கல்கி ர.கிருஷ்ணமூர்த்தி |
இன்று இரண்டாம் பாடமாக ஹிந்தி, பிரெஞ்சு ஆகிய மொழிகளை படிப்பது பெருகி வரும் வேளையில் தமிழ் மொழி பயிலும் ஒரு சிலரும் தமிழ் மொழியை ஆழமாக படிப்பதால் என்ன பயன் என்றும் கேள்வி எழுப்புவது "கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த குடியாம் தமிழ் குடியின்" மேல் கல் வீசுவதை போன்றது. மொழி என்பது ஒரு கலை வடிவம். ஒரு மொழியை கற்கும் போது அதை வெறும் பேச மட்டுமே அறிந்தோம் என்றால் அதன் முழு சுவையையும் அறிய இயலாது. அதாவது அந்த மொழியில் தோன்றியஇலக்கியம், கதை,காப்பியம்,காவியம், புதினம்,கவிதை
போன்றவற்றையும், அந்த மொழி பேசும் மக்களையும், அவர்களுடைய
பண்பாட்டையும், நாகரீகத்தையும் அறியும் வாய்ப்பு நமக்கு கிடைக்கப் பெறாது . ஆங்கிலத்திலும் கவிதை, நாடகம், இலக்கணம் போன்றவை உண்டு. ஆனால் ஆங்கிலத்தை விரிவாக கற்றுக்கொள்ளும் போது தோன்றாத சுமை தாய் மொழியான தமிழை கற்கும் போது மட்டும் எப்படி தோன்றுமோ?
ஒவ்வையார் |
தமிழை இவ்வாறு சுமை என்று கொண்டால் வரும் தலை முறைக்கு தமிழ் என்று ஒரு மொழி இருந்தது என்று ஏட்டில் மட்டுமே காண்பிக்கும் நிலை வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை. நாம் யார் என்பது - நாம் பேசும் மொழி, நாம் வாழ்ந்த மண், நமது மண் சார்ந்த தேசம், நம் தேசம் உலகத்திற்கு அளிக்கும் பங்கு என்று பலப் படிநிலைகளை சார்ந்தது. இந்த படிகளில் ஏதேனும் ஒரு நிலையை நீக்கினால் கூட நமது தனித்துவம் அல்லது அடையாளம் மறைந்து விடும். மொழி தகவல் பரிமாற்ற கருவி மட்டும் அல்ல. அது சிந்தனை வளத்தை வழங்கும் ஒரு கருவி. "வரப்பு உயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும்" என்பது போல ஆழ்ந்த சிந்தனை சிதறல்களும், உயர்ந்த கருத்துக்களும் கொண்ட தமிழ் மொழியை சார்ந்த சிறந்த சிந்தனையாளர்களின் கருத்துக்களை நமது நெஞ்சில் இருத்தினால் தமிழ் இனம் உலகத்தை வழி நடத்தும் இனமாக மாறும் நாள் தொலைவில் இல்லை.ஆனால் ஆங்கில மோகம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக வேற்று மொழியை கற்பதில் ஆர்வமும் கொண்டவர்கள் மிகுதியாக உள்ள இந்த காலகட்டத்தில் அந்த நிலையை என்றுமே தமிழினம் அடையப் போவதில்லை என்பதே உண்மை.
ஜப்பானிய மொழி தெரியாத ஜப்பானியரோ அல்லது கொரிய மொழி அறியாத கொரியரையோ கண்டுபிடிப்பது அரிது. ஆனால் தமிழ் நாட்டில் தமிழ் எழுத, படிக்க தெரியாத படித்த தமிழர் அநேகம். தாய் மொழியான தமிழை படிப்பதற்கு எத்தனை காரணம் வேண்டும் - தாய் மொழி என்ற ஒரே காரணத்தை தவிர. நான் சொல்லும் இந்த கருத்து அவரவர் தாய் மொழிக்கு பொருந்தும். தமிழ் எனது தாய் மொழி என்பதால் தமிழை முன்னிறுத்தி எழுதி இருக்கிறேன். ஒரு வேளை எனது தாய் மொழி தெலுங்காக இருந்தால் தெலுங்கு கற்று கொள்ளாதவர்களை பற்றி ஆதங்கப்பட்டிருப்பேன்.
தனி மனித அடையாளங்களில் ஒன்றான தாய் மொழியை படிப்பதில் உள்ள சுணக்கத்தை சோம்பேறித்தனம் என்பதை தவிர வேறு எப்படி அழைப்பது என்று தெரிய வில்லை. கணிப்பொறி மென்மொழி படிப்பதில் உள்ள ஆர்வத்தில் பத்து சதவிகிதமாவது தமிழ் மேல் கொண்டால் தமிழ் பிழைத்துப் போகும். வருங்கால சந்ததியினர் இப்படி தமிழ் மொழி மேல் ஆர்வம் கொள்ள மாட்டார்கள் என்று தெரியுமோ என்னவோ உயர்ந்த காப்பியங்களையும், காவியங்களையும் பண்டைய காலத்திலேயே படைத்து விட்டார்கள் நமது முன்னோர்கள். நாம் மற்றும் நமது சந்ததியினர் தமிழுக்கு செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று - அந்த மொழியை கற்பது மட்டுமே. புதினங்கள், கவிதைகள், கதைகள் படைத்து தமிழ் மொழியை கரை சேர்க்க வேண்டிய நிர்பந்தம் இந்த சந்ததியர்க்கு இல்லை. அப்படி இருக்க தமிழை கற்கும் சிறிய விஷயத்தை நாம் சிரமம் பாராமல் செய்தால் தான் என்ன.
பேசும் மொழி இழந்து, பழக்க வழக்கங்கள் மறைந்து, பண்பாடு இழந்து என்று ஒன்றன் பின் ஒன்றாக மறைந்து கொண்டே சென்றால் நான் யார் என்ற குழப்பம் மட்டுமே மிஞ்சும். நாம் உலகில் எந்த நாட்டிலும் வசிக்கலாம். எந்த விதமான வேலையையும் செய்யலாம். ஆனால் நமது பாரம்பரிய அடையாளங்களுள் ஒன்றான தாய் மொழியை கற்க சுணக்கம் கொண்டு கல்லாமல் போனால் பிறகு துறப்பதற்கு என்று வகுத்துள்ள எல்லை தான் என்ன? ஒரு சிறிய ஓட்டை ஒரு மாபெரும் கப்பலையே மூழ்கடித்துவிடும். நாம் தொலைக்கும் ஒவ்வொரு அடையாளமும் நமது சுயத்தை விட்டு நம்மை வெகு தூரம் அழைத்துக் கொண்டு சென்று விடுகிறது என்பதை மறுக்க முடியாதது. நமது கிளைகள் எங்கு வேண்டுமானாலும் படரலாம். ஆனால் நமது வேர்கள் எங்கு எத்தகைய பிடிமானம் கொண்டிருக்க வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.
தாய் மொழி தெரியாத ஒருவன் தான் பிறந்த மண்ணை மட்டும் அன்றி அந்த மண்ணில் வாழ்ந்த மனிதர்களை பற்றி அறியாமலேயே வாழ்ந்து மடிகிறான். நமது மனிதர்களை நாம் அறிய முற்படவில்லை என்றால் பின் நம் இனத்தின் வாழ்வாதார பிரச்சனைகள் போன்றவற்றிக்கு நம்மால் எத்தகைய பங்கீட்டை அளிக்க இயலும்? எந்த விதமான பயனையும் நாம் வாழ்ந்த நமது சமூகத்திற்கு அளிக்க முற்படாவிட்டால் நாம் வாழ்ந்து தான் என்ன பயன்? கம்பராமாயணத்தை, தேவாரத்தை, திருவாசகத்தை படிக்கத் தெரியாமலும், அதன் அர்த்தம் அறியாமலும் வாழ்வது குறையுள்ள வாழ்கையே. பொன்னியின் செல்வனையும், சிவகாமியின் சபதத்தையும் படித்து பண்டைய தமிழர்கள் வீரத்தை, நாகரீகத்தை, பண்பை அறியாமல் நமது மொழியின் தொன்மையை உணராமல் வாழ்வதை விட பெரிய அறியாமை எதுவாக இருக்க முடியும்.
நான் சிறு வயதில் தமிழில் படித்த பல நெடுங்கதைகளையும், தொடர்கதைகளையும் எனது குடும்பத்தினருடன் விவாதித்த இனிமையான நினைவுகளை நினைத்து பார்க்கிறேன். இத்தகைய இனிமையான நினைவுகள் நமது குழந்தைகளுக்கும் வரும் சந்ததியினருக்கும் கிடைக்கப் போவதில்லையோ என்ற ஆதங்கத்தை பதிவு செய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.
ஊழியஞ்செய் தமிழக்குத்
துறைதோறும் துறைதோறும்
உணர்ச்சி கொண்டே,
உணர்ந்திடுக தமிழ்த்தாய்க்கு
வருந்தீமை உனக்குவரும்
தீமை அன்றோ!
என்று பாரதிதாசன் அன்றே எழுதி வைத்தான். நாம் தமிழ் மொழுக்கு செய்யும் ஊழியம் ஒன்றே ஒன்று தான். தாய் மொழியாம் தமிழ் மொழியில் எழுதப் படிக்க நமது வருங்கால சந்ததியினருக்கு கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டியது நமது கடமை. அதை விட சிறந்தது தமிழ் படிக்க தெரியாத இந்த தலைமுறையை சார்ந்தவர்கள் தமிழை படிக்க கற்றுக் கொள்வது.எனவே தமிழ் படிப்பது எதற்காக என்ற கேள்வியை விடுத்தது நமது தாய் மொழியை செம்மையாக கற்போம் என்று உறுதி கொள்வோம். "மெல்ல தமிழிங்கு சாகும்" என்ற கூற்றை மாற்றும் சக்தி நம் ஒவ்வொரு கையிலும் உள்ளது. தமிழ் கல்விக்கு கை கொடுப்போம். தமிழ் வளர்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக