Akureyri யை அடுத்து நாங்கள் சென்றது கிழக்கு ஐஸ்லாந்தில் உள்ள Egilsstadur என்ற நகரத்திற்கு. Akureyri இல் இருந்து நான்கு மணி நேர கார் பயண தூரத்தில் உள்ளது இந்த ஊர். இந்த ஊரில் தங்கி கிழக்கு ஐஸ்லாந்து குறிப்பாக அங்கே உள்ள நிறைய நீர்வீழ்ச்சிகளை பார்வையிட வேண்டும் என்று ஆவலுடன் சென்றோம். ஐஸ்லாந்தின் பெரிய அருவிகள் Dettifoss, Selfoss, Hafragilsfoss ஆகியன இங்கேயே அமைந்துள்ளது.
கிழக்கு ஐஸ்லாந்தில் உள்ள சற்று பெரிய நகரமான Egilsstadir-இல் Stora and Sandfell cottages என்ற இடத்தில நாங்கள் தங்குவதற்கு பதிவு செய்து இருந்தோம். இந்த குடில்கள் Egilsstadur-இல் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருந்தது. Route-1 எனப்படும் ரிங் ரோடிற்கு மிக அருகிலேயே அமைந்திருந்தது மிகவும் வசதியாக இருந்தது. Egilsstadir-க்கு செல்வதற்கு முன்னே நாங்கள் Akureyri-இல் இருந்து Asbyrgi Canyon என்ற இடத்திற்குச் சென்றோம். இது Vatnajokull National Park எனப்படும் தேசியப் பூங்காவினுள் அமைந்துள்ளது. இந்த தேசியப் பூங்கா, ஐஸ்லாந்தின் மிகப் பெரிய தேசியப் பூங்கா ஆகும். Asbyrgi பள்ளத்தாக்கு என்பது ஒரு குதிரையின் குளம்பு வடிவத்தில் அமைந்துள்ளது. ஓடின் என்ற கடவுளின் குதிரையின் பாதம் நிலத்தில் பதிந்த இடம் என்று இது நம்பப்படுகிறது.
இந்த பூங்காவின் உள்ள பல்வேறு வழித்தடங்களில் நடந்து சென்று இந்த பள்ளத்தாக்கின் அழகிய இடங்களைக் காணலாம். எனினும் நாங்கள் சென்றது சில மணி நேரங்கள் என்பதால் முடிந்த வரை பார்த்து வரலாம் என்று முடிவு செய்தோம். Asbyrgi பள்ளத்தாக்கு கிட்டத்தட்ட 100 அடி உயரமான பாறைகளால் ஆனது. இந்தப் பள்ளத்தாக்கின் நீளம் 1 கிட்டதட்ட மூணரை கிலோமீட்டர்கள், அகலம் 1 கிலோமீட்டர். மே முதல் அக்டோபர் வரை இந்த பள்ளத்தாக்கை பார்ப்பதற்கான சிறப்பான தட்பவெட்ப நிலை நிலவுகிறது. எனினும் மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதால் ரெயின் கோட் கண்டிப்பாகத் தேவை. நாங்கள் முதலில் சென்றது Botnstjorn என்ற ஒரு அழகான குளத்தைக் காண. பூங்காவினுள் சிறிது தூரம் நடந்தால் இந்த பச்சை வண்ணக் குளத்தைக் காணலாம். பாசிகள் தரும் இந்த பச்சை வண்ணமும், அதைச் சுற்றியுள்ள அடர்ந்த கரிய பாறைகளும் இந்த குளத்திற்கு ஒரு புதிய பொலிவினை தருகிறது. உங்கள் பார்வைக்கு படமும், காணொளியும் கீழே.
இங்கு சிறிது நேரம் நடந்து அங்கிருந்த புதிய வகை மலர்களையும், செடிகளையும் படம் எடுத்தோம். பின்னர் இந்த இடத்தை விட்டுக் கிளம்பி ஐஸ்லாந்தின் இரண்டாவது மிகப் பெரியதும், ஐரோப்பாவின் இரண்டாவது மிகவும் சக்திவாய்ந்ததான நீர்விழ்ச்சிகளான Dettifoss, Selfoss, Hafragilfoss ஆகியவற்றைப் பார்ப்பதற்கு புறப்பட்டோம். Vatnajokull தேசிய பூங்காவினுள்ளேயே இந்த நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ளது. Asbyrgi பள்ளத்தாக்கிலிருந்து கிட்டத்தட்ட 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சிகள். கடைசி ஒரு 25 கிலோமீட்டர் சரளைக் கல் அமைந்த பாதை. எனவே மிகவும் மெதுவாகவே காரை ஓட்ட வேண்டியதாய் இருந்தது. கார் வெளிப்புறம் சேறாகி ஒரு வழி ஆகிவிடும் என்றாலும் பல இடங்களில் காரை கழுவதற்கென வசதிகள் இலவசமாக கிடைப்பதால் அதைக் கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். மழைத் தூரல் போல அந்த நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் சாரல் அங்கிருந்த பாறைகளிலும், பாதையிலும் பட்டி அவை அனைத்தும் எப்பொழுதும் ஈரமாக இருக்கிறது. காரை நிறுத்திவிட்டு கொஞ்ச தூரம் நடந்தால் Jokulsa என்ற ஆற்றின் மேல் அமைந்துள்ள Hafragilfoss நமக்கு தெரியும். Hafragilfoss-இன் அழகுத் தோற்றம் கீழே. நிறையக் காற்று, நிறைய குளிர் என்பதால் அதிக நேரம் நிற்க முடியவில்லை. சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு Dettifoss-ஐ பார்க்கச் சென்றோம்
Dettifoss கிட்டத்தட்ட பத்து முதல் பதினைந்து நிமிட நடையில் இருந்தது. நிறைய கற்களும், பாறைகளும் நிறைந்த பாதையில் கீழிறங்கினால் Dettifoss-ஐ பார்க்க முடியும். மேகம் மூடி இருந்ததால் Selfoss-ஐ நன்கு புகைப்படம் எடுக்க இயலவில்லை. எனினும் Dettifoss சொன்னதற்கு ஏற்றார் போல் பிரமாண்டம். 'ஓ' என்ற பேரிரைச்சலுடன் ஆக்ரோஷமாக தண்ணீர் கொட்டும் அந்த பிரமாண்டம், பார்க்கக் கோடி அழகு.
இந்த பிரமாண்டத்திற்கு முன் Selfoss மிகவும் சாந்தமான அருவியாக காட்சி அளித்தது. சில புகைப்படங்களையும் காணொளிகளையும் எடுத்துக் கொண்டு அன்றிரவு நாங்கள் தங்குவதற்கான Egilsstadur நோக்கி புறப்பட்டோம்.செல்லும் வழியில் கிட்டதட்ட பல மணி நேரம் எங்கள் கார் மட்டுமே ரோட்டில் சென்று கொண்டிருந்தது. போக்குவரத்து நெரிசல் இல்லாமல், அமைதியாக இருந்த அந்தப் பயணம் இன்றும் மறக்க முடியாததாய் இருக்கிறது. வழியெங்கும் சிறு பாறைகளும், குன்றுகளுமாய் இருந்தது. இம்மாதிரி இடங்களுக்கு வந்து இவற்றை சீர்படுத்தி மனிதன் வசிப்பதற்கு தயார் செய்த எத்தனையோ மனித கரங்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டியதாகிறது. We stand on the shoulders of giants என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு. நாம் வாழும் இந்த வாழ்க்கை நமக்கு முன் சென்ற யாரோ ஒருவர் சீர்படுத்தித் தந்தது. நாமும் காணும் காட்சிகள் நமக்கு முன் சென்றவர் தோளின் மேல் ஏறி நின்றே நாம் காண முடியும். மனிதன் என்பவன் தனித் தீவு அல்ல. நமக்கு முன் வந்த எல்லாரையும், நம் பின் வரப் போகும் எல்லாரையும் இணைக்கும் ஒரு கண்ணி நாம் ஒவ்வொருவரும் என்று தோன்றியது. இவ்வாறு சிந்தித்தவாறே வரும் வழியில் Rjukandafoss என்ற அருவியைப் பார்த்தோம்.
Route -1 ரிங் ரோட்டில் உள்ளது இந்த அருவி. கார் பார்க்கிங்கில் இருந்து கிட்டத்தட்ட 15 நிமிட நேர நடையில் இந்த நீர்வீழ்ச்சியைக் காணலாம். 139 மீட்டர் உயரமான கிட்டத்தட்ட மூன்று அடுக்குகளாய் விழும் இந்த அருவியும் மிக சிறப்பாக இருந்தது. சிறிது தூரம் நடை என்பதால் குழந்தைகளாலும் இந்த அருவிக்கு நடந்து செல்வது எளிதாக இருக்கும். இந்த அருவி மிகவும் புகழ் வாய்ந்த Studlagil Canyon எனப்படும் பள்ளத்தாக்கிற்கு செல்லும் வழியில் இருப்பதால் இந்த நீர்வீழ்ச்சியை பார்க்க நிறைய பயணிகள் வந்து போகின்றனர். நாங்கள் இந்தப் பயணத்தில் பார்க்காத ஒன்றிரண்டு இடங்களில் Studlagil Canyon னும் ஒன்று. மிகப் பெரிய basalt பாறைகள் இருக்கும் இந்த இடம் சுற்றுலாப் பயணிகள் காண வேண்டிய இடத்தில் ஒன்று. கண்டிப்பாக உங்கள் பயண திட்டத்தில் Studlagil Canyon இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
Studlagil Canyon -இன் தோற்றம் இணையத்தில் இருந்து எடுத்தது.
நாள் முழுவதும் பார்த்த இடங்களைப் பற்றி பேசியவாறே Egilsstadir-இல் நாங்கள் தங்க வேண்டிய Stora and Sandfell Cottage-ஐ நோக்கி வண்டியை இயக்கினோம். மலைகள் சூழ்ந்த ஒரு ரம்மியமான இடத்தில் அமைந்திருந்தது இந்தக் குடில். இந்த மரத்தாலான குடிலில் 2 படுக்கைகள், ஒரு சமையலறை மற்றும் குளியலறை என்று கச்சிதமாக இருந்தது.
ரம்யமான இந்த சூழ்நிலையை ரசித்தவாறே இரவு உணவு சமைத்து அனைவரும் உண்டோம். அடுத்த நாள் தாமதமாகவே எழுந்து காலை உணவு முடித்து அன்று செல்ல வேண்டிய Hengifoss என்னும் நீர்வீழ்ச்சியை பார்க்க
குதூகலமாகக் கிளம்பினோம். Hengifoss என்பது ஐஸ்லாந்தில் உள்ள இரண்டாவது மிகவும் உயரமான நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சி LagarFljot எனப்படும் ஏரிக்கு மிக அருகாமையில் உள்ளது. இந்த அருவி Hallormsstadrarskogur என்ற பெயருடைய காட்டிற்கு எதிர்புறமாக அமைந்துள்ளது. இந்த அருவியின் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த அருவி விழும் பாறையில் சிவப்பு வண்ண களிமண் மற்றும் கறுப்பு நிற எரிமலை பாறைகள் அமைந்துள்ளது. பல அடுக்குகள் கொண்ட சிவப்பு வரிகள் ஓடிய கரும்பாறைகளின் மேல் ஒரு நீர்த் தாரையை மாட்டி வைத்தது போல் அழகாகக் காட்சி தருகிறது. அந்த நீர் பல காலமாக ஓடி அந்தப் பாறைகளை நெடுவரிசையாய் செதுக்கி வைத்திருக்கிறது. மொத்தம் 2.5 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றால், இந்த நீர்வீழ்ச்சியின் அருகில் சென்று காண முடியும். செங்குத்தாக மேலேறும் பாதையில் நடந்து செல்ல வேண்டி இருக்கும் என்பதால் அதற்கேற்ப தண்ணீர் மற்றும் சிற்றுண்டி ஏதேனும் கையில் எடுத்துச் செல்வது நல்லது . பாதி தொலைவில் Litlanesfoss என்ற அருவி வருகிறது. இதைச் சுற்றி இருக்கும் நெடுவரிசை பாறைகள் அடடே ரகம். கீழே உள்ள புகைப்படத்தில் பாருங்கள்
மிகவும் அழகான பாறை அடுக்குகள் கொண்ட இந்த சிற்றருவியும், Hengifoss என்ற பெரிய அருவியையும் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை என்றே சொல்லலாம். இதன் பின்னே நாங்கள் Egilsstadir என்ற நகரத்தை தாண்டி இருந்த Storurud Boulders என்ற பெரிய பாறைககளைக் காணப் புறப்பட்டோம். Dyrfjoll என்ற மலையில் இருந்து விழுந்த பாறைகளும் அந்த பாறைகளுக்கு நடுவே நீல வண்ணத்தில் காட்சி தரும் ஏரிகள் என்று மிக அழகு வாய்ந்த இந்த இடத்திற்கு செல்ல சில பல கிலோமீட்டர்கள் நடக்க வேண்டும் என்பதை நாங்கள் உணரவில்லை. Egilstaddir-இல் இருந்து 50 நிமிட பயண தூரத்தில் இருந்த Vatnsskard என்ற மலையில் உள்ள கார் நிறுத்துமிடத்திற்கு சென்று, அங்கே காரை நிறுத்திய பின்பே இந்தத் தகவலை அறிந்து கொண்டோம். மலை என்பதால் கொஞ்சம் காற்று வீசினால் கூட குளிர்ச்சியாக இருந்தது. மேகம் சூழ்ந்து ரோட்டில் ஓரிரு அடிகளுக்கு மேல் தெரியவில்லை. சரி என்று ஓரிரு புகைப்படங்களை மட்டும் எடுத்து விட்டு மீண்டும் Egilsstadir-இல் நாங்கள் தங்குமிடத்தை அடைந்தோம். ஒரு உணவகத்தில் உணவு உண்டு விட்டு நாங்கள் எங்கள் அறைக்கு திரும்பினோம்.
அடுத்த நாள், நாங்கள் தாங்கும் இடத்தை விட்டு கிளம்ப மனம் இல்லாமல் கிளம்பினோம். தினமும் எழுந்தவுடன் மலை அல்லது கடல் போன்ற ஒரு இயற்கை எழிலை தரிசனம் செய்யும் பாக்கியம் மிகவும் புண்ணியம் செய்தவர்களுக்கே வாய்க்கும் என்ற எண்ணம் எழாமல் இல்லை. சுத்தமான மலைக் காற்று, நிறைய நடைப் பயிற்சி செய்யும் வாய்ப்பு என்று ஆரோக்கிய வாழ்விற்கு தேவையான விடயங்கள் எளிதாகவே கிடைத்து விடுகிறது அந்த ஊரில் வசிக்கும் மனிதர்களுக்கு என்பதை எண்ணிக் கொண்டே கிளம்பினோம்.
Egilsstadir-இல் இருந்து கிளம்பும் முன், அருகாமையில் இருந்த Fargadafoss என்ற அருவிக்கு சென்று பார்த்தோம். அந்த அருவியின் அழகுத் தோற்றத்தை கீழே உள்ள காணொளியில் கண்டு களியுங்கள்.
பின்னர் அங்கிருந்து Hofn என்ற இடத்திற்கு செல்வதற்காக கிளம்பினோம். Oxipass(Route -939) என்பது ஐஸ்லாந்தில் உள்ள மலை மேல் அமைந்த பாதை. Skriddalur மற்றும் Berufjordur ஆகிய ஊர்களுக்கு இடையே இந்தப் பாதை இருக்கிறது. இந்தப் பாதையில் செல்வது என்றாலும் செல்லலாம் அல்லது Route-1 லேயே சென்றாலும் கிழக்கு ஐஸ்லாந்தின் கடற்கரையை பார்த்தவாறே செல்வது என்றாலும் செல்லலாம். நாங்கள் Oxipass-இல் செல்வதற்கு முடிவு செய்தோம். இந்தப் பாதை கடல் மட்டத்தில் இருந்து 1768 அடி உயரத்தில் அமைந்து உள்ளது. கூகிள் மாப் பயன்படுத்தினால் குறைவான தூரம் என்று இந்தப் பாதையையே காண்பிக்கும். எனினும் மலையின் மேல் அமைந்த பாதை என்பதால் இதை கோடை காலத்தில் மட்டுமே பயன்படுத்துவர். மற்ற நேரங்களில் இந்தப் பாதை மூடப்பட்டிருக்கும். oxi pass என்று வலையொளியில் நீங்கள் தேடினால் நிறைய வீடியோக்கள் வரும். சில இடங்களில் குறுகிய பாதையாகவும், மலையில் ஏறி இறங்குவதால் சில நேரங்களில் செங்குத்தாகவும் உள்ளதால் நீங்கள் இந்த மாதிரி பாதையில் ஓட்டப் பழகி இருந்தால் உங்களுக்கு எளிதாக இருக்கும். இல்லை என்றால் இந்தப் பாதையை தவிர்க்கவும். பயணத்தின் ஆரம்பத்திலேயே ஒரு அழகான நீர்வீழ்ச்சி வந்தது. கீழே இறங்கி புகைப்படம் எடுத்துத் திரும்பலாம் என்றால் காற்று பிய்த்து உதறியது. எப்படியோ சமாளித்து புகைப்படம் எடுத்தோம். நிறைய இடங்களில் நிறுத்தி நிறுத்தி அந்த மலைகளையும், அழகிய நீர்நிலைகளையும் படம் எடுத்தோம்.
இதற்குப் பிறகு நாங்கள் Djupivogur என்ற சிறிய கிராமத்தை அடைந்தோம். இந்த கிராமத்தின் கடற்கரை Glendavik Bay என்று அழைக்கப்டுகிறது. இந்த கிராமத்தில் ஐஸ்லாந்தின் கிழக்குப் பகுதியில் தங்கி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் 34 வித பறவை இனங்களை நினைவுகூறும் விதத்தில் 34 வித கல்லாலான முட்டைகளை செய்து பார்வைக்கு வைத்திருக்கிறார்கள்.
ஐஸ்லாந்தின் பெரிய விலங்குகள் எதையும் பார்க்க இயலாது. ஆர்க்டிக் நரி என்ற ஒரே ஒரு விலங்கு மட்டுமே ஐஸ்லாந்தில் இயல்பாகக் காணப்படும் விலங்காகும். Reindeer எனப்படும் கலைமான் கூட வேறு இடத்தில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டது. முயல், மின்க் எனப்படும் மென் மயிர்த் தோல் கொண்ட சிறிய விலங்கு, எலி போன்ற விலங்குகள் மட்டுமே இங்கு வாழ்கின்றன. கிழக்கு மற்றும் வடகிழக்கு ஐஸ்லாந்தில் மட்டுமே Reindeer எனப்படும் மான்கள் வாழ்கின்றன. வேறு எங்கும் நீங்கள் விலங்குகளைக் காண முடியாது. இது தவிர திமிங்கிலம், கடல் நாய், டால்பின் மற்றும் முன்னூறுக்கும் அதிகமான மீன் வகைகளை ஐஸ்லாந்தில் காணலாம்.
இதன் பின்னர் கிழக்கு ஐஸ்லாந்தின் பல்வேறு கடற்கரை பகுதிகளில் புகைப்படம் எடுத்துக் கொண்டு நாங்கள் அன்றிரவு தங்க இருந்த தங்குமிடத்தை அடைந்தோம். கிழக்கு ஐஸ்லாந்தின் கடற்கரை பகுதியின் புகைப்படம் கீழே.
நாங்கள் தங்கவிருந்த Lambhus Cabins என்ற தங்கும் விடுதி Hofn என்ற நகரத்திற்கு 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. Vatnajokull Glacier National park என்ற தேசியப் பூங்காவினுள் அமைந்துள்ளது. மரத்தாலான குடில்கள், அந்த குடிலில் இருந்து பார்த்தால் தூரத்து மலையில் அமைந்துள்ள பனிப்பாறையின் எழில் தோற்றம் என்றும் உள்ளம் அள்ளும் ஒரு அழகான இடத்தில இந்த தங்கும் இடம் அமைந்திருந்தது. இந்த தங்குமிடத்தின் அழகுத் தோற்றத்தை இந்தக் காணொளியில் பாருங்கள்.
அன்றிரவு சமையலை முடித்து உண்டு உறங்கினோம். அடுத்த நாள் நிறைய இடங்களை பார்க்க திட்டம் வைத்திருந்தோம். Vatnajokull தேசியப் பூங்காவினுள் நிறையப் பனிப்பாறைகள் உள்ளன மற்றும் பனிக்கட்டியிலான குகைகள் உள்ளன. பனிக்காலத்தில் இந்த அழகான குகைகளுக்கு உள்ளே சென்று பார்க்கலாம். சூரிய ஒளி இந்தப் பனிக்குகைகள் வழி ஊடுருவி நீல வண்ணத்தை பிரதிபலிக்கும் பல அழகிய புகைப்படங்கள் இணையத்தில் நீங்கள் பார்த்திருக்கலாம். எனினும் நாங்கள் சென்றது கோடைக் காலம் என்பதால், அந்த நாட்களில் பனிக் குகைகள் பாதுகாப்பு கருதி திறந்திருப்பதில்லை. பனிக் குகைகளையும், Aurora Borealis என்ற வட துருவ விண்ணொளியை பார்க்க விரும்பினால் செப்டம்பர் முதல் ஏப்ரல் மாதங்களில் ஐஸ்லாந்திற்கு செல்ல வேண்டும்.
நாங்கள் முதலில் சென்றது ஒரு Jokulsarlon என்ற பெயருடைய பனிப்பாறைகள் நிறைந்த ஏரிக்கு. ஐஸ்லாந்து பயண அனுபவம் பாகம் 1 -இல் வந்த திரையிசை பாடலில் இந்த ஏரியில் படமாக்கி இருப்பதை மீண்டும் உங்களுக்கு நினைவு படுத்துகிறேன். கோடைக் காலம் என்பதால் இந்த ஏரியில் நிறைய பனிப்பாறைகள் உருகி இருந்தன. இன்னும் அதிக அளவு பனிப்பாறைகள் இருந்தால் இந்த ஏரி இன்னும் அழகாக இருந்திருக்கும். இந்த ஏரியில் எடுத்த புகைப்படங்களும் காணொளியும் கீழே.
இதற்குப் பிறகு மதிய உணவு சாப்பிட்டுவிட்டு அடுத்த இடத்தை பார்க்கக் கிளம்பினோம். அடுத்து எங்கே சென்றோம் என்று அறிய ஆவலாக இருப்பீர்கள். அது அடுத்த பாகத்தில்.
இன்னும் வரும்.....
படங்கள் காணொளிகள் எல்லாம் அட்டகாசம் ரம்யா. பயணக்காதலி நான். ரொம்பப் பிடிக்கும். ஐஸ்லேன்ட் எங்கெங்கு காணினும் இயற்கையடா என்று ஹையோ என்ன அற்புதம்.
பதிலளிநீக்குபயணம் மிகவும் பிடிக்கும் என்பதால் போகும் வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ, குறித்துக் கொண்டுள்ளேன். ஆனால் பெயர்கள் தான் நுழையவில்லை!!ஹாஹாஹா
நீங்கள் எப்படி அனைத்தும் எளிதாகச் சொல்கிறீர்கள் என்பது வியப்பு. பெயர்கள் எல்லாம் குறித்துக் கொண்டிருப்பீர்கள் இல்லையா?
ரம்யா யுட்யூபில் உங்கள் படங்கள் காணொளிகள் எல்லாம் பதிந்து வையுங்கள் இந்த லிங்கும் கொடுங்கள் உலகம் சுற்றுபவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்குமே
அனைத்தையும் ரசித்தேன். கண்டிப்பாகச் செல்ல வேண்டும் என்று மனம் ....பொதுவாக யாரும் அவ்வளவு எளிதாகப் பய்ணம் செய்யாத செய்யத் தயங்கும் இடத்திற்கு நீங்கள் சென்று வந்திருப்பது அருமை. உங்கள் ஆர்வத்தையும் காட்டுகிறது.
கீதா
ஆமாம் கீதா. ஊர் மற்றும் இடத்தின் பெயர்கள் எனக்கும் ஆரம்பத்தில் மிகவும் கடினமாக இருந்தது. அப்புறம் எழுதி வைத்துக் கொள்ளத் தொடங்கினேன். பயண திட்டம் தீட்டும் போது முன்பின் பார்த்திராத இடங்கள் என்பதால் வேறு மிகவும் குழப்பமாகவே இருந்தது. சில நேரங்களில் ஒரே மாதிரி பெயருடைய ஊர்கள் இருக்கும். அதனால் எந்த இடம் இது, இதைப் பற்றி தெளிவு படுத்திக் கொள்ள யாரிடம் கேட்பது என்று தெரியாமல் குழப்பமாக இருக்கும். அதே போல இந்தப் பெயர்களை எல்லாம் ஐஸ்லாந்திக் மொழியில் எப்படி சொல்வது என்று பயிற்சிக் காணொளிகள் கூட வலையொளியில் இருக்கிறது. எனினும் அதை நான் இது வரை முயற்சி செய்ததில்லை. நீங்கள் சொல்வது போல வலையொளியில் இந்த புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய முயற்சி செய்கிறேன்.
நீக்குநாம் வாழும் இந்த வாழ்க்கை நமக்கு முன் சென்ற யாரோ ஒருவர் சீர்படுத்தித் தந்தது. நாமும் காணும் காட்சிகள் நமக்கு முன் சென்றவர் தோளின் மேல் ஏறி நின்றே நாம் காண முடியும்.//
பதிலளிநீக்குடிட்டோ செய்கிறேன் ரம்யா.
இங்கு போட்டிருக்கும் தங்கும் இடம் போன்றே முன்பும் போட்டிருந்த இடமும் இதே போன்று இருந்தது போன்று உள்ளது.
கீதா
ஆம், நீங்கள் சொல்வது சரி கீதா. சென்ற பாகத்தில் இருந்த குடிலில், அந்த குடிலுக்குள் குளியலறை வசதி இல்லை. அனைவருக்கும் பெதுவான சமையல் கூடம் மற்றும் குளியலறை என்று இருந்தது. ஆனால் ஒரே ஒரு இரவு மட்டுமே அங்கு தங்கினோம் என்பதால் அதைப் பற்றி பெரிதாக கவலை கொள்ளவில்லை. மற்றபடி நீங்கள் சில நாட்கள் தங்குவதாக இருந்தால் எல்லா வசதிகளும் கொண்ட ஒரு அறையை ஏற்பாடு செய்து கொள்வது நலம்.
நீக்கு