வாழ்க்கையில்
சறுக்கிய போது
எள்ளி நகையாடியென்னை
விமர்சித்திருக்கிறார்கள்
அவமானத்தினால்
மருகிய போது
கண்டும் காணாமலும்
கடந்திருக்கிறார்கள்
உயரங்களை நோக்கிய
பயணத்தின் போது
என்னுறுதியை
குலைத்துப் போடும்
வஞ்சகத்தை செய்துள்ளார்கள்
என் கனவுகளை நொறுக்கிவிட்டு
நிர்கதியாய் தெருவில்
நிறுத்தியிருக்கிறார்கள்
என் கண்ணீர்
பாலையில் விழுந்த மழையாய்
கரைந்து விட்டது
என் மௌனம்
சிறகினை உதிர்க்கும் பறவையாய்
காற்றில் கலந்து விட்டது
என் கோபம்
கடலில் விழுந்த தீப்பொறியாய்
ஆழங்களில் குளிர்ந்து விட்டது
என் துன்பம்
பகலில் ஒளிரும் மின்மினியாய்
எவரும் காணாமல் மறைந்தது
நழுவிப் போன நம்பிக்கையை
காப்பாற்றிக் கை சேர்த்துக் கொண்டேன்
சிதறிப் போன புன்னகையை
பொறுக்கியெடுத்து ஒன்றாக்கிவிட்டேன்
விலகிப் போன உறுதியை
மீண்டும் நட்பாக்கிக் கொண்டேன்
எடையுள்ளதாய் இருக்கும்
என்னிதயத்தை
எடையற்றதாய் மாற்றும்
ரசவாதம் மட்டும் கற்றுக்கொண்டால்
பூரணமாகி விடுவேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக