகள் ஆகிவிட்டன. இது மட்டும் அல்லாமல் என்கௌன்டர் கொலைகள் மூலம் தனக்கு இடைஞ்சல் என்று கருதும் ரௌடிகளை அப்புறப்படுத்த போலீசை ஆள்பவர்கள் பயன்படுத்தி வருவதும் வாடிக்கை ஆகிவருகிறது. குற்றவாளிகளை வளர்த்து விடுவதில் காவல்துறை மற்றும் அரசியல்வாதிகளின் பங்கு மிக அதிகம் என்பதை பிறந்த குழந்தை கூட சொல்லும். இந்நிலையில் குற்றவாளிகள் என்று கருதப்படும் நபர்களை நீதித்துறையில் நிறுத்த வேண்டிய காவல் துறையே நீதித்துறையை மதியாமல் குற்றவாளிகளை கொல்வது என்ன நியாயம் என்று தெரியவில்லை. லாக்-அப் மரணங்களை பொறுத்த வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது இறந்தவரின் குடும்பத்தினர் மட்டுமே.லாக்-அப் மரணத்தை நிகழ்த்திய காவல்துறையினரை வேறு இடங்களுக்கு பணி மாற்றம் செய்தவுடன் காவல் துறை இந்த விஷயத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல கை கழுவி விடும். அரசு தரப்பும் பாதிக்கப் பட்டவரின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு கொடுத்தவுடன் நகர்ந்து கொள்ளும். ஆனால் லாக் அப் மரணத்தால் கணவனை இழந்து வாடும் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் அல்லது மனைவியை இழந்து வாடும் கணவனுக்கும் நீதி என்பது எட்டாக்கனியே. நீதிக்காக போராடும் பண வசதியோ, கல்வியோ இல்லாத மக்கள் வாழும் இந்த நாட்டில் லாக்-அப் மரணங்கள் மற்றும் என்கௌன்டர் மரணங்கள் நீதித்துறையை கேலிக்கூத்தாக்கும் நிகழ்வு. சந்தன கடத்தல் வீரப்பன் என்கௌன்டர் மூலம் நமக்கு தெரிவது என்னவென்றால் அரசாங்கத்திற்கே நீதித்துறை மீது நம்பிக்கை இல்லை என்பது தான். வீரப்பனை உயிருடன் பிடித்திருந்தால் அவனை இயக்கிய சூத்திரதாரிகள் யார் என்பது மக்கள் மன்றத்தில் தெரிந்திருக்கும். ஆனால் பொதுமக்களுக்கு நீதி வழங்கும் பொறுப்பில் உள்ள அரசுக்கு இதை பற்றி எல்லாம் கவலை இல்லை. லாக்-அப் மற்றும் என்கௌன்டர் மரணங்கள் நீதித்துறையை பலவீனப்படுத்தும் செயல். இத்தகைய செயலில் ஈடுபடும் போலீசாருக்கு ஒருவர் உயிர் கொலை புரிந்தால் என்ன தண்டனை கிடைக்குமோ அதே தண்டனை வழங்க வேண்டும். என்கௌன்டர் என்ற பெயரில் போலீசே குற்றவாளிகளை கொல்லும் செயலுக்கு அரசு துணை போகக்கூடாது. இரண்டாம் முழக்கம் நீதிக்கு ஆதரவாக.
மூன்றாம் முழக்கம்



செஹ்லா மசூத்
செஹ்லா மசூத், நியமத் அன்சாரி இவர்களை பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. செஹ்லா மசூத் மத்ய பிரதேச மாநிலத்தை சார்ந்த சமூக ஆர்வலர். மத்திய பிரதேசத்தில் உள்ள ஆலைகளிலும் மற்றும் சட்டர்பூர் மாநிலத்தில் நிகழும் சுற்று சூழல் சீர்கேடுகளை எதிர்த்து குரல் கொடுத்தவர். இதற்கு அவர் கொடுத்த விலை - தன்னுடைய உயிர். தன் வீட்டின் முன்னே நிறுத்தி இருந்த காரில் ஏறப் போன அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே போல் அன்சாரியும் ஜார்கந்து மாநிலத்தில் நடந்த ஊழல் குற்றங்களை தட்டிக் கேட்டமைக்காக தன் வீட்டிலேயே அடித்துக் கொல்லப்பட்டார். இதே போல் ஆண்டு தோறும் பல நூறு சமூக ஆர்வலர்களை இந்த மண்ணில் இழந்து வருகிறோம் நாம். குற்றம் செய்தவர்களோ ஆட்சியாளர்களின் தயவினால் சுதந்திரமாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். பத்திரிக்கைகள், வானொலி, டிவி போன்ற ஊடகங்களின் பணி என்ன. இத்தகைய சமூக ஆர்வலர்களின் பணியை மக்களுக்கு எடுத்து சொல்வது தானே. ஆனால் அவர்களோ சினிமா செய்திகளையும், கிரிக்கெட் செய்திகளையும் போட்டால் தன் கடமை முடிந்தது என்று இருந்து விடுகிறார்கள்.

நியமத் அன்சாரி



அன்னாவின் உண்ணாவிரதத்தை பற்றி செய்தி வெளியிட்டால் மட்டும் போதுமா, கங்கை நீரை தூய்மை படுத்த கோரி 73 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சாது நிகமானந்தா- வை பற்றி ஊடகங்களில் ஒரு வரி செய்தி கூட வரவில்லை. சமூக ஆர்வலர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் ஊடங்களுக்கு உள்ள சுணக்கம் காரணமாக பல தன்னார்வலர்கள் வெளியுலகத்திற்கு தெரியாமலேயே மறைந்து விடுகிறார்கள். எனவே இந்த மூன்றாம் முழக்கம் பத்திரிக்கை எழுச்சிக்காக.  பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி ஆகியன மக்கள் பிரச்சனைக்காக போராடும் எண்ணற்ற தன்னார்வலர்கள் பற்றி மக்களுக்கு எடுத்து செல்ல உறுதி கொள்ள வேண்டும்.  தன்னார்வலர்கள் பின்னே பத்திரிக்கை உலகம் திரளுமாயின் இந்தியாவை பீடித்திருக்கும் பல பிரச்சனைகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். வாள் முனையை விட பேனா முனை கூர்மையானது என்பதை நிருபிக்கும் தருணம் இது.  



நான்காம் முழக்கம்


ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகிய மூன்று பேருக்கு மரண தண்டனை விரைவில் நிறைவேற்றப் பட இருக்கிறது. உலகத்தில் 139 நாடுகளில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒருவரின் உயிரை எடுக்கும் அதிகாரம் உலகில் எவருக்கும் இல்லை. ஆளும் அரசாங்கங்கள் உட்பட. எனவே குற்றவாளிகள் எனக் கருதப்படும் மூவரை மூவரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து அவர்கள் தண்டனை காலம் முடிவடைந்தவுடன் அவர்களை விடுவிக்க வேண்டும். எய்தவன் எங்கேயோ இருக்க அம்பை நோவது ஏன் என்று உலகெங்கும் உள்ள தமிழர்கள் குரல் கொடுத்ததும் ஆள்பவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றங்கள் உறுதியாக நிரூபிக்க படவில்லை என்பதும் குற்றவாளிகள் என்று அடையாளம் காண்பிக்கப்படும் பலரும் இன்றும் வெளியே சுதந்திரமாக உலவுவதும் நாம் கண்ணார காணும் நிஜம். இந்த அழகில் அப்பாவிகளை தூக்கில் போட்டு தமிழர்களை மேலும் கொன்று குவிக்க அரசாங்கமே துணை போக வேண்டாம். ஈழத்தில் நிகழ்ந்த தமிழ் கொலைகள் போதாதா. இன்னும் எவ்வளவு தமிழ் ரத்தத்தை இந்த மண்ணில் வீணாக சிந்த வேண்டும். பாதசாரிகள் மீது குடிபோதையில் கார் ஏற்றி கொன்ற கான் நடிகருக்கும், மும்பை வெடிகுண்டு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளிடம் தொடர்பு உள்ளதாக கூறப்பட்ட தத் நடிகருக்கும் ஒரு நீதி. பணபலமோ, அதிகாரபலமோ இல்லாதோ அப்பாவிகளுக்கு ஒரு நீதி. ஒரு வேலை அரசாங்கம் தூக்கு தண்டனை வழங்க முற்பட்டால் முதலில் நூற்றுக்கு மேற்பட்ட மக்களை மும்பையில் கொன்று குவித்த அப்துல் கசாபுக்கு தூக்கு தண்டனை வழங்கட்டும். அதன் பிறகு இந்த மூவருக்கு தூக்கு தண்டனை வழங்கலாம். இதனால் நான் தூக்கு தண்டனையை ஆதரிப்பதாக எண்ண வேண்டாம். முதலில் அரசாங்கத்திற்கு கசாபுக்கு தண்டனை வழங்கும் தைரியம் உள்ளதா என்பதை சோதித்து பார்க்கவே இந்த கேள்வியை எழுப்புகிறேன். ராஜீவின் இழப்பு இந்தியாவிற்கு ஏற்பட்ட பெரிய இழப்பு என்பதை மறுப்பதற்கு இல்லை. எனினும் ராஜீவின் பெயரால் அநீதி இழைப்படுவதை அவரே விரும்ப மாட்டார்.இந்த நான்காம் முழக்கம் தூக்கு தண்டனைக்கு எதிராக.தனி மனித உரிமைக்கு ஆதரவாக.   

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்,
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்,
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்,
ஆண்மை சிங்கத்தின் கூட்டம் என்றும் சிறியோருக்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே !!! சங்கே முழங்கு !!!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்.
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்!
வெங்குருதிதனிற் கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்! தமிழ் எங்கள் மூச்சாம்!

செவ்வாய், ஆகஸ்ட் 09, 2011

விருது வாங்கலையோ விருது

சமீபத்தில் சூடான செய்திகளில் இடம் பிடித்த பிரபலங்களுக்கு விருதுகள் கொடுத்தால் என்ன விருது கொடுக்கலாம் என்று ஒரு சுவையான கற்பனை.

"குடும்பம் ஒரு கோயில்" விருது

 "தி அதர் சைடு" என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ள கருணாநிதி குடும்பத்து சொத்து பட்டியல் மலைக்க வைத்துள்ளது என்று சொன்னால் மிகை இல்லை. கலைஞர் குடும்பம் கடந்த 60 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்து எவ்வாறு மக்களுக்கு சேவை ஆற்றி உள்ளது என்பது எண்ணும் போது புல்லரிகிறது. பின்னே எந்த ஊரில்  எந்த சொத்து உள்ளது, அது யார் பராமரிப்பில் உள்ளது, வேறு எங்கெல்லாம் சொத்து வாங்கலாம் என்றெல்லாம் திட்டமிடுவது எவ்வளவு கஷ்டம். அஞ்சாநெஞ்சன், தளபதி, அவரது வாரிசுகள், மகள்கள், மருமகன்கள் என்று  எல்லாரும் தலைமுறை தலைமுறையாக உட்கார்ந்து சாப்பிட வசதியாக சொத்து சேர்த்து கொடுத்து "திராவிட முன்னேற்ற கழகம்" என்ற பாரம்பரியம் உள்ள கட்சியை  "திருடர் முன்னேற்ற  கழகம்" என்றும் "திரு.மு. கருணாநிதி கழகம்" அனைவரும் பரிகாசிக்கும் அளவுக்கு தரம் தாழ வைத்திருக்கும் கருணாநிதிக்கு இந்த சிறப்பு விருது. விக்கிலீக்ஸ் தரும் தகவல் படி 35000 கோடி ருபாய் அளவுக்கு சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருக்கும் நமது திருக்குவளை தவப்புதல்வனுக்கு அடிக்கடி நடக்கும் கட்சிக்காரர்களின் கைது நடவடிக்கைகளை  மறக்கச் செய்யும் இந்த  விருது என்று தாராளமாக நம்பலாம்.

"சிறந்த புதுமுக நடிகை" விருது
 காதலனுடன் ரகசியமாக திருமணம் முடித்து தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அவரது  மகள் ஸ்ரீஜாவை அவ்வளவு சீக்கிரமாக யாராலும் மறந்திருக்க முடியாது. இன்ஜினியரிங் பட்டதாரியான ஸ்ரீஜா தன் சக மாணவனை மணந்து தாய் தந்தையரிடம் இருந்து பாதுகாப்பு வேண்டி சட்டம் காவல்துறையை நாடியது ஒரு காலம்.  இன்றோ எனது கணவன்  மற்றும் கணவன் வீட்டாரும் வரதட்சணை கேட்டு என்னை சித்திரவதை செய்து வருகிறார்கள் எனவே எனக்கு விவாகரத்து வாங்கித் தாருங்கள் என்று கோர்ட் கதவை தட்டி இருக்கிறார். இன்ஜினியரிங் படித்து, அரசியல் பலமும், பண பலமும் வாய்ந்த குடும்ப பின்னணியில் இருந்து வரும் ஸ்ரீஜாவை பெரிய பின்புலம் இல்லாத அவரது கணவரோ அல்லது அவரது கணவரின் வீட்டுக்காரர்களோ துன்புறுத்தி இருப்பார்கள் என்பது நம்பும் படியாக இல்லை. இரண்டாம் திருமணம் பற்றிய கிசுகிசுக்கள் வலம் வரும் இந்த வேளையில் வரதட்சணை  கொடுமை  என்று  
கிளிசரின் இல்லாமலேயே டன் கணக்கில் அழுது அனுதாபம் தேடும் ஸ்ரீஜாவிற்கு  இந்த டன்டனக்கா விருது.



  "அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன " விருது
  தி.மு.க, அதி.மு.க மீண்டும் தி.மு.க என்று டென்னிஸ் பந்து போல இந்த பக்கம் அந்த பக்கம் மீண்டும் இந்த பக்கம் என்று பறந்து பறந்து வாக்காளர் என்ணத்தை விட்டே பறந்த பா.ம.க  நிறுவனர் ராமதாசுக்கு இந்த விருது. இலங்கை தமிழர் படுகொலையை கண்டிக்காதது, பல்வேறு ஊழல் புகார்களில் கூட்டணி கட்சியான தி.மு.க-வின் பங்கு பற்றி தெரிந்தும் அமைதி காத்தது, தன் மகன்அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைப்பது ஒன்றே குறிக்கோள் என்று கட்சி நடத்தியது பின்னர் தேர்தலில் தோல்வியை தழுவியதும் கூட்டணி உறவை திடீரென்று முறித்து கொண்டு நாங்கள் இனி வரும் எந்த திராவிட கட்சியிடமும் இனி கூட்டணி வைக்காமல் தேர்தலில் தனியாக போட்டு இடுவோம் என்று சலம்புவது என்று காமெடி செய்யும் ராமதாசுக்கு இந்த கலக்கல் விருது. இனி போட்டியே இட வேண்டாம் வீட்டிற்கு சென்று நிரந்தர ஒய்வு எடுங்கள் என்று தமிழக வாக்களர்கள் அடுத்த தேர்தலில் ராமதாசுக்கு தெளிவு படுத்துவார்கள் என்று நம்புவோமாக.



"நான் சொல்வேதல்லாம் உண்மை உண்மையை தவிர வேறில்லை" விருது
கற்பனை விருது என்றாலும் இதை வாங்க கூட சோனியாவிடம் பெர்மிஷன் வாங்க கால் கடுக்க காத்திருக்கும் மன்மோகன் சிங்கை விட  இந்த விருதுக்கு பொருத்தமானவர் ஈரேழு பதினான்கு லோகத்திலும் இல்லை. 2-ஜி  ஊழல் பற்றி  எதாவது தெரியுமா என்று சுப்ரீம் கோர்ட் கேட்டாலும், முன்னாள் மத்திய  அமைச்சர் ராஜா பிரதமர் அலுவலகத்திற்கு தெரியாமல் எந்த அலைகற்றை ஒதுக்கீடும் செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டினாலும், காமன்வெல்த் ஊழல் பற்றி எதை கேட்டாலும் எனக்கு எதுவும் தெரியாது யுவர் ஆனர் என்று ஜகா வாங்கி, இந்த பொம்மை பிரதமரை உண்மையான பிரதமர் என்றா இன்னும் இந்த உலகம் நம்புது என்று வடிவேலு கணக்காய் மிரளுவதாகட்டும், எனக்கு அவ்வளவு பவர் எல்லாம் இல்லை சும்மா நம்புங்க என்று உண்மையாகவே கூறினாலும் எதிர் கட்சிகள் பிரதமரை துவைத்து காயப்போடுவதால் நொந்து நூடில்ஸாகி இருக்கும் சிங்குக்கு ஏதோ நம்மால் முடிஞ்ச உபகாரம் இந்த விருது.

"வில்லன் இல்லை ஹீரோ" விருது
 மதுரையை ஐந்து வருடங்களாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து நில அபகரிப்பு, கொலை,மணல் கொள்ளை, கட்டை பஞ்சாயத்து, அடிதடி,வன்முறை என்று சிற்றரசர்கள் போல் கோலோச்சிய அஞ்சா நெஞ்சனின் அல்லு சில்லுகளான  மதுரை தி.மு.கா-வினருக்கு இந்த விருது. எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற அச்சத்தால் 100 கோடி மதிப்புள்ள நிலங்களை மீண்டும் மிரட்டி வாங்கியவர்களிடமே கொடுத்து சமாதானமாக போய்விடுவதிலாகட்டும், தான்  தப்பிப்பதற்காக தன் கட்சிகாரனையே காட்டி கொடுத்து திடீர் நல்லவன் ஆவதாகட்டும், நானா தி.மு.கா ஆளா நல்ல கதை நான் எப்பவுமே  அம்மா கட்சிதான் என்று அந்தர் பல்டி அடிப்பது வரை இவன் நல்லவனா கெட்டவனா என்று போலீஸ் முதல் பொதுமக்கள் வரை எல்லாரையும் மண்டை காய வைப்பதால் பிடிங்கள் இந்த சூப்பர் விருது.


"நான் அவனில்லை" விருது
   
போலி பத்திர மோசடி செய்து வேறொருவர் நிலத்தை அபகரித்தார் என்றும், போலீஸ் கைதில் இருந்து தப்ப தலைமறைவு ஆகிவிட்டார் என்று இறக்கை கட்டி பறக்கும் வதந்திகளாலும் "மாப்பு வைச்சிட்டாண்டா ஆப்பு" என்று பம்மி திகிலடித்து கிடக்கும் வடிவேலுக்கு இந்த அம்சமான விருது. தனது வெள்ளந்தி பேச்சு,  உடல் மொழி, எல்லோரையும் கவரும் நகைச்சுவை என்று திரை  துறையில் மறக்க முடியாத நட்சத்திரமாக மின்னும் கைப்புள்ளைக்கே கட்டம் சரியில்லாமல் போனதால் வேணாம் வேணாம் அழுதுடுவேன் என்று அவர் கெஞ்சியும் வதந்திகளும்  வம்பும் விடாது தொடர்வதால் இந்த சங்கத்தை கலைச்சிவிட வேண்டியது தான் என்று புலம்பித் தளும்பும் வடிவேலுக்கு இந்த ஆறுதல் விருது.

வெள்ளி, ஜூலை 15, 2011

கதம்ப மாலை - 2

அடேங்கப்பா கோவில்

பத்மநாபா கோவிலின் சொத்து மதிப்பு வெளியாகி அனைவரையும் ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 1 லட்சம் கோடி அளவு சொத்து மதிப்புள்ளதாகவும் இன்னும் திறக்கப்படாத ஒரு நிலவறையை திறந்தால் சொத்து மதிப்பு மேலும் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பதி வெங்கடேஸ்வரரை  விட இரு மடங்கு சொத்து மதிப்பு கொண்ட கோவிலாகவும் இந்தியாவிலேயே  அதிக சொத்து உள்ள கோவிலாகவும் ஒரே மாதத்தில் மாறி உள்ளது. கோவிலின் சொத்துக்களை சமுதாய நலத்தை மேம்படுத்த கூடிய காரியங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்று குரல்கள் ஒலிக்க தொடங்கி உள்ளன. இது நன்மை தருவது என்றாலும் இன்றைய ஆட்சியாளர்கள் கையில் கோயில் சொத்துக்கள் குரங்கிடம் அளித்த பூ மாலை போல் ஆகிவிடும். எத்தனை ராஜாக்களை, கல்மாடிகளை இந்த நாடு தாங்கும். எனவே இந்த விஷப்பரிட்சை வேண்டாம்.
தவிரவும் இதையே மேற்கோளாக கொண்டு சர்சுகள், மசூதிகள் ஆகியவற்றில் உள்ள விலை மதிக்க முடியாத பொக்கிஷங்களை எடுத்து மக்கள்
நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்று நாளையே  வேறு சிலர் குரல் கொடுக்கலாம். இது மக்களின் உளப்பாட்டுக்கு எதிரான ஒன்று. எனவே கோவிலுக்கு அதிகபட்ச  பாதுகாப்பு அளிப்பது, தற்போது உள்ள நிர்வாக நடைமுறையை பின்பற்றுவது, சுப்ரீம்/ஹை  கோர்ட் உத்தரவுப்படி மட்டுமே பொக்கிஷங்களை கொண்ட நிலவறையை திறப்பது போன்ற நடை முறைகளை பின்பற்றினால் மட்டுமே போதுமானது.  சுவாமி பத்மநாபனின் சொத்துக்கள் மக்களுக்கு எவ்வாறு பயன் அளிக்க வேண்டும் என்பதை அவனின் விருப்பத்திற்கே விட்டு விடுவோம். இது பழமைவாத கருத்தாக தோன்றினாலும் இன்றைய நிலவரங்களை கணக்கில் கொண்டு பார்த்தால் இதுவே சரியான தீர்வாக இருக்கும் என்றே தோன்றுகிறது.          


இன்பச் சுற்றுலா     
கொளுத்தும் சூரியனின் கிடுக்கி பிடியில் இருந்து விடுபெற எண்ணி இந்த வாரம் நீண்ட வார இறுதியை கழிக்க நாங்கள் சென்றது ஹில்டன் ஹெட் என்ற தீவு.  தெற்கு கரோலினாவில் அமைந்துள்ள இந்த தீவு
சார்லஸ்டன் நகரில் இருந்து 95 மைல் தொலைவிலும் ஜியார்ஜியாவில் உள்ள சவானாவில் இருந்து 20 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. பிளாடினத்தை உருக்கி வார்த்தது போன்ற அழகான நீர் பரப்பு, தங்க துகள்களை வாரி இறைத்தது போன்ற மென்மையான மணல்வெளி, குழந்தைகள்  விளையாட செயற்கை நீருற்று மற்றும் ஊஞ்சல், கடலில் நீராடுபவர்களுக்கு குளியலறை வசதிகள் என்று அனைத்து அம்சங்களும் அழகுற அமைந்து இருந்தது. இது தவிர உடல் ஊனமுற்றோர்களுக்கு கடற்கரை வரை பாதை, லைப் கார்ட் பாதுகாப்பு மற்றும் ஆழமான பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் போன்ற பாதுகாப்பு வசதிகளும் உண்டு. நேரம் போவதே தெரியாமல் அலைகளில் நனைந்தும், கிளிஞ்சல்களை சேகரித்தும், மணலில் மண் வீடு கட்டியும் பொழுதை இனிமையாக கழித்தோம்.

டைபி கலங்கரை விளக்கத்தில் இருந்து ஒரு பார்வை

அடுத்த நாள் சவானாவில் இருந்து 20 மைல் தொலைவில் மேற்கு திசையில் அமைந்துள்ள டைபி தீவிற்கு சென்றோம். டைபி தீவில் பார்க்க வேண்டியது என்றால் அது  சவானா நதிக்கரையில் அமைந்துள்ள டைபி கலங்கரை விளக்கம். ஜியார்ஜியா மாநிலத்தில மிகவும் பழமை வாய்ந்த இந்த கலங்கரை விளக்கம் இன்றும் அழகாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. 178 படிகளை கொண்ட இந்த கலங்கரை விளக்கத்தில் மேலே ஏறி சென்றால் உச்சியில் இருந்து சுற்றியுள்ள எழில்மிகு காட்சிகளை கண்டு களிக்கலாம். படிகள் வளைந்து வளைந்து அமைந்து இருப்பதால் மேலே ஏறும் போது எச்சரிக்கையாக ஏறுவது நலம். கலங்கரை விளக்கத்தில் இருந்து நடக்கும் தொலைவிலேயே உள்ளது அழகான கடற்கரை. கரையோரம் வளர்ந்த நாணல் புற்கள் காற்றின் தாளத்திற்கேற்ப தலையாட்டும் அழகும், பாறைகள் மேல் அலைகள் மோதும் சத்தமும், ஆரவாரிக்கும் குழந்தைகளின் குரலும் அங்கு ஒரு இன்னிசை கச்சேரி நடப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. இயற்கை நடத்திய அந்த இசை மழையில் நனைந்து மகிழ்ந்தோம். அங்கிருந்து கிளம்பவே மனம் கிளம்பி இல்லாமல் அன்றிரவே கிளம்பி வீடு வந்து சேர்ந்தோம். அழகான இடங்களை படைத்த அந்த இறைவனுக்கு நன்றி. அதை அழகு கெடாமல் பாதுகாக்கும் மக்களுக்கும் நன்றி. 

டைபி கலங்கரை விளக்கம்



மெல்ல தமிழ் இனி சாகும்

உறவினர் ஒருவருடன் "கோ" திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். கோ என்றால் என்ன என்று தெரியுமா என்று விளையாட்டாக கேட்டேன். உடனே அவர் "Co" அதாவது கம்பெனி என்பதை குறிக்கும் ஆங்கில வார்த்தை தானே அது என்று கேட்டவுடன் மயக்கமே வந்து விட்டது. தமிழ் பெயர் வைப்பதால் தமிழ் வளரும் என்று தமிழ் படங்களுக்கு வரி விலக்கு அளிக்கும் தமிழக அரசு கவனிக்க. ஒரு புறம் தமிழில் பேசவோ எழுதவோ தெரியாத இன்றைய இளம் தலைமுறையால் தமிழ் மொழி வழக்கொழிந்து வரும் நிலையில், அந்த தலைமுறைக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பில் இருக்கும் பெற்றோர்களுக்கு தமிழ் மொழியில் பாதி சொற்பதங்களுக்கு என்ன பொருள் என்று கூட தெரியவில்லை. இப்படி இருந்தால் தமிழ் மொழி எவ்வாறு முன்னேறும்? அடுத்த தலைமுறைக்கு பேசும் மொழியாக எவ்வாறு மாறும்?




சரி சொற்பதங்களுக்கு என்ன பொருள் என்று தெரியவில்லையாயினும் பொருள் என்ன என்பதை கணிப்பொறியிலாவது தேடி அறிந்து கொள்ளலாம் அல்லவா. அந்த முயற்சி கூட அவர் எடுக்க முயலவில்லை. இதற்கும் இந்த படம் வந்து பல நாள் ஆகிவிட்டது. அதனால் தேடுவதற்கு கால அவகாசம் இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. அப்படியே "வாரணம் ஆயிரம்" என்று ஒரு திரைப்படம் வந்ததே. வாரணம் என்றால் என்ன என்று கேட்க எனக்கு தைரியம் வரவில்லை. இதற்கும் உறவினர் பத்தாம் வகுப்பு வரை தமிழை இரண்டாம் பாடமாக படித்தவர் தான். பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் பிரெஞ்சு மொழியை இரண்டாம் பாடமாக படித்தவர். பத்தாம் வகுப்பு வரை தமிழை படித்தவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பிற மொழிகளை இரண்டாம் பாடமாக எடுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மட்டுமே மாற்று மொழி படிக்கும் வாய்ப்பு அளிக்க பட வேண்டும். இல்லா விட்டால் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போல எந்த மொழியையும் சரி வர தெரியாத நிலையே ஏற்படும்.
மீண்டும் மும்பை

மும்பையில் மீண்டும் இன்று குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. உயிர் பலி 20 என்றும் மேலும் 100 -க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. உள்துறை அமைச்சகம், ரா, தேசிய பாதுகாப்பு கழகம் போன்ற அத்தனை அமைப்புகளின் பணி தான் என்ன என்ற கேள்வி எழாமல் இல்லை. 2008 ஆம் ஆண்டு 26 /11 அன்று நடந்த தாக்குதலின் பாதிப்பில் இருந்து மீளும் முன்பே திரும்பவும் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது இந்தியாவிற்கு சர்வேதேச அளவில் தலை குனிவை ஏற்படுத்தி உள்ளது. எனினும் இதைப் பற்றி ஆட்சியாளர்களுக்கு என்ன கவலை. அவர்களுக்கு இந்தியாவின் மதிப்போ, இந்திய உயிர்களின் மதிப்போ என்று தெரிந்தது இன்று வருந்துவதற்கு. அமெரிக்கா மீதான தீவிரவாத தாக்குதல் நடந்து 11 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் வேறு எந்த தாக்குதலும் நிகழாமல் அமெரிக்கர்கள் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்பதை நமது ஆட்சியாளர்கள் சிந்தித்தால் தேவலை. தேவை இல்லாத விஷயங்களில் அமெரிக்காவை காப்பி அடிக்கும் நம்மவர்கள் இந்த விஷயத்தில் அமெரிக்காவை பின்பற்றினால் நன்றாக இருக்கும்.
எப்பொழுதும் போல் ஒரு கமிஷன் அமைத்து குற்றவாளிகளை பிடித்தாலும் அவர்களுக்கு ஜெயிலில் சகல வசதிகளும் செய்து கொடுத்து நன்றாக வைத்திருக்க மட்டுமே இன்றைய ஆட்சியாளர்களுக்கு தெரிந்துள்ளது. உதாரணமாக மும்பை தீவிரவாத தாக்குதலில் சிக்கிய கசாபை சொல்லலாம். பல ராணுவ வீரர்களின் இன்னுயிரை ஈந்துப்  பிடித்த தீவிரவாதியை சகல வசதிகளுடன் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன என்பது புரியாத புதிர். நாட்டை காக்கும் உயரிய பொறுப்பில் உள்ள பிரதமரோ சோனியாவின் கைப்பாவையாகவே செயல்படுவதில் மட்டுமே குறியாக இருக்கிறார். அவர் தும்முவதற்கு கூட ஜன்பத் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமையிடம் கேட்டால் மட்டுமே முடியும் என்னும் போது நாட்டின் பாதுகாப்புக்கு யார் தார்மீக பொறுப்பு ஏற்றுள்ளார்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை.
என்ன செய்வது இது மன்மோகன்களின் காலம். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியில் வெறும் பார்வையாளராகவே மட்டுமே தன்னை பதிவு செய்து கொண்டிருக்கும் பொம்மை பிரதமர் உள்ளவரை இது போன்ற துயர நிகழ்வுகளில் இருந்து நம்மை எல்லாம் வல்ல இறைவன் மட்டுமே காக்க முடியும்.
   
"Those who would give up essential liberty to purchase a little temporary safety deserve neither liberty nor safety." - பெஞ்சமின் பிராங்க்ளின்.

நமது பிரதமர் இந்த நிகழ்வுக்கு பொறுப்பேற்று பதவி விலகுவாரா அல்லது தனக்கும் இதற்கும் எதுவும் சம்பந்தம் இல்லாதது போல் இருந்து விடுவரோ என்பது போக போகத்தான் தெரியும். தீவிரவாதத்திற்கு நிறைய உயிர்களை விலையாக தந்திருக்கிறது இந்த தேசம். ஆனால் பதவி ஆசைக்கும், ஆட்சியாளர்களின் கையலாகதனத்திற்கும் இன்னும் எவ்வளவு பேரை விலையாக தர வேண்டி இருக்கும்.

வானம்
சமீபத்தில் வானம் என்ற திரைப்படத்தை பார்த்தேன். சிம்பு, அனுஷ்கா, பரத், சரண்யா, பிரகாஷ்ராஜ் நடித்து கிருஷ் இயக்கத்தில் வெளி வந்த இந்த படம் நன்றாக இருந்தது. தெலுங்கில் வெளிவந்த வேதம் திரைப்படத்தின் ரீமேக் இது என்றாலும் அழகாக தமிழ் படுத்தபட்டிருந்தாக தோன்றியது. பாடல்கள் பரவாயில்லை. யுவன் "எவன்டி உன்னை", "தெய்வம் வாழ்வது" போன்ற பாடல்களில் மிளிர்கிறார். மற்ற பாடல்கள் கொட்டாவி ரகம். சிம்பு பஞ்ச் டயலாக் இல்லாமல், ஓவர் பில்ட் அப் இல்லாமல் கேபிள் ராஜாவாக வாழ்ந்து இருக்கிறார். சரண்யா கந்து வட்டிகாரனிடம் சிக்கி கஷ்டப்படும் ஏழை தாயாக அருமையான நடிப்பை அள்ளித் தருகிறார். அவர் தன்னுடைய மகனுடன் சேர்ந்தாரா என்பது கடைசி காட்சி வரை திக் திக். பரத், பிரகாஷ்ராஜ் போன்றோர் அவரவர் பாத்திரங்களை உணர்ந்து அழகாக செய்திருக்கிறார்கள். சலாம்-இ-இஷ்க் என்ற ஹிந்தி திரைப்படத்தில் வருவது போல பல இணைக்கதைகள் கொண்ட திரைக்கதையை வெற்றிகரமாக இணைத்து இருக்கிறார் இயக்குனர். அனுஷ்காவின் கதாபாத்திரம் கவர்ச்சிக்கு உதவுகிறது. மற்றபடி அந்த கதை படத்தில் இல்லாவிட்டாலும் நமக்கு அதனால் பெரிய இழப்பு இல்லை. நெடு நாட்களுக்கு பின்னர் ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்த திருப்தி வந்தது. பல பெரிய நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து நடிப்பது தமிழ் சினிமாவுக்கு புதிது. அந்த வகையில் இது ஒரு நல்ல முயற்சி. வாய்ப்பு கிடைத்தால் அவசியம் பார்க்க வேண்டிய படம்.
 

திங்கள், ஜூன் 20, 2011

மாற்றமா ஏமாற்றமா

சிதம்பரம் ஆட்சி போய் மதுரை ஆட்சி வந்தாச்சி. அதாங்க கலைஞர் அய்யா போய் ஜெயலலிதா அம்மா வந்தாச்சே அதை சொல்றேன். வெற்றி திருமகள் கோபாலபுரத்தை விட்டு போயஸ் கார்டன் பக்கம் இடம் பெயர்ந்தாகி விட்டது. மாற்றம் என்ற ஒன்றே நிலையானது என்பதை உணர்த்தும் நிகழ்ச்சி அல்ல இது. அய்யா ஆட்சி என்கிற குடும்ப ஆட்சி சகிக்க முடியாமல் சரி அம்மாவாவது ஏதாவது நல்லது செய்ய மாட்டார்களா என்ற மக்களுடைய ஏக்கத்தின் வெளிப்பாடு தான் இந்த மாற்றம்.

சினிமா,டிவி, அரசியல் என்று எந்த துறையையும் விட்டு வைக்காமல் விண்ணுக்கும் மண்ணுக்குமாய் வேர் விட்டு படர்ந்திருந்த கருணாநிதி குடும்ப கம்பெனிக்கு "நீங்கள் மக்கள் சேவை ஆற்றியது போதும். மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசுக்கு நீங்கள் பல்லக்கு தூக்கிகளாய் வேலை செய்ததும்  போதும். எல்லா  துறைகளிலும்  ஊழல் செய்து களைத்து இருக்கிறீர்கள்.  ஒய்வு எடுங்கள்" என்று மக்கள் அடித்து சொல்லி இருகிறார்கள். ஏன்னென்றால் அன்பாக சொல்லி இருந்தால்
தி.மு.க- விற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தாவது கிடைத்து இருக்கும்.

இலங்கை தமிழர் படுகொலையை  பதவிக்காக  கண்டிக்காதது, சினிமா,டிவி,ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் மற்றும் அடக்குமுறை, மின்சார பற்றாக்குறையால்  உற்பத்தி குறைவு மற்றும் வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு,  மணல் கொள்ளை, வட்ட செயலாளர் முதல் மந்திரிகள் வரை ஊழலில் திளைத்தது, கட்டை பஞ்சாயத்து, அடிதடி அரசியல் என்று எவ்வளவோ காரணங்கள் இருந்தாலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் என்ற மாபெரும் அலை இன்று தி.மு.க ஆட்சிக்கு சாவு மணி அடித்து விட்டது. தி.மு.க என்பது திரு.மு. கருணாநிதி குடும்ப முன்னேற்ற கழகம் என்று சொல்லும் அளவிற்கு கருணாநிதி குடும்பத்தினர்  யாருமே நினைத்துப் பார்க்க இயலாத வகையில் பல லட்சம் கோடி ஊழல் செய்து பணத்தில் திளைத்ததோடு அல்லாமல் நாட்டின் பாதுகாப்பிற்கே ஊறு விளைவிக்கும் சில தனியார் கம்பனிகளுக்கு 2- ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்து நாட்டை அந்நிய சக்திகளுக்கு காட்டிக் கொடுக்கும் வேலையையும் செவ்வனே செய்து முடித்துள்ளனர்  .


சிலப்பதிகாரத்தில் ஒரு காட்சி - கண்ணகி பாண்டிய சபையில் தன் கால் சிலம்பை உடைத்து மாணிக்கப் பரல்களை காட்டியதும் பாண்டிய மன்னன் தன் தவறை உணர்ந்து - யானே அரசன் யானோ கள்வன் என்று கூறி தன் உயிரை விடுவான். ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான பின் கருணாநிதி "மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்து விட்டார்கள்" என்று மழுப்பல் அறிக்கை ஒன்றை வாசித்ததோடு தனது கடமை முடிந்தது என்று தில்லி சென்று ஊழல் வழக்கில் சிறைப்பட்ட மகளை மீட்க முயற்சி எடுத்து வருகிறார். இலவச திட்டங்கள், பணம் கொடுத்து ஓட்டு வாங்குதல், தேர்தல் பிரசாரத்தில் குஷ்பூ, வடிவேலு போன்ற நட்சத்திர அணிவகுப்பு ஆகியவற்றின் மூலம் மக்களின் கண்களை கட்டி விடலாம் என்ற தி.மு.கா-வின் கனவிற்கு மக்கள்  கை கொடுக்கவில்லை.

எந்த தீமையிலும் ஒரு நன்மை உண்டு என்பது வழக்கு. இந்தியா முழுவதும் நடக்கும் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் அதன் எதிரொலியான லோக்பால் மசோதா பற்றிய விவாதம் ஆகியவற்றின் மூலம் இந்த கூற்றில் சிறிதளவேனும் உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது. மக்கள் தங்கள் தேவைகளை பற்றி தெளிவாக இருக்கிறார்கள் என்பது ஆறுதலான மாறுதல். மின்சாரம், குடி நீர், கல்வி, மருத்துவம், சாலை வசதி போன்ற அடிப்படை பணிகளில் கவனம் செலுத்தாத அரசாங்கத்தை மக்கள் தண்டிக்க தயங்க மாட்டார்கள் என்பதை அரசியல்வாதிகள் உணர வேண்டும். சாதி கட்சிகளை புறக்கணித்ததன் மூலம் மக்கள் மன்றத்தில் சாதி அரசியல் செய்யும் கட்சிகளுக்கு மதிப்பு என்ன என்பதையும் உணர்த்திவிட்டார்கள்.

புதிய அரசாங்கத்திடம் மக்களின் எதிர்பார்ப்பு இவ்வளவு தான்  - ஊழலற்ற நிர்வாகம் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்தல் , அரசு அதிகாரிகள் நேர்மையாக செயல்படும் சுதந்திரம், சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு ஆகியன . ஜெயலலிதா பதவி ஏற்ற நாள் முதல் நடக்கும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் கவலை அளிக்கிறது. சட்டசபை வளாக மாற்றம்,  சமச்சீர் கல்வி முறையை கிடப்பில் போட்டது , இலங்கை தமிழர் பிரச்சனையில் ஆக்கப்  பூர்வமான நடவடிக்கையின்மை, மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசுடன் இணக்கம் ஆகிய அரசியல் கோமாளி கூத்துகள் ஆரம்பமாகிவிட்டன. எனினும் முதல்வருக்காக போக்குவரத்தை நிறுத்துதல், காலில் விழும் கலாச்சாரம், கட் அவுட், பேனர் போன்ற  ஆடம்பரம் இல்லாதது,  புதிய அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை போன்ற நம்பிக்கை அளிக்கும் விஷயங்களும்  இருப்பது ஆறுதல். எனினும் இது உண்மையான மாற்றமா இல்லை அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில்  அதிக இடங்களை கைப்பற்றும் பொருட்டு மக்களை ஏமாற்ற நடக்கும் கண் கட்டு வித்தையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சென்ற தேர்தலில் ஜெயலலிதா தோற்றதற்கும் இந்த தேர்தலில் கருணாநிதி தோற்றதற்குமான காரணங்களில் பெரிய வித்தியாசம் இல்லை. வளர்ப்பு மகன் திருமணத்தில் ஆடம்பரம், சசிகலா குடும்ப ஆதிக்கம், டான்சி நில பேர ஊழல் தொடங்கி பல்வேறு இடங்களில் அரசு நிலங்களை தனியாருக்கு குறைந்த விலையில் தாரை வார்த்தது என்று மக்கள் பணத்தை ஜெயலலிதாவும் அவரை சேர்ந்தவர்களும் கொள்ளை அடித்தது தி.மு.க - வினரின் சாதனைகளுக்கு(??) சற்றும் குறைந்தது அல்ல. நெருப்புக்கு பயந்து அடுப்பில் குதித்துள்ளனர் நமது தமிழக வாக்காளர்கள்.

வலுவான மூன்றாம் அணி ஒன்று இல்லாததாலேயே தி.மு.க - வுக்கு 5 வருடம் அ.தி.மு.க - வுக்கு 5 வருடம் என்று பரமபத விளையாட்டை தமிழக வாக்காளர்கள் ஆட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். இந்த வெற்றி   அ.தி.மு.க - வுக்கான ஆதரவு அலை என்று கொள்ளாமல் தி.மு.க - வுக்கான எதிர்ப்பு அலை என்று கொள்வது பொருந்தும். தமிழகம் தன்னை நம்பி வந்தாரை வாழ வைக்கும் மாநிலம். ஒருவரை பிடித்திருந்தால் வேற்று மாநிலத்தவர் என்று உதாசீனம் செய்யாமல் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்பது நமது மக்களின் குணம். அதே போல மறப்போம் மன்னிப்போம் என்று கடந்த கால தவறுகளை மன்னிக்கும் மனோபாவம் உள்ளவர்கள் அதிகம் வாழும் மாநிலம். அதன் எதிரொலியே இன்று ஆட்சி பீடத்தில் அ.தி.மு.க வுக்கான இடம்.

வரலாற்றின் பக்கங்களில் சிறந்த அரசியல் தலைவரை பதிவு செய்ய மக்கள் காத்திருக்கின்றனர். சிறந்த தலைவராக மிளிரும் பொன்னான சந்தர்ப்பம் அ.தி.மு.க தலைமைக்கு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை ஜெயலலிதா எவ்வாறு கையாள்கிறார் என்பதை பொறுத்தே இந்த மாற்றத்தின் வெற்றியை கணக்கிட முடியும். மக்களையும் வரலாற்றையும்  ஏமாற்றி விடாதீர்கள் ஆட்சியாளரே  !!!

செவ்வாய், மே 17, 2011

கவித கவித

அழகான தமிழ் கவிதை ஒன்றை படைத்து தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு சமர்பிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. சரி எழுதலாம் என்று வெள்ளை தாளை எடுத்து வைத்து கொண்டு குப்புற படுத்து யோசித்ததில் தூக்கம் மட்டுமே வந்தது. கவித கவித என்று கமல் போல பினாத்தியதில் குடும்பத்தினர் அனைவரும் ஒரு விதமாக என்னை பார்க்க ஆரம்பித்து விட்டதால் கவிதை எண்ணத்தை தற்காலிகமாக ஒத்திப்போட்டு  என்னை கவர்ந்த சில கவிதைகள் இதோ உங்கள்  பார்வைக்கு வைக்கிறேன்:

கேள்வி
குளிர்ந்த நீர் தானே ஏன்
வேர்கிறது பாட்டிலுக்கு

இந்த ஹைகூவை எழுதியது  யார் என்று அதிகம் யோசிக்க வேண்டாம். இதை எழுதியது என் தங்கை. வேடிக்கை என்ன வென்றால் இந்த ஹைகூவை எழுதிய பின் என் தங்கை அதை படிப்பதற்காக  எனது தந்தையாரிடம் நீட்டினாள். அவரும் ஒ யாரோ டிலுக்கு என்பவர் எழுதிய கவிதையா இது என்றது  பெரிய காமெடி. ஏனென்றால் இடப்பற்றாக்குறை 
காரணமாக அவள் பாட்டிலுக்கு என்ற வார்த்தையில்  பாட் என்பதை 
மேல் வரியிலும்  டிலுக்கு என்பதை கீழ் வரியிலும் எழுதி இருந்தாள். 
டிலுக்கு என்பதை கவிஞர்/கவிதாயினியின் பெயர் என்று என் தந்தை நினைத்தால் வந்த குழப்பம் அது.  அன்று முதல் அவளை நாங்கள்
செல்லமாக டிலுக்கு என்றுஅழைக்க ஆரம்பித்தோம்.
அவள் எழுதிய வேறு சில கவிதைகள்.
மூன்றாம் விதி 
தூண்டில் உணவை 
தேடும் மீன் அறியுமா 
நியூட்டனின்  மூன்றாம் விதி

போதனை
பாரதி - ரௌத்திரம் பழகு
அன்னை தெரசா - அன்பே சிவம்
புத்தர் - ஆசையை  துற
மகாத்மா - வாய்மையே வெல்லும்
யார் போதிப்பார் - அரசியலில் நேர்மை ?





சில நாட்களாக மனசுக்கு பிடிபடாத கற்பனை குதிரைகள் நேற்று திடீரென்று எனது தேர் குதிரைகளாக மாறிய  மதிய பொழுதில் எழுதிய சில கன்னி கவிதைகள்.

முதிர்கன்னி
காற்றில் கற்பூரம் போல்
தேயும் அழகும் இளமையும்
காட்டில் நிலவொளி

பாரபட்சம்
மழையை கண்டு ஆடிய மயிலை
கொண்டாடிய கவிஞனின் கண்ணில் படவில்லை
ஆர்ப்பாட்டமின்றி ரசிக்கும் அழகற்ற மண்புழுக்கள்

சுமை
வாழ்க்கை தந்த வலி மிகுந்த பாடங்களை
மறக்காமல் சுமந்து செல்கிறேன் தினமும்
என்றாவது ஒருநாள் உதவுமோ என்று











    

        











                            
  

வெள்ளி, மே 06, 2011

கதம்ப மாலை - 1

பிரிவு

இந்திய பயணம் எப்போதும் மகிழ்ச்சியை தருவது. ஆனால் இந்த முறை நெருங்கிய உறவினரின் ஒருவரின் மறைவினால் மேற்கொள்ள நேர்ந்தது
மிகுந்த வருத்தத்தை அளித்தது. ஒவ்வொரு மரணமும் நம்மை ஒவ்வொரு
விதத்தில் பாதிக்கிறது.  நான் பள்ளி பிராயத்தில் இருந்த போது எனது தாத்தாவின் மரணம் உறவின் அருமையை புரிய வைத்து. எனது தாத்தா குழந்தைகளுக்கு இணையாக தானும் விளையாடுவார். அவருடன் சீட்டு விளையாடுவதற்காக பேரப்பிள்ளைகள் அனைவரும் ஆவலுடன் காத்திருப்போம்.சரியான "வாச்சான்குலி" ஆட்டம் ஆடுறீங்க மேடம்
என்று  பேத்திகளை அவர் செல்லமாக கேலி செய்வதும், "வாச்சான்குலி" பாய் என்று பேரன்களை செல்லமாக கலாட்டா செய்வதும் என்று கேலியும் கிண்டலுமாக பொழுது கழியும். ஒரு நாள் கூட எனக்கு உடம்பு சரியாக  இல்லை அதனால் விளையாட வர இயலாது  என்று
சொன்னதாக நினைவு இல்லை.

குழந்தைகளின் உலகத்தில் தன்னையும் ஒருவறாக கருதி,
பேரன் பேத்திகளை உற்சாகப்படுத்தி, அவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு, குடும்பத்தின் ஆணி வேறாக இருந்து எல்லாரையும் அன்புடன்
அரவணைத்து  சென்றது என்று தாத்தாவை பற்றி சொல்லி கொண்டே போகலாம். இதில் குறிப்பிடப்பட  வேண்டியது என்னவென்றால் தாத்தா போஸ்டல் யூனியனில் ப்ரெசிடென்ட் ஆக இருந்து கொண்டே எங்கள் அனைவருக்கும் நேரம் ஒதுக்கியது தான். அடிக்கடி வெளியூர் சென்று யூனியன் மாநாடு, மினிஸ்டரை பார்த்து பேசுதல், அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை போன்ற வேலைகளுக்கு இடையேயும் எங்கு சென்றாலும் பாஷை தெரியாத இடம் என்றாலும் எங்களுக்கு என்று ஏதாவது ஸ்பெஷலாக  வாங்கி வருவதில் தவறியது கிடையாது. ஒருவர் நன்றாக வாழ்ந்தாரா என்பதற்கு அவருடைய சாவிற்கு வரும் கூட்டத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம். அவர் இறப்பிற்கு வந்த கூட்டம் பெரியது, அதை விட பெரியது வந்தவர்கள் அவரை பற்றி  சொன்னது . எத்தனை பேருக்கு வேலை வாங்கி கொடுத்தார்கள், எவ்வளவு பேருக்கு  பொருள் உதவி செய்தார்கள் என்பதெல்லாம் கேட்க கேட்க பெருமையாகவும் அதே நேரம் துயரம் தருவதாகவும் இருந்தது.   

தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, பெரியப்பா, பெரியம்மா  போன்ற சொந்தங்களை பார்க்காமல் பழகாமல் அயல் நாட்டில் வளரும் நம் குழந்தைகள் எவ்வளவு இழக்கிறார்கள் என்று யோசித்தால் மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.  உறவின் அருமை பிரிவில் தெரியும் என்பார்கள். ஒரு சிலருக்கு இந்த அயல் நாட்டு வாழ்க்கை முறை பிடித்திருப்பதாக வைத்து கொண்டாலும் உற்றார் உறவினரை பிரிந்து பாசம், நேசம் போன்ற பலவற்றை இழந்து தான் பலர் இந்த வாழ்கையை வாழ்ந்து கொண்டு  இருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது.    

வெளிநாட்டில் அல்லது உள்நாட்டில் வசிக்கும் அனைவரும் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான வழிமுறைகள்- அடுத்த முறை ஊருக்கு போன் செய்யும் போது டிவி மற்றும் கணினி ஆகியவற்றை பார்த்துக் கொண்டோ அல்லது சாப்பிட்டுக் கொண்டோ  பேசாமல்  உங்கள் முழு கவனத்தையும்
அளித்து பேசுங்கள். தவறாமல் உறவினர் எல்லோருக்கும் மாதத்துக்கு ஒரு முறையேனும் போன் செய்து பேசுங்கள். அடுத்த வாரம் பேசலாம், இன்னும் இரண்டு நாள் கழித்து பேசலாம் என்று தள்ளிப்  போடாதீர்கள். பண்டிகை, 
திருமண நாள், பிறந்த நாள் போன்ற விசேஷ நாட்களில் உறவினர்களுக்கு வாழ்த்து கூற மறக்க வேண்டாம். இந்தியா செல்லும் போது உறவினர்களை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வையுங்கள். அவ்வாறு அறிமுகம் செய்யும் உறவினருடன் புகைப்படம் எடுக்க முடிந்தால் மிகவும் நன்று.நமக்கு தாய் தந்தையர் ஏற்படுத்தி கொடுத்த சொந்த பந்தங்களை  நமது குழந்தைகள் தலை முறைக்கும் நாம் ஏற்படுத்தி கொடுப்பது நமது கடமை.  குழந்தைகளுக்கு சொத்து சேர்த்து வைப்பது மட்டும் நமது கடமை அன்று. நல்ல மனிதர்களை சேர்த்து வைப்பதும் நமது கடமை என்பதை மறக்க வேண்டாம்.

அம்மா
தாயின் அன்பும் அரவணைப்பும் இல்லாமல் போனால் இந்த பூமி சுழல்வது கூட நின்று விடும் என்று சொன்னால் அது மிகையாகாது.   பிறந்து சில நாட்களே ஆன ஆட்டுகுட்டியை எங்கள் வீட்டு வாண்டுகளுக்கு காண்பிப்பதற்காக எடுத்து வந்திருந்தாள் எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண். குட்டியின் வாசமோ அல்லது அதன் அழைப்பின் ஒலியோ எதுவென்று தெரியவில்லை. குட்டி இருக்கும் இடத்தை எப்படியோ அடையாளம் கண்டு எங்கள் வீட்டுக்கே வந்துவிட்டது தாய் ஆடு. குட்டியும் தாய் ஆடும்  ஒன்றை ஒன்று உச்சி முகர்ந்து அன்பு பாராட்டியது மனதிலேயே நிற்கிறது. தாய்மை அனைத்து உயிரினங்களுக்கும் பொது என்பதை உணர்த்திய அருமையான நிகழ்ச்சி.



சமீபத்தில் கணவனை இழந்த ஒரு பெண்மணி அந்த துக்கத்தின் சுமையிலும் தன்னுடைய மகன்கள் சாப்பிட்டார்களா அவர்களுக்கு பிடித்த உணவை   கொஞ்சம் எடுத்து வையுங்கள், குழந்தைகள் பிறகு சாப்பிடுவார்கள் என்று கூறியது நெகிழ்ச்சி. தன் கஷ்டத்தை பின்னுக்கு தள்ளி தன் குழந்தைகளின் நலனை முன்னிறுத்தும் மனம் தாயை தவிர யாருக்கு வரும். தாயின் சிறந்த கோயிலும் இல்லை என்பது தான் எத்தனை உண்மை.

காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்று திறனாளி சிறுமியின் தாயை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சிறுமியை அடுத்து பிறந்த பெண் குழந்தை மற்றும் ஆண் குழந்தை ஆகிய இருவருக்குமே அதே குறைப்பாடு. என் குழந்தைகளில் யாருமே என்னை "அம்மா" என்று அழைத்து கேட்க எனக்கு கொடுத்து வைக்கவில்லை. அக்கம் பக்கத்திலும் ஊமை பிள்ளையை பெத்தவ  என்று ஏளனமாக பேசுகிறார்கள் என்று அந்த தாய் அழுத போது ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை. குழல் இனிது யாழ் இனிது என்பர் மழலை சொல் கேளாதார் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. அற்புதமான மழலை செல்வங்கள் வாய்த்தும் அம்மா என்று அந்த குழந்தைகள் அழைக்க முடியாதது சோகம். அதை விட பெரிய சோகம் அந்த தாயை மற்றவர்கள் குழந்தைகளின் ஊனத்தை குறிப்பிட்டு திட்டுவது.  எந்த தாயையும் காயப்படுத்தாதீர்கள். அவர்கள் உங்களையும் என்னையும் காப்பதற்காக வந்த இறைவனின் தூதுவர்கள்.

அனைவருக்கும் மதர்ஸ் டே வாழ்த்துக்கள். உங்கள் வீட்டில் இருக்கும் நடமாடும் தெய்வங்களாகிய உங்கள் தாய் மற்றும் சகோதரிகளுக்கும் மற்றும் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் உயிராக நேசிக்கும் உங்கள் மனைவிக்கும் இந்த நாளில் மறக்காமல் வாழ்த்து கூறி அவர்கள் செய்யும் எல்லாவற்றிற்கும் பாராட்ட மறக்காதீர்கள்.

தேர்தல்
இந்த முறை தேர்தல் வந்த சுவடே இல்லாமல் மிகவும் அழகாக நடந்தது. ஒலி பெருக்கி சத்தம் இல்லாமல், அழகான  சுவர்கள் தேர்தல் விளம்பரங்களால்  பாழ் ஆகாமல் தேர்தல் நடக்குதா என்று ஆச்சரியமாக கேள்வி எழுப்பும் அளவுக்கு அற்புதமாக நடந்தது.  தேர்தல் கமிஷனுக்கு ஒரு ஜே. ஆனால் பொருளாதாரமாவது வெங்காயமாவது என்று நாட்டின் நிதி நிலைமையை பற்றி கவலைப்படாமல்  இலவசங்களை அள்ளி வீசும் கட்சிகளுக்கு தம்ப்ஸ் டௌன். இவர்களுக்கு மக்களை பற்றிய  அக்கறை இல்லை. ஆட்சி கட்டிலில் அமர்ந்தால் லட்சக்கணக்கான கோடிகளை சம்பாதித்து மக்களுக்கு பட்டை நாமம் சாத்தலாம் என்பது ஒன்றே குறிக்கோள். பின்னே மு.க. குடும்பம் கொள்ளை அடித்தது போல நாங்கள் சம்பாதிக்கவில்லையே  என்று மற்ற கட்சிகளும் முணுமுணுப்பது நன்றாகவே கேட்கிறது. இலவச டிவி, பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர், இலவச வீட்டு மனை, 2 ரூபாய் அரிசி என்று மக்கள் பக்கம் சில சில்லறை இலவசங்களை அள்ளி வீசிவிட்டு பெரிய அளவில் ஊழல் செய்து தனது தலைமுறைக்கு மட்டும் அன்றி தனக்கு பின் வரும் நூறு தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைப்பது என்பது இன்று எல்லா கட்சிகளுக்குமான பொது குறிக்கோள். மின் பற்றாக்குறை காரணமாக இலவசமாக கிடைக்கும் டிவி, மிக்சி, கிரைண்டர் போன்ற மின் சாதன பொருட்கள் இயங்காது என்பதை பற்றிய கவலை யாருக்கும் இல்லை. மணல் கொள்ளை தடுப்பு, தார் சாலைகள், பாலங்கள் போன்ற கட்டமைப்பு வசதிகளை மாநிலம் எங்கும் ஏற்படுத்துதல், நீர் நிலைகளை சுத்தப்படுத்துதல் மற்றும் ஆறு குளங்களை தூர் வாருதல், வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி போன்ற பலவற்றில்  ஏதேனும் ஒன்றோ, ரெண்டோ ஊழல் மற்றும் முறைகேடு  இல்லாமல் பூர்த்தி செய்வோம் என்று எந்த கட்சி  சொல்கிறதோ அந்த கட்சிக்கே ஒட்டு என்று மக்கள் ஒன்றுபடுவார்களோ அன்றே தமிழ்நாட்டுக்கு விடிவு காலம் வரும். அந்த பொன்னாள் எந்த நாளோ?

சுதந்திரம்
கூண்டு கிளிகள், விலங்குகளை பார்த்து  பரிதாபப்படாதவர் இருக்க முடியாது. சுதந்திரம் என்பது  ஒவ்வொரு உயிரினத்துக்கும் மூச்சு காத்து போன்றது. போர் முடிந்து  இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முள்வேலி முகாமில் அடைந்து கிடக்கும் இலங்கை தமிழர்கள் மிகுந்த பரிதாபத்துக்கு உரியவர்கள் -ஏன்  என்றால் அவர்கள் சுதந்திரத்தை மறந்து, ஒரு வேளை உணவு கிடைத்தால் கூட போதும் என்ற விளிம்பு நிலையில் வாழ்ந்து கொண்டு இருப்பது தான். அடக்கு முறை, உயிர் பயம்,  பாலியல் வன்முறை, முகாம்களில் உள்ள சுகாதாரமற்ற வாழ்கை சூழல், நோய், உணவின்மை, உற்றார் உறவினர்களை  மற்றும் சொந்தங்களை இழந்து நடை பிணங்களாக வாழும் அவலம் என்று இன்னும் விவரிக்க முடியாத துன்ப சூழ்நிலையில் தங்கள் வாழ்கையை வாழ்ந்து வருகின்றனர். நவீன கண்ணகி சோனியா, கடித  புலி  மு.க. மற்றும் கலி கால ராவணன் ராஜபக்ஷே  என்ற மும்முனை தாக்குதலில் சாவு கூட பரவாயில்லை முள்ளி வாய்க்காலில் நாங்களும் மடிந்திருக்கலாம் என்ற மன நிலைக்கு இன்று மக்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். தனி மனிதன் ஆயுதம் எடுத்தால் தீவிரவாதி என்று அடையாளம் கொள்ளப்படுகிறார்கள்.சட்டத்தின் வாயிலாக தண்டிக்கபடுகிறார்கள். ஒரு அரசாங்கம் ஆயுதம் ஏந்தி அப்பாவிகளை கொல்வதை உலக நாடுகள் அனைத்தும் மெளனமாக வேடிக்கை பார்க்கின்றன. இன்று வரை போர் குற்றவாளிகளுக்கு எதிராக ஒரு நடவடிக்கையும் இல்லை. காலம் தாழ்ந்த நீதி கூட மறுக்கப்பட்ட நீதியே. சரி போனது போகட்டும் - அகதிகளாக வாழும் மக்களை அவர்கள் வாழ்ந்த நிலங்களில் மறு குடியமர்த்துதல், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று அனைவருக்கும் சம உரிமை வழங்குதல், மக்கள் பிரச்சினைகளை அலசி அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதே உண்மையான அமைதிக்கு வழி. அதை விடுத்து தமிழர்களை அடிமைப்படுத்தி, ஆதிக்கம் செலுத்துவது போன்ற வழுக்கு பாதையில் பயணிப்பது ஆபத்தானது. ஏனெனில் போராளிகள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள். வரலாறு நமக்கு காண்பிக்கும் உண்மை இது. அதிகாரவர்கத்திற்கு இந்த உண்மை எட்டுமா?


கல்யாணமாம் கல்யாணம்
நடிகர் கார்த்திக்கு ஜூலை மாதம் திருமணமாம். வாழ்த்துக்கள். வெளிநாட்டில் படித்து இன்று சினிமா துறையில் சிறந்த இடத்தை பிடித்துள்ள திறமையான இளம் நடிகர். அப்பா அம்மா பார்த்து தேர்வு செய்த பெண்ணை கரம் பிடிக்க போகிறார். நல்லது.  யாரை வேண்டும் என்றாலும் திருமணம் செய்ய யாருக்கும் உரிமை உண்டு. இருந்தாலும் சில கேள்விகள் எனக்கு எழாமல் இல்லை. முதலில் திருமணம் செய்யும் பெண்ணிற்கு. நல்ல வசதியான, புகழ் வாய்ந்த மற்றும் அழகான படித்த மாப்பிள்ளை. சரி. ஆனால் நடிகர்கள் பல பெண்களுடன் சேர்ந்து நடிக்க வேண்டியிருக்கும். கிசு கிசு, யூகங்கள் என்று நடிகர்களை மற்ற நடிகைகளுடன் இணைத்து வரும் செய்திகளை  எதிர்கொள்ள கூடிய துணிச்சல் உள்ளவரா நீங்கள்? ஏனென்றால் இது ஒரு வருடமோ  இரண்டு வருடமோ மட்டும் நடக்கும் விஷயம் அன்று. நடிகர்கள் சினிமா துறையில் இருக்கும் காலம் முழுவதும் இப்படிப்பட்ட செய்திகள் வந்து கொண்டே இருக்கும். அது மட்டும் இல்லாமல் இவருக்கு நான் பொருத்தமா, நான் இன்னும் ஒல்லியாக அழகாக இருக்க வேண்டுமா , இந்த நடிகையுடன் chemistry ரொம்ப நல்லா இருக்கே, இவருக்கு என்னை விட இந்த பெண்ணை பிடிக்குமோ என்று பல விதமான சிக்கல்கள் நிறைந்த டென்ஷன் மிகுந்த வாழ்கையை  தேர்வு செய்திருப்பதால் கேட்கிறேன். நடிகர்களின் மனைவிகள் தங்க கூண்டு கிளிகள் தாம். அதில் சந்தேகம் வேண்டாம். கமலஹாசன், பிரஷாந்த்,  சரத்குமார், பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், பார்த்திபன், ராமராஜன் என்று திரைத்துறையில் வெற்றி பெற்ற பலருக்கும்  திருமண வாழ்க்கை கை கொடுக்கவில்லை. இப்படிப்பட்ட  ட்ராக்   ரெக்கார்ட் உள்ள திரைத்துரையை நம்பி வாழ்கையை பணயம் வைக்கிறாயே அதனால் கேட்கிறேன்.    
கார்த்தி - நீங்கள் வெளி நாட்டில் படித்திருக்கிறீர்கள். உங்களை போன்று திரை துறையில் உள்ளவரை தேர்வு செய்து இருக்கலாம் அல்லது  வெளிநாட்டில் படித்து இந்தியாவில் வாழ்பவரை அல்லது வெளிநாட்டில் வாழ்பவரை தேர்ந்தெடுத்து இருக்கலாம். அதை விடுத்து உங்கள் தந்தை காட்டும் பெண்ணை மணப்பதன் காரணம் என்ன? இந்தியாவில் உள்ள பெண்களை நான் மட்டம் தட்டுவதாக எண்ண வேண்டாம்.  "ப்ரீ திங்கிங் வுமன்" வேண்டாம்.  உங்களை போன்று திரை துறையில் இருப்பவர் வேண்டாம். குழந்தைகளை வளர்க்கவும், சமைத்து போடவும், நான் சொன்னதை கேட்கவும் கூடிய பெண் வேண்டும் என்று சராசரி ஆண்கள் போல நடப்பதால் இந்த கேள்வி எனக்கு எழுகிறது.

இன்று திருமணங்கள் ஒரே அலைவரிசையில்  உள்ள ஆணும் பெண்ணும் இணையும் பந்தமாக இல்லாமல் - பெற்றோர் விருப்பத்திற்காகவும், பணம், புகழ், அந்தஸ்து என்று ஆடம்பரத்திற்காகவும் செய்யும் சடங்காக மாறிவிட்டது. வாழ்கையில் ஒரு பாதி கடவுள் அமைத்தது. அதாவது நம் பெற்றோரை நாம் தேர்வு செய்வது இல்லை.எது விதித்திருக்கிறதோ அது நமக்கு கிடைக்கும். ஆனால் வாழ்கையின் மறு பாதி நம் கையில். அந்த தேர்வு சரியில்லாமல் போனால் வாழ்க்கை இனிக்காது. நீங்கள் இருவருமே உங்கள் தேர்வு சரியா, இப்பப்பட்ட பெண்ணோடு/ஆணோடு வாழ விருப்பமா/ முடியுமா என்பதை சீர் தூக்கி பார்ப்பது நல்லது. வாழ்க்கை வாழ்வதற்கே. உங்கள் வாழ்க்கையும் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.           

செவ்வாய், மார்ச் 08, 2011

கிரிக்கெட் - ஒரு பார்வை

வேர்ல்ட் கப் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பிச்சாச்சு. சூரிய உதயத்தை பல நாளா 
பார்க்காதவங்க  கூட அலாரம் வைத்து சூரியனுக்கு முன்னாடி கண் விழித்து 
கிரிக்கெட் மேட்ச் பாக்கறாங்க. நான் சொல்லறது வடஅமெரிக்காவில
இருக்கற கிரிக்கெட் ரசிகர்களை பற்றி.  இந்தியாவில இருக்கற ரசிகர்களை பற்றி கேட்கவே வேண்டாம். அலுவலகத்துக்கு போறவங்க, காலேஜ் மற்றும் 
ஸ்கூலுக்கு போறவங்க, இல்லத்தரசிங்கன்னு  எல்லாரும் தங்கள் பணிகளை மறந்து தொலைகாட்சியோட  ஒன்றிப்  போய்டுவாங்க. 



இன்று இந்திய நாட்டு மக்களை ஒருங்கிணைக்கிற சக்தியாக கிரிக்கெட் மாறிவிட்டது.  சினிமா, கிரிக்கெட், தொலைக்காட்சி என்று மக்கள் ஒரு வித  மாயையிலேயே வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். இது போதாது
என்று தங்களுக்கு பிடித்த விளையாட்டு வீரன் எவ்வளவு ரன்ஸ்
எடுத்திருக்கிறான் இன்னும் எவ்வளவு ரன்ஸ் எடுத்தால் ஒரு புதிய உலக சாதனையை படைக்க முடியும், இந்த 
போட்டியில் யார்  வெற்றி பெற்றார், எத்தனை விக்கெட் வித்யாசத்தில்  என்பது போன்ற புள்ளி விவரங்கள் நிரம்பி வழிகின்ற இணையதள பக்கங்கள் ஏராளம் தாராளம். பொழுதுபோக்கு என்பது வாழ்க்கைக்கு தேவை தான். நான் பொழுதுபோக்குக்கு எதிரானவள் அல்ல. எனது பிரச்சனையே வேறு.

கண்ணாமூச்சி, கோகோ, ஓடிப்பிடித்தல் போன்ற விளையாட்டுகளை அக்கம் பக்கத்தில் உள்ள குழந்தைகளோடு விளையாட வேண்டிய குழந்தைகள் 
தொலைக்காட்சியோடு ஒன்றிக்கிடப்பது கூட பரவாயில்லை. நமது  தேசிய விளையாட்டை கிரிக்கெட் என்றே நினைத்துக்கொண்டு வளர்கின்ற இந்த கால குழந்தைகள் கவலை அளிக்கின்றனர்.

கிரிக்கெட் உலகம் கோடிகளில் புரள்வதை பற்றிய கவலை எனக்கில்லை. ஹாக்கி, கால்பந்து, மல்யுத்தம், கூடை பந்து போன்ற விளையாட்டுகள்   லட்சங்களை கூடப் பார்பதில்லை என்பது தான் கவலை அளிக்கிறது.

கிரிக்கெட் பார்ப்பதற்க்கு, புள்ளி விவரங்களை  பெறுவதற்கு என்று லட்சக்கணக்கான   இணையதளங்களை உங்களால் கூற முடியும். ஆனால் தேசிய விளையாட்டு என்று அடையாளம் காணப்படும்  ஹாக்கி டீமுக்கு யார் கேப்டன் என்பது கூட பலருக்கு தெரியாது. அப்படி தெரிந்து கொள்ள எந்த இணையதளத்திற்கு போகலாம் என்பது கூட பலராலும் கூற முடியாது. மற்ற விளையாட்டுகளை ஓரம் தள்ளி  இன்று ஆல விருக்ஷம் போல கிளை பரப்பி நிற்கிறது கிரிக்கெட். அப்படி இருப்பதால்  காமன்வெல்த்
போட்டிகள் , ஒலிம்பிக் போட்டிகள் போன்றவற்றில் 100 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்தியா ஒரு தங்கப்பதக்கம் கூட வாங்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருப்பது கவலை அளிக்கிறது. 

ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்டு பின்பு அவர்கள் ஆட்சி செய்த நாடுகளில் புகழ் பெற்ற விளையாட்டு  தான் கிரிக்கெட். அப்படி ஆங்கிலேயர் விட்டு சென்ற கிரிக்கெட்டை  விளையாடுவது  கூட தப்பில்லை. ஆனால் அந்த கிரிக்கெட் இன்று  புக்கிகளிடமும், சூதாட்ட பேர்வழிகளிடமும் சிக்கியதால்
தோல்வியும் வெற்றியும் முன்பே தீர்மானிக்கப்பட்டு சும்மா ஒப்புக்கு
நடக்கும் நாடகம் போல ரசிகர்களின் கண் முன்னே அரங்கேற்றபடுகிறது. சரி சாமானியனை பற்றி யாருக்கு என்ன கவலை. அது தான் விளையாடுபவர்களுக்கு மேஜைக்கு மேலயும் பணம், கீழேயும் பணம் என்று எல்லா வழிகளிலும் வருகிறதே.

அயல்நாடுகளில் கால்பந்து, கூடைபந்து, பேஸ்பால் ஆகிய
விளையாட்டுகளில்இருப்பது போன்ற பிராஞ்சைஸ் முறையை இன்று இந்திய கிரிக்கெட்டிலும்  அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.  இது கூடாது என்று சொல்லவில்லை. முன்பெல்லாம் உள்ளுரில் ஒரு சில போட்டிகள் மட்டுமே நடக்கும். இப்போதெல்லாம் இந்த பிராஞ்சைஸ்கள்
வருடம் முழுவதும் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த போட்டிகளை நேரடியாகவோ, தொலைக்காட்சி,ரேடியோ,இணையதளம் ஆகியவற்றின் மூலமாகவோ  பார்த்து
பொன்னான நேரத்தையும் காலத்தையும் வீணாக்கும்  இளைய தலைமுறையை கண்டே எனக்கு கலக்கம்.

இன்று கிரிக்கெட் ஒரு பணம் காய்ச்சி மரம். முன்பெல்லாம் ஒரு கிரிக்கெட் வீரன் சராசரியாக 35  வயதில் கிரிக்கெட்டில்  இருந்து ஒய்வு பெற்று வந்தான் என்றால்  இன்று  40,45 வயதில் யாரும் ஓய்வெடுப்பதை
விரும்புவதில்லை.  விளம்பர வருவாய், மாத சம்பளம், கௌரவ பதவிகள்,
அரசாங்க ஊக்கதொகை, ரசிகர்கள்/ரசிகைகள் ஆதரவு என்று வளம் கொழிக்கும் தங்க முட்டை வாத்தை விட யாருக்கு தான் மனசு
வரும். 


சரி கிரிக்கெட் மட்டுமா மக்களை கெடுக்கிறது. தினம் தினம் சீரியல் பார்த்து நேரத்தை வீணாக்கும் பெண்கள் எத்தனை பேர், சினிமா பார்த்து சீரழியும் இளைய தலைமுறை எத்தனை பேர் என்று நீங்கள் கேட்கலாம். 'கிரிக்கெட்'மேனியா   சினிமா மோகம், தொலைக்காட்சி மோகம் போன்று ஆபத்தானது என்பதை பலரும் உணராத காரணத்தாலே அதை மோசமானது என்ற பட்டியலில் முன்னிலையில் வைப்பது
சரியாகப் படுகிறது.  நான் இந்த பதிவை எழுதும் இன்றைய தினமலரின் தலைப்பு செய்தியாவது - நாக்பூரில் நடைபெற இருக்கும் இந்திய - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான  உலக கோப்பை போட்டிகளுக்கு  டிக்கெட் கிடைக்காததால் ரகளையில் ஈடுபட்ட
ரசிகர்களை தடி அடி நடத்தி போலீசார் கலைத்தனர் என்பதே. இளைஞர்கள் 
ஊழலுக்கு எதிராக அணி திரளவில்லை, அடிப்படை வசதிகளுக்காக போராடவில்லை, நீதிக்காக,சம உரிமைக்காக போராடவில்லை. ஆனால் வீட்டின் வரவேற்பறை வரை தொலைகாட்சி மூலம் வரும் போட்டிகளை நேரடியாக பார்ப்பதற்காக கலாட்டாவில் ஈடுபட்டு
போலீசாரிடம்  அடி வாங்க வேண்டிய அவசியம் என்ன என்பது தான் புரியவில்லை.

பெற்றோர்களுக்கு எனது வேண்டுகோள் ஒன்று தான். உங்களது குழந்தைகளை கிரிக்கெட்டை தவிர்த்து டென்னிஸ், கூடைபந்து, நீச்சல், செஸ் போன்ற ஏனைய துறைகளில் ஊக்கப்படுத்துங்கள். இதன் மூலம் வரும் சந்ததியினராவது மற்ற விளையாட்டுதுறைகளில் இந்தியாவிற்கு
சிறந்த பிரதிநிதித்துவம் அளிக்க முடியும். இன்று கிரிக்கெட் விஸ்வரூப
வளர்ச்சி பெற்றிருப்பது போல நாளை மற்ற  விளையாட்டு துறைகளும்
வளர்ச்சி காண்பது இதன் மூலம் மட்டுமே சாத்தியம்.

அரசாங்கமும்  ஒவ்வொரு ஊரிலும் நீச்சல் குளம், ஓட்டப்பந்தய மைதானம்,
பயிற்சி  அரங்கம், ஆகியவற்றை அமைத்து ஏனைய விளையாட்டுகளை
ஊக்கப்படுத்த வேண்டும். மற்ற விளையாட்டுகளும் புகழ் பெறும் போது அரசுக்கு வருவாய் பெருக வாய்ப்பு உள்ளது.   
இதை விட முக்கியமானது  பொது ஜனத்தின் பங்குதான்.
கிரிக்கெட்டை தவிர வேறு துறைகளில் பிரகாசிக்கும் மாணவனையோ,
அல்லது ஒரு அணியையோ ஆதரித்து கைதூக்கி விடும் கடமை நாம்
ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. கிரிக்கெட் தவிர ஏனைய போட்டிகளுக்கு சென்று விளையாடுபவர்களை உற்சாகப்படுத்துதல், அப்போட்டிகளை நேரில்
சென்று பார்ப்பதால் வருமான வாய்ப்பு ஏற்படுத்துதல் போன்றவற்றால்
நாம் நசிந்து இருக்கும் பல்வேறு விளையாட்டுகளை மேம்படுத்த முடியும்.

20  முட்டாள்கள் விளையாடுவதை 20000  முட்டாள்கள் பார்க்கிறார்கள் என்று ஜார்ஜ் பெர்னார்ட் ஷா கிரிக்கெட்டை பற்றி குறிப்பிட்டார். நாம் அறிவாளியா முட்டாளா என்பதை வரலாறு பதிவு செய்ய காத்திருக்கிறது. புதியதொரு வரலாறு படைப்போம்.