திங்கள், ஏப்ரல் 22, 2024

சித்திரைத் திருநாள் வாழ்த்து - கவிதை

 

சித்திரைத் திருநாள் வாழ்த்துக் கவிதையை முகநூலில் பதிந்திருந்தேன். நேரம் கடந்தாலும் பரவாயில்லை என இங்கேயும் பதிகிறேன்.



சந்தனத் தென்றல் தேரில்
சரக்கொன்றைப் பூந்துகில் சூடி
சோதிப் பேரொளியாய்ப் பூத்த
சித்திரை மகளே வருக!

பத்தரை மாற்றுப் பொன்னை
இளவேனில் காலம் தன்னை
பதினோரு திங்களாய்க் காண
இகத்தில் தவம் நோற்றோம்!

தேனுறைத் தமிழின் சுவையாய்
தண்ணிலவு உலவும் பொழிலாய்
தெளிந்த நன்னீரின் இதமாய்
தரைமேல் மலர்ந்த திருவே!

குன்றாத வளங்கள் தருவாய்
நலியாத நன்மை சேர்ப்பாய்
வெற்றித் திருமகள் நாளும்
நீங்காத தன்மை அருள்வாய்!

சங்கம்கண்ட தமிழைப் போல
சகத்தில் யாண்டும் இன்பமேவ
முத்திரை பதிக்கும் சித்திரையாக
மேதினியில் யாவரையும் வாழ்விப்பாயே!

அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள். 

பூக்கள் பூக்கும் தருணம் -சுற்றுலா - பாகம் 2

"தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்"  என்ற வாசகத்தை மனதில்  நிறுத்தித்  தேடினாலும் ஆம்ஸ்டர்டாம் செல்லும் விமானங்கள் ராலே ஏர்போர்ட்டில் இருந்து செல்ல மிகவும் அதிக விலையாகத் தான் இருந்தது. அடுத்த நாள் வேறு ஆம்ஸ்டர்டாமில் இருந்து பாரிஸ் செல்ல பயணச் சீட்டு பதிவு  செய்திருந்தோம்.  எனவே எங்களுக்கு குறித்த நேரத்தில் செல்ல வேண்டிய கட்டாயம் வேறு. பக்கத்தில் இருந்த அட்லாண்டா, சார்லட் என்று தேடல் விரிவடைந்து சரி எப்படியும் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டி.சி. யில் இருந்து டிக்கெட் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் தேட, வானத்தில் உள்ள தேவதைகள் ஆசிர்வதித்தது போல நாங்கள் எதிர் பார்த்ததை விடக் ஏற்றுக் கொள்ளத்தக்க  விலையில், குறித்த நேரத்தில் சென்று சேரும் விதத்தில் பயணச்சீட்டு கிடைத்தது.  ஆனால் பாரிஸ் செல்லும் ரயிலிற்கான முன்பதிவை மாற்றும்படி இருந்தது. சரி, பரவாயில்லை என்று அதையும் ஒரு வழியாக மாற்றியது  பண விரயம் என்றாலும் வேறு வழியில்லை. நெடும் பயணம் செல்பவர்கள் அங்கிருந்து வேறு ஊருக்கு செல்லும் எண்ணம் இருந்தால் அந்த பயணங்கள் உங்கள் பயண திட்டத்தில் இடையே உள்ள நாட்களில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். கடைசியில் இருந்தாலோ அல்லது ஆரம்பத்தில் இருந்தாலோ விமான சேவையில் தாமதம் மற்றும் எதிர்பாராத ஏதோ ஒரு காரணத்தால் பயணம் தள்ளிச் சென்றாலும் உங்களுக்கு அதனால்  பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது. இந்தப் படிப்பினையை இவ்வளவு பணம் செலவு பண்ணித் தெரிந்து கொண்டோமே என்று எண்ணிக் கொண்டே வாஷிங்டன், டிசி க்கு விரைந்தோம்.

பயணத்தில் இருந்து நாங்கள் திரும்பும் வரை காரை சேமிக்கும் வசதியுடன் கூடிய தங்கும் அறையைத் தேர்வு செய்திருந்தோம். ஒரு வழியாக தங்கும் அறைக்குச் சென்று படுத்துறங்கி, அடுத்த நாள் சாவகாசமாய் எழுந்து, குளித்து, ஒரு நல்ல உணவகத்தில் உணவு உண்டுவிட்டு,  விடுதிக்கு திரும்பி காரை அங்கே  நிறுத்தி விட்டு,  விமான நிலையத்திற்கு செல்வதற்கான பேருந்தில் ஏறி விமான நிலையத்திற்கு சென்றோம். விமான நிலையத்திற்கு அருகில் உள்ள விடுதிகளில் பெரும்பாலும் விமான நிலையத்திற்கு இலவசமாகச்  செல்லக் கூடிய பேருந்து வசதி உண்டு. விமான நிலையத்தை அடைந்து பயணச்சீட்டு பெற்றுக்கொண்டு, பாதுகாப்பு பரிசோதனைகளை  முடித்துவிட்டு உள்ளே சென்று அமர்ந்திருந்தோம். குறித்த நேரத்தில் விமானம் புறப்பட்டு ஆம்ஸ்ட்ரடாமை அடைந்தது. ஆம்ஸ்ட்ரடாம் விமான நிலையத்திலிருந்து எங்களை அழைத்துச் செல்ல நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவருடைய மகிழுந்தில் ஏறி, அவருடைய இல்லத்தை அடைந்தோம். பல வருடங்களுக்குப் பிறகு அவருடைய குடும்பத்தை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. ஆனால் அதிக நேரம் அங்கிருக்க இயலவில்லை. அனைவரும் தயாராகி அன்று மதியம் பாரீசு செல்லும் ரயிலுக்கு தயார் ஆனோம்.



இரயில் நிலையத்தை ஐந்து நிமிடங்களுக்கு முன் அடைந்து வேகமாய் ஓடி இரயிலில் ஏறி அமர்ந்தோம். ஆம்ஸ்ட்ரடாமை பொறுத்தவரை சாலையில் வேகமாகச் செல்லும் கார்களை புகைப்படம் எடுத்து பெரிய தொகையை அபராதமாக இட்டு விடும் வாய்ப்பு அதிகம். எனவே சாலையில் விதிகளை கவனித்து அதற்கு ஏற்ப வேகத்தை மட்டுப்படுத்த வேண்டும். சில சாலைகளில் வேக அளவு என்பதை விட சராசரி நேரத்தை மட்டுமே கணக்கிட்டு அதற்கேற்ப அபாரதத் தொகை வசூலிக்கப்படும். அதாவது சராசரியாக சில மைல் தூரத்தை கடக்க இவ்வளவு நேரம் ஆகும் என்பதைக் கொண்டு, நாம் அந்த சராசரி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் அந்தச் சாலையைக் கடந்து சென்றால், அதற்கும் பெரிய அளவில் அபராதத்தை தலையில் கட்டி விடுவார்கள். அயல்நாட்டில் இருந்து செல்பவர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். எங்களுக்கும் ஓரிரு இடங்களில் வேகமாக சென்றோம் என்று கூறி அபராதம் கட்டும்படி, ஊருக்கு வந்த பின், வீட்டிற்கே ரசீது வந்தது. இதை நாம் நீதிமன்றத்திற்கு சென்றெல்லாம் வாதிட்டு வெற்றி பெற வழியில்லை என்பதால் அவர்கள் சொன்ன தொகையை காட்டும்படி நேர்ந்தது .   



லூவ்ர நுழைவாயிலைக் கடந்து உள்ளே




உலகப் புகழ் பெற்ற மோனோலிசா 
 

இரயிலில் ஏறி அமர்ந்த பிறகு தான் தோன்றியது, செல்போன் சார்ஜர் எடுத்து வரவில்லை என்பது. சரி பாரீசில் வாங்கிக் கொள்ளலாம் என்று வேறு வழியில்லாமல் மனதை தேற்றிக் கொண்டோம். இரயிலில் இருந்து இறங்கிய பின் ஊபர்(Uber) செயலி வழியாக டாக்ஸியை அழைத்து நாங்கள் செல்ல வேண்டிய தங்கும் விடுதிக்குச் சென்றோம். அங்கே கொஞ்சம் களைப்பாறிவிட்டு மீண்டும் ஊபர் எடுத்து லூவ்ரா (Louvre) அருங்காட்சியகத்திற்கு சென்றோம். அருங்காட்சியகம் மூட ஒரு மணி நேரம் மட்டுமே இருந்தது. அதனால் அவசரமாக டாவின்சி வரைந்த மோனா லிசாவை சென்று பார்த்தோம். பல பிரம்மாண்ட ஓவியங்கள் சூழ இருந்த அந்தக் காட்சி அறையில் 30 இன்ச் நீளமும் 21 இன்ச் அகலமும் கொண்ட மோனா லிசாவை பார்க்கும் போது, இதற்காகவா  இத்தனை அமர்க்களம் என்ற எண்ணம் வராமல் இல்லை.  ஆனாலும் அதனை சிறிய மோனா லிசா ஓவியத்தின் முன் நின்று புகைப்படம் எடுக்க நல்ல கூட்டம் இருந்தது. மோனா லிசா ஓவியத்தைச் சுற்றி தி வெட்டிங் ஃபீஸ்ட் (The Wedding Feast), லா பெல்லா நானி (La Bella Nani), பாரடைஸ் (Paradise) உள்ளிட்ட பல்வேறு புகழ் பெற்ற ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. மோனா லிசா உள்ள காட்சி அறைக்கு செல்லும் வழியில் தி விங்கிட் விக்டரி ஆப் சோமத்ரேசு (The Winged Victory of Somathrace)  என்ற  தலையில்லாத  கிரேக்கக் கடவுளின் சிலையையும் பார்த்தோம். வரலாறு நமக்கு சொல்வதெல்லாம் எத்தனை நுட்பமானது.  அரசனோ, தேவதையோ, மேன்மை பொருந்திய கடவுளோ கால ஓட்டத்தில் எல்லாமும் எப்படிக் கரைந்து போகிறது. பஞ்ச பூதங்கள் பொருந்திய இவ்வுலகில் காலத்தையும், ஐம்பூதங்களையும் தவிர எல்லாமும் நிலையற்றது. பஞ்சபூதங்கள் உயிர்களாக உருவெடுத்து காலவெளியில் வாழ்ந்து கரைந்து போகிறது. மீண்டும் மீண்டும் உயிர்ப்பதும் பின் இறப்பதுமான இந்த சுழற்சி மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பதைத் தவிர வேறு எதுவுமே உண்மை இல்லை அல்லவா. காலத்தின் நீண்ட பக்கங்களில் நாம் எழுதுவதற்கு அன்பைத் தவிர வேறு உன்னதமானது  எதுவும் இல்லை. காலம் எப்போதும் ஒரு அன்பை விட்டுவிட்டு  வேறொரு வகை அன்பை தேடி அலையும் பயணியைப் போலவே எண்ணத்  தோன்றுகிறது. அவ்வாறான  அன்பு கிடைக்குமிடங்களில் இளைப்பாறி மீண்டும் பயணத்தை தொடர்கிறது என்றவாறு பலவித சிந்தனை ஓட்டங்கள். ஒரு தலையில்லாத கிரேக்க சிலையிடம் இருந்து இத்தனை சிந்தனைகளா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. பெரும்பாலும் பெரிய பெரிய மன்னர்கள், சாம்ராஜ்யங்கள் எல்லாவற்றையும் அருங்காட்சியகத்தில் அல்லது கோவில்களில் காணும் போது எப்போதும்  தோன்றும் எண்ணக் குவியல்கள் தான் அப்போதும் வந்து போனது.





                                                லூவ்ர வெளித் தோற்றம் மேலே

லூவ்ர அருங்காட்சியகம் மிகவும் பெரியது ஆனால் ஒரு மணி நேரத்தில் பார்க்க முடிந்தது ஓரிரு இடங்கள் மட்டுமே. நீங்கள் கலா ரசிகர் என்னும் பட்சத்தில் 2 நாட்கள் எடுத்து ஒவ்வொரு அறையையும் பொறுமையாகப் பாருங்கள். ஓவியங்களை பார்த்து அதை நமது பாணியில் புரிந்து கொள்ளவும் நமது சிந்தனையில் இருத்தி அந்த ஓவியர் அதை வரைந்த காலத்தை புரிந்து கொள்ளவும், அந்த ஓவியர் அதை வரையும் போது என்ன மனநிலையில் இருந்திருப்பார் என்பதையும் எண்ணினால் அந்த ஓவியம் காலத்தைக் கடந்து நமது மனவெளியில் உறைந்து இருக்கும். இதைப் போலவே ஒவ்வொன்றையும் ரசித்து நுகரும் அளவு நேரமும், அப்படிப்பட்ட மனமும் வாய்த்தால் இந்த வாழ்க்கை இந்த பூமியிலேயே நிச்சயம் சொர்க்கமாக விளங்கும் என்பதையும் இங்கே பதிவு செய்ய வேண்டும்.  

லூவ்ர அருங்காட்சியகம் பார்த்து முடிந்ததும் அதற்கு வெளியிலேயே ஒரு உணவகம் இருந்தது. அங்கே சாப்பிடும் போதே கொஞ்ச நேரம் போனை சார்ஜ் செய்து விட்டு அடுத்ததாக ஒரு வாடகை டாக்ஸி (ஊபர்) பிடித்து அருகில் இருந்த வரலாற்று சிறப்பு மிக்க பாரிசின் அடையாளமாக விளங்கும் ஐஃபில்  டவர் சென்றோம். ஐஃபில் டவர், குஸ்தாவ் ஐஃபில் என்பவரால் கட்டப்பட்டது.  இந்த இரும்பு கோபுரம் 81 அடுக்குகள் கொண்ட ஒரு கட்டடத்தின் உயரம் கொண்டது. 3 நிலைகள் கொண்ட இந்தக் கோபுரத்தில் முதல் மற்றும் இரண்டாம் நிலைகளில் உணவகங்கள் மற்றும் பார்வையாளர்கள் சுற்றிலும் தெரியும் இயற்கை காட்சிகளை பார்க்கவும் வசதிகள் உள்ளது. மேலே இருக்கும் மூன்றாவது அடுக்கில், குஸ்தாவ் ஐஃபில் அவர்களின் வீடும், பார்வையாளர்கள் பாரிசைப் பறவைப் பார்வையாக பார்வையிடும் தளமும் உள்ளது. ஐரோப்பாவிலேயே மிக உயரமான பார்வையிடும் தளமாக இந்த மூன்றாவது நிலை விளங்குகிறது என்பது கூடுதல் சிறப்பு.

இருட்டிய பின்னர் இரவு பனிரெண்டு மணி வரை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, அந்த ஒரு மணி நேரத்தின் முதல் ஐந்து நிமிடங்கள் மட்டும்,  ஐஃபில் டவர் பொன்னிறமாக ஒளிரும். கிட்டத்தட்ட 12,000 விளக்குகள் பொருத்தப்பட்ட  ஐஃபில் டவர் பொன்னிறமாக மின்னி ஒளி சிந்தும் காட்சியைக் காணக் காத்திருந்தோம்.  இதை படம் அல்லது காணொளியாக எடுக்கும் அளவுக்கு கூட எங்கள் ஒருவரின் போனிலும் சார்ஜ் இல்லை. இருந்த கொஞ்சம் சார்ஜில்  புகைப்படம் ஒன்றிரண்டு எடுத்து முடித்த பின்பு அனைவரின் போனும் சார்ஜ் இல்லாமல் அணைந்து விட்டது.

இப்போது எப்படி அறைக்கு திரும்புவது என்று தெரியவில்லை. ஏனெனில் போன் அணைந்து விடும் என்று தெரிந்து அட்ரசை மட்டும் குறித்து வைத்திருந்தோம். எனினும் செல்பேசி இருந்தால் மட்டுமே ஊபரை அழைக்க முடியும். ஆனால் நாங்கள் பேசும் ஆங்கிலம் கலந்த அந்த பிரெஞ்சு முகவரியை புரிந்து, எங்களை எங்கள் இடத்திற்கு அழைத்துச் செல்ல டாக்சி எதுவும் கிடைக்கவில்லை. அரை மணி நேரத்திற்கும் மேலாக சார்ஜ் போட முடியுமா என்று அலைந்து  திரிந்தோம். அப்புறம் கொஞ்ச நேரம் டாக்சி பிடிக்க அலைந்து திரிந்தோம். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர அலைச்சலுக்குப் பின் எப்படியோ ஒரு டாக்சி டிரைவர் இரு மடங்கு விலையில்  நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு எங்களை அழைத்துப் போவதாக ஒத்துக் கொண்டார். ஒரு வழியாக 1.5 மணி நேர போராட்டத்திற்குப் பின் நாங்கள் தங்கி இருந்த இடத்தை அடைந்தோம்.

ஒரு பெரிய நகரத்தில் நாம் தொலைந்து போக நமது செல்பேசி வேலை செய்யாமல் இருப்பதே போதுமானதாக இருக்கிறது என்பது எத்தனை பெரிய உண்மை என்பதை நினைத்துக் கொண்டே அறையை அடைய கதவை திறந்து உள்ளே சென்றோம். நாங்கள் தங்கியிருந்த அபார்ட்மெண்ட் ஒரு சிறிய வளாகத்தில் நான்காவது மாடியில் இருந்தது.  கிட்டத்தட்ட 5 முதல் 6 அபார்ட்மெண்ட் வரை இருக்கலாம் என்று எண்ணுகிறேன். அது ஈஸ்டர் வார இறுதி என்பதால் பெரும்பாலான அபார்ட்மெண்ட்டில் ஆட்கள் இல்லாததால்  எந்த அபார்ட்மெண்டிலும் விளக்குகள் பொருத்தப்படவில்லை. அன்றைய ஒரு இரவு மட்டுமே அங்கே தங்க வேண்டிய தேவை என்பதாலும் நாங்கள் அதைப் பெரியதாக எண்ணவில்லை. வளைவான மிகக் குறுகலான படிகளில் நடந்து மேலேறினால் ஒரு படுக்கை அறை, ஒரு சிறிய சமையல் அறை, அதை விட மிகச் சிறிய குளியலறை என்று தீப்பெட்டி அளவு அகலம் கொண்ட எங்கள் அபார்ட்மெண்டை அடையலாம். 

நாங்கள் படிகளில் மேலே ஏற அங்கிருந்த மின்தூக்கியை அழைக்க கணவர் பொத்தானை அழுத்தினார். புதிய ஒரு நகரத்தில், இரவு நேரத்தில், ஒரு ஆள் மட்டுமே செல்லக் கூடிய வகையில் இருந்த அந்த லிஃப்டை ஏன் அழைக்கிறீர்கள் என்று கேட்டு வாய் மூடவில்லை, அந்த லிப்ட் மெதுவாக கீழே வரத் தொடங்கியது. கிட்டத்தட்ட நான்காவது மாடியில் இருந்து மூன்றாவது மாடி வரை வந்த அந்த லிப்ட் ஏதோ தொழில்நுட்ப கோளாறு காரணமாக நான்காவது மற்றும் மூன்றாவது மாடிக்கு இடையிலேயே நின்று விட்டது. அப்படி இசகு பிசகாக நின்று விட்டதால், அதில் இருந்து அபாய ஒலி வரத் தொடங்கியது. அபாய ஒலி நின்றுவிடும் என்று பார்த்தால் நிற்பது போலத் தெரியவில்லை. பலதும் முயற்சித்தும் அந்த ஒலி நிற்கவில்லை. அந்த கட்டடத்தில் யாரும் இல்லாததால் அதை எப்படி நிறுத்துவது என்பதையும்  யாரையும் கேட்க இயலவில்லை. எல்லோரும் படிகளில் வழியே மேலேறி எங்கள் அறைக்குச் சென்ற பின்னும் அந்த அபாய ஒலி தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. குடும்பத்தினர் அனைவரும் ஒரு கட்டத்தில் ஒலியை மீறித்  தூங்கி விட, தூங்க முடியாமல் அன்றிரவு புரண்டு புரண்டு படுத்து ஒரு வழியாக அதிகாலை நேரத்தில் என்னையும் அறியாமல் உறங்கிப் போனேன். அன்று காலை எழுந்த பின்னும் அபாய ஒலியின் வீரியம் குறையாமல் அடித்துக் கொண்டே இருந்தது. அந்த ஒலிப் பின்னணியிலேயே அவசர அவசரமாக கிளம்பி அறையை விட்டு வெளியேறினோம். காலை 9 மணி அளவில் ஐஃபில் டவரை மேலேறிப் பார்க்கும் சுற்றுலாவிற்கு பதிவு செய்திருந்தோம். அதற்காக சென்று வரிசையில் காத்திருந்தோம். பசிக்குமே என்று அருகில் திறந்திருந்த ஒருஉணவகத்தில் அவசரமாக காபி மற்றும் கிரோயிசாண்ட்(Croissant) எனப்படும் வெண்ணையில் செய்யப்பட்ட ரொட்டியை வாங்கிப் பசியாறினோம்.  பாரிசில் நாங்கள் உண்டவரை எங்களுக்கு மிகவும் பிடித்திருந்த உணவு எதுவென்றால் இங்கு கிடைக்கும்  பிரட், கேக் வகைகள் (Pastry) மற்றும்  எங்கேயும் கிடைக்கும் கிரெப்(Crepe) எனப்படும் தோசை போன்ற  ஒரு வகை உணவு எனலாம். கிரெப்பின் உள்ளே பழங்கள்  அல்லது  பீனட்பட்டர் (நிலக்கடலை கூழ்)  அல்லது நட்டல்லா(Nutella) என்ற ஒரு வகை சாக்லேட் கூழ் போன்ற எதுவும் வைத்துக் கிடைக்கும்.  கிட்டத்தட்ட பாரிசு முழுவதும், ஏன் தள்ளுவண்டிக் கடைகளில் கூட கிடைக்கும் ஒரு உணவாக இந்தக் கிரெப் அமைந்தது.  இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்கள் இஷ்டம் போல கிரெப் வாங்கி உண்டார்கள்.  உணவகத்தை பொருத்தவரையில்  அமெரிக்கா அளவிற்கு  வாடிக்கையாளர் சேவை  இருப்பதில்லை.  எனவே நீங்கள்  உணவகங்களில் பெரியதாக  சேவையை  எதிர்பார்க்க  வேண்டாம்.

நின்றோம் நின்றோம் நீண்ட நேரம் நின்றோம் என்று சொல்லும் அளவிற்கு கிட்டத்தட்ட 5 மணி நேர காத்திருப்பிற்கு பின் மேலே செல்லும் லிப்ட்டைப் பிடித்தோம்.  முதலில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். இப்படிக் காத்திருந்து வாயிலை அடைந்த பிறகு இரண்டு அடுக்கு பாதுகாப்பு சோதனை உண்டு.  அதையும் கடந்த பிறகு  ஐபில் டவரின் மேலே செல்ல அதன் நான்கு கால்களிலும்  லிப்ட் வசதி உண்டு . ஆனால்  நாங்கள் சென்றபோது  இரண்டு  மின் தூக்கிகள்  வேலை செய்யவில்லை  எனவே  அனைவரையும்  இரண்டு மின் தூக்கிகள் வழியாகவே  முதல் தளத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.  இதனால்  கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் அளவிற்கு  நிற்கும் நிலை ஏற்பட்டது.  கீழே  வாயிலைக் கடந்து பாதுகாப்பு சோதனைக்குப் பின்  கீழே  நிறைய உணவகங்கள் உண்டு  கூளிர்பானங்கள் தின்பண்டங்கள்  போன்றவை அங்கே விற்கப்படும். அதிக நேரம் வரிசையில் நின்றதனால்  பசி வேறு வயிற்றைக் கிள்ளியது.  வேறு வழியில்லாமல்  குழந்தைகள் சாப்பிட வேண்டும் என்று  சில தின்பண்டங்கள் வாங்கி வர  கணவர் சென்றார்.  அப்படி  சாப்பிட்டு விட்டுத் திரும்பும் போது  பர்சை அங்கேயே  வைத்து விட்டு வந்து விட்டார். 

நல்லவேளை தூரத்திலிருந்து இதை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். எனவே நான் சென்று அந்த  பர்சை  எடுத்து பத்திரப்  படுத்திவிட்டேன்.  ஏற்கனவே நிறைய  தொல்லைகளுடனும், அலைச்சல்களுடனும் சென்று கொண்டிருந்த இந்தப்  பயணம்  பர்சை தொலைத்திருந்தால்  இன்னும் என்ன ஆகி இருக்கும் என்று சொல்ல இயலாது. நல்லவேளை அவ்வாறு நடக்கவில்லை  என்பது  மனதுக்கு ஆறுதலாக இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து பர்சை காணோம் என்று அவர் பதட்டம் அடைய பர்சை திரும்ப கொடுத்துவிட்டு கவனமாக இருங்கள் என்று அறிவுறுத்தினேன். இப்படியாக ஒரு வழியாக  ஐஃபில் டவரின் முதலாவது தளத்தை அடைந்தோம்.  என்னதான் இளவேனில் காலம் என்றாலும் ஐஃபில் டவர் மேலே செல்லச் செல்ல குளிர் அதிகம்.  முன்பே இதை அறிந்து  நாங்கள் அதற்கு ஏற்ப உடைகள் அணிந்திருந்தோம். எனவே மேலே செல்பவர்கள் கண்டிப்பாக குளிர் தாங்கும் உடைகளை அணிவது சிறந்தது.  இல்லையென்றால்  அங்கே வீசும் குளிர் காற்றுக்கு  சிறிது நேரம் கூட அங்கு இருக்க முடியாது. முதலாவது தளத்திலிருந்து  பாரிசை  பார்த்துவிட்டு நிறைய புகைப்படங்களும் காணொளிகளும் எடுத்து விட்டு,  மேலே உள்ள இரண்டாவது தளத்திற்கு செல்லக் கூடிய மின் தூக்கியைப் பிடித்து இரண்டாவது தளத்திற்கு சென்று அங்குள்ள உணவகத்தில் உணவருந்தினோம். மின் தூக்கி முதலாவது மற்றும் இரண்டாவது தளத்திற்கு இடையே எப்போதும் சென்று கொண்டு இருக்கும். அதைப் பிடிப்பது அத்தனைக் கடினம் அல்ல. அதிக நேரமும் காத்திருக்க வேண்டாம். முதலாவது தளத்தில் கண்ணாடி பதித்த தரைகள் உண்டு அதில் நின்று கீழே பார்த்தால் மனிதர்கள் எறும்பு போல சிறிதாகத் தெரிந்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.


ஒருவழியாக ஐபில் டவரின்  சுற்றுலா முடிந்து  கீழே இறங்கினோம். ஒரு உணவகத்தில்  துரிதமாக  உணவு உண்டு விட்டு  ஊபரைப்  பிடித்து  மீண்டும் நெதர்லாந்து  செல்லும்  இரயிலைப்  பிடிக்க  இரயில் நிலையத்தை அடைந்தோம்.  அந்த இரயில் நிலையத்திற்கு அருகிலேயே நினைவுப் பரிசுகள் விற்கும் கடைகள் நிறையஇருந்தது.  அதில்  பாரிசின் ஞாபகமாக,  ஒரு சில பொருட்கள் வாங்கிவிட்டு  இரயில் நிலையத்திற்கு வந்து  காத்திருந்தோம்.  இரயில் வந்து நின்றதும்,  பாதுகாப்பு சோதனை முடிந்து,  நாங்கள் பதிவு செய்திருந்த  கம்பார்ட்மெண்ட்டை  அடைந்தோம்.  அந்த கம்பார்ட்மென்ட்  கிட்டத்தட்ட இரயில் வண்டியின் இறுதியில் இருந்தது.  முதல் கம்பார்ட்மெண்டில் இருந்து,  நாங்கள் ஏற வேண்டிய கம்பார்ட்மெண்ட் வரை  செல்வதற்குள்,  மழையான மழை.  ஓரளவு நனைந்தே  பாரிசை விட்டுக்   கிளம்பினோம்.  அடுத்த நான்கு மணி நேரம்  ஈரமான அந்த உடைகளுடனே  பயணம் செய்ய நேர்ந்தது.  இப்படியாக பாரீஸ் அனுபவம் அதிக அலைச்சலாக  கொஞ்சம் நெருடலாகவே அமைந்தது.

அடுத்து வரும்  பயண அனுபவங்களாவது சிறப்பாக அமையுமா என்பதை  அடுத்த பதிவில் பார்க்கலாம்.

முந்தைய பகுதியை  வாசிக்க இங்கே சொடுக்குங்கள்.