வியாழன், ஆகஸ்ட் 27, 2026

ஒரு சிட்டுக்குருவியின் கதை



குறிப்பு: ஓவியம் முன்பு நான் வரைந்தது. இந்த சம்பவத்திற்கு பொருத்தமாக இருந்ததால் இதையே முகப்புப் படமாக்கி விட்டேன்.

பக்கத்து வீட்டு மரத்தில் சிட்டுக்குருவி ஒன்று கூடு கட்டியிருந்தது. பெரும்பாலும் கீச் கீச் என்னும் பறவைகளின் ஒலியைத் தவிர கூடு இருக்கிறது என்பதற்கு வேறு எதுவும் பெரிய அடையாளம் இருந்ததில்லை. சென்ற வாரத்தில் ஒரு நாள் மாலை வேளையில் பக்கத்து வீட்டுப் பையன் என் மகனிடம், மரத்தில் இருந்த கூட்டில் இருந்து குருவிக் குஞ்சு ஒன்று தவறி கீழே விழுந்திருக்கிறது என்று சொல்லி அந்தப் பறவையை காட்டி இருக்கிறான். மரச் சருகுகள் மீது அமர்ந்திருந்த குட்டிக் குருவி கண்களை மூடியவாறே இருந்தது. சற்றே தத்தித் தாவவும் செய்தது. அப்படி தாவித் தாவி கூட்டை விட்டு வெளியே விழுந்திருக்கலாம். குருவிக்கு என்ன உணவு கொடுப்பது என்று யோசித்து, ரொட்டித் துண்டினை நீரில் நனைத்து கொடுக்கலாம் என்று சிறுவர்கள் அதை முதலில் முயற்சி செய்துள்ளார்கள். குருவி ரொட்டித் துண்டினை ஓரிரு முறை கண்ணைத் திறக்காமலேயே வாயை அகல விரித்து சாப்பிட்டுள்ளது. அதற்குப் பிறகு என்ன செய்வது என்று சிறியவர்களுக்குத் தெரியவில்லை. தண்ணீர் கொடுக்க வேண்டுமா அல்லது வேறு உணவு கொடுக்க வேண்டுமா, என்ன செய்ய வேண்டும் என்று ஏகக் குழப்பம். குருவிக் குஞ்சு வேறு கிரீச் கிரீச் என்று அடிக்கடி ஒலி எழுப்பியதால் அதற்குப் பசிக்கிறதா அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா என்றும் தெரியாததால் இப்போது என்ன செய்வது என்று கேட்க என்னை அழைத்தார்கள். 

குருவியைக் கூட்டில் சேர்ப்பித்துவிடுங்கள். அதற்கு நம்முடைய உணவு எதுவும் கொடுக்கக்கூடாது என்று கூகுள் அறிவுறுத்துகிறது என்றேன். சின்ன பறவை என்பதால் தாய்ப் பறவை கொடுக்கும் உணவினை மட்டுமே உண்ணக் கூடும் என்றேன்.

இதைக் கேட்ட மகன், அம்மா நீயும் வந்து உதவேன் என்றான். மரம் பக்கத்து வீட்டீனுடையது. அந்த வீட்டில் உள்ளவர்களின் உதவி இருந்தால் தான் இதைச் செய்ய முடியும் என்றேன். இப்படியான பேச்சினிடையே மாலை நேரம் மெல்லக் கடந்து சற்றே இருட்டிவிட்டது. கூடு வேறு மரத்தின் உச்சியில் இருந்தது. மரத்தின் மேல் ஏறினாலொழிய கூட்டை எட்ட முடியாது. பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது நண்பனின் பெற்றோரிடம் இப்போதே குருவியை கூட்டில் சேர்க்க வேண்டும், நேரம் சென்றால் இன்னும் இருட்டாகி விடும் அப்பறம் மேலே ஏறி கூட்டைக் கண்டுபிடிப்பது கடினம், அதனால் இப்போதே வாருங்கள் என்று சிறுவர்கள் இருவரும் பேசி இருக்கிறான். அவர்களும் சரி உதவுகிறோம் என்று டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு வர, மகன் ஒரு இரும்பு ஏணியை வீட்டிலிருந்து இருந்து கொண்டு வந்தான்.

என்ன செய்வது, எப்படிக் கூட்டை அடைவது என்று முடிவு செய்வதற்குள்ளாகவே நன்றாக இருட்டு விட்டது. மரத்தினை சுற்றி சிறிய சுவர் ஒன்று எழுப்பப்பட்டதால் ஏணியை முழுமையாக மரத்தில் சாத்தி வைக்க முடியவில்லை. ஏணியை மரத்தின் அடிக் கிளையில் ஒருவாறு சாத்தி வைத்து பின்பு அடிக்கிளையில் இருந்து மரத்தின் உச்சியில் இருந்த கூடு வரை கிளைகளைப் பற்றியவாரே என் மகனின் நண்பனை ஏற்றி விடலாம் என்று முடிவெடுத்து அவனை மரத்தில் ஏற்றினோம் .அவனை அடிக்கிளை வரை ஏற்றி, பின்பு அதற்கும் மேலிருந்த கிளையில் ஏற்றி விட்ட பின்பும் அவனுக்கு உயரத்தில் இருந்த கூடு எட்டவில்லை. எனவே அவனை இறங்கச் சொல்லி விட்டு, அவனுடைய தாயார் கிளைகள் சிராய்ப்பதை பொருட்படுத்தாமல் மரத்தில் ஏறி மிகவும் கஷ்டப்பட்டு அந்த குட்டிப் பறவையை மரத்தில் இருந்த கூட்டில் சேர்ப்பித்தார். நாங்கள் வற்புறுத்தி அழைக்கவில்லை என்றால் இன்று அந்தச் சிறிய பறவை கூட்டில் பத்திரமாக சென்று சேர்ந்திருக்காது, ஏதேனும் விலங்கிற்கு இந்தப் பறவை இன்று இரவு உணவாகி இருக்கும் என்றார்கள் என் மகனும் அவன் நண்பனும். உண்மைதான், குழந்தைகளின் உலகில் தான் எந்தப் பாகுபாடின்றி எல்லாரும் காப்பாற்றப்படுகிறார்கள்.

இயற்கை சீரழிவினால் நேபாளில் இயற்கை பேரிடர் நிகழும் போதும்,  கார்ப்பரெட் அமெரிக்காவின் பண வேட்கைக்கு எண்ணற்ற மனிதர்கள் வேலையிழப்பு போன்ற வாழ்வியல் நெருக்கடிகளுக்கு உள்ளாகும் போதும், உலகெங்கிலும் போரும், இன அழிப்புகளும் தொடரும் போதும், வாழ்வாதாரத்திற்காக பலர் அகதிகளாக வேறொரு நாட்டின் கதவை தட்டி இடம் கேட்கும் போது கருணையின்றி விரட்டப்படும் போதும், அதிகார வர்க்கத்தைச் சார்ந்த, பெரியவர்கள் என்று மார் தட்டிக் கொள்ளும் மனிதர்கள் இயற்கை மீதும், சக மனிதர்கள்  மீதும் வரைமுறையற்ற போரை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இந்தப் போரில் அதிகார வர்க்கம் வெற்றி பெற்றால், அது இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்குமான தோல்வி என்பதே நிதர்சனம்.

வியாழன், ஆகஸ்ட் 13, 2026

தீயின் இதம் சொல்லவா - பாடல்

வெகு நாட்களாக இசை கோர்த்து வெளியிட வேண்டும் என்று நினைத்த ஒரு பாடலை இன்று தான் முடிக்க நேர்ந்தது. தற்போது இந்தப் பாடலை வலையொளியில் கேட்கலாம். தீயின் இதம் சொல்லவா என்று தொடங்கும் இந்தப் பாடல் ஒரு காதல் பாடல். பாடலின் பல வரிகள் உயிரோட்டமாகவும்,  மனதிற்கு நெருக்கமாகவும் வந்திருக்கிறது. பாடலுக்கான இணைப்பு கீழே.



கலையும் மேகத்தில் காவியம் எழுதினேன்
காகிதக் கப்பலில் காலங்கள் கடக்கிறேன்
கனவிலே தழுவும் கவிதையும் நீதானே
கண்ணிமை நடுவினில் உன்முகம் நிறுத்தினேன்
காதலில் தொலைந்து உன்மத்தம்
கொள்கிறேன்
காலத்தில் நமது பெயரும் நிலைக்காதோ

என்று உணர்வுகளை வெளிக்காட்டும் அற்புதமான எனக்குப் பிடித்தமான வரிகள் இப்பாடலில் அமைந்துள்ளது. பாடல் எழுதுவது எளிதாக இருந்தாலும் அதற்குத் தேவையான காட்சியமைப்பு செய்வதற்கு நேரம் அதிகம் தேவைப்படுகிறது இந்தப் பாடலும் அதற்கு விதிவிலக்கல்ல. எனினும் இசையோடு காட்சியமைப்பும் இயல்பாக வந்துள்ளது மகிழ்ச்சியளித்தது. 

ஞாயிறு, ஆகஸ்ட் 09, 2026

சிறுபூவே கலைமானே - பாடல்

பாட்டுக்கு மெட்டமைப்பது என்பது AI தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பின் சாத்தியமே. வரிகளைக் கூட AI தொழில்நுட்பத்தின் வழி எழுதி விடலாம் என்றாலும் எழுதிய வரிகள் மனதிற்கு நெருக்கமாக இருப்பதில்லை. நெருக்கமான வரிகள் மனதின் உணர்வுகளில் இருந்து பிறக்கின்றன. எனவே வரிகளில் உணர்ச்சியும், மொழி லாவகமும், அடுத்தவரை சிந்திக்க வைக்கும் கருத்தும் கொண்ட பாடலை மனிதன் ஒருவனால் மட்டுமே வெற்றிகரமாய்ப் படைக்க முடியும் என்ற அளவில் கருவியின் முன் மனித அனுபவம் இன்னமும் விஞ்சியே நிற்கிறது. சென்ற வருடம் நான் இசை கோர்த்த அனுபவத்தை விட இந்த வருடம் நான் இசை கோர்த்த இந்தப் பாடல் மிகவும் அருமையாக அமைந்து விட்டது. இந்த ஒரு வருடத்தில் தொழில்நுட்பத்தின் பெரும் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. பாடலை இப்போது என்னுடைய வலையொளியில் கேட்கலாம்.

பாடல் வரிகளை இயற்கைக்கும், இயற்கையைப் போல கொடுக்கும் இயல்புள்ள பெண்ணுக்கும் பொருந்தும் வகையில் அமைத்திருக்கிறேன்.