விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,
'நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப;
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்' என்று,
அன்னை கூறினள், புன்னையது நலனே- 5
அம்ம! நாணுதும், நும்மொடு நகையே;
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப,
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க!- நீ நல்கின்,
இறைபடு நீழல் பிறவுமார் உளவே. -10
நற்றிணை -172 ஆவது பாடல்
இந்தப் பாடல் தலைவி தலைவனிடம் சொல்வது போல அமைக்கப்பட்டிருக்கிறது. தலைவி சொல்கிறாள், நான் சிறு பிள்ளையாக, என் தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்த போது, ஒரு நாள் ஒரு புன்னை மரத்தின் விதையை விளையாட்டாக நட்டு வைத்தேன். அப்படி நட்டத்தை நான் மறந்தே விட்டேன். ஆனால், என் தாய் மறக்கவில்லை. என்னை வளர்த்ததைப் போலவே அவள் அந்த புன்னை மரத்தையும் நெய் கலந்த பாலை ஊட்டி வளர்த்தாள். என்னை அந்த மரத்தின் அடியில் காணும் போதெல்லாம் அந்த மரம் எனக்கு தங்கை போன்றது என்று சொல்லுவாள். அந்த மரம் வேறு எதுவும் இல்லை. இந்த மரம் தான். என் தங்கையின் முன்னால் உன்னோடு இங்கு இருப்பது சரியானது அல்ல . வா, இது போல வேறு நிறைய மரங்கள் இங்கே இருக்கின்றன...அங்கு போய் விடலாம்" என்று கூறுகிறாள். புன்னை மரத்தையும் தன்னுடைய தங்கையாகப் பார்த்த அந்தப் பெண்ணின் அன்புள்ளம் தெளிவாக விளங்குகிறது. இது மட்டுமல்ல காதல் வயப்படும் பெண்ணுக்கு காணும் யாவும், மரமாக இருந்தாலும் அது உயிர் கொண்டயாகவே தோன்றுகிறது என்ற பொருளையும் கொள்ள முடியும் என்பதால் இந்தப் பாடல் ஒரு சிறப்பான பாடல் என்ற நிலையை அடைகிறது.
பாரதியாரின் கவிதைகளில் வரும் கண்ணம்மா ஒரு கற்பனை பாத்திரம். அது அவருடைய மனைவி செல்லம்மாவாக இருக்கலாம் அல்லது மகளாக இருக்கலாம் அல்லது அவருடைய இஷ்ட தெய்வமான கண்ணனை அவர் கண்ணம்மாவாக எண்ணிப்பாடி இருக்கலாம். எதுவாகினும் கண்ணம்மா என்ற பாத்திரம் ஈடற்ற அன்பு, மாசற்ற காதல், உள்ளார்ந்த அன்புணர்வுக்கு பாத்திரமாக விளங்குகிறது என்று சொன்னால் அது மிகை இல்லை.
சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா!
சூரிய சந்திர ரோ?
வட்டக் கரிய விழி, - கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் - தெரியும்
நட்சத்திரங்க ளடீ! 1
சோலை மல ரொளியோ - உனது
சுந்தரப் புன்னகைதான்?
நீலக் கடலலையே - உனது
நெஞ்சி லலைக ளடீ!
கோலக் குயி லோசை - உனது
குரலி னிமை யடீ!
வாலைக் குமரி யடீ! - கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன்.
(சுட்டும் விழிச் சுடரோ கண்ணம்மா)
நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;
நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;
சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே,
பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;
சிரித்த ஒலியினிலுள் கைவி லக்கியே,
திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்.
(கண்ணம்மா என் காதலி)
பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா! 1
வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
மானுடைய பேரர சே! வாழ்வு நிலையே! கண்ணம்மா! 2
வான் மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு
ஞான வொளி வீசுதடி; நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே! கண்ணம்மா! 3
வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுகதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா! 4
வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே; நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா! 5
காதலடி நீ யெனக்குக் காந்த மடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா! 6
நல்லவுயிர், நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா! 7
தாரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஒருருவமாய்ச் சமைந்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா! 8
(வீணையடி நீ எனக்கு)
இந்தப் பாடலில் பாரதியார் குறிப்பிட்டிருக்கும் உவமைகள் கூறிய அந்த பொருளுக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக இருக்கிறது. அதாவது வீணை நீ என்றால், நான் அதன் மேல் மேவும் விரல் என்று சொல்கிறார். வீணையில் இருந்து எழும் ஓசை வீணைக்கு சொந்தமானது இல்லை. எனவே வீணையின் இசையை அவர் குறிப்பிடவில்லை மாறாக இசைக்கு காரணமான விரல்களை காதலனுக்கு உவமையாக சொல்கிறார்.
பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கும் தகப்பனுடைய மனநிலை எப்படியிருக்கும்? பஞ்சுப் பொதி போல அந்தப் பிஞ்சுக் குழந்தையைக் கையில் வாங்கிய நாளிலிருந்து வளர்த்து ஆளாக்கி ஒருவன் கையில் பிடித்துக் கொடுக்கும்போது எந்தத் தகப்பனும் கோழையாகித்தான் போகிறான்.
அபியும் நானும் என்ற திரைப்படத்தில் ஒற்றை மகளை வளர்த்து ஆளாக்கித் திருமணம் செய்து வைக்கும் தந்தையின் மனநிலையை அழகாகக் காட்டுகிறது இந்தப் பாடல்.
மூங்கில் விட்டுச் சென்ற பின்னே
அந்தப் பாட்டோடு மூங்கிலுக்கு உறவு என்ன
பெற்ற மகள் பிரிகின்றாள்
அந்தப் பெண்ணோடு தந்தைக்குள்ள உரிமை என்ன
மூங்கிலில்தான் இசை பிறக்கிறது. ஆனால் அது மூங்கிலோடு இருந்து விடுவதில்லை. மேற்கூறிய சிந்தனையை வைரமுத்து அழகாக உள்வாங்கி பிரதிபலிக்கிறார்.
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்ற கவிஞர் கண்ணதாசனின் காதல் வரிகள் அவருடைய தமிழ்ப் புலமைக்கு ஒரு சான்று
சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை பொருளென்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை
இங்கு நீயொரு பாதி நானொரு பாதி
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல
(உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல)
என்று அவருடைய காதல் கவிதைகளிலும் இயற்கை சார்ந்த கற்பனையையும், பெண்ணின் மனதை துல்லியமாக காட்டும் விதமும், வாழ்க்கை குறித்த ஆழ்ந்த தத்துவப் பார்வையும் பாடலை உயிர்ப்பாக வைக்கும்.
வருங்காலத்தில் நிறையத் தமிழ்க் கவிஞர்கள் தோன்றுவார்கள் ஆனால் அவர்கள் ஆனந்த யாழை மீட்டிய நா.முத்துகுமார் போல் வருவது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. 1500க்கும் மேற்பட்ட பாடல்கள், 2 தேசிய விருதுகள், மாநில விருது, கலைமாமணி விருது, பிலிம்பேர் விருது என்று அவர் பெற்ற விருதுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். திரைப்படப் பாடல்களை தமிழ்ப்புலமையுடன் புனைந்த ஒரு சிலரில் நா. முத்துகுமார் நிச்சயம் இடம் பெறுவார்.
நா முத்துக்குமார் அவர்களின் காதல் கவிதைகள் ஒரு அலாதி அழகு என்பதற்கு திகட்டத் திகட்ட காதலி என்ற தலைப்பில் அமைந்த இந்தக் கவிதையே ஒரு சாட்சி.
காதலித்து கெட்டு போ.. அதிகம் பேசு..
ஆதி ஆப்பிள் தேடு.. மூளை கழற்றி வை..
முட்டாளாய் பிறப்பெடு.. கடிகாரம் உடை..
காத்திருந்து காண்.. நாய்க்குட்டி கொஞ்சு..
நண்பனாலும் நகர்ந்து செல்.. கடிதமெழுத கற்றுக்கொள்..
வித விதமாய் பொய் சொல்.. விழி ஆற்றில் விழு..
பூப்பறித்து கொடு.. மேகமென கலை..
மோகம் வளர்த்து மித.. மதி கெட்டு மாய்..
கவிதைகள் கிறுக்கு.. கால்கொலுசில் இசை உணர்..
தாடி வளர்த்து தவி.. எடை குறைந்து சிதை..
உளறல் வரும் குடி.. ஊர் எதிர்த்தால் உதய்..
ஆராய்ந்து அழிந்து போ.. மெல்ல செத்து மீண்டு வா..
திகட்ட திகட்ட காதலி !!
நா. முத்துக்குமார் எழுதிய முதல் காதல் என்ற தலைப்பில் அமைந்த கவிதை காதல் கொண்ட மனதின் தவிப்பை, உணர்வை இதை விடச் சிறப்பாக வெளிப்படுத்தி விட முடியாது.
காற்றில் பறந்து
பறவை மறைந்த பிறகும்
கிளை தொடங்கிய
நடனம் முடியவில்லை!
இந்தக் கவிதை பிரமிள் அவர்கள் எழுதிய
சிறகில் இருந்து உதிர்ந்த இறகு
காற்றின் தீராப் பக்கங்களில்
எழுதிச் செல்கிறது ஒரு பறவையின் வாழ்வை
என்ற கவிதை அளவுக்கு மிகவும் உயர்வான கவிதை.
7ஜி ரெயின்போ காலனி என்ற திரைப்படத்தில் "நினைத்து நினைத்து பார்த்து" என்று தொடங்கும் இந்தப் பாடல் வரிகள் இறந்து போன காதலியை நினைத்து காதலன் வலியுடன் பாடுவதாக அமையும். இதைக் கேட்கும் போது கண்களில் ஈரம் கசிவதை நிறுத்த முடியாது.
அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னைக் கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மெளனமா...
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்
உடைந்து போன வளையல் பேசுமா...
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே
கவிஞர் வைரமுத்து அவர்கள் கடல் என்ற திரைப்படத்தில் நெஞ்சுக்குள்ள என்று தொடங்கும் ஒரு பாடல் எழுதி இருப்பார்.
காச நோய்க் காரிகளும்
கண்ணுறங்கும் வேளையில
ஆச நோய் வந்து மக அரநிமிசம் தூங்கலையே….
ஏல இளஞ்சிறுக்கி ஏதும் சொல்ல முடியலயே
ரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல
புரைய மன்ற, புரையோர் கேண்மை
இந்த நற்றிணை பாடலின் பொருள், தாமரையின் குளிர்ச்சியான மகரந்தத்தை உண்டு, சந்தன மரத்தின் மீது வண்டுகள் கட்டிய இனிய தேனைப் போன்றது சான்றோர்களின் நட்பு என்று கபிலர் பெருமையுடன் பகர்வதாக அமைகிறது.
மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணாந்து பார்க்கும்.
அத்தகைய ஒரு உயர்வான காதலைத் தான் தன்னுடைய காதலி மேல் கொண்டிருப்பதாக ஒரு காதலன் \பாடுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. இது ஷாஜஹான் என்ற திரைப்படத்தில் வரும் மெல்லினமே என்ற பாடல்.
அப்படியே இருவர் திரைப்படத்தில் நறுமுகையே என்ற பாடல் கிட்டத்தட்ட குறுந்தொகைப் பாடலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயு மெவ்வழி யறிதுஞ் . . .
என்ற வரிகளை வைரமுத்து கீழ்வருமாறு மாற்றி எழுதியிருப்பார்.
யாயும் ஞாயும் யாராகியரோ
நெஞ்சு நேர்ந்ததென்ன?
யானும் நீயும் எவ்வழி அறிதும்
உறவு சேர்ந்ததென்ன?
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அன்புடை
நெஞ்சம் கலந்ததென்ன
உன் தாயும் என் தாயும் தொடர்பற்றவர்கள். என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் கூட இதற்கு முன்பாய் அறிமுகமானவர்கள் இல்லை. செம்மண்ணில் பெய்த மழை செந்நிறத்தைப் பெற்றுப் பிரிக்க முடியாததுபோல நம்மிருவர் நெஞ்சங்கள் கலந்துவிட்டன. எனவே நம் காதல் நிலைக்குமா? நிறைவேறுமோ? எனக் கவலை கொளல் வேண்டாம் என்று காதலியைத் தேற்ற காதலன் பாடியதாக வரும் இந்தப் பாடலின் விளக்கம் இதுதான்.
கபாலி படத்தில் மாயநதி என்ற பாடலில் பாடலாசிரியர் உமாதேவி
என்று எழுதி இருப்பர். தாபத நிலை என்பது தவநிலை என்பதை இது குறிக்கிறது. தவத்தோர் போலப் புலன் அடக்கி வாழும் கைம்மைநிலை என்றும் பொருள் கொள்ளலாம்.
குருந்தலர் கண்ணிக் கொழுநன் மாய்ந்தெனக்
கருந்தடங் கண்ணி கைம்மைகூ றின்று
தன் கணவனைக் கூற்றுவன் பிரித்துவிட, தான் இறந்துபோகாது வருந்தும் மனைவி, தன்னை விட்டுவிட்டு இறந்து போனவனின் குருந்தப் பூ மாலையிடம் கோபித்துக் கொண்டு தான் பூச்சூடாமல் வெற்றுத் தரையில் படுத்துக் கரிய இலை உணவை உண்டு வாழ்கிறாள் என்பது இந்தப் பாடலின் பொருள். ஆண்களும் இதே போல தன்னுடைய துணைவியை இழந்தால் அது தபுதார நிலை என்கிறது புறப் பொருள் வெண்பாமாலை என்ற நூல்.
என்னைவிட இந்த உலகிலே உன்னை மிகமிக விரும்பினேன்
உந்தன் அன்புதரும் சுகத்தினால் இன்னும் உயிருடன் இருக்கிறேன்
தீ கூட தீண்டத் தீண்ட தித்திக்கும் என்று கண்டேன்
அன்பே நீ பக்கம் வந்தாய் புத்திக்கு ஓய்வு தந்தேன்
(மின்சாரம் என் மீது - ரன் திரைப்படம், கவிஞர் விவேகா)
உயிரைத் திருகி உந்தன்
கூந்தல் சூடிக்கொள்ளாதே
என் உதிரம் கொண்டு
உதட்டுச்சாயம் பூசிக்கொள்ளாதே
விண்மீன் பறிக்க விழியில்லை
என்று கண்களை பறிக்காதே
என் இரவை எடுத்துக் குழைத்துக்
குழைத்து கண் மை பூசாதே
என்னை விடவும் என்னை அறிந்தும்
யார் நீ என்று கேட்காதே
இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும்
என்னையும் கவிஞன் ஆக்காதே(2)…
(குல்மோகர் மலரே - மஜ்னு)
என்று கவிஞர் வைரமுத்துவின் காதல் வரிகள் பல இடங்களில் நெஞ்சை அள்ளும் விதமாக அமைத்துள்ளது.
எகிறிக் குதித்தேன் வானம் இடித்தது
பாதங்கள் இரண்டும் பறவை ஆனது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
புருவங்கள் இறங்கி மீசை ஆனது.
ஆனந்தக் கண்ணீர் மொண்டு குளித்தேன்
ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்
கற்கண்டைச் சுற்றிக்கொண்டே நடந்தேன் சிறு எறும்பாய்
நான் தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன் ஒரு இலையாய்
காதல் சொன்ன கணமே!"
(திரைப்படம்: பாய்ஸ், வரிகள்: கவிஞர் கபிலன்)
என்ற கவிஞர் கபிலரின் வரிகள் ஆகட்டும்
அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ - ஐ
அஸ்த் அஸ்த் லைபே
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே - லவ்
இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே
அத்தனை
மொழியிலும் வார்த்தை
ஒவ்வொன்று கொய்தேன்
மொத்தமாய் கோர்த்துதான்
காதல் சென்டொன்று
செய்தேன்
உன்னிடம்
நீட்டினேன் காதலை
காட்டினேன்
என்று 16 மொழிகளில் காதலைப் பேசும் இந்தப் பாடல் காதல் பாடல்களில் ஒரு புதுமையான வெற்றிகரமான முயற்சி என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது.
கவிதைகள் சொல்லவா உன் பெயர்
சொல்லவா இரண்டுமே
ஒன்று தான் ஓஹோ
ஓவியம் வரையவா உன்
கால் தடம் வரையவா
இரண்டுமே ஒன்று தான்
ஓஹோ
(உள்ளம் கொள்ளை போகுதே)
என்ற பா.விஜயின் வரிகள் ஆகட்டும்
மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
என்னை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி
எந்தன் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே
பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டமால் திரும்புது காற்று
(பிரியாத வரம் வேண்டும்)
என்ற அறிவுமதி பாடல்கள் ஆகட்டும்
அற்றைத் திங்கள் வானிடம்.
அல்லிச் செண்டோ நீரிடம்.
சுற்றும் தென்றல் பூவிடம்.
சொக்கும் ராகம் யாழிடம்.
காணுகின்ற காதல் என்னிடம்.
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
(சிவப்பதிகாரம்)
என்று யுகபாரதி கொண்டாடும் காதல் வரிகள் ஆகட்டும் தமிழின் இலக்கியத் தெறிப்பு நமது திரையிசைப் பாடல்களில் கலந்துள்ளதாலேயே அது காலம் கடந்து இன்றும் விரும்பப்படும் இசையாக உள்ளது. தமிழ் மொழியானது திரையிசை தாண்டி, தமிழ்க் கவிதைகள், தமிழ் எழுத்துக்களிலும், ஊடகங்களிலும் தமிழ் இலக்கியத்தின் பரவலான தாக்கம் உள்ளது. இதுவே நல்ல இசையை, நல்ல சிந்தனையை, நல்ல ரசனையை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு அரும்பணியை செய்கிறது.
மயங்குமலர்க் கோதை குழைய மகிழ்நன்
முயங்கிய நாடவச் சிலவே அலரே
கூகைக் கோழி வாகைப் பறந்தலைப்
பசும்பூண் பாண்டியன் வினைவ லதிகன்
களிறொடு பட்ட ஞான்றை
ஒளிறுவாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே.
குறுந்தொகை 393
இந்தப் பாடலின் பொருள் என்னவென்றால் பசும்பூண் பாண்டியன் எனப்படும் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் தளபதியான அதிகன் என்பவன், கொங்கர்களை அடக்கி வெற்றி பெற வாகைப் பறந்தலை என்னும் இடத்தில் நடைபெற்ற போரில் தோல்வியுற்று இறந்தான். அதிகன் இறந்ததால், கொங்கர்கள் ஆரவாரித்தனர். இந்த ஆரவார ஒலியை விட என்னைப் பற்றி அலர் பேசும் ஊர் மக்களின் ஆரவார ஒளியே அதிகமாக இருக்கிறது என்று தலைவி பேசுவதாக அமைகிறது.
ஒரு பெரிய மன்னனின் தளபதிக்கு எதிராக போரிட்ட கொங்கர்கள் என்னும் எளிய மனிதர்களின் வெற்றியை ஒரு அகப் பாடலில் சொல்ல முடியும் என்றால் தமிழ் இலக்கியம் எவ்வளவு நுட்பமானது என்பதை நாம் அறிய முடியும். அகத்திணை பாடல்கள் தமிழரின் அக வாழ்வை களவு கற்பு என்று இரு நிலைகளில் நின்று பேசுகிறது. இத்தகைய செறிவான ஒரு இலக்கிய மரபு வேறு எந்த மொழியிலும் காணப்படுவது இல்லை என்பதாலேயே தமிழ் இன்றும் உலகின் மூத்த மொழியாக போற்றப்படுகிறது.
சில காதல் பாடல்கள் குறித்த என்னுடைய முந்தைய பதிவு:
நான் எழுதி செயற்கை தொழிநுட்பம் வழி இசை கோர்த்த அகத்திணை பாடல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக