வெள்ளி, மார்ச் 31, 2023

பெண் எப்போது தேவதை ஆகிறாள்!!




சமீபத்தில் நண்பர் ஒருவர் கீழே உள்ள வீடியோவை அனுப்பி இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன என்று கேட்டிருந்தார். அவருக்கு அனுப்பிய பதிலையே  கொஞ்சம் விரிவாக கீழே சொல்லி இருக்கிறேன். 



பைஜூ ராஜு என்பவர் தன்னுடைய மனைவியின் முறை தவறிய உறவினாலும், மனைவியின் குடும்பத்தினரின் இரக்கமற்ற  செயல்களாலும் மிகவும் பாதிக்கப்பட்டு சமூக ஊடகத்தில் இதைப் பற்றி பேசி வீடியோ வெளியிட்ட பின் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வானது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி. பண இழப்பினாலும், மனதாலும் மிகவும் வேதனை அடைந்திருப்பதாகவும் அவருடைய குழந்தையையும் அவரிடம் இருந்து பிரித்து அதன் மூலம் தனக்கு வாழ்வின் மீது இருந்த கடைசி நம்பிக்கையையும் எடுத்துக் கொண்டதை தாங்க முடியாமல் இந்த துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் அந்தக் காணொளியில் மிக உருக்கமாக கூறி இருக்கிறார். 
   
அவர் கூறியதில் ஓரளவிற்கு உண்மையும் உள்ளது.  சட்டத்தினை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி அதனால் ஆதாயம் அடையும் பெண்களும் இருக்கிறார்கள் தான். எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் கூட, கணவனுக்கும் மனைவிக்குமான டைவோர்ஸ் வழக்கில், கணவனின் அனைத்து சம்பாத்தியம், அதாவது வீடு, கார், பணம் மட்டுமன்றி அவர்களின் ஒரே குழந்தையின் பொறுப்பாளராக தன்னை நியமிக்க வேண்டும் என்று தோழி ஒருவர் தன்னுடைய கணவன் மீது  ஒரு வழக்கினை தற்சமயம்  நடத்திக் கொண்டிருக்கிறார்.  கணவனின் மீது தேவையற்ற புகார் அளிப்பது, அவருக்கு அவப்பெயர் உண்டாக்குவது, அவருடைய உடைமைகளை தனதாக்கிக் கொள்வது என்று தேவைக்கும் அதிகமான ஆசை கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள், மறுப்பதற்கில்லை.

ஆனால் தன்னை வித்தியாசமான சிந்தனை கொண்ட ஒரு எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்ளும் திரு ஜெயமோகன் அவர்களின் பார்வையில் பெண்கள் இப்படித்தான் என்று பொத்தாம் பொதுவாக ஒரு கருத்தினை அத்தனை எளிதாக வைத்து விட முடிகிறது. பெண்கள் அவர்களுக்கு உரிய சட்ட ரீதியான பாதுகாப்பை பெறுவதற்கு எத்தனை  தடைகளை தாண்டி வந்துள்ளனர் என்பதைக் கொஞ்சம் ஆராய வேண்டும். ஃபல்மோனி  தேவி என்ற இளம் சிறுமியை மணம் புரிந்து முதலிரவு அறையிலேயே அந்தக் குழந்தையின் இடுப்பெலும்பை  உடைத்து அதனால் அந்தக் குழந்தை இறந்த ஒரு துயர சம்பவத்தின் விளைவால் பிரிட்டிசார் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டதே சாரதா குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம். அந்த சட்டத்தை அக்காலத்தில் பாலகங்காதர திலகர் உள்ளிட்ட  பெரிய பெரிய  தலைவர்கள் பலரும் எதிர்த்தனர் என்பதையும் இந்த நேரத்தில் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.

வீதிக்கு ஒன்றாக, பல தாரங்களை மணம் புரிந்து, மனைவி, துணைவி என்று பல அர்த்தங்கள் கொடுத்து தலைநிமிர்ந்து வாழ்ந்த ஆண் தலைவர்களை கடந்தே பெண்கள் உரிமை பெற்றிருக்கிறார்கள்.  ஆண்டாண்டு காலமாக தன்னிடம் கூலிகளாக வேலை செய்த பெண்களின் உயிரைத் தவிர வேறு எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக வேட்டையாடிய நிலச்சுவான்தார்கள், பண்ணையார்கள் ஆகியோரை கடந்து பெற்ற பெண் விடுதலை தான் இது.  ஆசிட் வீச்சு, கூட்டுக் கற்பழிப்பு, கற்பழித்து பின் பெண்ணை எரித்துக் கொள்வது, கற்பழித்து கொலை புரிந்து, அந்தக் கொலையை  தற்கொலை என்று திசை திருப்பம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளிச் சிறுமியின் மரணம், கார்ப்பரேட் சாமியார்களால் கொலை செய்யப்பட்டு கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட பெண், கலையின் இருப்பிடமாக உள்ள கலாசேத்ராவில் உள்ளிருந்து கூடக் கிளம்பும்  பாலியல் குற்றச்சாட்டு என்று பலவற்றை புறம் தள்ளி பார்த்தால், சட்டம் தரும் இந்தப் பாதுகாப்பாவது மிஞ்சியதே என்று ஆறுதல் கொள்ளும் பெண்கள் தான் பெரும்பான்மையான பெண்கள்.  அமெரிக்காவில் மனைவி வேண்டாம் என்ற நிலையில் அவளுக்கு பைத்தியக்காரி பட்டம் கட்டி குழந்தைகளை வைத்துக் கொண்டு அவளை மட்டும் ஊருக்கே அனுப்பி வைப்பது, மனைவியுடைய விசாவை நீட்டிக்காமல் அவளை அமெரிக்காவிலேயே இருக்கச் செய்து, அதன் பின் மனைவியை பத்து ஆண்டுகள் வரை அமெரிக்கா திரும்ப வரவிடாமல்  செய்து நோகடிப்பது, பெண்கள் எல்லாரும் புடவை கட்டிக் கொண்டு போட்டோவில் நிற்க மட்டுமே லாயக்கு என்று தமிழ்ச் சங்கத் தலைமை பொறுப்பில் இருப்பவர்களே சொல்வது என்று ஆண் பெண் பாகுபாடு நிறைந்த கொடிய சமூக கட்டமைப்பில் தான் இன்றைய பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இத்தனை நாட்களாக சாட்டைகள் கொண்டு பலமாக ஒடுக்கப்பட்ட பெண்களின் கைகளில் இன்று சாட்டைகள் கொடுக்கப்படும் போது யுகம் யுகமாக நசுக்கப்பட்ட அவளின் கோபங்கள் உடனடியாக தணிந்து, அவள் அந்தச் சாட்டையை சாமரமாக பாவித்து,  சாந்த சொரூபிணியாக, காக்கும் அன்னையாக, அன்னை தெரசாவாக மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் கூட பெண்ணடிமைத்தனம் தான். இவ்வளவு  நாளாக அவள் மேலே விழுந்த அந்த அடியின் வலியை அவள் இந்த சமூகத்திற்கு திரும்பக் கொடுக்கக் கூடாது என்று சொல்வதற்கு  இங்கே  யாருக்கு உரிமை உள்ளது.

ஆண்களுடைய அத்தனை கொடுமைகளையும் சகித்து எத்தனை பெண்கள் இருந்தார்கள். பைஜூ ராஜுவின் தற்கொலைக்கு பின்  உடனடியாக கிடைக்கும் எதிர்வினை மற்றும் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை  நோக்கும் போது  இத்தனை காலம் கோடானு கோடி பெண்கள் பாதிக்கப்பட்ட போது எங்கே மறைந்தது என்ற கேள்வி பிறக்கிறது. நான் வளரும் போது குக்கர் வெடித்து, காஸ் ஸ்டவ் வெடித்து தினமும் பெண்கள் இறந்து கொண்டே இருந்தார்கள். வாழ்நாள் முழுவதும் ஒரு பெண்ணை இயலாமையில் துடிக்க வைக்கும் ஆசிட் வீச்சுகள், விறகு அடுப்பின் புகையை சுவாசித்து சுவாசித்து கொடிய நோய்கள் கண்டு சமையலறையிலேயே வாழ்வை முடித்த பெண்கள் தான் எத்துணை பேர். எத்தனை பெண்கள் இன்றும் சமூகமும் குடும்பத்தினரும் கைவிட்ட பின் வேறு வழியில்லாமல் கொடிய நோய்கள் தன்னையும் வருத்தும் என்று அறிந்தும் தன்னை விற்று  பிழைத்துக் கொண்டுருக்கிறார்கள். ஏன் அப்போதெல்லாம் ஆண்கள் செய்த/செய்யும் கொடுமைகள் எவரின்  ஞாபகச்  செல்களிலும்  தோன்றவில்லை?

நான் சொல்ல வருவது பெண்கள் செய்வது சரி என்பது அல்ல. இந்த விடயத்திற்கு  பின்னே ஒரு ஆழ்ந்த உளவியல் இருக்கிறது. எனவே பெண்கள் மேல் குற்றம் சுமத்துவதற்கு முன் இதை பூதக்கண்ணாடி கொண்டு ஆராய  வேண்டியதாய் இருக்கிறது. கணவன் மேல் வழக்கு போட்டு அவனிடமிருந்து அவனுடைய பணம், வீடு, கார், சொத்துக்கள்  எல்லாம் தனக்கு வேண்டும்மென்று கேட்டு வழக்கு நடத்தும் தோழி  எத்தகைய சூழலில் அந்த இடத்திற்கு வந்திருக்கிறார் என்பதை கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும். கொஞ்சம் முன், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற விண்ணப்பித்திருக்கும் பெண் ஒருவரை பற்றி கூறினேன் அல்லவா, அவருடைய கதையையே எடுத்துக் கொள்வோம்.  அந்தப் பெண்ணிடம் அவருடைய கணவன் குதர்க்கமாக பேசுவது, அவளுக்கு எந்த சுதந்திரமும் அளிக்காதது, பலர் முன் மட்டம் தட்டிப்  பேசுவது, அவர்களுக்கு இடையே நடக்கும் சண்டைகளை தேவை இல்லாமல் எல்லாரிடமும் சொல்வது, மனைவியை கை நீட்டி அடிப்பது என்று பல வருடங்களாக செய்தது அனைத்தும் இன்று பூதாகரமாக வெடித்து அவருடைய கணவனுக்கு எதிராகத் திரும்பியுள்ளது.  இதற்கும்  அந்த பெண்ணுக்கு அம்மா, அப்பா கிடையாது. அண்ணன் இருக்கிறான் என்றாலும் இல்லாதது போல் தான். கணவனும் கூட வேண்டாம் என்று நினைக்கும் நிலைக்கு அவள் வரக் காரணம் அவள் கணவன் அன்றி வேறு யாரும்  அல்ல.

பெண்களின் கனவுகளும், நிஜ வாழ்வும் முரண்படும் போதே பெரும்பாலும்  பிரச்சனைகள் ஏற்படுகிறது. வாழ்வின் விளிம்பில் ஒரு பெண்ணைக் கொண்டு வந்து நிற்க வைத்துவிட்டு, அவள் மனிதர்கள் எவரும் தேவை இல்லை, பணமே போதும் என்ற மனநிலைக்கு வரும் போது அவளுடைய கணவனே முதல் குற்றவாளியாக கருதப்பட வேண்டும். நிலையில்லா பணத்தை மட்டும் நம்பி இருக்கும் கடைசி உறவான கணவனையும் இழக்கத் துணியும் ஒரு நிலைக்கு அந்தப் பெண்ணை கொண்டு வந்து நிறுத்தியது அந்தப் பெண்ணின் கணவர் தானே. 

ஒரு ஆணுக்கு இருக்கும் சுதந்திரம் என்பது, அவனுடைய ஒரு நண்பனுக்கோ அல்லது எங்கேயோ நடக்கும் ஒரு சம்பவத்தை வைத்து  சமூகத்தில் பெண்கள் இத்தகைய அவலத்தை செய்கிறார்கள், பெண்கள் கடின மனம் படைத்தவர்கள் என்று எந்த கூச்சமுமன்றி அங்கலாய்க்க முடிகிறது. பெண்களின் பொருளாதார தேவைகளுக்கு அந்தப் பெண்கள் ஒரு போதும் பொறுப்பேற்க மாட்டார்கள் என்று புலம்ப முடிகிறது. பெண்கள் தங்களுக்கு வரப்போகும் கணவனைப் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகம் என்று புலம்பும் ஆண்கள் தான் நிறம் கம்மியான, பொருளாதாரத்தில் வசதி குறைந்த அல்லது அதிகம் படிக்காத பெண்களைத் திருமணம் செய்வதைப் பற்றி யோசிக்கக் கூட மாட்டார்கள். இப்போது சொல்லுங்கள் யார் இன்று மிகப் பெரிய சுயநலவாதிகள் என்று. ஒரு சராசரியான பெண்ணின் நியாயமான ஆசைகளை ஒரு கணவரோ அல்லது அந்த பெண்ணின் குடும்பத்தினரோ அல்லது சமூகமோ ஏற்றுக் கொள்ளாத போது மட்டுமே அந்தப் பெண் அவள் நினைத்ததை அடைய ஒரு எதிர்மறையான  முடிவினை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறாள். 

ஆண்களின் பிரதிநிதியாய் ஒரு புகழ் பெற்ற  எழுத்தாளர், தன்னை நியமித்துக் கொண்டு குய்யோ முறையோ என்று பெண்களுக்கு எதிராய் பேச  முடிவதும்  இதனால் தான். இவருடைய பேச்சைக் கேட்கவும், இந்த பேச்சினை பலருக்கு கொண்டு போகவும்,  இவரைச் சுற்றி கூட்டம் கூடுகிறது. கைத்தட்டல்களும்  பலமாக ஒலிக்கிறது. இதனால் என்ன  தோன்றுகிறது என்றால் பெண்கள் இன்னும் உண்மையான முன்னேற்றம் அடையவில்லை என்பதே. பெண்களின் விலங்குகள் கட்டவிழ்க்கப்படும் போது அந்த விலங்குகளைக் கொண்டு போர்வாள் செய்வதோ, அதைக் குப்பையில் எறிவதோ அவள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை மட்டுமாவது ஆண்கள் புரிந்து கொள்ளட்டும். பெண்கள் எப்போது தேவதையாக வெளிப்படுகிறார்கள் என்பது எப்போதும் அவர்கள் சார்ந்த ஆணினைப் பொறுத்தே அமைகிறது.

இதை ஒரு அழகிய கதையின் மூலம் இந்தக் காணொளியே சரியாக  விளக்குவதால், இந்த முக்கிய கேள்விக்கு இதையே என்னுடைய பதிலாகவும் வைக்கிறேன். 






 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக