மனிதன் எங்கே
பெய்ஜிங் சீனா-வில் சாலை விபத்தில் அடிபட்டு ரோட்டோரம் கிடந்த குழந்தையை எண்ணற்ற பாதசாரிகள் கண்டும் உதவாமல் சென்றது மனதை சுட்டது. ஒரு வேளை சரியான நேரத்தில் முதலுதவி கிடைத்திருந்தால் குழந்தை இன்று உயிருடன் இருந்திருக்குமோ என்னமோ. அந்த குழந்தையின் தாயின் கண்ணீர் முகம் நினைவில் இருந்து அகல மறுக்கிறது. ரோட்டோரம் கிடந்தது பண மூட்டையாயின் யாரும் பார்க்காமல் சென்றிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. ஆப்பிரிக்காவில் பட்டினி சாவு, சிறிலங்காவில் ஈழப் போரில் எண்ணற்ற தமிழர்கள் உயிர் இழந்தது, துருக்கி நில நடுக்க உயிரிழப்பு ஆகியன யார் மனதிலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. இந்த அவசர யுகத்தில் தன் பிள்ளை தன் குடும்பம் தன் வீடு என்ற சிறிய வட்டத்தில் மனித மனம் சுருங்கி கடுகளவாகி விட்டது. பெரியோர் ,முதியோர் ஆகியோருக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை. மாசற்ற குழந்தைக்கு உதவக் கூடவா ஒருவரும் முன்வரவில்லை என்பதை நினைக்க நினைக்க மனம் பதறுகிறது. குழந்தை அடிபட்டு ரோட்டில் கிடந்த போது 18 பேர் அதை கடந்து சென்றுள்ளனர். 19 நபராக ரோட்டில் சென்ற குப்பை அகற்றும் பணி செய்யும் பெண்மணி ஒருவர் அந்த அடிபட்ட குழந்தையை அதன் தாயிடம் எடுத்து சென்று சேர்ப்பித்துள்ளார். அவரை போன்ற ஒரு சிலர் இருப்பதால் தான் நாட்டில் மழை பொழிகிறது. சீனா என்றில்லை இந்தியாவிலும் சாலை விபத்தில் அடிபட்டவரின் நிலை இது தான். உயிர் காக்க உதவுவதற்கு பதில் அடிபட்டவரின் பணம், நகை ஆகியவற்றை களவாட கண்டிப்பாக ஒரு கும்பல் கூடிவிடும். நாகரிகத்தின் தொட்டில் என்று தங்களை அடையாள படுத்திக்கொள்ளும் இந்தியா போன்ற நாடுகளும், உலகின் பெரிய வலிமை வாய்ந்த நாடாக காட்டிக் கொள்ளும் சீனா போன்ற நாடுகளும் தங்கள் மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்பதை எண்ணி பார்க்க வேண்டும். எங்கு பிறர் துன்பம் கண்டு இரங்கும் மனநிலை உள்ள மக்கள் வசிக்கிறார்களோ, எங்கு சின்னஞ்சிறு குழந்தை முதல் முதியோர் வரை சமமான பாதுகாப்பு உள்ளதோ அந்த நாடே வலிமை வாய்ந்த நாடு. அதுவே நாகரீகத்தின் தொட்டில். மற்றதெல்லாம் மனித தோல் போர்த்திய கொடிய மிருகங்கள் வசிக்கும் காடு மட்டுமே.
இயற்கை என்னும் இளைய கன்னி
வட அமெரிக்காவில் வந்து குடியேறிய பிறகே பருவ கால சுழற்சியை நேரில் கண்டு உணர முடிந்தது - பனிக்காலம், வசந்தகாலம், கோடைகாலம், முன்பனிக்காலம் என்ற நான்கு விதமான காலங்களும் ஒவ்வொன்றிற்கும் உரித்தான பண்டிகைகளும், அதை கடைப்பிடிப்பதன் நோக்கமும் இவ்வளவு வருடங்களுக்கு பிறகு அத்துபடியாகிவிட்டது என்றே சொல்லலாம். இருப்பினும் முன்பனிக்காலத்தில் மரங்கள் நிறம் மாறும் அழகை(Fall Colors) எத்தனை முறை கண்டாலும் அலுப்பதில்லை. மஞ்சள், சிவப்பு, இளம் சிவப்பு, மனம் மயக்கும் பச்சை என்று பல்வேறு வண்ணங்களில் இலைகள் கொண்ட மரங்களை கண்டு களிக்க இந்த முறை நாங்கள் சென்றது டென்னிசியில் உள்ள ஸ்மோக்கி மௌன்டைன் தேசிய பூங்காவிற்கு. அமெரிக்கா-வில் அதிகமான மக்களால் பார்வையிடப்படும் தேசிய பூங்காவான ஸ்மோக்கி மௌன்டைன் தேசிய பூங்கா வண்ணங்களின் குவியமாக காட்சி அளித்தது. அடிக்கும் குளிர் காற்றையும் பொருட்படுத்தாமல் எண்ணற்ற சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சியை கண்டு களிப்பதற்காக வந்திருந்தனர். சலசலக்கும் ஓடைகளும், வெண்மேகம் தங்கும் மலை முகடும், வண்ணங்கள் தெறித்தார் போன்ற மலை பிரதேசமும், சிலு சிலு வென்ற வாடை காற்றும் அள்ள அள்ள தெவிட்டாத அழகு. குடும்பத்தினர், நண்பர் என்று வெகு நாட்களாக பார்க்காத பலரை பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பதாக இருந்தது. செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் குடும்பத்தினருடன் அவசியம் பார்க்க வேண்டிய இடம். ஒரு வேளை அங்கு செல்ல முடியாவிட்டாலும் தெற்கு கரோலினாவில் உள்ள ஆஷ்வில் சென்றும் அப்பளசியன் மலை தொடரின் அழகை கண்டு ரசிக்கலாம். குடும்பத்தினருடன் சென்றால் பூங்காவினுள் அமைந்து உள்ள பல நூறு குடில்களில் (cabin ) ஒன்றை வாடகைக்கு எடுத்து பூங்காவின் இயற்கை அழகை அருகிலேயே கண்டு களிக்கலாம்.பார்வைக்கு விருந்தளிக்கும் சில புகைப்படங்கள் கீழே.
நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது
என்னடா தலைப்பு இப்படி இருக்கே ஒருவேளை நான் அதிமுக அனுதாபியோ என்று நினைக்க வேண்டாம். எவ்வளவு மோசமான அரசியல்வாதிகள் வந்தாலும் கடுகளவேனும் நன்மை நடக்கும் என்று எதிர்பார்ப்புடன் வாழ்க்கையை நடத்தும் கடைசி குடிமகன் போன்ற நம்பிக்கைவாதி நான் என்று கொள்ளலாம். உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது அதிமுக. முன்னமே சட்டசபை தேர்தலை பற்றி நான் எழுதியது போன்று இது அதிமுகவிற்கு விழுந்த வோட்டு அல்ல. மக்கள் திமுக மேல் கொண்ட தீராத அதிருப்தி காரணமாக அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி. பொறுப்பான எதிர்கட்சியாக செயல்படாமல் "கடவுளுடனும் மனசாட்சியுடனும் மட்டுமே கூட்டு" என்று தேர்தலுக்கு முன்பு முழங்கி பின்னர் கூட்டணிக்காக ஏங்கி தவித்து நின்ற தேமுதிக விற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு தடாலடியாக சரிந்துள்ளது நல்லதற்கே. மக்களை அவ்வளவு சீக்கிரம் முட்டாள் ஆக்கிவிட முடியாது என்று தேமுதிக-விற்கு இதன் மூலம் புரிந்தால் நலம்.
கூட்டணி இல்லாமல் அனைத்து பெரிய கட்சிகளும் தனியாக நின்று எதிர்கொண்ட இந்த தேர்தல் ஒரு அதிசயம். இதன் மூலம் தனித்து நிற்கும் கட்சிகளுக்கு தங்கள் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை சீர்துக்கி பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பாகவும், கூட்டணி பலத்தால் சட்ட மன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடிய கட்சிகள் தற்போது தனித்து நின்றதால் மக்கள் மனதில் தாங்கள் எந்த இடத்தில் உள்ளோம் என்பதை தெரிந்து கொள்ளும் முகமாக அமைந்ததாலும் இந்த தேர்தல் வரலாற்றில் ஒரு மைல் கல். ஆனாலும் "உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது அதிசயம் அல்ல" என்று வாய் ஜாலம் காட்டும் கருணாநிதி இந்த தோல்வி மூலம் ஒன்றும் தெரிந்து கொள்ளபோவதில்லை என்பது மட்டும் உண்மை.கருணாநிதிக்கு உள்ள குடும்ப பிரச்சனையில் அவரால் வெற்றி தோல்வியை சீர் தூக்கிப் பார்த்து கட்சியை ஒருங்கிணைப்பது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. ஜெயலலிதா இந்த வெற்றியை சாமர்த்தியமாக கையாண்டால் அதிமுகவுக்கு ஏறுமுகம் தான். வேண்டும் போது காலில் விழுவதையும் வேண்டாத போது கழுத்தை பிடிப்பதையும் கொள்கையாக வைத்திருக்கும் ஜெயலலிதா மக்களின் எண்ண ஓட்டத்தை படித்து அவர்களுக்கு பயன் தரும் பல நல்ல திட்டங்களை ஊழலற்ற முறையில் செயல்படுத்தினால் அவரை வீழ்த்த எவரும் இல்லை. ஜெயிப்பாரா அல்லது வெற்றி தந்த மமதையில் வீழ்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அமலா பால் |
தோன்றின் புகழோடு தோன்றுக
"இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்" என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வந்தது ஆப்பிள் சக நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்த செய்தி கேட்டு. கல்லூரி படிப்பை கூட முடிக்காத ஸ்டீவ், தனது ஆப்பிள் நிறுவனம் மூலம் உருவாக்கிய ஐ-பாடு, ஐ-பாட், ஐ-போன், மாக் வகை பி.சி- க்கள் போன்ற நவீன கருவிகளால் தொலைபேசி, இசை, கம்ப்யூட்டர் என்று எல்லா துறைகளையும் நவீனப்படுத்தினார் என்று சொன்னால் மிகை இல்லை. ஒரு தனி மனிதனால் எந்த வகையான மாற்றத்தை இந்த உலகத்தில் கொண்டு வர முடியும் என்பதற்கு சிறந்த இரு வார்த்தை பதில் - ஸ்டீவ் ஜாப்ஸ். குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் உபயோகப்படுத்தக் கூடிய எளிய வகை வன்பொருள்கள், அதை வடிவமைத்த விதம், தொழில்நுட்பம் மற்றும் அதை அற்புதமான சந்தை பொருள் ஆக்கிய வித்தை ஆகியன ஆப்பிள் நிறுவன பொருட்களுக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை ஏற்படுத்தி கொடுத்தன என்று சொன்னால் மிகை இல்லை. பிறந்தவுடன் தத்து கொடுக்கப்பட்டு, மேற்படிப்புக்கு வழி இல்லாததால் கல்லூரி படிப்பை கை விட்டு, பின்பு தனி நபர் கணினியை தனது வாகன கூடத்தில் இருந்து உற்பத்தி செய்து விற்று, தனது இருபத்தி ஒன்றாவது வயதில் கோடீஸ்வரன் ஆனது என்று ஸ்டீவ் நடந்து வந்த பாதை பற்றி படிக்க படிக்க நமக்கு வியப்பு வராமல் இருக்காது. பிறகு தான் தொடங்கிய ஆப்பிள் நிறுவனத்தில் இருந்தே வெளியேற்றப்பட்டு நெக்ஸ்ட் என்னும் கம்ப்யூட்டர் நிறுவனம் மூலம் இரண்டாவது சகாப்தத்தை தொடங்கினார். அதன் பின் பிக்சார் என்ற நிறுவனம் மூலம் அவர் தயாரித்த அனிமேஷன் படங்களுக்கு உலகெங்கும் தட புடல் வரவேற்பு. எந்த ஆப்பிள் நிறுவனம் அவரை வெளியேற்றியதோ அந்த நிறுவனமே சில பல சரிவுகளுக்கு பிறகு அவரை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. பின்னர் அவர் ஆப்பிள் நிறுவனத்தை எவ்வாறு உலகப் புகழ் பெற செய்தார் என்பது அனைவரும் அறிந்தது. ஸ்டான்போர்ட் பல்கலை கழகத்தில் அவர் ஆற்றிய தொடக்க உரையை கேட்க கீழே கிளிக் செய்யவும்.
அவர் சொன்னதில் என்னை தொட்ட மூன்று சிந்தனைகள் - வாழ்க்கையானாலும், வேலையானாலும் நீங்கள் விரும்புவதை தேர்ந்தெடுத்து செய்யுங்கள். அதுவே மனமகிழ்ச்சிக்கு சிறந்த வழி. நீங்கள் உங்களுக்காக வாழுங்கள். யாரை திருப்தி படுத்தவும் நீங்கள் வாழ வேண்டாம். வாழ்க்கையில் நிகழும் அனைத்து நிகழ்வுகளும் அர்த்தம் நிறைந்தது. எனவே வாழ்கை அர்த்தமற்ற அலங்கோலம்அல்ல. அர்த்தம் பொதிந்த அற்புதம். அவர் அனுபவத்தில் இருந்து வந்த இந்த சிந்தனைகள் ஆழமானது; வாழ்க்கையில் நம்மால் முடிந்த வரை கடைபிடிக்க வேண்டியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக