செவ்வாய், ஜனவரி 18, 2022

பொங்கலோ பொங்கல் - கவிதை

என்னுடைய இந்த வருட பொங்கல் வாழ்த்துக் கவிதை கீழே.



பார் விளங்க பாங்காய் வாழ

பயிர் விளைத்திடும் கரங்கள் ஓங்க

உழவும் தொழிலும் ஏற்றம் பெற்றிட

தைமகள் தோன்றினாள் நானிலம் போற்றிட


போகியன்று புதுமைகள் புகுத்துவோம்

மாந்தரைப் பற்றியெரிக்கும் மடமைகள் பொசுக்குவோம்

போகியை 'போக்கி' என்பதாய் அல்லாமல்

காடு செழிக்க கழனி கொழிக்க

விண் எழுதும் நீர் மடல்

மும்மாரியும் மண் சேர

பொய்க்காமல் பொழியும் வான் அமுதத்திற்கு

உவகையுடன் நன்றி செலுத்தும்

நாளாகச் செய்வோம்


பொங்கல் அன்று பட்டாடைகள் பூணுவோம்

உலகம் வாழ

சேற்றில் பிழைக்கும் உழவர்தம்

செந்தாமரைக் கழல்கள் போற்றுவோம்

உறுபசி நீக்கி உலகினை காக்கும்

அவர்தம் வாழ்வுயர வாழ்த்துவோம்

செங்கதிரோன் பொலிகவென்றே

ஆனந்தக் கூத்தாடுவோம்


உழவிற்குத் தோள் கொடுக்கும்

பிற உயிரைப் போற்றுவோம்

மாட்டுப் பொங்கல் அல்ல

யாவர்க்குமான மகிழ்ச்சிப் பொங்கலென்றே

தீந்தமிழ்ப் பள்ளு பாடுவோம்

காணும் பொங்கல் அன்று

உணர்வுக்கு உரம் சேர்க்கும்

உறவுகளை மகிழ்விப்போம்

வாழ்விற்கு அர்த்தம் சொல்லும்

வரமவர்கள் நினைவில் வைப்போம்


ஈரடியில் வாழ்வளந்த செந்நாப்போதார்

தமிழுக்கு புகழ் சேர்த்த மகோன்னதர்

குறளுக்கு குரல் கொடுத்து

நீள் புகழ் கொள்வோம்

வள்ளுவமே வாழும் வழியென

தெளிந்து வாழ்வோம்

இயற்கையும் உழவனும் உயர்ந்தால் வளர்ந்தால்

வையமும் சேமமுற வளமாய் வாழும்


தேன் கரும்பு

தித்திக்கும் வெல்லம்

தெவிட்டாத பால்

நெய் கமழும் முந்திரி

முத்தான புத்தரிசியும் சேர்த்து

பொன் மஞ்சள் கட்டி வைத்த

மண் பானையில் பொங்கலிட்டு

பொங்கலோ பொங்கல் என்று

குலவையிட்டு பாடிடுவோம்

அனைத்துயிரும் அன்பாலே

தமிழ் போல வாழ்கவென்றே

மனதார வாழ்த்துகிறேன்.

பொங்கலோ பொங்கல்!!!.



4 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நன்றி கீதா. தங்கள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. பொங்கலோ பொங்கல் கவிதை அருமை

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துளசிதரன். தங்கள் வருகைக்கு நன்றி.

      நீக்கு