ஞாயிறு, மே 13, 2012

அமெரிக்காவில் இருந்து அமீர்பெட் வரை


கிட்டத்தட்ட மூன்று மாத இந்திய பயணம் சென்ற வாரத்துடன் நிறைவு பெற்றது. கிட்டத்தட்ட ஒரு டஜன் வருடங்களுக்கு பிறகு இவ்வளவு நாட்கள் இந்தியாவில் தங்கும் வாய்ப்பு. தகிக்கும் வெயில், பவர் கட், பயண அலைச்சல் என சில தொந்தரவுகள் இருந்தாலும் மொத்தத்தில் நிறைவான ஒரு பயணம். நெருங்கிய உறவினரின் கல்யாணம், வளைகாப்பு போன்ற சுப காரியங்களில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்தது கூடுதல் போனஸ் என்றே சொல்லலாம்.

இந்த பயணத்திற்கான பிள்ளையார் சுழி ஜனவரி மாதத்தின் முற்பகுதியில் என்னவரால் சுழிக்கப்பட்டது. "சித்தப்பா பையன் கல்யாணத்தை அட்டென்ட் பண்ண இந்தியா போறபோது அப்படியே ஹைதராபாதில் நீ எதாவது சாப்ட்வேர் கோர்ஸ் பண்ணலாமே" என்று திரி கிள்ளினார். நாரதர் கலகம் நன்மையில் தான் முடியும் என்பதாலும் எவ்வளவு நாள் தான் வெட்டியாக(?) வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருப்பது இந்த நேரத்தில் வேறு ஏதாவது பயனுள்ளதாக கற்று கொள்வோமே என்று தோன்றிய அசட்டு துணிச்சலாலும் சரி என்று சொல்லிவிட்டாலும் "உனக்கு நாக்குல தான் சனி" என்று கூப்பாடு போட்ட உள்மனதை அடக்க ரொம்பத் தான்  பிரயத்தனப்பட வேண்டியதாயிற்று.

சென்னையில் இறங்கி அந்த வெயில் எனக்கு உரைக்கும் முன்பே உறவினரின் கல்யாண நாள் வந்துவிட்டது. நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து திருமண மற்றும் இதர நிகழ்வுகள் நடக்க இருந்த இடம் சிறிது தொலைவு. சென்னை வெயிலை விட கொடுமையான விஷயம் ஒன்று உண்டென்றால் அது சென்னை டிராபிக் தான் . மக்கள் எப்படித்தான் இந்த டிராபிக்கில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சென்று வருகிறார்கள் என்பது எனக்கு இன்னும் புரியாத புதிர். சரியான நேரத்திற்கு ஒரு இடத்திற்கு செல்வதற்கு ஒன்று நிறைய நேரம் கைவசம் இருக்க வேண்டும் இல்லை எங்கே செல்ல வேண்டுமோ அந்த இடத்திற்கு அருகிலேயே தங்கும் வசதி வேண்டும். இந்த இரண்டும் அமையப் பெறாதவர்கள் சபிக்கப்பட்டவர்கள்.


கல்யாணத்திற்கான பட்டு புடவை, நகை மற்றும் ஒப்பனை அணிந்து நண்டு சிண்டான குழந்தை செல்லத்தையும் கிளப்பி காரில் ஏறி அமர்ந்து பல மணி நேரங்களுக்கு பிறகு தேவையான இடத்திற்கு சென்றடையும்போது புடவை கசங்கி, ஒப்பனை கலைந்து  "அப்படியே நேரா  இங்க  வந்துட்டியா, போய் சீக்கிரம் ரெடி ஆகு' என்று எரிகிற கொள்ளியில் எண்ணெய் விடும் ஆன்ட்டிகளிடம் மழுப்பலாக சிரித்து,  "அம்மா என்னோட வளையல் உடைந்திடுத்து / நசிங்கிடுத்து/ காணோம் , என்னோட தலை முடி கலைஞ்சிடுச்சு இதை சரியா போட்டு விடு , எனக்கு இந்த டிரஸ் வேண்டாம் வேர்க்குது" என்று அழும்பு பண்ணும் குழந்தையை சமாளித்து, எல்லோரையும் நலம் விசாரித்து, என்ன சாப்பிட்டோம் என்ற நின்று  நிதானிப்பதற்குள் "சீக்கிரம் கிளம்பு அப்பதான் நாளைக்கு காலையில கல்யாணத்திற்கு சீக்கிரம் வர முடியும்" என குரல் கொடுக்கும் சித்தப்பாவிடம் சரி என்று தலையாட்டி மீண்டும் எப்பொழுது முடியும் என்று தெரியாத கார் பயணம் என்று - உங்களுக்கு புரிந்திக்கும் என்று நினைக்கிறேன். கால காலத்திற்கும் ஞாபகத்தில் நிற்கும் கல்யாண நினைவுகளை பின்னுக்கு தள்ளி முன்னணியில் நிற்பது தேவையில்லாத டிராபிக் சங்கடங்கள்.


அடிப்படை வசதியான சாலை கட்டமைப்பு வசதி இல்லாத இந்த சென்னையில் இன்று வீடு மனை  வாங்குவது என்றால் சில/பல கோடிகளை தர வேண்டியிருக்கிறது. கழிவு நீர் அகற்றும் வசதி, குப்பை அகற்றும் வசதி, மேடு பள்ளம் இல்லாத அழகிய சாலைகள், அழகாக பராமரிக்கப்பட்ட பூங்கா, குப்பை இல்லாத கடற்கரை, 24 மணி நேர மின்வசதி, பழுதில்லாத சாலை விளக்குகள், கழுத்து சங்கலி அறுக்கும் திருடர்கள் இல்லாத பாதுகாப்பான சாலைகள் என்று எந்த விதமான வசதியும் இல்லாத சென்னையில் எதற்கு வீடு மனை வாங்க அத்தனை கோடிகள் தர வேண்டும் என்பது புரியாத புதிர். சென்னை இப்படி என்றால்  சிறு நகரங்களில் நிலைமை இதை விட மோசம். தமிழ்நாட்டை சுத்தப்படுத்தும் ஒரு சிறு முயற்சியாக பிளாஸ்டிக் பைகளை தமிழகம் முழுவதும் தடை செய்தால் தான் என்ன?


கல்யாணம் நல்லபடியாக முடிந்து ஹைதராபாத் செல்லும் நாளும் வந்தது. இந்தியாவில் அதிகம் ரயில் பயணம் செய்யாத எனக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் பிடிப்பது இதுவே முதல் முறை. சென்ட்ரல் எனது கற்பனைக்கு எதிராக "ச்சே இவ்வளவு அசுத்தமா" என்று அருவருக்கும் அளவுக்கு இருந்தது என்று சொன்னால் மிகை இல்லை. எத்தனை ரயில்கள் நிற்கிறதோ அத்தனையிலும் கழிவு நீர் வழிந்து தண்டவாளத்தில் ஆங்காங்கே தேங்கி நிற்பதும், ரயில்கள் சென்றவுடன் மக்கள் மனிதக் கழிவுகளால் அசுத்தம் அடைந்திருக்கும் தண்டவாளங்களை கடந்து செல்லும் அவலமும் இப்பொழுது நினைத்தாலும் குமட்டுகிறது.ரயில்கள் மனித கழிவுகளை முறையாக தேக்கி பின்னர் பாதுகாப்பாக வேறு இடத்தில் சென்று அப்புறப்படுத்துவது என்பதை பின்பற்ற வேண்டும் என்ற சின்ன விஷயம் இந்தியாவில் யாருக்கும் தெரியாத என்ன? ரயில்வே துறையில் இருந்து வரும் வருமானத்தில் ஒரு சிறிய அளவு முதலீடு செய்தால் கூட இந்த திட்டத்தை அற்புதமாக செயல் படுத்த முடியுமே? இதன் மூலம் ரயில் தண்டவாளங்களை ஒட்டி வசிக்கும் பல ஆயிரக்கணக்கான மக்களுடைய சுகாதாரத்தையும் மேம்படுத்தலாம் அல்லவா.


சரி ஹைதராபாத்தும் இப்படி தான் சென்னை அளவு அசுத்தமாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே சென்ற எனக்கு ஆனந்த அதிர்ச்சி. ஹைதராபாத் ஏர்போர்ட் வெளிநாட்டு ஏர்போர்ட்களுக்கு   நிகராக ஜொலி ஜொலித்தது சுத்தமான உண்மை. சென்னை ஏர்போர்ட் என்றதுமே உங்களுக்கு மூலைக்கு முலை பாக்கு கரை படிந்த சுவர்கள் ஞாபகம் வரவில்லை என்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். ஹைதராபாத் ஏர்போர்ட்டை நகரத்துடன் இணைக்கும்  சாலைகள் அத்தனை விரிவு அத்தனை அழகு. இருபுறமும் 6 தடம் என 12 தடம் கொண்ட சாலைகள்.  அதிக அளவில் வெளிநாட்டில் வசித்த இந்தியர்கள் தற்போது விரும்பி வரும் ஊர் என்பதால் கொஞ்சம் சுத்தம். பெரிய ஷாப்பிங் மால்களும், வீதிக்கு வீதி உணவகங்களும், பான் விற்கும் இடங்களும், சாட் உணவு விற்கும் சிறு வியாபாரிகளும் என்று உணவுக்கு பஞ்சம் இல்லாத ஊர். அதற்காக பிச்சைகாரர்கள் இல்லாத ஊர் என்று எண்ண வேண்டாம். வட இந்தியாவில் இருந்தும் ஆந்திராவின் பல பகுதிகளில் இருந்தும் பலரும் பிழைப்பு தேடி வருவதால் ஹைதராபாத் ஏனைய நகரங்களை போல குறுக்கு வாட்டாககவும் சில இடங்களில் நெடுக்குவாட்டகவும் வளர்ந்துகொண்டே  இருக்கிறது. பல அடுக்கு கட்டிடங்களை கொண்ட அபார்ட்மென்ட் வளாகங்கள் "சிட்டி வித்தின் சிட்டி" என்று சொல்லக் கூடிய அளவில் பிரமாண்டமாக இருந்தது கண் கொள்ளா காட்சி.   


சாப்ட்வேர் ஹப் என்று சொல்லக் கூடிய ஹைதராபாதுக்கு அந்த பெயர் வரக் காரணமான இடம் அமீர்பெட்.தீப்பெட்டி போன்ற  அடுக்கு மாடி கட்டிடங்கள் ஒவ்வொன்றிலும் ஏதேனும் ஒரு கம்ப்யூட்டர் மென்மொழி பயிற்சி அளிக்கும் மையமும், காலை 6 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடக்கும் வகுப்புகளுக்கு பெரிய ஐ.டி.  கம்பெனியில் வேலை கிடைக்கும் கனவோடு வரும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் என்று கணநேரம் கூட தூங்காத ஒரு கணினி தொழிற்சாலை. மிகக் குறைந்த விலை ஆனாலும்  நான் பார்த்த வரை நல்ல ஆசிரியர்கள் கொண்ட மையங்கள் என்று அமீர்பெட்டின் பிளஸ்கள் பல. கணினி மென்மொழியில் பயிற்சி மேற்கொள்ள விரும்புவோர் கட்டாயம் செல்ல வேண்டிய இடம்.  

சார்மினார், பிர்லா மந்திர், ஹுசைன் சாகர் ஏரி,லும்பினி பூங்கா ஆகியவற்றையும் இப்பொழுதான் முதன் முதலாக பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஹுசைன் சாகர் ஏரியையும், லும்பினி பூங்காவையும் மட்டும் இன்னும் சற்று பராமரித்தால் நன்றாக இருக்கும். மொழி தெரியாத ஊரில் எப்படி பேசி சமாளிப்பது என்று கொஞ்சம் உதைப்பாக இருந்தாலும் பெரும்பாலானோர் ஹிந்தி பேசுவதாலும், படித்தவர்கள் இங்கிலீஷ் பேசுவதால் எந்த கஷ்டமும் இல்லாமல் போனது. இதுவே தமிழ் தெரியாமல் சென்னையில் இருந்தால் தாக்குப் பிடித்திருக்க முடியும் என்று தோன்றவில்லை.


இந்த மூன்று மாத இந்தியா பயணத்தில் கற்றது/பெற்றது என்ன என்றால்என்று யோசித்தால் பெற்றது நிறைய உண்டு. நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். கற்ற எந்த வித்தையும் தேவையற்றது அல்ல என்பது புரிந்தது. கஷ்டப்பட்டு சிறு வயதில் கற்ற ஹிந்தி ஹைதராபாதில் வசித்த சில மாதங்கள் அடுத்தவர்களுடன் பேச உதவியது என்று சொன்னால் அது மிகை இல்லை. எந்த விஷயத்தையும் ஆழமாக தெரிந்து கொள்ளாமல் அரை குறையாக தெரிந்து கொண்டால் எத்தனை வயதானாலும் திரும்பவும் அந்த விஷயத்தை கற்றே ஆக வேண்டிய சூழல் உண்டாகும் என்று புரிந்தது. உதாரணமாக  கல்லுரி காலத்தில் ஜாவா மென்மொழியை அரைகுறையாக படித்து இருந்தாலும் சரியாக தெரியாத காரணத்தால் திரும்பவும் முறையாகவும் ஆழமாகவும் கற்க நேர்ந்ததை சொல்லலாம். "வென் தி ஸ்டுடென்ட் இஸ் ரெடி தி டீச்சர் வில் அப்பியர்" என்று ஒரு ஆங்கில பழமொழி உண்டு.  அது உண்மை என்பதை எனக்கு மென்மொழி போதித்த ஆசிரியர்கள் மூலமாக அனுபவப்  பூர்வமாக உணர்ந்தேன். நீங்கள் விரும்பியதை முழு முனைப்போடும் அர்ப்பணிப்போடும் செய்யுங்கள். வெற்றி உங்களை தானே தேடி வரும் என்பதும் அந்த ஆசிரியர்கள் அறிவுறுத்திய செய்தி. அத்தகைய சந்தர்ப்பங்கள் எனக்கு மட்டுமல்லாது எல்லாருக்கும் வாய்க்க வேண்டும் என்ற சிந்தனையோடு நிறைவு செய்கிறேன்.