வியாழன், ஜூலை 16, 2020

வெட்டுண்ட மரங்கள் பேசினால் - கவிதை




மனிதா....  

விண்ணை தலையால் முட்டி,
நீள் விசும்பை மழையமுதாய் கொட்டி
உலகை காக்கும் தேவன் நானே
எனை மாய்க்கும் அசுரன் நீயே.

எம்மோர் என்றே இருந்தேன்
கூர் வாளால் உடல் அரிந்தாயே.
ஈரடி அளந்த வாமனன்
கையளவு இடம் கொட மறுத்தாயே

வளர்த்த கடா முட்டிச் சாய்ந்தேன்
செய்நன்றி மறந்த வஞ்சகனே
பூமித்தாயின் பைந்துகில் களைந்தாய்
துச்சாதனனே, மர மண்டையனே

போதி மரங்கள் போனால்
பாரில் புத்தன் வர வழியில்லை
உன்னை செதுக்க மறந்தாய்
உனக்குள் தேவன் தோன்றவில்லை

தொட்டில், கட்டில், சிதையென
இறுதி வரை நான் சொந்தம்.
மரம்விற்று பகட்டினில் புரண்டாய்
எனை நட்டு நலம்கொள மறந்தாய்

அன்றிலும், அணிலும், ஆனையும்
ஆண்டாண்டாய் வளர்த்த காட்டை
நொடியில் தூர்க்கும் உரிமை
யாரைக் கேட்டு நீயாய் கொண்டாய்.

நிலத்தின் மேலே பேதம்
தோல் நிறத்தால் மோதல் சாதல்.
என் காலுக்கடியினில் தோண்டு
கிடைக்கும் வேர்களில் எது புல், பூண்டு?

கர்ணப் பரம்பரை என்றே
வீணே பெருமை கொள்வாய்.
கனிதரு விரதம் நோற்றால்
உயிர் வளியை யாரிடம் இரப்பாய்?

வனத்தினில் பெரு மரமும்
கொடியும், நீரை நிலத்தை பகிரும்.
மேதினில் ஆண்டான், அடிமை, எனும்
உனையா உயர்திணை என்றாய்?

காட்டை அழித்து வீடு
பசுமை குடில் என்றழைப்பாய்.
வேழம் சமைத்த காடு
அதன் துணைக்கொண்டே நீ அழித்தாய்.

யானை வழித்தடம் மறைத்து
ஆனைமுகன் தந்தைக்கு கோயில் அமைத்தாய்
இயற்கை தெய்வம் மறந்து
காணா இறைவனை தேடி அலைந்தாய்

ஆட்கொல்லி நோயை விரட்ட,
மூலிகை காட்டினில் ஒளிந்தாய்.
நீயா படைப்பின் உச்சம்,
அது நகைமுரண் அன்றோ கூறாய்?

என்னை வெட்டித் திறந்தால்
என் வயதின் வளையம் காண்பாய்
மானிட இனமே சிறு வளையத்துள் அடக்கம்
ஏனோ இதைநீ மறந்தாய்.

இருட்டினில் விதையை இட்டால்
பல்லுயிர் காக்கும் விருட்சம் விழிக்கும்
உன்னை பூமியில் விதைத்தால் 
பாரில் யாருக்கு பயனாகும் சொல்வாய்?

கழுத்தளவு காசிருந்தாலும்
பசி தீர்க்காதென்பது திண்ணம்
உலகம் வாடகை இல்லம்
அதை உணர்ந்தால் மானுடம் தழைக்கும்.

வாழும் காலம் தோறும்
இயற்கையுடன் முரணது கொண்டாய்.
உன் கல்லறையிலேனும் சிறுபுல்
துளிர்க்க அனுமதி தருவாய்.

4 கருத்துகள்:

  1. அருமை மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள்

    துளசிதரன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகுந்த நன்றி துளசிதரன் மற்றும் கீதா

      நீக்கு