வியாழன், டிசம்பர் 09, 2021

ஓய்வு - கவிதை

இந்த மாத வல்லினச் சிறகுகள் இதழ் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. அட்டைப்பட ஓவியத்தை திருமிகு. ஹேமா ராமசந்திரன் அவர்கள் வரைந்துள்ளார். டென்மார்க்கில் வசிக்கும் அவரைப் பற்றி அறிய பக்கம் 52-ஐ பாருங்கள்.



என்னுடைய கவிதையும் இந்த இதழில் வெளி வந்துள்ளது.



தலைப்பு: ஓய்வு

நில்லா வாழ்க்கை ஓட்டத்தினிடை

நிழல் தருவாம் ஓய்வு

மகிழ்ந்து ஏற்கும் பொழுதினில்

வருந்தி அழைக்கும் வாழ்வு

 

நிறைவேறாத ஆசைகள்

நிகழ்த்தப்படா சாதனைகள்

முடிக்கப்படாத கவிதைகள்

வாழ்வின் அன்றாடக் கடன்கள்

எண்ணிலடங்கும் ஆயுள் பக்கங்களில்

நிரம்பத் துடிக்கும் நினைவுகள்

 

ஓய்வறியா காற்றைப் போல

அடுக்கடுக்காய் அமிழ்த்தும் பணிகள்

சிறப்பான செயலாற்றாலுக்கு

விருதாய் அதிகச் சுமைகள்

 

தேடிக் கிடைப்பதில்லை

இளமை, அழகு, மூப்பு, இறப்பு

தேடினால் கிடைக்கலாம்

பணம், பதவி, பட்டம், புகழ்

ஓய்வு இவையிரண்டில் எதுவாய்?

 

இளமையில் பிடிப்பதில்லை

முதுமையில் நிச்சயமில்லை

விருப்பமாய்ப் பெற்றாலும்

வயதால் அடைந்தாலும்

வேலைகள் அற்றதல்ல ஓய்வு

 

பணியுடன் பிறந்த இரட்டையராய்

உறக்கத்திலும் சுவாசமாய்

பிறப்பின் கட்டாயமாய்

இறப்பின் துவக்கமாய்

காலநதியில் சங்கமிக்கும் வரை

நிழலாய்ப் பின்தொடரும் நகல்

 

வாழ்வெனும் நீண்ட கனவில்

ஓய்வானது கனவுக்குள் கனவு

குறுங்கனவின் தொடக்கம் ஓய்வு

நெடுங்கனவின் தொடர்ச்சி விழிப்பு

கனவுகளில் தொலைவதே வாழ்வென்றாகிறது

 




4 கருத்துகள்:

  1. நன்றாக இருக்கிறது

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள்பாராட்டுக்கு நன்றி துளசிதரன். தங்கள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. கவிதை நன்று, ரம்யா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள்பாராட்டுக்கு நன்றி கீதா !!

      நீக்கு