வியாழன், ஆகஸ்ட் 16, 2012

கதம்ப மாலை - 5


உதிர்ந்த மனிதனும் தொலைந்த மனிதமும்


சமீபத்தில் கேள்விப் பட்ட உண்மை சம்பவம். தூரத்து உறவினர் ஒருவருக்கு நேர்ந்தது. கிட்டத்தட்ட 70 அல்லது 75 வயது மதிக்கத்தக்க அந்த உறவினர் மனைவின் மறைவுக்கு பின் சொந்த கிராமத்திலேயே தங்கி இருந்தார். அவருக்கு 8 குழந்தைகள். 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறிய டவுனில் ஒரு மகளும் கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரிய ஊரில் சில மகன்களும் மற்றும் சிலர் சென்னை போன்ற பெருநகரங்களிலும் சிலரும் வசிக்கின்றனர். சம்பவ தினத்தன்று தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த உறவினர் நெஞ்சு வலி காரணமாக இறந்துவிட்டார். உட்கார்ந்த நிலையிலேயே இறந்தவர் உடல் கிட்டத்தட்ட 3 நாட்கள் வரை கண்டுபிடிக்கப் படவில்லை.3 நாட்கள் கழித்து அழுகிய உடலில் இருந்து கிளம்பிய புழுக்கள் வீடெங்கும் நெளிய ஆரம்பித்த பின்னரே யாரோ கண்டுபிடித்து ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.பின்னர் அவர் உடலுக்கு ஈமச் சடங்குகள் நடத்தப்பட இயலாமலேயே எரிவூட்டப்பட்டது. இத்தனை மகன்கள் மற்றும் மகள்கள் இருந்தும், கிராமத்தில் அவ்வளவு மனிதர்கள் இருந்தும், தொலைபேசி வசதிகள் இருந்தும் 3 நாட்கள் வரை யாரும் அவர் எப்படி இருக்கிறார் என்று யாரும் கவலை கொள்ளவில்லை என்று நினைக்கும் போதே தூக்கம் வர மறுக்கிறது. நகரத்தில் அடுத்த பிளாட்டில் வசிப்பவர் யார் என்பது தெரியாமல் போனது ஆச்சரியம் இல்லை. இந்தியாவின் இதயங்கள் எனப்படும் கிராமங்களே அவ்வாறு மாறி வருவது மனதை பிசைகிறது. கிராமத்தில் அதுவும் 70 வருட காலமாக  அந்த உறவினர் வசித்து வந்த ஊரில் யாரும் எட்டிக்கூட பார்க்காத அளவிற்கு சக மனிதன் மேல் யாருக்கும் அக்கறை இல்லை. யாருக்காகவும் உலகம் நிற்பதில்லை. நம் காலத்திற்கு பின் நாம் இருந்ததை யாரும் நினைவு கொள்ளப்போவதில்லை. நாம் இல்லாத போது நமக்காக யாரும் கண்ணீர் விட்டு கதறி அழவேண்டும் என்பதும் கூட முக்கியம் அல்ல. ஆனாலும் தனியாக வசிக்கும் முதியவரோ முதியவளோ எப்படி இருக்கிறார் என்பதை விசாரிக்க கூடவா ஒருவருக்கும் மனமில்லை? இத்தனைக்கும் உறவினர் மிகவும் நல்ல மனிதர். கடைசி காலத்தை தன்னுடைய சொந்த வீட்டிலே கழிக்க வேண்டும், மகனோ/மகளோ யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற எண்ணம் உள்ளவர். நேரில் வர முடியாவிட்டாலும் கொஞ்சம் அவர் எப்படி இருக்கிறார் என்று பார்த்து வந்து சொல்லுங்கள் என்று மகன், மகள், மருமகன், மருமகள், பேரப் பிள்ளைகள் என யாரேனும் ஒருவர் பக்கத்து வீட்டாரை தொலைபேசியில் கூப்பிட்டாவது கேட்டிருக்கலாம். உறவினர் பணம் படைத்தவர் அல்ல. ஒரு வேளை வசதியானவர் என்றால் மகன்களோ/மகள்களோ வந்து உறவு கொண்டாடி இருப்பார்களோ என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. "பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்று வள்ளுவன் சொன்னது உண்மையிலும் உண்மை. மூன்று நாட்கள் சக மனிதர்களுக்காக காத்திருந்தது அந்த முதியவர் மட்டும் அல்ல, நகரத்து தெருக்களில் அனாதையாய் கைவிடப்பட்டு கடைக்கோடி கிராமத்தில் தஞ்சம் புகுந்திருந்த  மனிதமும் தான்.


மாயா மாயா எல்லாம் மாயா



மாயாவதி மேல் உள்ள ஊழல் புகார் வழக்கு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதோடு மட்டும் அல்லாமல் வழக்கு ஜோடிக்க பட்டது என்று சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது.அரசியல் எதிரிகளை ஒடுக்க நினைக்கும் மத்திய அரசு, எதிர்ப்பாளர்களை அடக்குவதற்காக வழக்குகளை ஏவுவதும் பின்னர் அவர்கள் ஒத்துழைப்பிற்காக வழக்கை தள்ளுபடி செய்வதும் வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி, ஆ.ராசா போன்றோர் ஏற்கனவே வெளியே வந்துவிட்டனர். காங்கிரசுக்கு குடைச்சல் கொடுத்த ஜெகன்மோகன் ரெட்டி இன்னும் உள்ளே இருக்கிறார். நாளை அவர் காங்கிரசுடன் இணக்கம் கொண்டால் அவரும் வெளியில் வந்துவிடுவார். உபி  முழுவதும் மாயாவதி தனது சிலைகளை நிறுவிய செலவே 700 கோடியை தாண்டும் என்கிறார்கள். சென்ற ஆண்டு தேர்தல் மனு தாக்கல் செய்யும் போது தனக்கு 111 கோடி சொத்துள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறார். இவ்வளவு பணத்தையும் அவர் ஊழல் மூலமாகவே சேர்த்திருப்பார் என்பதை நேற்று பிறந்த குழந்தை கூட சொல்லும். இந்த அழகில் போதிய ஆதாரம் இல்லை என்று வழக்கை தள்ளுபடி செய்ததோடு அல்லாமல் தன்னிச்சையான அதிகாரம் இல்லாத சிபிஐயை வழக்கை ஜோடித்து என்று குறை கூறுவது நகைப்பிற்குரிய ஒன்று. மிகப் பெரிய ஊழல் வழக்கான ஸ்பெக்ட்ரம் வழக்கே ஒன்றும் இல்லாமல் ஆகிக் கொண்டிருக்கிறது. மாயாவதியின் வழக்கு நல்லபடியாக முடிந்து தீர்ப்பு கூறும் நன்னாள் இந்த நூற்றாண்டில் வருவதற்கான வாய்ப்பு இல்லை. எனவே வழக்கை தள்ளுபடி செய்ததால் இப்போதைக்கு மக்களின் வரிப்பணம் மிச்சம் பிடிக்கப்பட்டு இருக்கிறது. மறுபடியும் காங்கிரசு தவிர வேறு ஒரு அரசு மத்தியில் பதவி ஏற்றால் வழக்கு தூசி தட்டப்படும் வாய்ப்பு இருந்தாலும் இதை விட பெரிய ஊழல் வழக்குகள் வந்து மாயாவதி வழக்கை பின்னுக்கு தள்ளி விடும். எனவே இந்த வழக்கு மறுபடியும் உயிர் பெறுவதற்கான சாத்தியகூறுகள் மிகவும் குறைவு. மக்களும் நீதி என்பது எட்டாக்கனி என்பதை உணர்ந்து 'இதுவும் கடந்து போகும்" என்ற மனநிலையிலே உள்ளனர். ஊழல் வழக்குகளை விசாரிக்க பிரதமர் மற்றும் ஜனாதிபதி யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாத தனியான சுய அமைப்பு ஒன்று நிறுவப்பட வேண்டும். இவர்களுக்கு அரசியல் சக்திகளின் அச்சுறுத்தல் இல்லாமலும் எந்த விதமான குறிக்கீடும் இல்லாமலும் சுதந்திரமாக செயலாற்றும் அதிகாரமும் வழங்கப்பட வேண்டும். அந்த நிலை வரும் வரை நீதி தேவதை கண்களில் மட்டும் அல்ல கைகளிலும் கறுப்புத்துணி கட்டப்பட்டே இருக்கும்.(எழுதி கொஞ்சம் நாளானாலும் இந்த ஊழல் செய்தி மட்டும் எப்போதும் புதிது போலவே இருப்பதற்காக கண்  துஞ்சாமல் சேவை ஆற்றும் நமது அரசியல்வாதிகள் வாழ்க) 

ஆரிருள் உய்த்து விடும் 


இன்று காலையில் நடந்த சம்பவம் இது. புதிய பள்ளியில் சேருவதற்கான ஓரியன்ட்டேஷன்  தினம் என்பதால் மகளை அழைத்துக் கொண்டு காலையில் அவளுடைய பள்ளி சென்றிருந்தேன். அனைவருக்கும் பார்க்கிங்  இட வசதி இல்லாததால் காரை எங்கே வைப்பது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். எனக்கு பின் வந்த ஒருவர் பார்க்கிங் அல்லாத ஒரு இடத்தில்  காரை நிறுத்துவதை கண்டு நானும் அவ்வாறே நிறுத்தினேன். அப்பொழுது சரியாக பார்க் செய்திருந்த பெண்மணி ஒருவர் தனது காரை எடுப்பதற்கு எனது காரை எடுக்க சொல்லவே எனது காரை எடுத்து பின் அந்த பெண்மணியின் கார் நிறுத்தி இருந்த இடத்தில் எனது காரை நிறுத்த எத்தனிக்கும் வேளையில் பின்னால் இருந்த காரில் இருந்து இறங்கிய அந்த நபர் என்னுடைய காரை மறித்து முன்னே நின்று கொண்டார். ஒன்றும் புரியாமல் என்ன விஷயம் என்று யோசிக்கும் போது கோபமாக ஏதோ கையை ஆட்டி பேச ஆரம்பித்தார். நானோ வழியில் என் கார் நின்று இருந்ததால் அந்த மனிதன் கோபமாக பேசி முடித்து நகரும் வரை பொறுமையாக காத்திருக்க வேண்டியதாயிற்று. பிறகு காரை நிறுத்தி இறங்கியவுடன் நீ ஏன் என்னுடைய இடத்தில் நிறுத்தினாய் என்று என்னுடன் சண்டை இட ஆரம்பித்தார். குழந்தைகள் முன் சண்டையிடுவது என்பது எனக்கு பிடிக்காத விஷயம். ஆனாலும் வலுச்சண்டைக்கு வரும் அடாவடிக்காரனுக்கு அதை பற்றி எல்லாம் கவலை இருக்குமா என்ன? நான் என் குழந்தைகளுடன் இருப்பதால் உன்னை சும்மா விடுகிறேன் என்று எனக்கு மிரட்டல் வேறு. நான் வரிசையில் முதலில் இருந்ததோடு மட்டுமல்லாமல் அந்த பெண்மணி காரை எடுத்தவுடன் வைக்கும் வகையில் எனது கார் இருந்ததாலும் நான் செய்தது சரியே என்றாலும் காலையிலேயே அனாவசிய சண்டையின் மூலம் எனது நாளை மட்டும் அல்லாமல் தனது நாளையும் சண்டை சச்சரவுடன்  தொடங்கி வைத்த அந்த மனிதரை என்னவென்று சொல்வது. சாதாரணமாக பேசி தீர்க்கக் கூடிய ஒரு விஷயத்தை மலையாக்கி அதனால் என்னையும் வம்புக்கு இழுத்து பின் எனது குழந்தையின் முதல் நாளை ஒரு கஷ்டமான நினைவாக்கிய அந்த மனிதர் ஒரு நிமிடம் பொறுமை கொண்டிருந்தால் எல்லாருக்கும் இந்த நாள் நல்ல நாளாகி இருக்கும் . அதிவேக(ராஷ்) டிரைவிங் செய்வது, சிக்னல் விழுந்த மறு நொடி கார் கிளம்பவில்லை என்றால் ஓட்டுனரை  அவமதிக்கும் வகையில் சைகைகள் செய்வது, பின்னிருந்து ஹாரன் அடித்து அவசரத்தை வெளிப்படுத்துவது என்று பொறுமை என்பது கிலோ என்ன விலை என்று கேட்கும்  சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைவூட்டுகிறது இந்த நிகழ்வு. காலை வேளையில் அவசரமாக எங்காவது செல்ல வேண்டும் என்றால் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே கிளம்பி விடுவது நமக்கு மட்டும் அன்றி நம்முடன் சாலையில் பயணிக்கும் அனைவருக்கும் நாம் செய்யும் உபகாரம். வாழ்க்கையில் நம்முடன் பயணிக்கும் அனைவரும் விருப்பு வெறுப்பு சோகம் சந்தோஷம் வெற்றி தோல்வி என்ற எல்லா உணர்வுகளையும் கொண்ட மனிதர்கள் தான் என்பதை மறக்க வேண்டாம்.  தன்னுடைய குழந்தையுடன் படிக்கப் போகும் இன்னொரு குழந்தையின் பெற்றோருடன் சண்டை இடுகிறோம் என்பதை பற்றியாவது அந்த மனிதர் யோசித்தாரா தெரியவில்லை. பொறுமையுடன் இருப்பது, பிறரிடம் கோபம் கொள்வதை தவிர்ப்பது, விட்டுக் கொடுப்பது  எல்லாம் பணம் காசு கொடுக்காமல்  பிறருக்கு நாம் இலவசமாகவும் சுலபமாகவும்  செய்ய கூடிய உதவி. அடங்காமை மட்டும் அல்ல கோபம்கூட ஒருவனை ஆரிருள் வைத்து விடும்.

திங்கள், ஜூன் 18, 2012

கதம்ப மாலை - 4


ஒரு கல் ஒரு கண்ணாடி 

ஒரு தமிழ் திரைப்படம் பார்த்து வாய்விட்டு சிரித்து தான் எவ்வளவு நாள் ஆகிவிட்டது. அதுவும் இரட்டை அர்த்தம் இல்லாத நகைச்சுவை என்பது தமிழ் சினிமாவில் ரொம்பவே கம்மி. ஆனால் சமீபத்தில் பார்த்த "ஒரு கல் ஒரு கண்ணாடி" ரசிக்க வைக்கும் நகைச்சுவை தோரணம். நகைச்சுவை படத்திற்கு கதை என்று ஒன்று தேவை இல்லை என்பது தமிழ் சினிமாவில் எழுதப்படாத விதி. இந்த படமும் அந்த விதியை மீறாமல் இருந்தாலும் அருமையான துணை நடிகர்கள் சரண்யா, சந்தானம் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் தந்தையாக வரும் அழகம் பெருமாள் தரும் அசத்தலான நடிப்பு, ஹாரிஸின் மனதை வருடும் இன்னிசை, டைரக்டரின் அசத்தலான காட்சியமைப்பு மற்றும் திரைக்கதை ஆகிய பிளஸ்களால் ரசிகர்கள் மனக்கண்ணாடியில் அழகான பிம்பமாய் பதிகிறது. ராஜேஷ் படம் என்றாலே டாஸ்மாக் காட்சிகளோ அல்லது தண்ணி அடிக்கிற சீனோ இல்லாமல் இருக்காது. இந்த படத்திலும் அது உண்டு. கலகலப்பாக படம் நகருவதால் அந்த காட்சிகள் மனதை உறுத்தாவிட்டாலும் ஹீரோ மற்றும் சந்தானம் மது அருந்தும் காட்சியை டைரக்டர் கொஞ்சம் ஓரம் கட்டி இருக்கலாம். உதயநிதி தனக்கு பொருத்தமான கதாபாத்திரத்தை தேர்ந்து எடுத்திருக்கிறார்.நன்றாக நடிக்க மட்டும் அல்லாது டயலாக் டெலிவரியும் அழகாக செய்கிறார். நடனப் பயிற்சியும் எடுத்தால் தமிழ் சினிமாவிற்கு ஒரு ஹீரோ ரெடி. ஹன்சிகா "சின்ன குஷ்பூ" என்ற பட்டத்திற்கு ஏற்ப தமிழர்களுக்கு பிடித்த மாதிரி கொழுக்கு மொழுக்கு ஹீரோயின். ஸ்டைலாக கோபப்படவும், சில நேரங்களில் அழகாக நடிக்கவும் செய்கிறார். சந்தானத்திற்கு "ஓய்ட் காலர்" காமெடி என்பது அல்வா சாப்பிடற மாதிரி. உடல்மொழி, முகபாவம் என அனைத்தும் காமெடி பேசுகிறது. தனது கலகலப்பான காமெடியால் படத்தை தொய்வில்லாமல் தூக்கி நிறுத்துகிறார்."அழகே அழகே" பாடலும், "வேணாம் மச்சான்" பாடலும் முணுமுணுக்க வைக்கும் ரகம். கிளைமாக்ஸ் கொஞ்சம் இழுவை. படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். மொத்தத்தில் சிரிப்புக்கு முழு கேரன்டியுடன் படம் ஒஹோ ஒஹோ.


உதயநிதி ஸ்டாலின் - ஹன்சிகா 
மதுரை ஆதினத்தின் இளைய ஆதினம் 

சினிமாவிற்கு கொஞ்சமும் குறையாத விறுவிறுப்பும் பரபரப்புமாய் உள்ளது நித்யானந்தா மற்றும் மதுரை பெரிய ஆதினம் பற்றி வரும் செய்திகள். மதுரை ஆதினத்தில் இளைய ஆதினமாக நித்யானந்தா தேர்வு செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், பாலியல் புகார் பற்றி கேள்வி எழுப்பிய கன்னட நிருபரை நித்யானந்தாவின் சீடர்கள் தாக்கியதால் நித்யானந்தா கைது செய்யப்பட்டு நான் இந்த இடுகையை எழுதும் இந்த நேரத்தில் ஜாமீனிலும் வெளியே வந்துவிட்டார். அரசியலுக்கு எவ்வாறு மன சுத்தம் உள்ளவர்கள் வந்தால் சிறப்பாக இருக்குமோ அதே பாணியில் ஆன்மிகத்திற்கும் நல்ல மனிதர்கள் தேவை. ஆனால் அரசியல் அளவிற்கு மக்களை நேரடியாக பாதிக்கும் விஷயம் அல்ல ஆன்மிகம் என்பதாலும் மக்கள் தங்களுக்கு பிடித்த ஆன்மீகவாதிகளை பின்பற்றலாம் அல்லது வேறு வழியில் இறைவனை தேடலாம் என்பதாலும் நித்யானந்தாவின் செயல்பாடுகளை அதிர்ச்சிகரமான கண் கொண்டு பார்க்கவில்லை. ஆனாலும் சமுதாயத்தில் உள்ள பெரிய மனிதர்களின் இருண்ட முகங்களுக்கு வெளிச்சம் பாய்ச்சிய விதத்தில் நித்யானந்தாவின் செய்கைகள் பகீர் ரகம். பணம், செல்வாக்கு, ஆடம்பரம், ஆசிரமத்திற்கு ஆறுதல் தேடி வரும் பெண்களிடம் முறைகேடான நட்பு, ஒரு வேளை மாட்டிக் கொண்டால் அந்த பெண் யார் என்றே தெரியாது என்று சாதிப்பது என்று காவி அணிந்த கபடதாரிகளின் இன்னொரு முகத்தை உரித்து காட்டி, சமுதாயத்தின் இன்னொரு வேரான ஆன்மிகமும் எவ்வாறு புரையோடிப் போய் இருக்கிறது என்று புரிய வைத்ததற்காக நித்யானந்தாவிற்கு நன்றி நவிலலாம். 


ஆதி சங்கரர் 
இவ்வளவு கூத்துக்கு பிறகும் அவரே இளைய ஆதினமாக நீடிப்பார் என்று பெரிய ஆதினகர்த்தர் சொல்வதை பார்த்தல் அவருக்கு என்ன நிர்பந்தமோ என்று மட்டுமே தோன்றுகிறது.மடங்கள் நிர்வகிக்கும் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள், வெளிநாட்டில் இருந்து வரும் நன்கொடை பணம், அப்படி வரும் பணம் மக்களுக்கென பயன்படுத்தப்படும் விதம் என்பதை பற்றி எந்த விதமான ஒளிவுத்தன்மை இல்லாமல் அரசுக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தை இத்தகைய ஆன்மிகவாதிகளே ஏற்படுத்தி விடுவர் போலிருக்கிறது. அதுவும் நன்மைக்கு தான்.இந்தியாவிலேயே எந்த நெறிமுறைக்கும் உட்படாத முழு வரி விலக்கு உள்ள தொழில் என்றால் அது ஆன்மிகம் தான். அதனால் இத்தொழிலுக்கும் கட்டுப்பாடுகள் அவசியமாகிறது. உங்களில் யார் ஒருவர் நல்லவரோ அவர் முதலில் கல் எறியுங்கள் என்கிறது பைபிள். எனவே நித்யானந்தா நல்லவரா கெட்டவரா என்பதை தீர்மானிக்கும் உரிமை நம்முடையது அல்ல.அதை காலம் தீர்மானிக்கும்.ஆயினும் இத்தகைய நிகழ்வுகள் ஆதிசங்கரர், ராமானுஜர், ராகவேந்திரர் போன்ற மகான்கள் வாழ்ந்த காலகட்டத்தில் நாம் வாழவில்லையே என்ற ஏக்கத்தை மட்டும் விட்டு செல்கிறது.

ஜனாதிபதி தேர்தல்


ஒரு ரப்பர் ஸ்டாம்பை உருவாக்கத்தான் எத்தனை பிரயத்தனங்கள். மம்தா கலாமையும், ஜெயலலிதா சங்கமாவையும், காங்கிரசு கட்சி தன்னுடைய வேட்பாளராக பிரணாபையும் அறிவித்து உள்ளன. பிஜேபி இன்னமும் தன்னுடைய வேட்பாளரை அறிவிக்கவில்லை. நாட்டின் முதல் குடிமகன் எனப்படும் ஜனாதிபதி பதவி ஒரு பொம்மை பதவி என்பது அனைவரும் அறிந்தது. இன்றைய அரசியலில் யார் வலிமையானவர் என்று அவரவர் மேலாண்மையை காட்டும் ஒரு நிகழ்வாகவே இன்றைய ஜனாதிபதி தேர்தல் உள்ளது. தற்பொழுது ஜனாதிபதியாக உள்ள பிரதிபா பாடீல் பல நாடுகளுக்கு அரசு செலவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அரசு பணத்தை கரைத்ததோடு மட்டும் அல்லாமல் தன்னுடைய சம்பளத்தை 200 மடங்கு உயர்த்தி உத்தரவு போட்டதோடு மட்டும் தனது கடமையை முடித்து கொண்டார். இப்படிப்பட்ட ஜனாதிபதி ஒருவர் தேவை தானா? இதற்கு பதில் ஜனாதிபதி பதவி என்பதை நீக்கி விட்டால் மக்களின் வரிப் பணமாவது மிஞ்சும். இந்திய அரசியலமைப்பில் ஜனாதிபதி பதவி என்பது பல்வேறு அதிகாரங்களை உள்ளடக்கியது. எனவே இந்த பதவியை நீக்கிவிடுவது என்று பொத்தாம் பொதுவாக ஒரு கருத்தை முன் வைப்பது அதிகப் பிரசங்கித்தனமாக தோன்றலாம்.ஆனால் பெரும்பாலும் ஆளுங்கட்சி சார்புடையோர் இந்த பதவியில் அமர்வது வாடிக்கை என்பதால் கிட்டத்தட்ட ஆளுங்கட்சியின் கைப்பாவையாக செயல்படுவது மட்டுமே இன்றைய ஜனாதிபதியின் வேலை. வட நாட்டு தலைவரான மம்தா தமிழரான கலாமை ஆதரிக்கும் போது தமிழர் நலன் காக்க மட்டுமே பிறவி எடுத்ததாக காட்டிக் கொள்ளும் ஜெயலலிதா சங்மாவையும், கருணாநிதி தனது கூட்டணி கட்சியான காங்கிரசு அரசு வேட்பாளரான பிரணாபையும் ஆதரிப்பது வேடிக்கை. இத்தனைக்கும் பிரணாப் இலங்கையில் போர் நடந்த போது இந்திய அரசின் தூதுவராக சென்றும் அங்கு அப்பாவி தமிழர்கள் மேல் இலங்கை அரசு நடத்திய தாக்குதல்களை கண்டிக்கவில்லை. அத்தகைய ஜனாதிபதி வேட்பாளரை வரவேற்க தடபுடலாக விருந்து உபசாரத்திற்கு ஏற்பாடு செய்கிறார் கருணாநிதி. இதை விட தமிழர்களுக்கு செய்ய கூடிய துரோகம் என்னவாக இருக்க முடியும்? சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பிரசாத் போன்றோர் அலங்கரித்த ஜனாதிபதி பதவி இன்று வெறும் அலங்கார பதவியாக இருப்பது ஜீரணிக்க கூடியதல்ல. இன்னும் என்னென்ன வேடிக்கைகளை ஜனநாயகம் என்ற பெயரால் சகித்துக்கொண்டிருக்க வேண்டுமோ தெரியவில்லை. இன்றைய நிலையில் பதவிக்கு வருவது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். மக்களுக்கு சிறிதளவாவது நல்லது செய்வோம் என்ற எண்ணம் உடையவர் யாரேனும் வந்தால் நாடும் மக்களும் பிழைத்துப் போவார்கள் என்பதை தவிர வேறு சொல்வதற்கு இல்லை !!!

சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா திருமணத்தில் தமன்னா
சிறப்பு பாராட்டு: இந்தோனேசியா ஓபன் பாட்மிட்டன் பட்டம் வென்ற சாய்னா நெய்வாலுக்கு பாராட்டுக்கள் மற்றும் ஒலிம்பிக்கிலும் உங்கள் வெற்றி தொடர வாழ்த்துக்கள் !!   



சாய்னா நெய்வால் 

ஞாயிறு, மே 13, 2012

அமெரிக்காவில் இருந்து அமீர்பெட் வரை


கிட்டத்தட்ட மூன்று மாத இந்திய பயணம் சென்ற வாரத்துடன் நிறைவு பெற்றது. கிட்டத்தட்ட ஒரு டஜன் வருடங்களுக்கு பிறகு இவ்வளவு நாட்கள் இந்தியாவில் தங்கும் வாய்ப்பு. தகிக்கும் வெயில், பவர் கட், பயண அலைச்சல் என சில தொந்தரவுகள் இருந்தாலும் மொத்தத்தில் நிறைவான ஒரு பயணம். நெருங்கிய உறவினரின் கல்யாணம், வளைகாப்பு போன்ற சுப காரியங்களில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்தது கூடுதல் போனஸ் என்றே சொல்லலாம்.

இந்த பயணத்திற்கான பிள்ளையார் சுழி ஜனவரி மாதத்தின் முற்பகுதியில் என்னவரால் சுழிக்கப்பட்டது. "சித்தப்பா பையன் கல்யாணத்தை அட்டென்ட் பண்ண இந்தியா போறபோது அப்படியே ஹைதராபாதில் நீ எதாவது சாப்ட்வேர் கோர்ஸ் பண்ணலாமே" என்று திரி கிள்ளினார். நாரதர் கலகம் நன்மையில் தான் முடியும் என்பதாலும் எவ்வளவு நாள் தான் வெட்டியாக(?) வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருப்பது இந்த நேரத்தில் வேறு ஏதாவது பயனுள்ளதாக கற்று கொள்வோமே என்று தோன்றிய அசட்டு துணிச்சலாலும் சரி என்று சொல்லிவிட்டாலும் "உனக்கு நாக்குல தான் சனி" என்று கூப்பாடு போட்ட உள்மனதை அடக்க ரொம்பத் தான்  பிரயத்தனப்பட வேண்டியதாயிற்று.

சென்னையில் இறங்கி அந்த வெயில் எனக்கு உரைக்கும் முன்பே உறவினரின் கல்யாண நாள் வந்துவிட்டது. நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து திருமண மற்றும் இதர நிகழ்வுகள் நடக்க இருந்த இடம் சிறிது தொலைவு. சென்னை வெயிலை விட கொடுமையான விஷயம் ஒன்று உண்டென்றால் அது சென்னை டிராபிக் தான் . மக்கள் எப்படித்தான் இந்த டிராபிக்கில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சென்று வருகிறார்கள் என்பது எனக்கு இன்னும் புரியாத புதிர். சரியான நேரத்திற்கு ஒரு இடத்திற்கு செல்வதற்கு ஒன்று நிறைய நேரம் கைவசம் இருக்க வேண்டும் இல்லை எங்கே செல்ல வேண்டுமோ அந்த இடத்திற்கு அருகிலேயே தங்கும் வசதி வேண்டும். இந்த இரண்டும் அமையப் பெறாதவர்கள் சபிக்கப்பட்டவர்கள்.


கல்யாணத்திற்கான பட்டு புடவை, நகை மற்றும் ஒப்பனை அணிந்து நண்டு சிண்டான குழந்தை செல்லத்தையும் கிளப்பி காரில் ஏறி அமர்ந்து பல மணி நேரங்களுக்கு பிறகு தேவையான இடத்திற்கு சென்றடையும்போது புடவை கசங்கி, ஒப்பனை கலைந்து  "அப்படியே நேரா  இங்க  வந்துட்டியா, போய் சீக்கிரம் ரெடி ஆகு' என்று எரிகிற கொள்ளியில் எண்ணெய் விடும் ஆன்ட்டிகளிடம் மழுப்பலாக சிரித்து,  "அம்மா என்னோட வளையல் உடைந்திடுத்து / நசிங்கிடுத்து/ காணோம் , என்னோட தலை முடி கலைஞ்சிடுச்சு இதை சரியா போட்டு விடு , எனக்கு இந்த டிரஸ் வேண்டாம் வேர்க்குது" என்று அழும்பு பண்ணும் குழந்தையை சமாளித்து, எல்லோரையும் நலம் விசாரித்து, என்ன சாப்பிட்டோம் என்ற நின்று  நிதானிப்பதற்குள் "சீக்கிரம் கிளம்பு அப்பதான் நாளைக்கு காலையில கல்யாணத்திற்கு சீக்கிரம் வர முடியும்" என குரல் கொடுக்கும் சித்தப்பாவிடம் சரி என்று தலையாட்டி மீண்டும் எப்பொழுது முடியும் என்று தெரியாத கார் பயணம் என்று - உங்களுக்கு புரிந்திக்கும் என்று நினைக்கிறேன். கால காலத்திற்கும் ஞாபகத்தில் நிற்கும் கல்யாண நினைவுகளை பின்னுக்கு தள்ளி முன்னணியில் நிற்பது தேவையில்லாத டிராபிக் சங்கடங்கள்.


அடிப்படை வசதியான சாலை கட்டமைப்பு வசதி இல்லாத இந்த சென்னையில் இன்று வீடு மனை  வாங்குவது என்றால் சில/பல கோடிகளை தர வேண்டியிருக்கிறது. கழிவு நீர் அகற்றும் வசதி, குப்பை அகற்றும் வசதி, மேடு பள்ளம் இல்லாத அழகிய சாலைகள், அழகாக பராமரிக்கப்பட்ட பூங்கா, குப்பை இல்லாத கடற்கரை, 24 மணி நேர மின்வசதி, பழுதில்லாத சாலை விளக்குகள், கழுத்து சங்கலி அறுக்கும் திருடர்கள் இல்லாத பாதுகாப்பான சாலைகள் என்று எந்த விதமான வசதியும் இல்லாத சென்னையில் எதற்கு வீடு மனை வாங்க அத்தனை கோடிகள் தர வேண்டும் என்பது புரியாத புதிர். சென்னை இப்படி என்றால்  சிறு நகரங்களில் நிலைமை இதை விட மோசம். தமிழ்நாட்டை சுத்தப்படுத்தும் ஒரு சிறு முயற்சியாக பிளாஸ்டிக் பைகளை தமிழகம் முழுவதும் தடை செய்தால் தான் என்ன?


கல்யாணம் நல்லபடியாக முடிந்து ஹைதராபாத் செல்லும் நாளும் வந்தது. இந்தியாவில் அதிகம் ரயில் பயணம் செய்யாத எனக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் பிடிப்பது இதுவே முதல் முறை. சென்ட்ரல் எனது கற்பனைக்கு எதிராக "ச்சே இவ்வளவு அசுத்தமா" என்று அருவருக்கும் அளவுக்கு இருந்தது என்று சொன்னால் மிகை இல்லை. எத்தனை ரயில்கள் நிற்கிறதோ அத்தனையிலும் கழிவு நீர் வழிந்து தண்டவாளத்தில் ஆங்காங்கே தேங்கி நிற்பதும், ரயில்கள் சென்றவுடன் மக்கள் மனிதக் கழிவுகளால் அசுத்தம் அடைந்திருக்கும் தண்டவாளங்களை கடந்து செல்லும் அவலமும் இப்பொழுது நினைத்தாலும் குமட்டுகிறது.ரயில்கள் மனித கழிவுகளை முறையாக தேக்கி பின்னர் பாதுகாப்பாக வேறு இடத்தில் சென்று அப்புறப்படுத்துவது என்பதை பின்பற்ற வேண்டும் என்ற சின்ன விஷயம் இந்தியாவில் யாருக்கும் தெரியாத என்ன? ரயில்வே துறையில் இருந்து வரும் வருமானத்தில் ஒரு சிறிய அளவு முதலீடு செய்தால் கூட இந்த திட்டத்தை அற்புதமாக செயல் படுத்த முடியுமே? இதன் மூலம் ரயில் தண்டவாளங்களை ஒட்டி வசிக்கும் பல ஆயிரக்கணக்கான மக்களுடைய சுகாதாரத்தையும் மேம்படுத்தலாம் அல்லவா.


சரி ஹைதராபாத்தும் இப்படி தான் சென்னை அளவு அசுத்தமாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே சென்ற எனக்கு ஆனந்த அதிர்ச்சி. ஹைதராபாத் ஏர்போர்ட் வெளிநாட்டு ஏர்போர்ட்களுக்கு   நிகராக ஜொலி ஜொலித்தது சுத்தமான உண்மை. சென்னை ஏர்போர்ட் என்றதுமே உங்களுக்கு மூலைக்கு முலை பாக்கு கரை படிந்த சுவர்கள் ஞாபகம் வரவில்லை என்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். ஹைதராபாத் ஏர்போர்ட்டை நகரத்துடன் இணைக்கும்  சாலைகள் அத்தனை விரிவு அத்தனை அழகு. இருபுறமும் 6 தடம் என 12 தடம் கொண்ட சாலைகள்.  அதிக அளவில் வெளிநாட்டில் வசித்த இந்தியர்கள் தற்போது விரும்பி வரும் ஊர் என்பதால் கொஞ்சம் சுத்தம். பெரிய ஷாப்பிங் மால்களும், வீதிக்கு வீதி உணவகங்களும், பான் விற்கும் இடங்களும், சாட் உணவு விற்கும் சிறு வியாபாரிகளும் என்று உணவுக்கு பஞ்சம் இல்லாத ஊர். அதற்காக பிச்சைகாரர்கள் இல்லாத ஊர் என்று எண்ண வேண்டாம். வட இந்தியாவில் இருந்தும் ஆந்திராவின் பல பகுதிகளில் இருந்தும் பலரும் பிழைப்பு தேடி வருவதால் ஹைதராபாத் ஏனைய நகரங்களை போல குறுக்கு வாட்டாககவும் சில இடங்களில் நெடுக்குவாட்டகவும் வளர்ந்துகொண்டே  இருக்கிறது. பல அடுக்கு கட்டிடங்களை கொண்ட அபார்ட்மென்ட் வளாகங்கள் "சிட்டி வித்தின் சிட்டி" என்று சொல்லக் கூடிய அளவில் பிரமாண்டமாக இருந்தது கண் கொள்ளா காட்சி.   


சாப்ட்வேர் ஹப் என்று சொல்லக் கூடிய ஹைதராபாதுக்கு அந்த பெயர் வரக் காரணமான இடம் அமீர்பெட்.தீப்பெட்டி போன்ற  அடுக்கு மாடி கட்டிடங்கள் ஒவ்வொன்றிலும் ஏதேனும் ஒரு கம்ப்யூட்டர் மென்மொழி பயிற்சி அளிக்கும் மையமும், காலை 6 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடக்கும் வகுப்புகளுக்கு பெரிய ஐ.டி.  கம்பெனியில் வேலை கிடைக்கும் கனவோடு வரும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் என்று கணநேரம் கூட தூங்காத ஒரு கணினி தொழிற்சாலை. மிகக் குறைந்த விலை ஆனாலும்  நான் பார்த்த வரை நல்ல ஆசிரியர்கள் கொண்ட மையங்கள் என்று அமீர்பெட்டின் பிளஸ்கள் பல. கணினி மென்மொழியில் பயிற்சி மேற்கொள்ள விரும்புவோர் கட்டாயம் செல்ல வேண்டிய இடம்.  

சார்மினார், பிர்லா மந்திர், ஹுசைன் சாகர் ஏரி,லும்பினி பூங்கா ஆகியவற்றையும் இப்பொழுதான் முதன் முதலாக பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஹுசைன் சாகர் ஏரியையும், லும்பினி பூங்காவையும் மட்டும் இன்னும் சற்று பராமரித்தால் நன்றாக இருக்கும். மொழி தெரியாத ஊரில் எப்படி பேசி சமாளிப்பது என்று கொஞ்சம் உதைப்பாக இருந்தாலும் பெரும்பாலானோர் ஹிந்தி பேசுவதாலும், படித்தவர்கள் இங்கிலீஷ் பேசுவதால் எந்த கஷ்டமும் இல்லாமல் போனது. இதுவே தமிழ் தெரியாமல் சென்னையில் இருந்தால் தாக்குப் பிடித்திருக்க முடியும் என்று தோன்றவில்லை.


இந்த மூன்று மாத இந்தியா பயணத்தில் கற்றது/பெற்றது என்ன என்றால்என்று யோசித்தால் பெற்றது நிறைய உண்டு. நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். கற்ற எந்த வித்தையும் தேவையற்றது அல்ல என்பது புரிந்தது. கஷ்டப்பட்டு சிறு வயதில் கற்ற ஹிந்தி ஹைதராபாதில் வசித்த சில மாதங்கள் அடுத்தவர்களுடன் பேச உதவியது என்று சொன்னால் அது மிகை இல்லை. எந்த விஷயத்தையும் ஆழமாக தெரிந்து கொள்ளாமல் அரை குறையாக தெரிந்து கொண்டால் எத்தனை வயதானாலும் திரும்பவும் அந்த விஷயத்தை கற்றே ஆக வேண்டிய சூழல் உண்டாகும் என்று புரிந்தது. உதாரணமாக  கல்லுரி காலத்தில் ஜாவா மென்மொழியை அரைகுறையாக படித்து இருந்தாலும் சரியாக தெரியாத காரணத்தால் திரும்பவும் முறையாகவும் ஆழமாகவும் கற்க நேர்ந்ததை சொல்லலாம். "வென் தி ஸ்டுடென்ட் இஸ் ரெடி தி டீச்சர் வில் அப்பியர்" என்று ஒரு ஆங்கில பழமொழி உண்டு.  அது உண்மை என்பதை எனக்கு மென்மொழி போதித்த ஆசிரியர்கள் மூலமாக அனுபவப்  பூர்வமாக உணர்ந்தேன். நீங்கள் விரும்பியதை முழு முனைப்போடும் அர்ப்பணிப்போடும் செய்யுங்கள். வெற்றி உங்களை தானே தேடி வரும் என்பதும் அந்த ஆசிரியர்கள் அறிவுறுத்திய செய்தி. அத்தகைய சந்தர்ப்பங்கள் எனக்கு மட்டுமல்லாது எல்லாருக்கும் வாய்க்க வேண்டும் என்ற சிந்தனையோடு நிறைவு செய்கிறேன்.  

செவ்வாய், மார்ச் 06, 2012

கானல் நீர் தடாகம்

சமீபத்திய இந்தியப்  பயணத்தின் போது எனது மனதை தைத்த பல தினசரி காட்சிகளை மனதில் கொண்டு புனைந்த கவிதை. இன்னும் எவ்வளவு ஆண்டுகள் கழித்து இந்தியா வந்தாலும் எனது ஜன்னல் வழி காட்சி மாறாது என்றே தோன்றுகிறது.




இதோ அந்தக் கவிதை.

கானல் நீர் தடாகம்

குழந்தையை காட்டி
கையேந்தும் சிறுமி
போதையில் சாலையை
சோலையாய் எண்ணி
புரளும் குடிகாரர்கள்
ஊரில் மழை பொழியும்
அதிசயத்தை வார்த்தையின்றி உணர்த்தும்
ஒல்லியான தெரு நாய்
சாக்கடை ஓரம்
மானுட வாழ்வின் உச்சத்தில்
எச்சமாய் புறந்தள்ளப்பட்ட  மூதாட்டி
கொளுத்தும் வெயிலிலும்
ஈர மனம் தேடும்
பிச்சைக்கார கிழவன்
பன்றியும் புறக்கணிக்கும்
குப்பை கூளத்தை
பிழைப்புக்காக பிழை
திருத்தும் பணியாளர்
கடக்கும் மனிதர்களின்
துயர் துடைக்க
கரம் கொடுக்காமல்
கவி புனையும்  நான் என
மாற்றத்திற்கே சவாலாய்
எனது இன்றும் நாளையும்

 

சனி, பிப்ரவரி 25, 2012

தமிழ் காக்க எழுந்திரு

ஆங்கில வழியில் கல்வி பயிலும்  மகனை கொண்ட  ஒரு தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தேன். அந்த தந்தை கூறியதாவது - பள்ளியில் இரண்டாம் பாடமாக தமிழ் மொழியை  என் மகன் எடுத்திருக்கிறான்.   கணிதம், அறிவியல் போன்றவற்றில் எழும் சந்தேகத்தை நீக்குவது எளிதாக இருக்கிறது. ஆனால் தமிழில் திருக்குறளுக்கும், கம்ப ராமாயணத்திற்கும் விளக்கம் சொல்லத் தெரியவில்லை. ஒற்று எழுத்துக்கள் எங்கு பயன் படுத்த வேண்டும் எங்கு தேவை இல்லை என்பதை விளக்க இயலவில்லை.தமிழுக்கு தனி போதனை(tuition) வைப்பதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால்  தமிழ் மொழியை இவ்வளவு விரிவாகப்  படிப்பதால் என்ன பயன், வாழ்கைக்கு  தமிழ் எந்த விதத்தில் பயன் படப் போகிறது, தமிழ்நாட்டை தவிர வேறு எந்த இடத்தில தமிழை என் மகன் பயன்படுத்தப்  போகிறான்  என்று கேட்டது எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது . படிக்கும் அனைத்தும் எவ்வாறு பிற்கால வாழ்கை வசதிக்கு உதவும் என்ற நோக்கத்திலேயே பார்க்கப்படுவது   வருத்தத்திற்கு உரியது.
கல்கி ர.கிருஷ்ணமூர்த்தி

இன்று இரண்டாம் பாடமாக ஹிந்தி, பிரெஞ்சு ஆகிய மொழிகளை படிப்பது பெருகி வரும் வேளையில் தமிழ் மொழி  பயிலும் ஒரு சிலரும்  தமிழ் மொழியை  ஆழமாக படிப்பதால் என்ன பயன் என்றும் கேள்வி எழுப்புவது "கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த குடியாம் தமிழ் குடியின்" மேல் கல் வீசுவதை போன்றது. மொழி என்பது ஒரு கலை வடிவம். ஒரு  மொழியை கற்கும் போது அதை வெறும் பேச மட்டுமே அறிந்தோம் என்றால் அதன் முழு சுவையையும் அறிய இயலாது. அதாவது அந்த மொழியில் தோன்றியஇலக்கியம், கதை,காப்பியம்,காவியம், புதினம்,கவிதை
போன்றவற்றையும், அந்த மொழி பேசும் மக்களையும், அவர்களுடைய
பண்பாட்டையும், நாகரீகத்தையும் அறியும் வாய்ப்பு நமக்கு கிடைக்கப் பெறாது . ஆங்கிலத்திலும் கவிதை, நாடகம், இலக்கணம் போன்றவை உண்டு. ஆனால் ஆங்கிலத்தை விரிவாக கற்றுக்கொள்ளும் போது தோன்றாத சுமை தாய் மொழியான தமிழை கற்கும் போது மட்டும் எப்படி தோன்றுமோ?
ஒவ்வையார்

தமிழை இவ்வாறு சுமை என்று கொண்டால் வரும் தலை முறைக்கு தமிழ் என்று ஒரு மொழி இருந்தது என்று ஏட்டில் மட்டுமே காண்பிக்கும் நிலை வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை. நாம் யார் என்பது - நாம் பேசும் மொழி, நாம் வாழ்ந்த மண், நமது மண் சார்ந்த தேசம், நம் தேசம் உலகத்திற்கு அளிக்கும் பங்கு என்று பலப் படிநிலைகளை சார்ந்தது.  இந்த படிகளில் ஏதேனும் ஒரு நிலையை நீக்கினால் கூட நமது தனித்துவம் அல்லது அடையாளம் மறைந்து விடும். மொழி தகவல் பரிமாற்ற கருவி மட்டும் அல்ல. அது சிந்தனை வளத்தை வழங்கும் ஒரு கருவி. "வரப்பு உயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும்" என்பது போல ஆழ்ந்த சிந்தனை சிதறல்களும், உயர்ந்த கருத்துக்களும் கொண்ட தமிழ் மொழியை சார்ந்த சிறந்த சிந்தனையாளர்களின் கருத்துக்களை நமது நெஞ்சில் இருத்தினால் தமிழ் இனம் உலகத்தை வழி நடத்தும் இனமாக மாறும் நாள் தொலைவில் இல்லை.ஆனால் ஆங்கில  மோகம் மற்றும்  பொருளாதார முன்னேற்றத்திற்காக  வேற்று மொழியை கற்பதில் ஆர்வமும் கொண்டவர்கள் மிகுதியாக உள்ள இந்த காலகட்டத்தில் அந்த நிலையை என்றுமே தமிழினம் அடையப் போவதில்லை என்பதே உண்மை.

ஜப்பானிய மொழி தெரியாத ஜப்பானியரோ அல்லது கொரிய மொழி அறியாத கொரியரையோ கண்டுபிடிப்பது அரிது. ஆனால் தமிழ் நாட்டில் தமிழ் எழுத,  படிக்க தெரியாத படித்த தமிழர் அநேகம். தாய் மொழியான தமிழை  படிப்பதற்கு எத்தனை காரணம் வேண்டும் - தாய் மொழி என்ற ஒரே காரணத்தை தவிர. நான் சொல்லும் இந்த கருத்து அவரவர் தாய்   மொழிக்கு பொருந்தும்.  தமிழ் எனது தாய் மொழி என்பதால் தமிழை முன்னிறுத்தி எழுதி இருக்கிறேன். ஒரு வேளை எனது தாய் மொழி தெலுங்காக இருந்தால் தெலுங்கு கற்று கொள்ளாதவர்களை பற்றி ஆதங்கப்பட்டிருப்பேன். 

தனி மனித அடையாளங்களில் ஒன்றான தாய் மொழியை படிப்பதில் உள்ள சுணக்கத்தை சோம்பேறித்தனம் என்பதை தவிர வேறு எப்படி அழைப்பது என்று தெரிய வில்லை. கணிப்பொறி மென்மொழி படிப்பதில் உள்ள ஆர்வத்தில் பத்து சதவிகிதமாவது தமிழ் மேல் கொண்டால் தமிழ் பிழைத்துப்  போகும். வருங்கால சந்ததியினர் இப்படி தமிழ் மொழி மேல் ஆர்வம் கொள்ள மாட்டார்கள் என்று தெரியுமோ என்னவோ உயர்ந்த காப்பியங்களையும், காவியங்களையும் பண்டைய காலத்திலேயே படைத்து விட்டார்கள் நமது முன்னோர்கள். நாம் மற்றும் நமது சந்ததியினர் தமிழுக்கு செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று - அந்த மொழியை கற்பது மட்டுமே. புதினங்கள், கவிதைகள், கதைகள் படைத்து தமிழ் மொழியை கரை சேர்க்க வேண்டிய நிர்பந்தம் இந்த சந்ததியர்க்கு இல்லை. அப்படி இருக்க தமிழை கற்கும் சிறிய விஷயத்தை நாம் சிரமம் பாராமல் செய்தால் தான் என்ன.

பேசும் மொழி இழந்து, பழக்க வழக்கங்கள் மறைந்து,  பண்பாடு இழந்து என்று ஒன்றன் பின் ஒன்றாக மறைந்து கொண்டே சென்றால் நான் யார் என்ற குழப்பம் மட்டுமே மிஞ்சும். நாம் உலகில் எந்த நாட்டிலும் வசிக்கலாம். எந்த விதமான வேலையையும் செய்யலாம். ஆனால் நமது பாரம்பரிய அடையாளங்களுள் ஒன்றான தாய் மொழியை கற்க சுணக்கம் கொண்டு கல்லாமல் போனால்  பிறகு துறப்பதற்கு என்று வகுத்துள்ள எல்லை தான் என்ன?   ஒரு சிறிய ஓட்டை ஒரு மாபெரும் கப்பலையே மூழ்கடித்துவிடும். நாம் தொலைக்கும் ஒவ்வொரு அடையாளமும் நமது சுயத்தை விட்டு நம்மை வெகு தூரம் அழைத்துக் கொண்டு சென்று விடுகிறது என்பதை மறுக்க முடியாதது. நமது கிளைகள் எங்கு வேண்டுமானாலும் படரலாம். ஆனால் நமது வேர்கள் எங்கு எத்தகைய பிடிமானம் கொண்டிருக்க வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

தாய் மொழி தெரியாத ஒருவன் தான் பிறந்த மண்ணை மட்டும் அன்றி அந்த மண்ணில் வாழ்ந்த மனிதர்களை பற்றி அறியாமலேயே வாழ்ந்து மடிகிறான். நமது மனிதர்களை நாம் அறிய முற்படவில்லை என்றால் பின் நம் இனத்தின்  வாழ்வாதார பிரச்சனைகள் போன்றவற்றிக்கு நம்மால் எத்தகைய பங்கீட்டை அளிக்க இயலும்? எந்த விதமான பயனையும் நாம் வாழ்ந்த நமது சமூகத்திற்கு அளிக்க  முற்படாவிட்டால் நாம் வாழ்ந்து தான் என்ன பயன்? கம்பராமாயணத்தை, தேவாரத்தை, திருவாசகத்தை படிக்கத் தெரியாமலும், அதன் அர்த்தம் அறியாமலும் வாழ்வது குறையுள்ள வாழ்கையே. பொன்னியின் செல்வனையும், சிவகாமியின் சபதத்தையும் படித்து பண்டைய தமிழர்கள் வீரத்தை, நாகரீகத்தை, பண்பை அறியாமல் நமது மொழியின் தொன்மையை உணராமல் வாழ்வதை விட பெரிய அறியாமை எதுவாக இருக்க முடியும்.

நான் சிறு வயதில் தமிழில் படித்த பல நெடுங்கதைகளையும், தொடர்கதைகளையும்  எனது குடும்பத்தினருடன் விவாதித்த இனிமையான நினைவுகளை நினைத்து பார்க்கிறேன். இத்தகைய இனிமையான நினைவுகள் நமது குழந்தைகளுக்கும் வரும் சந்ததியினருக்கும் கிடைக்கப் போவதில்லையோ என்ற ஆதங்கத்தை பதிவு செய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.

ஊழியஞ்செய் தமிழக்குத்
துறைதோறும் துறைதோறும்
உணர்ச்சி கொண்டே,

உணர்ந்திடுக தமிழ்த்தாய்க்கு
வருந்தீமை உனக்குவரும்
தீமை அன்றோ!

என்று பாரதிதாசன் அன்றே எழுதி வைத்தான். நாம் தமிழ் மொழுக்கு செய்யும் ஊழியம் ஒன்றே ஒன்று தான். தாய் மொழியாம் தமிழ் மொழியில் எழுதப் படிக்க நமது வருங்கால சந்ததியினருக்கு கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டியது நமது கடமை. அதை விட சிறந்தது தமிழ் படிக்க தெரியாத இந்த தலைமுறையை சார்ந்தவர்கள் தமிழை படிக்க கற்றுக் கொள்வது.எனவே தமிழ் படிப்பது எதற்காக என்ற கேள்வியை விடுத்தது நமது தாய் மொழியை செம்மையாக கற்போம் என்று உறுதி கொள்வோம். "மெல்ல தமிழிங்கு சாகும்" என்ற கூற்றை மாற்றும் சக்தி நம் ஒவ்வொரு கையிலும் உள்ளது. தமிழ் கல்விக்கு கை கொடுப்போம். தமிழ் வளர்ப்போம்.

செவ்வாய், ஜனவரி 10, 2012

2011 சொல்லும் செய்தி

கால சக்கரத்தில் 2011 ஆம் ஆண்டை கடந்து 2012 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறோம்.  கடந்த வருடத்தை திரும்பி பார்ப்பது என்பது பழங்கதையை படிப்பதற்கு சமம் என்று எண்ணினால் அது பிழையாகும். வரலாற்றில் உள்ள சம்பவங்களையும் அந்த சம்பவங்கள் உணர்த்தும் படிப்பினைகளும் மனித இனம் சரிவர புரிந்து கொள்ளாததாலேயே  செய்த தவறுகளையே மீண்டும் மீண்டும் செய்து மனித குலம் இன்றும் பின்தங்கியே இருக்கிறது. உதாரணத்திற்கு பிரெஞ்சு புரட்சியின் காரணியாக வரலாற்று ஆசிரியர்கள் நமக்கு காட்டுவது - இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் உள்ள பாகுபாடு அதிகரித்தது என்பது. இன்றும்  எகிப்து, சிரியா மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் நடக்கும் மக்கள் புரட்சிக்கும் அதுவே காரணம். மண்ணாசை, பெண்ணாசை, பொருளாசை போன்றவற்றை விட மிகவும் ஆபத்தானது அதிகாரத்தின் மேல் உள்ள ஆசை. இந்த அதிகார போதை தந்த மமதையால் அரசாங்கங்கள் தமது மக்களை கவனிக்க தவறும் போது புரட்சி வெடிக்கிறது.

எகிப்து தஹ்ரீர் சதுக்கத்தில் பிப்ரவரி 4, 2011 அன்று கூடிய ஆட்சியாளர்களுக்கு எதிராக கூடிய மக்கள்
அதிகார ஆசை வடகொரியா, எகிப்து, லிபியா, மியான்மர், ஸ்ரீலங்கா, ஆப்ரிக்கா என்று பல நாடுகளில் வாழும் மக்களை இன்றும் ஏழைகளாகவே வைத்திருக்கிறது. ஆணாதிக்க மனோபாவம் ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற அரபு நாடுகளில் உள்ள பெண்களுக்கு ஆண்களை அண்டி மட்டுமே வாழ முடியும் என்ற நிலையை அளித்து இருக்கிறது. பெரும் பணம் வேண்டும் என்ற ஆசை ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல் என்று ஊழல் வரலாற்றிலேயே முதல் முறையாக என்று தொலைக்காட்சி விளம்பரம் போல இந்திய மக்களை அதிர்ச்சி கொள்ள வைத்தது. மேலும் சோமாலியாவில் பல லட்சம் பேர் பட்டினியால் இறந்தது, வால்ஸ்ட்ரீட் கைப்பற்றும் போராட்டம், ஈழ நாட்டு உள்நாட்டு போர் என்று எதை எடுத்தாலும் பேராசையால் ஆட்டுவிக்கப்படும் ஆதிக்க சக்திக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் போராட்டத்தின் வெளிப்பாடே என்பது தான் நிதர்சனம்.
 
அதிகம் வேண்டும் என்ற மனோபாவம் சாமானிய மக்களிடத்தும் எவ்வாறு பரவி இருக்கிறது என்பதற்கு சமீபத்திய உதாரணம் தானே புயல் தாக்கிய கடலூர் மக்கள். புயலால் வீழ்த்தப்பட்ட மரங்களை மட்டுமன்றி புயல் தாக்குதலுக்கு பிறகு நிற்கும் மரங்களையும் கேட்பார் யாரும் இல்லை என்ற காரணத்தால் வெட்டி வீழ்த்தி காசு பார்க்கும் கும்பல் ஒருபுறம், வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியின் தடுப்புகள் புயலால் சேதம் அடைந்த பின்பு அந்த கண்காட்சியில் இருந்த அனைத்து பொருட்களையும் லாரியில் ஏற்றி எடுத்து சென்ற கும்பல் ஒருபுறம் என்று மக்களும் அவர்களை ஆளும் அதிகார வர்க்கத்தை விட கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்று காட்டிவிட்டார்கள். புகுஷிமா அணு உலை பாதிப்பு, சுனாமி மற்றும் அதனால் உண்டான உயிரிழப்பின் பின்னும் ஜப்பான் நாட்டு மக்கள் காட்டிய மனோதிடம் எங்கே வெறும் 120 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய தானே புயல் காற்றுக்கே பறந்த கடலூர் மக்களின்  மனோதிடம் எங்கே. எல்லாவற்றையும் இழந்த ஜப்பானியர்கள் காட்டிய நிதானம் ஏன் இந்தியர்களிடம் இல்லை. இந்தியர்கள் மட்டும் அல்ல சென்ற ஆண்டில் நிகழ்ந்த பல சம்பவங்களையும் சீர் தூக்கி பார்க்கும் போது உலகெங்கும் வாழும் மக்களிடம் எதையும் எப்படியும் அடையலாம் என்ற மனநிலையே அதிகம் காணப்படுகிறது.
 
"ஆசையே பெரும் துன்பம்" என்பது எவ்வளவு உண்மை. அதாவது அதிகமாக    ஆசைப்படுபவன்  மட்டுமன்றி அவனை சார்ந்து உள்ள அவனுடைய குடும்பம், சமூகம், சுற்றுசூழல் என்று சகலமும் துன்பத்தை சந்திக்கிறது.சமீபத்தில் மால்கம் கிளாட்வெல் என்பவர் எழுதிய டிப்பிங் பாயிண்ட் என்ற ஆங்கில நூலை வாசித்தேன்.இந்நூலின் தமிழாக்கமும் இப்பொழுது கிடைக்கிறது. அருமையான நூல் அனைவரும் கண்டிப்பாக ஒரு முறையேனும் படிக்க வேண்டிய நூல். மால்கம்  சொல்கிறார் - எந்த ஒரு கருத்தோ அல்லது நுகர் பொருளோ  பெருவாரியான மக்களை சென்றடைவதற்கு ஒரு ஒட்டும்தன்மை(Stickiness Factor) வேண்டி இருக்கிறது. ஊடகங்களிலும், வானொலியிலும், காணொளியிலும் மீண்டும் மீண்டும் ஊழல்வாதிகளும், அதிகார துஷ்ப்ரயோகம் செய்பவர்களும், குறுக்கு வழியில் பணம் கொழிப்பவர்களும் எந்த விதமான பாதிப்பும் இன்றி வலம் வருவதை பார்த்து "அவன் பெரிய அளவில் செய்கிறான் நான் சிறிய அளவிலாவது செய்தால் என்ன"  என்று சாமானிய மக்களும் எண்ணும் மனப்போக்கு பெருகி வருகிறது. நாளைய தலைவர்கள் இன்றைய சாமானிய மக்களிடத்திலிருந்தே தோன்றுவார்கள். அப்படி தோன்றும் தலைவர்கள் ஆட்சிக் கட்டில் ஏறினால் ஆட்சி மாறுமே தவிர என்றுமே காட்சி மாறாது. இந்த தலைமுறை போலவே வருங்காலத்  தலைவர்கள் அனைவரும் சுயநலவாதிகளாகவே இருந்து மக்களை ஏய்ப்பர். 



எப்படி ஒரு ஸ்திரமான கட்டடம் பலமற்ற ஒரு அஸ்திவாரத்தின் மேல் எழுப்ப முடியாதோ அதைப்  போலவே நீதி, நேர்மை, சம உரிமை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றை பின்பற்றாமல் குறுக்கு வழியில் முன்னேற முடியாது.  இது இன்றைக்கு மட்டுமான உண்மை அல்ல எந்த காலத்திற்கும் பொருந்தும் ஒரு உண்மை.  குறுக்கு வழி மலர் பாதையாகவே தோன்றினாலும் அதில் வீழ்ச்சி என்பது உறுதி. காரணமும் விளைவும் (cause and effect) வெவ்வேறு கால கட்டத்தில் நிகழ்வதால் சுயநலவாதிகள் வளர்வது போன்ற தோற்றம் கொண்டாலும் அது மாயையே. எகிப்து,லிபியா மற்றும் சிரியா நாடுகளில் நிகழ்ந்த மக்கள் புரட்சியின் வெற்றி இந்த வகையே. அதாவது ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் வெடித்து கிளம்பி தங்களை ஆட்டிப் படைத்த கடாபிகளுக்கும், ஹோஸ்னி முபாரக்குகளுக்கும் விடை கொடுத்து விட்டார்கள். இது இன்றைய தலைவர்கள், வருங்கால தலைவர்கள் மட்டும் அன்றி நாம் ஒவ்வொருவரும் கற்க வேண்டிய பாடம். அதிகமாக ஆசை கொண்டவர்கள் ஜெயித்ததாக சரித்திரம் இல்லை.

உலகெங்கும் சுயநல எண்ணம் மறைந்து பொதுநல  எண்ணம் மலரட்டும்.பகை மறந்து நேசம் செழிக்கட்டும்.அநீதி மறைந்து சம நீதி வளரட்டும். முயற்சியும் கடின உழைப்பும் மட்டுமே வெற்றிக்கு விலாசமாகட்டும். இதுவே இந்த புத்தாண்டுக்கான எனது பிரார்த்தனை.