சனி, நவம்பர் 21, 2020

குளிரடிக்கும் சங்க காலம் - பாவலர் அறிவுமதி

பெட்னா இலக்கிய பேரவையில் இன்று (11/21/2020) இரவு 8:30 மணி அளவில் குளிரடிக்கும் சங்க காலம் என்ற தலைப்பில் பாவலர் அறிவுமதி அவர்கள் சிறப்பானதொரு உரையை நிகழ்த்தினார்.சிப்பியில் தோன்றிய முத்தாக, மான் வயிற்றில் பிறந்த ஒள்ளரிதாரமாக தமிழ் அன்னையின் தவப் புதல்வனாய், வ.சுப.மாணிக்கம், தண்டபாணி தேசிகர், வெள்ளை வாரணனார், ம.பொ.சி ஆகியோர் அளித்த தமிழ் கொடையே பாவலர் அறிவுமதி அவர்கள். ஆங்கிலம் சிறிதும் கலவாமல் முற்றிலும் தமிழிலேயே இருநூறுக்கும் அதிகமான திரைப்பட பாடல்களை எழுதியவர். மழை பேச்சு, ஆயுளின் அந்திவரை, கூடிப் பேசுங்கள், நட்புக் காலம், முத்திரைக் கவிதைகள் போன்ற பல நூல்களை அளித்திருக்கிறார். ஹைக்கூ கவிதைகள் எழுதுவதில் வித்தகர். விருதுகளை புறம் தள்ளிய விருதாச்சலத்துக்காரர், ஆயினும் நட்பை உயிராய்க் கொண்டதால் தன்னுடைய நண்பரின் பெயரை தன்னுடைய இயற்பெயர் மதியழகனில் இணைத்து, அறிவுமதி என்று மாற்றிக் கொண்டவர்.
வீரத்தைக் குண்டுகள் துளைக்காது!
வீரனைச் சரித்திரம் புதைக்காது!
நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள் வாடகை மூச்சில் வாழாது!
இழந்த உயிர்களோ கணக்கில்லை!
இருமிச் சாவதில் சிறப்பில்லை!
இன்னும் என்னடா விளையாட்டு
எதிரி நரம்பிலே கொடியேற்று!
என்ற நெருப்புச் வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் என்றாலும்
காதல் வழி சாலையிலே
வேகத்தடை ஏதுமில்லை
நாணக் குடை நீ பிடித்தும்
வேர் வரைக்கும் சாரல் மழை
என்று குளிர் தென்றல் வரிகளையும் அவருடைய பேனா பேசும்.
தமிழ் பிறந்தநாள் பாடல் என்பது கவிஞர் அறிவுமதி எழுதி, அரோள் கரோலி இசையமைத்து, உத்ரா உன்னிகிருஷ்ணன் பாடி 2016 இல் வெளிவந்த ஒரு தமிழ்ப் பாடல் ஆகும். சிறுவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பரவலாகப் பாடப்படும் ஹாப்பி பர்த்டே டூ யூ எனப்படும் ஆங்கிலப் பாடலுக்கு இணையாக இந்தப் பாடலை அறிவுமதி எழுதி பரவலாக்கி உள்ளார்.இந்தப் பாடல் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 2016 மாநாட்டில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

அந்த நிகழ்வின் நேரலை கீழே இடம் பெற்றுள்ளது.



2 கருத்துகள்: