அடர்ந்த கானகத்தில்
புத்தரின் தலைக்குமேல்
சிலந்தி வலைப்பின்னுகிறது
வெண்கொற்றக் குடையை
நினைவூட்டியபடி
இளம் தளிர்களை
போதி மரம் சொரிகிறது
துறந்த மகுடத்தின் நினைவாக
கபிலவஸ்து குடிகளின்
கருணையால் நிரம்பி வழிகிறது
பிட்சைப் பாத்திரம்
ராகுலனின் அன்பைச்
சுமந்த பல்கு நதி
கால்களை அணைக்கிறது
பாசத்தின் கரங்களாய்
சீதை பிரவேசித்த தீயில்
நிதமும் இறங்கி
யசோதரை பவித்திரமாய்
வெளிப்படுகிறாள்
யாவும் உறுதிசெய்யப்பட்ட
பின்னாளில்
போதியின் அடியில்
ஞானம் பெற்றதாய்
புத்தர் அறிவித்தார்
துறத்தல் அல்ல
மீளாது என்றறிந்த பின்னும்
கொடுத்தலே ஞானம்
அக்னிப் பிரவேசம் செய்து
புனிதத்தன்மையை நிரூபிக்கும்
நிர்பந்தம்
இருந்திருந்தால்
போதி மரங்கள்
வெறும் நிழற்குடைகளாக
மட்டுமே இருந்திருக்கும்
