உதிர்ந்த மனிதனும் தொலைந்த மனிதமும்
சமீபத்தில் கேள்விப் பட்ட உண்மை சம்பவம். தூரத்து உறவினர் ஒருவருக்கு நேர்ந்தது. கிட்டத்தட்ட 70 அல்லது 75 வயது மதிக்கத்தக்க அந்த உறவினர் மனைவின் மறைவுக்கு பின் சொந்த கிராமத்திலேயே தங்கி இருந்தார். அவருக்கு 8 குழந்தைகள். 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறிய டவுனில் ஒரு மகளும் கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரிய ஊரில் சில மகன்களும் மற்றும் சிலர் சென்னை போன்ற பெருநகரங்களிலும் சிலரும் வசிக்கின்றனர். சம்பவ தினத்தன்று தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த உறவினர் நெஞ்சு வலி காரணமாக இறந்துவிட்டார். உட்கார்ந்த நிலையிலேயே இறந்தவர் உடல் கிட்டத்தட்ட 3 நாட்கள் வரை கண்டுபிடிக்கப் படவில்லை.3 நாட்கள் கழித்து அழுகிய உடலில் இருந்து கிளம்பிய புழுக்கள் வீடெங்கும் நெளிய ஆரம்பித்த பின்னரே யாரோ கண்டுபிடித்து ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.பின்னர் அவர் உடலுக்கு ஈமச் சடங்குகள் நடத்தப்பட இயலாமலேயே எரிவூட்டப்பட்டது. இத்தனை மகன்கள் மற்றும் மகள்கள் இருந்தும், கிராமத்தில் அவ்வளவு மனிதர்கள் இருந்தும், தொலைபேசி வசதிகள் இருந்தும் 3 நாட்கள் வரை யாரும் அவர் எப்படி இருக்கிறார் என்று யாரும் கவலை கொள்ளவில்லை என்று நினைக்கும் போதே தூக்கம் வர மறுக்கிறது. நகரத்தில் அடுத்த பிளாட்டில் வசிப்பவர் யார் என்பது தெரியாமல் போனது ஆச்சரியம் இல்லை. இந்தியாவின் இதயங்கள் எனப்படும் கிராமங்களே அவ்வாறு மாறி வருவது மனதை பிசைகிறது. கிராமத்தில் அதுவும் 70 வருட காலமாக அந்த உறவினர் வசித்து வந்த ஊரில் யாரும் எட்டிக்கூட பார்க்காத அளவிற்கு சக மனிதன் மேல் யாருக்கும் அக்கறை இல்லை. யாருக்காகவும் உலகம் நிற்பதில்லை. நம் காலத்திற்கு பின் நாம் இருந்ததை யாரும் நினைவு கொள்ளப்போவதில்லை. நாம் இல்லாத போது நமக்காக யாரும் கண்ணீர் விட்டு கதறி அழவேண்டும் என்பதும் கூட முக்கியம் அல்ல. ஆனாலும் தனியாக வசிக்கும் முதியவரோ முதியவளோ எப்படி இருக்கிறார் என்பதை விசாரிக்க கூடவா ஒருவருக்கும் மனமில்லை? இத்தனைக்கும் உறவினர் மிகவும் நல்ல மனிதர். கடைசி காலத்தை தன்னுடைய சொந்த வீட்டிலே கழிக்க வேண்டும், மகனோ/மகளோ யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற எண்ணம் உள்ளவர். நேரில் வர முடியாவிட்டாலும் கொஞ்சம் அவர் எப்படி இருக்கிறார் என்று பார்த்து வந்து சொல்லுங்கள் என்று மகன், மகள், மருமகன், மருமகள், பேரப் பிள்ளைகள் என யாரேனும் ஒருவர் பக்கத்து வீட்டாரை தொலைபேசியில் கூப்பிட்டாவது கேட்டிருக்கலாம். உறவினர் பணம் படைத்தவர் அல்ல. ஒரு வேளை வசதியானவர் என்றால் மகன்களோ/மகள்களோ வந்து உறவு கொண்டாடி இருப்பார்களோ என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. "பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்று வள்ளுவன் சொன்னது உண்மையிலும் உண்மை. மூன்று நாட்கள் சக மனிதர்களுக்காக காத்திருந்தது அந்த முதியவர் மட்டும் அல்ல, நகரத்து தெருக்களில் அனாதையாய் கைவிடப்பட்டு கடைக்கோடி கிராமத்தில் தஞ்சம் புகுந்திருந்த மனிதமும் தான்.
மாயா மாயா எல்லாம் மாயா
மாயாவதி மேல் உள்ள ஊழல் புகார் வழக்கு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதோடு மட்டும் அல்லாமல் வழக்கு ஜோடிக்க பட்டது என்று சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது.அரசியல் எதிரிகளை ஒடுக்க நினைக்கும் மத்திய அரசு, எதிர்ப்பாளர்களை அடக்குவதற்காக வழக்குகளை ஏவுவதும் பின்னர் அவர்கள் ஒத்துழைப்பிற்காக வழக்கை தள்ளுபடி செய்வதும் வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி, ஆ.ராசா போன்றோர் ஏற்கனவே வெளியே வந்துவிட்டனர். காங்கிரசுக்கு குடைச்சல் கொடுத்த ஜெகன்மோகன் ரெட்டி இன்னும் உள்ளே இருக்கிறார். நாளை அவர் காங்கிரசுடன் இணக்கம் கொண்டால் அவரும் வெளியில் வந்துவிடுவார். உபி முழுவதும் மாயாவதி தனது சிலைகளை நிறுவிய செலவே 700 கோடியை தாண்டும் என்கிறார்கள். சென்ற ஆண்டு தேர்தல் மனு தாக்கல் செய்யும் போது தனக்கு 111 கோடி சொத்துள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறார். இவ்வளவு பணத்தையும் அவர் ஊழல் மூலமாகவே சேர்த்திருப்பார் என்பதை நேற்று பிறந்த குழந்தை கூட சொல்லும். இந்த அழகில் போதிய ஆதாரம் இல்லை என்று வழக்கை தள்ளுபடி செய்ததோடு அல்லாமல் தன்னிச்சையான அதிகாரம் இல்லாத சிபிஐயை வழக்கை ஜோடித்து என்று குறை கூறுவது நகைப்பிற்குரிய ஒன்று. மிகப் பெரிய ஊழல் வழக்கான ஸ்பெக்ட்ரம் வழக்கே ஒன்றும் இல்லாமல் ஆகிக் கொண்டிருக்கிறது. மாயாவதியின் வழக்கு நல்லபடியாக முடிந்து தீர்ப்பு கூறும் நன்னாள் இந்த நூற்றாண்டில் வருவதற்கான வாய்ப்பு இல்லை. எனவே வழக்கை தள்ளுபடி செய்ததால் இப்போதைக்கு மக்களின் வரிப்பணம் மிச்சம் பிடிக்கப்பட்டு இருக்கிறது. மறுபடியும் காங்கிரசு தவிர வேறு ஒரு அரசு மத்தியில் பதவி ஏற்றால் வழக்கு தூசி தட்டப்படும் வாய்ப்பு இருந்தாலும் இதை விட பெரிய ஊழல் வழக்குகள் வந்து மாயாவதி வழக்கை பின்னுக்கு தள்ளி விடும். எனவே இந்த வழக்கு மறுபடியும் உயிர் பெறுவதற்கான சாத்தியகூறுகள் மிகவும் குறைவு. மக்களும் நீதி என்பது எட்டாக்கனி என்பதை உணர்ந்து 'இதுவும் கடந்து போகும்" என்ற மனநிலையிலே உள்ளனர். ஊழல் வழக்குகளை விசாரிக்க பிரதமர் மற்றும் ஜனாதிபதி யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாத தனியான சுய அமைப்பு ஒன்று நிறுவப்பட வேண்டும். இவர்களுக்கு அரசியல் சக்திகளின் அச்சுறுத்தல் இல்லாமலும் எந்த விதமான குறிக்கீடும் இல்லாமலும் சுதந்திரமாக செயலாற்றும் அதிகாரமும் வழங்கப்பட வேண்டும். அந்த நிலை வரும் வரை நீதி தேவதை கண்களில் மட்டும் அல்ல கைகளிலும் கறுப்புத்துணி கட்டப்பட்டே இருக்கும்.(எழுதி கொஞ்சம் நாளானாலும் இந்த ஊழல் செய்தி மட்டும் எப்போதும் புதிது போலவே இருப்பதற்காக கண் துஞ்சாமல் சேவை ஆற்றும் நமது அரசியல்வாதிகள் வாழ்க)
ஆரிருள் உய்த்து விடும்
இன்று காலையில் நடந்த சம்பவம் இது. புதிய பள்ளியில் சேருவதற்கான ஓரியன்ட்டேஷன் தினம் என்பதால் மகளை அழைத்துக் கொண்டு காலையில் அவளுடைய பள்ளி சென்றிருந்தேன். அனைவருக்கும் பார்க்கிங் இட வசதி இல்லாததால் காரை எங்கே வைப்பது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். எனக்கு பின் வந்த ஒருவர் பார்க்கிங் அல்லாத ஒரு இடத்தில் காரை நிறுத்துவதை கண்டு நானும் அவ்வாறே நிறுத்தினேன். அப்பொழுது சரியாக பார்க் செய்திருந்த பெண்மணி ஒருவர் தனது காரை எடுப்பதற்கு எனது காரை எடுக்க சொல்லவே எனது காரை எடுத்து பின் அந்த பெண்மணியின் கார் நிறுத்தி இருந்த இடத்தில் எனது காரை நிறுத்த எத்தனிக்கும் வேளையில் பின்னால் இருந்த காரில் இருந்து இறங்கிய அந்த நபர் என்னுடைய காரை மறித்து முன்னே நின்று கொண்டார். ஒன்றும் புரியாமல் என்ன விஷயம் என்று யோசிக்கும் போது கோபமாக ஏதோ கையை ஆட்டி பேச ஆரம்பித்தார். நானோ வழியில் என் கார் நின்று இருந்ததால் அந்த மனிதன் கோபமாக பேசி முடித்து நகரும் வரை பொறுமையாக காத்திருக்க வேண்டியதாயிற்று. பிறகு காரை நிறுத்தி இறங்கியவுடன் நீ ஏன் என்னுடைய இடத்தில் நிறுத்தினாய் என்று என்னுடன் சண்டை இட ஆரம்பித்தார். குழந்தைகள் முன் சண்டையிடுவது என்பது எனக்கு பிடிக்காத விஷயம். ஆனாலும் வலுச்சண்டைக்கு வரும் அடாவடிக்காரனுக்கு அதை பற்றி எல்லாம் கவலை இருக்குமா என்ன? நான் என் குழந்தைகளுடன் இருப்பதால் உன்னை சும்மா விடுகிறேன் என்று எனக்கு மிரட்டல் வேறு. நான் வரிசையில் முதலில் இருந்ததோடு மட்டுமல்லாமல் அந்த பெண்மணி காரை எடுத்தவுடன் வைக்கும் வகையில் எனது கார் இருந்ததாலும் நான் செய்தது சரியே என்றாலும் காலையிலேயே அனாவசிய சண்டையின் மூலம் எனது நாளை மட்டும் அல்லாமல் தனது நாளையும் சண்டை சச்சரவுடன் தொடங்கி வைத்த அந்த மனிதரை என்னவென்று சொல்வது. சாதாரணமாக பேசி தீர்க்கக் கூடிய ஒரு விஷயத்தை மலையாக்கி அதனால் என்னையும் வம்புக்கு இழுத்து பின் எனது குழந்தையின் முதல் நாளை ஒரு கஷ்டமான நினைவாக்கிய அந்த மனிதர் ஒரு நிமிடம் பொறுமை கொண்டிருந்தால் எல்லாருக்கும் இந்த நாள் நல்ல நாளாகி இருக்கும் . அதிவேக(ராஷ்) டிரைவிங் செய்வது, சிக்னல் விழுந்த மறு நொடி கார் கிளம்பவில்லை என்றால் ஓட்டுனரை அவமதிக்கும் வகையில் சைகைகள் செய்வது, பின்னிருந்து ஹாரன் அடித்து அவசரத்தை வெளிப்படுத்துவது என்று பொறுமை என்பது கிலோ என்ன விலை என்று கேட்கும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைவூட்டுகிறது இந்த நிகழ்வு. காலை வேளையில் அவசரமாக எங்காவது செல்ல வேண்டும் என்றால் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே கிளம்பி விடுவது நமக்கு மட்டும் அன்றி நம்முடன் சாலையில் பயணிக்கும் அனைவருக்கும் நாம் செய்யும் உபகாரம். வாழ்க்கையில் நம்முடன் பயணிக்கும் அனைவரும் விருப்பு வெறுப்பு சோகம் சந்தோஷம் வெற்றி தோல்வி என்ற எல்லா உணர்வுகளையும் கொண்ட மனிதர்கள் தான் என்பதை மறக்க வேண்டாம். தன்னுடைய குழந்தையுடன் படிக்கப் போகும் இன்னொரு குழந்தையின் பெற்றோருடன் சண்டை இடுகிறோம் என்பதை பற்றியாவது அந்த மனிதர் யோசித்தாரா தெரியவில்லை. பொறுமையுடன் இருப்பது, பிறரிடம் கோபம் கொள்வதை தவிர்ப்பது, விட்டுக் கொடுப்பது எல்லாம் பணம் காசு கொடுக்காமல் பிறருக்கு நாம் இலவசமாகவும் சுலபமாகவும் செய்ய கூடிய உதவி. அடங்காமை மட்டும் அல்ல கோபம்கூட ஒருவனை ஆரிருள் வைத்து விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக