சின்னஞ்சிறு பிள்ளைகளின்
சிறகுகளைப் பிய்த்தெறியும் மடமைகண்டு
நன்னீர் நதிகளில் அமிலம் சுரக்கிறது
வஞ்சிகளின் கனவுகளைக் கரியாக்கும்
எப்ஸ்டீன்களின் உலகில் ஆறாமறிவு
முதலாம் ஊனமாக அறியப்படுகிறது
ஆறுகரங்களுடன் எட்டுதிக்கும் ஆளும்
வளைக்கரங்களை வீழ்த்தும்
கொடுவாளின் குருதி தெறித்து
நிலவு செம்மை தீட்டிய கதிரோனாகிறது
சமையல் கூடங்களில்
சிறைப்பட்ட அறிவுச்சுடர்களின்
வெப்பம் பெருகி
நிலமெங்கும் எரிமலை வெடிக்கிறது
அலைகள் நிலத்திடம் கோபித்து
கிளிஞ்சல்களை விடுத்து
கடல் பாசிகளைக் கொணர்கிறது
வானம் வண்ணங்களை விடுத்து
இருண்ட மேகங்களை
ஆகாயமெங்கும் போர்த்துகிறது
சூரியன் காற்றில் உலர்த்தாத
சுடு கதிர்களைச் செலுத்தி
பங்கயத்தின் இதழ்களில்
கருமை பூசுகிறது
வெண்பனி இதமாய் வருடாமல்
தன் குளிர்க் கரங்களால்
இலையற்ற மரங்களுக்கு
பனி வளையங்களைச் சூட்டுகிறது
அன்பே ஆருயிரே
அகிலம் காக்கும்
தெய்வமேயெனும் புகழுரைகள்
உடன்கட்டை நெருப்பில் கருகிய
மலர்களின் மேல்
ஆகுதியாய்ப் பொழிகிறது
புலனத்திலும் உள்பெட்டியிலும் நிறையும்
மகளிர்நாள் வாழ்த்துக்களில் இடம்பெறும்
வெற்றுச்சொற்களின் கனம் தாளாது
பூமி சற்றே சுழலாமல் உறைகிறது
வருடத்தின் ஒருநாள் தவிர
ஏனைய நாளெல்லாம்
ஒடுக்கப்படுவதா சமத்துவம்?
விரும்பாத செயல் தவிர்க்க
விடியாத வைகறையா நல்வாழ்வு?
சமநீதி, சமஉரிமை சற்றும்
வாய்க்காத மண்ணகமா எம்வீடு?
சடுதியிலே தீர்ப்பெழுதி
தீக்குள்ளே தெளிவதுவா கற்புநெறி?
வற்றாத ஜீவநதி நிலமெங்கும்
பாய்ந்தோட தடைபோடா
அருங்குணமே அறமாகும்
வான்மழையின் ஒரு துளியை
எங்கு விழவேண்டும் எனாத
நற்பண்பே அன்பாகும்
வலசை போகும் புள்ளினத்தை
தங்கக் கூண்டொன்றில் தள்ளாமல்
தவிர்ப்பதே பொதுநலமாகும்
நுரையீரல் காற்றாக
நிறைந்துள்ள பெண்மையினை
சமானமாய் ஏற்பதுவே நல்லொழுக்காகும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக