திங்கள், நவம்பர் 15, 2021

தன்னிகரில்லாத் தமிழ் - கவிதை




ஈராயிரம் வருடங்களாய் நாவில் இனித்தாய்

புதிய சொற்கள் பெற்றே ஈரவன் போல் வளர்ந்தாய்

ழகரத்தை சேர்த்து உயர் மொழியாய் நின்றும்

யாவரும் கேளிர் என்றதாலேயே உனை வையம் போற்றும்



ஈசனும் சேயோனும் சங்கத் தமிழ் வளர்த்தார்

தெய்வத்தின் மொழியென்ற நீங்காப் பெருமை தந்தார்

நெற்றிக்கண்ணைத் திறந்த போதும்குற்றம் குற்றமென்றே

கடவுளிடமும் கேள்விக் கணைத் தொடுத்தே புகழடைந்தாய்


ஆயுதத்தை மொழியில் ஏந்தி புதுமை செய்தாய்

அதனின் பெண் கவிகள் பலரும் தந்தது புதுமையாமே

மாமன்னர்களின் பேசுமொழி நீ மறுக்கவில்லை

எளிய கண்ணகிக்கும் நீதி தந்தது சிறப்பாமே


ஈரடியில் திருக்குறளாய் உலக நீதி சொன்னாய்

நான்கடியில் நாலடியாய் வாழும் மாண்பைச் சொன்னாய்

காப்பியங்கள், காவியங்கள், பக்தி இலக்கியங்கள்

இத்தனை அணி சுமந்த  மொழியுமுண்டா கூறுங்கள்


உலகிற்கே மூத்த குடி நாவில் தவழ்ந்தே

உலக மொழிகளுக்கு சொற்கடன் அளித்தே வள்ளல் ஆனாய்

வெளிநாட்டு அறிஞர் பலர் உன்னை ஆய்ந்தே

வாழும் உனக்கேற்ற ஒன்றைச் சொல்ல முடியாதோய்ந்தார்


மாறும் உலகினில் கடலும் சுடும் பாலையாகும்

மேரு கூட உடல் தேய்ந்து  பள்ளத்தாக்காகும்

மேலெழும்பும் தீக் கூட திசை மறக்கும்

கீழிறங்கும் நீர்க் கூட மேலாகச் செல்லும்

மாற்றம் யாண்டும் அணுகாத சீரிளமைத் தோற்றம்

காலம் தீண்டா பேரண்டத்தின் ஓசை நீதான்

உணர்வளித்து உயிர் பேணும் செம்மொழியே

உன்னைக் கைக்கொள்வோர் வாழ்வில் என்றும் தோல்வியில்லையே 

2 கருத்துகள்: