வியாழன், மார்ச் 28, 2024

என்னைத் தொலைத்தேன் - கவிதை



 

உறவின் பெயரால் அடிமை செய்தலை விட

தோழமையின் எல்லைக் கோட்டில் நிற்றலே என் காதல் 


மழையாய் உன்னைத் தழுவுவதை விட 

காற்றாய் நெஞ்சில் நிறைவது தான் என் அன்பு  


உன்னைக் கூட்டில் இருத்தி சிறைச் செய்தலை விட 

உந்தன் சிறகாய் மாறி உயரச் செலுத்துவதே என் பிரியம் 


உன் கண்ணீர்த் துளிகளைத் துடைக்கும் விரல்களை விட 

உன் வெற்றிப் பாடலை தினம் உதிர்க்கும் 

வார்த்தைகளிலேயே என் நேசம்  


என்னில் ஒரு பாதி இல்லை நீ 

பூஜியத்தின் முன்னின்று 

மதிப்புச் சேர்க்கும் மந்திரம் நீ 


சோகச் சிரிப்பொன்றை உதிர்த்தாய்

உனக்கும் காதல் பிறந்திருந்தால் 

என்னைத் தொலைத்து நம்மைக் கண்டிருப்பாய் 

அடிமையாய் வாழ்வதும் 

மழையாய் வீழ்வதும் 

கூட்டில் அடைவதும் 

கண்ணீரில் கரைவதும் 

பூஜியத்தில் முழுமை காண்பதும்

நாமிருவர் சார்ந்த முடிவு 

தனித்தே முடிவெடுத்தல் காதலில்லை 

என் பிரியத்தின் அடர்த்தி 

உனக்குள்ளும் தோன்றும் வரை 

எதிர்காலத்தின் கரையில் காத்திருப்பேன்


கண்ணில் பெருகிய கண்ணீர் 

மெல்ல என்னைக் கரைத்துக் கொண்டிருக்கிறது

வெள்ளி, மார்ச் 01, 2024

காலக் கண்ணி - கவிதை

Time


குறிப்பு: காலம் என்னும் நீண்டச் சங்கிலியில் நாம் ஒரு சிறிய கண்ணி என்ற எண்ணத்தில் எழுந்த கவிதை 


யாருமற்ற இருள் பொழுதில்
மெல்ல நடை பயில்கிறேன் 
மனதின் ஏக்கங்கள் 
தார்ச் சாலையைப் போல் நீள்கின்றன

எங்கும் புகும் காற்றைப் போல 
மனத்தின் சலனங்களை 
வானத்தின் மேல் வாரி இறைக்கிறேன்
உதிர்ந்த நட்சத்திரங்களைப் பொருக்கி
ஒவ்வொன்றாக ஞாபக ஓடையில் எறிகிறேன்
ஒவ்வொன்றும் ஏதோ ஒரு
கசப்பான அனுபவத்தை நினைவூட்டி
மனக்குளத்தில் அதிர்வலைகளை 
எழுப்பிச் செல்கிறது

அடர்ந்த கானகங்களை கடந்து விரைகிறேன் 
அதன் ஓசைகளும் அசைவுகளும்
மிரட்சித் தருவதாக இருந்தாலும்
அதன் கனவுகள் என்னுடன் ஒத்திருப்பதால் 
அவற்றுள் ஒன்றாகவே உணர்கிறேன் 
கூகைகளும் ஆந்தைகளும் கூவும்
ஓசைக் கேட்டும் மனம் கலங்கவில்லை 
மாறாக இருளில் மறையும் நிழலாய்
ஓசைக் காட்டில் சுயம் மீட்கின்றேன் 

வெளிச்சக் கதிர்களின் கிரணக் கைகள் 
மெல்ல என்னைத் தொடுகிறது
இருநாக்கு கொண்ட நாகமாய்
சுயம் களைந்து 
நகர முகம் அணிகிறேன்

போலியாய் சிரிக்கும் ஓநாய்களும்
மானுட உருவம் கொண்ட நரிகளும் 
உலவும் நகரக் காடு பரந்து கிடக்கிறது
இங்கே கனவுகளும் 
லட்சியங்களும் நுழைய அனுமதியில்லை 
சுதந்திரக் காற்றுக்கு சற்றுமிடமில்லை 
மனவிருப்பங்கள் தடைக்கு உட்பட்டவை 
இறக்கும் நாள்வரை வரிகட்டி
அரசாங்கம் முதல் இல்லாளன் வரை
எவருக்கும் தலையாட்டி வாழும் 
அடிமாட்டு வாழ்க்கை
வீதிதோறும் அதிகம் கிடைக்கிறது
கனவுகளை சேமிக்க
சுயத்தை பாதுகாக்க 
காதலிலும் சுதந்திரத்தை காக்க
எஞ்சிய நாட்களை சுயமரியாதையுடன் கழிக்க
வீதிகள் ஏதுமில்லை 
விதிகள் செய்யப்படவில்லை

மயானத்தை கடக்கிறேன்
காலடியில் சருகுகளாய் 
மிதிபடும் கனவுகள் கண்டு 
கண்ணீர்த் துளிர்த்தது
கனக்கும் துயரை 
நெஞ்சின் ஆழம்வரை 
செல்லும் காற்று 
வனமெங்கும் கொண்டு சேர்க்கிறது 
காலத்தால் அரியணை 
ஏற்றவியலாத் துயரை 
யாரும் கேட்டிராத ராகத்தில் 
காட்டு மூங்கில் மெலிதாய் 
இசைத்துக் கொண்டது 
என் சாயல் கொண்ட 
யுவதி ஒருத்தி
என் கனவுகளை 
வளையங்களாக்கி  
அணிந்து கொண்டாள் 

காலம் முட்கரங்களை 
முன்னகர்த்தி சலனமின்றிக்  
கடக்கிறது 
காலத்தின் தீராப் பக்கங்களில் 
கனவுக் கடத்தியாய் 
என் பணி நிறைவுற்று 
நகரத்தில் ஓர் அங்கமானேன்