மண், காற்று, நீர், நிலம், ஆகாயம் என்று அனைத்தும் மௌனம் கலைத்து பேசினால் எப்படி இருக்கும். பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றின் அழகியலை, அது உயிர்களுக்கு அளிக்கும் கொடையை, பஞ்ச பூதங்களின் அதிசயத் தன்மையை மீள் பார்வை செய்யும் இந்தக் கவிதைப் புத்தகம் ஒரு அறிவியல் கையேடாகவும், அதைக் தமிழ்க் கவிதை வடிவத்தில் காணும் போது, அழகிய தமிழ் கவியமுதத்தை பருகும் நல்வாய்ப்பாகவும் நெஞ்சம் அள்ளுகிறது. இன்னொரு முறை இந்த பூமி எத்தகைய கருணை வாய்ந்தது என்று எண்ணிப் பார்க்க ஓர் அரிய சந்தர்ப்பமே இந்த மகா கவிதை எனலாம். ம - மண், கா-காற்று, க - கனலாகிய நெருப்பு, வி- விசும்பு சுட்டும் வெளி, தை யில் உள்ள தகரம் - தண்ணீர் என்று இந்த நூலின் உள்ளடக்கம் இந்த நூலின் தலைப்பிலேயே அமைந்துள்ளது என்று நூலாசிரியர் உரையிலேயே கவிஞர் வைரமுத்து குறிப்பிடுகிறார். இந்த பூமி எப்படிப்பட்ட கொடை என்பதை எண்ணிப் பார்க்கவும், பூமியின் கருணையை எண்ணி நெகிழவும், பூமி ஏனைய கிரகங்களை விட எவ்வாறு பல்லுயிர் காக்கும் அன்னையாக விளங்குகிறது என்பதையும் தெள்ளத்தெளிவாகவே விளக்குகிறார்.
புதன் எப்போதும் ஒரு பக்கம் பகல்; 425 பாகை வெப்பத்துடனும், எதிர்மத்தில் 175 பாகை குளிர் கொண்டது. இத்தனை வெப்பத்திலோ, குளிரிலோ உயிர்கள் பிறந்து உயிர்த்திருப்பது கடினம். ஒளியை சிதறச் செய்ய காற்றற்ற கோள்.
வெள்ளி(வீனஸ்) சூரியனின் சுடுபக்கத்திற்கே முகம் காட்டும் கோள். ஓராண்டுக்கு ஒருமுறையே சுழல்வது. 400 பாகை வெப்பம் கொண்ட கொதி கோள். எண்ணெய் கடலும், அமில மழையும் அங்கே சாதாரணம்.
செவ்வாய் கோள் துருப்பிடித்த இரும்பு. அதன் வாயுமண்டலத்தில் உயிர் வளியோ சொற்பத்திலும் சொற்பம். புற ஊதாக் கதிர்களின் அணுஉலை வெப்பம் உயிர்களை கருக்கிடும் அங்கு.
1330 பூமிகளை நிறைத்து வைக்கும் கொள்ளளவு கொண்ட வியாழன் கிரகத்தில் அமோனியா-நைட்ரஜன்-மீத்தேன் கலந்த நச்சு சகதி. அதன் கீழே உள்ள உலோகப்பாறை, அங்கு நிலவும் 10,000 பாகை வெப்பத்தில் நதியாக உருகி ஓடிக்கொண்டிருக்கிறது.
சனிக்கிரகம் மனித எலும்புகளை ஊடுருவி உடைக்கும் குளிர் கொண்டது. வளி மண்டலத்தில் 95 விழுக்காடு ஹைட்ரஜனும் 5 விழுக்காடு ஹீலியமும் கொண்டது.
யுரேனஸ் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் கொண்ட வாயு மண்டலமும் ஒரு இரவு விடிய வேண்டுமென்றால் 42 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதே எண்ணிக்கையில் ஆண்டுகள் பகல் இருள வேண்டும் என்றாலும் தேவைப்படும்.
நெப்ட்யூன் சூரியனை ஒரு சுற்று வர 165 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும்.
புளூட்டோ சூரியனை ஒரு சுற்று சுற்றி வர 250 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும்.
ஆக தண்ணீரும், உயிர்வளியும், குளிரில் இருந்து காக்கும் கதிரும், பயிர் விளைக்க மண்ணும், உணவாகும் தாவரமும், கனி தரும் தருவும், உயிர் பேண பலவிதமான உயிர்களை படைத்தளித்துள்ள பூமியைத் தவிர அறிவியல் தொடும் தூரம் வரை மனிதனும் ஏனைய உயிரினங்களும் வாழத் தகுதி படைத்த கோள்கள் எதுவும் இல்லை.
மண்ணென்னும் மங்காய்
நீ நன்மையே புரிகுவாய்
பனியோ மழையோ
வெயிலோ பாலைவனமோ
பொருள் இல்லா உயிர்களுக்கும்
அருள் பாலிப்பாய்
கஞ்சிக்கில்லையெனில்
கடல் கொடுப்பாய்
மண் இழந்த குடிகளுக்கு
மலை கொடுப்பாய்
தாயே! நீ நல்லை
பொய்யொன்றுமில்லை
என்று பூமியைத் தங்கம் என்று கொண்டாடுகிறார். ஏனைய கோள்களில் பிறக்க நேர்ந்தால் என்னவாகும் என்பதையும் அவர் எச்சரிக்கையாக இவ்வாறு சொல்கிறார்.
ஒருக்கால் நாங்கள்
புதனில் பிறந்திருந்தால்.............
ஒரு பக்க வெப்பத்தில்
எங்கள் மாமிசம் எரித்திருக்கும்
மறுபக்கக் குளிரில்
எலும்புக்கூடுகள்
உறைந்திருக்கும்
வெள்ளியில் பிறந்திருந்தால்.....
உலையிரும்பில் வீழ்ந்த
எறும்புநிலை எய்தியிருப்போம்
அங்கே வளிமண்டலம் கடந்து
உள்ளேகும் வெப்பம்
வெளியேற வழியில்லை
சக்கர வியூக அபிமன்யுபோல
உட்புகும் வெப்பத்தைக்
கரியமில வாயு கைதுசெய்து விடுகிறது
பெயர் தான் காதல் தேவதை
உண்மையில் பூதகி
செவ்வாயில் பிறந்திருந்தால்.....
இரும்பு குடித்த உயிர்வளி போக
எமக்கேது மிச்சம்?
அதன் குளிர்தாங்கும் ஜீவராசிக்குச்
சூரியனின் தோல்வேண்டும்
வியாழனியில் பிறந்திருந்தால்....
அது திடப்பொருளே இல்லை
பத்தாயிரம் மைல்
ஆழங்கொண்ட நச்சுக் குழம்பு
பூமியை ஆங்கு புதைத்தேவிடலாம்
பூமியே! தாயே!
என் தங்கமே!
நீ மட்டும்தான்
கோளாறில்லாத கோளம்
பூமி சூரியனிலிருந்து இருக்கும் தொலைவு, அதன் சாய்மானம், அதன் புவியீர்ப்பு விசை என்று பலவும் கச்சிதமாக அமைந்திருப்பதாலேயே இங்கு உயிர்கள் வாழவும், அவற்றின் தொடர்ச்சி தொடரவும் இன்னும் இடமிருக்கிறது.
முக்கால் பாகம்
நீர்கொண்ட கோளம் இது
ஆயின்,
நீரகம் என்றுதானே
பெயர் துலங்க வேண்டும்?
மண்ணகம் என்று பெயர்சூட
ஏது காரணம்?
எனக் கேள்வி கேட்டு
மானுடத்தின்
உச்சங்களையும் எச்சங்களையும்
எழுதிச்செல்வது
மண்ணென்ற ஊடகமன்றோ?
என்று பதிலையும் தருகிறார். அப்படியே மனிதர்களுக்கு மட்டும் மண் சொந்தமல்ல என்பதையும் உரக்கச் சொல்கிறார்.
மூடிவைத்த கனிமங்களும்
முட்டிவரும் தாவரங்களும்
தேக்கி வைத்த நீரும்
திரட்டிவைத்த நுண்ணுயிரும்
ஓடியாடும் விலங்குகளும்
உலவித்திரியும் காற்றும்
சேமித்த வானமும்
சேகரித்த தீயும்
உனக்கே உனக்கல்ல
நிகழ்கால மனிதா !
நீ கால்நடையாய் வந்த
ஒரு பயணி
பூமியை
நீ நுகர முடிவது
ஐம்புலன் அளவுக்குத்தான்
நுகர்ந்தாயா
போ ....போய்விடு....
வாழும் உயிர்கட்கும்
வந்துகொண்டிருக்கும்
பயணிகட்கும் வழிவிடு
உன் குழி
எவ்வளவு கொள்ளுமோ
அவ்வளவே உன் மண்
என்று எச்சரிக்கையும் விடுக்கிறார்.
அடுத்ததாக ஒவ்வொரு ஐம்பூதம் பற்றியும் மனித குலத்திற்கு அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் பேசுகிறார் கவிஞர்.
வள்ளுவ ஞானியும்
கடவுள் வாழ்த்தருகே
வான்சிறப்பு வைத்தனன் ஏன்?
முதல் அதிகாரம் கிழிந்துபடில்
மழையே கடவுளாகும் சாத்தியம் கருதித்தான் ....
ஒரு விழுக்காடு நன்னீர்தான்
யுகம் யுகமாய்ப்
புழங்கப்படுகிறது
மரணத்தைப் போல
புத்தர்
தாகசாந்தி செய்ததும்
மற்றும்
போதிமரம் குடித்த மிச்சமும்
இன்றைய தண்ணீரின்
அன்றைய பாகம் தான்
என்று நாம் குடிக்கும் இன்றைய நீர் அன்றைய டைனோசர் குடித்த நீரின் ஒரு பகுதி தான் அன்று புத்தருக்கு தாக சாந்தி வழங்கிய நீர், அலெக்சாண்டர் குடித்த நீர், இயேசு கிறிஸ்து குடித்த நீர் என்ற ஆச்சரிய உண்மையையும் சொல்கிறார். நீர் இன்று கழிவு நீர் ஓடும் கால்வாயாய், பன்றிகள் குடியிருக்கும் பள்ளியறையாய், ரத்தக் கண்ணீர் போல கழிவு சாயம் மிதக்கும் நீர் என்று நீரே நஞ்சாகிப் போயிருக்கும் நிலைமை எண்ணி துக்கம் கொள்கிறார். இறுதியில்
வடிவமற்று
நிறமற்று
பூமிக்கு வந்துபோன
தேதிகளற்று
மண்ணின் மூலகமாய்
மீண்டும் சுற்றிவரும் மேகமாய்
வாழ்வின் பயன்பாடு பொருளாய்
அழிவுக்கு சென்று - மீண்டும்
அழியாப் பொருளாய்
நான் நீயாக வேண்டும்
நீர்க் கடவுளே!
என்ற வேண்டுகோள் வைப்பதன் மூலம் நீரை அவர் எந்த உயரத்தில் வைக்கிறார் என்பது புலப்படும்.
நீருக்கு அடுத்ததாக வைக்கப்படும் ஐம்பூதம் தீயாகும்.
ஒரு மொத்த மலையை
மிச்சமின்றி அணைப்பதற்கு
ஒரு பறவையின்
சிறிய சிறகு சிரமமுறுவது போலவே
எந்தச் சொல்லால் உன்னை
முழுமையாய் அளாவுவதென
மூச்சிரைக்கிறது மொழி
என்று தீயை பற்றிய முன்னுரையில் சொல்கிறார்.
பேரண்டப் பெரும்பொருளே
ஆதிப் பரம்பொருளே
உயிர் மூலமே
உச்ச ரகசியமே என
என்னென்ன சொல்லி விளித்தாலும்
முழுமையுறாது
கடல் வேட்டைக்குப் போனவன்
கிளிஞ்சல் கொணர்ந்த கதையென
ஆதித் தீயை
அண்ணாந்து வணங்குங்கள்
கோள்களே
உங்களை உமிழ்ந்து
உடல் கொடுத்ததும்
உருள்வித்து உயிர் கொடுத்ததும்
ஒளியூட்டி தொழில் கொடுத்ததும்
இன்று வரைக்கும் இருள் கிழிப்பதும்
அந்தத் தாய்த் தீ தான்
கவிஞனுக்குப் பிறக்கும்
சில கைநாட்டுப் பிள்ளைகள் மாதிரி
நெருப்புக்கு பிறந்தாலும்
இருளின் குழந்தைகள்
இந்தக் கோள்கள்
வெறும்
பௌதீக ரசாயனப்
பருப்பொருள்கள்
என்று சூரியனைத் தவிர மற்றைய கோள்கள் யாவும் நட்சத்திரமாகாமல் வெறும் கிரகமாகவே நின்றுவிட்டவை, சமருக்கு செல்லும் வழியில் சாமியாராகிப் போன சக்கரவர்த்திகள் என்கிறார்.
பூமி உயிர்களை
கோள்கள் ஒன்றையொன்றை
சூரியன் பூமியை
பால்வீதி சூரியனை
அண்டத் திரட்டு பால்வீதியை
ஈர்த்துவைக்க
ஈர்ப்பின் அச்சாணியில்
இயங்கும் இந்தப் பேரண்டம்
பேரண்டத்தின் பிரதியே
மனிதன் எனில்
ஈர்ப்புச் சங்கிலியின்
கண்ணிகளே நாமெல்லாம்
ஈர்த்தலும் ஈர்க்கப்படுத்தலும்
பிறப்பு ரகசியம்
ஈர்க்கப்படுவோன் எளியோன்
ஈர்ப்போன் வலியோன் எனப்
பேச்சுலாவும் பேரண்டத்தில்
ஈர்க்கப்பார்
என்பதே கவிஞரின் செய்தியாக அமைகிறது. கணம் தோறும் ஈர்க்கும் பூமி, அதை ஈர்க்கும் சூரியன், மானுடத்தை ஈர்க்கும் காலம் மற்றும் மரணம் என இவற்றில் எதையாவது ஈர்க்க முடிந்தால் நாமே இறையாகப் பொலிவது உறுதி.
மேலும் சொல்கிறார்
பூமிக்குப் பெரிது சூரியன்
பால் வீதிக்கோ சிறிது
சிறு சிறு சிறிது
இருபதாயிரம் கோடி
அரிசி காயும் களத்தில்
ஓரத்தில் ஊர்வலம் போகும்
ஒன்பது எறும்புகள் போல்
நமது சூரிய குடும்பம்
சூரியன் மட்டுமே கட்டெறும்பு
பிரகிரகங்கள் சிற்றெறும்பு
பேரண்டத்தில்
பேரேட்டில் அவை
விடுபட்டிருந்தாலும் வியப்பதற்கில்லை
சூரிய குடும்பம்
தன் தெருவில் குடியிருப்பதே
பால் வீதிக்குப் பரிச்சயமில்லை
கண்ணாடி அணிந்து
கண்டறியும் கடப்பாடுமில்லை
பால்வீதியின் கண்களில்
நட்சத்திரங்கள்
பொருத்தித் தேடினாலும்
சூரியக் குடும்பத்தின்
சுண்டுவிரலும் தோன்றவில்லை
என்று அவர் சொல்லும் போது நிச்சயமாக ஒரு சிறிய துகளிலும் சிறிதான நாமா சின்ன விடயங்களுக்காக அத்தனை கோபப்படுகிறோம், அடுத்தவரை காயப்படுத்துகிறோம், அடுத்தவரை குறைவாக மதிப்பிடுகிறோம் என்று தோன்றுகிறது.
பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்
ஒருவரின் பெருமை என்பது அவருடைய செயலைப் பொறுத்தது என்று இரு வரிகளில் திருக்குறள் கூறுவதை கவிஞர் இப்படிச் சொல்கிறார்.
பெரியனவெல்லாம் பெரியவையல்ல
பிறிதோர் பொருளின் ஒப்பீடு
சிறியதையெல்லாம் பெரியது செய்யும்
செய்யும் செயலின் பயன்பாடு
பால் வீதிக்கு சிறியது என்றாலும், பத்து லட்சம் பூமிகளை தனக்குள் உண்டியலில் போடுவது போலப் போட்டாலும் அதை தனக்குள் கொள்ளும் சூரியன் நமக்காக மட்டும் தீக்குளித்துக் கொண்டிருக்கும் தியாக நட்சத்திரம். எத்தனை எரிந்தாலும் சாம்பலே விழாத தீரா நெருப்பு என்று போற்றுகிறார் கவிஞர்.
எரிமலையின்
அமில திரவமென புறப்பட்டு
பிறந்த குழந்தையின்
பாத வெப்பம்போல்
பூமிதொடும் சூரியச் சூடு
என்னென்னவோ கற்பிக்கிறது
அதாவது கொடுப்பதிலும் சிறந்ததை கொடு என்கிறார்.
ஊருக்கு கொடுப்பதில்
உயர்ந்து கொடு
சீரென்று கொடுப்பதில்
சிறந்தது கொடுவென
உன் மொழியில் ஓதுகிறாய் உலகுக்கு
இலனென்னும் எவ்வம் உரையாமை என்று குறள் கூறும் தன்மையில் இந்த பூமிக்கு தேவையான ஆறாயிரம் பாகை வெப்பத்தை தூர வெளிகளில் சூடாற்றி மேகச் சல்லடையில் வடிகட்டி பூமியின் தாங்குதிறன் பார்த்து வெயிலாக மாற்றி அளிக்கிறது சூரியன். பருத்தி வெடிப்பதும், நூல்கள் பிரிப்பதும், ஆடை வடிப்பதும், அலசி முடிப்பதும், உலர்த்திக் கொடுப்பதும் சூரியனின் கருணை தான்.
தீயே நீ நிலம்
தீயே நீ நீர்மை
தீயே நீ வெளி
நீயே காற்று
அம்பூதங்களின் ஒன்றான நீ
நாற்பூதங்களுக்கும் நாயகன்
அடுத்ததாக கவிஞரின் பாடுபொருள் வளி.
நாசி வாசல் வந்து
உயிரூட்டும் தாயாய்
கண்காணாமல்
உணரப்படு கடவுளாய்
ஒரே பொழுதில்
உலகுக்கே பரிமாறும்
பந்தி அமுதமாய்
பூமிசூழ்
காப்புக் கவசமாய்
பூமிக்குள் இருந்தும் பூமியோடும் பிறந்த காற்று எரிமலைப் பாறைகளில் இருந்து காலம் விடுவித்து பூமியில் போர்த்திய பொக்கிஷமே இந்தக் காற்று. பிறந்த போது ஈர்ப்புக்குச் சிக்காத ஹைட்ரஜன், ஹீலியம் போன்றவையும், வேதிவினைக்கு உட்பட்ட கரியமில வாயுவும் காணாமல் போயிற்று. 19 கிலோமீட்டர் உயரத்திற்கு பூமியை என்னும் ஆப்பிளைச் சுற்றிய ஒரு தோல் போன்றது இந்த வளி. அந்த வளி இல்லையேல்
இன்னொரு நிலாவாகும் பூமி
ஒளியும் மழையுமற்ற நிலாவுக்கு
வானுண்டு; வானிலை இல்லை
பூமியும் நிலாவானால்
மற்றுமொரு
பிரேதக் கிரகம் உருவாகும்
பூமியிடம் நான் விடைபெற்றுக் கொண்டால்
ஒலியை என் கால்களிலும்
மழையை என் கைகளிலும்
எடுத்துக்கொண்டோடி விடுவேன்
கலைந்து போகும்
என் காற்றுக் கூரை
அப்போது
பூமிக்கு மேலிருக்கும்
வானம் நிர்வாணம்
அடைக் கோழியைக் கொத்திவிரட்டிப்
பாம்பொன்று முட்டையைச் சூழ்வதுபோல்
பூமியை சூரியன் புறங்காணும்
அரண் இல்லாத ஆகாயத்தில்
பூமி மேல்படையெடுக்கும்
வெயிலும் குளிரும்
என்று காற்றின் முக்கியத்துவத்தை கவிஞர் பாடுகிறார். பூமியைத் தாக்க வரும் விண்கல்லைக் கூட எரியுண்டு போகச் செய்யும் சக்தி படைத்த வளி, ஒரு சித்திரக்காரனும் கூட. கீழ் மேல் வானங்களில், சூரிய ஒளியைக் குழைத்து வண்ணங்கள் செய்யும் ஜாலக்காரன்.
ஆணியின்றி அடிக்கப்படும்
ஓவியங்களை நழுவவிடாத
வானமொன்று வாங்க வேண்டும்
என்று வண்ணங்களை தொடாமல் வண்ணத்தை அப்படியே ஓவியமாக காட்சிப்படுத்தும் வளிக்கு புகழாரம் சூட்டுகிறார் கவிஞர். வளியில் வந்துதித்த கரியமில வாயுவே பூமிக்கு பச்சை அளித்த வள்ளல், வண்ணங்கள் யாவும் காற்றின் அலைவரிசையால் மட்டுமே சாத்தியமாகிறது என்பதெல்லாம் வளிக்கு மட்டுமே இருக்கும் தனிப்பெரும் பெருமை.
வளி அப்படியே மென்மையாகவே நீடித்து இருப்பதில்லை. சில நேரங்களில் அதுவும் வெறி கொண்டு சுழன்றாடி புயலாகும். அதன் கூவலில் ஆகாயத்தின் காது செவிடாகும்.
டொர்னாடோ ரூபங்கொண்டால்
எருமைகள் பறக்கும்
வானத்தில் பறவைகளாய்
நான் கடக்கும் நேரம்
காதுகள் கழற்றி ஏறி
பத்து லட்சம் காளைகள்
ஒரே சமயம் கதறும் ஓசை
பத்தாயிரம் ரயில்கள்
ஒரே பொழுதில்
கடக்கும் வல்லொலி
போகும் வழியெங்கும்
பூமலர்த்திப் போனவன்தான்
கடக்கும் வழியெங்கும்
திட்டமிடாத மையங்களை
விட்டுச் செல்கிறேன்
வளியின் ஆக்க சக்திகளும் அரிதினும் அரிதானவை தான்.
திணிந்த மண்ணோ
செறிந்த கல்லோ
உருக்கு உலோகமோ
தோல் துளை நரம்பு
கஞ்சக் கருவிகளோ
விலங்கோ பறவையோ
மனிதனோ மரமோ
என் தலைமையில்
அதிர வேண்டும்
அந்த அதிர்வை
ஒலியாக்குவேன்
ஒளியை மொழியாக்குவேன்
மனிதத் தேவையில் நான்தான்
முன்னிற்கும் முதல் மூலம்
உணவில் திரிபா
உதறிவிடலாம்
நீரில் அழுக்கா
நிராகரிக்கலாம்
காற்றில் மாசோ
புகையோ தூசியோ
சுவாசித்தே தீர வேண்டும்
அது
நுரையீரல் தர்மம்
சுவாசச் சட்டம்
அப்படிப்பட்ட வளியில் மாசு ஏற்பட்டால் அதை சரி செய்யும் தீர்வும் மனிதர்களிடம் இருக்கிறது. புட்டியில் அடித்து வளி விற்கப்படும் போது அதை வாங்குவதற்கு வழியின்றி மனிதக் கூட்டம் மடிந்து சாவதைத் தவிர வேறு வழி இல்லை.
மானுடம் காப்பாற்றிய காற்றை
மானிடன் காப்பாற்றும் காலம்
அபாய தூரத்தில் அண்மித்துவிட்டது
மேலும் கெட்டிப் பட்டுவிடில்
திடப்பொருளாய்
செலுத்த வேண்டியிருக்கும் காற்றை
ஊசி வழி காற்றூட்டுவது
உசிதமா தெரியவில்லை
இருள் சூழாத இரவும்
பொய் சேராத உலகும்
சத்திய சம்பவம் இல்லையெனுமாறு
சுத்த சுவாசக் காற்றும்
கிண்ணத்தளவும் கிட்டாது போகும்
இதை நாம் தடுக்க அறுந்தே போகாத வாயுத் சங்கலியில் ஒவ்வொரு மனிதனும் ஒரு கண்ணி என்பதை உணர வேண்டும்.
நிலக்கரிச் சுரங்கம்
நீச்சல் குளமாகட்டும்
பெட்ரோலியப் பொருள்களில்
மிட்டாய் செய்வோம்
சூரியனைச் சேமிப்போம்
சுவடில்லாமல் தீயெரிப்போம்
புல்வெளியில் நடந்தாலும்
கறைபடியாத
பனித்துளியின் பாதங்களைப்போல்
கரிப்படியாத அடுப்புகளைக்
காணிக்கை செய்வோம்
சூரிய சக்தியைச்
செல்லமாய் சிறைசெய்து
ஊருக்கு ஊர் கட்டமைப்போம்
சாம்பல் பறக்காத
மின்நிலையங்களை
இவ்வாறாக காற்றை காப்பாற்றவில்லையெனில் பஞ்சமா பாதகம் ஐந்தல்ல, காற்றை மாசுபடுத்தினால் ஆறென்றறிக என்கிறார் கவிஞர். காற்றை பற்றி இவ்வாறு சொல்லி முடிக்கிறார்.
எந்த ஒன்றைக்
இன்னொன்று கொண்டு
நிரப்பவியலாதோ - அதைக்
கடவுள் என்பர் சிலர்
காற்றென்போம் நாம்
கடைசியாக கவிஞர் பேசும் கருப்பொருள் வெளியாகும். வெளி என்பது எத்தகையது என்று கவிஞர் விவரிக்கும் போது நமக்கும் நடுமண்டையில் ஓங்கிக் குட்டியது போல் இருக்கிறது. இவ்வளவு சிறியவரா மனிதராகிய நாம் என்ற எண்ணம் வருகிறது.
பலகோடி நட்சத்திரங்கள்
தனித்தும் கூட்டமாயும் இயங்கவல்ல
ஒளித்தொகுப்பு பால்வீதி
பல்லாயிரங்கோடி அண்டங்களின்
பெருவெளியே பேரண்டம்
இதில் சூரியமண்டலம்
சுண்டைக்காய் விதை
இடிக்கப்பட்ட கற்கண்டுத்துகளின்
நொறுக்கப்பட்ட துகளின் துகளே
சூரிய மண்டலம்
இதில்
பூமியென்ற
பொருட்டில்லாத மலர்மீது
ஒட்டிக்கொண்டிருக்கும்
மகரந்தத் துகள்களே
மனிதக் கூட்டம்
என்கிறார் கவிஞர். இத்தனை சிறிய மனித இனத்துக்குத் தான் எத்தனை துயரங்கள், எத்தனை கவலைகள், வாழ்ந்து முடிவதற்குள் எத்தனை ஆசைகள். இத்தனை கோடி நட்சத்திரங்கள், அவற்றின் இடுக்குகளில் நிறைய புழுதிகள், தப்பித்த வாயுக்கள், ஒரு பனித்துளிக்குள் அடக்க முடியாத வானத்தைப் போல பால்வெளியானது பல ஒளியாண்டுகளைக் கடந்தும் விரிந்து கொண்டே இருக்கிறது.
பேரண்டப் பெருங்கடலில்
கொத்துக் கொத்தாய் கிடக்கும்
முத்துக்கூட்டம்தான் பால்வீதி
இடம் பொருள் தூரம் அளக்க
மனிதன் பிடித்துவைத்து
கடவுளென்ற கோலும்
மூடிய பேரண்டத்தின்
நகத்தை மட்டுமே
அளக்க முடியும்
பிறந்தநாள் எப்போது என்று தெரியாத பேரண்டம் இந்த கணத்திலும் பிறந்து கொண்டு இருக்கிறது. இந்த கணத்தில் இறந்து கொண்டும் இருக்கிறது. மனிதர்கள் வந்து வந்து போகிறார்கள், கிரகங்கள் தோன்றித் தோன்றி அழிகிறது, நட்சத்திரங்கள் உண்டாகி உண்டாகி உடைகிறது, அண்டங்கள் உருவாகி உருவாகி சிதறுகிறது. எனினும் அண்டம் என்பதும் வெளி என்பதும் எல்லையில்லாமல் விரிந்து எங்கும் வியாபித்து நிற்கிறது. அதில் ஒன்றாக இருக்கும் புதன் கிரகத்தை பற்றி இப்படிச் சொல்கிறார் கவிஞர்.
நானூற்று இருபத்தைந்து பாகை
பகல் வெப்பம்
கபாலம் உருகி காலுக்கு வந்துவிடும்
எதிர்மத்தில் ஐநூறு பாகை
இரவுக் குளிர்
ஓடும் ரத்தம்
செம்பனியாய் உருகிவிடும்
வீனஸ் என்னும் கிரகத்தின் தன்மை இவ்வாறு குறிக்கிறார்.
வீனஸுக்கு கடல் உண்டு
எண்ணெய்க் கடல்
ஆவியாகும் மேகம்
அமில மழை பெய்யும்
வெள்ளிதான்
விடிவெள்ளி இல்லை
செவ்வாய் கோளின் தன்மை இது தான்
இந்த உலர்ந்த கிரகத்தில்
வெப்பம்
அறுபத்தெட்டுப் பாகைக்கும் மேலே
குளிர் உறைநிலைக்கும் கீழே
வாயுமட்டும் உண்டு
உப்பில் சர்க்கரை அளவுதான்
உயிர் வளி
அடுத்ததாக வியாழன் கிரகம்
வெப்பமோ வெப்பம்
உறுதிப் பாறைகளை
ஓடுகுழம்பாக்கும்
தொடர்ச்சியான வெப்பம்
பத்தாயிரம் பாகை
வியாழ வெப்பம்
ஹைட்ரஜனை உருமாற்றியுள்ளது
உலோகப் பொருளாய்
அடுத்ததாக சனி கிரகம்
வாழ வழியற்ற
இதன் வளிமண்டலத்தில்
தொண்ணூற்றேழு விழுக்காடு
ஹைட்ரஜன்
மூன்று விழுக்காடு
ஹீலியம்
உயிர்த்தோற்றமென்பது
கிரகத்தினும் பெரிய கேள்விக்குறி
முடிந்தால்
ஹைட்ரஜன் எரித்து
சுருக்கமாய் ஒரு சூரியன் செய்யலாம்
அடுத்ததாக யுரேனஸ்
ஹைட்ரஜன் ஹீலியத்தை
உடுத்துக்கொண்ட வாயுமண்டலம்
ஒருபோதும் உதவாது
உயிர்த் தோற்றத்திற்கு
அடுத்ததாக நெப்டியூன்
பதினான்கு நிலாக்களை
இழுத்து வைத்திருக்கும்
நெப்டியூன் வளிமண்டலம்
ஒரு குளிர் மண்டலம்
அதன் வெப்பம்
எதிர்மத்தில்
இருநூற்றுப் பதிமூன்று பாகை
கனத்த போர்வை வேண்டும்
கம்பளி ரோம விலங்குகட்கும்
இறுதியாக புளூட்டோ
சூரியனை ஒருமுறை சுற்றினாலே
புளூட்டோ
கால் நரைத்துப் போகும்
இருநூற்றைம்பது ஆண்டுகள்
எளிதா என்ன?
ஒவ்வொரு கோளையும் பற்றி கவிஞர் சொன்ன பிறகு பூமியைப் பற்றி இப்படிச் சொல்கிறார்.
சூரியனே கடவுள்
பூமியே தெய்வம்
மேக மகராணிகள்
பர்வதங்களில் விட்டெறிந்த
இரத்தின மாலைகளும்
இருகரை இட்டோடும்
திரவ வைரங்களும்
பூமியின் கொடைகள்
பூமிக்கு மட்டுமே
சாசுவதங்கள்
அம்மோனிய நுரைகளும்
மீத்தேன் சகதிகளும்
உடம்புக்குள் உயிர்உறையும் குளிரும்
உறுப்புக்கள் உருக்கும் வெப்பமும்
ஏனைய கோள்களின்
இயல்புநிலை ஆகுமெனில்
பூமி என்பது சாமியா இல்லையா
எல்லாக் கோள்களையும்
எட்டிப் பார்த்த பிறகு
அத்துணை கதவுகளை
தட்டிப் பார்த்த பிறகு
பூமியே என் தெய்வமே என்
மார்பு மண்பட வணங்குவான்
மனிதன்
பூமிகடந்தவன் சொல்வான்
சொர்க்கம்
பூமிதான்
என்று பூமியின் அருமைகளை அழகாக, உவமை நயத்துடன் சொல்லி முடிக்கிறார் கவிஞர். இந்தப் புத்தகம் அறிவியலும் தமிழும் சங்கமிக்கும் ஒரு அருமையான கவிதைத் தொகுப்பு. பூமிக்கும், சூரியனுக்கும், ஐம்பூதங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு உன்னத முயற்சி. உயிர்களின் தோற்றம் முதல் இன்று வரை நமது பாதுகாப்பு அரணாக விளங்கும் பூமியை நாம் எப்படி கருத்துடன் பாதுகாக்க வேண்டும் என்பதையும் பல இடங்களில் வலியுறுத்திச் சொல்கிறார் கவிஞர். இந்தக் கவிதை தொகுப்பில் கவிஞர் எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாமல் அழகிய உவமைகள் மூலம் நமக்கு சூரியக் குடும்பத்தில் இருக்கும் ஏனைய கிரகங்களைப் பற்றி விரிவாகப் எழுதி இருப்பது அருமை. பல அறிவியல் கருத்துக்களைத் தாங்கி வரும் இந்நூல் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று.
முத்தாய்ப்பாக அவர் சொல்கிறார்
மதங்களால் கட்டமைக்கப்பட்ட
அன்றாடங்களில்
அக்கறை கொண்ட ஒருவராய்க்
கருதேன் கடவுளை ஒருபோதும்
வேண்டுமானால்
பிரபஞ்சத்தின் 'ஒழுங்குவிதியை' யைக்
கடவுள் என்பேன்
அப்படியாயின்
கடவுள்
'அவர' ல்லர்
'அது'
என்று அவர் இந்த நூலை முடிப்பது மிகச் சிறப்பு. அறிவுரை பெறுவதற்கோ, அழகியலுக்கோ, அறிவியல் அறிவதற்கோ உங்கள் நோக்கம் எதுவாக இருந்தாலும் இந்த நூலைப் படிக்கலாம். இந்த நூல் நீங்கள் எப்பொழுதும் படித்து, சுவைத்து மகிழக் கூடிய ஒரு சிறப்பான கவிதை நூலாக உங்கள் நூலகத்தில் இடம் பெற முழுத் தகுதி வாய்ந்தது.







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக