கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சாகித்ய விருது, பத்ம விருது, தேசிய விருது, பல்வேறு திரைத்துறை சார்ந்த விருதுகள் என்று அவர் கடந்து வந்த நெடிய பாதையின் ஒரு மைல்கல்லாக இப்போது ஞானபீட விருதினைப் பெற்றுள்ளார். விருது பெற அவர் தனிப்பட்ட விதத்தில் முயற்சி செய்தார். அதிகார மையத்தின் பல்வேறு நபர்களுடன் இணக்கமாக இருக்கிறார் என்ற செய்திகளை முந்தைய விருதுகளின் போதே கேள்விப்பட்டோம். இப்போது ஞானபீட விருது அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் அதே விதமான விமர்சனங்கள் எழுந்துள்ளது. இன்றைய கால கட்டத்தில் விருதுகள், அங்கீகாரம் என்பதெல்லாம் ஒரு விதமான சமூக உடன்படிக்கை என்று கொள்ளலாம். அதாவது நீ இதைச் செய்தால் நான் உனக்கு இதைச் செய்வேன் என்பதோ அல்லது உன்னுடைய அரசியல் அல்லது சமூக நிலைப்பாட்டில் உன்னுடன் நிற்கிறேன் என்பதோ அல்லது
அதிகார மையங்களின் உச்சத்தில் உள்ளவர்களுடன் ஒருவனாக இருப்பதற்கு இன்னின்ன தகுதிகள் வேண்டும், எனவே இந்த விருதின் மூலம் அத்தகைய இடத்திற்கு என்னை உயர்த்திக் கொள்கிறேன் என்பதோ தான் இந்த எழுதப்படாத உடன்படிக்கைகள். அப்படியான ஒரு விஷயத்தை நிகழ்த்திக் காட்டுவதற்குக் கூட தனித்திறன் வேண்டும்.
உதாரணமாக ஒரு அலுவலகத்தை எடுத்துக் கொள்வோம். அங்கு வேலை செய்யும் ஒரு நபருக்கு அவருடைய தகுதியைத் தாண்டி, அவருடைய மேலதிகாரிகளுடன் அவர் கொள்ளும் இணக்கமான போக்கு, சுயவிளம்பரம் செய்து அதன்வழி ஆதாயம் அடையும் போக்கு ஆகிய பல்வேறு காரணங்களுக்காக பதவி உயர்வு, பரிசுகள் ஆகியன வழங்கப்படுகின்றன. இதையெல்லாம் நாம் விமர்சனம் செய்வதில்லை. ஏனென்றால், அப்படிச் செய்வது அதிகார மையத்திடம் இருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டும். ஊருடன் ஒட்டி வாழ்வது அல்லது கொஞ்சம் நீக்கு போக்கு தெரிந்த நபராக வாழ்வது என்பது இன்றைய சூழலில் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்று. தனிப்பட்ட விதத்தில் நாணல் போல வாழ்ந்து விட்டு, பிறரை விமர்சனம் செய்வது முறையன்று. தமிழ் மொழியின் ஆகச் சிறந்த படைப்பாளிகள், திரை நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் போன்ற பலருக்கு எந்த விருதும் வழங்கப்பட்டதில்லை. உண்மையிலேயே எதையாவது கேள்விக்கு உட்படுத்த வேண்டுமென்றால் திரு. கக்கன், திரு.காமராஜ், திரு. நாகேஷ், திருமிகு மனோரமா, திரு. சிவாஜி கணேசன், திரு. கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்ற பலருக்கு ஏன் பாரத ரத்னா போன்ற உயரிய விருதுகளோ அல்லது பத்ம விருதுகளே வழங்கப்படவில்லை என்பதைத் தான் நாம் கேள்வி கேட்க வேண்டும். நாளையே வைரமுத்து அவர்கள் பாரத ரத்னா விருது பெறலாம். அப்போதும் நாம் கண்ணாடி மாளிகைக்குள் நின்று அவர் மேல் விமர்சனக் கல்லெறிய வேண்டாம். தமிழின் நெடிய இலக்கிய வரலாற்றில் மதிக்கப்படாத, விருதுகளால் அலங்கரிக்கப்படாத, மறக்கப்பட்ட படைப்பாளிகள் தான் மிக அதிகம். வைரமுத்து அவர்கள் அந்தப் படைப்பாளிகளின் பிரதிநிதியாக இத்தகைய விருதினைப் பெற்றுள்ளார் என்பதாகக் கூட அவருடைய இந்த வெற்றியைப் பார்க்கலாம். எனினும் பல கவிதைத் தொகுப்புகள், பல்லாயிரம் சினிமாப் பாடல்கள் என்று அவருடைய தனிப்பட்ட தகுதிகளே இந்த விருதுக்கு போதுமானதாக இருக்கிறது. தமிழில் ஆழ்ந்த புலமை, தேர்ந்த சொல் நயம், கவிதை மொழி என்று அவர் போற்றத்தக்க சாதனையாளர் தான். எனினும் அவர் மேல் உள்ள பாலியல் குற்றச்சாட்டுகள், இந்த விருதுக்காக அவரை மனம் திறந்து பாராட்டும் ஒரு மனநிலையைத் தரவில்லை என்பதையும் இங்கே பதிவு செய்ய வேண்டியதாக இருக்கிறது.
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் சேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்
இது ஒரு பொன்மாலைப் பொழுது...
வானம் அளவு இல்லாவிட்டாலும், சில நிமிட நேரம் தோன்றும் வானவில்லாக மகிழ்விக்கும் கவிஞர் வைரமுத்து என்ற தனி நபரின் வெற்றிக்காக அவரை வாழ்த்தலாம்.
சமீபத்தில் நான் வாசித்த அவருடைய மகா கவிதை நூல் குறித்த என்னுடைய விமர்சனத்தை இங்கே படிக்கலாம்.
கவிஞர் கண்ணதாசன் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து பாடல்களையும் ஒப்பிட்டு பேசிய என்னுடைய உரைக்கான இணைப்பும் இங்கே உள்ளது. (2:13இல் எனது உரை தொடங்குகிறது)
#ஞானபீடவிருது
#கவிஞர்வைரமுத்து

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக