வியாழன், டிசம்பர் 09, 2021

காந்தியம் என்றொரு மந்திரம்


வல்லினச் சிறகுகள் நவம்பர் இதழில் வெளி வந்துள்ள எடிட் செய்யப்படாத என்னுடைய கட்டுரை கீழே. வல்லினச் சிறகுகள் இதழை வாசிக்க இங்கே சொடுக்கவும்.  

https://tinyurl.com/2p8btn2f



சமீபத்தில் வெளியான "நோ டைம் டு டை" என்ற ஜேம்ஸ் பாண்ட் படத்தில் கிட்டத்தட்ட கடைசிக்  காட்சி. ஜேம்சின் மேலாளர் திரு.எம்., ஜேம்சுடன் பணியாற்றிய பலருடன் அமர்ந்திருப்பார். அப்போது அவர் அமெரிக்க எழுத்தாளரும் , சமூக செயற்பாட்டாளருமான திரு.ஜாக் லண்டன் அவர்களின் சில வரிகளை ஜேம்சின் நினைவாகச் சொல்வார்.

நான் யார் கண்களுக்கும் புலப்படாத தூசாக இருப்பதைக் காட்டிலும்,   எங்கும் அலையும் சாம்பலாக இருக்க விரும்புகிறேன்.
நான் கரையான்களால் அரிக்கப்பட்டு  மெதுவாக உதிர்கின்ற ஒரு மரத்துண்டினைப் போல் இருப்பதை விட,  அடர்ந்த இருட்டை கிழிக்கின்ற, நெருப்பைத் தாங்கி ஒளிரும்மரக் குச்சியாய் இருக்க விரும்புகிறேன்.
நான் யாரும் வாழாத ஒரு பெரும் கோளாய் விண்வெளியில் நிலைப் பெற்றிருப்பதை விட, ஒவ்வொரு அணுவும் ஒளிப்பிழம்பாய் எரிந்து கண நேரம் தோன்றி மறையும் ஒரு எரிகல்லாய் இருக்க விரும்புகிறேன்.
மனிதர்களின் திறமை, இருத்தலை விட வாழ்வதில் இருக்கிறது. நான் இங்கே வாழும் நாட்களை நீட்டிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு கொடுக்கப்பட்டுள்ள  நாட்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதே என்னுடைய விருப்பம்.




("நோ டைம் டு டை" திரைப்படத்தில் திரு. எம் ஆக நடித்துள்ள நடிகர் திரு.ரே ஃபான்சு)

வாழ்தல் என்பது எத்தனை நாட்கள் இருக்கிறோம் என்பதை விட வாழ்ந்த நாட்களில் எத்தனை மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தினோம் என்பதில் இருக்கிறது. எத்தனையோ சிறந்த மனிதர்கள் உதித்த இந்திய நாட்டில், மகாத்மா என்று அனைவராலும் போற்றப்படும் ஒரு மாமனிதராக வாழ்ந்து மறைந்தவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. காந்தி தன்னுடைய குஜராத்தி பாணி ஆடைகளை உதறி அரையாடை அணிந்தது 1921 ஆம் ஆண்டு மதுரையில்.  காந்தி இந்தியாவின் சாமானிய மனிதர்களுள் ஒருவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள இதைச் செய்ததாக குறிப்பிட்டிருக்கிறார். காந்தி தன்னை நம்மில் ஒருவராக ஆக்கிக்  கொண்ட இந்த நிகழ்வு நடந்து நூறாண்டுகள் ஆகிறது. இதே நூறாண்டுகளில் நம்மில் ஒருவர் கூட காந்தியைப் போல மாற முயற்சி செய்ததில்லை. காந்தியம் என்பது  இந்த உலகில் மிச்சம் உள்ளதா, இல்லையென்றால் காந்தியம் தோற்கும் இடங்கள் எவை  என்பதைக் குறித்து சிந்திப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

 காந்தி, சிலரைப்  பொறுத்தவரை மனிதர்களில் இமயம், சிலரைப்  பொறுத்தவரை ஒரு சிறந்த மனிதர் அவ்வளவே, ஏனையோருக்கு  மனித பலகீனங்களுக்கு உட்பட்ட ஒரு சாதாரண மனிதர் மட்டுமே. காந்தியைப் பற்றிய உங்கள் பார்வை  மேற்கூறியவற்றில் எவ்விதமாக இருந்தாலும் இத்தனை விமர்சனங்களுக்கும் அவரே தன்னை ஒப்படைத்தார் என்று தான் கூற வேண்டும். இதற்கு முக்கிய காரணம் காந்தி தன்னைப் பற்றிய எல்லா விஷயங்களையும் ஒளிவு மறைவின்றி  தன்னுடைய சுயசரிதை புத்தகத்தின் வாயிலாகவும் தன்னுடைய பிற  நூல்கள் வாயிலாகவும் பகிர்ந்துள்ளார். பொது வெளியில் தன்னைப் பற்றிய எல்லாவிதமான விமர்சனங்களையும் அவர் எதிர் கொண்டுள்ளார். இந்திய அளவில் காந்தி அளவிற்கு விமர்சனத்திற்கு ஆளான தலைவர் ஒருவர் உண்டா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டி இருக்கும். காந்திய சிந்தாந்தம் அல்லது காந்தியம் என்பதைப் பற்றிக் கூட ஒரு எளிய பார்வை கொண்டவராக விளங்கினார் காந்தியடிகள்.


"'
காந்தியம்' என்று எதுவுமில்லை மற்றும் நான் எனக்குப் பின்னர் எந்தவொரு உட்குழுவையும் விட்டுச் செல்ல விரும்பவில்லை. நான் எந்தவொரு புதிய கொள்கையையோ தத்துவத்தையோ அறிமுகப்படுத்தியதாக உரிமை கோரவில்லை. நான், நமது தினசரி வாழ்விலும் , சிக்கல்களிலும் என்றுமுள்ள உண்மைகளை நானறிந்த வழியில் பயன்படுத்த  முயன்றுள்ளேன்.எனக்கு கிட்டிய கருத்துக்களும் தீர்வுகளும் இறுதியானவையல்ல. நாளையே எனது கருத்துக்களையும் தீர்வுகளையும் மாற்றிக் கொள்ளலாம். உலகிற்கு கற்றுக் கொடுக்க என்னிடம் எதுமில்லை. வாய்மையும் அகிம்சையும் மலைகளைப் போன்று பழைமையானவை" என்று காந்தியத்தை பற்றிய அவரின் கூற்று கூட இன்றைய சூழலில் அதிசயமே. இன்றைய அரசியலில் தன் கட்சியின் அல்லது தலைமையின் கொள்கை எத்தனை மோசமானதாக இருந்தாலும் அதை விளம்பரப்படுத்தி மக்கள் மேல் திணிக்கும் கருத்துச் சர்வாதிகார அரசியல்வாதிகளுக்கு  இடையே காந்தி ஒரு அதிசய மனிதராகவே தோன்றுகிறார். 

எளிமையின் சின்னமான காந்தியை வலிமை மற்றும் ஆடம்பரத்தின் சின்னமான ரூபாய்  நோட்டுகளில் நாம்  பொறித்து வைத்திருக்கிறோம். அவரின் புகைப்படம் தொங்கும் அரசு அலுவலகங்களில், தெருக்களில், மருத்துவமனைகளில் கையூட்டு, லஞ்சம் மற்றும் சமூக அநீதிகள் அரங்கேறிய வண்ணம் உள்ளது. சமாதானத்தை பரப்பிய சபர்மதி ஆசிரமத்தின் நினைவாகத்தான் சபர்மதி எக்ஸ்பிரஸ் விடப்பட்டது. ஆனால் 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கோத்ரா சம்பவத்தில் முதலில் இந்த ரயிலை எரித்துத் தான் மாபெரும் கலவரம் ஆரம்பிக்கப்பட்டது.வணிகர்கள் உப்பு சத்யாகிரகத்தில் பங்கேற்றவர்களுக்கு பொருள் வழங்கி அதற்கு பணம் செலுத்த தேவை இல்லை என்பதை குறிக்கும் காந்திக் கணக்கு என்பது மற்றவருக்கு பணம் அளிக்காமல் ஏமாற்றுவது என்ற அளவில் தான் இன்று வழங்கப்படுகிறது. அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று அவருடைய சிலைகளை தூய்மைப்படுத்தும் நாம் இன்னும் நம்முள்ளே இருக்கும் காந்தியை அப்படியே தூய்மைப்படுத்தாமலேயே வைத்திருக்கிறோம் என்பதே உண்மை.



காந்தியம் என்பது என்ன என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க, பெரிய அரசியல் இயக்கங்கள் இல்லை. வாரிசு அரசியல் நிலைபெற்று இருக்கும் இன்றைய அரசியல் சூழலில், காந்தியின் அரசியல் வாரிசு என்று ஒருவரை கூட அடையாளம் காட்ட முடியவில்லை என்பது ஒரு விசித்திரம். தலாய் லாமா, நோபல் பரிசு பெற்ற திருமதி, ஆன் சாங் சூ கி, கறுப்பின உரிமைப் போராளி திரு. மார்ட்டின் லூதர் கிங் ஆகிய அந்நிய நாட்டு தலைவர்கள் பின்பற்றிய காந்தியைகாந்திய கோட்பாடுகளை நம்முடைய அரசியலில் நிலைநிறுத்த எந்த அரசியல் தலைமையும்  முயலவில்லை . இதனால் காந்தியம் என்ன என்ற புரிதல் பலருக்கும் இல்லை. காந்தியத்தை பின்பற்ற தேவையான, எந்த பலவீனமும் இல்லாத வாழ்க்கை முறை, தேவைகளை குறைத்துக் கொள்கிற வாழ்வியல், வலிகளை சுமக்கிற உள்ளம் ஆகிய மூன்றும் இன்று கிட்டத்தட்ட அரசியல் மன்றத்தில் இல்லாத குணங்கள் என்றே கூற வேண்டும். கடவுள் உண்மையானவர் என்று பன்னெடுங்காலமாக வழங்கப்பட்டுவரும் ஒரு கூற்றை மாற்றி உண்மையே கடவுள் என்று நிறுவியவர் காந்தி. காந்தியை "மகாத்மா" என்று குறிப்பிடுவதில் கூட அவரைப் போல என்னால் வாழ முடியாது, அவரைச் சிறந்த மனிதனாக ஒப்புக்கொள்ளும் அதே நேரத்தில் அவரைப் போல வாழ்வதற்கு நான் எத்தகைய முயற்சிகளையும் எடுக்கபோவதில்லை என்ற தப்பித்தல் மனோபாவமும் சேர்ந்தே இருக்கிறது.

காந்தியத்தின் மகா மந்திரமாக, அதன்  சாரமாக விளங்குபவை  என்றால் அவை  சத்தியம், அகிம்சை, பிரம்மச்சரியம், திருடாமை, உடைமையின்மை, உடல் உழைப்பு, நாவடக்கம், அஞ்சாமை, தீண்டாமை ஒழிப்பு, சுதேசி,சர்வோதயம் ஆகிய பதினோரு நெறிமுறைகளைச் சொல்லலாம். மந்திரம் என்பது சொல்பவரின் இயல்பை  பொறுத்து வீரியமான ஒன்றாக மாறக் கூடியது. வார்த்தைகள் பகவான் கண்ணன் வாய்வழி வெளிப்பட்டபோது அது கீதையாக ஒலித்தது. புத்தரின் மொழியானபோது அது கருணையை போதித்தது. இயேசுவின் வாய் வழி வெளிப்பட்ட போது புனித விவிலியமாய் நிலைபெற்றது. காந்தியத்தின் முக்கிய கூறுகளாக கருதப்படும் அகிம்சை மற்றும் வாய்மை என்ற மந்திரமாக காந்தியிடம்  இருந்தவரை, வீரிய விருட்சமாய் சுதந்திர இந்தியாவை நிலைநிறுத்த உதவியது. எனினும் காந்தியத்தை  இன்று வரை பொது வெளியிலோ அல்லது உலக அரங்கிலோ பெரும்பான்மையாக யாருமே எடுத்துப் பயன்படுத்தியதில்லை என்பதால் வெறும் வார்த்தையாக மட்டுமே தொடர்கிறது.

காந்தியிடம் நாம்  எதிர் பார்க்கும் நற்குணங்களை எதையும் நாம் தனியாகவோ அல்லது ஒரு சமூகமாகவோ கூட பின்பற்றுவதில்லை. இன்று இந்தியாவில் உள்ள அனைத்து மதவாத, இனவாத, ஊழல் வாத அரசியல்வாதிகளின் உருவச் சிலைகள் மத்தியில் காந்தியின் உருவச் சிலைகளை ஒரு ஏளனத்துடன் பார்க்கும் மனநிலையே இருக்கிறது. காந்தியை வெறும் அரசியல் தலைவராக பார்க்காமல் இங்ஙனம் ஒரு பார்வை கொள்வதற்கு காரணம் காந்தி எது மனித இயல்போ அதற்கு எதிரானவர் என்பதே. மனித குலம் இந்த மண்ணில் தோன்றிய  நாள் முதலே, பல்வேறு இனக் குழுக்களாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. நாம் அனைவரும் மொழி, கலாச்சாரம், சாதி, சமயம் என்று பல்வேறு படிநிலைகளில் வேற்றுமைக்  கொண்டிருக்கிறோம். "வீட்டைக் கடந்த போது எந்த ஊர் என்று கேட்டார்கள். ஊரைக் கடந்த போது எந்த சாதி என்றார்கள். மாநிலத்தை கடந்த போது எந்த மொழி என்றார்கள். நாட்டைக் கடந்த போதே இந்தியன்" என்று அறியப்பட்டேன் என்பதே இன்றைய நடைமுறை யதார்த்தம். 

மானுட இயல்பு என்பது ஒரு குழுவாக சேர்ந்து கொள்வது, பிறன் என்ற அடிப்படையில் மற்றவரை வெறுப்பதுஅந்த வெறுப்பின் அடிப்படையில் தங்களை மேலும் வலுப்படுத்திக் கொள்வதுதாங்கள் வெறுப்பவரை எதிர்த்து எப்பொழுதும் ஒரு போர் நிலையில் இருப்பது என்பதே.  இன்று நாம் சிலாகிக்கும் பல்வேறு நாகரீகங்கள் இந்த முறையில் தான் வளர்ந்தன. நாம் மற்றும் அவர்கள் என்பதில் அவர்கள் என்பது ஒரு நுணுக்கமான வார்த்தை. அவர்கள் நம்மைப் போன்றவர்கள் அல்ல, வேறு கடவுள்களை வழிபடக்கூடியவர்கள், வேறு உணவை சாப்பிடக்கூடியவர்கள் என்று அவர்களைப் பற்றிய பிம்பத்தை நாம் கட்டமைத்து வைத்திருக்கிறோம். காந்தி நம்மில் ஒருவர் தானா என்பதை பலரும் யோசனை செய்யும் அந்த இடத்தில் காந்தி தோற்றுப்போகிறார். இவர் நம்மவரா, நம் ஆளா, நமக்காக என்ன செய்தார், நமக்காக மட்டுமே என்ன செய்தார் என்று கேள்விகள் எழும் மனதில் காந்திக்கு நிச்சயம் இடம் இல்லை. ஆங்கிலேயருக்கு எதிராக போராடி சுதந்திரம் பெற்றுத் தந்தார் என்று நாம் அவரை கொண்டாடுகிறோம். ஆனால் வட்டமேசை மாநாட்டிற்காக அவர் லண்டனுக்கு சென்ற போது அங்கு பெரும் திரளாக அவரைக் கூடி வரவேற்றது ஆங்கிலேயர்கள் தான். யாரை எதிர்த்து போராடினார் என்று நாம் சொல்கிறோமோ அந்த மனிதர்களாலும் அவர் தலைவராகக் கொண்டாடப்பட்டார். இருபதாயிரம் ஆண்டு கால மனித வரலாற்றில் நம்மவர் என்றும் அயலவர் என்றும் பிரித்துப் பார்த்தே மனித குலம் தன்னை நிலைநிறுத்தி வந்திருக்கிறது. எப்படி ஒரு நீர்நாய் ஆற்று வெள்ளத்திற்கு எதிராக ஒரு அணையை கட்டுவது சாத்தியம் ஆகிறதோ அது போல பிரிவினையை கொண்டாடும் மனித எண்ணங்களுக்கு எதிராக ஒரு தனி மனித அணையைக் கட்டியவர் காந்தி. 

 

(கானா தலைநகர் அக்ராவில்(Accra) உள்ள அஃபாக்ப்ளாசி (AgbogBloshie)  என்ற மேலை நாட்டு எலக்ட்ரானிக் கழிவுகள் குவிக்கப்படும் இடம்)

நீங்கள் இந்த கட்டுரையை உங்கள் கணினியில் வாசிக்கலாம் அல்லது கைபேசியில் வாசிக்கலாம். இந்த கைபேசியோ அல்லது கணினியோ அதன் பயன்பாடு முடிந்தவுடன் என்ன ஆகிறது என்பதை யோசித்திருக்கிறீர்களா? வால்-இ (Wall -E) என்று ஒரு திரைப்படம். அந்தத் திரைப்படத்தின் ஆரம்ப காட்சி, சில நூறாண்டுகள் கழித்து இந்த பூமி வசிக்கத் தக்கதான ஒரு சூழ்நிலை இல்லாமல் வெறும் எலக்ட்ரானிக் குப்பைகளால் நிறைந்து, மனித இனம் வேறு ஒரு கிரகத்தில் வசிக்கும் ஒரு வாழ்வியல் முறையைக் காட்டும். உலகம் குப்பை மேடான பின் ஒரே ஒரு இயங்கும்  இயந்திர மனிதன் மட்டும் பூமியை சுத்தப் படுத்தும் அந்த வேலையை செய்து கொண்டிருக்கும். ராட்சச மலைகள் அளவு குவிந்திருக்கும் குப்பைகளை ஒரு சிறு இயந்திரம் எடுத்து அழுத்தம் கொடுத்து அதை கச்சிதமான வடிவம் ஆக்கி அடுக்கி வைக்கும். அடுக்கிய அந்த குப்பைகளும் வானளவு வளர்ந்து நிற்கும். இதே  போன்ற, கட்டுப்பாடற்ற நுகர்வு கலாச்சாரத்தாலும், பெரு முதலாளிகளாலும் சிதைக்கப்பட்ட இப்படிப்பட்ட  பூமியை நம் வருங்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்லக் கூடிய ஒரு சாத்தியக்கூற்றை நாம் இன்றே காண முடியும். தமிழ்நாடு சிங்கப்பூர் ஆகும், அமெரிக்க ஆகும் என்று உதட்டளவில் சொல்லும் வார்த்தைகள் பின் உள்ள அழிவை யார் அறிவார். இன்று அமெரிக்க வளர்வதற்கு ஒரு ஆப்பிரிக்கா தேவைப்படுகிறது. அமெரிக்க எலக்ட்ரானிக் கழிவுகள் எல்லாம் கப்பல்களில் ஏற்றப்பட்டு ஆப்பிரிக்க பாலைவனங்களில் கொட்டப்படுகிறது. ஐரோப்பிய மருத்துவ, எலக்ட்ரானிக் கழிவுகள் கப்பலில் ஏற்றப்பட்டு சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவில் குவிக்கப்படுகின்றது. அமெரிக்காவில் கிடைக்கும் மலிவு விலை துணிகளுக்கு பாதுகாப்பற்ற கட்டிடங்களில் ஒய்வின்றி உழைக்கும் பங்களாதேஷி பெண்களும், ஆண்களும் தான் காரணம். 2013 ஆம் ஆண்டு டாக்கா, பங்களாதேஷில் ஒரு துணி உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கட்டிடம் இடிந்து ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இறந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். தமிழ்நாடு அமெரிக்கா ஆக வேண்டும் என்றால் இன்னும் பத்து ஆப்பிரிக்கா தேவைப்படலாம்.

இன்றைய லண்டன் செல்வச் செழுப்புடன் திகழ்வதற்கு அன்றைய இந்தியாவின் எத்தனை வளங்களை நாம் இழந்திருக்கிறோம் என்பது நமக்குத் தெரியும். காந்தி பழைய காகித உறைகளில் கடிதம் எழுதினார் என்பதும் இந்தக் கடிதங்கள் அவருடைய உதவியாளர் திரு. வி. கல்யாணம் என்பவரால் தொகுக்கப்பட்டு அவை லண்டனில் ஏலம்  விடப்பட்டன என்பதும் நாம் அறிந்ததே. மறுசுழற்சி என்ற  வார்த்தை தோன்றுவதற்கு ஐம்பதாண்டுகள் முன்பே நுகர்வுக்கு எதிராக ஒரு வேகத்தடை போல  இருந்தவர் காந்தி. நாம் நுகரும் பொருளில் வெறும் ஐந்து சதவிகிதம் அளவிற்கே மறுசுழற்சி  என்பது சாத்தியமாகிறது. நுகர்வுக் கலாச்சாரம் பரவிய சென்ற 50 வருடங்களில் உலகமே குப்பை மேடாக காட்சி தருகிறது. உற்பத்தி, நுகர்வு என்ற இரண்டையும் பொறுப்புடன் செய்ய வேண்டும் என்பதே காந்தியின்  சித்தாந்தம். "ஸ்மால் இஸ் பியூட்டிஃபுல்" (Small is Beautiful) என்ற நூலை எழுதிய ஷூமேக்கர் அவர்கள் காந்தியவாதி ஜே.சி. குமரப்பா அவர்களின் வழி வந்தவர். 1973 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்த நூல், கட்டுப்பாடற்ற நுகர்வுக் கலாச்சாரத்திற்கு எதிரான ஒரு மாபெரும் எச்சரிக்கை மணி. இந்த அழிவுப் பாதையில் பயணிக்கும் நமக்கு இதற்கு எதிரான திசையில் பயணிக்கும் காந்தியைப் பார்க்கும் போது ஒரு நம்ப முடியாத தன்மை இருக்கும். நுகர்வின் வழி அழிவின் வழி என்பதை உணராத மனித பலவீனத்தாலேயே காந்தியம்  தோற்கிறது.

 


                            (ஜி-7 நாடுகளின் கொடிகள்)  

மனித வரலாற்றில் மையத்திற்கான இடம் எப்போதும் அதிகம். மையத்தைக் கொண்டு ஒரு  விஷயத்தை முழுமையாக புரிந்து கொள்ளலாம் என்பதை மனிதர்கள் ஆதியிலிருந்தே நம்பி வந்திருக்கிறார்கள். மையக் கருத்து அல்லது முக்கிய செய்தி என்ன என்று அறிந்து கொண்டால் போதுமானது என்று நினைக்கிறோம்.  கீதையின் சாரம் என்று சில வரிகளை மட்டும் குறிப்பிட்டு சொல்வார்கள். கீதையின் சாரம் மட்டுமே அறிந்து கொள்ள வேண்டியது என்றால் அதை மட்டுமே சொல்லி விட்டுப் போயிருக்கலாம். அது போலவே மைய அரசாங்கங்கள் மத்தியில் இருந்து தங்கள் ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க பல்வேறு உத்திகளை  கையாளுகின்றன.  மையங்கள் மேல் தீராத மயக்கம் இந்த மனித குலத்திற்கு உண்டு. மையம் என்பது குறுகிய காலத்திற்கு உண்டான ஒன்று என்பதை காந்தி இளமை காலத்திலேயே கண்டறிந்து மையங்கள் அற்ற அதிகார பரவலாக்கத்தை பரிந்துரைத்தார். இதன் ஒரு விழுமியமாக கிராம சுயராஜ்ய முறையைக் கூறலாம். கிராமங்கள் தன்னிறைவு அடைந்தால் அதுவே ஒரு சமமான சமுதாயத்தை உருவாக்கும் என்பதை முழுமையாக நம்பினார். இன்று நகரங்களுக்கு புலம் பெயர்ந்த மனிதர்கள், நகரங்களை பெருமளவு வளர்த்து, கிராமங்களை, அதன் கட்டமைப்பை சிதைத்துக் கொண்டிருக்கின்றனர். கிராமங்களை வீழ்த்தி வளரும் நகரங்கங்களின் அசுர வளர்ச்சி என்பது உடலையே சிதைக்கும் ஒரு புற்றுநோயைப்  போன்றது எனலாம். இந்த புலம் பெயர் வாழ்க்கை முறையின் அவலத்தை பலரும் இந்த பெரும் தொற்று காலத்தில்  வட மாநிலங்களுக்கு நடந்து சென்ற தொழிலாளர்கள் மூலம் அறிந்து கொண்டோம்.  ஒவ்வொரு கிராமமும் தன்னளவில் ஒரு மையமாக வேண்டியது . ஆனால் அதை விடுத்து இன்று மத்திய அரசாங்கம் மிகவும் வலுவுள்ளதாக இருக்கிறது. அமெரிக்கா வல்லரசாக திகழ்கிறது. இந்த மையமாக்கலுக்கு எதிராகஒரு 50 ஆண்டுகளுக்கு  பிந்தைய பார்வை கொண்டவரான காந்தியை நாம் இந்த விஷயத்திலும் புரிந்து கொள்ள முடியாமல் திணறுகிறோம். விளிம்புகளுக்கும் அதே அளவு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்ற அவருடைய நோக்கம் நிறைவேறாமல் உள்ள இந்த இடத்தில் கூட காந்தி தோற்கிறார்.




(பர்வானா மாலிக், ஆப்கானிஸ்தானில் விற்கப்பட்ட 9 வயதுச் சிறுமி)

சி.என்.என் செய்தி இணைப்பு: https://www.cnn.com/2021/11/01/asia/afghanistan-child-marriage-crisis-taliban-intl-hnk-dst/index.html

நமக்குத் தோன்றலாம் இதனால் என்ன? இன்று மனித குலம் நிறைய சாதனைகளைப் புரிந்து , பல தடைகளை கடந்து,  நேற்றை விட இன்று நன்றாகத் தானே இருக்கிறது. நாம் நன்றாக இருக்கலாம். ஆனால் நாம் வாழும் உலகம் நன்றாக இல்லை. வைரஸ் என்ற நுண்ணுயிரி மட்டுமே தான் பற்றியிருக்கும் உயிரையும் சேர்த்து அழிக்கும் வல்லமை உடையது. நாமும் ஒரு வைரசைப் போல கட்டுக்கடங்காமல் பரவி இந்த பூமியை அழித்து வருகிறோம். தன்னுடைய இருப்பிடத்தை அழிக்கும் ஒரே உயிரினம் மனித குலம் என்பதை எண்ணிப் பார்த்தால் நாம் செல்லும் இந்தப் பாதை சரியானது இல்லை என்பது நமக்குப் புலப்படும். அதே போல நாம் இந்த சமூகத்தை உற்று நோக்கினால் இங்கு இருக்கும் ஏற்ற தாழ்வுகளும் நமக்கு தெள்ளத் தெளிவாக விளங்கும். நீங்கள் இந்த கட்டுரையை வாசிக்கும் இதே நேரத்தில் தாலிபான் ஆட்சியின் கீழ், ஆப்கானிஸ்தானில் ஒரு குடும்பம், பசியின் காரணமாக தங்கள் குடும்பத்தை சார்ந்த பத்து வயது கூட நிரம்பாத பெண் குழந்தையை  எழுபது வயது ஆணுக்கு விற்றிருக்கக் கூடும் . ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் ஆண்டு  தோறும் பசி பட்டினியால் இறக்கிறார்கள். கட்டுரையை நீங்கள் வாசிக்கும் நேரத்தில் எத்தனை பேர் அடுத்த நாளை பார்க்காமல் இறந்திருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும் போது இங்கே மனிதர்களும் நன்றாக இல்லை என்ற உண்மை  நமக்கு புலப்படும். சீனாவின், இந்தியாவின் நுகர்வு வெறிக்கு ஒரு ஆப்பிரிக்கா பலியாக வேண்டி இருக்கிறது. இன்று உலகம் முழுவதும் பல்வேறு நிலைகளில் முதலாளித்துவம், கம்யூனிசம், மார்க்சியம் என்று பல்வேறு தத்துவங்கள் தோற்பதை நாம் பார்க்கிறோம். இதற்கு மாற்று என்ன என்று யோசிக்கும் போதும், அனைவருக்குமான சமுதாயம் ஒன்று நிலை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஆராயும் போதும்காந்தியம் ஒன்று மட்டுமே அனைத்து மனிதர்களுக்குமான ஒரு சிறந்த வழி என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.

  

காந்தி எதிர் காலத்திற்கானவர். அமைதிக்கான நோபல் பரிசு எதுவும் அவருக்கு அளிக்கப்படவில்லை. ஆனால் அவரை விட அன்பையும், அமைதியையும் போதித்த அரசியல் தலைவர் எவரும் இலர். காந்தியம் கடல் போல் விரிந்தது, அதன் பண்புகளை பூரணமாக உணர்ந்தவர் எவரும் இல்லை . காந்தி என்பது வெறும் பெயரல்ல, அது ஒரு வாழ்வியல். காந்தியம் தோற்கும் இடங்கள் எல்லாம் தனி மனிதனும் இந்தச் சமூகமும் தன்னுடைய பலவீனத்தால் தோற்கும் இடங்களே அன்றி  உண்மையில் காந்தியும் காந்தியமும் தோற்கும் இடங்கள் அல்ல.

 

  



 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக