மைக்கேல் மதன காமராஜன் மாதிரியான ஒரு முழு நீள காமெடிப் படம், காதல் கோட்டை மாதிரியான ஒரு எளிமையான காதல் கதை கொண்ட திரைப்படங்கள் இப்பொழுது எல்லாம் எடுக்கப்படக்கூடிய சாத்தியம் இல்லாதவை. அப்படியே எடுத்தாலும் இன்றைய சூழலில் அம்மாதிரியான கதைகள் நம்பும்படியாக இருக்காது. ரத்தம் தெறிக்கும் வெட்டு, குத்து, அடிதடி, மோசமான காட்சிகள் என்று தமிழ் சினிமா இப்போது இருக்கும் இடம் சரிதானா என்று சரிபார்த்துக்கொள்ள மட்டுமே மைக்கேல் மதன காமராஜன், காதல் கோட்டை போன்ற திரைப்படங்கள் தேவைப்படுகிறது. புது வரவான விஷ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தையும் அந்த பட்டியலில் இனி தமிழ் சினிமா சேர்த்துக் கொள்ளலாம்.
ஒலிம்பிக் மெடல் வென்ற, தொழிலதிபர் சஞ்சய்யாக சூர்யா. இராதிகாவின் அன்பு மகனாக, மகன் அபயின் தகப்பனாக, எல்லாரையும் மதிப்பவராக, தேவைப்படுபவர்களுக்கு உதவுபவராக, மொத்தத்தில் பெண்களின் ஆதர்ச கனவுக் கதாநாயகன் பாத்திரம் அவருக்கு. தனது மனதிற்கு பிடிச்சிருந்தாலும், சுயநலமாகச் சிந்திக்காமல், தன் அறிவை ஜெயிக்கவிட்டு நம் எல்லோரின் மனசுக்குள் வந்து கம்பீரமாக சிம்மாசனம் போட்டு இடம் பிடித்துக்கொள்ள வந்த வாய்ப்பை விடுவாரா என்ன? ஸ்டைலிஷ்ஷான அதே நேரம் வயதுக்கு ஏற்ற நடிப்பைக் கொடுத்து அந்த வேலையை கனகச்சிதமாக செய்துள்ளார். "ரொம்ப ஒட்டாதே அப்பறம் கஷ்டமா இருக்கும்" என்று சூர்யா சொல்லும் போதெல்லாம் நமக்கு கஜினியில் சூர்யா ஏற்று நடித்த சஞ்சய் ராமசாமியும் கண் முன்னே வந்து போகிறார். அதே சஞ்சயை மறுபடி பார்க்க இவ்வளவு நாள் காத்திருக்க வேண்டியதாக இருந்திருக்கிறதே என்றும் தோன்றியது.
மமிதாவுக்கென்றே வெட்டி அளவெடுத்து செய்தார் போல ஒரு குறும்புப் பெண் கதாபாத்திரம். தன்னுடைய தேர்ந்த நடிப்பால் அந்த பாத்திரத்திற்கு உயிரூட்டி இருக்கிறார். மேடி என்ற பெயருடைய அந்த பாத்திரத்தில் தனது குறும்புத்தனமான நடிப்பால், சில நேரங்களில் அலைபாயுதே மாதவனையும் நினைவுபடுத்துகிறார் மமிதா . இராதிகா, சூர்யாவின் அம்மாவாக கலக்கி இருக்கிறார். மகனுக்கு திருமணம் ஆகவில்லை என்று வருந்துவதாகட்டும், பேரன் வாடகைத் தாய் மூலம் பெற்றது என்றாலும் அதை மனமுவந்து ஏற்றுக் கொள்வதாகட்டும், தனக்கு துரோகம் செய்தவர்களிடமும் அன்பு பாராட்டுவதாகட்டும் - சற்றே மிகை தான் என்றாலும் நம்பும்படி செய்திருக்கிறார். வெங்கி அட்லூரி, சஞ்சய் விஷ்வநாத்தின் உலகத்தை மிகவும் பிரம்மாண்டமாகப் பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் படத்திற்கென செலவு செய்த தொகை கண்முன்னே காட்சியாக விரியும் போது நன்கு புலப்படுகிறது. காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு அத்தனை குளிர்ச்சியாக இருக்கிறது. கிட்டத்தட்ட வயது வித்தியாசம் சார்ந்த காதல் கதையான பெத்லஹாம் ஃபாமிலி யூனிட்டும் வெளி வந்து சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. மமிதா இரண்டு படத்திலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார் என்பது ஆச்சரிய ஒற்றுமை. தொழிலதிபரான சஞ்சய்யை காதலிக்கும் கல்லூரி மாணவி மமிதா அவருடன் இணைந்தாரா என்பதே கதை. பட்டாம்பூச்சி பாடல், அஞ்சானுக்குப் பிறகு சூர்யாவே பாடி இருக்கும் வெட்டிங் சாங் மற்றும் ஆங்காங்கே வரும் பின்னணிப் பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. "மனுஷங்க பிரியறது சண்டை போடறதால இல்லைங்க. சண்டைக்கு அப்பறம் எப்படி பேசறதுன்னு தெரியாததால தான்", "காசு உனக்கு வாங்கக் கத்துக் கொடுக்குது, கஷ்டம் உனக்கு வாழ கத்துக் கொடுக்குது", "கோபமும் வெறுப்பும் கொஞ்ச நாளைக்கு தான் அப்பறம் அதுவும் சோர்ந்து போயிடும்", "தப்பு மொத்தமும் உன் மேலே இருந்திருந்தாலும் நான் உன் பக்கம் தான் நின்னுருப்பேன்" போன்ற டயலாக்குகளில் மின்னல் தெறிக்கிறது. வசனகர்த்தாவுக்கு பாராட்டுக்கள்.
எந்த இடத்திலும் தொய்வு வராமல், வன்முறை மற்றும் ஆபாசம் தவிர்த்து ஒரு திரைப்படத்தை தர முடியும் என்பதற்கு இந்தப் படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு . ஒரு காலத்தில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என்று போட்டி போட்டுக் கொண்டு ஃபீல் குட் படங்கள் கொடுத்தார்கள். அந்த பசுமையான நாட்களை நினைவு படுத்த அவ்வப்போது இப்படியான படங்கள் வருகிறது, கடுங்கோடையில் குளிர் மழை போல.




























