வல்லினச் சிறகுகள் ஆகஸ்ட் இதழில் என்னுடைய கவிதை. வடிவமைப்பு செய்த திரு. லோகராஜ் அவர்கள் அருமையான ஒரு படம் தேர்வு செய்து அளித்துள்ளார்.
இந்தக் கவிதையை வாசிக்க வல்லினச் சிறகுகள் இதழ் இணைப்பு:
கவிதை இதோ
தலைப்பு: இல்லத்தரசி
கைரேகை மறைய
தேய்த்த பாத்திரங்கள் கணக்கிலடங்கா
செங்குத்தாக அடுக்கி வைத்திருந்தால்
உலகின் உயரமான கோபுரங்களை நகைத்திருக்கும்
வெளுத்த துணிகளும் மடித்த உடுப்புக்களும்
எண்ணிக்கையில் வசப்படாது
கயிற்று கொடிகளில் அருகருகே தொங்கவிட்டால்
பூமிக்கே புடவையாய் கட்டியிருக்கலாம்
விடுமுறை அறியா அடுக்களையில்
பிறர்கென செய்த உணவினில்
ஒர் உணவுப் பாலம் அமைத்திருந்தால்
செவ்வாய்க்கே செலவில்லாமல் சென்று திரும்பலாம்
சுத்தம் செய்த தரைகளை
கொஞ்சம் கணக்கெடுத்தால்
வானத்தின் பரப்பளவே
அளவில் சிறியதாக ஆகக் கூடும்
நீல வானம்
பால் வெள்ளை நிலா
பொன் மஞ்சள் கதிரவன்
அலங்கார மொழி தாண்டி உண்மையில்லை
இல்லத்து அரசி என்பதும்
அவ்வாறானது தான்
மிகவும் ரசித்தேன் ரம்யா! வரிகளை ரசித்தாலும் இடையோ கொஞ்சம் லைட் சோகம் இழையோடுகிறதோ..!!
பதிலளிநீக்குவாழ்த்துகள் ரம்யா.
கீதா
நன்றி கீதா. சோகம் என்பதை விட ஆதங்கம் தான் அதிகம்.வீட்டில் இருக்கும் பெண்களின் சுமைகளை பெரிதாக யாரும் பொருட்படுத்துவதில்லை. வேலை செய்யும் பெண்களின் கஷ்டம் அதை விட அதிகம். மாற்றம் வர வேண்டும். இல்லத்தரசி என்பது போன்ற மாய தோற்றம் எல்லாம் அறுபட வேண்டும் என்று நினைத்து எழுதியது.
நீக்குகவிதை மிக நன்றாக இருக்கிறது. ஒரு இல்லத்தரசியின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது. வாழ்த்துகள்
பதிலளிநீக்குதுளசிதரன்
நன்றி துளஸீதரன்
நீக்கு