சென்றிடுவீர்
எட்டுத் திக்கும் - கலைச்செல்வங்கள்
யாவுங்
கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
என்று
முழங்கினார் கவிச் சித்தர் பாரதியார். பாரதியார் ஒரு தீர்க்கதரிசி. தொலைநோக்கு
பார்வை கொண்டவர். ஏனென்றால், பல்வேறு மொழிகளில் வெளிவரும் சிறந்த கருத்துகளையும்,
புதிய அறிவியல் செய்திகளையும் பெற்றால் மட்டுமே தமிழ் மொழி இந்தப் புவியில் தான் அடைந்து இருக்கும் உயர்ந்த நிலையில் நிலைக்க முடியும்
என்று எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே ஆய்ந்து அறிவுறுத்தியவர். மக்கள் விரும்பிப்
பார்க்கும் திரைப்படங்கள் இப்பொழுது மொழியாக்கம் செய்யப்பட்டு
வருகிறது அல்லது துணைத் தலைப்புக்களுடன் வருகிறது.
இதனால் உலகின் எந்த மூலையில் எடுக்கப்படும் திரைப்படத்திற்கும், அது சிறப்பாக இருக்கும் பட்சத்தில், உலகப்
பிரசித்தி பெற்றதும், உயரியதாகவும் கருதப்படும் ஆஸ்கார்(Oscar) விருது,
கான் (Cannes) விருது, பாஃப்டா(BAFTA)
விருது ஆகிய அனைத்தும் சாத்தியமாகிறது. இந்திய திரைப்படங்கள்
இப்பொழுது தயாரிக்கப்படும் பொழுதே மூன்று
மொழிகளில் தயாரிக்கப்படும் என்ற அறிவிப்புடன் தொடங்குகிறது.
வெளிநாடுகளில் ட்ரீம் ஒர்க்ஸ்(DreamWorks) டிஸ்னி(Disney)
போன்ற திரைப்படம் தயாரிக்கும் பெரு நிறுவனங்களின் கார்ட்டூன்
மற்றும் குடும்பச் சித்திரங்கள், சராசரியாக நாற்பது மொழிகளில் வெளியாகின்றன என்பது ஹாலிவுட் ரிப்போர்ட்டர் என்ற பத்திரிக்கை அளிக்கும் செய்தி.
ஆனால் இந்த உலகளாவிய பார்வை எழுத்துலகில் இன்னும் ஏற்படவில்லை. இன்று தமிழில்
எழுதுவோர் யாரும் நான் மூன்று மொழிகளில் இந்த புத்தகத்தை எழுதி வெளியிடுகிறேன்
என்று சொல்வதில்லை. அதைப் போலவே இன்று மாற்று மொழிகளில் எழுதுவோரும் தமிழ்
மொழியிலும் புத்தகம் வெளி வரும் என்று அறிக்கை விடுவதில்லை.
சாகித்திய விருது பெற்ற திருமிகு. கே.வி. ஜெயஸ்ரீ. நிலம் பூத்து மலர்ந்த நாள் (மொழியாக்க நூல்)
இந்தியாவில்
சாகித்ய விருதிற்கு அங்கீகரிக்கப்பட்ட 22 பிராந்திய மொழிகளில் அதிகமாக மொழியாக்கம் செய்யப்படுவது பெங்காலி, தமிழ் மற்றும் மலையாள மொழி நூல்களே.
துளு, போஜ்பூரி போன்ற
மொழிகள் தேர்ந்த மொழிபெயர்ப்பாளர்கள் இன்றியும், ஒருவேளை
மொழிபெயர்ப்பாளர் கிடைத்து மொழி பெயர்க்கப்பட்டாலும் இந்த
புத்தகங்கள் விற்பனை செய்வதில் உள்ள சவால்களைக் கருத்தில்
கொண்டு மொழி பெயர்க்கப்படுவதில்லை . பிரபலமான ஆங்கில ஆசிரியர்கள் எழுதிய புத்தகங்கள், எடுத்துக்காட்டாக, நார்மன் வின்சென்ட் பீலே, கேப்ரியல் கார்சியா போன்றோர் புத்தகங்கள்
தமிழில் மொழி பெயர்க்கப்படும் வேளையில், தமிழில்
இருந்து மொழிபெயர்க்கப்படும் புத்தகங்களுக்காக சரியான வாசகர்கள்
அல்லது சந்தையில் மொழி பெயர்ப்பு புத்தகங்களுக்கான
தேவை இருக்கிறதா என்பதை எண்ணி, இதில் இருக்கும் பொருளாதார
முதலீட்டையும் கருத்தில் கொண்டு பதிப்பாளர்கள் மொழியாக்கத்தை விரும்பதில்லை. எனவே
பிராந்திய மொழியாக்கத்தில் ஓரளவு முன்னணியில் தமிழ் இருந்தாலும், உலகளாவிய நிலையில் பின்தங்கி உள்ளது
என்பதே இன்றைய நிலை.
அமெரிக்காவை
பொறுத்தவரை மாற்று மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்படும் மொழிபெயர்ப்பு நூல்களில் முன்னிலை
வகிக்கும் முதல் ஐந்து நாடுகள் பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், ஜப்பான்,
ஸ்வீடன் ஆகியன. வருடம் தோறும் அமெரிக்காவில் வெளி வரும் ஆறு லட்சம் முதல் பத்து லட்சம் நூல்களில் வெறும் 3 சதவிகிதம் மட்டுமே மொழியாக்க நூல்கள் என்று புள்ளி விவரங்கள்
தெரிவிக்கின்றன. இதிலும் இந்திய மொழிகளில் வரும் நூல்கள் அதிக
அளவில் இல்லை. மொழி பெயர்க்கப்படும் புத்தகங்களில் கிட்டத்தட்ட அறுபது விழுக்காடு ஆண்கள் எழுதிய புத்தகங்கள்,
முப்பத்தைந்து விழுக்காடு பெண்கள் எழுதிய புத்தகங்கள், இதர புத்தகங்கள் ஆண் - பெண் இருவரும் இணைத்து எழுதிய படைப்புகள்
ஆகும். திருக்குறள் கூட 41 மொழிகளில் மட்டுமே மொழியாக்கம்
செய்யப்பட்டு உள்ளது. உலகில் அதிகமாக மொழியாக்கம் செய்யப்பட்ட புனித விவிலியம் 3,312 மொழிகளில் கிடைக்கிறது என்றால் மொழியாக்க நூல்களில் தமிழ் மொழி எத்தனை பின் தங்கியிருக்கிறது என்பதை
அறியலாம். மெக்ஸிகோ, தென்கொரியா
போன்ற நாடுகளின் அரசாங்கங்கள் மொழியாக்கத்தை
ஊக்குவிக்கும் வகையில் மானியங்கள் வழங்குகின்றன. இந்த மானியங்கள் இலக்கிய உலகின் சிறந்த ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசைக் குறி வைத்தே வழங்கப்படுகிறது. எனினும் தமிழகத்தை பொறுத்த வரை தற்போதைய தமிழக
அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சமீபத்தில் வெளியிட்ட மானிய
கோரிக்கையில்(எண் - 46) மொழியாக்கம் குறித்த எந்த ஒரு முன்னெடுப்பையும் முன் வைக்கவில்லை. எனினும், தமிழ்நாடு அரசு
பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சிறந்த தமிழ்ப் படைப்புகளை மொழியாக்கம் செய்து ஒவ்வொரு மூன்று
மாதங்களுக்கும், நான்கு புத்தகங்கள் வீதம் ஆங்கிலத்தில்
வெளியிடப்படும் என்று 2017
இல் அறிவித்து. இவ்வாறு வெளிவந்த புத்தகங்களில் சில - தி குறள், வாடிவாசல்(சி.எஸ்.செல்லப்பா), செம்பருத்தி(தி.ஜானகிராமன்), தலைமுறைகள்(நீலா பத்மநாபன்) மற்றும் கரிசல் கதைகள்(கி.ராஜநாராயணன்) ஆகியன. எனினும்
யானைப் பசிக்கு சோளப் பொரி என்பது போல இந்த முயற்சியும் மிகக் சிறியதே.
சமீபத்தில்
வெளியாகி வரவேற்பை பெற்ற "ஹாரி பாட்டர்" என்ற குழந்தைகளுக்கான கதை
கிட்டத்தட்ட எழுபத்தி ஒன்பது மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய
நேரும்போது நம்முடைய மண்ணில் எழுதப்பட்ட
குழந்தைகளுக்கான மந்திர தந்திரக் கதைகளும், சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், வேள்பாரி போன்ற நூல்கள், பிற
மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படுமானால் அது எத்தகைய ஒரு பெரிய அறிமுகத்தை
தமிழுக்கு பெற்றுத் தரும் என்பதோடு மட்டுமல்லாமல் தமிழரின்
பண்பாடும், நாகரிகமும் உலகளவில் பேசு பொருளாக மாறி ஒரு
ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
எழுத்தாளர்
கண்மணி குணசேகரன் அவர்களின் “அஞ்சலை” என்ற நாவல் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு கேரளாவில் உள்ள கல்லூரியில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
அது போலவே எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களின் சீரோ டிகிரி(Zero Degree) என்ற நாவலும் மொழிபெயர்க்கப்பட்டு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா
ஸ்டேட் லாங் பீச் பல்கலைக்கழகத்தில் 2010 ஆம் ஆண்டு
பாடமாக வைக்கப்பட்டது என்பது மொழியாக்கத்திற்கு தேவையான உந்து சக்தியாக பார்க்க
வேண்டும்.
எப்படி புத்தக வாசிப்பு என்பது நம்முடைய சிந்தனை
ஓட்டத்தை விடுத்து அடுத்தவரின் பார்வை வழி இந்த உலகத்தை
நோக்குவதைப் போன்றதோ, அது
போலவே வெவ்வேறு மொழி, பண்பாடு,
கலாச்சாரம், அரசியல் சூழ்நிலை போன்றவற்றில்
இருக்கும் ஒருவரின் கருத்துக்களை மொழியாக்கத்தின் வழியே படிக்கும்போது அது
முன்னெப்போதும் இல்லாத அளவு ஒரு முற்றிலும் மாறுபட்ட சமுதாயப் பார்வையை நமக்கு ஏற்படுத்தும் என்பதே மொழியாக்கத்திற்கான மிகச்சிறந்த காரணியாக
அமைகிறது. குழந்தைகள் வாசிக்கும் அலாவுதீனும்
நாற்பது திருடர்களும், சிந்துபாத், ஸ்லீப்பிங்
பியூட்டி (Sleeping Beauty),சிண்டரெல்லா (Cinderella)
போன்ற பல கதைகள் மொழியாக்கம் செய்யப்பட்ட கதைகளே என்பது பல பேர் அறியாதது. எப்படி
உலகத் திரைப்படங்கள் என்பது இன்று சாத்தியம் ஆகி இருக்கிறதோ அது போலவே மாறி வரும் உலகிற்கு, செறிவான பன்னாட்டு இலக்கிய முகம்
மிகத் தேவை. ஓவியம், இசை என்பது எப்படி உலகம் முழுமைக்குமான
ஒன்றோ அதைப் போலவே உலகம் அனைத்துக்குமான பொது எழுத்துக்களம் நோக்கிய நகர்வு மிக முக்கியமாகிறது. இது வாசகர்களுக்கு மட்டுமல்ல,
புதிய சிந்தனைக் கதவுகளை
திறக்கும் தளமாக எழுத்தாளர்களுக்கே அமையும் என்பது
திண்ணம்.
ஒரு புத்தகத்தை
மொழிபெயர்க்கும் போது அந்த புத்தகத்தின் சொல் அல்லது கருத்தை
மட்டும் மொழிபெயர்த்தால் அது ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாக இருக்காது. அந்த படைப்பின்
பண்பாட்டு சூழ்நிலை, எந்த விதமான கலாச்சார சூழ்நிலையில் இருந்து
எழுதப்பட்டது என்று பல விஷயங்களை யோசித்து மொழிப் பெயர்த்தல்
வேண்டும். எடுத்துக்காட்டாக பெண்களுக்கான
கவிதைகளை மொழிபெயர்க்கும் போது வெறும் வார்த்தைகளையும் அதன் அழகியலையும் மட்டும் கடத்தி விட்டால்
போதாது. அந்த கவிதை பேசும் கலாச்சார, அரசியல் மற்றும்
தனிமனித உணர்வு ஆகிய அனைத்தையும் ஆராய்ந்து எழுத்தாளரின் முழு உணர்வினையும்
பிரதிபலிக்கும் விதமாக இருக்க வேண்டும். மொத்தத்தில் நல்ல மொழி பெயர்ப்பு என்பது உணர்வுள்ள ஒன்றாக திகழ வேண்டும்.வெறும் சொற்களின் குவியலாக இருந்து, அர்த்தம் அற்ற வரிகளாய் படிப்பவரிடம் எந்த விதமான தாக்கத்தையும் உருவாக்காமல் இருப்பது நல்ல
மொழியாக்கம் அல்ல. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவியேற்பு
விழாவில் கவிதை வாசித்த கறுப்பின கவிஞர் அமெண்டா கோர்மன் அவர்களின் கவிதையை டச்சு மொழியில் மொழிபெயர்க்க ஒரு வெள்ளை அமெரிக்கரை நியமித்தது
பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஒரு கறுப்பின, பெண்ணியவாதியின் கருத்துக்களை மொழி பெயர்க்கக்
கூடிய திறமை இந்தப் பின்னணியில் இருந்து வராத ஒருவருக்கு இருக்க முடியாது என்று ஒரு சாராரும்,
இத்தகைய ஒரு அளவுகோலைக் கொண்டால் மொழி
பெயர்ப்புக்கு சரியான நபரைத் தேர்ந்தெடுத்தல் மிகக் கடினம் என்று மறு சாராரும்
எதிர்த்தனர். இந்தச் சர்ச்சை சரியா தவறா என்ற
விவாதத்திற்குள் நாம் செல்ல வேண்டாம். இங்கே கவனிக்க
வேண்டியது, மொழிபெயர்ப்பாளர் என்பவர் முகம்
தெரியாத ஒருவர் அல்ல, மூல மொழியில் எழுதும் எழுத்தாளரைப்
போன்றே, கற்பனைத் திறன், மொழி
வன்மை, சூழ்நிலை அறிந்து எழுதுதல் என்று பல்வேறு
தகுதிகளை கொண்டிருக்க வேண்டும் என்பதே நாம் மனதில் இருத்த வேண்டிய ஒன்று.
கவிஞர்
அமெண்டா கோர்மன்
மொழிபெயர்ப்பில்
பங்குபெறும் மொழிகளைத் தருமொழி, பெறுமொழி,
வழிமொழி என அழைக்கின்றனர். எந்த மொழியில்
இருந்து மொழியாக்கம் பெறுகிறதோ அது தருமொழியாகவும், எந்த மொழியாக மாற்றம் அடைகிறதோ அதை பெறுமொழி என்றும் கூறுவார்கள் . ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு
மொழிபெயர்க்கப்படும் போது அதில் முதல்மொழியான தருமொழியும் இரண்டாம் மொழியான
பெறுமொழியும் இருப்பது இயல்பு. அதே மூலமொழி சீனமாகவும் இரண்டாம் மொழி
ஆங்கிலமாகவும் மூன்றாம் மொழி தமிழாகவும் இருந்தால் அப்போது இரண்டாம் மொழியாகிய
ஆங்கில மொழியை வழிமொழி என்கிறோம்.
மொழியக்கத்திற்கு தேவையான செயலிகள் - கூகிள் ட்ரான்லேட் (Google
Translate), ஐ-ட்ரான்ஸ்லேட் (iTranslate), சே ஹாய் (SayHi) போன்றவையும்,
அந்த மொழியாக்க நூல்களை சேமித்து வைக்க
மிகவும் மலிவான சேமிப்பு வன்பொருள்கள் சந்தையில் வந்து விட்டாலும், ஒரு மனிதனின் பங்களிப்பை இவை
நீக்கவில்லை என்பதே மொழியாக்கத்திற்கான மிகப் பெரிய சவால்.
இன்று மாணவர்கள்
பள்ளியில் இருந்து வெளி வரும் போது குறைந்தது இரண்டு அல்லது மூன்று மொழிகளை கற்றறிந்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி கல்லூரியிலும்
குறிப்பிட்ட மொழியை பாடமாக எடுத்து படிப்பவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பின் ஒரு அங்கமாக
சிறந்த புதினங்களையும், கவிதைகளையும், கதைகளையும்
மொழியாக்கம் செய்தாலே நல்ல மொழியாக்க நூல்களை இங்கேயே உருவாக்கிவிட முடியும். மொழியாக்கம் செய்பவர்களை பற்றிய தகவல்கள் இல்லாதது ஒரு பெரும்
குறையே. விக்கிபீடியா போன்ற தகவல் களஞ்சியத்தில்
கூட மொழியாக்கம் செய்பவர்கள் யார் யார், எந்த மொழியில்
புலமை பெற்றவர்கள், அவர்கள் வெளியிட்ட நூல்கள் என்ன
என்ற தகவல்கள் ஒருங்கே இல்லை. இந்த குறையை நீக்கும் பொருட்டு
அரசாங்கமே ஒரு மொழியாக்க தரவுத்தளம்(Database) நிறுவினால்
சிறப்பாக இருக்கும். வெளிநாடுகளில் மொழியாக்கம் செய்பவர்கள் பற்றிய தகவல்களை பல தனியார் செய்தி நிறுவனங்களும், புத்தக
வெளியீட்டாளர்களுமே சேகரித்து வைத்திருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்திய
மொழிபெயர்ப்பாளர் கூட்டமைப்பு (Indian Translators Association) மற்றும் எழுத்தாளர் ஜென்னி பட் அவர்களால் தொடங்கப்பட்ட
"இந்திய எழுத்தாளர் மற்றும் மொழிப்பெயர்ப்பாளர் சங்கம்"
(Writers and Translators Association, India) ஆகிய
அமைப்புகளும் செயல்படவில்லை. எனவே இந்த வெற்றிடத்தை நிரப்புவதில் ஒரு அரசாங்கத்தின் பங்கு இன்றியமையாததாகிறது.
மொழியாக்க
புத்தகங்கள் வெளியானாலும் இந்திய அளவில் ஜேசிபி(JCB) விருது,
சாகித்ய அகாடமி(Sahitya Academy) விருது
போன்ற விருதுகளைத் தாண்டி மொழியாக்கத்தை பெரிதும்
ஊக்குவிக்கும் விருதுகள் தரப்படவில்லை. "குட்டி
நோபல் பரிசு" என்ற பெருமை கொண்ட ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் விருது,
இலக்கியத்திற்கான அமெரிக்க விருது
போன்ற விருதுகள் கூட மொழியாக்க புத்தகங்களுக்கு வழங்கப்படவில்லை. இதில் புக்கர்
விருது மட்டும் சற்றே விதிவிலக்காக
2016 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து, மற்றும் அயர்லாந்தில் வெளியிடப்படும் ஆங்கில மொழியாக்க நூல்களை விருதிற்காக
ஏற்றுக் கொள்கிறது. மூல மொழியில் குறிப்பாக ஆங்கிலத்தில்
எழுதப்படும் நூல்களுக்கு மட்டும் விருதுகள் அளிப்பது என்ற
நிலைப்பாடும், மொழியாக்க நூல்களுக்கு விருதுகள்
பரவலாக அளிக்கப்படவில்லை என்பதும் மொழியாக்கத்திற்குமான பெரிய சவாலாகும்.
வட அமெரிக்கத்
தமிழ்ச் சங்கப் பேரவை என்ற அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழை
வளர்க்கும் அறிஞர்களுக்கு "உலகத் தமிழ் பீட விருது" என்ற விருதினை வழங்கி கௌரவிக்கப் போவதாக
அறிவித்திருக்கும் இந்த வேளையில், சிறந்த தமிழ் புதினங்களை, கதைகளை, கவிதைகளை அயல்
மொழிகளுக்கு கொண்டு சேர்க்கும் பணியினை செய்யும்
மொழியாக்க நிபுணர்களுக்கும் பரிசு வழங்கி கௌரவித்தால் அதுவும்
தமிழிற்கான தொண்டாகவே கொள்ள வேண்டும் என்பதையும்
இந்தக் கட்டுரை வாயிலாக வல்லினச் சிறகுகள் ஒரு வேண்டுகோளாக முன் வைக்கிறது.
பாரதி மறைந்து
நூறாண்டுகள் கடந்து விட்டது. பல நாட்டு இலக்கிய மலர்கள் தமிழ்ச்
சோலையில் மலர்ந்து மணம் வீச வேண்டும் என்றும்,
தமிழின் சிறந்த இலக்கிய படைப்புகள் பிற நாட்டு மக்களின் இலக்கிய
உலகில் மலர்ந்து தமிழின் மேன்மை அகிலம் எங்கும் பரவ
வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை எழுதிச் சென்றவர். எனினும் அந்தக் கனவு இன்றும் கானல்
நீராகவே இருக்கிறது. எழுத்தாளர்கள் வாழும் காலத்திலேயே அவர்களின் எழுத்துக்களை அனைவருக்கும் கொண்டு சேர்த்து, அவர்களுக்கான
உரிய அங்கீகாரத்தையும் பெற்றுத் தருவதும்
அனைவரின் கடமையாகிறது. மூலமொழியில்
எழுதுவது மட்டுமன்றி, அந்த எழுத்தினை உரிய முறையில்
உள்வாங்கி மொழி பெயர்க்கும் நிபுணரை கண்டறிந்து, அதனை
மொழியாக்கம் செய்வது மற்றும் தங்கள் படைப்பிற்கு உரிய அங்கீகாரம் பெறுவது என்ற பெரும் பொறுப்புகள் இன்னும்
எழுத்தாளர்கள் வசமே இருக்கிறது. அவர்களின் இந்தச் சுமையை எளிதாக்க அரசு, தனியார் நிறுவனங்கள், புத்தக வெளியீட்டாளர்கள் என்று பல்வேறு தரப்பினர் இணைத்து செயலாற்ற
வேண்டிய தருணம் இது. இதுவே பாரதிக்கும், அன்னை
தமிழுக்கும் நாம் செய்ய கூடிய சிறந்த கைமாறாக இருக்க முடியும்.
பக்கம் 141-இல் தீபாவளி அனுபவங்களை வாசிக்கலாம். அதில் என்னுடைய தீபாவளி அனுபவத்தை கீழே பகிர்ந்திருக்கிறேன்.
அயலகத்தில்,
தீபாவளி வாரத்தில் எந்த நாளில் வந்தாலும், தீபாவளிக்
கொண்டாட்டங்கள் வார இறுதியில் மட்டுமே நடைபெறும். அதுவும், "விட்டேனா பார்" என்ற ரீதியில் நெருங்கிய நண்பர்களுடன் ஒரு
சுற்று, அக்கம் பக்கத்து வீட்டினருடன் ஒரு சுற்று,
வெளியூர் நண்பர்களுடன் ஒரு சுற்று, உறவினர்களுடன்
ஒரு சுற்று என்று எத்தனையாவது சுற்று இது என்பதே மறந்து போய், நரகாசுர வதத்தை ரகம் ரகமாய்க் கொண்டாடித் தீர்ப்போம். தீபாவளிக்கு
ஒரு வாரம் முன்பு பலகாரங்கள் செய்கிறேன் பேர்வழி என்று நண்பர் ஒருவர் வீட்டில்
கூடி, அந்த நண்பர் வீட்டு வண்டிக் கொட்டிலில் நாள்
முழுவதும் எதையாவது பொரித்து, வறுத்து, "கல்யாண
சமையல் சாதம்" என்று பாடிக் களித்து, பேசிச் சிரித்து,
நிறைய இனிப்பு/கார வகைகளை உண்டு, கடோத்கஜன் போல மகிழ்ந்திருப்போம். நாள்
முழுதும் முயன்று செய்த பலகாரத்தை பத்திரமாக எடுத்து வைக்காமல், பேச்சு சுவாரசியத்தில் காரின் மேலேயே வைத்து விட்டு, கார் கிளம்பிய வேகத்தில் மேலேயிருந்த பாத்திரத்தில் இருந்த
பதார்த்தங்கள் எல்லாம் கீழே விழுந்து பூமித்தாய்க்கு அபிஷேகம் ஆகி, பெரும் வள்ளலாய், வெறும் கையுடன் வீடு திரும்புவோம்.
பின் என்ன வழக்கம் போல கடைப் பலகாரம் வாங்கிப் பகிர்ந்து மீசையில் மண் ஓட்டவில்லை
என்ற வடிவேலு உடல் மொழியை வெளிப்படுத்தி ஒப்பேற்றுவோம். போனில் அனைவருக்கும் வாழ்த்துச்
சொல்லி, வாட்சப், ட்விட்டர்
என்று எந்த சமூக ஊடகத்தையும் விடாமல் பயன்படுத்தி டிஜிட்டல் உலகில் தீபாவளி
வாழ்த்தை வைரல் ஆக்குவோம். காற்று மாசாகுமோ, அக்கம்
பக்கத்தினர் ஏதேனும் சொல்வார்களோ என்று யோசித்து அதிகம் சத்தம் மற்றும் புகை வராத
வெடி வகைகளைக் கொளுத்தி சாந்தமாய் தீபாவளி கொண்டாடி முடிப்போம். குளிர் காலத்தில்
வரும் தீபாவளி அன்று குளிர் தாங்கும் உடைகள் அணிந்து விண்வெளி வீரரைப் போல
புகைப்படங்களில் காட்சி அளிப்போம். இத்தனை களேபரத்திற்கு பின், தீபாவளிக்கு எடுக்காத விடுமுறையை, களைப்பு
மிகுதியால் தீபாவளிக்கு பின் எடுத்து ஓய்வெடுப்போம். அடுத்த தீபாவளியையாவது
ஊருக்குப் போய் எல்லா உறவினர்களோடும் , இளவயது
நண்பர்களோடும் கொண்டாட வேண்டும் என்ற ஏக்க எண்ணத்துடனும், பால்ய
வயது தீபாவளிக் கொண்டாட்டங்களை நினைவு கூர்ந்து, அந்த
தீபாவளிகள் தந்த இன்பத்தை இந்தத் தலைமுறையினர் உணர்கிறார்களா போன்ற பதிலில்லாக்
கேள்விகளுடன் முடிவடையும் எங்கள் தீபாவளி கொண்டாட்டம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக