வியாழன், ஜனவரி 20, 2022

ஐஸ் ஐஸ் ஐஸ்லாந்து - ஒரு இன்பச் சுற்றுலா - பாகம் 6


ஐஸ்லாந்தை தலைநகர் Reykjavik-இல் இருந்து கிளம்பி, கடிகார ஓட்டம் போல மேற்கு ஐஸ்லாந்து (Snaefellsnes தீபகற்பம்), வடக்கு ஐஸ்லாந்து(Akureyri மற்றும் Myvatn ஏரி), கிழக்கு ஐஸ்லாந்து (Egilsstadir மற்றும் Vestrahorn ) ஆகிய இடங்களை பார்த்து விட்டு, மீண்டும்  தலைநகர் Reykjavik நோக்கிய பயணத்தில் இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே இருந்தது. ரிங் ரோடு எனப்படும் Route -1 லேயே இனி பயணம் செய்வோம். ரிங் ரோட்டில் சென்றாலே பார்க்கக் கூடிய அருவிகள் மற்றும் இயற்கை அதிசயங்களை கோல்டன் சர்க்கிள் என்று அழைக்கிறார்கள். இனிமேல் பார்க்கப் போகும் இடங்கள் கோல்டன் சர்க்கிளை சார்ந்த இடங்களாகும்.  சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவியும் இடங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை நாங்கள் சென்ற இடங்களுக்கு  வந்திருந்த  கூட்டத்தை வைத்தே உணர முடிந்தது. எனினும் வட அமெரிக்காவில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்குச் சென்றால் நீங்கள் பார்க்கும் அளவு பெரிய கூட்டம் எல்லாம் இல்லை. ஐஸ்லாந்தில் நாங்கள் இது வரை பார்த்த இடங்களில் இருந்த கூட்டத்தை விட சற்று அதிகம் அவ்வளவே. பெரும்பாலும் ஐஸ்லாந்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே இருக்க முடியும் என்பவர்கள் Reykjavik மற்றும் கோல்டன் சர்க்கிள் மட்டுமே சென்று திரும்புவார்கள்.  ஆனால் கோல்டன் சர்க்கிள் மட்டுமே சென்று வராமல் ஐஸ்லாந்தின் எல்லா இடங்களையும் கண்டு களியுங்கள். பயணங்கள் இந்த இடத்தை பார்த்து விட்டோம் என்ற கணக்கிற்கானது மட்டும் அல்ல. அது ஒரு அனுபவம். எனவே முழு ஐஸ்லாந்தையும் பார்ப்பதே உங்கள் பயணத்தை மனதில் நிற்கும் ஒரு சம்பவமாக மாற்றும் என்பதே என்னுடைய கருத்தாகும்.

சரி, Jokulsarlon என்ற பனிக்கட்டிகள் நிரம்பிய ஏரியைப் பார்த்தோம் என்றேன் நினைவிருக்கிறதா, அங்கிருந்து நமது பயணத்தை தொடங்குவோம். அதன் பிறகு நாங்கள் மதிய உணவு அருந்துவதற்கு சென்றோம். மதிய உணவிற்கென Jokulsarlon அருகே இருந்த Fjallsarlon Glacier Lagoon என்ற மற்றொரு பனிசூழ் ஏரிக்கரையில் அமைந்திருந்த உணவு விடுதியில் கொஞ்சம் சூப் மற்றும் சாலட் சாப்பிட்டோம்  Vatnajokull பனிப்பாறை என்பது மிகவும் பெரியது. அதன் ஒவ்வொரு பகுதியையும், அதாவது "tongue" என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள், வெவ்வேறு இடத்தில் இருந்து பார்க்க முடியும். இந்த இடமும் Vatnajokull பனிப்பாறையை பார்க்க ஒரு அருமையான இடமாகும். 







ஐஸ்லாந்தை பொறுத்தவரை நீர் மற்றும் எரிமலைக் குழம்பு அதன் பல்வேறு பகுதிகளை எவ்வாறு செதுக்கி உள்ளதோ அதே அளவு பனிப்பாறைகளும் அந்த பூமியை செதுக்கி உள்ளது. பனிப்பாறைகளின் சக்தியை விளக்கும் வண்ணம் Skeidara பாலம் என்ற ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்கி இருக்கிறார்கள். Route-1 அல்லது ரிங் ரோடு என்று அழைக்கப்படும் சாலையில் இருந்த Skeidara  என்ற பாலம் எரிமலை வெடிப்பினால் நகர்ந்த பனிப்பாறைகள் நொறுக்கியதால் உருக்குலைந்து வெறும் வளைந்த இரும்பு தூண்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன. இதை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டு வைத்திருக்கிறார்கள். இயற்கை என்னும் சக்தி முன் மனிதன் எம்மாத்திரம் என்று நமக்கு இதை விட சிறப்பாக விளக்க இயலாது.





அடுத்தது நாங்கள் சென்றது Svartifoss என்ற அருவிக்கு. எரிமலை குழம்பு பெரிய செவ்வகம் போல உறைந்து செதுக்கப்பட்ட பாறைகளுக்கு நடுவே கொட்டும் இந்த நீர்வீழ்ச்சி அழகோ அழகு. கார் பார்க்கிங் செய்யும் இடத்தில இருந்து 1.5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருந்தது இந்த அருவி. கொஞ்சம் செங்குத்தாக மேலே ஏற வேண்டும் என்பதால் இந்த அருவியை அடைவதற்கு கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் நடக்க வேண்டும். திரும்பி வருவதற்கு 30 நிமிடங்கள் வரை ஆகும். எனவே அருவியை பார்த்து திரும்புவதற்கு 2 மணி நேரம் தேவைப்படும். கால் வலிப்பதாக கூறி என்னுடைய குடும்பத்தினர் யாரும் வராததால் நான் மட்டும் இந்த அருவி வரை நடந்து சென்று சில புகைப்படங்கள் எடுத்துத் திரும்பினேன்.போகும் போது கொஞ்சம் தண்ணீரே கொண்டு சென்றதால் தாகம் வேறு. எனினும் சிறிது தூரம் நடந்து சென்று விட்டதால் திரும்புதல் என்பது இயலாமல் போனது. தாகத்துடனே நடந்து சென்று திரும்பினேன். நீங்கள் எப்பொழுதும் உங்கள் கையில் தண்ணீர் மற்றும் ஏதேனும் சிற்றுண்டி (பருப்பு பாதம் வகை எனர்ஜி பார், பழம் ஆகியன) இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஐஸ்லாந்தில் நிறைய நடந்து செல்ல வேண்டி இருக்கும் என்பதை முன்பே சொல்லி இருந்தேன். நல்ல குளிர் தாங்கும் காலணி மற்றும் குளிர் தாங்கும் காலுறை, கையுறை, கழுத்தை மூடும் கம்பளி உடைகள், மழையில் இருந்தும் பாதுகாப்பு தரும் மேல் சட்டை அல்லது ரெயின் கோட் ஆகியன நிச்சயம் தேவை. நிறைய வலைத்தளங்களில் உடைகள் என்ன மாதிரி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய பல தகவல்கள் உள்ளன. எனவே அதையும் நீங்கள் நன்கு ஆராய்ந்து அதன் படி உடைகளை எடுத்துச் செல்வது நலம். கீழே Svartifoss-இன் அழகுத் தோற்றம்.





அருவியை பார்த்து முடித்தவுடன் அன்றிரவு தங்குவதற்காக மீண்டும் நாங்கள் Hofn திரும்பினோம். அடுத்து பார்க்க வேண்டிய இடங்கள் Svartifoss-ஐ தாண்டி இருந்தது. Hofn என்பது Svartifoss-க்கு முன்பே இருந்தது. மீண்டும் மீண்டும் Hofn க்கு செல்ல வேண்டிய தேவை இல்லாமல் வேறு இடத்தில் இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கலாம் என்று தோன்றியது. ஐஸ்லாந்து பயணத்தில் இந்த ஒரு இடத்தில்  மட்டுமே நாங்கள் தங்குவதற்கு சரியான இடத்தை தேர்வு செய்யவில்லை என்று தோன்றியது. எனினும் மீண்டும் Hofn வரை சென்ற கார் பயணத்தில, காலையில் இருந்து ரசித்த இடங்களை மீண்டும் ஒரு முறை பார்க்கவும், அசை போடவும்  செய்தோம். அன்றிரவு அறைக்கு வந்து உணவு உண்டு அது வரை பார்த்த இடங்களைப் பற்றிய ஒரு வினாடி வினா நடத்தினோம்.  அப்போதும் ஊர்ப் பெயர்கள் நினைவில் நிற்கவில்லை. குழந்தைகள் கேட்ட கேள்வி பதில் நிகழ்வில் தப்பும் தவறுமாகவே பதில் சொல்லி சமாளித்தோம். 

அடுத்த நாள் காலை எங்கள் பயண திட்டத்தில் இல்லாத fjadrargljufur canyon என்ற பள்ளத்தாக்கிற்கு சென்றோம். சில நேரங்களில் நாம் எதிர்பார்க்காத ஒரு புதிய பாதையில் சென்றால் நமக்கு ஒரு புதிய அனுபவம் கிடைக்கும். இந்த பள்ளத்தாக்கிற்கு சென்றதும் எங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை தந்தது. எனக்கு ஐஸ்லாந்தில் மிகவும் பிடித்த இடம் என்றால் அது இந்த இடம் என்று சொல்வேன். தலைநகர் ReykJavik-இல் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. Route -1 இல் பயணம் செய்து Holtsvegur என்ற இடத்தில் அமைந்துள்ள F206 என்ற ரோட்டில், 3 கிலோமீட்டர் பயணம் செய்தால் இந்த இடத்தை அடையலாம். கூட்டம் அதிகம் இருப்பதால் பார்க்கிங் கொஞ்சம் கடினம். எனினும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு இடம். பாடகர் ஜஸ்டின் பீபர் இந்த பள்ளத்தாக்கிற்கு சென்று அவருடைய பாடல் ஒன்றை இங்கே படமாக்கி இருக்கிறார். காணொளி கீழே.


(ஜஸ்டின் பீபரின் பாடலில் இடம் பெறும் இடங்கள் - Fjaðrárgljúfur பள்ளத்தாக்கு, Seljalandsfoss அருவி, Dyrhólaey, Skógafoss அருவி, Sólheimasandur கடற்கரை மற்றும் சிதைந்த விமானம், Jökulsárlón பனிப்பாறை ஏரி மற்றும் Diamond கடற்கரை ஆகியன)

பாசி படர்ந்த பள்ளத்தாக்கு அதில் ஓடும் சிற்றோடைகள், அருவிகள் என்று இந்த இடத்தை மட்டும் இயற்கை மிகவும் வனப்புடன் படைத்திருப்பதாக தோன்றியது.  fjadrargljufur பள்ளத்தாக்கில் இருந்து உங்களால் Eldhraun Lava fields எனப்படும் பாசி படர்ந்த பாறைகளை காண முடியும்.இந்த பாசி படர்ந்த எரிமலை பாறைகள் கிட்டத்தட்ட 565 கிலோமீட்டர் தூரம் பரவி உள்ளது. கீழே  fjadrargljufur பள்ளத்தாக்கின் அழகுத் தோற்றம்.







fjadrargljufur பள்ளத்தாக்கில் விழும் அருவிக்கு Mogarfoss என்று பெயர். இது மட்டும் அல்லாமல் இங்கே Fjadrarfoss என்ற அருவியும் இருக்கிறது. எனினும் இந்த அருவிக்கு செல்ல பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. இந்த இடம் சுற்றுலா பயணிகள் இடையே மிகவும் பிரசித்தி பெற்ற இடம் என்பதால், இங்கே இருக்கும் பாசி அடர்ந்த மலையையும், அழகான இயற்கையையும் பாதுகாக்கும் பொருட்டு இந்தப் பள்ளத்தாக்கு  மார்ச் முதல் மே மாதம் வரை மூடப்படுகிறது, எனினும் இதையும் மீறி இந்த இடத்தை பார்வையிட நிறைய பேர் வந்து செல்கின்றனர் என்றால் இந்த இடத்தின் சிறப்பினை நீங்கள் அறியலாம். ஐஸ்லாந்து சென்று வந்தால் கண்டிப்பாக இந்த இடத்தினை பார்த்து வாருங்கள்.இந்த பள்ளத்தாக்கின் அழகினை drone வழியாக காட்சிப் படுத்தி இருக்கிறார்கள் பாருங்கள்.


fjadrargljufur பள்ளத்தாக்கில் இருந்து கிளம்பி அருகில் இருந்த Eldhraun என்ற பாசி அடர்ந்த பனிப் பாறைகளை நாங்கள் பார்த்தோம். இந்த இடத்தில் பார்வையாளர்கள் நடந்து செல்வதெற்கென்று பாதைகள் அமைத்து இருக்கிறார்கள். அதில் நடந்து சென்று நீங்கள் அழகான இந்த இடத்தை பார்வையிட்டு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். Eldhraun Lava Fields இன் அழகுத் தோற்றம் கீழே. ஏதோ ஒரு வேற்று கிரகத்திற்கு வந்தது போல இருந்தது இந்த இடம். எரிமலைக்  கற்கள் மேல் இந்த வகை புற்கள் வளர 70 ஆண்டுகள் வரை ஆகும் என்கிறார்கள். 







அதன் பிறகு நாங்கள் சென்றது Reynisfjara எனப்படும் கறுப்பு எரிமலை மண் மற்றும் பெரிய எரிமலை பாறைகள் நிறைந்த கடற்கரைக்கு. ஐஸ்லாந்து பயண அனுபவம் பகுதி ஒன்றில் இருந்த பாடல் காணொளியில் வரும் கடற்கரை இது. மிகவும் புகழ்பெற்ற இந்த கடற்கரை ஆபத்தான அலைகளும் நிறைந்தது. Freak wave எனப்படும் திடீர் அலைகள் இங்கே அதிகம். கிரீன்லாந்து முதல் ஐஸ்லாந்து வரை அலைகளின் வேகத்தை மட்டுப்படுத்தக் கூடிய நில அமைப்பு எதுவும் இல்லாததால் இங்கு வரும் அலைகள் மிகவும் வேகமாக வருபவை. அது மட்டும் அல்லாமல் இங்கு இருக்கும் நீரும் மிகவும் குளிர்ச்சித் தன்மை உடையது.சிலீரிடும் தண்ணீரில் சில நிமிடங்கள் கூட உயிர் பிழைத்திருக்க முடியாது என்பதால் இந்த கடற்கரையை பொருத்த வரை நீங்கள் தண்ணீருக்கு அருகில் செல்லாமல் கரைகளில் இருக்கும் basalt பாறைகளில் இருந்தே இந்த இடத்தை ரசியுங்கள். அந்த கடற்கரைகளில் இருந்த இந்த எரிமலைப் பாறைகள் இயற்கை என்னும் சிற்பி தானே செதுக்கியது போல அவ்வளவு நேர்த்தி. அடுக்கடுக்காக அமைந்த அந்த பாறைகள் பல வடிவங்களிலும் அமைந்து இருந்தது கண்கொள்ளாக் காட்சி. உங்கள் பார்வைக்கு காணொளி மற்றும் புகைப்படங்கள்.











Reynisfjara கடற்கரையில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் Vik என்ற இடத்திற்கு முன்பே Dyrholaey என்ற இடத்தில் கலங்கரை விளக்கம் ஒன்று இருக்கிறது. இந்த இடத்தில் இருந்து Reynisfjara கடற்கரையின் மற்றொரு தோற்றத்தைக் காண முடியும். அது மட்டும் அல்லாமல் கடலின் நடுவே கம்பீரமாக நிற்கும் இந்தப் பாறை Eagle Rock என்று அங்கு தங்கி குஞ்சு பொரிக்கும் பறவைகளின் பெயரால் அழைக்கப்படுகிறது. (படம் கீழே)


Dyrholaey இன் மற்றொரு சிறப்பு அங்கிருந்து தெரியும் எரிமலைக் குழம்பினால் உண்டான கடலிலுக்குள் காணப்படும் ஒரு பாறை வளைவு. கீழே உள்ள புகைப்படத்தில் நீர் மட்டத்திற்கு மேலே தெரியும் ஒரு அரை வட்ட வளைவினை நீங்கள் பார்த்தீர்கள் என்றால்அதுவே எரிமலை குழம்பினால் உண்டான இயற்கையாக  அமைந்த வளைவு ஆகும்.




Mýrdalsjökull glacier என்ற பனிப் பாறையையும் இங்கேயிருந்து உங்களால் பனிமூட்டம் இல்லாத நேரங்களில் காண முடியும். 

இதன் பிறகு நாங்கள் சென்றது Skogafoss என்று மிகவும் புகழ் வாய்ந்த அருவிக்கு. Route -1 இல் ரிங் ரோடில் இருந்தே இந்த அருவிக்கு செல்ல முடியும் 60 மீட்டர் உயரம் 25 மீட்டர் அகலம் என்று பிரமாண்டம் காட்டும் இந்த அருவியை மேலிருந்தும் பார்க்கலாம். 527 படிகளில் ஏறி இறங்க வேண்டி இருக்கும். நாங்கள் கீழே இருந்தே இந்த அருவியை பார்த்தோம். அத்தனை படிகளில் ஆர்வமாக நிறைய பேர் ஏறி இறங்கி அருவியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். உங்களுக்கு நேரம் இருந்தால் கண்டிப்பாக அருவியை பார்க்க மேலே ஏறிச் செல்ல தயங்காதீர்கள்.

இந்த அருவியும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று.






என்ன அருமையான ஒரு அருவி என்பதை எண்ணிக் கொண்டே அன்று இரவு உண்பதற்கு Reynisfjara கடற்கரை இருந்த பகுதியில் இருந்த ஒரு உணவகத்திற்கு சென்றோம். நிறைய சுற்றுலா பயணிகள் வரும் இடம் என்பதால் ஒரு மணி நேர காத்திருப்பிற்கு பின்பே எங்களுக்கு அங்கே இடம் கிடைத்தது. அதன் பிறகு உணவினை உண்டு விட்டு அறைக்கு திரும்பினோம். அதிக அளவு கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்லும் போது முடிந்த வரை கையில் உணவுப் பொருட்களை கொண்டு சென்று நாமே சமைத்துக் கொள்வது நலம். எனினும் தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியே உண்ண நேர்ந்தால் காத்திருக்க வேண்டி இருக்கும் என்பதால் கொஞ்சம் சிற்றுண்டி கையில் வைத்திருப்பது நலம்.

அடுத்த நாள் காலையில் மீண்டும் Skogafoss-ஐ பார்த்தோம். பகல் நேரம் என்பதால் நல்ல பல புகைப்படங்கள் எடுத்தோம். மேலே காலை நேரத்தில் எடுத்த அந்த புகைப்படங்களைப் பார்க்கலாம். அடுத்ததாக Seljalandsfoss எனப்படும் அருவியைப் பார்த்தோம். இந்த அருவியின் சிறப்பு என்னவென்றால் curtain falls என்பது போல அருவியின் பின்னால் சென்று பார்க்க முடியும். ஒரு நீர்த் திரை போன்று நம் முன்னால் நீர் விழும் அழகினையும், குளிர்ந்த நீர், ஆவி போன்று கிளம்பும் அழகினையும், நீர்த் திவலைகள் நம் மேல் விழும் போது உண்டாகும் சிலிர்ப்பையும் வார்த்தைகளால் கூற இயலாது. இதை அனுபவித்தே அறிய முடியும். Seljalandsfoss-இன் புகைப்படங்கள் கீழே:




  

இந்த அருவி இருப்பது தனியார் வசம் என்பதால் இங்கே கார் பார்க் செய்ய கட்டணம் வசூலிக்கிறார்கள். 

அடுத்தது route -1 னில் நாங்கள் பார்த்தது uridafoss எனப்படும் ஒரு அருவி.Pjorsa  எனப்படும் நதியின் மேல் அமைந்திருக்கும் இந்த அருவி பார்ப்பதற்கு அழகாவே இருந்தாலும் மற்ற அருவிகள் போன்ற பிரமாண்டம் என்று சொல்வதற்கில்லை. Pjorsa என்பது ஐஸ்லாந்தின் மிகவும் நீண்ட நதி. இந்த நதியின் மேல் அமைந்துள்ளது இந்த அருவி என்பதால் ஒரு நொடிக்கு 360 கியூபிக் மீட்டர் என்ற அளவில் அதிக அளவு தண்ணீர் விழும் ஒரு அருவியாக இருக்கிறது. 




Route-1 இல்  செல்லும் வழியில் Kerid என்ற பெயருடைய எரிமலை ஏரி ஒன்றைப் பார்த்தோம். எரிமலை வெடிப்பினால் உண்டான பள்ளத்தில் மழை நீர் சேர்ந்து உருவாகிய இந்த ஏரியைச் சுற்றி சிவப்பு நிற பாறைகள் காணப் படுகின்றன. இந்த எரிமலை வெடிப்பு கிட்ட தட்ட 3000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்திருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இந்த எரிமலை வெடிப்பு 55 மீட்டர் ஆழம், 170 மீட்டர் அகலம் மற்றும் 270 மீட்டர் விட்டமும் உடையது. இதன் அடியில் இருக்கும்  ஏரியைக் காண்பதற்கு பாதை இருக்கிறது. செங்குத்தாக இறங்கும் இந்தப் பாதையில் சென்று இறங்கினால் நீல வண்ண நீரமைந்த ஏரியைக் காணலாம். ஏரியில் உள்ள தண்ணீர் கிட்டத்தட்ட 7 முதல் 14 மீட்டர் வரை ஆழம் இருக்கும். ஏரிக் கரையில் அமர்ந்து அழகான அந்த இடத்தை ரசித்தோம்.





அதன் பிறகு Gulfoss என்ற பெயருடைய அருவியைக் காணச் சென்றோம். இந்த அருவிக்கு Golden falls என்ற பெயரும் உண்டு. தலைநகர் ReykJavik -இல் இருந்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேர பயணத்தில் அமைந்துள்ள இந்த  அருவி Hvitar என்ற நதியில் அமைந்துள்ளது. Langjokull என்ற பெயருடைய பனிப்பாறையில் இருந்து உருகி வழியும் நீர் Hvitar நதியாக உருவெடுத்து, பின்னர் நீண்ட தூரம் ஓடி, 11 மீட்டர் உயரத்தில் இருந்து ஒரு அருவியாகவும், 21 மீட்டர் உயரத்தில் இருந்து இன்னொரு அருவியாகவும் Gullfossgjúfur பள்ளத்தாக்கில் விழுகிறது. இந்த அருவியை தனியார் வசம் செல்லவிடாமல் தடுத்த Sigridur என்ற பெண்ணைப் போற்றும் வகையில் இங்கே அவருடைய பெயரைத் தாங்கும் ஒரு நினைவுக் கல்வெட்டை நிறுவி இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் அந்த பெண்ணிற்கு உதவி புரிந்த வழக்கறிஞர் Sigríður Sveinn Björnsson என்பவரும் ஐஸ்லாந்தின் முதல் ஜனாதிபதியாக 1944 ஆம் வருடம் பதவி ஏற்றார் என்பதும் கூடுதல் சிறப்பு.  



Gulfoss இல் நிறைய கூட்டம் கண்டிப்பாக இருக்கும். எனவே இந்த அருவியைப் பார்க்க கொஞ்சம் நேரம் எடுக்கும். 



அடுத்தது நாங்கள் சென்றது Geysir எனப்படும் வெந்நீர் ஊற்றை காண. அமெரிக்காவில் Yellowstone தேசியப் பூங்காவில் உள்ள வெந்நீர் ஊற்று ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை நீரை சில அடிகள் பீச்சி அடிக்கும். ஆனால் சில நிமிடங்களுக்கு ஒரு முறை தண்ணீரை பீச்சி அடிக்கும் இந்த வெந்நீர் ஊற்று மிகவும் அருமை.


  


சின்ன சின்ன வெந்நீர் ஊற்றுகளில் கொதிக்கும் நீரும், அதில் இருந்து வெளிவரும் புகை என்று எந்த இடமே தேவலோகம் போல புகை மூட்டத்துடன் காட்சி அளித்தது. Geysir ஐ பார்த்த பிறகுReykjavik நோக்கி புறப்பட்டோம்.

கிட்ட தட்ட இரண்டு மணி நேர கார் பயணத்தில் இருந்தது Reykjavik. Pingvellir தேசியப் பூங்கா வழியாக நாங்கள் மீண்டும் Reykjavik ஐ வந்து சேர்ந்தோம். கீழே இந்த தேசியப் பூங்காவில் எடுத்த சில புகைப்படங்கள்.






அன்றிரவு நாங்கள் Reykjavik-இல் தங்குவதற்கு ஒரு அறையை பதிவு  செய்திருந்தோம். நகருக்குள் இருந்த இடம் என்பதால் பார்க்கிங் வசதி இல்லை எனவே கொஞ்சம் தூரம் தள்ளி ஒரு இடத்தில் பார்க் செய்துவிட்டு அறைக்கு வந்து இளைப்பாறினோம். இது போல அல்லாமல் விமான நிலையத்திற்கு அருகில், பார்க்கிங் உடன் கூடிய தங்குமிடத்தை நீங்கள் தேர்வு செய்யுங்கள்.

அடுத்த நாள் நாங்கள் அமெரிக்கா திரும்ப வேண்டிய நாள். வெகு சீக்கிரமாக எங்கள் அறையில் இருந்து கிளம்பி, வாடகைக் காரைத் திரும்பவும் எடுத்த இடத்திலேயே விட்டு விட்டு அங்கிருந்து சிறிது தூரத்தில் இருந்த விமான நிலையத்திற்கு பெட்டிகளை தள்ளியவாறு நடந்து சென்றோம். வாடகை கார் நிறுத்துமிடத்தில் இருந்து பஸ் வசதி உண்டு. எனினும் பஸ் குறித்த நேரத்தில் வரவில்லை என்பதால் நாங்களே நடந்து சென்று விட்டோம். பெட்டிகளை கட்டும் போது அதிகமான அளவு சுமை ஏற்றாமல், சரியான அளவில் பேக் செய்தால் இந்த மாதிரி எந்த சூழ்நிலை வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம். பல பயணங்களின் வழியே கற்ற பாடம் இது என்பதாலும் ,உங்களுக்கும் உதவியாக இருக்கும் என்றெண்ணி இதைக் குறிப்பிடுகிறேன். விமான நிலையத்தின் உள்ளே நிரம்ப கூட்டம். கோடை காலம் என்பது அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நேரம் என்பதால் முன் கூட்டியே விமான நிலையத்திற்கு சென்று விடுவது நல்லது. பிறகு ஒரு வழியாக விமானத்தை பிடித்து வாஷிங்டன், DC வந்து சேர்ந்தோம். அன்று மாலையே அங்கிருந்து கிளம்பி, எங்கள் ஊருக்கு பத்திரமாக வந்து சேர்ந்தோம்.

பயணம் சிறப்பு.அதை விட செல்லும் இடமும் சிறப்பாக இருந்தால் அது பயணத்திற்கு மேலும் அழகு சேர்க்கும். ஐஸ்லாந்து பயணம் அப்படியானதே. பயணம் ஒரு புதிர். அது செல்பவர்க்கும் மகிழ்வைத் தரும். கேட்பவருக்கும் மகிழ்வினைத் அளிக்கும். பயணம், பயணிப்பவர்களுக்கு நிறைய உத்வேகமும், உலகினை புதிய கண்களுடன் பார்க்கக் கூடிய பார்வையையும் அளிக்கும்.  பயணியுங்கள், வாழ்க்கை சுவையாகும். வாழ்க்கைப் பயணம் எளிதாகும்.

ஐஸ்லாந்து பயண அனுபவம் இத்துடன் முடிவடைகிறது.






9 கருத்துகள்:

  1. ஆஹா முடிந்துவிட்டதா...செம ஃபோட்டோஸ். உங்கல் கேமரா செமையா இருக்கு. நீங்கள் எடுக்கும் விதமும் ரொம்ப நன்றாக இருக்கிறது.

    பயணங்கள் இந்த இடத்தை பார்த்து விட்டோம் என்ற கணக்கிற்கானது மட்டும் அல்ல. அது ஒரு அனுபவம். எனவே முழு ஐஸ்லாந்தையும் பார்ப்பதே உங்கள் பயணத்தை மனதில் நிற்கும் ஒரு சம்பவமாக மாற்றும் என்பதே என்னுடைய கருத்தாகும்.//

    ஹைஃபைவ்!

    நான் மகனிடம் முன்பே சொல்லியிருந்தேன் யாரும் அதிகம் செல்லாத இடங்களுக்கு என்னை அழைத்துக் கொண்டு போ என்று. இப்போது உங்கள் பயணக் குறிப்பையும் படங்களையும் பார்த்ததும் கண்டிப்பாக என்னை ஐஸ்லேன்ட் கூட்டிக் கொண்டே போகணும்னு சொல்லிவிட்டேன். பார்ப்போம் நடக்கிறதா என்று.

    அந்த பள்ளத்தாகு செம. ட்ரோனில் என்ன அழகு. பாட்டும் கேட்டேன் பயமில்லாமல் அந்த க்ளிஃப் நுனி வரை நடந்து செல்கிறார்.

    கடற்கரை அந்த ஈகிள் பாறை வாவ்! படம் பார்த்ததும் கேட்க்க நினைத்தேன் அப்புறம் வாசித்து வந்தப்ப நீங்களே சொல்லியிருக்கீங்க.

    கண்டிப்பாக உங்கள் பயணக் குறிப்பு விவரங்கள் ரொம்பவே யூஸ்ஃபுல். யாருமே வரமாட்டாங்க போல என்று நினைத்தே ந் ஆனால் கொஞ்சமேனும் மக்களைப் பார்க்க முடிந்தது. ஸோ அங்கும் வராங்க...

    ரொம்ப நன்றி ரம்யா அத்தனை விவரங்களையும் எழுதியமைக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா அருமையாக இருக்கும். கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம். எனவே வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள். நீங்களும் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உள்ளவர். எனவே உங்களுக்கு இந்த இடம் கண்டிப்பாக இனிக்கும். ஐஸ்லாந்து குளிர் காலத்திலும் பார்க்க வேண்டிய ஒன்று. வட துருவ ஒளியை(Aurora Borealis/Northern Lights) பார்க்க வேண்டும் என்றால் ஐஸ்லாந்து அதைப் பார்ப்பதற்குச் சிறப்பான இடம் . என்ன, அங்கு சென்ற போது வெயில் காலமே குளிராக இருந்தது. பனிக்காலம் எப்படி இருக்குமோ என்று கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. மற்றபடி 15 நாட்கள் இருந்தால், நாங்கள் பார்க்காமல் விட்ட ஒன்றிரண்டு இடங்களையும்(Studlagil Canyon, solheimasandur உடைந்த விமானம்ஆகியன) சேர்த்தே பார்த்து விடலாம். போட்டோ பெரும்பாலும் செல்போனில் எடுத்ததே. இடத்தின் அழகினால் செல்பேசி புகைப்படமும் அழகாகத் தெரிகிறது போலும். நான் சொன்னதை வைத்து நிறைய பேர் வராத இடம் ஐஸ்லாந்து என்று எண்ண வேண்டாம். ஜஸ்டின் பீபர் fjaðrárgljúfur பள்ளத்தாக்கு வந்து சென்ற அந்த வருடம் மட்டும் அந்த பள்ளத்தாக்கிற்கு 300,000 பேர் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். ஐஸ்லாந்து தலைநகர் Reykjavik மற்றும் கோல்டன் சர்க்கிள் இரண்டிலும் மற்ற சுற்றுலா தளங்களைப் போல கூட்டம் அதிகமே. கிழக்கு மற்றும் மேற்கு ஐஸ்லாந்தில் கூட்டம் குறைவு. வடக்கு ஐஸ்லாந்தில் குறிப்பாக, Myvatn ஏரி மற்றும் Akureyri ஆகியன கொஞ்சம் கூட்டம் உள்ள இடங்கள். உங்கள் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி கீதா.

      நீக்கு
  2. பெயர்கள் தான் ஒன்றுமே வாயில் நுழையவில்லை மனதிலும் நிக்க மாட்டேங்குது ஆனால் படங்கள் காணொளிகள் மனதில் அப்படியே நிற்கின்றன..வென்நீர் ஊற்று தேசிய பூங்கா வாவ்!

    ஆமாம் நாங்களும் பயணத்தின் போது லை வெயிட் தான் ஏனென்றால் அப்போதுதான் எந்த சூழலையும் சமாளிக்க முடியும்.

    குழந்தைகளுக்குப் பெயர்கள் நன்றாக பதிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    சூப்பர் பயணமாக இருந்திருக்கும். நல்ல தேர்வு. மறக்கமுடியாத பொக்கிஷம் உங்களுக்கு

    மிக்க நன்றி மா

    கீதா

    பதிலளிநீக்கு
  3. ரம்யா இனி எழுதும் போது சின்ன சின்ன பத்திகளாகக் கொடுங்க. ஓகேவா. வாசிக்க ஈசியா இருக்கும்னுதான். அப்புறம் ஜஸ்டிஃபை செலக்ட் பண்ணிடுங்க. வரிகள் எல்லாம் ஒரே போன்று இருக்குமே.

    படங்களையும் ப்ளாகர்ல போட்டு பெரிசு பண்ண ஒரு ஆப்ஷன் இருக்குமே அதை சூஸ் பண்ணிடுங்க. ஏன்னா படங்கள் அட்டகாசமாக இருக்கு. இத பெரிசு பண்ணிப் போட்டா செமையா இருக்குமேன்னுதான்..

    நன்றி ரம்யா ஐஸ்லேண்டுக்கு கூட்டிப் போய் ஒண்ணு விடாம சுற்றிக் காட்டியதற்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா உங்கள் கருத்திற்கு. முதல் பாகம் முதல் ஆறாவது பாகம் வரை வரிகளை ஜஸ்டிபை செய்து படங்களையும் பெரியதாய் ஆக்கி விட்டேன். இப்பொழுது இந்தப் படங்களை உங்களால் இன்னும் ரசிக்க முடியும் என்று எண்ணுகிறேன். போன வருடத்தில் ஆரம்பித்த இந்தப் பகுதி ,எழுதி முடிக்க வேண்டும் என்று அதில் கொஞ்சம் கவனம் செலுத்தினேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

      நீக்கு
  4. இதை அனுபவித்தே அறிய முடியும். Seljalandsfoss-இன் புகைப்படங்கள் கீழே://

    இந்த வரிக்குக் கீழே உள்ள அந்தப் படம் எடுத்த விதம் செம...சூப்பரா இருக்கு...நல்ல ரசனை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட ஆமாம். நிறைய புகைப்படங்கள் இருந்தன. ஆனால் இந்தப் படம் நன்றாக பொருந்துகிறது இங்கே. சிறப்பான ரசனை தங்களுக்கு கீதா. கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  5. எரிமலை குழம்பு பெரிய செவ்வகம் போல உறைந்து செதுக்கப்பட்ட பாறைகளுக்கு நடுவே கொட்டும் இந்த நீர்வீழ்ச்சி அழகோ அழகு. கார் பார்க்கிங் செய்யும் இடத்தில இருந்து 1.5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருந்தது இந்த அருவி. கொஞ்சம் செங்குத்தாக மேலே ஏற வேண்டும் என்பதால் இந்த அருவியை அடைவதற்கு கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் நடக்க வேண்டும். திரும்பி வருவதற்கு 30 நிமிடங்கள் வரை ஆகும். எனவே அருவியை பார்த்து திரும்புவதற்கு 2 மணி நேரம் தேவைப்படும். கால் வலிப்பதாக கூறி என்னுடைய குடும்பத்தினர் யாரும் வராததால் நான் மட்டும் இந்த அருவி வரை நடந்து சென்று சில புகைப்படங்கள் எடுத்துத் திரும்பினேன்.போகும் போது கொஞ்சம் தண்ணீரே கொண்டு சென்றதால் தாகம் வேறு. எனினும் சிறிது தூரம் நடந்து சென்று விட்டதால் திரும்புதல் என்பது இயலாமல் போனது. தாகத்துடனே நடந்து சென்று திரும்பினேன்.//

    சூப்பர் ரம்யா! இல்லைனா இதைப் பார்க்கக் கிடைத்திருக்காது எங்களுக்கு.

    தனியாகச் செல்ல முடிந்ததே. அதற்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டுமே. குடோஸ்! தைரியமாகச் சென்றதற்கு. எனக்கும் இப்படியானவை பிடித்த விஷயம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா Svartifoss மட்டும் அல்ல, Leirhnjukur, Ytri Tunga கடற்கரை, Uridafoss போன்ற சில பல இடங்களுக்கு தனியே நான் மட்டும் சென்று புகைப்படம் எடுத்தேன். குளிராக இருக்கிறது, கால் வலிக்கிறது, அசதியாக இருக்கிறது என்பது போன்ற காரணங்களால் யாரும் வர இயலாத சூழல் இருக்கும் போது வேறு வழி இல்லை. ஐஸ்லாந்து மிகவும் பாதுகாப்பான நாடு என்பதால் நீங்கள் தனியாகவே எங்கும் சென்று வரலாம்.

      நீக்கு