வெள்ளி, ஜூன் 05, 2020

கனவு இல்லம் (கவிதை)



பெரு யானை, அணிலும், பறவையும்  
படைத்த அடர்காட்டை தினமும்
இடிவாரி கொண்டே தூர்த்து 
பகட்டாய் தான் வீட்டை வார்த்து 

அன்பாய் கூவித்திரிந்து அழகாய் பண்பாடும் 
குயிலுக்கு கூடில்லை பரிதாபம் அதன்பாடும் 
அழகாய் வண்ணத்துப்பூச்சி சிறகடித்து அலைபாயும் 
கனவென துரத்தி விட்டேன் எங்கு தொலைப்பேன் என் பாவம் 
 
யானைக்கட்டி போரடித்த பழம்பெருமை ஏட்டில் விட்டு 
வெறும் கண்ணுக்கே விருந்தாகும் பசும்புல்லை சுற்றி நட்டு
தலையோ முடி தொலைக்கும்  தரையோ புல் சொரியும்   
நிழலுக்கும் வழியில்லை பதரன்றி வேறில்லை 

புழு, பூச்சி, பாம்பு எல்லாம் பாங்காய் வாழ்ந்த நிலம் 
ஈரமின்றி உனதாக்கி கொண்டாய் என்றதம்மா எந்தன் மனம்  
இத்துணை பேரை நீக்கி பெற்ற இவ்வீட்டை காக்க 
பெற்றேன் ஐடி வேலை சீரான பொருள்  சேர்க்க 

நாலுக்கு நாலு  என்றே சிறு அறைக்குள் சிறைவாசம் 
மரணத்திலேனும் கிட்டக் கூடும் ஆறடிக்கு மேல் வாசம் 
பல்லுயிர் வாழ்ந்த நிலத்தில் சொகுசாய் ஒரு வீடு 
யாருமற்ற பொழுதினிலே அருங்காட்சியகம் அதன் பேரு 

பொருட்செல்வம்  சேர்க்க அனுதினமும் தொடர் ஓட்டம் 
வீடு கண்துஞ்ச மட்டும் நாடும் சத்திரமாய் தான் மாற்றம் 
பலர் கனவு கலைத்து  எழுப்பிய கனவு இல்லம் 
அகதியாய் ஆனோர் பலரில்  எழுதுக என் பெயரும்.

 

13 கருத்துகள்:

  1. அருமை மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.மிகவும்ர் ரசித்தோம்

    துளசிதரன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துலசிதரன் மற்றும் கீதா. படைப்பாளிக்கு உங்களை போன்றோரின் உற்சாக வார்த்தைகளே உற்சாக டானிக். தாங்கள் உங்கள் வலைதளத்தில் இருந்து இந்த படைப்பை டேக் செய்திருப்பது நிறைய பேரின் பார்வைக்கு இந்த கவிதையை கொண்டு சேர்த்திருக்கிறது. உங்களின் மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  2. Thillaiakathu Chronicles வலைப்பூ மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டமையறிந்து மகிழ்கிறேன். எழுத்துப்பணி தொடர மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் அவர்களே.

      நீக்கு
  3. அருமையான கவிதை. வாழ்த்துக்கள் மேடம்.

    பதிலளிநீக்கு
  4. பல்லுயிர்பால் எழுந்த கரிசனையும் நடைமுறை எதார்த்தமும் தங்கள் கவிதையில் தடம் பதிந்திருக்கின்றன.
    அருமை. வாழ்த்துக்கள்.
    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்பொழுதும் வயல் வெளிகளை, காடுகளை அழித்து கட்டப்படும் கட்டிடங்கள் மேல் எனக்கு கோபம் உண்டு. அந்த உணர்வை, பார்வையை கவிதையாக வடித்திருக்கிறேன். தங்கள் கருத்திற்கு நன்றி.

      நீக்கு

  5. கவிதை மிகவும் அருமை. சுடும் வார்த்தைகள் காரணம் உண்மைகளின் உணர்வுகள் - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு