சனி, மார்ச் 08, 2025

மகளிர் நாள் கவியரங்கம் - கனவு மெய்ப்பட வேண்டும் - கவிதை



பிரித்தானிய தமிழ் வானொலி, சுடாக்கோம் தமிழ்ச் சங்கம் மற்றும் உலகப் பெண் கவிஞர் பேரவை இணைந்து இன்று நடத்திய மகளிர் நாள் சிறப்புக் கவியரங்கத்தில் வாசித்த எனது கவிதை. அனைத்து பெண்களுக்கும் இனிய மகளிர் நாள் வாழ்த்துகள். 

எனது "கனவு மெய்ப்பட வேண்டும்" என்ற கவிதை 28:35இல் தொடங்குகிறது.




கனவு மெய்ப்பட வேண்டும்


பெண்.....
பூமிப் பந்தை இயக்கும் நசை 
பெயரிடப்படாத ஈர்ப்பு விசை 
புத்தனுக்கு விளங்காத ஞானம் 
புவிமேல் உலவும் கார்மேகம்

அழகென்பர் அன்பென்பர் அருளென்பர் 
அத்தனையும் ஆக்கிய திருவென்பர் 
பூவை மங்கை மடந்தையென்பர் 
அச்சமும் நாணமும் வேண்டுமென்பர் 

சுயவிருப்பம் தற்சார்பு கூடாதென்பர் 
கூட்டுப்புழுவென குறைச்சொல்லி குடத்தில் இடுவர் 
அகலிகை நளாயினி கதைகள் பேசி 
அடிமையாய் பொம்மையாய் மாற்றி வைப்பர் 

உயர்சக்தி அர்த்தநாரி ஆணில்பாதி 
முப்பத்திமூன்று சதமென்பதா சமமான நீதி
கல்வி வேலை தொழிலெல்லாம் மூடி 
வீட்டுவேலைக்கும் குழந்தை வளர்ப்புக்குமா பெண் சாதி 

சாதனைகள் அரியணைகள் ஆணுக்காக 
சமநீதி சமஉரிமை கானலாக 
சாத்திரங்கள் கற்பிதங்கள் விலங்குமாக 
சருகாக கீழிருந்தோம் பலகாலமாக 

பின்னிழுத்த கயமை யாவும் வலுவிழக்க 
பூட்டி வைத்த கட்டுடைத்து சிறகடிக்க 
அண்டமெல்லாம் பெண்கள்படை கொடி பறக்க 
ஆளுவோம் ஒருநாள் அகிலம் செழிக்க 

பாரதி பெரியார் கண்ட புதுமைப் பெண்கள் 
பலகோடி ஒன்றுகூடி வளர்தல் கண்டீர் 
வன்முறை அடக்குமுறை என்றே எங்கள்
வளர்ச்சியெல்லாம் விழலாகத் தகாது செய்தீர் 

கற்றோர் கட்டிக்காத்த பல்துறைகள் தோறும் 
காலத்திற்கும் நிலைக்கின்ற உயர்சாதனை செய்தோம் 
எம்மை பெற்றதால் பெரிதுவந்த மாந்தரெல்லாம்
பெண்மை வாழ்கவென்று போற்றியிங்கு மகிழ்தல் கண்டோம்

இன்னுமென்னத் தேவை என்ன தான் வேண்டும்
இடித்துரைக்கும் மானிடாகேள் என்கனவைச் சொல்வேன்
இமயமல்ல - சரிநிகரெனக் கொள்ளும் இதயம் வேண்டும்
இச்சகமல்ல - வன்கொடுமைதீண்டா புதுவரலாறு வேண்டும்

பொன்னணியல்ல - கடைக்கோடிக்கும் கல்வி வேண்டும்
மணிமுடியல்ல - தொழிலில் சமஊதியம் வேண்டும்
கோவில்களல்ல - அடுக்களைச்சிறை அறுபடவேண்டும்
விருதுகளல்ல - விரும்பாததை விலக்கும் உரிமைவேண்டும்

வேண்டும் வேண்டும் எனக்கேட்டே வாங்கிப்பெறும்
வேதனைத்தீரும் வரம் சித்திக்க வேண்டும்
மகளிர்நாளெல்லாம் சமத்துவ நாளாக மாறவேண்டும் 
பேதையல்லபெண், மேதையென்னும் புத்துலகம் பிறக்கவேண்டும்