வெள்ளி, செப்டம்பர் 18, 2020

பட்டாம்பூச்சி யானை

கல்கோனா என்ற மின்னிதழும் பாலைவன பாவலர்களும் இணைந்து நடத்திய கவிதை போட்டிக்கு எழுதிய கவிதைகள். இதில் இருந்து இரண்டே கவிதைகளை தெரிவு செய்து கவிதை போட்டிக்கு அனுப்பி இருந்தேன்.
கவிஞர் பழனிபாரதி அவர்கள் தேர்ந்தெடுத்த 10 கவிதைகளில் எனது கவிதையும் ஒன்று என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இப்போட்டிக்கு எழுதிய கவிதைகள் அனைத்தும் கீழே உங்கள் பார்வைக்கு.  படத்தில் கொடுக்கப்பட்டுள்ள பட்டாம்பூச்சி காதுகளை கொண்ட யானைக்கு பொருத்தமான கவிதையை அளிக்க வேண்டும் என்பது போட்டியின் விதி 








சாதனை


வெள்ளை நிலாவை வண்ண நிலவாய் தீட்டியாயிற்று
சூரியனின் ஒளியை நீக்கி கருமை பூசியாயிற்று
மயிலை மஞ்சள் நிற பறவையாய் மாற்றியாயிற்று
கரிய யானைக்கு வானவில்லின் வண்ணம் சேர்த்தாயிற்று
கடவுள் துணியாததை தன் தூரிகையால் சாதித்துக் கொண்டிருக்கிறது குழந்தை


துரோகம்


வண்டின் துரோகத்தை சுமந்திருந்த மகரந்தங்கள் சொல்லியது
சூரியனின் துரோகத்தை மலர்ந்த தாமரைகள் கூறியது
நிலவின் துரோகத்தை உணவருந்தா
மழலைகள் பறைசாற்றின
வாரணத்தின் துரோகத்தை வண்ணத்து பூச்சிகள் நிறைந்த சோலைகளில்
அது உடலில் பெற்ற வண்ணங்கள் சொல்கின்றன


தூரிகை


ஆணின் பாசமும் பெண்ணின் நேசமும் கலந்து காதலாகியது
வானின் நீலமும் மண்ணின் செம்மையும் கலந்து மழையாகியது
சூரியனின் வெம்மையும் நிலவின் குளுமையும் கலந்து பனித்துளியாகியது
மண்ணும் மொழியும் கலந்து உணர்வான வீரமாகியது
களிரின் கருமையும் பட்டாம்பூச்சியின் வண்ணமும் கலந்து ஓவியமாகியது


நீதி

வண்ணத்து பூச்சிகளின் சோலையில்
வாரணம்
பல பறந்தன சில சிக்கின
சிக்கிய பூச்சிகளின் வண்ணங்களை
பூசிக் களித்தது களிறு
சாட்சியற்ற வண்ணத்து பூச்சிகளின் மரணம்
தற்கொலை என்றே குறிக்கப்பட்டது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக