வியாழன், ஜனவரி 13, 2022

தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில்



டிசம்பர் 2021/ஜனவரி 2022 மாத வல்லினச் சிறகுகள் இதழ் பொங்கல்  சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. இதில் உணவு விரயத்தை பற்றி நான் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். பொங்கல் கொண்டாட்டம் நடக்கும் இந்நாளில், உணவினை சரியாகப் பயன்படுத்தி, உழவுக்கும் அந்த தொழிலினை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கும் வந்தனை செய்வோம். இதழை வாசிக்க இங்கே சொடுக்குங்கள். இந்த இதழில் இடம் பெற்ற தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் என்ற தலைப்பில் அமைந்த என்னுடைய கட்டுரை கீழே

மனிதன் ஒரு விசித்திரமான உயிரினம். கண்ணால் பார்க்கக் கூடிய இயற்கை என்னும் கடவுளை அழித்து விட்டு கண்ணால் பார்க்க முடியாத கடவுளைத் தேடி அலைபவன். அவன் அழித்த அந்த இயற்கையே கடவுள் என்பதை உணராதவன்" என்பார் ஹூபேர்ட் ரீவ்ஸ் என்ற அறிஞர். பாரதியார் எழுதிய  "தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனின் இந்த சகத்தினை அழித்திடுவோம்" என்ற வரிகளை நாம் படித்திருப்போம்.  உணவு என்பது இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் இன்றியமையாதது. பருவ நிலை மாற்றங்களை விடுத்து பார்த்தோமேயானால் உலக வரலாற்றில் இதுவரை பசி, பட்டினி ஆகியன மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமான ஒன்று. விலங்குகளும், பறவைகளும், கடல்வாழ் உயிரினங்களும் உணவுக்கான பெரிய முன்னேற்பாடுகள் ஏதும் இன்றி பன்னெடுங்காலமாக சிறப்பாக  வாழ்ந்து வருகின்றன. நாளைய தேவையை இன்றே அறிந்து, அதைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளக்  கூடிய ஆற்றலைப் பெற்ற மனிதன் மட்டும் உணவுத் தேவையில் ஏன் இன்றும் தன்னிறைவை அடையவில்லை என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வறட்சி அல்லது வெள்ளம், பூச்சிகளால் பயிர்களுக்கு ஏற்படும் பயிர் பாதிப்பு என்பது போன்ற புற சூழல் காரணிகள் சில  இருந்தாலும் அவை அனைத்தும் பன்னெடுங்காலமாக இருப்பவையே.

உலக உணவு உற்பத்தித் திறன் 2000 ஆண்டை விட 2019 ஆண்டில் 73 சதவிகிதம் வரை அதிகரித்து உள்ளது என்று ஐக்கிய நாடுகளின் உலக உணவு நிறுவனத்தின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. உணவுப்  பற்றாக்குறை என்பது போதிய உணவு இல்லை என்பதால் ஏற்படுவதில்லை, அது உணவை சரியான முறையில் பயன்படுத்தாமல் உணவை விரயம் செய்வதால் ஏற்படுகிறது என்பது நம் அனைவருக்குமே ஒரு புதிய செய்தி. உணவு ஏன் வீணடிக்கப்படுகிறது? வயலில் இருந்து நம் மேசை வரை வரும் உணவுச் சங்கலியில் எந்த இடத்தில் இது நேருகிறது? இதைத் தவிர்க்க நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது என்ன? இதில் அரசாங்கம் மற்றும் உணவு உற்பத்தி செய்யும்  நிறுவனங்களின் பங்கு யாது? என்று பல்வேறு படிநிலைகளில் அலச வேண்டிய ஒரு முக்கிய பிரச்சனை இது .

உலக மக்கள் தொகை 700 கோடி. இதில் கிட்டத்தட்ட 100 கோடி மக்கள் உணவு இல்லாமல் வாடுகிறார்கள். அதாவது ஏழு பேரில் ஒருவர் பசியால் துன்பம் அடைகின்றார்.பசிக் கொடுமை என்பது நோய்க்கு காரணமாகவும் அதனால் ஏற்படும் மருத்துவ, சுகாதார செலவினங்கள் தடுக்கக் கூடிய ஒன்று என்பதால், இதை நீக்க, தனி மனிதன் முதல் அரசாங்கங்கள் வரை அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டிய தேவை இருக்கிறது.



(உலக அளவில் அதிக அளவில் உணவினை வீணடிக்கும் நாடுகள் பற்றிய புள்ளிவிவரம் -நன்றி:போர்ப்ஸ்.காம்)

மக்கள் பசி பட்டினியால் துயருறும் அதே நேரம், ஒவ்வொரு வருடமும் 130 கோடி டன்கள் அளவு உணவுப் பொருட்கள் வீணடிக்கப்படுகிறது. இந்த உணவினை கொண்டு கிட்டத்தட்ட 200 கோடி மக்களுக்கு உணவு அளிக்கலாம். வீணாக்கப்படும் இந்த உணவு மக்கிய பின் அதில் இருந்து வெளியேறும் மீத்தேன் வாயு அளவைக் கணக்கிட்டால், அது உலகிலேயே அதிகமாக பைங்குடில் வாயுவை(Greenhouse Gas) வெளியேற்றும் சீனா, மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்து மூன்றாவது நாடாக இடம் பிடிக்கும். வளர்ந்த நாடுகளில் வீணடிக்கப்படும் உணவின் மதிப்பு கிட்டத்தட்ட 68000 கோடி அமெரிக்க டாலர்கள் மற்றும் வளரும் நாடுகளில் வீணடிப்படும் உணவின் மதிப்பு 63000 கோடி அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  இவ்வாறு வீணடிக்கப்படும் உணவுகளில் முதன்மையானது பழங்கள், காய்கறிகள் மற்றும் பூமிக்கு கீழே விளையும் கிழங்கு வகைகள் ஆகியன. அவை கிட்டத்தட்ட 40-50 சதவீதம் வரை வீணடிக்கப்படுகிறது.அதற்கு அடுத்ததாக மீன் வகைகள் 35 சதவீதமும்தானிய வகைகள் 30 சதவீதமும் , இறைச்சி மற்றும் பால் பொருட்கள் 20 சதவீத அளவும் வீணடிக்கப்படுகிறது.  இவ்வாறு தூக்கி எறியப்படும் உணவினை தயார் செய்ய பயன்படுத்தப்பட்ட தண்ணீர் மற்றும் அந்த உணவினை உற்பத்தி செய்யத் தேவையான விளை நிலங்கள், உணவினை சந்தைப்படுத்த தேவைப்படும் மின்சாரம், எரிபொருட்கள், இந்த உணவினை உற்பத்தி செய்ய அழிக்கப்பட்ட காடுகள் ஆகியன மட்டுமன்றி அந்த உணவுப் பொருள் மக்கிய பின் வெளிவரும் மீத்தேன் வாயு என பல்வேறு சுற்றுச் சூழல் பிரச்சனைகள் இதனால் ஏற்படுகிறது.   உணவு இழப்பு(Food Loss) அல்லது உணவு விரயம்(Food Waste) என்ற இரு வழிகளில் உணவு வீணடிக்கப்படுகிறது. முறையற்ற உணவு சேமிப்பு முறை, சரியான பதப்படுத்தும் முறைகளை கையாளாமல் இருத்தல், சரியான நேரத்தில் பொருட்களை சந்தைப்படுத்தாமல் விடுதல் போன்ற காரணங்களால் உணவு இழப்பு ஏற்படுகிறது. இது பெரும்பாலும் வளரும் நாடுகளில் மட்டும்  ஏற்படக் கூடிய சிக்கல். முறையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினால் இந்தப் பிரச்னையை அடியோடு ஒழிக்க முடியும்.

ஆனால் உணவு விரயம் எதனால் உண்டாகிறது என்பதற்கான காரணங்கள் மிகவும் வியப்பானவை. விசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் ஆதரவாக சமூக  வலைத்தளங்களில் மீம் போடும் சென்ற தலைமுறையும், காய்கறிகள், அரிசி மற்றும் தானிய  வகைகள் அனைத்தும் பேரங்காடிகளில் விளைந்தவை என்ற அளவிற்கு மட்டுமே அறிந்த இந்தத் தலைமுறையும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை. பாம்புச்  சட்டை என்ற குறும்படம். கீழே ஒரு பருக்கை உணவை குழந்தை சிந்தி இருக்கும். ஒரே ஒரு பருக்கை தானே வீணாகி இருக்கிறது என்ற அந்தக்  குழந்தையின் கேள்விக்கு அந்தக் குழந்தையின்  அப்பா இவ்வாறு சொல்லுவார்- " இந்த ஒரு பருக்கை ஏதோ ஒரு ஊர்ல, யாரோ ஒரு விவசாயி வயலில் நெல்லாக இருந்திருக்கும். அது அறுவடை செய்யும் போது வயலிலேயே தங்காமல், அடிக்கும் போது களத்தில் சிதறாமல் சேகரிக்கப்பட்டு ஒரு அரவை மையத்திற்கு சென்றிருக்கும். அங்கே அந்த சிறு நெல் மணி அரைக்கப்பட்டு, புடைக்கப்பட்டு, சலிக்கப்பட்டு அதில் தொலையாமல், பின் ஒரு மூட்டைக்குள் அரிசியாய்  மாற்றம் செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருக்கும். அந்த மூட்டை அரிசியை கடையில் இருந்து வாங்கி வந்து,  உனது தாய் அதை எடுத்து சமைக்கும் போது அந்த ஒற்றை அரிசியை தவறவிடாமல் உனது தட்டு வரை கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். அப்படிப்பட்ட இந்த ஒற்றைப் பருக்கையை நீ வீணாக்கலாமா" என்று கேட்பார்.

அமெரிக்காவில் மட்டும் 16,100 கோடி டாலர்கள் அளவு ஒவ்வொரு ஆண்டும் உணவு வீணாக்கப்படுகிறது. இந்தப் பணம் அமெரிக்காவில் உள்ள தேசிய பூங்காக்கள், நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள், எப்.பி.ஐ(FBI) எனப்படும் மத்திய புலனாய்வுத்துறை, போர்வீரர்கள் மருத்துவக் காப்பீடு, மத்திய உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை(Food and Drug Administration) ஆகிய அமைப்புகளுக்கு வழங்கப்படும் வருடாந்தர வரவு செலவிற்கான தொகையை விட அதிகம். நல்ல நிலையில் உள்ள, பாதுகாப்பான, அனைவரும் உண்ணக் கூடிய உணவை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம். மழைநீர்க் காடுகள், பல்லுயிர் வசிக்கும் இடங்களை அழித்து அங்கு தானியமும் ஏனைய உணவுப் பொருட்களும் பயிரிடும் போக்கினால் ஏற்படும் இயற்கை அழிவிற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது அவசியமாகிறது என்கிறார் ராபர்ட் க்ரீன்பீல்டு என்ற சமூக ஆர்வலர். இவர் அமெரிக்கா முழுவதும் பல்வேறு உள்ள ஊர்களுக்கு சென்று அங்குள்ள மளிகைக் கடைகளில் தூக்கி எறியப்படும் உணவுப் பொருட்களை சேமித்து, அதை அந்தந்த ஊர்ப் பூங்காக்களில் கண்காட்சியில் வைத்து மக்களிடம் உணவு விரயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

 




(ராப் க்ரீன்பீல்ட் மளிகைக் கடைகளால் தூக்கி எறியப்பட்ட நல்ல நிலையில் உள்ள உணவுடன். முதல் படம் சான் டியாகோ, கலிஃபோர்னியாவில் எடுக்கப்பட்டது. பின்னது லாஸ் ஏஞ்சல்ஸ், கலிஃபோர்னியாவில் எடுக்கப்பட்டது. நன்றி- robgreenfield.org)

உணவு நிறுவனங்கள் வகுத்துள்ள அழகு மற்றும் அளவு குறித்ததான தரக் கட்டுப்பாட்டிற்கு ஏற்ப பழங்களும், காய்கறிகளும் அவை விளையும் இடத்திலேயே பெரும்பாலும் கழிக்கப்படுகின்றன. கொஞ்சம் சிறியதாக இருக்கிறது அல்லது சரியான நிறத்தில் இல்லை இல்லை என்பதைப் போன்ற அற்ப காரணங்களால் இவ்வாறு உணவு பொருட்கள் வீணாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. அமெரிக்காவை பொறுத்தவரை உணவுப் பொருள்களின் மேல் அச்சிடப்படும் தேதிகள் பெரும்பாலும் அந்தப் பொருள் அதிகபட்சமாக எவ்வளவு நாள் வரை புதியதாக இருக்கிறது என்பதற்கான அளவுகோலே அன்றி, அந்தப்  பொருள் அந்தத் தேதிக்கு பின் கெட்டு விட்டது என்ற அர்த்தத்தில் அச்சிடப்பட்டது அல்ல. இந்தப் புரிதல் பலருக்கு இல்லை என்பதால் வாடிக்கையாளர்கள் வாங்காத இவை வெறுமனே கழிவாக குப்பைத் தொட்டிகளில் கொட்டப்பட்டு பின்பு குப்பைக்கூடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே வீணாகத் தூக்கியெறிப்படுகிறது.




(எக்விடோர் நாட்டில் சரியான அளவில் இல்லை என்ற காரணத்தால் நிராகரிக்கப்பட்ட வாழைப்பழங்கள்)

த்ரிஷ்டிரம் ஸ்டுவர்ட் என்ற இங்கிலாந்தை சார்ந்த எழுத்தாளர் எழுதிய புத்தகம் "வேஸ்ட்: அன்கவரிங் தி குளோபல் புட் ஸ்கேண்டல்"(Waste: Uncovering the Global Food Scandal) என்பதாகும். இந்தப் புத்தகத்தில் உணவு எவ்வாறு வீணாகிறது என்பதை நம்மால் எளிதாக புரிந்து கொள்ளக் கூடிய அளவு ஒரு உதாரணத்துடன் விளக்குகிறார். நீங்கள் ஒரு மாம்பழம் பயிரிடுபவர் என்று வைத்துக் கொள்ளலாம். உங்கள் முயற்சியில் 9 மாம்பழங்கள் வளர்ந்துள்ளது. இதில் சரியான முறையில் சேமிக்காததால் 1 மாம்பழத்தை அது விளைந்த இடத்திலேயே தூக்கிப் போடுங்கள். 2 மாம்பழங்களை அழகில்லை அல்லது சரியான அளவில் இல்லை என்று நீக்குங்கள். 2 மாம்பழங்களை வாங்கி வைத்து உண்ணாமல் அது வீணான பின் தூக்கி எறியுங்கள். மீதம் உள்ள 4 மாம்பழங்களை மட்டும் உணவாக எடுத்துக்கொள்ளுங்கள். இப்படி  விளைவித்ததில் பாதிக்கு மேல் உண்ணப்படாமல் வீணாகும் பரிதாப நிலையே இங்கு நிலவுகிறது என்று கூறுகிறார். உணவுப் பொருட்களில் நூறு சதவிகித பயன்பாடு என்பது நல்ல இலக்கு என்றாலும் அது நிறைவேறுவதற்கு சாத்திய கூறுகள் இன்று இல்லை. ஆயினும் கிட்ட தட்ட 55 சதவிகித உணவு பயன்படுத்தப்படுவதில்லை என்பது இந்த பூமிக்கும், சுற்றுச் சூழலுக்கும் கவலை தரும் செய்தி.

இதைச் சரி செய்வதற்கான மந்திரச் சாவி வாடிக்கையாளரான நம் அனைவரின் கைகளிலேயே இருக்கிறது. ஒரு குடும்பத்தின் உணவுத் தேவை என்ன என்பதை சரியாக கணக்கிட்டு அதற்கு ஏற்றார் போல முதலில் தேவையான அளவு மட்டுமே தானியங்கள், காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டும். சரியான அளவோ, அல்லது தோல் நிறமோ இல்லாத  காய்கறிகளும் பழங்களும் உடலுக்கு தரும் ஊட்டமும் சரியான அளவுள்ள, பார்ப்பதற்கு நன்றாக உள்ள காய்கறிகள் தரும் ஊட்டமும் ஒன்றே என்ற புரிதல் வேண்டும்.மிஸ்பிட்ஸ் மார்கெட்ஸ்(Misfits Markets),புல் ப்ரொடியூஸ்  (Full Produce), இம்பர்பெக்ட் புட்ஸ்(Imperfect Foods) , ஹங்கிரி ஹார்வெஸ்ட்(Hungry Harvest) போன்ற அமெரிக்க நிறுவனங்கள், உணவுப் பெருநிறுவனங்கள் வைத்துள்ள வரைமுறைகளுக்கு பொருந்தாது என நிராகரிக்கும் காய்கறிகளையும் பழங்களையும் வாங்கி அவற்றை மலிவு விலையில் வாடிக்கையாளர் வீடுகளுக்கு, உணவு விடுதிகளுக்கு விற்கின்றன. இது போன்ற முயற்சிகள் இன்று மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றாலும் இவை இன்னும் பரவலாக்கப்பட வேண்டும்.




(மங்களூரில் ஒரு மார்க்கெட்டில் கொட்டப்பட்டுள்ள காய்கறிகள்)

மேலை நாடுகளில் உணவுப் பொருட்கள் மேல் அச்சிடப்படும் தேதிகள் எல்லாம் உணவுப்  பாதுகாப்பு குறித்தது அன்று, என்பது மட்டுமன்றி இவை எந்த அரசாங்க நிறுவனங்களாலும் அல்லது தனியார் நிறுவனங்களாலும் முறைப்படுத்தாத ஒன்று என்ற விழிப்புணர்வு மிகவும் தேவை. இதனால் உணவுப் பொருள் மேல் குறித்துள்ள தேதிக்குப்  பின் உணவுப் பொருள் வீணாகி விட்டது என்ற எண்ணத்தில் அந்தப் பொருளை வாடிக்கையாளர்கள் ஒதுக்கும் நிலைமையும், அதனால் விற்காத இந்தப் பொருட்கள் வீணாகக் குப்பையில் சேரும் அவல நிலையும் மாறும். பொருட்கள் மேல் அச்சிடப்படும் தேதி கடந்தவுடன்  ஒதுக்கப்படும் பொருட்களை, அவை பாதுகாப்பானவை என்னும் பட்சத்தில், விலை குறைப்பு செய்தாவது விற்பனைச் செய்ய உணவு நிறுவனங்கள் முன்வர வேண்டும். அவ்வாறு விற்பனை செய்த பின் எஞ்சியுள்ளவற்றை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கினால் அது நிறைய பேருக்கு உணவாக மாறிப் பயன் அளிக்கும். உணவு நிறுவனங்கள் தொண்டு நிறுவனங்களுக்கு இந்தப் பொருட்களை அளிப்பதற்கு ஆகும் செலவினை  குறைக்கும் விதமாக , அரசாங்கம் வரிச் சலுகை அளித்து ஊக்கப்படுத்தினால் மேலும் நிறைய உணவு நிறுவனங்கள் இந்த நோக்கத்தில் பங்கேற்க முடியும். லாபத்தை மட்டுமே குறி வைத்து இயங்கும் உணவு நிறுவனங்களை லாபம் மட்டுமன்றி, ஆரோக்கியமான மனிதர்கள் மற்றும் ஆரோக்கியமான பூமி என்று மும்முனை தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இந்தத் திட்டத்தில் இணைத்தால் அதை விட சிறப்பானதொன்று கிடையாது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை பில் எமர்சன் குட் சமாரிட்டன் புட் டொனேஷன் ஆக்ட் 1996 (Bill Emerson Good Samaritan Food Donation Act 1996) என்ற சட்ட விதிப்படி உணவு நிறுவனங்கள் நல்லெண்ண அடிப்படையில் கொடையாக வழங்கும் உணவில் எந்தக் குறை இருந்தாலும், அதைக் காரணம் காட்டி அந்த நிறுவனங்கள் மேல் வழக்குத் தொடுக்க இயலாது என்ற சட்டமும் உள்ளது. அது மட்டுமன்றி உணவு நிறுவனங்கள் மேல் அமெரிக்காவில் இது வரை ஒரு வழக்குக் கூட பதிவானதில்லை என்பதை யூனிவர்சிட்டி ஆப் அரிசோனா நடத்திய ஒரு ஆய்வு முடிவில் இருந்து நாம் அறிய முடிகிறது. எனவே இந்தத் திட்டத்தில் உணவு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பங்கேற்க சட்ட ரீதியான பாதுகாப்பு ஏற்கனவே இருக்கிறது. இதைத் தாண்டி எஞ்சும் உணவினை கால்நடைகளுக்கு தீவனமாகவோ அல்லது எருவாகவோ பயன்படுத்தலாம். மழைக் காலத்தில் தக்காளி விலை ஏறி விட்டால் மீம் போடும் இந்தத் தலைமுறை தன்  குடும்பத்திற்கு தேவையான  தேவையான காய்கறி பழங்களை தன் வீட்டுத் தோட்டத்திலும் வளர்த்தால் கூட உணவுச் சங்கிலியில் ஒரு சிறந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.



(கிட்டத்தட்ட 15 முதல் 25 சதவிகித உணவு விரயம் நம் வீட்டு சமையல் அறைகளில் ஏற்படுகிறது. நான்கு பையளவு மார்க்கெட்டில் வாங்கும் மளிகைப் பொருளில் ஒரு பையைக் குப்பைத் தொட்டியில் வீசுவதற்கு இது சமம்) 



(உணவு விரயம் எங்கெங்கு எத்தனை சதவீதம் ஏற்படுகிறது என்பதைக் காட்டும் ஒரு படம்)

உணவின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிவர். கல்வி, கலை, அறிவியல் என்று மனித குல வளர்ச்சிக்கு வித்திடும் பல்வேறு முயற்சிகளும், அடிப்படை வசதிகளில் தன்னிறைவு அடைந்த சமூகத்திடம் இருந்தே பிறக்கிறது. பல துறைகளில் மனித இனம் அடைந்துள்ள வளர்ச்சி சிறப்பானது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் ஒட்டுமொத்த மனித சமூகமும் அதே அளவு உத்வேகத்துடன் இணைந்து பணியாற்றினால் இன்னும் எத்துணை பெரிய உயரங்கள் வசப்படும் என்று எண்ணிப் பார்த்தால் உணவுச் சங்கிலி சீராக நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய பணிகள் எவையென நமக்குத் தெளிவாக விளங்கும். உணவைச் சரியாக பயன்படுத்துவதற்கான ஆயத்தங்களை நாம் ஒவ்வொருவரும் நமது வீடுகளில், அலுவலகங்களில், பள்ளிகளில் இருந்து தொடங்குவோம்.உணவை வீணாக்கக் கூடாது என்பதை நமது எதிர்கால சந்ததியினருக்கு சொல்லி வளர்ப்போம். ஆரோக்கியமான பூமியை முந்தைய தலைமுறையினர் நமக்கு பரிசளித்து சென்றுள்ளனர். இந்த அழகான பூமியில், எளிதாக தவிர்க்கக் கூடிய கழிவுகளை கொட்டி அழிக்காமல், பூமியை நமக்குக் கிடைத்த அளவிலாவது அடுத்த தலைமுறைக்கு சேர்ப்பிப்பது நமது தலையாய கடமை. இன்று பாரதியார் இருந்திருந்தால் "தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் அனைவரும் இணைந்து இந்த சகத்தினை திருத்திடுவோம்" என்று பாடி இருப்பார். உணவு விரயத்தைத் தவிர்த்து, உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம். அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துகள்.


4 கருத்துகள்:

  1. ஹூபேர்ட் ரீவ்ஸ் என்ற அறிஞர் அவரின் வரிகள் உண்மை. நிதர்சனமான உண்மை. நாம் உழவை, இயற்கையை வணங்குவதோடு மனதார மதிப்போம் என்றால் கண்டிப்பாக உணவை வீணாக்க மாட்டோம். நாம் எதுவும் மனதார செய்வதில்லை என்பதால்தான் எல்லாம் சும்மா கூட்டத்தோடு கோவிந்தா என்பது போல் செயல்படுவதால்தான்..

    நல்ல தகவல்களுடன் சிறப்பான கட்டுரை, ரம்யா. வாழ்த்துகள்.

    வீட்டுத் தோட்டம் என்பது நல்ல சிந்தனை ஆனால் இங்கு நம் ஊரில் இருப்பதற்கே இடமின்றி அலையும் மக்கள் அதிகம் அன்றாடங்காய்ச்சிகள், ஒரு பக்கம். மற்றொரு பக்கம் நிலங்கள் அத்தனையும் கட்டிடங்களாக மாறுவது..
    மக்களும் ஆள்பவர்களும் கொஞ்சம் தீவிரமாகச் சிந்தித்தால் எவ்வளவோ செய்யலாம் இருக்கும் இடத்திலும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் கீதா. எந்த காய்கறி விலை ஏறினாலும் அரசாங்கத்தை அல்லது நிர்வாகத்தை குறை சொல்லுதலை விடுத்து, நாம் எந்த விதத்தில் பிறரை ஏதிர்பார்க்காமல் நமது சுய தேவைக்கான உணவுப் பொருட்களை விளைவிக்க முடியும் என்பதை யோசிக்க வேண்டும். நம்மாழ்வார் அவர்கள் சொன்னது போல இன்றைய சூழலில் தற்சார்பு விவசாயம் மிகத் தேவை. முன்பெல்லாம் கொஞ்சம் இடம் இருந்தாலே தொட்டிகளில் தக்காளி மற்றும் வெண்டைக்காய் செடிகளை நட்டு வைத்து வளர்ப்பார்கள். வட அமெரிக்காவில் அபார்ட்மெண்ட்டில் வசிக்கும் பலரும் நிறைய தொட்டிகள் வைத்து நம்மூர் காய்கறிகளை வளர்த்து வருகிறார்கள். குளிர் காலங்களில் அந்த தொட்டிகளுக்கென பசுமைக் குடில் அமைத்து அந்த செடிகளை பாதுகாத்து வருகிறார்கள். எங்கள் ஊரிலேயே இந்த முறையை பின்பற்ற முடியும் என்றால், மனம் வைத்தால் எல்லாராலும் செய்ய முடியும். அதை விடுத்து, பூச்சி மருந்து அடித்து வளர்க்கிறார்கள் என்று தெரிந்தும், அம்மாதிரி காய்களை விலைகொடுத்து வாங்கி ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்பவர்கள் நிறைய பேர். கோடை காலத்தில் விளையும் காய்கறிகளை சேமித்து, அதை குளிர்பதன பெட்டியில் பாதுகாப்பாய் வைத்து, குளிர் காலங்களில் பயன்படுத்துவோரும் நிறைய பேர் உண்டு. எனவே மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

      நீக்கு
  2. அருமையான கட்டுரை பொதுநலமான நல்ல கருத்துகள்.
    தங்களுக்கும் தாமதமான பொங்கல் நல்வாழ்த்துகள் - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கில்லர்ஜி.

      நீக்கு