ஒரு நாயகன் உதயமகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்
இந்தப் பாடல் வரிகளைக் கேட்கும் போதெல்லாம் நசிந்த மக்களை உயர்த்தும் ஒரு தலைவன் தோன்றி, ஒரு நொடி நேரத்தில் தன் மக்களை, முன்னேறிய சமூகமாக மாற்றும் காட்சி நம் கண்முன்னே விரிகிறது. ஒரு நல்ல தலைவன் உருவாவது ஒரு சமூகத்தின் பெரிய சாதனையாகும். அதனால்தான் அந்தத் தலைவன் வளர்ந்து வலிமை பெறும் வரை அவனை நன்முறையில் காத்து, அவனுக்கு நல்ல ஒழுக்கத்தையும், சிறந்த மாண்புகளையும் கற்பித்து, அவனை ஒரு ஆதர்ச நாயகனாக உருவாக்கும் பணியில் ஒரு சமுதாயமே இணைந்து பங்காற்றியது.
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு - குறள் 384
அறநெறிகளிலிருந்து தவறாமல், மற்றவர்களால் தனது மக்களுக்கு எவ்விதத் தீங்கும் நேராமல் தடுத்து, வீரத்திலிருந்து வழுவாமல் இருப்பவனே பெருமைக்குரிய அரசன்/தலைவன் என்று சொல்கிறார் திருவள்ளுவர்.
ஆனால் சமூகத்தின் இன்றைய தலைவர்களைப் பற்றி எண்ணினால் அது அச்சம் தருவதாக மட்டுமே இருக்கிறது. ஏனென்றால் இன்றைய தலைவர்கள் சமுதாயத்தால் அன்றி தனிப்பட்ட விருப்பத்தினால் உருவானவர்கள். தன்னார்வ அமைப்புகளின் தலைவராக வருபவர்கள் பெரும்பாலும் அந்த அமைப்பின் நோக்கத்திற்கும், மாண்பிற்கும் எள்ளளவும் சம்பந்தமில்லாத நபர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் தலைவராக இருக்கும் போது அந்த அமைப்பின் வழி எந்தவொரு ஆக்கப்பூர்வமான திட்டத்தையோ அல்லது தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திட்டத்தையோ செயல்படுத்துவது இல்லை. தன்னுடைய இடத்தை எப்படி உறுதி செய்வது, அடுத்தவர்களை எப்படி வர விடாமல் செய்வது, அடுத்தவர்களின் பெயரை எப்படிக் கெடுப்பது என்று யோசிப்பதிலும் அதைச் செயல்படுத்துவதில் மட்டுமே நேரத்தை செலவழிக்கிறார்கள்.
இதுவே பணமும் அதிகாரமும் புழங்கும் அரசியல் களம் என்றால், அந்தத் தலைவர், மேற்கூறிய தீய வழக்கங்களை கைக்கொள்வதோடு, தனி மனித ஒழுக்கமில்லாமல், போதைப் பழக்கத்திற்கு ஆட்பட்டு, மக்களைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல், வறட்டுச் சிந்தாந்தங்ளையும், நாகரீக வளர்ச்சிக்கு சற்றும் ஒவ்வாத கருத்துக்களையும் உடைய மனிதராக, மக்களைப் பிளவு படுத்தும் சாதீய, மத, இன பேத உணர்வுகளை தூண்டி தன்னை மட்டுமே வளர்த்துக் கொள்பவராக இருக்கிறார்.
தன்னைத் தாக்காத ஒரு நாட்டுக்கு எதிராகப் போர் செய்து அந்த நாட்டைப் பிடிப்பது, அந்த நாட்டில் பலரைக் கொன்று குவித்து ஆயுதம் விற்போருக்கு எப்போதும் ஒரு சந்தையை ஏற்படுத்திக் கொடுப்பது, அங்கே போரால் பாதிக்கப்பட்டவர்களின் மேல் அடக்குமுறை செய்து அதன்வழி ஆதாயம் பெறுவது, அங்கிருக்கும் வளங்களை கொள்ளையடித்து தன்னுடைய நாட்டுக்கு அதைக் கொண்டு சேர்ப்பது, அளவுக்கு மிஞ்சிய ஊழல் செய்து தனக்கும் தனக்குப் பிறகு வரும் 100 தலைமுறைக்கு சொத்து சேர்ப்பது என்பது சர்வதேச தலைமையின் கோர முகம். இது வரலாற்றுப் பக்கங்களில் கூட எழுத முடியாத ஒரு மாபெரும் இழுக்காகும். இன்றைய சூழலில் ஒரு தலைவன் வளர்கிறான் என்றால், அந்தத் தலைமையின் ஆசைக்கு எத்தனை மனிதர்களை, இயற்கை வளங்களை, நாடுகளை பலி கொடுக்க முடியும் என்பதை மட்டுமே சிந்திக்க வேண்டியிருக்கிறது. இயற்கையில் விலங்குகள் கூட தலைமைத்துவ குணங்களை கொண்டிருக்கின்றன. ஆனால் மனிதனைப் போல ஒரு தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள விலங்கு ஏனைய விலங்குகளை என்றும் வஞ்சிப்பதில்லை.
உங்களிடம் "நான் மட்டுமே உத்தமன், நான் வந்தால் தேன் மாரி பொழியும், அரசியலில் அறத்தை நிலைநாட்டுவேன்" என்று வண்டிவண்டியாக பொய் சொல்லும் நபரை நீங்கள் ஆதரித்தால் பண மதிப்பீட்டுக்கு ஆதரவளித்து பல நாட்கள் வங்கிகளில் கால்கடுக்க காத்திருக்கும் வலிக்கு இணையான ஒன்றுக்கு உங்களை ஆட்படுத்த வாக்களிக்கிறீர்கள் என்று பொருள்.
உங்களுடைய அனைத்துப் பிரச்சனைக்கும் காரணம் நீங்களல்ல, உங்களைச் சுற்றியுள்ள மற்ற மனிதர்கள் தான் என்று பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் கோடீஸ்வரர்களைத் தலைமைக்கு தேர்ந்தெடுத்தால் கச்சாப் பொருட்களுக்கும், அத்தியாவசப் பொருட்களுக்கும் அதிக விலை கொடுத்து வாங்கத் தயாராகி விட்டீர்கள் என்று பொருள்.
"உங்களில் நான் ஒருவன், நான் உங்கள் இனம்" என்று கூறும் ஒருவரை உங்களின் சுய விருப்பு வெறுப்புகளின் பேரில் தலைமைக்குத் தேர்ந்தெடுத்தால் சுய விளம்பரப் பிரியர்களையும், அந்த இனத்தின் பின்னடைவுக்கும், அந்த இனத்தின் மாண்புகளைக் குழி தோண்டிப் புதைக்கும் பெருந்தகையையும் நீங்கள் வெற்றி பெறச் செய்கிறீர்கள் என்று பொருள்.
இம்சை அரசன் 23ஆம் புலிகேசியில் ஒரு காட்சி வரும். அரசன் புலிகேசியாக நடிக்கும் வடிவேலு ஒரு கரடியை நோக்கி அம்பு எய்வார். அதில் எந்த அம்பும் அந்தக் கரடியைத் தாக்காமல் சென்று விடும். கரடி கடைசியில் வந்து வடிவேலுவின் முகத்தில் துப்பிவிட்டு போகும். இதனால் வீறுகொண்ட வடிவேலு விற்பயிற்சி செய்வார். எதிரில் ஒரு படைவீரன் தலையில் பழத்தோடு நிற்பான். புலிகேசி அந்த வீரனின் தலையில் இருக்கும் பழத்தை குறி வைத்து அம்புகள் எய்வார். ஆனால் அம்புகள் எதுவும் புலிகேசி குறி வைத்த பழத்தை தாக்காமல் அங்கே காவலில் எங்கெங்கோ நிற்கும் வீரர்களைத் தாக்கி அவர்களைக் கொல்லும். இதனால் புலிகேசி தயங்க, அதற்கு அவருடைய அமைச்சராக நடிக்கும் மங்குனிப் பாண்டியன் "உங்களைக் காறித் துப்பிய கரடியைப் பழி வாங்க வேண்டும், அதற்காக பத்து வீரர்களை இழந்தாலும் பரவாயில்லை". என்பார். ஆக, இன்றைய காலகட்டத்தில் தலைவனாக தன்னை நிலைநிறுத்த வேண்டும் என்று எவர் கிளம்பினாலும் அதில் சிக்கி சின்னாபின்னமாகப் போவது என்னவோ அதற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத அப்பாவி மக்கள் தான் என்ற புரிதல் காலத்தின் தேவையாக இருக்கிறது. நம்மிடம் இருக்கும் தீய குணங்களைக் கைவிட்டுவிட்டு நம்மை நாமே செப்பனிட்டுக் கொண்டால் மட்டுமே நல்ல தலைமையை நாம் வெளிக்கொணர முடியும். ஏனென்றால் தலைவர்கள் தனி மனிதர்கள் இல்லை. இந்த சமுதாயத்தில் இருந்தே தோன்றி உயருகிறார்கள்.
கீழ்மை நிறைந்த மனிதர்களிடம் இருந்து அதைவிடக் கீழ்மையான மனிதனே தலைவராகத் தோன்றுவார் என்பதை உணர வேண்டும். மேலே சொன்ன வரிகளில் பாடலாசிரியர் நாயகன் என்ற சொல்லை பயன்படுத்தி இருப்பார். நாயகர்கள் மேன்மை அதிகமும், கீழ்மை கொஞ்சமும் நிறைந்த சாமானிய மனிதர்கள் தான். நாயகனுக்கு பதிலாக மகாத்மா என்ற சொல்லை பயன்படுத்தி இருந்தால் தலைவனுக்கான தகுதிகள் எட்ட முடியாத ஒன்றாக இருக்கும் என்பது கவிஞருக்குத் தெரியும். ஆனால் விதிவிலக்கு இருக்கிறது என்பதால் இலக்கு அதுவல்ல என்பதல்ல பொருள். மகாத்மாவாகத்தான் இந்த நெடும் பயணம் என்பதை மறக்க வேண்டாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக