சனி, ஜூலை 25, 2026

ஜுலை மலர்கள்


சென்ற வார இறுதியில் அதாவது ஜூலை 17 முதல் ஜூலை 19, 2026 வரை தெலுங்கானா அமெரிக்கப் பேரவையின்(TTA) மாநாடு சார்லட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. கிட்டத்தட்ட 20,000க்கும் மேற்பட்டோர் 3 நாட்கள் நடந்த இந்த விழாவிற்கு வந்திருந்தார்கள் என்பது அதிகாரப்பூர்வமான புள்ளி விவரம். விழா நடத்த கிட்டத்தட்ட 5 மில்லியன் வெள்ளிகள்  செலவு செய்யப்பட்டது என்பது கேள்வி.






முன்னதாக சூலை 18 சனிக்கிழமை அன்று காலை பல்வேறு இந்திய மாநிலங்களின் அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ரோமேர் பியர்டன் பூங்காவில் தொடங்கி விழா நடக்கும் வளாகம் வரை நடந்த அணிவகுப்பில் நானும் தமிழ்நாடு சார்பாக இணைந்திருந்தேன். கையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்ட பதாகையும், தமிழ்நாட்டின் சிறப்பினை குறிக்கும் வகையில்  கோயில் மாதிரியும், அமெரிக்க மற்றும் இந்திய கொடிகளும் எடுத்துக் கொண்டு பறை அடித்தவாறு நடந்து சென்றோம். விழா வளாகத்தை நாங்கள் அடைந்ததும் நாதஸ்வர இசையுடன் வரவேற்றார்கள்.  






விழா நடந்த வளாகத்தின் முகப்பில் வரவேற்பு வளைவு, தெலுங்கு மக்களின் வாழ்க்கை முறையைக் காட்டும் குடில்கள், சினிமா சம்பந்தப்பட்ட குடில்கள், டீக்கடை, கிராம கோவில்கள் என்று விலாவரியாக குடில் அமைத்து காட்சிப்படுத்தி இருந்தார்கள்.  மாநாட்டில் முக்கியப் பிரமுகர்களுக்கான தனியான சொகுசு இருக்கையுடன் கூடிய அமரும் இடங்கள், உணவுக் கூடங்கள், நிஜ மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட பூச்சாடிகள் கொண்ட உணவு மேஜைகள், வளாகத்தின் உள்ளேயே உணவு விற்கும் கடைகள், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட வணிக வளாகங்கள் என்று அனைத்திலும்  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் உழைப்பு தெரிந்தது.  விருந்தினர்களைப் பதிவு செய்ய சிவப்பு மற்றும் பச்சை சமிக்ஞை  விளக்கு பொருத்திய விருந்தினர் சேவை மையம் மாநாட்டு வளாகத்திலேயே அமைத்திருந்தது வெகு சிறப்பு. ஏனைய மாநாடுகளில் நுழைவு அட்டை வாங்க மாநாட்டு வளாகத்திற்கும், தங்கும் இடத்திற்கும் இடையே பல முறை அலைந்தது மனதில் நிழலாடியது. பொருளாதார முன்னேற்றத்திற்கு தேவையான விடயங்களை மற்றவர்களைப் பார்த்துப் பின்பற்றும் நாம், வாடிக்கையாளர் சேவையைக் குறித்து அக்கறைக் கொள்வதில்லை என்ற என் மனக்குறைக்கு  இது சற்றே  ஆறுதலளித்தது.







ஏனைய மாநாடுகளில் பார்க்க முடியாத அளவு தாய்நாட்டின் மீதான பாடல்கள், அதைச் சார்ந்த நடனங்கள், இறை பக்திப் பாடல்கள், இறை பக்தி சார்ந்த நடனங்கள் எனப் பல நிகழ்ச்சிகள் முதன்மை மாநாட்டு மேடையிலேயே அரங்கேறியது. அது மட்டுமல்ல யாருக்கு எந்த அரசியல் கட்சி பிடிக்குமோ  அந்தக் கூட்டத்தில் நீங்களே இணைந்து கொள்ளுங்கள் என்று எல்லா பெரிய கட்சிகளுக்குமான இணை அமர்வுகளை அவர்களே ஏற்பாடு செய்திருந்தார்கள். இது எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது. 

மாநாட்டில் பங்கேற்கவிருந்த பிரபலங்கள் குறித்த விவரங்களை அவர்களின் இணையப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். அவர்கள் குறிப்பிட்ட முக்கியப் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் அனைவரும் வந்திருந்தார்கள் என்பதும் தனிச் சிறப்பு மட்டுமல்ல ஏனைய மாநாடுகளில் காணாத ஒன்று. இயக்குநர் திரு.  ராம்கோபால் வர்மா, திரு. சந்தீப் ரெட்டி வங்கா, நடிகை திருமிகு மீனாக்ஷி சௌத்ரி, நடிகர் திரு நவீன் போலிஷெட்டி, அமைச்சர் திருமிகு சீதாக்கா சின்னத்திரை நட்சத்திரங்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், திரை நடனக் கலைஞர்கள்  போன்ற பலரையும் மேடையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.     

ஹைதரபாத் புகழ் த்ரீயரி இசைக்குழு (Threeory Band) மற்றும் ஆஸ்கர் புகழ் திரு எம்.எம். கீரவாணி அவர்களின் இன்னிசைக் கச்சேரியைப் பார்க்கச் சென்ற போது சில பிரபலங்களின் பேச்சைக் கேட்கவும், மேடையில் அவர்களின் நடனத்தை காணவும் முடிந்தது. வழக்கமாக எல்லா மாநாடுகளிலும் இருப்பது போன்று பிரபலங்களை நடனம் ஆடச் சொல்வது, அவர்கள் நடிக்க இருக்கும் அடுத்தத் திரைப்படத்தை பற்றிய  கேள்விகள், நீங்களும் மேடையில் இருக்கும் இன்னொரு பிரபலமும் இணைந்து படம் இயக்கும் வாய்ப்பு உண்டா, நடிக்கும் வாய்ப்பு உண்டா என்பது போன்ற வழமையான கேள்விகள் தான் என்றாலும் பிரபலங்கள் அனைவரும் அதை மகிழ்ச்சியுடனேயே எதிர் கொண்டார்கள் என்பது சிறப்பு. ராம்கோபால் வர்மா "நான் ஆக்ஷன் டைரக்டர்ங்க என்னை நடனம் ஆடச் சொல்லி கேட்கறிங்களே" என்று அங்கலாயிக்க, இல்லை ஒரே ஒரு ஸ்டெப் போடுங்க என்று அவரை பாங்கரா ஆட வைத்தது நகைச்சுவையாகவே இருந்தது.  

த்ரீயரி இசைக்குழுவின் கச்சேரிக்கு நடனம் அடியவர்களின் எண்ணிக்கையை விட கீரவாணி அவர்களின் பாடல்களுக்கு ஆடியவர்கள் மிகக் குறைவே. நாமெல்லாம் இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், இன்னிசைத் தென்றல் தேவா என்று ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக பிறந்திருக்கிறோம் என்று தோன்றியது. பலதரப்பட்ட மக்கள் வரக்கூடிய இன்னிசை நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்ப நிகழ்ச்சியை கொடுப்பது ஒரு கலை. அது வெகு சிலருக்கே கைவருகிறது. 

மாநாட்டுக்கு பெரிய தொகை அளித்த நன்கொடையாளர்களை மேடையில் அழைத்து கௌரவித்தார்கள். இதற்கு மட்டுமே கிட்டத்தட்ட 30 மணித்துளிகளுக்கு மேல் ஆனது. மாநாட்டு வளாகம் எங்கும் பல இடங்களில் டிஜிட்டல் திரை அமைத்து இந்தக் கொடையாளர்களின் புகைப்படங்களை சுழற்சி முறையில் காட்டிக் கொண்டிருந்ததும் சிறப்பு. 

சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களும் நிகழ்ச்சிகள் கிட்டத்தட்ட 1.5 மணி நேரம் முதல் 2 மணி நேரம் தாமதமாகச் சென்று கொண்டிருந்தது. அநேகமாக  எல்லா மாநாடுகளுக்கு இத்தகைய தாமதம் தான் ஒரே ஒற்றுமை என்று எண்ண வைத்தது. இசைக்குழு நிகழ்வுகள் இரவு 11:30 மணிக்கு மேல் தான் தொடங்கியது.  மாநாட்டுக்கு சென்று வந்தது குறித்து நண்பர் ஒருவரிடம் சொன்னேன். "ஆமாம், நிறைய சொதப்பல், மோசமாக நடத்தப்பட்ட மாநாடு" என்று அங்கலாய்த்தார்.  பல மில்லியன் வெள்ளிகள் செலவழித்து நாம் என்னதான் நட்சத்திரங்களுக்கிடையே உலவி முற்பட்டாலும், நம்மை பூமியில் இருத்த கண்டிப்பாக யாரேனும் வருவார்கள் என்று நினைத்துக் கொண்டேன். 



சனி, ஜூலை 11, 2026

எங்கனம் - கவிதை



பின்பனிக்காலத்தில்

 எல்லா மரமும் 

இலைகளை உதிர்த்த பின்னும் 

ஏதோ ஒரு மரம் 

உலர்ந்த இலைகளைப் 

பற்றிக் கொண்டு நிற்பது 

யதேச்சையானதல்ல

காற்று பின்பு 

எதை மணியாய் 

சுற்றிச் சுழன்று இசைக்கும் 

சூரியன் தன்

நிழலை எப்படி 

சரி பார்த்துக்கொள்ளும்

பூமி தன்னுடைய

சுழற்சியின் வேகத்தை

எப்படிக் கணக்கிடும்

காலம்

ஒவ்வொன்றையும் எப்படிக்

மாற்றிப் போகிறது

என்பதை நாம் அறிவது எவ்வாறு

உதிர்ந்த நம் காதலின்

உலர்ந்த நினைவுகளே

நெடிய கானல் வாழ்வுக்கு  

உயிரூட்டிக் கொண்டிருக்கிறது

என்றுணர்வது எங்கனம்


புதன், ஜூலை 08, 2026

39ஆவது பேரவை விழா கவியரங்கம்




நியூஜெர்சியில் நடந்த பேரவையின் 39ஆவது தமிழ்விழாவில் முனைவர் கு. உமாதேவி அவர்களின் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. மனவெளிப் பயணம் என்ற பொதுத் தலைப்பின் கீழ்விழிப்பு, முகமூடி, புலம்பெயர்வு, செயற்கை நுண்ணறிவும் மானுட மெய்யறிவும் (AI vs. OI), அமைதி, தனிமையுணர்வு போன்ற துணைத்தலைப்புகள் வழங்கப்பட்டு இருந்தன. முகமூடி என்ற துணைத் தலைப்பில் என்னுடைய கவிதையை வழங்கினேன். கவியரங்கத்தில் இருந்து ஒரு சில புகைப்படங்கள்.







நான் வாசித்த கவிதை இங்கே:

செஞ்சுடரின் ஒளியாக அகிலமெங்கும் நிறைபவளே

விண் தோன்றா அமுதமாகி மன்பதைக்கு அருள்பவளே

மூத்தவளே முதல்பொருளே மூப்பில்லா முழுமதியே

கற்கண்டே கனிச்சுவையே கன்றாத பொற்குவையே

நான்மாடக் கூடலிலே முச்சங்கம் கண்டவளே

தேன்தமிழே நின்தாள் பணிந்தேன்

என் நாவிலே நடம் புரிவாயே


ஆறாம் திணையிந்த அமெரிக்கப் பெருநிலத்தில்

பூங்கா மாநிலத்தின் புகழ்வாய்ந்த கவியரங்கில்

திரைவானின் விடிவெள்ளி தேன்சிந்தும் கவிநதி

கம்பனின் இனமிவள் கரையில்லா தமிழ்க் கடலிவள்

நவீன உமையிவள் தமிழன்னையின் இடப்பாகத்தவள்

கவியரங்கத் தலைமையிது இரண்டாம் முறையாகும்

இவர் தமிழ் முதலாம் தரமாகும்

கவிஞர் உமாதேவிக்கு என்இனிய தமிழ் வணக்கம்


பைந்தமிழ்ச் சோலையில் யாத்த தமிழமுதை

அள்ளிப் பருகிட அவைசேர்ந்த அனைவருக்கும்

கவிகிள்ளித் தருவேன் கரவொலி அளிப்பீர் 

விலையில்லாதது வாழ்த்தொலி எனவே

தடையின்றி தாராளமாய்த் தருவீர்

மனவெளிப் பயணத்தில்

முகமூடி என்பதே எனக்கான தலைப்பு


எல்லையற்ற எண்ணப் பெருவெளியில்

இரவும் பகலுமற்ற பொழுதில் 

காலத்தின் கரம் தீண்டா 

ரகசிய நிலவறையில் 

ஆசைகளும் நினைவுகளும்

ஆர்ப்பரிக்கும் நியூரான் ஆழியில் 

எண்ணங்களின் ஊடே 

வேகக் கட்டுப்பாடுகளற்ற 

மனப்புரவியில் பயணமென்பது 

இருமுனைகளைக் கொண்ட வாளினை 

கையாண்டு கொண்டே 

இருளுக்கும் வெளிச்சத்திற்கும்

இடையே ஊசலாடும் 

கயிற்றின் மேல் 

நடப்பதற்கு ஒப்பானது 

உரிக்க உரிக்க உதிரும் 

மன அடுக்குகளில் 

கண்டெடுத்த முகமூடிகள் 

மனவெளிச் சாளரத்தின் 

வெளிச்சப் பாதையை 

மறைக்கும் திரைகள் 

திரைகளை விலக்கிய பொழுதில் 

மனதோடு உறவாடிய 

மௌனச் சித்திரங்களின்

மெல்லுணர்வுகள் இதோ உங்களுக்காக 


அன்பே அமுதே ஆருயிரே என்பர்

கனிவாய்ப் பேசிக் காதலை விற்பர்

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி

திரும்பிய கணத்தில் தீமைகள் செய்வர்

உறவென்ற பேரில் பொய்யன்பே முகமூடி


பேதமை களைந்தே புதுயுகம் படைப்போம்

மாசில்லா மானத் தலைமையைத் தருவோம்

இனிக்கப் பேசும் இருள் குணத்தோர்கே 

அரியாசனம் தந்து அறத்தினை கொல்வோம்

அரசியல் பிழைத்தோர்க்கு அரிதாரமே முகமூடி


மனிதம் என்றால் மகாத்மா என்பார் 

மறந்தும் உண்மையின் பக்கம் நில்லார் 

தருமம் வாழ்கவென உரக்கச் சொல்லி 

ஆபத்தில் உதவாது சுயம் காத்துக் கொள்வார் 

பொய்யின் புதல்வர்க்கு சொற்களே முகமூடி


வீணரை விடஅரவு என்போம்

தீயவரைக் குள்ளநரி என்போம்

கயவரை கருப்பாடு என்போம்

பாதகரை வல்லூறு என்போம்

மனிதனின் கீழ்மைக்கு மரபியலே முகமூடி


மரத்தைவெட்டி பல சிலுவைகள் செய்தோம் 

மனிதர்கள் கோடி அந்தோ ஒருதேவனைக் காணோம் 

ஆசையாய்ப் புத்தர் சிலையினை பெற்றே

ஞானத்தின் வேர்களில் அமிலத்தை விட்டோம் 

சாரங்கள் தோற்குமிடத்தில் சடங்குகளே முகமூடி


வாழ்தல் என்போம் வழக்கம் என்போம்

வையகம் வியந்தோத மாபாதகம் செய்வோம் 

பிறந்தது முதலாய்ப் பலமுகம் தரித்தே

சொந்த முகத்தை சடுதியில் தொலைப்போம்

பொதுநலத்தின் சிறகொடிக்கும் தன்னலமே முகமூடி 


வசதிகள் பெற்று நிலைப்பது வேண்டும் 

வரைமுறை இல்லா அதிகாரம் வேண்டும் 

தீக்கனி உண்ணும் விட்டிலைப் போல 

தன்னைத் தோற்பினும் பெயர்பெற வேண்டும் 

தனித்துவத்தின் வேரறுக்கும் தயக்கங்களே முகமூடி 


ஆதியிலே வந்தமொழி அருந்தமிழை பின்தள்ளி 

பாதியிலே வந்ததெல்லாம் தெய்வமொழி என்றேகி 

செம்மொழியின் இலக்கணமாய் பொலிகின்ற சித்திரமே 

வண்ணமயில் உன் வனப்பைத்தள்ளி வான்கோழியை வியப்பதுவோ 

மின்னுவதெலாம் பொன்யெனும் மாயையே முகமூடி 


வானம் ஒளியின் முகமூடி

நீர் நிலத்தின் முகமூடி

புகை தீயின் முகமூடி

நிலா கதிரவனின் முகமூடி

பகல் நட்சத்திரங்களின் முகமூடி

இயற்கையின் பேரழகிற்கு புறக்கண்களே முகமூடி


ஆசை தீமையின் முதல்வரி

புன்னகை துரோகத்தின் முகவரி

கனவு ஏமாற்றத்தின் மறுமுகம்

கர்வம் தீராத மதுக்குடம்

மனிதன் மதங்கொண்ட வாரணம்

சகுனியின் சூழ்ச்சியில் பகடைகளே முகமூடி


சமூகம் சுட்டிய வரைமுறை 

அரசியல் வகுத்த நடைமுறை

சாதி மதபேத அடக்குமுறை

மெலியோரை முடக்கிய வன்முறை

குமுறிய உள்ளம் அடக்கி

நடைமுறை வழக்கமென்றே

சமுதாய முகமூடி கண்டேன் 

நெற்றிக்கண்களுக்கு நடுங்கும் நெஞ்சங்களே முகமூடி என்றது 


வாழ்க்கை நாடக மேடை

பாத்திரம் நாம் அதில் என்றால்

விடைபெறும் நேரமாவது

வேடம் கலைத்தல் முறையே

கல்லறையில் தூங்கும் ஒருவன்

உண்மையிலே மறைந்தானா இல்லை 

கானலில் தோன்றும் நீர் தானா 


மனத்தின் உண்மை அகத்தில்

மறையாது ஒளிர வழிபிறந்தால் 

முகமூடி அணியா உலகம் 

ஒருநாள் சாத்தியமாகும் 

காலம் தீர்ப்பு எழுதட்டும்

                                             


பேரவையின் 39ஆவது தமிழ் விழா நியூஜெர்சி மாநிலத்தில் 2026 ஜூலை 2,3,4, தேதிகளில் நடைபெற்றது. பேரவையின் இலக்கியக் குழு மேற்றிசை வலசை என்ற நூலுக்காக கட்டுரை ஒன்று வரையச் சொல்லி கேட்டிருந்தார்கள். "காலம் தீர்ப்பு எழுதட்டும்" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று புலம்பெயர் இலக்கியம் குறித்து எழுதி அனுப்பியிருந்தேன். இந்த நூலை இயக்குnaர் திரு. அம்ஷன் குமார் வெளியிட எழுத்தாளர் திரு. சாம்ராஜ், எழுத்தாளர் திருமிகு தமிழ்நதி, எழுத்தாளர் திருமிகு சரவணகார்த்திகேயன் மற்றும் கவிஞர் பெருந்தேவி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அந்தக் கட்டுரை இப்போது உங்கள் பார்வைக்காக. 








இலக்கியம் என்பது இலக்கை இயம்புவது. நல்ல இலக்கியம் மொழியை  நிகழும் காலத்திற்கு ஏற்ப, உண்மைக்கு மிக நெருக்கமாக, ஆவணப்படுத்துகிறது. புலம்பெயர் இலக்கியம் என்ற வரையறை எந்த இடத்தில் தொடங்கியது என்பது தெரியவில்லை. 

எங்கே சூரியனுக்கு 

உதயமும் அஸ்தமனமும் 

இல்லையோ 

எங்கே 

மேலே வேரும் 

கீழே கிளைகளுமுள்ள 

புராதன மரம் 

நிழல் பரப்புகிறதோ 

எங்கே 

'நான்' எனும் முடிச்சு

அவிழ்ந்து போகிறதோ 

அது தான் என் ஊர்  

என்ற கவிக்கோ அப்துல் இரகுமானின் கவிதை வரிகளில் உள்ள யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற கருத்தியலில் அதிக பிடிப்பு உண்டு. எனவே இடம் பெயர்தலை மட்டும் அடிப்படையாகக் கொண்டு புலம்பெயர் இலக்கியம் இதுவென வரையறுக்க முடியாது. ஒரு எழுத்தாளனின் வேர்கள் எங்கே தொடங்கியதோ அந்த நிலத்தின் பண்பாட்டுக் கூறுகளைத் தவிர்த்து அந்த எழுத்தாளனால் நல்ல இலக்கியம் படைக்கவே முடியாது. எனவே புலம்பெயர் நிலத்தில் அடிக்கும் இலக்கிய வெயிலில் கூட தமிழ் நிலத்தின் சூட்டை உங்களால் உணர முடியும்.  

மனிதர்கள் அனைவருமே பூமிப்பந்தின் மீது மிதக்கும் ஏதோ ஒரு நிலத்திலிருந்து வேறொரு நிலத்திற்குப் புலம்பெயர்ந்தவர்கள் தான். ஆப்பிரிக்க இனத்தில் பிறந்து அமெரிக்க மண்ணில் வாழ்ந்த புலிட்சர் விருது பெற்ற கவிஞர் குவெண்டலின் ப்ரூக்ஸ், கவிஞர் மாயா ஏஞ்சலோ போன்றோர் ஆப்பிரிக்க மக்களின் உரிமை, சமூகநீதி, கறுப்பின பெண்களின் முன்னேற்றம்  சார்ந்த படைப்புகளைத் தந்துள்ளனர். காலித் ஹூசேய்னி  என்பவர் ஆப்கானிஸ்தானில் பிறந்து அமெரிக்க மண்ணிற்கு புலம்பெயர்ந்து,  'தி கையிட் ரன்னர்' என்ற நாவலை எழுதி உலகப் புகழ்பெற்றார். இதுவும் ஆப்கானிஸ்த மண்ணில் வாழும் ஒரு சிறுவனின் கதையாகும். அது போலவே எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம் அவர்கள் ஈழத்தில் இருந்து கனடாவிற்கு புலம்பெயர்ந்து தமிழ் இலக்கிய உலகில் அவருடைய எழுத்துக்களின் வழி புதிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். இவ்வாறே ஒருவரது இலக்கிய வெளி என்பது அவரது வேர்களுக்கு வெகு அருகிலேயே இருக்கும் ஒன்றாகும்.

உலகில் சமநிலை தவறி அநீதி நிகழும் போதெல்லாம் மனித உணர்வுகள்  தூண்டப்பட்டு அங்கு இலக்கியம் பிறப்பதற்கான ஒரு களம் உருவாகிறது.  அமெரிக்காவிலும் தமிழ்க் கவிஞர்கள், எழுத்தாளர்கள் பலர் உண்டு. ஆனால் ஒரு இலக்கிய களம் என்பதற்கு போர், இழப்பு போன்ற காரணிகளை விட இலக்கியவாதிகளை ஊக்குவித்து அவர்களை வளர்த்தெடுக்கும் சமூக அடுக்கு மிக முக்கியத் தேவையாகும். தமிழகத்தில் நிலவும் இலக்கியச் சூழல், தொடர் இலக்கிய உரையாடல்,  பலருடைய படைப்புகளை உடனுக்குடன் வாசிக்கும் வாய்ப்பு, வாசகர்களுடன் நேரடியாக உரையாடும் வசதி,  இலக்கிய சொற்பொழுவுகளில் நேரடியாக பங்கேற்கும் வசதி, எழுத்தாளர்களுடன் அவர்களுடைய படைப்புகள் குறித்து நேரடியாக விவாதிக்கும் வாய்ப்பு,  இலக்கியவாதிகளுக்கான வழிகாட்டுதல் போன்றவை அயல் மண்ணில் கிடைப்பது அரிதினும் அரிது. எனவே இலக்கிய படைப்புகள் வெகுவாக பின்தங்கியுள்ளதோடு மட்டுமல்லாமல் இலக்கியவாதிகளை வளர்த்தெடுத்து அவர்களுக்கு முறையான வழிகாட்டுதல் நல்கும் நல்ல வழிகாட்டிகளும்  அயல்மண்ணில் இல்லை.

பெரும்பாலான அயலக தமிழ் அமைப்புகள் இலக்கிய இதழ்களை வெளியிடுகின்றன. அது மட்டுமல்லாமல் வடஅமெரிக்காவில் இருக்கும் நூற்றுக்கணக்கான தமிழ்ச் சங்கங்களில் வாசகர் வட்டங்கள், நூல் திறனாய்வு செயற்பாடுகள் போன்றவற்றையும் செம்மையாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது தமிழ் இலக்கிய உலகோடு  வாசகர்களுக்கு உள்ள இணைப்பை அறுபடாமல் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பை நல்கினாலும் வாசகர்களை எழுத்தாளர்களாக மாற்றும் அளவு இன்னும் வலிமை பெறவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னால், சார்லட் நகரில் முதல் தமிழ்ப் புத்தகக் கண்காட்சியை ஒருங்கிணைத்து நடத்தினேன். அந்த முயற்சியின் அடுத்த படிநிலையாக தமிழ் நூல்களைச் சார்லட் பெருநகரத்தை உள்ளடக்கிய மெக்கலன்பர்க் மாவட்ட நூலகங்களில் வைக்க பெரும் முயற்சி எடுத்து அதையும் செயல்படுத்தினேன். சார்லட் தமிழ்ப் பள்ளியில் பயிலும் உயர்நிலை மாணவர்களுக்கு  தமிழ் கதைப் புத்தங்கங்கள் எழுதப் பயிற்சி அளித்து அவர்கள் எழுதிய நூல்களையும் எங்கள் ஊர் நூலகங்களில் இடம் பெறச் செய்துள்ளேன்.  என்னுடைய இந்த முயற்சியானது இலக்கியம் என்னும் மாபெரும் கடலில் மூழ்கி ஒரு சிறிய முத்தை எடுத்ததற்கு  சமமானது என்பதை உணராமல் இல்லை. இவ்வாறான எனது பயணத்தில் இலக்கிய உலகோடு வாசர்களுக்கு இருந்த அறிமுகத்தை மட்டுமே என்னால் தக்க வைக்க முடிந்தது.

இங்கு வசிக்கும் எழுத்தாளர்களின் இன்னொரு பெரும் தடை மனம் சார்ந்தது. அதாவது தாங்கள் வாழும் மண்ணைக் குறித்து எழுதாமல் தாங்கள் பிரிந்த மண்ணையும் அது சார்ந்த இலக்கியத்தையும் படைக்க முயல்கிறார்கள்.  தாய் மண்ணில் இருந்து பல மைல்கள் கடந்து வாழும் போது நமது இலக்கிய பார்வை அவ்வளவு வீரியமானதாக இருப்பதில்லை. இது கண்ணாடியை அதே அறைக்குள் வைக்காமல், வேறு அறைக்குள் வைத்துவிட்டு, வெறும் சுவற்றை பார்த்து ஒப்பனை செய்வதற்கு சமமாகும். எவ்வளவு முயன்றாலும் ஒப்பனை சிறப்பாக அமையாது. அயலக மண்ணில் வசிக்கும் தமிழர்கள் தாங்கள் வாழும் நிலப்பகுதிகளில் உள்ள மக்களோடு இணக்கமான போக்கை கடைப்பிடித்து வாழ்ந்தாலும்  பல்வேறு மொழி, இன பேதங்கள் காரணமாக அந்த மாந்தர்களுடன் நெருக்கமான உறவுப் பாலத்தை ஏற்படுத்திக் கொள்வது கடினமான ஒன்றாகவே இருக்கிறது. இதையும் தாண்டி அமெரிக்கா மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து  தமிழில் வெளிவரும் பல்வேறு வலைப்பூக்கள், மின்னிதழ்கள், கட்டுரை மற்றும் கவிதைத் தொகுப்பு நூல்கள் ஆகியவற்றில் வடஅமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் பெருமளவில் எழுதியே வருகிறார்கள். ஆனால் தொடர்ச்சியாக இலக்கியப் பணி ஆற்றுவதற்கு தாங்கள் வாழும் நிலத்தில் உள்ள மாந்தர்களின் கதைகளை, போராட்டங்களை எடுத்து இயம்புவதே, ஒரு எழுத்தாளருக்கு  அடுத்தக் கட்ட வளர்ச்சியை, நகர்வை அளிக்க வல்லது.

புலம்பெயர் நிலத்தில் அயலக தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் புகழ்மிக்க விருதுகளோ அல்லது பொருளாதாரத் தன்னிறைவை அளிக்கும் பரிசுத் தொகை கொண்ட விருதுகளோ இல்லை. வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவையின் தமிழ் பீட விருது, கனடா இயல் விருது போன்றவை செயல்பட்டாலும் அந்த விருதுகளைப் பெற்றவர்கள் பெரும்பான்மை தமிழகத்தில் இருந்து வருபவர்களே. எனவே புலம்பெயர் வாழ்வில் ஒருவர் சந்திக்கும் சவால்கள், பின்னடைவுகள்,  சோதனைகள், வெற்றிகள் ஆகியவற்றை ஆவணப்படுத்த, அதிலிருந்து கதைகளும், கவிதைகளும் படைக்கத் தேவையான களம் என்பது இல்லை. அங்கீகாரம் பெறவும், வாழ்வதற்குத் தேவையான பொருள் வளத்தைப் பெறவும் ஆங்கிலத்தில் எழுதுவதே சிறந்த வழியாக இருக்கிறது. பெரும்பான்மையான புலம்பெயர் எழுத்தாளர்களுக்கு தங்களது பதிப்புகளை வாசித்து பின்னூட்டம் தரும் ஒரு சில வாசகர்களைக் கூடப் பெறுவதில்லை என்பதும் அவர்கள் பதிப்பிக்கும் புத்தகங்களை விலை கொடுத்து வாங்கி ஊக்குவிக்கும் அளவு இலக்கிய ஆர்வலர்களும் இல்லை என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. எனவே புலம்பெயர் படைப்புகள் காலத்தை வெல்லும் இலக்கியமாக இல்லாமல் காலத்தோடு மறையும் எழுத்தாகவே நின்று விடுகிறது. 

பெருகி வரும் சமூக ஊடங்கங்களின் தாக்கமும் இலக்கியப் பரப்பில் பெரிய  மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒரு நிமிட குறுங்காணொளி ஒன்றைப் பார்ப்பதில் உள்ள ஆர்வம் சில மணி நேரம் செலவு செய்து ஒரு புத்தகம் வாசிப்பதில் இல்லை. இந்தத் தாக்கம் வளரும் நாடுகளை விட வளர்ந்த நாடுகளில் அதிகம் உணரப்படுகிறது. காட்சி ஊடகத்திற்கு ஈடு கொடுக்கும் அளவு பரந்த வாசகப் பரப்பை கொண்ட படைப்புகளை யாரும் இப்போதெல்லாம் படைப்பதில்லை.  ஹாரி பாட்டர் போன்ற உலகம் முழுவதும் பலரால் வாசிக்கப்பட்ட நூல்கள் ஏற்படுத்திய தாக்கம் என்பது சமூக ஊடகத்திற்கு முற்பட்ட காலம் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

வடஅமெரிக்காவில் பெரும்பாலும் பிழைப்பு தேடி இடம் பெயர்ந்து வந்த முதலாம் மற்றும் இரண்டாம் தலைமுறை தமிழர்களே அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் தங்கள் வாழ்வின் பெரும் பகுதியை இந்தப் புதிய நாட்டில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளத் தேவையான போராட்டத்திலேயே கழிக்கின்றனர்.  இவர்களின் குழந்தைகள் தமிழ் மொழியை இரண்டாம் பாடமாக படித்த தலைமுறை ஆகும். இவர்களின் பேச்சும், சிந்தனையும் முதல் மொழியான ஆங்கிலத்திலேயே அமைந்துள்ளது. இந்தத் தலைமுறை ஆங்கிலத்தில் பெரிய தாக்கம் கொண்ட நூல்களை படைக்கலாம் என்றாலும், இவர்களுக்கு தாய் மொழியில் இலக்கியம் படைக்கும் அளவு மொழியறிவு இல்லை. திருக்குறளைத் தாண்டிய எந்த தமிழ் இலக்கியத்தையும் அறியாதவர்களே இந்தத் தலைமுறையினர். திருக்குறள் என்பது ஒரு நீதி நூல் மட்டுமே, பிறர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று உபதேசிக்க விரும்புகிறவர்களுக்கு அது ஒரு சுரங்கம், ஆனால் அது இலக்கியம் ஆகாது  என்ற எழுத்தாளர் க.நா. சுப்பிரமணியம் அவர்களின் கூற்றையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

சிறந்த இலக்கியங்களை, புதினங்களை, கவிதைகளைப் படிக்காத முதல் மற்றும் இரண்டாம் தலைமுறையிடமிருந்து காலத்தை வெல்லும் தமிழ் எழுத்துக்கள் பிறக்கப்போவதில்லை. அப்படி இருந்தும் சிலர் தன்னிச்சையாக தங்கள் மொழியறிவை வளர்த்துக் கொண்டு படைப்புக்களை படைத்து  வருகிறார்கள். ஆனால் இவர்களின் படைப்புகள் தற்கால இலக்கியத்தை விட சில மடங்கு பின் தங்கியுள்ளது என்பதையும் நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும்.  "தாழ்ப்பாள் புலவர்கள் தள்ளிப்போகட்டும்" என்ற தலைப்பில், நாம் இருக்கும் நாடு என்ற நூலில் அமைந்த கவிதை ஒன்றில் மகாகவி ஈரோடு தமிழன்பன் பின்வருமாறு கூறுகிறார். 

காலம் 

தீர்ப்பு எழுதட்டும் 

கவிஞனே! நீ 

கவி எழுது 

மேலே சொன்னக் கூற்று கவிதைக்கு மட்டுமல்ல, கவிதைத்  தாண்டிய எல்லா இலக்கிய செயல்பாடுகளுக்கும் பொருந்தும். புலம்பெயர் வாழ்வில் இலக்கியப் பணி என்பது ஓடும் வாகனத்தின் வேகத்தை அதிகப்படுத்துவது போன்ற எளிதான பணி அல்ல. முதலில் ஒரு வாகனத்தை தேடிக் கண்டிபிடிக்க வேண்டும், பின்னர் அதை இயக்கத் தேவையான மனிதனைக் கண்டுபிடித்து அவனுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். இதற்குப் பிறகே வாகனத்தை இயக்கும் வேலையைச் செய்ய முடியும். இப்படியான ஆயத்தங்களுக்கு உட்பட்ட இலக்கிய பணியில்,  புலம்பெயர் எழுத்தாளர்கள் கடக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது. கூட்டுப் புழுக்களுக்கு வானத்தின் பரப்பளவு தெரியும் என்றாலும், சிறகுகள் வலிமை பெறும் வரை காத்திருப்பதைப் போல, புலம்பெயர் எழுத்துக்களும் வலிமைப் பெற்று ஒரு நாள் காலவெளியில் சிறகடித்து பறக்கும். அந்த நாள், நாம் வாழும் காலத்திலேயே அமைந்தால் அதை விட உவப்பானது வேறோன்றும் இல்லை.