கால சக்கரத்தில் 2011 ஆம் ஆண்டை கடந்து 2012 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறோம். கடந்த வருடத்தை திரும்பி பார்ப்பது என்பது பழங்கதையை படிப்பதற்கு சமம் என்று எண்ணினால் அது பிழையாகும். வரலாற்றில் உள்ள சம்பவங்களையும் அந்த சம்பவங்கள் உணர்த்தும் படிப்பினைகளும் மனித இனம் சரிவர புரிந்து கொள்ளாததாலேயே செய்த தவறுகளையே மீண்டும் மீண்டும் செய்து மனித குலம் இன்றும் பின்தங்கியே இருக்கிறது. உதாரணத்திற்கு பிரெஞ்சு புரட்சியின் காரணியாக வரலாற்று ஆசிரியர்கள் நமக்கு காட்டுவது - இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் உள்ள பாகுபாடு அதிகரித்தது என்பது. இன்றும் எகிப்து, சிரியா மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் நடக்கும் மக்கள் புரட்சிக்கும் அதுவே காரணம். மண்ணாசை, பெண்ணாசை, பொருளாசை போன்றவற்றை விட மிகவும் ஆபத்தானது அதிகாரத்தின் மேல் உள்ள ஆசை. இந்த அதிகார போதை தந்த மமதையால் அரசாங்கங்கள் தமது மக்களை கவனிக்க தவறும் போது புரட்சி வெடிக்கிறது.
எகிப்து தஹ்ரீர் சதுக்கத்தில் பிப்ரவரி 4, 2011 அன்று கூடிய ஆட்சியாளர்களுக்கு எதிராக கூடிய மக்கள் |
அதிகார ஆசை வடகொரியா, எகிப்து, லிபியா, மியான்மர், ஸ்ரீலங்கா, ஆப்ரிக்கா என்று பல நாடுகளில் வாழும் மக்களை இன்றும் ஏழைகளாகவே வைத்திருக்கிறது. ஆணாதிக்க மனோபாவம் ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற அரபு நாடுகளில் உள்ள பெண்களுக்கு ஆண்களை அண்டி மட்டுமே வாழ முடியும் என்ற நிலையை அளித்து இருக்கிறது. பெரும் பணம் வேண்டும் என்ற ஆசை ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல் என்று ஊழல் வரலாற்றிலேயே முதல் முறையாக என்று தொலைக்காட்சி விளம்பரம் போல இந்திய மக்களை அதிர்ச்சி கொள்ள வைத்தது. மேலும் சோமாலியாவில் பல லட்சம் பேர் பட்டினியால் இறந்தது, வால்ஸ்ட்ரீட் கைப்பற்றும் போராட்டம், ஈழ நாட்டு உள்நாட்டு போர் என்று எதை எடுத்தாலும் பேராசையால் ஆட்டுவிக்கப்படும் ஆதிக்க சக்திக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் போராட்டத்தின் வெளிப்பாடே என்பது தான் நிதர்சனம்.
அதிகம் வேண்டும் என்ற மனோபாவம் சாமானிய மக்களிடத்தும் எவ்வாறு பரவி இருக்கிறது என்பதற்கு சமீபத்திய உதாரணம் தானே புயல் தாக்கிய கடலூர் மக்கள். புயலால் வீழ்த்தப்பட்ட மரங்களை மட்டுமன்றி புயல் தாக்குதலுக்கு பிறகு நிற்கும் மரங்களையும் கேட்பார் யாரும் இல்லை என்ற காரணத்தால் வெட்டி வீழ்த்தி காசு பார்க்கும் கும்பல் ஒருபுறம், வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியின் தடுப்புகள் புயலால் சேதம் அடைந்த பின்பு அந்த கண்காட்சியில் இருந்த அனைத்து பொருட்களையும் லாரியில் ஏற்றி எடுத்து சென்ற கும்பல் ஒருபுறம் என்று மக்களும் அவர்களை ஆளும் அதிகார வர்க்கத்தை விட கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்று காட்டிவிட்டார்கள். புகுஷிமா அணு உலை பாதிப்பு, சுனாமி மற்றும் அதனால் உண்டான உயிரிழப்பின் பின்னும் ஜப்பான் நாட்டு மக்கள் காட்டிய மனோதிடம் எங்கே வெறும் 120 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய தானே புயல் காற்றுக்கே பறந்த கடலூர் மக்களின் மனோதிடம் எங்கே. எல்லாவற்றையும் இழந்த ஜப்பானியர்கள் காட்டிய நிதானம் ஏன் இந்தியர்களிடம் இல்லை. இந்தியர்கள் மட்டும் அல்ல சென்ற ஆண்டில் நிகழ்ந்த பல சம்பவங்களையும் சீர் தூக்கி பார்க்கும் போது உலகெங்கும் வாழும் மக்களிடம் எதையும் எப்படியும் அடையலாம் என்ற மனநிலையே அதிகம் காணப்படுகிறது.
"ஆசையே பெரும் துன்பம்" என்பது எவ்வளவு உண்மை. அதாவது அதிகமாக ஆசைப்படுபவன் மட்டுமன்றி அவனை சார்ந்து உள்ள அவனுடைய குடும்பம், சமூகம், சுற்றுசூழல் என்று சகலமும் துன்பத்தை சந்திக்கிறது.சமீபத்தில் மால்கம் கிளாட்வெல் என்பவர் எழுதிய டிப்பிங் பாயிண்ட் என்ற ஆங்கில நூலை வாசித்தேன்.இந்நூலின் தமிழாக்கமும் இப்பொழுது கிடைக்கிறது. அருமையான நூல் அனைவரும் கண்டிப்பாக ஒரு முறையேனும் படிக்க வேண்டிய நூல். மால்கம் சொல்கிறார் - எந்த ஒரு கருத்தோ அல்லது நுகர் பொருளோ பெருவாரியான மக்களை சென்றடைவதற்கு ஒரு ஒட்டும்தன்மை(Stickiness Factor) வேண்டி இருக்கிறது. ஊடகங்களிலும், வானொலியிலும், காணொளியிலும் மீண்டும் மீண்டும் ஊழல்வாதிகளும், அதிகார துஷ்ப்ரயோகம் செய்பவர்களும், குறுக்கு வழியில் பணம் கொழிப்பவர்களும் எந்த விதமான பாதிப்பும் இன்றி வலம் வருவதை பார்த்து "அவன் பெரிய அளவில் செய்கிறான் நான் சிறிய அளவிலாவது செய்தால் என்ன" என்று சாமானிய மக்களும் எண்ணும் மனப்போக்கு பெருகி வருகிறது. நாளைய தலைவர்கள் இன்றைய சாமானிய மக்களிடத்திலிருந்தே தோன்றுவார்கள். அப்படி தோன்றும் தலைவர்கள் ஆட்சிக் கட்டில் ஏறினால் ஆட்சி மாறுமே தவிர என்றுமே காட்சி மாறாது. இந்த தலைமுறை போலவே வருங்காலத் தலைவர்கள் அனைவரும் சுயநலவாதிகளாகவே இருந்து மக்களை ஏய்ப்பர்.
எப்படி ஒரு ஸ்திரமான கட்டடம் பலமற்ற ஒரு அஸ்திவாரத்தின் மேல் எழுப்ப முடியாதோ அதைப் போலவே நீதி, நேர்மை, சம உரிமை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றை பின்பற்றாமல் குறுக்கு வழியில் முன்னேற முடியாது. இது இன்றைக்கு மட்டுமான உண்மை அல்ல எந்த காலத்திற்கும் பொருந்தும் ஒரு உண்மை. குறுக்கு வழி மலர் பாதையாகவே தோன்றினாலும் அதில் வீழ்ச்சி என்பது உறுதி. காரணமும் விளைவும் (cause and effect) வெவ்வேறு கால கட்டத்தில் நிகழ்வதால் சுயநலவாதிகள் வளர்வது போன்ற தோற்றம் கொண்டாலும் அது மாயையே. எகிப்து,லிபியா மற்றும் சிரியா நாடுகளில் நிகழ்ந்த மக்கள் புரட்சியின் வெற்றி இந்த வகையே. அதாவது ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் வெடித்து கிளம்பி தங்களை ஆட்டிப் படைத்த கடாபிகளுக்கும், ஹோஸ்னி முபாரக்குகளுக்கும் விடை கொடுத்து விட்டார்கள். இது இன்றைய தலைவர்கள், வருங்கால தலைவர்கள் மட்டும் அன்றி நாம் ஒவ்வொருவரும் கற்க வேண்டிய பாடம். அதிகமாக ஆசை கொண்டவர்கள் ஜெயித்ததாக சரித்திரம் இல்லை.
உலகெங்கும் சுயநல எண்ணம் மறைந்து பொதுநல எண்ணம் மலரட்டும்.பகை மறந்து நேசம் செழிக்கட்டும்.அநீதி மறைந்து சம நீதி வளரட்டும். முயற்சியும் கடின உழைப்பும் மட்டுமே வெற்றிக்கு விலாசமாகட்டும். இதுவே இந்த புத்தாண்டுக்கான எனது பிரார்த்தனை.
வாழ்த்துகள்
பதிலளிநீக்கு